Friday, January 31, 2020

இதுதாண்டா டெல்லி போலீஸ்!!!!

அரசுக்கு எதிராக போராடும் மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக
அடிப்பார்கள்.

அதே நேரம்

அந்த மாணவர்களை சுட்டுத் தள்ள ஒரு காவி பயங்கரவாதி கையில் துப்பாக்கி எடுத்துக் கொண்டால்

அவன் சுடும் வரையில் வேடிக்கை பார்ப்பார்கள்.

இந்த கேவலமான பிழைப்பிற்கு பதிலாக டெல்லி போலீஸ் வேறு பிழைப்பைப் பார்க்கலாம்


Sunday, January 26, 2020

இந்த வருடம் இன்னும் அழுத்தமாய் . . .

கடந்த வருடம் குடியரசு தினத்தன்று எழுதிய பதிவையே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

குடியரசு தினத்தை வெறும் கொண்டாட்டமாக கடந்து போகாமல் ஜனநாயகத்தை, அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் முன்னை விட இன்னும் அழுத்தமாக உருவாகியுள்ளது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். 

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

கொடியேற்றி மிட்டாய் சாப்பிடும் முன்


அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

இந்த நாளிலே சிலருக்கு தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கொடியேற்று விழாக்களில் கலந்து கொள்ளும் பலருக்கு ஆரஞ்சு மிட்டாயோ அல்லது எக்ளேய்ர்ஸ் சாக்லேட்டோ அல்லது லட்டோ சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கும்.

பெரும்பாலானவர்கள் இந்த நாளை தொலைக்காட்சிகள் முன்பாக செலவழிப்பார்கள்.

கொடியேற்றும் முன்பாக,

மிட்டாய் சாப்பிடும் முன்பாக,

தொலைக்காட்சி முன்பு அமரும் முன்பாக, 

கொஞ்சம் இதைப் படித்து விடுங்கள்.



ஆம் இதுதான் நம் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு. இதனை ஏற்று அமலாக்கத் தொடங்கியதைத்தான் நாம் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

அரசியல் சாசனம் அடிப்படையாக சொல்வது என்ன தெரியுமல்லவா?

இந்தியர்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு இறையாண்மை உள்ள, சோஷலிஸ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக உருவாக்கவும்

இந்திய மக்கள் அனைவருக்கும்

அரசியல், பொருளாதார, சமூக நீதி கிடைக்கவும்

கருத்துரிமை, அதை வெளிப்படுத்தும் உரிமை, நம்பிக்கை மற்றும் வழிபாட்டுரிமை கிட்டவும்

சம வாய்ப்பும் சம மதிப்பும் கிடைக்கவும்

அனைத்து மக்கள் மத்தியிலும் சகோதரத்துவத்தை வளர்த்திடவும்

தனி நபரின் கண்ணியத்தையும்
தேசத்தின் ஒற்றுமையையும்  

பாதுகாப்போம்  என்று 

உளப்பூர்வமாக உறுதியேற்கிறோம். 

மேலே சொல்லப்பட்ட அரசியல் சாசன அடிப்படைகளை பாதுகாப்பவர்கள் யார்? அதற்கு எதிராக நிற்பவர்கள் யார்? 

கடந்த ஆகஸ்ட் பதினைந்து அன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றியவரோ, அவரது கட்சியைச் சேர்ந்தவர்களோ நிச்சயம் கிடையாது. 

அரசியல் சாசனத்திற்கு எதிரான,
ஜனநாயகத்திற்கு எதிரான,
அரசியல், பொருளாதார, சமூக நீதிக்கு எதிரான,
மக்கள் ஒற்றுமை, மதச் சார்பின்மை, இறையாண்மைக்கு எதிரான 

மோடி வகையறாக்களை முறியடிப்பதே இந்தியாவிற்கு நல்லது. அந்த நல்லதை செய்ய தயாராவோம். அதுதான் இந்த குடியரசு தினத்தன்று நம் முன் உள்ள கடமை.

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் . . .

Saturday, January 25, 2020

தர்பார்-பாபனாசம் லிங்க்


ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்பதற்கு உதாரணம் கீழே உள்ள படம்தான்


மோடி “பரிக்சா பேசார்ச்சா”





மேலே உள்ளது மத்திய அரசிடமிருந்து வந்த குறுஞ்செய்தி.

