Saturday, September 23, 2017

இன்று முதல் . . . .


 அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15 வது மாநில மாநாடு இன்று முதல் தர்மபுரியில் தொடங்குவதை முன்னிட்டு அமைப்பின் பொதுச்செயலாளர் எழுதிய கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்



அதர்மங்களை அழிக்க தருமபுரி அழைக்கிறது பி.சுகந்தி


காவியங்கள் நமக்கு பல கதைகளைச் சொல்கின்றன. தவறு செய்த மன்னன் முன்னால் நின்று நீதி கேட்டு மதுரையை தீக்கிரையாக்கினாள் கண்ணகி என சிலப்பதிகாரம் சொல்கிறது. வாச்சாத்தி நம் சமகாலத்து காவியம், கண்ணகியின் கோபத்தை விட பல மடங்கு கோபத்தோடு நீதிகேட்டு நெடும்பயணம் செய்தனர் வாச்சாத்தி பெண்கள். பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட அவர்கள் கூனிக் குறுகி வீட்டிலே முடங்கவில்லை. நீதிகேட்டு வீதிக்கு வந்தார்கள். 

இச்சமூகம் சொல்லும் போலிக்கற்பை உடைத்து தூள்தூளாக்கினார்கள். கண்ணகி வைத்த தீ மதுரையை எரித்தது. வாச்சாத்தி மக்கள்வைத்த தீ சமூக அநீதியை சுட்டெரித்தது. அத்தகையசமூக நீதிக்கான போராட்டத்தை வழி நடத்திய தருமபுரிமண்ணில் 15ஆவது மாநில மாநாடு நடைபெறுவதில் ஜனநாயக மாதர் சங்கம் பெருமை கொள்கிறது.ஜனநாயக மாதர் சங்கத்தின் வரலாறு நெடுகிலும் தியாக வேள்வியால் புடம் போட்ட தலைவர்கள்பலர் இடம் பெற்றுள்ளனர் . தேச விடுதலைப் போராட்டத்தில் குதித்திட்ட உன்னத தாய் விடுதலைக்கனலைமக்கள் மனதில் முட்ட தன் வெண்கலக்குரலால் வீதியெங்கும் பாடல்களைப் பாடியதற்காகவும் யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்திற்காகவும் வேலூர் சிறையிலடைக்கப்பட்டு 6 ஆண்டு காலம் சிறை தண்டனையை அனுபவித்தவர் கே.பி.ஜானகியம்மாள்.

13 வயதில் சுதந்திரப்போரில் தன்னை இணைத்துக்கொண்டு சிறைத் தண்டனை பெற்ற பாப்பா உமாநாத்,இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக காவல் துறையினர் குண்டாந்தடிகளால் பதம்பார்க்கப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட ஷாஜாதி கோவிந்தராஜன் ஆகியோர் மாதர் சங்கத்தின் முன்னோடிகள். ரேசன், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகளை மக்களுக்கு பெற்றுத் தருவதற்காக போராடியதால் வெட்டி வீழ்த்தப்பட்ட வீராங்கனை லீலாவதி. இப்படி பெண்ணுரிமைக்கும், உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்கும் தாங்கள் வாழும் வரை போராடியவர்களின் இலட்சியப் பயணத்தை முன்னெடுக்கும் மாநாடு இது.சுவாதி, நந்தினி, ஹாசினி, ரித்திகா, ஐஸ்வர்யா, சோனாலி, பிரார்த்தனா ஆகியோர் ரத்தமும், சதையும் உணர்வுமாய் இருந்த மனுஷிகள். ஆம் ஆணாதிக்க கழுகுப் பார்வைக்கு இரையாக்கப்பட்ட மனுஷிகள். ஆயிரம் கனவுகளோடு வாழ்ந்த இப்பெண்கள்வீழ்த்தப்பட்டார்கள். 

கசாப்புக் கடைகளில் வெட்டப்படும் விலங்குகளைக் போல நம் தோழிகள் நித்தம் நித்தம் வெட்டி வீழ்த்தப்படுவதை நாம் எத்தனை காலம் வேடிக்கை பார்ப்பது? தமிழகத்தில் ஆண்டுக்கு 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கும், வன்முறைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். பால்மணம் மாறாத குழந்தைகள், பள்ளிப்பருவக் குழந்தைகள், வளர் இளம் பருவக் குழந்தைகள் என வன்முறைக்குள் தள்ளப்படும் குழந்தைகளை பாதுகாக்க எந்தவித ஏற்பாடும் இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் 50 குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளில் ஜனநாயக மாதர் சங்கம் போராடியிருக்கிறது. சில வழக்குகளில் நீதியையும் பெற்றுத்தந்துள்ளது.

