Saturday, August 20, 2011

மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை நல்லதுதான். ஆனால்?



கலைஞர் கட்டிய தலைமைச் செயலகத்தை மல்டி
ஸ்பெஷாலிடி மருத்துவமனையாகவும் மருத்துவக்
கல்லூரியாகவும் மாற்ற தமிழக  அரசு முடிவெடுத்துள்ளது
நல்லதுதான் . 


கோடிகளை  கொட்டி உருவாக்கப்பட்ட ஒரு கட்டிடம்
பாழும் கட்டிடமாக மாறி சமூக விரோதிகளின் 
புகலிடமாக மாறி  விடுமோ  என்ற அச்சம் இருந்தது.
அக்கட்டிடம் பயன்படுத்தப்பட வேண்டும்  என்ற 
மக்களின் உணர்வுகளை ஏற்க வேண்டிய கட்டாயம்
ஜெயலலிதாவிற்கு  வந்ததும் நல்லதுதான் .

இல்லையென்றால்  எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 
வீராணம் குழாய்கள்  காட்டுமன்னார் கோயில் 
தொடங்கி  விக்கிரவாண்டி வரையில்  சாலையில்
கிடந்து குடியிருப்பாய்  மாறியது போல ஏதாவது
நிகழ்ந்திருக்கும். கலைஞர் செய்த ஊழலை நினைவு
படுத்தவே   அவ்வாறு  அங்கிருந்து அகற்றாமல் 
வைத்திருந்தார்கள் என நினைக்கிறேன். சரி, அந்த
குழாய்கள் இப்போது எங்கே? 


மூன்று நாட்கள் முன்பு நடந்த சம்பவம்  இது. 
திருப்பத்தூரில்  அலுவலகத்திற்கு  வந்த எங்கள்
தோழருக்கு  மாரடைப்பு வர அங்கே ஒரு 
மருத்துவமனைக்கு  எடுத்து செல்கின்றனர்.
அவர்கள் ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில்
காண்பித்து விட்டு வேலூர் சி.எம்.சி  போகச்
சொல்லி விட்டனர்.  ஆம்பூர் மருத்துவமனையும்
கை விரித்து விட்டது.


மாரடைப்பு   வந்து  கிட்டத்தட்ட மூன்று
மணி நேரத்திற்குப் பிறகே  அவர்களால் சிஎம்சி
வர முடிந்தது. மிகவும் தாமதம் உயிர் பிழைக்க 
 மிக மிக  வாய்ப்பு குறைவு என்று  சொல்லியே 
உள்ளே அனுமதித்தார்கள். 


செயற்கை சுவாசம் உள்ளிட்ட எந்த சிகிச்சையும்
பலனளிக்கவில்லை.  அவர் உயிர்  பிரிந்து விட்டது.


உடனடி சிகிச்சைக்கு வாய்ப்பிருந்தால்  ஒரு வேளை
அவர்  பிழைத்திருக்கலாம்.
மாநகரங்களில்  பிரம்மாண்டமான மருத்துவமனை 
கட்டுவதை விட  சிறிய ஊர்களில்  அனைத்து அடிப்படை
வசதிகளுடன்  தரமான மருத்துவமனைகள் அமைப்பதே
அவசியமான ஒன்று.


ஜெயலலிதா இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  

மகத்தான தலைவனுக்கு அஞ்சலி



சி.ஐ.டி.யு  சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும் 
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு 
உறுப்பினருமான  தோழர் எம்.கே.பாந்தே  இன்று 
காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. 
சிறந்த தொழிற்சங்கவாதி, பொருளாதார அறிஞரான 
தோழர் பாந்தேவின் மறைவு  உழைக்கும் மக்களுக்கு
மிகப் பெரும் இழப்பு. 


தெளிந்த நீரோடை போன்று  ஆணித்தரமாக தனது
கருத்துக்களை முன் வைப்பவர் தோழர்  பாந்தே.


