Tuesday, April 4, 2017

“இந்திரன் சந்திரன்” முடிவதற்கு முன்பாகவே





காரைக்குடி கஜலட்சுமி சிட்பண்ட்ஸ் மோசடி பற்றி எழுதும் போதே லட்சுமி எனும் பெயரில் நடந்த இன்னொரு மோசடி பற்றி நினைவுக்கு வந்தது என்று எழுதியிருந்தேன்.

எண்பதுகளின் கடைசி வருடங்களில் புதிய வகை மோசடிப் பேர்வழிகள் உருவாகத் தொடங்கி இருந்தார்கள்.

சின்னஞ்சிறு ஊர்களில் தவணை விலை கடைகள் என்று தொடங்குவார்கள். மாதாந்திர பரிசுகள் கொடுப்பார்கள். ஐந்தாறு மாதம் ஒழுங்காகப் போகும். திடீரென ஒரு நாள் கடையை மூடி கம்பி நீட்டி விடுவார்கள். தவணை செலுத்தியவர்கள் கதி அதோகதி.

ஐந்தாறு மாதம் கூட காத்திருக்க முடியாத பேராசைக்காரர்கள் “பாதி விலையில் பொருட்கள்” என்று ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் மிக்ஸி, சோபா, பீரோ, கட்டில் போன்ற பொருட்கள்தான். முதல் ஒரு வாரம் பாதி விலையில் பொருட்கள் விற்கப்படுவது போல தெரியும். ஊரெங்கும் பரபரப்பு ஏற்பட அத்தனை பேரும் ஆசையோடு பணம் கட்டுவார்கள். ஸ்டாக் வரவேண்டும், ஒரு வாரம் பொறுமையாக இருங்கள் என்று புக்கிங் செய்வார்கள். பின்பு ஒரு சுபயோக சுபதினத்தில் பணத்தை சுருட்டிக் கொண்டு காணாமல் போய் விடுவார்கள்.

1990 ம் வருடம் என்று நினைக்கிறேன். அப்படித்தான் ஒரு கடை “லட்சுமி எண்டெர்பிரைஸஸ்” என்ற பெயரில் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் துவக்கினார்கள். அந்த பகுதி எல்லாம் ஒரே பரபரப்பு.

கடை துவங்கிய நான்காம் நாள் மந்தாரக்குப்பத்தில் உள்ள சந்தோஷ் குமார் பேலஸோ அல்லது சுரேஷ்குமார் பேலஸோ அல்லது ஷண்முகா பேலஸோ (தியேட்டரின் பெயர் மட்டும் மங்கலாகவே நினைவில் உள்ளது) அங்கே ரிலீஸாகி இருந்த கமலஹாசனின் “இந்திரன் சந்திரன்” திரைப்படம் பார்க்க நண்பர்கள் சென்றோம்.

லட்சுமி எண்டர்பிரைஸஸ் முன்பாக திருவிழாக் கூட்டம். ஏமாந்து போவதற்காகவே மக்கள் கியூவில் பொறுமையோடு நின்றிருந்தார்கள். “இந்த மாதிரி எத்தனை பேர் ஏமாத்தினதா படிக்கிறோம். மக்களுக்கு கொஞ்சம் கூட புத்தியே வரலையே” என்று சொல்லி விட்டு சினிமா டிக்கெட் வாங்கும் கியூவிற்கு நான் சென்று விட்டேன்.

படம் முடிந்து இரவு ஒன்பது மணி போல திரும்பி வரும் போது பார்த்தால் போகும் போது இருந்ததை விட இரட்டிப்புக் கூட்டம், ஓவர் கூச்சல், போலீஸ் வேறு குழுமி இருந்தார்கள்.