தேர்வுகளை எப்படி எழுதுவது என்று மோடி மாணவர்களுக்கு வழிகாட்டப் போகிறார் என்ற செய்தியை முன்பு படித்ததால் இந்த “பரிக்சா பேசார்ச்சா” என்பது அந்த நிகழ்வுதான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆமாம்.

தேர்வு எப்படி எழுதுவது என்று வழி காட்ட மோடிக்கு என்ன அருகதை உள்ளது?

அவர் வாங்கியதாக சொல்லப்பட்ட “என்டையர் பொலிட்டிகல் சைன்ஸ்” பட்டம் ஒரு டுபாக்கூர் பட்டம் என்று ஏற்கனவே நிரூபணமாகி விட்டது.

எந்த ஒரு தேர்வும் எழுதாதவருக்கு தேர்வு எழுதுவதைப் பற்றி என்ன அனுபவம் இருக்கப் போகிறது? அனுபவம் இல்லாத ஒருவரால் என்ன வழிகாட்டுதல் கொடுக்க முடியும்?

தில்லுமுல்லு படத்தில் தேங்காய் சீனிவாசனின் மேனேஜர் ஒரு போட்டியாளரை நேர்காணலில்

சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரிகளின் பெயர்களைக் கூறு
சிகரெட் விலைகளைக் கூறு
தேவி தியேட்டர் காட்சி நேரங்களைக் கூறு

என்று கேட்டு விட்டு

இக்கால இளைஞர்களுக்கு இவைதான் தெரியும், இப்படித்தான் கேள்வி கேட்க வேண்டும்

 என்று கூறுவார்.

அது போல மோடியும்

இல்லாத பாடத்தை படித்து தேர்ச்சி பெற்றதாக எப்படி போலிச் சான்றிதழ் பெறுவது? அதைப் பற்றிய உண்மைகள் வெளி வராமல் எப்படி மறைப்பது?

என்று வேண்டுமானால் அவர் வழிகாட்டலாம்.

ஏனென்றால் அதுதான் அவருக்கு தெரியும்

புத்தக விழாவில் பொக்கிஷம்

இந்த வருடத்து சென்னை புத்தக விழாவின் மிகச் சிறப்பான அம்சம் தொல்லியல் துறை அமைத்திருந்த கீழடி கண்காட்சி.

கீழடி அகழ்வாயில் கண்டறியப் பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.

அதே போல கீழடி அகழ்வாயில் கண்டறியப்பட்ட வடிகால் முறையின் மாதிரி ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தன.

கீழடி செல்ல முடியாத குறையை தீர்ப்பதாக இந்த கண்காட்சி அமைந்து இருந்தது.

புத்தக விழாவிற்கு வர முடியாதவர்களுக்காக கீழே உள்ள புகைப்படங்கள்.
















நூல்களும் வள்ளுவரும் அப்பளமும் ஊறுகாயும்





இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் கீழே உள்ளது.

கடந்த வருடங்களை விட இந்த வருடம் கொஞ்சம் குறைவுதான். இதற்கு மேலும் சுமக்க முடியாது என்ற நிலை வந்த போது வெளியே வந்து விட்டேன். 

பபாசியின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று யோசித்திருந்தேன். ஆனால் நான்கு மணிக்கு ஒரு சிலரே கூடியிருந்தார்கள். ஆறு முப்பது மணிக்கு முன்பாக புறப்பட வேண்டிய அவசியம் இருந்ததால் இயக்கம் தொடங்கும் வரை காத்திருக்க இயலவில்லை.

பட்டியல் போடும் போதுதான் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த சில புத்தகங்களை மறந்து விட்டது நினைவுக்கு வந்தது. வேறு வாய்ப்பு கிடைக்காதா என்ன?

புத்தக விழாவிற்கு வந்ததன் நினைவாக அரங்கிற்கு முன்பாக அமைக்கப் பட்டிருந்த திருவள்ளுவரின் மணல் சிற்பத்தின் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன், அப்பளமோ ஊறுகாயோ வாங்காமல் . . .



புத்தக விழாவின் முக்கியமான அம்சம் பற்றி நாளை.

