Sunday, September 23, 2012

படவேட்டம்மன் ஆலயத்தில் படுபாதகச் செயல், காவல்துறை பாதுகாக்கும் தீண்டாமைச்சுவர்




வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையிலிருந்து  சோளிங்கர் செல்லும் சாலையில்  வாலாஜா பி.டி.ஓ அலுவலகம் முன்பாக நெடிதுயர்ந்து நிற்கும் படவேட்டம்மனின் சிலையை கவனிக்காமல் யாரும் கடக்க முடியாது. பரபரப்பான அந்த கோயிலுக்குப் பின்னே ஒரு பெருந்துயரம் ஒளிந்திருப்பது சாலையைக் கடப்பவர்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் சாலையோரத்தில் மூன்று செங்கற்களை வைத்து படவேட்டமனாக தலித் மக்கள் வழிபடத் தொடங்கினார்கள். காலப் போக்கில் அது சிறிய ஆலயமாக உருவாகியது. ஆலயம் இருந்த பகுதியை ஆலயத்திற்கும், அதற்குப் பின்னால் தலித் மக்கள் குடியிருந்த பகுதியை அவர்களுக்குமே அந்த நிலத்திற்குச் சொந்தமானவர் பட்டா போட்டுக் கொடுத்தார். அங்கே அம்பேத்கர் காலனி உருவானது. ஆலயத்திற்கும் அம்பேத்கர் காலனிக்கும் இடைப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது.

கொஞ்சம் கொஞ்சமாக ஆலயத்தின் புகழ், படவேட்டம்மன் புகழ் பரவ, பரவ பக்தர்களாய் வந்து போன பணக்காரர்கள் ஆலயத்தின் நிர்வாகத்தை கைப்பற்றிக் கொண்டார்கள். வரவு செலவும் அதிகமானது. கோயிலுக்குச் சொந்தமானவர்கள், அதனை உருவாக்கி காலம் காலமாக பராமரித்தவர்கள் மெல்ல, மெல்ல ஒதுக்கப்பட்டனர். அந்த  எளிய மக்களும் வேறு வழியின்றி விலகிப் போனார்கள்.

விலகிப்போனாலும் துரத்தி வந்து தாக்கினார்கள் கோயிலின் புதிய நிர்வாகிகள். ஆலயத்திற்கும் அம்பேத்கர் காலனிக்கும் இடையில் உள்ள ஏராளமான இடம் அவர்களின் கண்ணை உறுத்தியது. ஏராளமான லாரிகளைக் கொண்ட நிர்வாகக் குழுத் தலைவருக்கு தனது லாரிகளை நிறுத்த வசமான இடமாக இந்த காலி இடம் தெரிந்தது. கூடவே ஒரு கல்யாண மண்டபம் கட்டினால் கூடுதல் காசும் பார்க்கலாம்.

ஆனால் அம்பேத்கர் காலனி மக்கள் அந்த இடத்தை வழிப்பாதையாக பயன்படுத்துவது ஒரு தடையாக இருந்தது. காலம் காலமாக பயன்படுத்துவதை எப்படி தடுத்து நிறுத்துவது? நல்லதைச் செய்ய யோசனைகள் கிடைப்பது கஷ்டம். கெட்டதைச் செய்ய வினாடிக்குள் கோடி திட்டங்கள் கொட்டுமே! படவேட்டம்மன் போல பஞ்சமுக ஆஞ்சனேயர் பெரிய சிலையும், கோயிலுக்கு சுற்றுச்சுவரும் கட்டுவதாக அறிவித்தார்கள். பக்தர்களிடம் நன்கொடை கேட்டு அறிவிப்பு பலகை வைத்தார்கள்.

பண வசூல் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. முதலில் ஆஞ்சனேயருக்கு ஒரு மேடை எழுப்பி, பிறகு. அதை அப்படியே அம்போவென்று போட்டு விட்டு, பிரம்மாண்டமான சுற்றுச்சுவரை எழுப்பி விட்டார்கள். தங்களின் பயன்பாட்டில் இருந்த பாதை பறி போனதைக் கண்டித்து தலித் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். சட்ட விரோதமாக கட்டப்பட்ட நீண்ட நெடிய சுவரின் சிறு பகுதியை ஆவேசம் கொண்ட சில இளைஞர்கள் இடித்து விட்டனர்.  பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை உருவாக்குகிறோம் என்று காவல்துறை உறுதியளித்தது. ஆனால் அதன் உள்ளத்தை ஆதிக்க சக்திகள் கொள்ளையடித்து விட்டார்கள்.   

