Tuesday, January 13, 2026

35 லட்சம் அளித்தோருக்கு மனமார்ந்த நன்றி



வலைப்பக்கத்தின் பார்வைகள் (HITS)  எண்ணிக்கை நேற்று இரவு 35 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது.

 2009 ம் தொடங்கியது இந்த பக்கம். அந்த ஆண்டு இரண்டே பதிவுகள். அதற்கு பிறகு இந்த பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை. 2010 மத்தியில் ஒரு விபத்து. முழங்கால் ஜவ்வு கிழிந்து நாற்பத்தி ஐந்து நாட்கள் விடுமுறையில் இருந்த போது வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கினேன். 2011 முதல் அதில் தீவிரம் காண்பிக்க வரவேற்பும் கிடைத்தது, தமிழ்மணம் திரட்டி செயல்பட்டு வந்த காலம். அதில் முதல் இருபது வலைப்பக்கங்களுக்குள் விரைவிலேயே இடம் பிடிக்க வலைப்பக்கத்தில் எழுதுவது என்பது அன்றாட செயல்பாடாக மாறியது.

 ஜூனியர் விகடன் கொடுத்த அறிமுகம், ச்ச்சினுக்கு கொடுத்த பாரத ரத்னா பற்றிய பதிவை குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் பிரசுரித்தது ஆகியவை எல்லாம் உற்சாகமளித்த விஷயங்கள்.

 ஆயிரமாவது பதிவை எழுதிய போது அன்றைய தென் மண்டலப் பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் கே.சுவாமிநாதன், நான் ஆயிரம் பதிவுகள் எழுதியதை தமிழ்நாடு முழுதும் எடுத்துச் சென்றார்.

 “கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்று பகவத்கீதை சொல்வது இன்று எதற்கும் பொருந்தாது. வலைப்பக்கம் எழுதுவதற்கும். யாருமே இல்லாத கடையில் டீ ஆற்ற முடியாதல்லவா? பார்வைகள் இல்லாவிட்டால் எழுதுவதற்கு எங்கே வேகம் வரும்! அந்த வித்த்தில் நான் பாக்கியவான். தொடர்ந்து பார்வைகள் வந்து கொண்டிருப்பதால்தான் தொடர்ந்து எழுதவும் முடிகிறது.

 அலுவலகத்தில் கற்றுக் கொண்ட எக்ஸல் அறிவை பதிவுகள், பார்வைகளை ஆவணப் படுத்தவும் பயன்படுத்திக் கொண்டேன். அதனால்தான் ஒவ்வொரு ஐந்து லட்சம் பார்வைகளையும் எப்போது அடைந்தேன் என்ற விபரம் உள்ளது.

நாள்

பார்வைகள்

மாதங்கள்

09.09.2013

2     லட்சம்

52

16.04.2015

5     லட்சம்

71

22.06.2017

10   லட்சம்

26

11.05.2019

15   லட்சம்

23

29.12.2020

20   லட்சம்

19

05.07.2022

25   லட்சம்

18

01.08.2024

30   லட்சம்

25

12.01.2026

35   லட்சம்

17

 

   

 

 

 

 

 

 

 



முதல் ஐந்து லட்சத்தை அடையத்தான் 71  மாதங்கள் ஆனது. அடுத்தடுத்த ஐந்து லட்சங்கள் விரைவிலேயே வந்து விட்டது.

 கடந்த வருடம் எழுதிய பதிவுகள் குறைவு. 395. ஆனால் பார்வைகள் கடந்த ஆண்டுதான் மிக அதிகம். 3,97,660. அதிலும் ஒரு பதிவு கூட எழுத இயலாத ஜுன் மாதத்தில்  மட்டும் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள்.

 நான் நம்புகிற கொள்கையின் அடிப்படையில்தான் என் அரசியல் பதிவுகள் அமைந்திருக்கும். அதில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. அரசியலைத் தாண்டி நூல் அறிமுகம், சமையல் குறிப்பு, திரை விமர்சனம், பயண அனுபவம், போராட்ட அனுபவம் என்று எழுதி வருகிறேன்.

 எழுதுவதற்கு விஷயம் இல்லாமல் திணறிப் போகும் நிலையை நம் இந்திய அரசியல்வாதிகள் என்றைக்கும் உருவாக்கியதில்லை. எழுத நேரமில்லாத நிலைதான் ஏற்பட்டுள்ளது.

 தொடர்ந்து வலைப்பக்கத்திற்கு வந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். உங்களின் வருகையே என்னை உற்சாகப்படுத்துகிறது. மேலும் மேலும் எழுத வைக்கிறது. மனதிலும் கைகளிலும் தெம்பு இருக்கும்வரை தொடர்ந்து எழுதுவேன், எழுதிக் கொண்டே இருப்பேன், உங்களின் ஒத்துழைப்போடு . . .

4 comments:

  1. பாராட்டுகள்! தங்களின் வாசகர்கள்/பார்வையாளர்கள் எண்ணிக்கை ஒரு கோடி இலக்கத்தை அடைய வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. வாழ்த்துகள் தோழர்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ராமன் இடதுசாரி சித்தாந்தத்தை பரவை நீங்கள் எடுத்துக் கொள்ள முயற்சி வெல்லட்டும் ✊👍

    ReplyDelete
  4. நல்ல சிந்தனை நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்🎉

    ReplyDelete