கடையில் முதலாளியோடு சேர்த்து நான்கு பேர். ஒருவர் ஒருவராக நழுவி விட ஒருவர் மட்டும் புக்கிங் செய்திருக்கிறார். அவரும் ஒரு கட்டத்தில் பின்பக்கம் இயற்கை அழைப்பிற்கு போய் விட்டு வருகிறேன் என்று போனவர் அரை மணி நேரமான பின்பும் வரவில்லை. சந்தேகப்பட்ட மக்கள் பின் பக்கம் போய் பார்த்தால் கழிவறைக் கதவு திறந்திருக்கிறது. ஆள் காணவில்லை. கல்லாப் பெட்டியிலும் பணமில்லை.

கடையில் கொஞ்சம் பொருட்கள் இருந்திருக்கிறது, ஆனால் அவர்கள் புக்கிங் செய்தது அதை விட ஏராளமாய்.

ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் ஏமாற்றி விட்டுப் போனதாக பின்பு பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. அன்றைய காலகட்டத்தில் அது பெரிய தொகைதான்.

சினிமாவுக்குப் போகும் முன்பு நாம் சொன்னது சினிமா முடியும் முன்பே பலித்து விட்டது என்பதில் எனக்கு நீண்ட நாள் வருத்தம் இருந்தது. இந்த வருத்தத்தால் “இந்திரன் சந்திரன்” எனும் தெலுங்கு டப்பிங் மொக்கைப் படம் பார்த்த கொடுமை கூட பெரிதாகத் தெரியவில்லை. 

சென்னை இன்று குலுங்கட்டும்

உழைக்கும் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு) தமிழ் மாநிலக் குழு  இன்று சென்னையில் நடத்தும் கோட்டை முற்றுகைப் போராட்டம் வெல்லட்டும். போராட்டத்தின் கோரிக்கைகள் வெல்லட்டும். 

















 

Monday, April 3, 2017

மார்லன் பிராண்டோவை நேசிக்கிறேன்

தோழர் ஃபெரோஸ் பாபு தன்னுடைய முக நூலில் பகிர்ந்து கொண்டதை படித்து விட்டு நான் மார்லன் பிராண்டோவை நேசிக்கத் தொடங்கி விட்டேன். காட் ஃபாதர் திரைக்கதையை படித்த பின்பு சில காட்சிகளை யுட்யூபில் பார்த்ததற்கு மேல் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. இனி அவர் திரைப்படங்களை தேடிப் பிடித்து பார்க்க வேண்டும். 

 


ஏப்ரல் 3: மார்லன் பிராண்டோ பிறந்த நாள்.

புகழின் உச்சியில் வெகுகாலம் இருந்த மார்லான் பிராண்டோ நடிகர்களை இறைவன் போல கொண்டாடுவதை வெறுத்தார். கூட்டங்கள் அவருக்கு கடுப்பைத்தந்தன. ஒரு பாராட்டு விழாவில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு திக்கு முக்காட வைத்த பொழுது ,"கர்த்தரே ! நான் ஏன் எந்த நகரத்திற்கு வரவேண்டும் !" என்று புலம்பிய ஒரே கலைஞன் அவராகத்தான் இருக்க முடியும்

உலகம் முழுக்க தன்னுடைய படங்களுக்காக பயணம் போன பொழுது அவர் எப்படி கிழக்கு நாடுகள் பஞ்சத்தில் தோய்ந்து துன்பப்படுகின்றன என்பதை கண்டார். "இந்த நாடுகள் இப்படி வாடுவதற்கு நம்மைப்போன்ற மேற்குலக நாடுகளின் சுரண்டல் தான் காரணம். அதற்கு உகந்த அரசாங்கங்கள் அங்கே செயல் படுகின்றன !" என்று கச்சிதமாக அவர் குறித்தார்.

மார்லன் பிராண்டோவுக்கு காட் பாதர் படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட பொழுது அதை பெற மறுத்து லிட்டில்ஃபெதர் எனும் பெண்ணை அனுப்பி வைத்தார். அமெரிக்காவின் பூர்வகுடிகளான அமெரிக்க இந்தியர்களை திரைப்படங்களில் எதிரிகளாக,தீயவர்களாக காட்டும் போக்கை ஹாலிவுட் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்வதாக அவர் அறிவித்தார்.
லண்டன் நகரத்துக்கு படப்பிடிப்புக்கு போனவர் அங்கே அப்பாவி கறுப்பின மக்களை கைது செய்து வைத்திருக்கும் அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் பேரணி போவதை கண்டார். அந்த மெழுகுவர்த்தி பேரணியில் தான் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்பதை தூக்கி கிடாசிவிட்டு கலந்து கொண்டார் அவர்.