சுவர் கட்டப்பட்ட இடம் அரசின் நிலம். அங்கே சுவர் எழுப்பியது ஆக்கிரமிப்புக் குற்றம். தலித் மக்கள் பயன்பாட்டில் இருந்த பகுதியில் சுவர் எழுப்பியது தீண்டாமைக் குற்றம். ஆனால் காவல்துறையும் அரசு நிர்வாகமும் ஆதிக்க சக்திகளுக்கு துணையாகவே இருக்கிறது. கட்டப்பட்ட சுவருக்கு பாதுகாப்பாக அங்கே காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இரு சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரு சக்தி மிக்க ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைந்து நடத்தியுள்ளது.

கோயில் நிர்வாகத்திற்கு இது வருமானப் பிரச்சினை, நிர்வாகிக்கு கௌரவப் பிரச்சினை. ஆனால் அம்பேத்கர் காலனி மக்களுக்கு வாழ்க்கைப் பிரச்சினை. உரிமைப் பிரச்சினை. சுற்றுச்சுவருக்கு உட்பட்ட பகுதியில் மூன்று வீடுகள் உண்டு. அவர்கள் இப்போது பயந்து போய் எங்கோ தலைமறைவாகி விட்டார்கள்.

நேற்று சம்பவ இடத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தீண்டாமை முன்னணியின் தலைவருமான தோழர் பி.சம்பத், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் என்.குணசேகரன், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள், விடுதலை சிறுத்தைக் கட்சியின் பொறுப்பாளர்கள் வந்திருந்தனர்.

அரசு நியாயம் வழங்க தயாராக இல்லாத போது நியாயத்தை நாமே எடுத்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. தீண்டாமைச் சுவர் அகற்றப்பட வேண்டும், படவேட்டம்மன் ஆலய நிர்வாகம் தலித் மக்களிடமே அளிக்கப்பட வேண்டும், இல்லையேல் இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நேரடி நடவடிக்கைகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து வரும் முப்பதாம் தேதி போராட்டத்தில் ஈடுபடப் போகிறது. அடித்தால் திருப்பி அடி என்று எண்பதாண்டுகளுக்கு முன்பே கீழத் தஞ்சை மாவட்ட தலித் விவசாயத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்து, போராட்ட உணர்வேற்றிய மகத்தான தலைவர் தோழர் பி.சீனிவாச ராவ் அவர்களின் நினைவு நாளில் நடைபெறவுள்ள இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்.

பெண்களின் கண்களிலும் இளைஞர்களின் வார்த்தைகளிலும் தெரியும் கோபம் அதற்கு கட்டியம் கூறுகிறது.

தகரப்போவது தீண்டாமை சுவர் மட்டுமல்ல,
ஆதிக்க சக்திகளின் ஆணவமும் அரசின் அலட்சியமும் கூட.









Saturday, September 22, 2012

இனி மன்மோகன்சிங்கை நான் திட்டப்போவதில்லை, நாசமாய் போக!

இந்தியாவின் பிரதமர்,
அமெரிக்காவின் அடிமை,
பணக்காரர்களின் எடுபிடி,
ஏழைகளின் எதிரி,
நடுத்தர மக்களின் விரோதி
மன்மோகன் சிங்கை இனிமேல்
நான் திட்டப் போவதில்லை.

இனி யாரேனும் அந்த
பெரிய மனிதனை 
நேர்மையானவர் என்று
சொன்னால்
சொன்னவனும்
நேர்மையற்றவன் என்றே
உரக்கச்சொல்வேன்.

பொய்களின் மூட்டையை
தொலைக்காட்சியில்
அவிழ்த்து விட்ட
அந்த மனிதன்,
இல்லை, இல்லையில்லை,
மன்மோகன் மனிதனே
இல்லை.

அரக்கனை திட்டினால்
அந்த ஜன்மத்திற்கு
புரியவா போகிறது?

