Saturday, April 8, 2017

கவண் - தோற்ற சபதம்




நேற்று கவண் சென்றிருந்தோம். ட்ங்கல் திரைப்படத்திற்குப் பிறகு பார்த்த படம்.

பாஸிட்டிவான விஷயங்கள்.

முதலாளித்துவ தொலைக்காட்சி ஊடகங்கள் தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த எந்த அளவு கீழிறங்கவும் மோசடிகளில் ஈடுபடவும் தயங்காது என்பதை  அம்பலப்படுத்தியுள்ளது. 

ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமான சந்தர்ப்பவாத தொடர்பை அம்பலப்படுத்தியுள்ளது.

அரைத்த மாவையே அரைக்கும் நிகழ்ச்சிகள்தான் என்பதையும் சொல்கிறது. 

விஜய் சேதுபதியின் மெருகேறி வரும் நடிப்பு

ஒரு காட்சியில் வந்தாலும் கவனத்தை ஈர்த்த பவர் ஸ்டார்.

வழக்கமான அடுக்கு மொழி வசனங்கள் பேசினாலும் எரிச்சல்பட வைக்காத டி.ஆர்.

குடிகார அரசியல்வாதியாக போஸ் வெங்கட்டும் நன்றாகவே செய்திருந்தார். 

பாடல் காட்சிகளில் கண்ணைக் கவர்ந்த இயற்கைப் பிரதேசங்கள்.

நேர்மையானவர்களுக்கும் கூட ஊடகங்களில் இடம் உண்டு என்பதையும் காண்பித்தது.

இனி 

நெகடிவ்

பாடல்களும் பின்னணி இசையும் பாடாவதியாக இருந்தது.

முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் காணாமல் போயிருந்தது.

பாண்டியராஜன் மற்றும் விஜய் சேதுபதியின் நண்பர்கள் வில்லனுக்கு எதிராக மாறி விடுவார்கள் என்பதை ஊகிக்க முடிந்தது.

பாண்டேவும் கோபிநாத்தும் அர்ணால்டும்தான் பின்பற்ற வேண்டிய  ஊடகவியலாளர்கள் போல சித்தரித்தது.

கூட்டிக் கழித்து பார்த்தால் கவண் கண்டிப்பாக பாஸ் மார்க்கே பெறுகிறது. 

இறுதியாக

அதென்ன தோற்றுப் போன சபதம் என்று தலைப்பு என்று கேட்கிறீர்களா?


உறவைக் காத்த கிளி படத்திற்குப் பிறகு பார்த்த டி.ஆர் நடித்த படம் இதுதான். தியேட்டருக்குச் சென்ற பிறகு போஸ்டரைப் பார்த்த பிறகே அவரும் நடித்துள்ளார் என்று தெரியும். சபதப்படி நடப்பதற்கான சூழலும் அவகாசமும் இல்லை. இது கூட தெரியாதா என்று கேட்காதீர்கள். கதாநாயகி சமந்தா என்றுதான் நினைத்திருந்தேன். அவர் மடோனா செபஸ்டியன் எனும் வேறு நடிகை என்பதே இடைவேளையின் போதுதான் அறிந்து கொண்டேன். திரைப்பட விஷயத்தில் அவ்வளவு அப்டேட்டாக இருக்கிறேன். 

 

 

வைரமுத்துவால் வந்த வினை




வன்மம் மிகுந்த ஒரு காவிக்கு தமிழகத்தில் அறிமுகமும் அரியணையும் கொடுத்த வைர முத்துவே 

அன்று திருவள்ளுவருக்கும்
இன்று கறுப்பாய் இருப்பவர்களுக்கும்

நடந்த இழிவுக்கெல்லாம் காரணம்.

வைரமுத்து இல்லையென்றால் இந்த நாலு கால் பிராணியைப் பற்றி நமக்கென்ன தெரியும். அது எங்கோ குரைத்தாலும் நமக்கு கேட்டிருக்காது
 

Friday, April 7, 2017

ஜெ சடலத்தையே எடுத்துச் செல்லுங்களேன்



                    

தொப்பி கோஷ்டி பணப்பெட்டியை வைத்து ஓட்டு கேட்கிறது என்றால் ஜெயலலிதாவின் சவப்பெட்டி மாதிரியினை வைத்துககொண்டு ஓ.பி.எஸ் அணி ஆர்.கே.நகரில்  வாக்கு  கேட்கிறது.