எண் பெயர் ஆசிரியர் தன்மை பக்கம்
1 சூல் சோ.தர்மன் நாவல் - புனைவு 500
2 மதுரை வீரன் கண்ணதாசன் கதை வசனம் 245
3 பாட்டையாவின் பழங்கதைகள் பாரதி மணி அனுபவம் 122
4 ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும் பசு.கவுதமன் அரசியல் 208
5 நெஞ்சக்கனல் நா.பார்த்தசாரதி நாவல் - புனைவு 248
6 ஞாயிறு கடை உண்டு கீரனூர் ஜாகீர்ராஜா நாவல் - புனைவு 200
7 பணத்தோட்டம் அறிஞர் அண்ணா கட்டுரைகள் 70
8 சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் கண்ணதாசன் அனுபவம் 128
9 நாடோடி மன்னன் கண்ணதாசன் கதை வசனம் 200
10 கருணை நதி மிதயா கானவி நாவல் - புனைவு 120
11 இந்து மதத்தின் அடையாளங்கள் அண்ணல் அம்பேத்கர் கட்டுரைகள் 40
12 தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக தீண்டாதவர்கள் அண்ணல் அம்பேத்கர் கட்டுரைகள் 40
13 சாதியின் சாபக்கேடு அண்ணல் அம்பேத்கர் கட்டுரைகள் 26
14 ஸ்டெரிலைட் போராட்டம் அரசு வன்முறை உ.வாசுகி அறிக்கை 48
15 மோடி ஏன் நமக்கானவர் இல்லை? பழனி ஜஹான் அரசியல் 48
16 பின் நவீனத்துவம் - கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமுடி திருப்பூர் குணா அரசியல் 88
17 வேட்டையாடு விளையாடு பேரா.சோ.மோகனா இயற்கை 80
18 பூவரசம் வீடு பாஸ்கர் சக்தி நாவல் - புனைவு 172
19 கீதாஞ்சலி ரவீந்திரநாத் தாகூர் தமிழில் வைதேகி ஹெர்பர்ட் கவிதைகள் 102
20 தாகூர் சிறுகதைகள் ரவீந்திரநாத் தாகூர் தமிழில் த.நா.குமாரஸ்வாமி சிறுகதைகள் 192
21 திப்பு சுல்தான் - அவதூறுகளும் பதில்களும் செ.திவான் வரலாறு 116
22 நடுகல் தீபச்செல்வன் நாவல் - புனைவு 200
23 கீழடி வைகை நதிக்கரையில் சங்க கால நாகரீகம் தொல்லியல் துறை கீழடி அகழ்வாய்வு 58
24 கடற்காகம் முஹம்மது யூசுஃப் நாவல் - புனைவு 328
25 பாலு மகேந்திரா கலையும் வாழ்வும் யமுனா ராஜேந்திரன் திரைப்படம் 262
26 பெரியார் -அறம், அரசியல், அவதூறுகள் சுகுணா திவாகர் அரசியல் 110
27 இடக்கை எஸ்.ராமகிருஷ்ணன் நாவல் - புனைவு 336
28 ஜே.ஜே. சில குறிப்புகள் சுந்தர ராமசாமி நாவல் - புனைவு 224
29 ஒற்றைச்சிறகு ஓவியா விஷ்ணுபுரம் சரவணன் நாவல் - புனைவு 120
30 யார் கைகளில் இந்து ஆலயங்கள்? எஸ்.ஜி.ரமேஷ்பாபு ஆலய அரசியல் 198
31 இஸ்லாமிய பெண்ணியம் ஹெசஸ்ஜி.ரசூல் பெண்ணியம் 48
32 சுத்த அபத்தம் டாக்டர் ஜி.ராமானுஜம் நககைச்சுவை 80
33 ஓர் இரவின் மொழிபெயர்ப்பு பாரத தேவி நாவல் - புனைவு 168
34 சில இடங்கள் சில புத்தகங்கள் ச.சுப்பாராவ் அனுபவம் 138
35 பழைய பேப்பர் யுவகிருஷ்ணா திரைப்படம் 208
36 அந்தோன் செகாவ் கதைகள் தமிழழில் ரா.கிருஷ்ணையா சிறுகதைகள் 144
37 தர்ப்பண சுந்தரி எஸ்.வி.வேணுகோபால் சிறுகதைகள் 120
38 உருள் பெருந்தேர் கலாப்ரியா அனுபவம் 262
39 இந்திய கல்வியின் இருண்ட காலம்? பலர் கட்டுரைகள் 128
40 கஜாப்புயலும் காவிரி டெல்டாவும் வஹீதையா கான்ஸ்தந்தீன் சூழலியல் 96
41 சங்க இலக்கியக் காட்சிகள் மார்க்சிய வெளிச்சத்தில் வெ.பெருமாள்சாமி இலக்கியம் 160
42 எஞ்சிய சில நல்ல பக்கங்கள் ச.சுப்பாராவ் சிறுகதைகள் 80
43 விரலால் சிந்திப்பவர்கள் ச.சுப்பாராவ் கட்டுரைகள் 96
44 புதிய நீதிக்கதைகள் சுஜாதா குட்டிக்கதைகள் 158
45 அனுமதி சுஜாதா சிறுகதைகள் 184
46 Halla Bol Sudhanva Deshpande On Safdhar Hashmi 258
        7157