நேற்று ஒரு கூட்டத்தில்
ஒரு புலவர் சொன்னார்.
புலவன் சபித்தால்
பலிக்கும், நான்
சபிக்கிறேன்,
மன்மோகன்சிங்
நாசமாகப் போகட்டும்
என்று சபித்தார்.

அதையே நான்
எதிரொலிக்கிறேன்.

இந்திய விரோதிகள்
மன்மோகன், சோனியா,
சிதம்பரம் என்று
ஒட்டு மொத்த
காங்கிரஸ் கூட்டமும்
நாசமாகட்டும்.


 

Thursday, September 20, 2012

இத்தனை பணம் எங்கே இருக்கிறது?





சமீபத்தில் நான் எனது பழைய இரு சக்கர வாகனத்தை விற்று விட்டு புதிய இரு சக்கர வாகனம் வாங்கினேன். ஜூன் மாதம் முதல் நாள் வாகனம் பதிவு செய்யப்பட்டது. வாகன எண் 3802. இரு தினங்கள் முன்பு ஒரு அதிகாரி வாங்கிய புதிய காரைப் பார்த்தேன். அதன் எண் 9200. அவரைக் கேட்ட போது ஆகஸ்ட் முப்பது அன்று பதிவு செய்ததாய் கூறினார். ஆக மூன்றே மாதங்களில் வேலூரில் மட்டும் 5400 புதிய வாகனங்கள் விற்பனையாகி உள்ளது.

ஒரு சின்ன கணக்கு போட்டு பார்த்தேன். ஒரு மாதத்திற்கு 1800 வாகனங்கள். அவை 35,000 ரூபாய் மதிப்புள்ள டி.வி.எஸ் 50 ஆகவும் இருக்கலாம், பல லட்சம் மதிப்பிலான சொகுசு கார்களாகவும் இருக்கலாம். இருப்பினும் சராசரியாக ஒரு வாகனத்தின் மதிப்பு 50,000 ரூபாய் என்று மட்டும் எடுத்துக் கொண்டேன். அப்படிப் பார்த்தால் ஒரு மாதத்திற்கு வேலூர் நகரத்தில் மட்டும் விற்பனையாகிற வாகனங்களின் மதிப்பு ஒன்பது கோடி ரூபாய், வருடத்திற்கு 108 கோடி ரூபாய்.

உண்மையில் இந்த தொகை அதிகரிக்குமே தவிர குறையப் போவது இல்லை. எனது சந்தேகம் எல்லாம் இந்த அளவு பணம் வேலூரில் எங்கே இருக்கிறது. சரி பாதிக்கும் மேல் வங்கிகளும் மற்ற நிதி நிறுவனங்களும் அளிக்கும் கடன் என்றே வைத்துக் கொண்டாலும், கடன் பெறுபவரின் நிதி நிலைமை உணர்ந்தே தரப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.

புதிய வாகனத்திற்காக ஆசை காட்டி கடன் வலையில் சாதாரண, நடுத்தர மக்களை சிக்க வைக்கிறார்களோ என்ற கவலையும் ஏற்படுகிறது. இன்னொரு கேள்வியும் இயல்பாகவே எழுந்தது.

வாகனத்திற்காக இவ்வளவு ரூபாய் கடன் அளிக்கும் நிறுவனங்கள், விவசாயத்திற்காகவோ அல்லது தொழில் வளர்ச்சிக்காகவோ கடன் அளிக்குமா? கல்விக்கடன் பெறவே வங்கிகள் அலைக்கழிப்பதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

இந்த கணக்குகளை நாம் போடுகிறோமோ இல்லையோ பன்னாட்டுக் கம்பெனிகள் சரியாகவே போடுகின்றன. அதனால்தான் அவை இந்தியாவை சுரண்ட ஆசைப்படுகின்றன.

பொருளாதார நிலைமை முன்னேறி இந்த விற்பனையும் வளர்ச்சியும் இருந்தால் மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் கடன் மட்டுமே அடிப்படை என்றால் நீர்க்குமிழி எப்போது வேண்டுமானாலும் உடையலாம், அமெரிக்க வீட்டுக் கடன் பிரச்சினை போல. கடன் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் சற்று சிந்தித்தால் நல்லது.

Wednesday, September 19, 2012

வெள்ளிக்கிழமைதான் அம்மையாருக்கு வீரம் வருமா?

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவது என்று முடிவெடுத்த
பின்பு மம்தா அம்மையார் ஏன் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க
வேண்டும்?

