எங்கள் தஞ்சைக் கோட்டத் தோழரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளருமான தோழர் களப்பிரன் எழுதிய முகநூல் பதிவையும் அவர் எழுதிய கட்டுரையையும் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
நேரு பற்றிய கட்டுரையை அவரது பிறந்த நாளன்று கூட அச்சிட ஊடகங்கள் மறுக்கின்றன என்றால் யார் மீது பயம்?
இன்றைய ஆட்சியாளர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற பயமா?
மோடி மாதிரியான சில்லறைகள் பிரதமராக இருக்கும் காலத்தில் இப்படியும் ஒரு சிறந்த மனிதர் பிரதமராக இருந்தார் என்ற உண்மை தெரியக்கூடாது என்ற பயமா?
நேரு பற்றி கட்டமைத்த பொய்கள் தகர்ந்து போகுமா என்ற அச்சமா?
தோழர் களப்பிரனின் முகநூல் பதிவு கீழே
நேரு – இந்தியாவின் விலைமதிப்பில்லா ஆபரணம்
”இந்திய விடுதலையின் விடியலுக்கு முன்னால் இருந்த இருள் சூழ்ந்த பொழுதில், நமது வழிகாட்டும் விளக்காக ஜவஹர்லால் நேரு தான் இருக்க வேண்டும் என்ற முடிவும், விடுதலையை நாம் சாதித்ததைத் தொடர்ந்து, இந்தியா பிரச்சினைக்குப் பின் பிரச்சனையை எதிர் கொள்ளும் போது, நமது நம்பிக்கையை உயர்த்திப் பிடிப்பவராகவும், நமது படைகளின் தளபதியாகவும் நேரு மட்டுமே இருக்க வேண்டும் என்பதும், அவருக்கு இருந்த தகுதிகளின் அடிப்படையில் தான் அவரை தேர்வு செய்தோம். நமது கடினமான வாழ்வின் கடைசி இரண்டு ஆண்டுகளில் இந்த நாட்டுக்காக நேரு எந்த அளவுக்கு உழைத்தார் என்பது என்னை விடவும் வேறு ஒருவரும் அறியார். அவர் சுமந்த பிரமாண்டமான பொறுப்புக்களாலும், அவர் வகித்த உயர்ந்த பதவி தந்த கவலைகளாலும், அந்தக் காலத்தின் போது, விரைவாக அவருக்கு வயதாகி விட்டதை நான் கண்டேன்.”
இந்த வார்த்தைகளை நேருவின் தீவிர ஆதரவாளரோ, நண்பரோ, உறவினரோ, அல்லது அவரை விட வயதில் குறைந்த யாரோ ஒருவர் சொல்லியிருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் நேருவை விட 14ஆண்டுகள் வயதில் மூத்தவரான சர்தார் வல்லபாய் படேல். நேருவுக்கு எதிராக பல நேரங்களின் இன்றைய பிரதமர் தொடங்கி ’நேரு ஒவ்வாமை’ கொண்ட அத்தனை சங்பரிவாரத்தவர்களும் நேருவிற்கு எதிராக படேலை முன் நிறுத்தி உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் செய்துவருகிறார்கள். படேலின் 150ஆவது ஆண்டுவிழாவில் கூட படேலை உயர்த்திப்பேசுவதற்காகவே நேருவை தாழ்த்திப்பேசும் நிகழ்வுகள் அறங்கேறின. ஆனால் உண்மை அதுவல்ல என்பதை அந்தக்காலத்தின் ஆவணங்கள் நமக்கு உணர்த்துகிறது. நேரு குறித்த நீண்ட உரையின் ஒரு பகுதியான இந்த வார்த்தைகள், படேல் தான் காலமாகும் ஓராண்டு முன்பாக 14 அக்டோபர் 1949ல் தன் அந்திம காலத்தில் பேசியவை.
நேருவின் தேர்வும் – படேலின் இசைவும்
1947 இந்திய விடுதலைக்கு முன்பாக நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் மிக முக்கியமானது. அந்தத் தேர்தலில் தேர்வு செய்யப்படுகிறவர் தான் இந்தியாவின் முதல் பிரதமர் என்கிற நிலை இருந்தது. அன்றைய இந்தியாவின் 15 மாகானங்களில் 12 மாகனங்கள் படேலை தேர்வு செய்தனர். அந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சியை படேல் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் இந்திய நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்ல, உலகத் தலைவர்கள் மத்தியிலும் புகழ் மிக்க தலைவராக நேரு இருந்தார். அதோடு காந்தியடிகள் தனது தீவிர விசுவாசியான படேலுக்கு பதிலாக, தன்னிடம் பல இடங்களில் முரண்படும் நேருவை பிரதமராக தேர்வு செய்ய தனது விருப்பத்தை தெரிவித்தார். அதற்கு காந்தியடிகள் சொன்ன காரணம், “நேரு நவீன சிந்தனை கொண்டவர். உலகலாவிய அவரின் முற்போக்கு எண்ணம் கொண்ட பார்வை இந்தியாவின் எதிர்காலத்திற்கு உதவும்” என்று குறிப்பிட்டார். இறுதியில் காந்தியின் முடிவே காங்கிரஸ் முடிவானது.