கப்பல் கட்டற ஊரில பாரத விலாஸ்



எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இருபத்தி ஐந்தாவது பொது மாநாடு வரும் திங்கட்கிழமை 27.01.2020 அன்று தொடங்கி 30.01.2020 வரை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் நகரில் நடைபெறவுள்ளது. இன்று இரவு சென்னையில் புறப்படும் ஹௌரா மெயிலில் பயணம்.

விசாகப்பட்டிணம் என்றால் மூன்று விஷயங்கள் நினைவுக்கு வரும்.

பாரத விலாஸ் திரைப்படத்தில் "இந்திய நாடு, என் வீடு" பாடலில் எம்.ஆர்.வாசு "கப்பல் கட்டற விசாகப்பட்டிணம் கடற்கரை உண்டு பாருங்கோ" என்ற பாடல்தான் முதலில் நினைவுக்கு வரும்.

எங்களின் அகில இந்திய மாநாடுகள் எல்லாமே "பாரத விலாஸ்"கள்தான். காஷ்மீர் தொடங்கி குமரி வரை, குஜராத்திலிருந்து அருணாச்சல பிரதேசம் வரை அனைத்து மாநிலங்களிலிருந்தும் இன்சூரன்ஸ் ஊழியர் என்ற ஒரே உணர்வோடு சங்கமிக்கிற ஒற்றுமைத் திருவிழா அகில இந்திய மாநாடு. அதனை பாரத விலாஸ் என்று சொல்வதும் பொருத்தமாகவே இருக்கும்.

1990 ல் கட்டாக்கில் நடைபெற்ற 14 வது அகில இந்திய மாநாட்டில்தான் முதல் முறையாக கலந்து கொண்டேன். அப்போது உருவான பிரமிப்பும் பரவசமும் உணர்ச்சிப் பெரு வெள்ளமும் இன்னும் குறையாமல் இருப்பதுதான் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எனும் மகத்தான அமைப்பின் சிறப்பு. அதே பரவசத்துடன் விசாகப்பட்டிணம் நோக்கிய பயணம் தொடங்குகிறது.


விசாகப்பட்டிணம் என்றவுடன் அடுத்து நினைவுக்கு வருவது

விசாகப்பட்டிணம் கோட்டத்தின் பொதுச்செயலாளராக இருந்து அகில இந்திய பொதுச்செயலாளராக உயர்ந்த தோழர் கே.வேணுகோபால் ஒரு மாநாட்டில் உரையாற்றுகையில் பகிர்ந்து கொண்ட ஒரு அனுபவம்.

ஹைதராபாத் ஆல்வின், ஹிந்துஸ்தான் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு பொதுத்துறை நிறுவனங்களை மூட மத்தியரசு முடிவு செய்கிறது. ஹைதராபாத் ஆல்வின் நிறுவன ஊழியர்களின் போராட்டம் நிறுவன எல்லைக்கு மேல் விரிவடையாமல் நிறுவனம் மூடப்பட்டு விட்டது.

ஆனால் ஹிந்துஸ்தான்ஷிப்பிங் நிறுவனத்தை தங்கள் நகரத்தின் பெருமையாக, சொத்தாக அந்நகர மக்கள் கருதியதால் அது விசாகப்பட்டிணம் நகரத்து மக்கள் இயக்கமாக உருவெடுத்து நிறுவனம் காப்பாற்றப்பட்டது. 