அன்றுதான் நாள், நட்சத்திரம், முகூர்த்தம் எல்லாம் நன்றாக
இருக்கிறதா?

அதிகாரத்தை இழக்கவும் மனமில்லை, மக்களுக்காக 
போராடுபவர் என்ற அரிதாரத்தையும் கலைக்க முடியவில்லை.
அவகாசம் இருந்தால் அற்புதங்கள் நிகழாதா என்ற பேராசைதான்.

நாடெங்கிலும் உருவாகியுள்ள எதிர்ப்பு அலையினால் அரசு
தனது முடிவை மறு பரிசீலனை செய்தால் அதை வைத்தும்
ஆதாயம் தேடலாம்.

இதெல்லாம் தீதி கணக்கு, மன்மோகன் கணக்கு என்னவோ?
ஆனால் எல்லோருமே வெட்கம் கெட்டவர்கள். அதிகார
போதை உள்ளவர்கள். ஆகவே திடுக்கிடும் திருப்பங்கள்
நிகழ்ந்தால் ஆச்சர்யப்பட வேண்டாம்.
 

மகிழ்ச்சியில் சிலர்; துயரத்தில் பலர்







ஜி.ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்),


‘கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழு வதும் கணினி உபயோகம் பரவலாகியுள்ளது. 2001லிருந்து 2011 வரையிலான இந்த காலகட்டத்தில் 2 கோடியே 90 லட்சம் குடும் பங்கள் இரு சக்கர வாகனங்கள் வாங்கியிருக் கின்றன. சுமார் 4 கோடி குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்றிருக்கின்றன. 3 கோடியே 70 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கின்றன’. - உலக வங்கியும் பன்னாட்டு நிதி நிறுவன மும் வரையறுத்துக்கொடுத்துள்ள நவீன தாராளமயக் கொள்கைகளை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளுக்கு ஏற்றவாறு இந்தியாவில் தொடர்ந்து அமல்படுத்தி வருவதன் விளைவாக ஏற்பட்டுள்ள “வளர்ச்சி யாக”, மேற்கண்ட விவரத்தை பெருமிதம் பொங்க வெளியிட்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அந்நியக் கம்பெனிகள் நுழைவ தற்கு அனுமதி, விமானப் போக்குவரத்து, தகவல் ஒளிபரப்பு உள்ளிட்ட துறைகளில் அந்நியருக்கு தாராள அனுமதி, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் சூறை என நாடே கொந்தளித்துப்போகும் அளவிற்கு நாசகர முடிவுகளை அறிவித்துவிட்டு, இத்தகைய கொள்கையால் எப்படிப்பட்ட பிரம்மாண்டம் நிகழ்ந்திருக்கிறது பாருங்கள் என பரிதாப மான இந்தப் பட்டியலை தனது ‘டிவிட்டர்’ இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் மாண்புமிகு பிரதமர். மக்கள் மீது தமது அரசு தொடுத்துள்ள யுத் தத்தை நியாயப்படுத்துவதற்காக, மேற்கண்ட “சாதனைப் பட்டியலை” வெளியிட்டிருக்கிறார். ஆனால் அந்தோ பரிதாபம்... இந்திய தேசத்தின் மொத்தக்குடும்பங்களின் எண்ணிக் கை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 33 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 767 என்பதை அவர் வசதியாக மறந்துவிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு 2001ல் 19 கோடியே 19 லட்சத்து 63 ஆயிரத்து 935 ஆக இருந்த மொத்தக்குடும்பங்களின் எண்ணிக் கை, கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 