வரதட்சணை விலங்கொடிப்போம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். இல்லை. பெரும்பாலான திருமணங்கள் சொக்கத்தங்கத்திலும், ரொக்கப்பணத்திலுமே நிச்சயிக்கப்படுகின்றன. உலகமயக் கொள்கையால் இக்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கல்வி எனும் வியாபாரத்தில் முதலீடு செய்பவர்கள் திருமணத்தின் போது வரதட்சணை என்னும் லாபத்தை பெறுகிறார்கள். கணவன்-மனைவி வாழ்க்கை இப்படி வியாபாரமாக பார்க்கப்படும் போதுமகிழ்ச்சியான சமத்துவ வாழ்வை பெண்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஒவ்வொரு 77 நிமிடத்திற்கும் ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை சாவுக்குள் தள்ளப்படுகிறாள் என இந்திய குற்றப்பிரிவு ஆணையத்தின் புள்ளி விபரம் சொல்கிறது. இத்தகைய வரதட்சணைக் கொடுமைகளே பெண் கருக்கொலைக்கும் சிசுக்கொலைக்கும் காரணியாகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில்12 மில்லியன் பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்பட்டுள்ளன. பெண்ணை அணுவணுவாய் கொல்ல வைக்கும் உலகமயக் கொள்கையையும், ஆணாதிக்கச் சிந்தனையையும் வேரறுப்பது எப்போது?

அதிகரிக்கும் வலைத்தள வன்முறைகள் 

இணைய தளம், முகநூல், வாட்ஸ் அப், டுவிட்டர்என வரிசையாக வந்து கொண்டிருக்கும் அறிவியல் வளர்ச்சி ஆண்-பெண் பேதம் பார்ப்பதில்லை. ஆனால் அதை விரல் நுனியில் சொடுக்கி இயக்கும் மனித மூளை ஆண்-பெண் பாகுபாடுகளால் நிரம்பி வழிகிறது.பெண்கள் குறித்த ஆபாசமான சித்தரிப்புகள் வினுப்பிரியா போன்ற இளம் பெண்களின் உயிரைப்பறிக்கின்றது.
மறுபுறத்தில் பெண்கள் இயக்க செயல்பாட்டாளர்கள், கலைஞர்கள், டிவி விவாதங்களில் பங்கெடுப்பவர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களது அறிவையும், ஆற்றலையும், ஆளுமையையும் தாங்கிக் கொள்ள முடியாமல் பாலியல் வக்கிரங்களை வலைத்தளங்களில் அள்ளி வீசுகிறார்கள் ஆணாதிக்க பிற்போக்கு வாதிகள்.பொது வெளியெங்கும் நொடிப்பொழுதில் பரவும்சமூக வலைத்தளங்களால் வக்கிரப் பதிவுகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டிய சைபர் கிரைம் தமிழகத்தில் செயல்பாடற்று செத்துக்கிடக்கின்றது.
இத்தகைய வலைத்தள வன்முறைகளை எதிர்கொண்ட பத்திரிகையாளர்கள் கவிதா முரளிதரன்,கவின்மலர், சமூக செயல்பாட்டாளர் உ.வாசுகி,ஜோதிமணி, திவ்யாபாரதி, சமூக ஆர்வலர்கள் பேரா.சுந்தரவள்ளி, ஹேமாவதி என பட்டியல் நீள்கிறது.சமூக வலைத்தளங்களால் பெண்கள் இழிவாக சித்தரிக்கப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தூசுபடிந்துக்கிடக்கின்றது. சட்டத்தால் மட்டுமல்ல, ஆண்டாண்டு காலமாய் அழுக்கடைந்து கிடக்கின்ற ஆணாதிக்கச் சமூகத்தை மாற்றியமைக்கும் போராட்டத்தால் தான் இத்தகைய வன்முறையிலிருந்து பெண்களை முழுமையாக பாதுகாக்க முடியும்.