இப்படிப்பட்ட சிறப்பு மிக்க நகருக்கு செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.

மூன்றாவதாக நினைவுக்கு வருவது.

சிந்து பைரவி உள்ளிட்ட பாலச்சந்தர் படங்களில் பார்த்த ஆக்ரோஷமான கடல் அலைகள். அவைகளை சந்திக்கத்தான் அவகாசம் கிடைக்குமா என்று தெரியவில்லை. 

இந்த மாநாடு தனிப்பட்ட முறையிலும் மிகவும் முக்கியமானது. 

ஏன்?


மாநாடு முடிந்து மீண்டும் சந்திக்கையில் சொல்கிறேன்.



பிகு 1 : அது வரை  இடைவேளை என்றெல்லாம் போடப் போவதில்லை. நீண்ட காலமாக ட்ராப்டில் உள்ளது ஒவ்வொரு நாளும் வெளியாகும்.

பிகு 2 : முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய கட்டாக் மாநாட்டில் எடுத்த படம் கீழே உள்ளது







Friday, January 24, 2020

புளிச்ச மாவு ஏன் பொங்கியது?


புளிச்ச மாவு ஜெமோ லேட்டஸ்டாக தனது வக்கிரத்தை தோழர் பாலபாரதி மீது வெளிப்படுத்தியுள்ளார்.

டோல்கேட் பிரச்சினை தொடர்பாக அவரது வழக்கமான "நானே கேள்வி, நானே பதில்" பாணியில் ஜெயசீலன் என்னும் பினாமி பெயரில் கேள்வி கேட்டு பதில் சொல்லியுள்ளார்.

ஆடம்பரக் கார் பவனி, காட்டுக் கத்தல். இதர, இதர என்று 
பினாமியாக கேள்வி எழுப்பி

இவருடைய பெயரில்

"ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம்"
"வாசிப்பையும் எழுத்தையும் பற்றி தெரியாதவர்"
:ஒரு முறை மக்கள் ஓட்டு போட்டு விட்டதால் வந்த ஆணவம்"
"சாமானியனை விட எழுத்தாளனை சமூகம் அதிகமாக மதிப்பதால் வரும் பொறாமை"

என்றெல்லாம் வழக்கம் போல வசை பாடியுள்ளார்.

அய்யா, புளிச்ச மாவு,

பிரச்சினை அவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பானது அல்ல. ஒத்தையடிப்பாதை உள்ள சாலைக்கு எதற்கு கட்டணம் என்பதுதான் அங்கே பிரச்சினை. பேச்சுவார்த்தையின் போது துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு எதற்கு வர வேண்டும் என்ற கேள்வியை உமது அறம் ஏனய்யா கேட்கவில்லை?

மேலும் அவர் ஒரு முறை எம்.எல்.ஏ அல்ல. திண்டுக்கல் மக்கள் மூன்று முறை அவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இது கூட தெரியாத நீரெல்லாம் தமிழகத்தின் பெரீய்ய்ய்ய எழுத்தாளராம்! உமக்கு தெரியும். ஆனாலும் ஒரு முறை எம்.எல்.ஏ என்று சொல்லி சிறுமைப்படுத்த நினைப்பது உமது இழி குணம். 

அதென்னங்கடா? கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ காரில் போனால் உங்களுக்கு ஏன் இப்படி வேகுது?

எளிமையாக இருப்பது என்பது நடந்து போவதல்ல. இன்றைக்கு உள்ள பணிகளில் பயண நேரத்தை குறைக்க வேண்டிய அவசியம் உமக்கெப்படி தெரியும்.

தயாரிப்பாளர் காசில் மாசக்கணக்கில் கடற்கரை உல்லாச விடுதியில் ரூம் போட்டு திருட்டுக் கதைக்கு வசனம் எழுதுகிற நீரெல்லாம் ஆடம்பரம் பற்றி வாய் திறக்கலாமா?

மிஸ்டர் புளிச்ச மாவு இன்னொன்றையும் கேட்டுக் கொள்ளும். 

இரண்டு கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ள கவிஞர் அவர். அதிலே நீர் சொல்வது போல அழகு, உப்பு, இனிப்பு இல்லை என்று உங்கள் எடுபிடிகள் பெயரில் நீரே எழுதலாம். 

ஆனால் அந்த கவிதைகளில் முக்கியமான ஒன்று இருந்தது.