 சி.ஐ.டியு   சங்கத்தின்   தமிழ் மாநில மாநாடு 
சென்ற ஆண்டு கடலூரில் நடைபெற்றபோது  அதிலே
அவர் பங்கேற்றார். அதற்கு முன்பாக ஏலகிரி 
வந்த அவரோடு,  கடலூர் வரை செல்லும்  நல்ல 
வாய்ப்பை எனக்கு அளித்தார்கள். 


 அந்த ஏழு மணி நேர பயணம் மிகச் சிறந்த
 அனுபவம்.  பல கேள்விகளை  கேட்டேன். 
 சிக்கலான அரசியல்  கேள்விகளும் உண்டு.
அத்தனைக்கும்  தெளிவான முறையில்  
விளக்கமளித்து  வந்தார். 


மிகப்பெரிய பொறுப்பில் உள்ள நாம் 
சாதாரண ஊழியனுக்கு  பதிலளிப்பதா என
 அவர்  தயங்கவே இல்லை. 


 அற்புதமான தோழமை உணர்வை  
நான் அன்று அனுபவித்தேன். 
மகத்தான  தலைவனுக்கு
மனமார்ந்த அஞ்சலி

Friday, August 19, 2011

தமிழில் இதற்கு என்ன அர்த்தம்? யாரால் சொல்ல முடியும்?



நேற்று  ஒரு தோழரின்  இறுதிச் சடங்கில்  பங்கேற்க 
திருப்பத்தூர் சென்றிருந்தேன்.  அப்போது  கண்ணில் 
பட்ட விளம்பரம் இது. 


விஜயகாந்தின் பிறந்த நாளுக்காக  அவரது கட்சி 
ஆட்கள் வைத்திருந்த பிரம்மாண்ட விளம்பர 
பதாகையின்  வாசகம் கீழே கொடுத்துள்ளேன்.
" தமிழகத்தின் 
திண்டாமைத் தலைவா! " 


 நானும் யோசித்து யோசித்து
பார்த்து விட்டேன்,  பலரையும்  
கேட்டு விட்டேன்


யாருக்கும்  தெரியவில்லை.
தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்.

Thursday, August 18, 2011

தமிழர்கள் பற்றி அமெரிக்க அதிகாரியின் கொழுப்பெடுத்த நையாண்டி - இன்னமும் நீடிக்கும் நிற வெறி!



அமெரிக்க தூதரக துணை அதிகாரி மௌரீன் சோ 
என்ற அம்மையார்  எஸ்.ஆர்.எம் பலகலைக் 
கழகத்தில் பேசுகிற போது  தமிழர்களை நக்கல் 
செய்து   பேசியுள்ளார். 


அவர் இந்தியாவில் 72  மணி நேரம் ரயிலில்
 பயணம் செய்து     இறங்கும் போது  அவர்
தமிழர்கள்  போல அசிங்கமாகவும்  கறுப்பாகவும்
இருந்தாராம்.


என்ன ஒரு கொழுப்பெடுத்த பேச்சு?


தாங்கள்தான் உயர்வானவர்கள், மற்றவர்கள்
கேவலமானவர்கள்  என்ற  வக்கிரமான 
 நிறவெறியின்  வெளிபாடல்லவா இது!


இதிலே  வட இந்திய மாணவர்கள் 
கைதட்டி விசிலடித்து  கொண்டாடினார்களாம்!


 நினைக்கவே  எரிச்சலாக உள்ளது. ஒரு
மாநில மக்களை இழிவு படுத்துவதை  
வரவேற்கும்  மாணவர்கள்  எங்கே 
இந்திய  ஒருமைப்பாட்டை  பாதுகாக்கப்
போகின்றார்கள்?


அவர்  நகைச்சுவையாகத்தான் பேசினார் 
என எஸ்.ஆர்.எம்  பல்கலைக்கழகம்  
சப்பைக்கட்டுவது  அவர்களிடம்  
ஊறிப்போயுள்ள  அடிமைப்புத்தியையே 
உணர்த்துகின்றது.


