Monday, August 5, 2019

காஷ்மீருக்கு உயிரில்லை



ரோஜாக்களில் மணம் இல்லை,
பனிச்சிகரங்களில் குளிர் இல்லை,
தவழும் மேகங்களில் நீர் இல்லை,
பயணிகள் இல்லா "தால்" ஏரியில்
மலர்ச்சி  இல்லை.

துப்பாக்கிகளின் கந்தக நெடியில்
மக்கள் மனதில் நிம்மதியில்லை.

ஜனநாயகம் முடக்கப்பட்டு,
தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு,
அச்சத்தை உருவாக்க
குவிக்கப்பட்ட ராணுவத்தால்,
துப்பாக்கிகளின் 
கந்தக நெடியால்
காஷ்மீருக்கே 
இப்போது உயிரில்லை. 



Sunday, August 4, 2019

எத்தனை சடலம் சுமப்பீர் ராமரே?




உமக்கொரு கோயிலென்று
ஊரை ஏமாற்றி
ஆட்சியை அபகரித்த
பொய்யர்  கூட்டம்

உம் பெயரை
சொல்லச் சொல்லி
கட்டி வைத்து அடிக்கிறது,
உயிரோடு கொளுத்துகிறது.

“இன்று போய் நாளை வா”
என எதிரிக்கும்  இரங்குபவனாய்
எங்கள் மொழிக் கவிஞன்
கம்பன் வடித்த
 வரிகளை படித்திருந்தால்
இதயத்தில் இரக்கம் சுரந்திருக்கும்!

தவம் செய்த சம்புகனின்
தலை கொய்த காதையையும்
நிறை வயிற்று மனைவியை
கானகம் துரத்திய களங்கத்தையும்
உதாரணமாய்
உயர்த்திப் பிடித்தால்

அங்கே அன்பிற்கிடமேது?
அமைதிக்கும்தான் இடமேது?

நாற்காலிக் கனவோடு
ஒப்புக்காய் உன் பெயரை
நாவில் மட்டும் உச்சரிக்கும்
மனிதம் மறந்த கூட்டம்
இன்னும் ஐந்தாண்டுகளில்
கொத்து கொத்தாய்
கொன்று போடும்.

மணி முடி துறந்ததாய்
சொல்லப்படும் உன் மடிதான்
இனி சடலங்களின் தாய் மடி

எத்தனைதான்  சுமப்பீரோ?
எத்தனை நாள் சுமப்பீரோ?

(தோழர் ரவி பாலேட் அவர்களின் ஓவியத்தால் தூண்டப்பட்டு எழுதிய கவிதை)

ஜெயில்ல போடுங்க இந்தாளை





வெங்கட கிருஷ்ணன் எனும் மனிதன் ஆணவமாக பேசிய காணொளியைப் பார்த்தேன். கலப்பினத்துக்கும் மரபணு மாற்றத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் உளறியதிலேயே அந்தாள் ஒரு அரைவேக்காடு என்பது தெரிகிறது.

பிறப்பிலேயே உயர்வு தாழ்வு உண்டு என்று சொல்வதும் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அந்தாள் கூறுவதும் வக்கிரம், ஆணவம், ஜாதித்திமிர் என்ற அனைத்தின் கலவை மட்டுமல்ல, அடிப்படையில் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

அனைவரும் சமம் என்பதுதான் இந்திய அரசியல் சாசனத்தின் அடித்தளம். அதற்கு எதிராக பேசிய வெங்கட கிருஷ்ணனை அரசே கைது செய்து உள்ளே தள்ள வேண்டும். உயர் நீதிமன்றமாவது தானே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிறப்பின் அடிப்படையில் மனிதர்களில் உயர்வு, தாழ்வு உண்டு என்பதற்கு அந்தாள் பிடித்து தொங்குவது வேதத்தையும் சாஸ்திரங்களையும்தான்.

அப்படி மனிதர்களில் வேற்றுமை பாராட்டச் சொல்கிற வேதங்களின் வழியே இந்திய அரசியல் சாசனம் அமையவில்லை என்பதுதான் சங்கிகளின் மிகப் பெரிய ஏக்கம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

வெங்கட கிருஷ்ணன் ஒற்றைக் குரல் அல்ல. ஆர்.எஸ்.எஸ்  கொள்கைகளின் ஊது குழல்.

கம்பி எண்ண வேண்டியவர்கள் ஆட்சிக் கட்டிலில் இருக்கிறார்கள்.