 மார்ட்டின் லூதர் கிங் எனக்கொரு கனவு இருக்கிறது உரையை நிகழ்த்தும் பொழுது அதை கேட்க ஓடோடி வந்தவர் அவர். அவர் இறந்த பொழுது படப்பிடிப்பை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு மண்டியிட்டு கண்ணீர் விட்டார் அவர் !

செவ்விந்திய மக்களை எப்படி கொன்றும்,குலைத்தும் அமெரிக்கா எழுந்தது என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்து பதைபதைத்து போனார் 

காட்ஃபாதர் படத்தின் நடிப்புக்கு கோல்டன் க்ளோப் அறிவிக்கப்பட்ட பொழுது அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் மற்றும் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விருதை ஏற்க மறுத்தார். அதே போல இந்தியாவின் பீகாரில் நிலவிய கொடிய பஞ்சத்தை பற்றி படமெடுத்து அமெரிக்க மக்களுக்கு போட்டு காண்பித்து அவர்களுக்கு உதவ நிதி திரட்ட முயன்ற பொழுது அதற்கு பெருந்தடைகள் எழவே "அமெரிக்க மனம் இதர மக்களின் கண்ணீர் பற்றி கவலைப்படுவதே இல்லை !" என்று கோபத்தோடு பதிவு செய்தார் அவர்.


"நான் ஹாலிவுடில் இருக்க மிகப்பெரிய காரணமெல்லாம் இல்லை. எனக்கு இங்கே தரப்படும் பணம் தான் என்னை இங்கே இருக்க வைக்கிறது ! வேறொன்றும் இல்லை !" என்று ஓபனாக பேசிய ஒரே நபர் அவராகத்தான் இருக்கவேண்டும்.

"மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை கொண்டாடுகிறார்கள். உங்களை சந்திக்காமலே நீங்கள் அற்புதமானவர்கள் என்று நம்புவார்கள். அதே மக்கள் உங்களின் நிஜ வாழ்க்கையோடு சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காக உங்களை வெறுப்பார்கள். மக்கள் தங்களுக்கான எதிரிகளை இழக்க விரும்புவதில்லை. அவர்களுக்கு பிடித்த வில்லன்கள் தேவைப்படுகிறார்கள். வெறுப்பதை காதலிக்கவும்,காதலிப்பதை வெறுக்கவும் மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு திட்டவும்,கொண்டாடவும் ஒரு நாயகன் எப்பொழுதும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறான்" என்று அவர் சொன்னது எத்தனை உண்மையானது !

- பூ.கொ.சரவணன் , Vikatan EMagazine

காரைக்குடியில் ஏமாற்றிய கஜலட்சுமி சிட்பண்ட்





“பத்திரிக்கைக்காரர்கள் கட்டிய வரியை திருப்பித் தருகிறேன் என்று வசனம் பேசிய பாஜக எச்.ராசாவே, காரைக்குடியில் சிட் பண்ட் நடத்தி ஏமாற்றிய பணத்தை முதலில் திருப்பிக் கொடு”

நிலைத்தகவலாக, மீம்ஸாக நிறைய பேர் பகிர்ந்து கொண்டதைப் பார்க்கையில் காரைக்குடியில் அந்த காலத்தில் நடந்த ஒரு மோசடி நினைவுக்கு வந்தது.