பிரதமர் சொல்கிற வளர்ச்சி, நாட்டின் மொத் தக்குடும்பங்களில் 10 சதவீத குடும்பங்களைக் கூட முழுமையாக சென்றடையவில்லை என் பதை அவரது கணக்கீடே பளிச்சென்று காட்டு கிறது. அர்ஜூன்சென் குப்தா குழு வெளியிட்ட கணக்கீட்டில் சொல்லப்பட்டதுபோல நாட்டின் 87 சதவீத மக்கள் துன்பதுயரத்தில், வறுமை யின் கோரப்பிடியில் உழன்று கொண்டிருக் கின்றனர் என்பதையும், பிரதமரின் மேற் கண்ட கருத்து மவுனமாக ஒப்புக்கொள்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் கேடுகெட்ட கொள் கைகளால் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள யுத்தம், மேற்கண்ட 90 சதவீத ஏழை, எளிய உழைப்பாளி மக்களின் குடும்பங்கள் மீதான மிகக்கொடிய தாக்குதலாகும். ஏற்கெனவே கையில் கிடைக்கிற கொஞ்ச நஞ்சக் கூலியிலும் பெருமளவைப் பறித்துக் கொண்டிருக்கிற விலைவாசி உயர்வை, இவர்கள் அறிவித்திருக்கிற டீசல் விலை உயர்வு மேலும் கடுமையாக அதிகரிக்கும். ஆண்டு ஒன்றுக்கு 6 சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் கிடைக்கும் என்று கூறியி ருப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடும் தாக்குதலாகும். ஏற்கெனவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக் கப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை சுமை ஏற்றப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண் டர் கட்டுப்பாட்டால் கூட்டுக்குடும்பங்கள் எதிர் கொள்ளப்போகும் துயரத்தைச் சொல்லி மாளாது.ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு இந்தியா வில் பணம் புழங்குகிற ஒரு மாபெரும் துறை சில்லரை வர்த்தகம். நேரடியாக நான்கு கோடிக்கும் அதிகமான மக்களும், மறைமுக மாக சுமார் 20 கோடி மக்களும் என நாட்டின் 25 கோடி மக்களின் வாழ்க்கையோடு தொடர் புடைய சில்லரை வர்த்தகத்துறையை அந் நியக் கம்பெனிகள் சூறையாடுவதற்கு நாட்டின் கதவுகளை அகலத்திறக்கிறது மன்மோகன் சிங் அரசு.2008ம் ஆண்டில் உலகையே உலுக்கிய பொருளாதார நெருக்கடி அமெரிக்காவில் கருக்கொண்டு உலக நாடுகளையெல்லாம் தாக்கியபோது, இந்தியாவின் பொருளாதாரம் உறுதியாக நின்றது என மார்தட்டுகிறது மன் மோகன் அரசு. அப்படி நின்றதற்கு இந்த நாட் டின் மகத்தான பொதுத்துறை நிறுவனங்களே அடிப்படைக் காரணம். வங்கித்துறை உள் ளிட்ட நிதித்துறை நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக காலூன்றி பிரம்மாண்டமாக வளர்ச்சிபெற்று உறுதியுடன் நிற்கின்றன என்றால் இந்த நிறுவனங்களை பாதுகாத்திட்ட பெருமை இடதுசாரிக் கட்சிகளையே சாரும். 


ஆனால் இதைத்தகர்க்கும் விதமாக பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளையெல்லாம் உள்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகள் கொள்ளையடித்துச் செல்ல வழிவகுக்கிறது மன்மோகன் சிங் அரசு. இந்துஸ்தான் காப்பர், நால்கோ, ஆயில் இந்தியா, எம்எம்டிசி ஆகிய நான்கு மாபெரும் நிறுவனங்களின் பங்குக ளை பந்தி வைக்கிறது காங்கிரஸ் தலைமை யிலான அரசு. இதை நியாயப்படுத்துவதற்காக மீண்டும் மீண்டும், தங்களது கொள்கைகளால் நாட்டில் வளர்ச்சியும் சுபிட்சமும் ஏற்பட்டு அனைத்து மக்களும் மகிழ்ச்சிக்கூத்தாடுகிறார்கள் என பிரதமரும் அமைச்சர் பெருமக்களும் அறிக் கைவிட்டவண்ணம் இருக்கிறார்கள்.பிரதமர் கூறுவது போல மகிழ்ச்சிக் கூத் தாடுபவர்கள் வெகு சிலர். அவரது கொள்கை களால் துன்பத்தின் விளிம்பில் தள்ளப்பட்டி ருப்பவர்கள் மிகப்பலர்.வெகுசிலருக்கும், மிகப்பலருக்கும் இடையி லான போராட்டத்தில் எழுச்சியோடு வீறு கொண்டு எழுவீர் என அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது. அனைத்து தரப்பு உழைப்பாளி மக்கள், அனைத்துதரப்பு வணிகர்கள், சிறு, குறு முத லீட்டாளர்கள் என நாடே கொந்தளித்து எழ வேண்டிய நாள் செப்டம்பர் 20. அனைத்து இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிக ளும் முழு அடைப்பு - பொது வேலைநிறுத்தம் என களம் காண அழைப்பு விடுத்திருக்கும் நாள் செப்டம்பர் 20. தேசம் காக்கும் இந்தப்போராட்டத்தை மாபெரும் வெற்றிபெறச் செய்யுமாறு அனைத் துதரப்பு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.