தமிழக அரசியல்  எவ்வளவு கீழ்த்தரமாகி விட்டது என்பதற்கு இது ஒரு சான்று.

ஒரு வேளை ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளி வைக்கப்படவில்லை என்றால் இன்னும் எவ்வளவு கேவலமான காட்சிகளை பார்க்க வேண்டி இருக்குமோ?

சவப்பெட்டி பொம்மைக்கு பதிலாக சமாதியைத் தோண்டி ஜெயலலிதாவின் சடலத்தையே எடுத்துச் செல்லுங்களேன். அப்படி செய்தாலாவது எதிர்கால தியானங்கள், ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் சத்தியங்கள், பட்ஜெட் தாக்கல் போன்ற காட்சிகளிலிருந்தாவது தமிழகம் தப்பிக்கும்.

இந்த பிழைப்பிற்கு வேறு ஏதாவது செய்யலாம்.

ஆனாலும் தமிழக மக்கள் இதையெல்லாம் நம்பி வாக்களிப்பார்கள் என்பதுதான் மிகப் பெரிய வெட்கக்கேடு, ‘

ஆமாம். இப்படி தேசியக் கொடியை பிரச்சாரத்தில் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது கிடையாதா?
 

பிரசுரிக்க முடியாத புகைப்படங்கள்


ஊடகங்கள் இன்னும் அதே புறக்கணிப்புப் பார்வையோடுதான் இருக்கின்றன. சென்னையில் சி.ஐ.டி.யு நடத்திய முற்றுகைப் போராட்டத்தின் செய்தியையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் முதலாளிகளுக்கும் ஆட்சியாளர்களுக்குமான தங்கள் விசுவாசத்தை நிரூபித்துக் கொண்டார்கள். 

செய்திகளை வெளியிடுவதற்கு பணம் வாங்குவது போல வெளியிடாமல் இருப்பதற்கும் பணம் வாங்குவார்களோ?

முதலாளித்துவ ஊடகங்களால் பிரசுரிக்க முடியாத சென்னை முற்றுகைப் போராட்டத்தின் சில காட்சிகள் இங்கே.

தோழர் எஸ்.சந்தானம் அவர்களின் முக நூலில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் இவை


















Thursday, April 6, 2017

ஊஊஊஊஊஊ அறம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்கள் முக நூலில் எழுதியிருந்ததை பகிர்ந்து கொண்டுள்ளேன். நேற்று முக நூலில் வலம் வந்து கொண்டிருக்கையில் எங்களின் மேற்கு மண்டலத் தலைவர் தோழர் வி.எஸ்.நல்வாடே ஒரு படத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். தோழர் கனகராஜ் அவர்கள் எழுதியுள்ளதற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது இப்படம்



நன்றி!
_---------------------------------------------------------------+--+++தினத்தந்தியிடம்
வருத்தத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்றவர்கள் புறக்கணித்த செய்தியை அனைத்துப்பதிப்பிலும் வெளியிட்டிருக்கிறது
தினத்தந்தி
-----------++++++++++++++++++++++++++++++++
@ the hindu
@ the new indian expres
@ times of india
@ the decan chronicle


நேற்று 4-4-2017 அன்று தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள், எல்லாத்துறையிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாதச்சம்பளம் ரூபாய் 18,000 வழங்க வேண்டுமென கோரி சிஐடியு தலைமையில் தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் 20,000 பேர் கலந்து கொண்டதாக சொல்கின்றனர். சிஐடியு தரப்பில் 30,000 என்கிறார்கள். எப்படியானாலும் 20000த்திற்கு குறையாத கூட்டம். கட்டுமானத்தொழிலாளி, துப்புரவுத்தொழிலாளி, சுமைப்பணி தொழிலாளி, ஆட்டோத்தொழிலாளி உள்ளிட்டு மத்திய, மாநில பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் ஆணும், பெண்ணுமாய் முறைசாராத்தொழிலில் இருப்போருக்கு நியாயம் கேட்டு இந்த போராட்டத்தை நடத்தினர். 