தள்ளாடும் தமிழகம்
உழைக்கும் மக்களின் ஒரே மூலதனம் உடல் வலிமை மட்டுமே. அத்தகைய உடல் வலிமை கொண்டுஉழைத்து அவர்கள் ஈட்டும் வருமானத்தை சுரண்டுவதற்கு தமிழகத்தில் 6500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு வைத்துள்ளது. இலக்கு வைத்து சரக்கு விற்பதன் மூலம் லாபம் ஈட்டும் தொழிலாக மதுக்கடைகளை மாற்றியிருக்கிறது அரசு.மதுவால் கிடைக்கும் வருமானம் அரசுக்கு அவமானம்இல்லையா? 9000 கோடி ரூபாய் துவங்கி விற்பனை இலக்கு 40,000 கோடி ரூபாய் நோக்கிச் செல்கிறது. அரசியலில் நேரெதிர் துருவத்தில் செல்லும் அதிமுக-வும், திமுக-வும் மதுக்கொள்கையில் மட்டும் கைகோர்த்து ஒரே பாதையில் பயணிக்கின்றன.மதுவால் ஆண்டுக்கு 201000 குற்றச்செயல்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. இந்தியாவிலேயே விபத்துக்கள் அதிகம் நடக்கும் மாநிலமாகவும் தமிழகம் மாறி வருகிறது. 

கடந்த 5 ஆண்டுகளில் தன் கணவனை குடிபழக்கத்துக்கு பலிகொடுத்த இளம் பெண்களின் எண்ணிக்கை 9500ஐ தாண்டுகிறது.இக்காலத்தில் தான் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் 3000க்கும்மேற்பட்ட கடைகளை மூட முயற்சித்தாலும் அவற்றைமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டுவர ஆட்சியாளர்களும் காவல்துறையும் ஒருங்கே துடித்தனர். சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டாலும் பரவாயில்லை. மிடாஸ் நிறுவனத்தின் ஏஜெண்டு வேலையை காவல்துறையும், அரசும் இக்காலத்தில் சிறப்பாகச் செய்துள்ளன. 

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பெண்கள் அமைப்புகளும், பொதுமக்களும் நடத்திய போராட்டங்கள் காவல்துறையின் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டன. ஜனநாயக மாதர்சங்கம் 3 ஆண்டுகளில் 334 கடைகளின் முன்பு நடத்திய போராட்டத்தால் 163 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இப்போராட்டத்தின் வாயிலாக மாதர் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் மீது காவல்துறை பொய் வழக்கை பதிவு செய்திருக்கின்றது. பலர் காவல்துறையின் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சுதந்திரப் போராட்டம் துவங்கி குண்டாந்தடிகளையும், துப்பாக்கிக் குண்டுகளையும் பொய் வழக்குகளையும் சந்தித்த தியாகத் தலைவர்களின் வாரிசுகள் நாங்கள். 

உங்கள் பொய் வழக்குகளையும், தடியடிகளையும் தூளாக்கி உழைக்கும் மக்களை, பெண்களை பாதுகாக்கும் போராட்டத்தை தொடர்வோம் என்று சூளுரைக்கும் மாநாடு இது.குடிநீருக்காக நம் பெண்கள் குடங்களோடு வீதிவீதியாய் அலைந்து கொண்டிருக்கும் போது, நமது நிலத்தடி நீரை சொற்ப விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுக் கொண்டிருக்கும் அரசுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளால் தரிசாக்கப்பட்ட விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வை பாதுகாக்க மாற்றுக் கொள்கை வகுக்கும் மாநாடாகவும் இது அமையும்.

மதவெறி மாய்த்து மக்கள் ஒற்றுமை காண !
உணவு உரிமை பாதுகாத்திட !
வன்முறையற்ற சமத்துவ சமூகம் படைக்க !

ஜனநாயக மாதர் சங்கத்தின் 15ஆவது மாநில மாநாடு அழைக்கிறது.

செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் பேரணியில்  ஆயிரம், ஆயிரம் பெண்களின் கோஷங்களால் விண்ணதிரட்டும், தருமபுரி வீதிகள் அதிரட்டும், பெண் விடுதலை பிறக்கட்டும்.

கட்டுரையாளர் : மாநில பொதுச் செயலாளர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

No comments:

Post a Comment