அமெரிக்க  தூதரகம்  இப்போது  மன்னிப்பு
கேட்டுள்ளது. தமிழர்களை  இழிவு  படுத்திய
அந்த அதிகாரியை  தமிழ் மண்ணிலிருந்தே 
அப்புறப்படுத்த வேண்டும்.

தமிழ்  அமைப்புக்கள் இப்பிரச்சினையை 
கையிலெடுக்க வேண்டும்
 

Wednesday, August 17, 2011

அமெரிக்காவில் அடிமைகள்




எங்கள் கோட்டச்சங்க  மாத இதழான  சங்கச்சுடர்  ஜுலை  மாத  
இதழிற்காக  எழுதியது.


நூல்  அறிமுகம்

நூல்  ;                          அமெரிக்க  கறுப்பு  அடிமையின்  சுயசரிதை



 


ஆசிரியர்  ;                பிரெடரிக்   ட்க்ளஸ்

 

தமிழில்    :                 இரா. நடராஜன், கடலூர்

 

வெளியீடு :                 பாரதி  புத்தகாலயம்
                                        சென்னை - 18

 

விலை     :                   ரூபாய்  50 /-

 

அமெரிக்க  வரலாற்றின்  இருண்ட  பக்கங்க்ளாக  
அங்கே  நிலவி  வந்த  அடிமை  முறையை
சொல்ல வேண்டும். ஆப்பிரிக்க  நாட்டின்  

சிறுவர்கள்  சிறை பிடிக்கப்பட்டு  அமெரிக்கா
கொண்டு வரப்பட்டு  அங்கே  விவசாயப் 

பண்ணைகளில்  மிகப் பெரிய உழைப்புச்
சுரண்டலுக்கு  உட்படுத்தப்பட்டனர்.  அப்படி

அடிமைகளாய் கொண்டு வரப்பட்ட பெண்கள்
பாலியல் கொடுமைகளுக்கு  உட்படுத்தப்பட்டு  

பிறக்கும்  குழந்தைகளும்  அடிமைகளாக
கொடுமைகளுக்கு  ஆளாக வேண்டும்.

 

அப்படி  ஒரு ஆப்பிரிக்க அடிமைக்கும்  அமெரிக்க 
முதலாளிக்கும்  பிறந்து  அடிமையாய்  வாழ்ந்து  
விடுதலையின்  தாகத்தில்  தப்பி வந்து   
பிற்காலத்தின்  அடிமைகளுக்காக  குரல் கொடுத்த  
பிரெடரிக் டக்ளஸ்  என்பவரின்  அடிமை கால 
வாழ்வு  பற்றியதுதான்
இந்த  நூல்.

 

கையில் எடுத்தால் முடிக்கும் வரை கீழே  வைக்க
முடியாத நூல்களில்  இதுவும் ஒன்று.
அடிமை முறையின்  அராஜகத்தை  கண் முன்னே

 நிறுத்தும் நூல் இது. சவுக்கடிகள் சாதாரணம், 
உணவு  என்பது  அரை வயிற்றுக்குத்தான், கல்வி 
கூடாது, சவுக்கடியில் இறந்தாலும்  கேள்வி கேட்க
முடியாது., கடவுள் புகழை பரப்புபவர்கள்  அடிமை முறை  
தொடர்வது, கடவுளுக்கான தொண்டு  என்று  
ஏமாற்றுவது, பெண்களை  தங்களின் பாலியல் 
வக்கிரங்களுக்கு  பயன்படுத்துவது, வயதான பெண்களை
காட்டின்   நடுவே  சாகட்டும்  என தனியே கொண்டு 

விடுவது  போல  தான் பார்த்த  அனுபவித்த  பல 
கொடுமைகளை  ட்க்ளஸ்  விவரித்துள்ளார்.