பொதுவாக, அச்சு ஊடகமும், காட்சி ஊடகமும் இதைப்புறக்கணித்தார்கள். இந்த புறக்கணிப்பு பொதுவாக பெயருக்காக ஒருகால செய்தியோடு நின்றுவிடும். சில நேரங்களில் இந்த பேரணியால் போக்குவரத்து பாதிப்பு என்பது போன்று செய்தி போடுவார்கள். ஆனால், இந்த முறை ஆங்கில இந்து, எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டெகான் கிரானிகல் என 4 பத்திரிகைகளிலும் ஒரு வார்த்தை கூட இந்த பேரணி பற்றி கிடையாது. இதில் இந்து பத்திரிகையில் ஊடக அறம் குறித்தான ஒரு தலையங்கமும் இன்று வந்திருக்கிறது. ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு, துப்புரவு பணியில் ஈடுபடுபவர்களுக்கு, கட்டுமானத் தொழிலாளிக்கு 18,000 சம்பளம் அதிகமென்று கூட அவர்ளுக்குத் தோன்றியிருக்கக்கூடும். அது அவர்களது உரிமை. ஆனால், அதைப்பற்றிய செய்தியை வெளியிட்டு விட்டு கூட தங்களின் விமர்சனத்தை அவர்கள் முன்வைத்திருக்கலாம். ஆனால், ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருட்டடிப்பு செய்வது என்பதன் நோக்கம் மிக வெளிப்படையானது.

இந்தியாவில் அரசு அமைப்பு நீதிமன்றம், நிர்வாகம், காவல்துறை போலவே 4ம் தூணாகிய பத்திரிகைத்துறையும் அப்பட்டமாக தனது வர்க்க நோக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. பெரு நிறுவனங்களின் கைப்பாவையாகவோ, மூலதனத்தின் சேவகர்களாகவோ மாறிப்போய் விட்டன ஊடகங்கள் என்ற விமர்சனத்தை எந்த வித கூச்ச நாச்சமும் இல்லாமல் உறுதிப்படுத்திக் கொள்வது போல் இருக்கிறது. 

கடந்த ஆண்டும் இப்படித்தான். டெல்லியில் இந்தியா முழுவதுமிருந்து 2 லட்சம் தொழிலாளிகள் பேரணி நடத்தினார்கள். சிஐடியு மட்டுமல்ல, பல சங்கங்கள் இணைந்து நடத்தினார்கள். தினமணியின் டெல்லி பதிப்பைத்தவிர எந்த ஒரு பத்திரிகையும் அந்த செய்தியை பிரசுரிக்கவில்லை. இது என்ன ஊடக அறம்? கடந்த கால பாசாங்குகளை எல்லாம் விட்டு விட்டு மிக அப்பட்டமாக நாங்கள் உழைப்பாளி மக்களுக்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் எதிரானவர்கள்தான் என்று தைரியம் காட்டிக் கொள்கிறார்கள். 

நான் தூத்துக்குடியில் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்தேன். தொழிற்சங்க போராட்டத்தில் நான் உட்பட 5 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டோம். அதற்கு முன்னதாக அந்த நிறுவனத்தில் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதில் ஒரு போராட்டம் 36 மணி நேரம் உண்ணாவிரதம். அது ஒரே சங்கம். பாகுபாடு எதுவும் இல்லாமல் தொழிலாளர்கள் அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டோம். உண்ணாவிரதம் நடைபெற்ற கொண்டிருந்த போது கடைசி நாளன்று பெருமழை, உண்ணாவிரத பந்தலை நோக்கி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே ஊர்வலம் வந்தனர். தூத்துக்குடியை பொறுத்தமட்டில் அது மிகப்பெரும் நிகழ்வு. எல்லா பத்திரிகை நிருபர்களும் வந்திருந்தார்கள். ஏராளமான போட்டோ எடுத்தார்கள். அடுத்த நாள் ஒரு பத்திரிகையிலும் அந்த செய்தி வெளிவரவில்லை. ஒவ்வொரு நிருபரையும் அவர்கள் அலுவலகம் சென்று அவர்கள் வரும் வரை காத்திருந்து ஏன் இப்படி என்று ஆதங்கத்தோடு கேட்டோம். எல்லோருமே தாங்கள் அனுப்பிய செய்திகளை காட்டினார்கள். படங்கள் சேர்த்து அனுப்பியதையும் காட்டினார்கள். எந்த பத்திரிகையும் ஒரு வரி கூட அந்த செய்தியை பிரசுரிக்கவில்லை. 