முன்னர் ஒரு பதிவில் சொன்னது போல 1972 முதல் 1982 வரை எங்கள் குடும்பம் காரைக்குடியில் இருந்தது. அந்த சமயத்தில் 1978 முதல் 1982 வரை நான் திருக்காட்டுப்பள்ளியில் ஒன்பதாவது முதல் பனிரெண்டாவது வரை படித்து வந்தேன். (நாளை ஜெயமோகன் மாதிரி வேறு யாராவது தப்பும் தவறும் எழுத வாய்ப்பில்லாமல் நாமே பதிவு செய்து விடுவது நல்லதல்லவா)

1974 அல்லது 1975 ம் ஆண்டாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பள்ளி முடிந்து விளையாடி விட்டு வீட்டுக்கு வருகையில் வீட்டு வாசலில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அப்போதெல்லாம் வீட்டு வாசலில் கார் நிற்பது என்பது எவ்வளவு பெரிய பெருமை தெரியுமா! நம் வீட்டிற்கு யார் காரில் வந்துள்ளார்கள் என்று ஆவலோடு நுழைந்து பார்த்தால் ஒரு கனவான் தோற்றத்தில் ஒரு நடுத்தர வயது மனிதரும் பட்டுப்புடவை கட்டிய பெண்மணியும் இருந்தார்கள்.

அவர்கள் பேசி முடித்து விட்டு கிளம்பும்போது காரிலிருந்து ஒரு ப்ரீப்கேஸ் ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார்கள். கார்ட்போர்ட் அட்டைக்கு மேலே ரெக்ஸின் துணி போர்த்தப்பட்ட பெட்டிதான். அந்த பெட்டியின் ஒரு மூலையில் சின்னதாக இரண்டு யானைகளுக்கு நடுவே லட்சுமி படத்தோடு “கஜலட்சுமி சிட்பண்ட்ஸ்”  என்று போட்டிருக்கும்.

என் நினைவு சரியாக இருக்குமானால் காரைக்குடி சுப்ரமணியபுரத்தில் ஆறாவது வீதியிலோ அல்லது ஏழாவது வீதியிலோ பிரதான சாலையைப் பார்த்தால் போல அவர்களது பங்களா இருக்கும். பங்களாவின் வெளியிலும் “கஜலட்சுமி சிட்பண்ட்ஸ்” என்று தகரத்தில் செய்யப்பட்ட விளம்பரப் பலகை இருக்கும்.

அவர்களிடம் என் அப்பா மாதம் இருபத்தி ஐந்து ரூபாய் என ஒரு ஆர்.டி போட்டிருந்திருக்கிறார். அதற்குத்தான் அந்த ப்ரீப்கேஸ் அன்பளிப்பு. ஒவ்வொரு மாதமும் அந்த சிட்பண்டிலிருந்து ஒரு ஊழியர் வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கிக் கொண்டு போவார். எல்லாம் நான்கைந்து மாதம்தான். அதன் பின்பு பணம் வாங்க யாரும் வரவில்லை. அந்த பங்களாவும் பூட்டியே கிடந்தது. சிட்பண்டில் மக்கள் முதலீடு செய்த பணத்தை எடுத்துக் கொண்டு ஊரை விட்டே ஓடி விட்டதாக பேசிக் கொண்டார்கள். அந்த ஆர்.டி பாஸ்புக்கை என் அப்பா மிகவும் பத்திரமாக வைத்திருந்தார். நாங்கள் வேலூருக்கு 1992 ல் வந்த பிறகு கூட அந்த பாஸ்புக்கை பார்த்துள்ளேன். எப்போது அதை கிழித்தெறிந்தார் என்று தெரியவில்லை.

ஒரு வேளை அந்த கஜலட்சுமி சிட்பண்டைப் பின்பற்றி எச்.ராஜா உறவினர்கள் ஊரை ஏமாற்றினார்களோ என்னவோ? இவருக்கு அந்த நிறுவனத்தோடு தொடர்பு இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவர் வீட்டின் முன்பாக போராட வேண்டும். என்ன அதற்குப் பிறகு எச்.ராஜா காரைக்குடி பக்கம் தலை வைத்து படுக்காமல் போகலாம்.
                                                         
அதுவும் கூட அந்த ஊர் மக்களுக்கு நல்லதுதான். 