நன்றி - தீக்கதிர்

பிள்ளையாரை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கப்பா.....



எல்லா ஊர்களைப் போல வேலூரிலும் வினாயகர் சதுர்த்தி
பரபரப்பாக உள்ளது. அங்கங்கே குட்டியும் பெரிசுமாய் 
வினாயகர் சிலைகள். வசூலின் தன்மை மற்றும் வசூலித்தவர்கள்
நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் கீற்றுப் பந்தலிலும்
அலங்கார ஷாமியானாவிலும் வினாயகர் அமர்ந்து 
அருள் பாலிக்கிறார். வாய்ப்பு கிடைக்கிற இடங்களில் 
எல்லாம் இந்து முன்னணி காவிக்கொடியை பறக்க விட்டுள்ளது.

பொம்மைக் கலைஞர்கள், மண் பாண்டக் கலைஞர்கள், அழகாய்
குடை செய்யும் நாடோடி இனத்தவர், பூ, பழ வியாபாரிகள்,
பந்தல் போடுபவர்கள், மைக் செட் வைப்பவர்கள்,
ஆகியோருக்கு  சுமாரான வருமானம் கிடைக்கிறது என்ற
வகையில் வினாயகர் சதுர்த்தி ஓ.கே. பெரிய கடைகளில்
எந்நாளும் வாய் திறவாமல் கிரெடிட் கார்டை தேய்க்கக்
கொடுக்கிற பெரிய மனிதர்கள், இந்த சிறிய கலைஞர்களிடம்
மட்டும் பேரம் பேசுவது ஒரு கொடுமை.

 ஆனால் ஒரு விதத்தில் இந்த பக்தர்கள் வினாயகரைப் 
போட்டு படுத்தும் பாடுதான் தாங்க முடியவில்லை. 
சம்பிரதாயத்திற்கு ரெண்டு பக்தி பாட்டு போட்ட பிறகு
அதற்குப் பின்பு வெறும் குத்துப் பாட்டுதான். சாலையோரம்
செல்லும் நம்மாலேயே அந்த இரைச்சலைக் கேட்க 
சகிக்கவில்லை. 

அதிலும் சில பாடல்களை கேட்டால் வினாயகரின்
பிரம்மச்சரிய விரதத்தை கலைத்து அவரையும்
கல்யாணம் செய்ய வைத்து விடுவார்கள் போல.

நாள் முழுதும் பாவம் இந்த பாடல்களை கேட்க வேண்டிய
நிலையில் இருந்து கொஞ்சம் வினாயகரைக் 
காப்பாற்றுங்களேன். 

பி.கு : ஒரு தொழிற்சங்கமோ, அரசியல் கட்சியோ 
மக்கள் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டத்திற்கு
ஒலி பெருக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டால்
ஆயிரம் நிபந்தனை போடும் காவல்துறை இந்த
ஒலி பெருக்கிகளை கண்டு கொண்டதே இல்லை.
நாயகனில் வேலு நாயக்கர் வைத்த ஒலி பெருக்கிகளை
அசிஸ்டன்ட் கமிஷனர் நாசர் கழட்டியதற்குப் பின்பு
யாரும் அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை.

ஒரு நல்ல விஷயமும் இன்று பார்த்தேன். வினாயகர்
சதுர்த்திக்கு  வாழ்த்து சொல்லி ரசூல் என்ற
இஸ்லாமியர் பேனர் வைத்திருந்தார்.

Monday, September 17, 2012

இருபத்தி மூன்றே மாதங்களில் நான்காயிரம் கோடி ரூபாய், மாவோயிஸ்டுகளுக்கு முப்பது சதவிகித பங்கு.


பெரிய மாநிலங்கள் சிறு மாநிலங்களாக பிரிக்கப்படுவதால் மக்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ ஆட்சியாளர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கான சான்று ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா.