 

முதலாளி  இறக்கும் போது மற்ற சொத்துக்களை  
வாரிசுகளுக்கு  பங்கிடுவது போலவே  அடிமைகளையும்  
பங்கிடுவது  என்ற முறையை  படிக்கும் போது
அமெரிக்கர்கள்  மற்றவர்களை  என்றுமே  

மனிதர்களாக  கருதியதில்லை  போலும்
என்ற கோபம்தான்  எழுகின்றது.

 

தொடர்ந்து  தாக்கும்  முதலாளியை  ட்க்ளஸ்  திருப்பி  
அடிக்கும் போது  அவன்  பின்வாங்க, இவருக்கு  
விடுதலை  வேட்கை  அதிகரிக்கிறது. அவர்  எப்படி
தப்பினார்  என்பதை  மற்றும்  விவரிக்கவில்லை. 

அது மற்ற  அடிமைகளுக்கு  சிக்கலாகும்  என்பதே  
அத்தயக்கத்தின்  காரணம்.

 

1840ல்  வெளி வந்த இந்த நூல் அன்று  அமெரிக்காவில்
 மிகவும்  அதிகமாக  விற்பனையான  ஒரு புத்தகம். 
இந்த நூலை உலக அடிமை முறை  பற்றிய  மிக
முக்கியமானதொரு  ஆவணம்  எனறே  

சொல்லலாம்  என மிகச்சரியாக  நெல்சன் 
மாண்டேலா குறிப்பிட்டுள்ளார்.  மிகச்சிறப்பான  
முறையில்  தமிழாக்கம் செய்துள்ள  இரா.நடராஜன்
 பாராட்டுக்குரியவர்.

அலெக்ஸ் ஹேவியின் " ஏழு தலைமுறைகள் " 
படித்த போது  ஏற்பட்ட தாக்கம் , கோபம், எல்லாமே
இப்புத்தகத்தை படித்து முடித்த போதும் உருவானது.


Tuesday, August 16, 2011

இதுதான் உண்மையான இந்தியா

ஒரு தோழர் அனுப்பிய சுதந்திரதின 
வாழ்த்துச்செய்தி  கீழே உள்ள 
புகைப்படம்.


 இதுதான்  இந்தியாவின்  உண்மையான
நிலையை, பெரும்பான்மையினரின் 
அவலத்தை சித்தரிப்பதாக 
கருதுகின்றேன்.
உங்கள் கருத்து என்ன?
 

பூமியைப் படைத்தது கடவுள் கிடையாது


















தென் பசிபிக் கடலில்  பாய்மரப் படகில் 08.11.2006
அன்று  பயணித்த  ஒரு  குழுவிற்கு  கிடைத்த 
அற்புத  அனுபவம்  இது.

கடலின்  நடுவே  மணற் பரப்பு  உருவாகிறது.
கடலுக்கடியே  எரிமலை  வெடிக்கிறது.
புகையும்  சாம்பலும்  தொடர்ந்து  பரவ
புதிதாய்  ஒரு  தீவு  அங்கே 
அவர்களின்  கண்  எதிரே
தோன்றுகிறது.

இயற்கையின்  விளையாட்டாய்
அங்கே  ஒரு புதிய தீவு  உருவாவதை
அவர்கள்  பார்க்கிறார்கள்.
புகைப்படம்  எடுக்கிறார்கள்.
அவைதான் மேலே உள்ள படங்கள்.

தேடித் தேடி  பார்க்கிறேன்.
நான் முகன் பிரம்மனோ,
தலையில்  சந்திரனைத் தாங்கிய
பரமசிவனோ.
பாற்கடலின்  அதிபதி
மகா விஷ்ணுவோ
இல்லை  ஏ.பி.நாகராஜன்
சொன்னபடி
இவர்களுக்கெல்லாம்
மேலான
ஆதி பராசக்தியோ

ஓளி வட்டத்தோடோ,
கைகளில்  மின்னல் போன்ற
ஒளிப் பாய்ச்சலோ
இல்லாமல்தான்  அந்தத் தீவு
அங்கே உருவாகி  உள்ளது.

இனியும் சொல்ல வேண்டாமே!
பூமியைப் படைத்தது
கடவுள்  என்று.....