Monday, January 13, 2025

பீஷ்மரைக் கொன்ற சிகண்டி யார்?

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகளைப் பற்றிய பதிவொன்றில் “சிகண்டிகள்” என்று சொல்லியிருந்தேன். அதற்கு ஒரு அனாமதேயம் “சிகண்டின்னா என்ன?” என்று கேட்டிருந்தது.  சிகண்டி என்பது பொருள் அல்ல, புனைவுப்பாத்திரம், நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன் என்று பதில் சொல்லியிருந்தேன்.

அந்த நேரம் இப்போதுதான் கிடைத்தது.

மகாபாரதக் கதையின் முதல் அரசன் சந்தனு. சந்தனுவிற்கும் கங்கைக்கும் பிறந்தவர் பீஷ்மர். சந்தனு அடுத்து ஆசைப்பட்டது சத்யவதி என்ற மீனவர் குலப் பெண். சந்தனுவுக்கு திருமணம் செய்து தர சத்யவதியின் தந்தை மறுக்கிறார். தன் மகளின் வாரிசுக்கு அரச பதவி கிடைக்காது. முதல் மனைவியின் மகனுக்கே  வாய்ப்பு போகும் என்பது அவரது மறுப்பின் காரணம். தந்தையின் ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காக தான் அரியணை ஏற மாட்டேன், திருமணமும் செய்து கொள்ள மாட்டேன் என்று பீஷ்மர் சபதம் எடுக்க சந்தனு-சத்யவதி திருமணம் இனிதே நடக்கிறது.

சந்தனு – சத்யவதி தம்பதியருக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவன் விசித்திரவீரியன், இன்னொருவன் சித்ராங்கதன். இதிலே  ஒரு கந்தர்வனோடு சண்டை போடுகையில் சித்ராங்கதன் இறந்து விடுகிறான்.   உடல் நலம் பாதிக்கப்பட்ட இன்னொரு சகோதரனான விசித்திரவீர்யனுக்கு பெண் பார்க்கும் படலம் நடந்தது. காசி மன்னன், தன் மூன்று மகள்களான அம்பை, அம்பிகா, அம்பாலிகா ஆகியோருக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்திருந்தார்.  அங்கே போன பீஷ்மரை மூவரும் கண்டு கொள்ளாமல் போக, சுயம்வரத்துக்கு வந்த மற்ற அரசர்களும் கேலி பேச பீஷ்மர் மூன்று இளவரசிகளையும் கைப்பற்றிக் கொண்டு வருகிறார். எதிர்த்துப் போரிட்ட அனைத்து நாடுகளின் அரசர்களும் தோற்றுப் போகிறார்கள்.

விசித்திரவீர்யனுக்கு மூவரையும் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடக்கும் போதுதான் ஒரு திருப்பம் வருகிறது. சால்வன் என்ற அரசனையே கணவனாக நான் மனதில் நினைத்து விட்டேன் என்று முதல் பெண் அம்பை சொல்ல அடுத்தவரை காதலித்த பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று விசித்திரவீர்யன் மறுக்க நீ சால்வனையே மணம் செய்து கொள் என்று அம்பையை பீஷ்மர் அனுப்பி வைக்கிறார். பீஷ்மர் என்னை தோற்கடித்து உன்னை கைப்பற்றி அழைத்துச் சென்று விட்டார், வேண்டுமானால் நீ அவரையே திருமணம் செய்து கொள் என்று சால்வனும் அம்பையை திருப்பி அனுப்பி விட நான் சபதம் செய்து விட்டேன் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று பீஷ்மரும் மறுக்க அம்பையின் கதி அதோகதியாகிறது.

பீஷ்மர் – சால்வன் என்று கால்பந்து போல மாறி மாறி அம்பையை நடத்துகிறார்கள்  ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன அம்பை அனைத்துப் பிரச்சினைக்கும் காரணமான பீஷ்மரை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து அனைத்து அரசர்களிடமும் உதவி கேட்கிறாள். பீஷ்மருக்கு அஞ்சி அனைவரும் மறுக்கிறார்கள். மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லப்படும் பரசுராமர் உதவ முன் வருகிறார். கடைசியில் மனிதன் பீஷ்மரிடம் கடவுள் பரசுராமன் தோற்றுப் போகிறார்.

தன் முயற்சியில் சற்றும் தளராத அம்பை முருகனை நோக்கி தவம் செய்ய, முருகனும் காட்சி கொடுத்தார். அவரும் போருக்கு தயாரில்லை. மாறாக ஒரு மாலை ஒன்றை கொடுத்து இந்த மாலையை யார் சூடிக் கொள்கிறார்களோ அவரே பீஷ்மரை கொல்வார் என்று வரம் கொடுத்து விட்டு மறைந்து போகிறார்.

அந்த மாலையை கையில் எடுத்துக் கொண்டு அம்பை மீண்டும் அலைகிறார். அப்போதும் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. பின்னாளில் திரௌபதியின் தந்தையாகப் போகும் துருபதனின் அரண்மனை கதவில் மாலையை போட்டு விட்டு தீக்குளித்து இறந்து போகிறாள்.

அம்பையின் அந்த ஜென்மம் முடுகிறது. சினிமாவாக இருந்தால் இங்கே இடைவேளை போடுவார்கள். நாமும் இந்த பதிவிற்கு இங்கே இடைவேளை விட்டு விட்டு அடுத்த பாகத்தில் சந்திப்போம்.

 

No comments:

Post a Comment