Thursday, November 19, 2015

பொருத்தமா புளுகுங்க டவுசர் பாய்ஸ்



முக நூலில் ஒரு காவி டவுசர் பாய் போட்டிருந்த பதிவுதான் மேலே உள்ளது. அதற்கு புத்தி கெட்ட நூறு பேர் லைக்  வேறு கொடுத்திருக்கிறார்கள். 

எங்கே மக்கள் பாதிக்கப்பட்டாலும் அங்கே முன்னணியில் நிற்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சுனாமி, தானே, என்று கண் கூடாக பார்த்திருக்கிறார்கள். 

மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றும் உத்தர்கண்டில் மோடி செய்தது போல டுபாக்கூர் காமெடியெல்லாம் என்றும் செய்தது கிடையாது. உண்டியல் குலுக்குகிற கட்சி என்பதில் எங்களுக்கு சிறுமையே கிடையாது. நாங்கள் ஒன்றும் அதானியிடமும் அதானி மனைவியிடமும் மோடி போல தலை வணங்கி நின்றது கிடையாதே!

மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதை கீழே தந்துள்ளேன். இதை அந்த அதிமேதாவிகள் புரிந்து கொள்ளட்டும். 

------------------------------------------------------------------------------------------------------
விடிய விடிய போராட்டம் நடத்தி என்ன பன்னீங்க தோழர். .

இப்படிதான் ஒரு நண்பர் தொலைபேசினார்.

நிவாரண தொகைக்கு கணக்கெடுப்பதை முறையாக்கி உள்ளோம். பல இடங்களில் விடுபட்ட கணக்கெடுப்பை மீண்டும் சேர்க்க வைத்துள்ளோம்.

பல வாய்க்கால்களை தூர்வாரி நிலங்களில் தேங்கி இருந்த தண்ணீரை போக்கியுள்ளோம்.

முக்கியமாக பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியபட்டு அருகில் அமைய உள்ள சைமா சாயக்கழிவு நிறுவனங்கள் அடைத்து வைத்திருந்த 4 கி.மீ தூரத்திற்கான வடிகால் வாய்க்காலை தோண்டி எடுத்து பக்கிம்காம் கால்வாயில் இணைத்துள்ளோம்.

இதனால் 3000 (மூவாயிரம்) ஏக்கர் நிலங்களில் இருந்த நெற்பயிர்களை பாதுகாத்துள்ளோம்.

மாதியம் 2,30 மணிக்கு துவங்கி விடியற்காலை 2,30 வரை சிதம்பரம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் மக்கள் நல கூட்டணி சார்பில் தோழர் கே.பி தலைமையில் நடந்தது. அப்போராடம் எட்டிய வெற்றி இது.

-----------------------------------------------------------------------------------------------------------------------
அரசியல் கட்சி நிவாரணம் செய்யக் கூடாது என்று தோழர் ஜி.ஆர் சொன்னதாக கொஞ்சமும் கூசாமல் பொய் சொல்கிற அந்த காவி டவுசர் பாய்ஸ் கவனத்திற்காக சில படங்கள் இங்கே.

எங்கள் சங்கத்தோடு இணைந்து நிவாரணப்பணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் செயல்பட்ட போது எடுத்த படங்கள். 











இது மட்டுமல்ல, இன்னும் ஒரு புகைப்படத்தையும் பாருங்கள், காவிக்கும்பலே.

பதினோரு வருடங்களுக்கு முன்பு சுனாமி தாக்கிய நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தில் தோழர் ஜி.ஆர், தோழர் கே.பி ஆகியோரும் இருக்கிறார்கள்.



ஆகவே பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்கள். 

அழிவின் சாட்சியாய்




எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்பட்ட நிவாரண உதவிகள் பற்றி நேற்று பதிவிட்டிருந்தேன். பாதிப்பின் தீவிரம் அறிந்து கொள்ள இந்த படங்கள் உதவும்.

பத்து உயிர்களை பலி கொண்ட பெரிய காட்டுப்பாளையம்











இன்னும் லேபிள் பிரிக்காத புது வேட்டிகள், புடவைகள். தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்தார்கள் போல. ஆனால் அதை உடுத்த அவர்கள் உயிரோடு இல்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை !




இப்போது சாந்தமாக தோன்றும் ஒடை அன்று ஆக்ரோஷமாக ஏன் பாய்ந்ததோ? 


மண்மேடால் மூடப் பட்ட பொதுக் கழிப்பிடம்



பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் போல புதைந்து கிடக்கும் வீடு, இடிந்து போன இன்னும் ஒரு வீடு, விசூர் என்ற ஊரில்





தகரமே பாலங்களாக எல்லப்பன் பேட்டையில்






நிரம்பி வழியும் தண்ணீர், தகர்ந்து போன குடிசைகள், கல்குணத்தில்




அழுகி நிற்கும் பயிர்கள்




Wednesday, November 18, 2015

பேரழிவு நிகழ்ந்த இடங்களில் பேரன்புடன்

எங்கள் சங்க உறுப்பினர்களுக்காக வெளியிட்ட சுற்றறிக்கை. ஆனாலும் உங்களுடைய தகவலுக்காகவும். 











காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம், பதிவு எண் 640 /என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 55/15                                                                                   18.11.2015
அனைத்து உறுப்பினர்களுக்கும்
அன்பார்ந்த தோழரே,

பேரழிவு நிகழ்ந்த இடங்களில் பேரன்புடன்

மழை, வெள்ளத்தை
சபிக்காதீர்.
திருடப்பட்ட தன்
ஏரிகளையும் ஆறுகளையும்
தேடித் தேடி
பரிதாபமாய் அலைகிறது.
கட்டிடங்கள் தன்னிடத்தை
களவாடியதைக் கண்டித்து
மறியல் செய்கிறது
சாலைகளில், வீடுகளில்.

என்றோர் அர்த்தமிக்க கவிதை சமூக வலைத் தளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், ஆறுகள் என நீர் நிலைகள் எல்லாமே இன்று ஆக்கிரமிப்பாளர்களின் லாபச் சுரண்டலுக்கு இரையானதன் விளைவை தமிழகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட காலகட்டத்தில் செய்ய வேண்டிய தூர்வாறுதல் பணியை செய்வதில் ஆட்சியாளர்கள் காண்பித்த அலட்சியமும் இணைந்து கொண்டதால் பெரு மழை, பெரும் துயரத்தை தந்துள்ளது.

சுனாமி, தானே புயல் என்று ஏற்கனவே இயற்கையின் சீற்றத்திற்கு பலியான கடலூர் மாவட்டம் மீண்டும் மிகப் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகியது. கடும் மழையின் தாக்கத்தை சமாளிக்க அரசு நிர்வாகம் தயாராக இல்லாதது மிகப் பெரிய பேரழிவிற்கு அடி கோலியது. பெரிய காட்டுப்பாளையம் என்ற கிராமத்தில் பத்து பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். அதிலே எட்டு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு பெரும் துயரம்.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களுக்கு போக வேண்டிய அவல நிலை, இடிந்து போன வீடுகள், அடித்துச் செல்லப்பட்ட உடமைகள், தண்ணீரில் மூழ்கி அழுகிய பயிர்கள், துண்டிக்கப்பட்ட சாலைகள் இவைதான் தமிழகம் முழுதும் நாம் பார்த்த காட்சிகள். கோடிக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில் நமது சங்கத்தின் மரபிற்கேற்ப நமது கடலூர் கிளைச் சங்கத் தோழர்கள் கடலூர் நகரில் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி மக்களுக்கு பாய்களும் போர்வைகளும் வழங்கினார்கள். அத்தோடு நமது பணி நின்று போகவில்லை.

மிகப் பெரிய அழிவு கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள போது அங்கே துயருற்ற மக்களுக்கு உதவிட உடனடியாக நிதியுதவி செய்திடுமாறு தென் மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோட்டங்களுக்கும் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது. அதனை ஏற்று தமிழகத்திலும் கேரளாவிலும் உள்ள அனைத்து கோட்டச் சங்கங்களும் நிதி அனுப்பி வைத்தனர். பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இப்பணியில் இணைந்து கொண்டது. நம்முடைய கோட்டத்தின் பங்களிப்பு உட்பட ரூபாய் இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் திரண்டது.

