Monday, April 30, 2012

வாழ்த்துக்கள் சச்சின் டெண்டுல்கர், எம்.பி ஆகி விட்டீர்கள், நாடாளுமன்றம் நுழையும் முன் கொஞ்சம் பேசுவோமா?




சச்சின் டெண்டுல்கர் அவர்களே, வாழ்த்துக்கள், நீங்கள் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்.

நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினரானதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பாரத ரத்னா விருது கொடுப்பதற்கு பதிலாக இத்துடன் மத்தியரசு நிறுத்திக் கொண்டதே என்பதில் மகிழ்ச்சிதான்.

நீங்கள் நாடாளுமன்றம் போய் விவாதங்களில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சினைகள் பற்றியெல்லாம் பேசுவீர்கள் என்ற பிரமை எல்லாம் எனக்கு கிடையாது. அது உங்களுக்கும் கிடையாது, ஏன் யாருக்குமே கிடையாது.

ஆட்ட நாயகன் விருது பெற்று கையில் காசோலையோடு நிற்கும் போதுதான் உங்களுக்கெல்லாம் பேச்சு வரும் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே அவ்வாறு செய்யாமல் படிகள் மட்டும் பெற்று திரும்பி வருகிறபோது, நீங்கள் நியமன உறுப்பினர்தானே, உங்களுக்கு அந்த கவலையெல்லாம் இருக்க அவசியமில்லை.

எனக்கு சில வேண்டுகோள்கள் உண்டு.

ஐ.பி.எல் தொடங்கி பல சர்வதேச போட்டிகள் இருக்கும் காலத்தில் நிச்சயமாக நாடாளுமன்றம் செல்லப்போவதில்லை. அது நியாயம்தான். ஆனால் குறைந்த பட்சம் விளம்பரப் படப்பிடிப்புக்கள் முக்கியம் என்று அந்த தினங்களில் செல்லாமல் இருந்து விடாதீர்கள். ஏனென்றால் இப்போது அவை கூடும் நாட்களே மிகவும் குறைந்து விட்டது.

மக்கள் பிரச்சினைகள் குறித்து இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். அவற்றை மட்டும் சற்று உன்னிப்பாக கவனியுங்கள். மக்கள் படும் துயரம் பற்றி புரிந்தால்தான், வரி ஏய்ப்பு செய்வது, சொகுசுக் காருக்கு வரி விலக்கு கேட்பது ஆகியவை எல்லாம் எவ்வளவு பெரிய தவறு என்பதை உண்ர்வீர்கள். அப்படி உணர்ந்தாலே நீங்கள் வெற்றிகரமான ஒரு எம்.பி தான்.

நியமன எம்.பி க்களுக்கும் தொகுதி வளர்ச்சி நிதி உண்டா என்பது எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் அந்த நிதியை தயவு செய்து கிரிக்கெட்டிற்காக பயன்படுத்தாதீர்கள். கிரிக்கெட் வாரியங்கள் ஏற்கனவே செல்வச் செழிப்பில்தான் திளைத்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆதரவில்லாமல் நலிந்து போயிருக்கிற மற்ற விளையாட்டுக்களுக்கு உபயோகப் படுத்தி இந்தியா ஒலிம்பிக்கில் சில பதக்கங்கள் வெல்ல உதவுங்களேன்.

நீங்கள் நூறு முறை நூறு அடித்தது போல ஒலிம்பிக் பதக்கங்களும் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதுதானே.

மீண்டும் வாழ்த்துக்கள் சச்சின்....

No comments:

Post a Comment