ஜார்கண்ட் மாநிலத்தில் 2000 ம்  ஆண்டு பாஜக ஆட்சியில் முதல்வர்களாக இருந்த பாபுலால் மாரண்டி, அர்ஜுன் முண்டா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் மது கோடா. 2005 ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட பாஜக சீட் தராததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். பெரும்பான்மை கிடைக்காததால் மது கோடா மற்றும் மூன்று சுயேட்சைகள் அளித்த ஆதரவில்தான் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது.

பாஜக அரசை 2006 ம் ஆண்டு கவிழ்க்க நினைத்த காங்கிரஸ் கட்சி மது கோடாவை பயன் படுத்துகின்றது. அவர்கள் பாஜக அரசிற்கான ஆதரவைத் திரும்பப் பெற அர்ஜூன் முண்டா ஆட்சி  கவிழ்கிறது. காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தர ஜே.எம்.எம் கட்சியோடு சேர்ந்து மது கோடா ஜார்கண்ட் முதல்வராகிறார். சுயேட்சையாக இருந்து முதல்வரான மூன்றாவது நபர் மது கோடா.

கனிம வளம் மிக்க ஜார்கண்ட் மாநிலத்தில் அவற்றை வெட்டியெடுக்க முதலாளிகளுக்கு தாறுமாறாக லைசன்ஸ்கள் வழங்கப்படுகின்றது. கனிமங்கள் கொள்ளை போக, கொள்ளை போக மது கோடாவின் சொந்த கஜானா நிரம்பி வழிகின்றது. புகார்களும் நிரம்பி வழிய வருமான வரி சோதனை நிகழ்த்தப் படுகின்றது.

கோடிக்கணக்கில் ரொக்கப் பணம், தங்க, வைர நகைகள், சொத்துப்பத்திரங்கள் என நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அவர் சம்பாதித்தது தெரிய வருகின்றது. வங்கிகளில் கூட இல்லாத நவீன பணம் எண்ணும் இயந்திரம் ஒன்றை வேறு அவர் வைத்திருந்தார். குவியும் பணத்தை சரியாக எண்ண வேண்டும் அல்லவா ? மும்பை, கொல்கத்தா நகரங்களில் மட்டுமல்லாமல் தாய்லாந்தில் கூட ஆடம்பர ஹோட்டல்கள், லைபீரியாவில் நிலக்கரிச் சுரங்கம் என்றெல்லாம் அவரது சொத்து மதிப்பு விரிகின்றது. ஆனால் அவற்றில் சொற்பமான தொகை மட்டுமே இது வரை கைப்பற்றப்பட்டுள்ளது. 18 செப்டம்பர் 2006 முதல் 23 ஆகஸ்ட் 2008 வரை மட்டுமே பதவியில் இருந்த போதும் அவரால் இந்த அளவிற்கு சுருட்ட முடிந்துள்ளது.

இயற்கை வளங்களை சுரண்டுபவர்களுக்கு எதிராக போராடுபவர்கள், பழங்குடி மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மாவோயிஸ்டுகளுக்கு மது கோடா சம்பாதித்த பணத்தில் முப்பது சதவிகிதம் பங்குத் தொகையாக சென்றுள்ளது என்ற தகவல் மாவோயிஸ்டுகளை அம்பலப்படுத்துகின்றது.(இதற்கான ஆவணங்கள்
கிடைத்துள்ளது. ஆகவே யாரும் என் மீது அவசியம் இன்றி பாய வேண்டாம்)

கோடிக்கணக்கில் ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிக்க உதவுகின்ற வகையில் இயற்கை வளம் உள்ள போதும் ஜார்கண்ட் மாநில மக்களின் வாழ்க்கை நிலை என்னவோ மிகவும் பின் தங்கித்தான் உள்ளது. கல்வி நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதனால்தானோ என்னவோ ஜார்கண்ட் மக்கள் இவ்வளவு ஊழல் செய்த மது கோடாவை சிறையில் இருந்த போதும் கூட 2009 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.

எங்கள் சங்க இதழ் சங்கச்சுடரின் ஊழல்களின் ஊர்வலம் தொடருக்காக
எழுதியது. ஆனால் இந்த தொகையெல்லாம் ஜூஜூபி என்று இப்போது
ஆகி விட்டது.