அதன் பிறகு ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அந்த கோரிக்கைகளை முழக்கங்களாக்கி விளம்பரமாக தருகிறோம் என்று கொடுத்தோம். அது 1993 அல்லது 1994ம் ஆண்டாக இருக்கக்கூடும். அப்போது 3 காலத்தில் ஒரு பாக்ஸ் கட்டி போடுவதற்கு நாங்கள் கொடுத்த தொகை 14 ஆயிரம் ரூபாய். விளம்பர வாசகத்தையும் டி.டியையும் விளம்பரம் சேகரிப்பவர் வாங்கிக் கொண்டார். அடுத்தநாள் விளம்பரம் வரவில்லை. சம்பந்தப்பட்டவர் எங்கள் சங்க அலுவலகத்திற்கு வந்தார். தலையை தொங்கப் போட்டுக் கொண்டு அவர் கைப்பட எழுதிய மன்னிப்பு கடிதத்தை கொடுத்து விட்டு எங்கள் நிறுவனத்தின் விளம்பரப்பிரிவிற்கு இது உகந்ததாக இல்லை. எனவே,பிரசுரிக்க மாட்டார்கள் என்று அதை திருபபிக் கொடுத்தார். அப்போது நிர்வாகிகளாக இருந்த நாங்கள் சொன்னோம், ஒன்றும் பிரச்சனையில்லை, இதுதான் கோரிக்கை நீங்கள் விரும்புகிற மொழியில் இது இருக்கட்டும், விளம்பரம் போடுங்கள் என்றோம். இல்லை, இந்த நிறுவனத்திற்கு எதிராக செய்தியோ, விளம்பரமோ போடுவதில்லை என்பது எங்கள் கொள்கையாகும் என்று அவரும் கசப்போடு சொன்னார்.
நியாயம், நடுநிலை, அறம் இவை எல்லாம் வியாபாரத்தின் முன் மண்டியிட்டு கும்பிடும் என்பதை முதல் முறையாக அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டேன். 


இன்று மேற்குறிப்பிட்ட 4 பத்திரிகைகளையும் பார்க்கிற போது மண்டியிட்டு இருந்த பத்திரிகைகள் இப்போது முழுவதுமாய் கீழே விழுந்து விட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 

யாருக்கான அறம்? யாருக்கான ஊடகம்? நீங்கள் சொல்லும் தர்மம் யாருக்கானது.

Wednesday, April 5, 2017

இந்தி தெரியாவிட்டால் ?? குடி முழுகாது . . .





இந்தி தெரியாவிட்டால் தமிழகத்தை தாண்டினால் வாழ்வே கிடையாது என்பது போல பாஜககாரர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்று வட கிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் சென்றுள்ளேன். சங்க வேலையாக, சொந்த வேலையாக, சுற்றுலாப்பயணியாக இந்த பயணங்கள் அமைந்திருக்கிறது. தோழர்களோடோ, குடும்பத்தோடோ அல்லது தனியாகவோ இந்த பயணங்கள் அமைந்திருக்கின்றன.

எனக்கு இந்தி தெரியாது. ஆனாலும் எந்த ஒரு பயணத்திலும் எந்த ஒரு சிக்கலும் இந்தி தெரியாத காரணத்தால் வந்ததில்லை. பொருட்களை பேரம் பேசி வாங்கக் கூட மொழி ஒரு தடையாக இருந்ததில்லை.