நேரு விடுதலை இந்தியாவின் முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் 1947 ஆகஸ்ட் 1 அன்று நேரு படேலுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “ஓரளவு சம்பிரதாயங்கள் கடைபிடிக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் மத்திய அமைச்சரவையில் உங்களை சேர்த்துக் கொள்வதற்கான முறையான அழைப்பு விடுப்பதற்கான கடிதம் இது. இந்தக் கடிதத்திற்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது, ஏனெனில் நீங்கள் நம் அமைச்சரவையின் வலுவான தூண்.” என்று குறிப்பிட்டார். அதற்கு படேல், “எனது வாழ்வின் எஞ்சியுள்ள காலம் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். உங்களைப் போன்ற தியாகத்தை வேறு யாரும் செய்ததில்லை, நாட்டின் லட்சியத்தை நிறைவேற்ற அப்பழுக்கற்ற முழுமையான விசுவாசத்தை காட்டுவேன்.” என்று பதில் எழுதினார். இந்த இருவரைத் தான் இன்றைக்கு ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்த முயற்சிக்கிறார்கள்.
எல்லோருக்கும் இடம் கொடுத்த நேரு அமைச்சரவை
கருத்தியல் ரீதியில் படேலுக்கு நேருவிற்கு பல எதிர் முனைகள் இருந்தாலும், செயல்பாட்டில் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து எங்கும் நடந்துகொள்ளவில்லை. படேல் மட்டுமல்ல, எதிர்கட்சிகளாக இருந்தவர்களையும் கூட தன்னுடைய முதல் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார் நேரு. தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் நேருவின் கொள்கைகளை விமர்சித்து வந்தவர் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர். அதே போல் நேரு தன் காலம் முழுக்க விமர்சித்து வந்த இந்து மகாசபை அமைப்பின் அப்போதைய தலைவர் டாக்டர் ஷியாம்பிரசாத் முகர்ஜி. இந்த இருவருக்கும் தனது அமைச்சரவையில் இடம் கொடுத்தார் நேரு. அதற்கு நேரு சொன்ன காரணம், ”இருவரின் கல்வி மற்றும் அரசியல் அறிவுத்திறன் புதிய இந்தியாவிற்குத் தேவை” என்றார். அதோடு ”நாம் பெற்றுள்ள சுதந்திரம் காங்கிரஸுக்கானது மட்டுமல்ல, அனைத்து மக்களுக்குமானது” என்றார் நேரு. பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் தனது அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அவர் வாதிட்டார்.
நேரு வாரிசு அரசியலுக்கு வித்திட்டாரா
“நேரு தனது குடும்பத்தை மட்டுமே அரசியல் வாரிசாக்கினார் என்றும், படேல் உள்ளிட்டவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் திட்டமிட்டு அரசியலில் இருட்டடிப்பு செய்துவிட்டார்” என்றும் கூசாமல் இன்றும் தவறான விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள். உண்மை என்ன என்றால் நேரு காலமாகும் வரை அவரது ஒரே மகளான இந்திரா நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட அவர் அனுமதிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் படேல் மறைவிற்குப் பிறகு அவரது மகள் மணிபென் படேலுக்கு 1952 முதல் தேர்தலிலேயே தெற்கு கைரா தொகுதியிலிருந்து போட்டியிட வாய்ப்பு கொடுத்து வெற்றி பெறச்செய்தார். அதே போல் 1957ல் ஆனந்த் நாடாளுமன்றத் தொகுதியிலும் 1964 மாநிலங்களவை உறுப்பினராகவும் காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டார் மணிபென். அதோடு 1957 தொடங்கி 1964 வரை மணிபென் குஜராத் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். அதே போல் படேலின் மகன் தஹ்யாபாய் படேலும் 1957 முதல் 1973 வரை நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகித்தார். இதில் நகை முரண் என்னவென்றால் இன்றைக்கு படேலுக்காக கண்ணீர் வடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கார்ர்கள் தான், அன்றைக்கு படேல் வாரிசுகளான மணிபென்னும், தஹ்யாபாயும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட போது, ஒவ்வொரு முறையும் கடுமையாக எதிர்தவர்களாக இருந்தார்கள். ஆனால் நேருவின் ஒரே மகள் இந்திராவோ 1964 நேரு மறைவிற்குப் பிறகே நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார்.