இத்தொகை கொண்டு பெரிய காட்டுப்பாளையம், விசூர், ராஜிவ் காந்தி நகர், எல்லப்பன்பேட்டை, கல்குணம், கடலூர் புருஷோத்தமன் நகர் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஆயிரத்து ஐம்பது குடும்பங்களுக்கு அரிசி, பாத்திரங்கள், பாய், போர்வை, ஆடைகள் என்று நிவாரணப் பொருட்கள் நேற்று (17.11.2015) அன்று வழங்கப்பட்டது.

இந்த நிவாரணப் பணியில் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் ஜே.குருமூர்த்தி, தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன், துணைத் தலைவர் தோழர் ஆர்.புண்ணியமூர்த்தி, துணைப் பொருளாளர் தோழர் வி.ஜானகிராமன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென் மண்டலப் பொதுச்செயலாளர் ஜி.ஆனந்த், சென்னை II கோட்டப் பொதுச்செயலாளர் தோழர் கே.மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

நம்முடைய கோட்டத்திலிருந்து கோட்டத் தலைவர் தோழர் டி.மணவாளன், பொதுச்செயலாளர் தோழர் எஸ்.ராமன், துணைத் தலைவர் தோழர் கே.வேலாயுதம், தென் மண்டல செயற்குழு உறுப்பினர் தோழர் எல்.குமார், கடலூர் கிளைச் சங்கப் பொறுப்பாளர்கள் தோழர்கள்  ஆர்.கணேஷ், கே.பி.சுகுமாரன், சரவண குமார், வி.சுகுமாரன், ஆர்.வெற்றிவேல், பி.ராஜூ, பண்ருட்டி கிளைச் செயலாளர் தோழர் ஜி.வைத்தியலிங்கம், கோட்ட அலுவலகக் கிளைச் செயலாளர் தோழர் உ.கங்காதரன், தோழர் சி.கணேசன் (காட்பாடி) ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழுத் தோழர்கள், நிவாரண உதவிகளை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை திறம்பட செய்திருந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் நம்மோடு இணைந்து நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.பாலகிருஷ்ணன், அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஆறுமுகம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நம்முடன் வந்திருந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள்  கண்டு கொள்ளாத அரசாங்கத்தைப் பற்றிய தங்கள் குமுறல்களை, சோகங்களை தோழர் ஜி.ஆர் மற்றும் தோழர் கே.பி ஆகியோரிடம் வெளிப்படுத்தினர். 

இயற்கை நடத்திய கோரத் தாண்டவத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு நம் முன் உள்ள கடமைகளை உணர்த்தியுள்ளது. நம்மால் இயன்ற உதவியை செய்தோம் என்பதோடு நாம் நிறைவடைய முடியாது. வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு வாழ்வை மீட்டுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுடையது. அதை அவர்கள் செய்யத் தவறும் போது போராட்டக்குரல் எழுப்ப வேண்டியது நம்முடைய கடமையும் கூட. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நமக்கு கற்றுக் கொடுத்திருப்பதும் அதைத்தான்.

வாழ்த்துக்களுடன்
தோழமையுள்ள
ஒப்பம் எஸ்.ராமன்
                    பொதுச்செயலாளர்

Monday, November 16, 2015

குமுதத்தில் சன்மானம்

16.11.2015 தேதியிட்ட சென்ற வார குமுதம் இதழில் பிரசுரமான எனது ஒரு பக்கக் கதை.
இக்கதையின் பின்னணி நாளை.

பாஜகவின் இறுதி மூச்சு நின்று விட்டதா?




எதிர்க்கட்சியாக இருந்த போது பாஜக தனது இறுதி மூச்சு இருக்கும் வரை  சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனம் வருவதை எதிர்க்கும் என்று அப்போதைய ராஜ்யசபை எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய நிதி அமைச்சருமான அருண் ஜெய்ட்லி  வீர வசனம் பேசியுள்ளார்.

இப்போது சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனத்திற்கு ரத்தினக் கம்பளம் விரிக்கப் போவதாக அவரே சொல்லியுள்ளதால் இந்த சந்தேகம். அவ்வளவுதான்.