இந்தி தெரியாதவர்கள் தமிழ்நாட்டைத் தாண்டினால் திக்கு தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டவர்கள் போல தவிப்பார்கள் என்பதெல்லாம் வெறும் உடான்ஸ். பல்வேறு வட மாநிலங்களுக்கு பல முறை சென்ற அனுபவத்தில் சொல்கிறேன். இந்தி தெரியாமலும் சமாளிக்கலாம்.

இப்படி எல்லாம் அச்சுறுத்தியாவது இந்தியை திணிக்க வேண்டும் என்று பாஜக முயன்றால் அது பரிதாபமாக தோற்றுப் போகும்.

நான் என்ன மொழி பேச வேண்டும், என்ன உடை அணிய வேண்டும், எந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் என்னுடைய உரிமை. அதில் தலையிட, கட்டளையிட மோடி வகையற்றாக்களுக்கு எல்லாம் அதிகாரம் கிடையாது.

ஒரு மொழியை நானாக விரும்பிக் கற்பதற்கும் இதை கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று அரசு கட்டளையிடுவதற்கும் உள்ள வேறுபாட்டை பலர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

இந்தி தெரிந்தால்தான் வேலை கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்பவர்கள் யாரும் “பீகாரிலிருந்தும் உத்தர பிரதேசத்திலும் கட்டுமான வேலைகளுக்காக பல லட்சம் உழைப்பாளி மக்கள் ஏன் இடம் பெயர்கின்றனர் என்ற கேள்விக்கு என்றைக்காவது பதில் சொல்லியுள்ளனரா?

வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான நோயாளிகள் தங்களின் உறவினர்களோடு வந்து இறங்கிக் கொண்டே இருக்கின்றனர். யாரும் தமிழ் கற்றுக் கொண்டு அதன் பின்பு வேலூருக்கு புறப்படுவதில்லை. தமிழ் தெரியாமல் வேலூரில் அவர்களால் எப்படி சமாளிக்க முடியுமோ, அது போல இந்தி இல்லாமல் நம்மாலும் சமாளிக்க முடியும். 

இந்தியை திணிக்கும் முயற்சி காலம் காலமாக நடந்து கொண்டே இருக்கிறது.

அரசுத் துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியைத் திணிப்பதற்கென்றே ஒரு பிரிவு உள்ளது. Official Language Implementation என்ற பெயரில் பல கட்டளைகள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும். அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பல படிவங்கள் இந்தியிலும் அச்சடிக்கப்பட வேண்டும் என்ற அபத்தமான உத்தரவுகள் வரும்.  இந்தி திவஸ் என்று கொண்டாட வேண்டும், இப்படி பலவற்றை சொல்ல முடியும். என்ன தமிழகத்தில் அவையெல்லாம் அமலாகாது. அதே நேரம் அந்த உத்தரவுகள் எல்லாம் அமலாகிறதா என்று கண்காணிக்க எம்.பிக்கள் குழுக்கள் கூட உண்டு. ஜாலியாக  அவர்கள் ஊர் சுற்றும் ஏற்பாடு இது.

அரசுத்துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மட்டும்தான் இந்த கெடுபிடி. தனியார் நிறுவனங்களுக்கு கட்டளை போடும் தைரியம் எந்த ஆட்சியாளருக்கு, எந்த காலத்தில் இருந்திருக்கிறது?

மைல்கல்லில் திணிப்பது தெரிகிறது. அதனால் எதிர்ப்பு வலுவாகிறது. 

மைல்கல்லில் இந்திக்கு எதிராக கருப்பு மை பூசுபவர்கள் தங்கள் முகத்தில் பூசிக் கொள்ளட்டும் என்கிறார் பொராகி.

வாக்களிக்கும் போது இடது கை பெரு விரலில் வைத்த மையை ஏற்கனவே எங்கள் முகத்தில் பூசி விட்டீர்களே பொன்னார் அவர்களே! மேலும் மை பூச எங்கே இடமிருக்கிறது? 

மைல்கல்லில் பூசும் மையை பூச வேண்டிய சரியான இடம் உங்கள் முகம்தான்.