உண்மை, நேர்மை, மக்கள் மீதான நேசம்.

அதெல்லாம் உமக்கு எங்கே புரியும்?

புளிச்ச மாவு பிரச்சினை சமயத்தில் உம்மை அவர் விமர்சித்ததால் ஏற்பட்ட கடுப்பை இப்போது தணித்துக் கொண்டுள்ளீர். 

புளிச்ச மாவு பொங்குவதற்கு காரணமான தோழர் பாலபாரதி அவர்களின் பதிவு கீழே உள்ளது.


பூட்டினால் மட்டும் அடங்குவார்களா?



புதுடெல்லி சட்டப்பல்கலைக் கழக மாணவர் பேரவையின் அழைப்பில் பெயரில் அங்கே உரையாற்றச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்   கட்சியின் அரசியல்  தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத் அவர்கள் வளாகத்திற்குள் வரக்கூடாது என்பதற்காக வளாக வாயிலை பூட்டி விட்டது பல்கலைக்கழக நிர்வாகம்.

மாணவர்கள் அவரது உரையைக் கேட்கக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட அல்பத்தனம் இது.

ஆனாலும் வளாகத்தின் வாயில் பூட்டிய கதவுக்கு அப்பால் நின்று மாணவர்களோடு உரையாடி விட்டே தோழர் பிரகாஷ் காரத் அங்கே இருந்து புறப்பட்டுள்ளார்.

மோடி அரசை விட முட்டாள் அரசு இருக்க முடியாது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று.

மாணவ சமுதாயம் பற்றி எதுவும் தெரியாதது மோடி அரசு. படித்திருந்தால்தானே தெரியும்! 

நீங்கள் மாணவர்களை அடக்க, அடக்கத்தான் அவர்கள் இன்னும் அதிக வேகத்தோடு வெகுண்டெழுவார்கள்.

இந்த ஆட்சியின் இறுதி அத்தியாயத்தை எழுதப் போவது மாணவர்கள்தான். 

Thursday, January 23, 2020

ஆட்சி தொடர்ந்தால் அராஜகம் தொடரும் . .


தீக்கதிர் நாளிதழில் இன்று வெளியான இந்த செய்தி அதிர்ச்சி அளிக்கவில்லை. 

மோடி அரசு மத்தியிலும் பாஜக தலைமையிலான அரசுகள் மாநிலங்களிலும் தொடர்ந்தால் இது போன்ற அராஜகங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த ஆட்சியை இன்னும் எத்தனை நாள் நாம் அனுமதிக்கப் போகிறோம்?

வதந்திகளைப் பரப்புகிற கொடியவர்கள், அதை அப்படியே நம்பி பரப்புகிற முட்டாள்கள் இன்னும் எத்தனை கொடூரங்களை நிகழ்த்தப் போகிறார்களோ?






பெங்களூருவில் 300 இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு... வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி கர்நாடக பாஜக அரசு அராஜகம்....

பெங்களூரு:
பெங்களூருவில் 300 இஸ்லாமியக் குடும்பங்கள் வசித்து வந்த குடியிருப்புகளை, கர்நாடக மாநில பாஜக அரசு புல்டோசர் மூலம் இடித்து, அராஜகத்தில்ஈடுபட்டுள்ளது.இங்கு வசித்து வந்த இஸ்லாமியர்கள் இந்தியர்கள் அல்ல; அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் கிளப்பிவிட்ட புரளியை, உண்மை என்று எடுத்துக் கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தரைமட்டம் ஆக்கியுள்ளனர்.