நேரு சந்தித்த தேர்தல்கள்
நேருவை பிரதமராக தேர்வு செய்த காந்தியடிகள் 1948லேயே இந்துத்துவ தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டார். நேருவின் அமைச்சரவையில் இருந்த மூத்த உறுப்பினரான படேல் 1950லேயே காலமாகிவிட்டார். ஆனால் இவர்களது மறைவிகுப் பின்னர் தான் நாட்டின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலும் எழுத்தறிவு இல்லாத, ஆனால் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்களிக்கும் முறையில் முதன் முதலாக அறிவிக்கப்பட்ட உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு, தனது முதல் தேர்தலை 1952ல் சந்தித்தது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக எதிர்கட்சிகளை தகாத வார்த்தைகளில் நேரு பேசவில்லை. உண்மைக்குப் புறப்பான செய்திகளை சொல்லி நேரு வாக்கு கேட்கவில்லை. அன்றைக்கு புதிய இந்தியாவின் முன் இருந்த பல்வேறு சவால்களை எளிய மக்கள் முன் வைத்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்யலாம் என்று பேசினார். அதோடு மதவாதத்தால் பீடிக்கப்பட்டிருந்த பகுதிகளின் மத்தியில் மதவாதத்தில் உள்ள தீமைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சாரத்தின் முடிவில் நடந்த தேர்தலில் தான் 490 இடங்களில் காங்கிரஸ் 364 இடங்களில் வெற்றி பெற்றது. அது முதல் தேர்தல் அதனால் தான் அவ்வளவு இடங்களை காங்கிரஸ் வென்றது என்று நினைக்கலாம். ஆனால் நேரு இருந்த காலத்தில் நடைபெற்ற 1957ல் தேர்தலில் 371 இடங்களும், 1962 தேர்தலில் 361 இடங்களையும் தொடர்ந்து காங்கிரஸ் வென்றது. இது முழுக்க முழுக்க நேரு என்கிற மனிதர் இந்தியா எனும் நாட்டை மதசார்பற்ற, ஜனநாயக நாடாக பாதுகாத்து நடத்திய உள்நாட்டுப் போராட்டத்திற்கு, நாட்டு மக்களிடம் நடத்திய உரையாடலுக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.
நேரு குறித்து நிறைவாக படேல்
படேல் தனது மேற்கண்ட உரையின் நிறைவாக ”நேருவின் மாபெரும் மற்றும் அனைவரையும் விஞ்சி நிற்கும் ஆளுமை பற்றி இந்த சில வார்த்தைகளால் நிறைவு செய்வது வெளிப்படையாகவே இயலாத ஒன்று. அவரது பல்துறை திறம் மிக்க பாத்திரமும், சாதனைகளும் அவர் பற்றிய வரையறுப்பை உடன் மீறக்கூடியவை. சில நேரங்களில் அவருடைய சிந்தனைகள், எளிதில் அளக்க முடியாத ஓர் ஆழம் மிக்கவை. ஆனால் அவற்றுக்குள் எல்லாம் ஆழ்ந்திருப்பது, ஜாதி, சமயம், இனம் மற்றும் மத வேறுபாடின்றி அனைவருக்கும் அவரை பிரியமுடையவராக்கும் ஓர் வெளிப்படையான நேர்மையும், ஓர் இளைஞனின் நெஞ்சுரமும் தான். அவரது அறுபதாம் ஆண்டு வைர விழாவை முன்னிட்டு, சுதந்திர இந்தியாவின் இந்த விலை மதிப்பற்ற சொத்துக்கு நாம் மரியாதை செலுத்துவோம். இந்த நாட்டை முன்னேற்றுவதிலும், அவருடைய இலட்சியங்களை அடைவதற்கான முயற்சிகளிலும் அவர் பெரும், பெரும் வெற்றிகளை உறுதி செய்யட்டும்.” ஜவஹர் என்றால் ஆபரணம் என்று பொருள். ஆம் ஜவஹர்லால் நேரு நம் இந்திய நாட்டின் விலைமதிப்பில்லா ஆபரணம் தான்.
– களப்பிரன்
No comments:
Post a Comment