மீண்டும் ஒரு லெனின்

ரபேலைத் தொடர்கிறார் லெனின் ஈக்வடாரில் மீண்டும் இடதுசாரி ஜனாதிபதி




மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட மாற்றுத் திறனாளி

குயிட்டோ, ஏப் 4-
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரும், இடதுசாரிக் கொள்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்போவதாக வாக்குறுதி அளித்தவருமான லெனின் மொரினோ வெற்றி பெற்றுள்ளார்.மக்களிடம் செல்வாக்குப் பெற்ற ஈக்வடார் ஜனாதிபதி ரபேல் கோரியா மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றவுடன் அங்கு ஜனநாயகத்தைச் சீர்குலைத்து விடலாம் என்று அமெரிக்காவின் ஆதரவுடன் எதிர்க்கட்சிகள் களமிறங்கின. 

பிப்.19 ஆம் தேதியன்று முதல் சுற்றுத் தேர்தல் நடைபெற்றது. வெற்றி பெறுவதற்கு 51 சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் வேட்பாளரை விட 10 சதவிகித வாக்குகளும், மொத்தத்தில் 40 சதவிகித வாக்குகளும் பெற வேண்டும். இந்தச் சுற்றில் இடதுசாரி வேட்பாளர் லெனின் மொரினோ 39,36 சதவிகித வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சி வேட்பாளர் கில்லர்மோ லஸ்ஸோ 28.09 சதவிகித வாக்குகளும் பெற்றனர். இருவருக்கு மிடையில் பத்து சதவிகித வாக்குகள் இருந்தாலும், மொரினோவுக்கு 40 சதவிகித வாக்குகள் கிடைக்காததால் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஏப்ரல் 2 ஆம் தேதியன்று இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடந்தது. முதலிரண்டு இடங்களைப் பெற்ற மொரினோவும், லஸ்ஸோவும் களத்தில் இருந்தனர். கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை பெரும் அளவில் உயர்த்திய ரபேல் கோரியாவின் கொள்கைகளைத் தொடர்வேன் என்று மொரினோ உறுதியளித்தார். அவருடைய கொள்கைகளைக் கைவிட்டு வலதுசாரி சீர்குலைவுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவேன் என்று லஸ்ஸோ பிரச்சாரம் செய்தார். அவருக்கு வரி ஏய்ப்பு செய்து மாட்டிக் கொண்ட பெரு நிறுவனங்கள் ஆதரவுக் கரம் நீட்டின. 

அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்ற பொய்ப்பிரச்சாரங்களை மீறி இடதுசாரி வேட்பாளர் லெனின் மொரினோ 51.16 சதவிகித வாக்குகளைப் பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்று கருதப்பட்ட லஸ்ஸோ 48.84 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார். தேர்தலில் பார்வையாளர்களை நிறுத்தியிருந்த அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றது என்று கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வழக்கம்போலவே எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல்

ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான முதல் சுற்று வாக்கெடுப்போடு தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடைபெற்றது. மொத்தமுள்ள 137 இடங்களில் ஆளும் இடதுசாரிக்கட்சிக்கு 74 இடங்கள் கிடைத்தன. நாடாளுமன்றத்திலும் ஆளும் இடதுசாரிக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால் தங்கள் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்தத்தடையும் இருக்காது என்று ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள லெனின் மொரினோ தெரிவித்துள்ளார். தனது வெற்றி பற்றிக் கருத்து தெரிவித்த அவர், இடதுசாரிக் கொள்கைகள்தான் நாட்டிற்கு நல்லது என்று மக்கள் முடிவெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் லெனின் மொரினோ படுகாயம் அடைந்தார். தற்போது சக்கர நாற்காலி உதவியுடன்தான் அவர் தனது பணிகளைச் செய்து வருகிறார். இப்படி உடலில் குறைபாடுகளோடு நாட்டின் தலைமைப் பொறுப்புகளுக்கு வெகு சிலர்தான் இதுவரையில் வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தீக்கதிர் 05.04.2017