வடிவேலு வசனம் போல அது வேற வாய். இது ............... (அதை நான் வேற தனியா சொல்லனுமா?) 

பாரீஸ் பயங்கரவாதம் - கோழைத்தனம்



பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாதச் செயலில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழந்துள்ளது துயரத்தையும் கோபத்தையும் தருகிறது.

இதற்கு நாங்கள்தான் பொறுப்பு என்று ஐ.எஸ் பெருமையோடு ஒப்புக் கொண்டுள்ளது. 

மதத்தின் பெயரால் செய்யப்பட்டுள்ள இந்த பயங்கரவாதச் செயல் கடுமையான கண்டனத்திற்குரியது. கடவுளின் பெயரால் செயல்படும் இந்த இயக்கத்தை கடவுள் (!) கூட மன்னிக்க மாட்டார்.

தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்கள் ஏன் தங்களின் உண்மையான எதிரிகளோடு மோதுவதற்குப் பதிலாக அப்பாவிகளை மட்டுமே குறி வைக்கிறார்கள்? 

வடி கட்டிய கோழைத்தனத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

துயரத்தில் மூழ்கிய பிரான்ஸ் மக்களுக்கு துணை நிற்போம்.

தீவிரவாதத்தை துடைத்தெறிவோம் என்று சொல்கிற அதே நேரத்தில் அதன் ஊற்றுக்கண் எங்கேயுள்ளது என்பதையும் பார்த்து அதற்கெதிராகவும் குரல் கொடுத்திட வேண்டும்.

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண், அல் கொய்தா, தாலிபன், ஐ.எஸ் என்று எந்த இயக்கத்தை எடுத்துக் கொண்டாலும் அதனை ஊக்குவிக்கும் பணியை செய்தது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பதை மறக்க முடியாது. 

தீவிரவாதத்திற்கு எதிரான குரல் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் எழுந்திட வேண்டும்.
 

Sunday, November 15, 2015

தொடர் பதிவில் நானும்




கடவுளைக் கண்டேன் என்ற தொடர் பதிவில் என்னையும் எழுதச் சொல்லி நண்பர் செல்வகுமார் கேட்டுக் கொண்டார்.  நமக்கு ஒத்து வராத தலைப்பாகி விட்டதே என்பதால் கொஞ்சம் தாமதமாகி விட்டது. சரி கடவுளை விட்டு விடுவோம்.  சின்னதும் பெரியதுமாக இருக்கிற நமது ஆசைகளை  மட்டும் எழுதி வைப்போம் என்று தொடங்குகிறேன்.

1) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாத நிலை வேண்டும். வல்லான் பொருள் கொழிக்கும் தனியுடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை.

2) அரசியலிலும் நிர்வாகத்திலும் ஒழிந்திட வேண்டும் ஊழல்.

3) பாதுகாப்புச் செலவினங்களுக்காக பட்ஜெட்டில் பெரும் தொகை ஒதுக்கப்படும் நிலை மாற்றப்பட்டு கல்விக்கும் சுகாதாரத்திற்கும் போதுமான தொகை ஒதுக்கப்பட வேண்டும்.

4) மனிதர்களை ஜாதி கொண்டும் மதம் கொண்டும் பார்க்கிற, பிரிக்கிற இழிநிலை நீங்கிட வேண்டும்.

5) வேலையில்லா திண்டாட்டம் ஒழிந்திட வேண்டும்.

6) வாக்களித்த மக்களை புறக்கணித்து பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு வால் பிடிக்கும் அரசுகளை மக்கள் புறக்கணித்திட வேண்டும்.

7) வயிற்றுக்குச் சோறிடும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைத்திட வேண்டும்.

8)  கடுமையாக உழைத்து லாபத்தை பெருக்கும் தொழிலாளிகளுக்கு அந்த லாபத்தில் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும். 

9) இயற்கை அளித்த செல்வங்களை சுரண்டுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

10) தீவிரவாதிகளின் ஆயுதங்கள்  பறிக்கப்பட்டு மௌனமாக வேண்டும். அரசு பயங்கரவாதத்திற்கும் இது பொருந்தும்.

தோழர் செல்வகுமார், இது போதுமா? இந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமல்லவா?