Sunday, April 8, 2012

நீர்மூழ்கிக் கப்பலில் மூழ்கிப்போன பாதுகாப்பு அமைச்சர்




ராணுவத்திற்கான தளவாடங்கள் வாங்குவதில் நடைபெறும் ஊழல்கள் இப்போது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நேரு காலம் தொடங்கி ஊழலின் கறை படிந்துள்ளது ஒரு தேசிய அவமானம். இது பற்றி பேசுவது நாட்டின் பாதுகாப்புக்கே குந்தகம் விளைவிக்கும் என்ற உபதேசம் வேறு அவ்வப்போது செய்யப்படும். ஆனால் தேசத்தின் பாதுகாப்பிற்கே ஊறு விளைவிப்பது, ராணுவத் தளவாடங்களை வாங்குவதில் நடைபெறும் ஊழல்கள்தான். ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்திற்கென பெருந்தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். அதில் பெரும் பகுதி தளவாடங்கள் வாங்கத்தான் பயன்படுகின்றது. அதிலே ஊழலுக்காக ஒதுக்கப்படும் தொகை எவ்வளவு என்பதைத்தான் எந்த நிதியமைச்சரும் சொல்வதில்லை.

நம் எல்லோருக்கும் உடனடியாய் நினைவில் வருவது போபோர்ஸ் பீரங்கி ஊழல். அது பற்றியே தனியாகவே ஒரு தொடர் எழுத வேண்டும். அதை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிப்போம். இந்த மாதம் நீர் முழுகிக் கப்பல் ஊழல் பற்றி பார்ப்போம்.

இந்திரா காந்தியின் கொடூர மரணம் ஏற்படுத்திய அனுதாபம் ராஜீவ் காந்தியை பிரதமர் நாற்காலியில் அமர வைத்தது. திருவாளர் பரிசுத்தம் என்பது போன்ற தோற்றத்தை அவர் உருவாக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். கரீபி ஹடோ அதாவது வறுமையை ஒழிப்போம் என்று அவர் அம்மா முழங்கினால் இவர் கூடவே பிகாரி ஹடோ அதாவது வேலையின்மையை ஒழிப்போம் என்று சேர்த்து முழங்கினார்.

ஆனால் ஓராண்டிற்குள்ளேயே இவரும் பெரு முதலாளிகளின் கைப்பாவைதான்  என்பது அம்பலமானது. காரணம் நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங். அவர் பெரு முதலாளிகள் செய்து வந்த மோசடிகளை, வருமான வரி ஏய்ப்புக்களை சோதனை செய்யத் தொடங்கினார். அமுலாக்கப் பிரிவு என்று ஒன்று இருப்பதே அப்போதுதான் மக்களுக்கு தெரிய வந்தது.

இதனால் முதலாளிகள் அளித்த நிர்ப்பந்தம் காரணமாக ராஜீவ் காந்தி, நிதித்துறையை தன் வசமே வைத்துக் கொண்டு வி.பி.சிங்கை பாதுகாப்பு அமைச்சராக்கினார். பாகிஸ்தானுடன் உள்ள உறவு பதட்டமாக இருப்பதால் பாதுகாப்புத்துறையை கவனிக்க திறமையான ஒருவர் தேவை என காரணமும் சொன்னார். ஆனால் பாதுகாப்புத்துறையிலும் வி.பி.சிங்கால் பிரச்சினை வரும் என்பதை ராஜீவ் காந்தி எதிர்பார்க்கவில்லை.
1981 ல் இந்தியா ஜெர்மன் நிறுவனமான ஹெச்.டி.டபிள்யு விடமிருந்து நான்கு நீர்மூழ்கி போர்க்கப்பல்களை வாங்கியிருந்தது. இப்போது மீண்டும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க திட்ட,மிட்டது. கப்பல்களின் விலையில் தள்ளுபடி வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகம்  ஹெச்.டி.டபிள்யு விடம் கேட்டது. ஏற்கனவே நடந்த விற்பனையில் ஏழு சதவிகித கமிஷன் இடைத் தரகர்களுக்கு அளித்துள்ளதால், இப்போதும் தர வேண்டியிருப்பதால் தள்ளுபடி தர சாத்தியமில்லை என அந்நிறுவனம் மறுத்து விட்டது.

நானூற்றி இருபது கோடி ரூபாய் விற்பனைக்கு முப்பது கோடி ரூபாய் கமிஷன் பெறப்பட்டுள்ளது என்று  ஜெர்மனிக்கான இந்தியத் தூதர் வி.பி.சிங்கிற்கு தகவல் தெரிவிக்க அவர் விசாரணைக்கு உத்தரவிடுகின்றார். இந்த விசாரணை ராஜீவ் காந்திக்கு எரிச்சலூட்டுகின்றது. நான்கு நீர் மூழ்கிக்கப்பல்கள் வாங்கும் போது பிரதமர் இந்திரா காந்தியின் வசமே பாதுகாப்புத் துறையும் இருந்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

அமைச்சரவைக் கூட்டத்திலேயே பிரச்சினை வெடிக்கிறது. “ஹெச்.டி.டபிள்யு நிறுவனம் எத்தனையோ நாடுகளோடு வணிகம் செய்கின்றது. எத்தனையோ தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்திருக்கும். அவற்றை எல்லாம் வெளியே சொன்னால் அதனால் வணிகம் செய்ய முடியுமா? என்று கம்பெனிக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகின்றார். அங்கேயே பதவியை ராஜினாமா செய்கின்றார் வி.பி.சிங். அவர் பதவி விலகிய சில நாட்களிலேயே அவரை காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்படுகின்றார்.

இந்த பேரத்தின் இடைத்தரகராக ஹிந்துஜா சகோதரர்கள் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டாலும் அது நிரூபிக்கப்படவில்லை. வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ, இவ்வழக்கு குறித்து விசாரிக்க ஜெர்மன் மற்றும் ஸ்விஸ் அரசுகள் ஒத்துழைக்கவில்லை என்று கூறி பதினைந்து வருடங்கள் கழித்து வழக்கை மூடி விட்டது.

வி.பி.சிங் பதவி விலகிய சில நாட்களிலேயே போபோர்ஸ் ஊழல் வெடித்து விட்டதால் அது வெளிச்சத்தைக் கைப்பற்றிக் கொண்டது.  ஹெச்.டி.டபிள்யு நிறுவனம் இன்னமும் பல நாடுகளுக்கு நீர்முழுகிக் கப்பல்களை விற்றுக் கொண்டுதான் இருக்கிறது, இந்தியா உட்பட.

(எங்கள் சங்க மாத இதழ் சங்கச்சுடரில் வெளிவரும்
ஊழல்களின் ஊர்வலம் தொடருக்காக எழுதியது)

No comments:

Post a Comment