இதுதான் இன்றைக்கு இந்தியாவின் பிரச்சினை

Saturday, August 3, 2019

காஷ்மீரை அழிக்கப் போகிறார்களா?


காஷ்மீர் பற்றி கிடைக்கும் தகவல்கள் எதுவுமே நல்லதாக இல்லை.

ஏற்கனவே  மூச்சுத் திணறக் கூடிய அளவிற்கு பாதுகாப்புப் படைகள் குவிந்துள்ள காஷ்மீரில் கூடுதலாக பத்தாயிரம் பேரை இறக்கியுள்ளனர்.

அமர்நாத் யாத்திரையை முன் கூட்டியே முடித்து பக்தர்களையும் சுற்றுலாப்பயணிகளையும் உடனடியாக வீடு திரும்பச் சொல்லி உள்ளனர்.

பாகிஸ்தான் தாக்கும் அபாயம் உள்ளதாக சொல்லிக் கொண்டாலும் உலா வரும் இன்னொரு செய்தி அரசின் நோக்கம் என்னவென்று அம்பலப்படுத்துகிறது.

ஜம்முவை தனி மாநிலமாக அறிவித்து விட்டு காஷ்மீரையும் லடாக்கையும் மத்தியரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர யூனியன் பிரதேசமாக்குவது என்பது திட்டம் என்று உலா வரும் செய்திகள் சொல்கிறது.

அப்படிச் செய்தால் அதை விட முட்டாள்தனம் ஏதுமில்லை.

ஏற்கனவே காஷ்மீர் மக்கள் இந்திய அரசின் மீது நம்பிக்கை இழந்து அன்னியமாகிக் கொண்டு வருகிறார்கள். அவர்களது நம்பிக்கையைப் பெறுவதற்கு உருப்படியான எந்த ஒரு நடவடிக்கையையும் முந்தைய காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை. மோடி அரசோ நம்பிக்கையை சிதைக்கிற வேலைகளை மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறது.

காஷ்மீரை புதிய டெல்லி சுல்தானின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்வது என்பது கொஞ்ச நஞ்ச ஜனநாயகத்தையும் குழி தோண்டி புதைப்பதாகும்.

அதானியும் அம்பானியும் காஷ்மீரில் உல்லாச விடுதிகள் கட்டுவதற்காக அந்த மாநிலத்தையே தீயிட்டு கொளுத்தப் பார்க்கிறது மோடி அரசு.

மூடனும் முரடனுமாக ஒரு பிரதமர் இருந்தால் இப்படித்தான் நடக்கும்!

Friday, August 2, 2019

"தமிழ்மணம்" ஏன் முடங்கியுள்ளது?



ஒரு வார காலமாக "தமிழ்மணம்'  முடங்கியுள்ளதே, 
என்ன காரணம்?

விபரம் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்.

"தமிழ்மணம்" செயல் படாமல் இருப்பது கை ஒடிந்தது போல உள்ளது எனக்கு மட்டும்தானா இல்லை மற்றவர்களுக்குமா?


Thursday, August 1, 2019

செம பல்டி அய்யா இது!


நான் சிரித்து ரசித்த காணொளி உங்களுக்கும்



வினாயகர் சிலையும் சப்பாணியும்

காலையில் இன்றைய நாளிதழ் வரத் தாமதமானதால் நேற்றைய, அதற்கு முந்தைய நாள் இதழ்களை புரட்டிக் கொண்டிருந்தேன். 

அப்போது கண்ணில் பட்ட ஒரு செய்தி கீழே உள்ளது.

வினாயகர் சிலைகள் எப்படி அமைய வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள உத்தரவுகள் பல.

சுட்ட களி மண்ணிலோ அல்லது ப்ளாஸ்டர் ஆப் பாரீஸிலோ சிலைகள் அமையக்கூடாது.

ரசாயன வர்ணம் பூசக் கூடாது,

அதிக உயரம் கூடாது.

சிலை வைக்கும் இடத்திலோ அல்லது கரைக்கும் இடத்திலோ குப்பை கூடாது, இத்யாதி, இத்யாதி.



வருடா வருடம் இவை அனைத்தையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

கோபாலகிருஷ்ணன் என்று கூப்பிடச் சொன்ன சப்பாணியை எப்படி யாரும் மதிப்பதில்லையோ, அது போலத்தான் இந்த கட்டளைகளுக்கான மதிப்பும்.

கோபால கிருஷ்ணன் போல அரசு என்று சப்பென்று அடிக்குமோ?