Sunday, January 5, 2025

வாச்சாத்தி நாயகருக்கும் சுவாமிக்கும் வாழ்த்துக்கள்

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தோழர் பெ.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிகச் சரியான தோழரை மாநிலக்குழு ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளது.

தோழர் பெ.சண்முகம் என்றால் வாச்சாத்தியில் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆட்கள் சேர்ந்து நடத்திய அராஜகத்திற்கு எதிரான உறுதியான போராட்டம்தான் நினைவுக்கு வரும். இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்த அப்போராட்டத்தினை முன்னெடுத்தவர் தோழர் சண்முகம்.

எங்கள் கோட்டத்தின் இரு நிகழ்வுகளுக்கு அவரை அழைத்துள்ளோம். 

அண்ணல் அம்பேத்கரின் படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார். "வேட்டையை வாழ்வாகக் கொண்ட வனத்தின் மைந்தன் ஏகலைவன், துரோணரைப் பார்த்து வில் வித்தை கற்றுக் கொண்டதாக சொல்வதே ஒரு கட்டுக்கதை" என்று அவர் சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது.

வாச்சாத்தி தீர்ப்பு வந்த நேரத்தில் எங்கள் கோட்டத்தில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் அண்ணல் அம்பேத்கர்-வெண்மணி தியாகிகள் நினைவுக் கருத்தரங்கத்தில்  உரையாற்ற வருமாறு அழைத்தோம். அவரும் உடனடியாக ஒப்புக் கொண்டார். 

வாச்சாத்தியில் பழங்குடி இன மக்களுக்கு, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பற்றி அவர் விவரிக்க விவரிக்க கண்ணீர் வடியும் முகங்களோடு அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் அவரே உடைந்து போனார். அந்த மக்களின் துயரத்தோடு தன்னை பிணைத்துக் கொள்ளாமல் அது சாத்தியமில்லை.

கருத்தரங்கிற்கு மூன்று நாட்கள் முன்பாக அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. தவிர்க்க முடியாத வேலை காரணமாக என்னால் வர முடியவில்லை என்று சொல்வாரோ என்ற அச்சத்துடன்தான்  பேசினேன். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் அரியாகுஞ்சூர் என்ற கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலில் தோற்றுப் போன ஒருவர் அங்கிருந்த 11 பழங்குடி மக்களின் குடிசைகளை இடித்துத்தள்ளி விட்டார். அவர்களுக்கு உங்கள் சங்கம் சார்பாக உதவ முடியுமா என்று கேட்டார். 

நாங்களும் உடனடியாக சுற்றறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுக்க இரண்டே நாளில் கணிசமான தொகை வசூலானது. அந்த தொகையை அவரிடம் அளித்தோம்.


அவர் அந்த தொகையை எங்களிடமே கொடுத்து நீங்களே நேரில் சென்று அம்மக்களுக்கு பொருட்களாக வழங்குங்கள் என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் தோழர் வீரபத்திரனும் செங்கம் ஒன்றியச் செயலாளருமான மறைந்த தோழர் குமரேசனும் ஒருங்கிணைக்க நாங்கள் மறு நாளே அரியாகுஞ்சூர் சென்று வந்தோம். 



மன நிறைவு அளித்த ஒரு பணி அவரால்தான் சாத்தியமானது. 

மாணவர் சங்கத்தலைவராக, மலைவாழ் மக்கள் சங்கத் தலைவராக, விவசாயிகள் சங்கத்தலைவராக மிகச் சிறந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய அவர், மாநிலச் செயலாளர் என்ற பொறுப்பிலும் சிகரம் தொடர வாழ்த்துகிறேன்.



எங்கள் தோழர் கே.சுவாமிநாதன் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெருமையாக இருக்கிறது.

அவர் பணி ஓய்வு பெறும் போது எழுதிய 

தோழர் சுவாமி - சுற்றறிக்கையையும் தாண்டி

என்ற பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன். ஓய்வறியா போராளி என்பது அவருக்கு மிகவும் பொருந்தும். 25 ம் தேதி வெண்மணியிலேயே அவருக்கு கடும் காய்ச்சல். அதன் பின்பு 29, 30 தேதிகளில் திண்டுக்கல், மதுரையில் கூட்டங்கள்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நடைப்பயணத்தை துவக்கி வைக்க வேலூர் வந்து விட்டார். 

தோழர் சுவாமிநாதன் புதிய பொறுப்பிலும் முத்திரை பதிப்பார். தோழருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.


1 comment:

  1. 🚩🚩தோழர்களுக்கு வாழ்த்துக்கள்💐🤝

    ReplyDelete