பெங்களூருவின் வடக்கு பகுதியில் உள்ள அக்ரஹாரா பகுதியில் ஏராளமானஇஸ்லாமியக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களை, வங்கதேசத்திலிருந்து வந்து, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அப்பகுதி பாஜக எம்எல்ஏஅர்விந்த் லிம்பாவளி, வாட்ஸ் ஆப்மற்றும் முகநூலில் வதந்தி கிளப்பியுள்ளார். பலரும் அந்த வதந்தியை உண்மையாக கருதி, வேகவேகமாக சமூகவலைத்தளங்களில் அதனைப் பரப்பியுள்ளனர்.எடியூரப்பா தலைமையிலான கர் நாடக மாநில பாஜக அரசும், இதை அப்படியே பிடித்துக் கொண்டது. முதலில், இஸ்லாமிய மக்கள் வசிக்கும் அக்ரஹாரா பகுதிக்கு வழங்கப்பட்டு வந்தமின்சாரம், குடிநீர் இணைப்பு ஆகியவற்றை, மாநகராட்சி அதிகாரிகள் மூலம்துண்டித்த எடியூரப்பா அரசு, தற்போது,300 குடும்பங்கள் வரை வசித்து வந்தநூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புக் களை இடித்துத் தரைமட்டம் ஆக்கியுள்ளது.மேலும் இங்கு வசித்து வந்த இஸ்லாமியர்களை, ‘உடனடியாக கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும்’ என்றும் காவல்துறை மூலம் உத்தரவிட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக இங்கு வசித்துவந்த இஸ்லாமிய மக்களை அதிர்ச்சியில்தள்ளியுள்ளது.

“நாங்கள் அனைவரும் கர்நாடக மக்கள். எங்களுக்கு வங்கதேசம் எங்கேஇருக்கிறது என்று கூட தெரியாது; நாங்கள் இந்தியர்கள் என்பதற்கு, ஆதார்,ரேசன் கார்டு, வாக்காளர் அடையாளஅட்டை என அனைத்து ஆவணங்களும்உள்ளன. ஆனால், மத அடையாளங் களை வைத்து, எங்களை வங்கதேசத் தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, வீடுகளை இடித்துள்ளனர். இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது” என்று பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள் புலம்பி நிற் கின்றனர்.அக்ரஹாரா பகுதியில், சில வட இந்தியர்களும் இருக்கிறார்கள். அவர்கள்அசாமைச் சேர்ந்தவர்கள். அம்மாநிலஎன்ஆர்சி பட்டியலிலும் அவர்களின் பெயர்கள் இருக்கின்றன. அத்துடன் தமிழகத்தை சேர்ந்த தமிழ் இஸ்லாமியர் களும் வசித்து வருகின்றனர். ஆனால், இஸ்லாமியர்கள் என்பதற்காக இவர்கள் அனைவரையுமே வங்கதேசத்தவர் என்று பாஜகவினர் கதைகட்டி விட்டு, தற்போது வீடுகளையும் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு சமூக செயற் பாட்டாளர்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாஜக எம்எல்ஏ லிம்பாவளியின் புகாரில் உண்மை இருக்கிறதா; இங்கு வசிப்பவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்தானா? என்பதை முறைப்படி விசாரணை எதுவும் செய்யாமல், கர்நாடக பாஜக அரசு எதேச்சதிகாரமான முறையில், வீடுகளை இடித்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தாலும், இவ்வளவு அவசரமாக அவர்களின் குடியிருப்புகளை இடிக்க வேண்டிய தேவை என்ன?என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர்.குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது, அண்டை நாடுகளிலிருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு, இந்தியாவில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு நன்மை செய்வதற்காக கொண்டுவரப்பட்டது என்று மோடி அரசு கூறினாலும், உண்மையில் அது இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். மேலும், இந்தச் சட்டம் இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வந்தனர். பெங்களூரு சம்பவம் அதனை உண்மையாக்கி இருக்கிறது.

Wednesday, January 22, 2020

ரஜனியா? ரஞ்சனியா?


சங்கி குருமூர்த்தியின் ட்வீட்டை கீழே பாருங்கள்.



விஷத்தைப் பரப்பும் அவசரம். அதனால்தான் ரஜனி, ரஞ்சனியாக பெண்ணாக மாறி விட்டார்.
.


ரஜனி இன்னும் அம்பது வருஷமா?





கிழக்கு பதிப்பக பத்ரி இவ்வளவு கொடூரமானவராக இருக்கக் கூடாது.



ஏற்கனவே ஒரு முதியவரை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரை இன்னும் ஐம்பது வருடம் நடிக்கச் சொல்லி சித்திரவதையெல்லாம் செய்யக் கூடாது.

பாவங்க அவரு!

ஒவ்வொரு சினிமா ரிலீசுக்கு முன்னாடியும் ஏதாவது அளந்து விட்டு பிறகு அடி வாங்குற கொடுமை இன்னும் அம்பது வருஷத்துக்கு நடக்கனுமா?