பின் குறிப்பு : இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே லட்சுமியின் பெயரில் நடைபெற்ற இன்னொரு மோசடி நினைவுக்கு வந்தது. அது நாளை

அவன் நாயென்றதால் . . . .இவன் பன்றி



ரவீந்திர சவான் என்ற மஹாராஷ்டிர மாநில எம்.எல்.ஏ ரவீந்திர சவான் என்பவன் தலித் மக்களை பன்றி என்று வர்ணித்துள்ளான். அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் ஒரு விழாவில் "சாக்கடையில் கிடக்கும் பன்றிகளைப் போன்ற தலித்களை முன்னேற்ற பிரதமரும் முதல்வரும் பாடுபடுகிறார்கள்"  என்று பேசியுள்ளான். இதனை அந்த முதல்வரும் கேட்டு ரசித்துள்ளார்.

ஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் கொளுத்தப்பட்ட போது "நாய்களின் மீது கல்லடி படுவதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?" என்று திமிரோடு பேசிய சர்ச்சைக்குரிய முன்னாள் ராணுவ தளபதியும் இந்நாள் அமைச்சருமான வி.கே.சிங் இன்னும் மத்திய அமைச்சராகவே தொடர்வதால் ரவீந்திர சவானுக்கு இவ்வளவு வாய்க்கொழுப்பு வந்துள்ளது. 

ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதையே காரின் சக்கரத்தில் சிக்கிய நாயின் மகன் என்று வர்ணித்த மோடியின் கட்சிக்காரர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

வி,கே.சிங்கிற்கு எதிராக அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறு யாரும் குரல் கொடுக்கவில்லை. அன்று தேசம் தழுவிய எதிர்ப்பு இருந்து அந்த மனிதனின் பதவியைப் பறித்திருந்தால் இன்று ரவீந்திர சவானுக்கு இவ்வளவு திமிர் வந்திருக்காது. 

ரவீந்திர சவானுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுத்து அவனது எம்.எல்.ஏ பதவியைப் பறித்திட வேண்டும். மன்னிப்பிற்கெல்லாம் தகுதியானவன் அல்ல. 

மாட்டை மட்டுமே பிரதானமாகக் கருதுகிற பாஜக கட்சியில் மனிதர்களுக்கு மதிப்பு கிடையாது. 

பின் குறிப்பு : ஒரு மத்திய அமைச்சரையும் எம்.எல்.ஏ வையும் ஒருமையில் அழைப்பது சரியல்ல என்று மொட்டைக் கடிதாசு தம்பி ஒன்று அனாமதேயமாக நாகரீகம் சொல்லிக் கொடுக்க வந்து விடும். மனிதர்களை இழிவுபடுத்தும் அவர்களிடமோ, மொட்டைக் கடிதாசு பேர்வழிகளிடமோ நாகரீகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை முன் கூட்டியே சொல்லிக் கொள்கிறேன். 

Sunday, April 2, 2017

பீப் சாங்கிற்கு எதிராக மட்டுமல்ல. . . . .

 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவு "தேசிய குற்ற ஆவண ஆணையம்" ஆங்கிலத்தில் National Crime Records Bureau.  ஒவ்வொரு வருடமும் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் பற்றிய புள்ளி விபரங்களை ஆய்வு செய்து அறிக்கையாக வழங்கும்.

கடைசியாக அது வெளியிட்டுள்ள அறிக்கை என்பது 2015 ம் ஆண்டு நடைபெற்ற குற்றங்கள் பற்றியது.

அந்த அறிக்கையின்படி பெண்கள் மீது இழைக்கப்பட்ட குற்றங்கள் 2015 ம் ஆண்டில் 2014 ம் ஆண்டை விட குறைவாம். 

2014 ம் ஆண்டில் 3,25,327 குற்றங்கள் என்றால் 2015 ல் அவை 3,14,575 என குறைந்து விட்டதாம். அதே போல பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களும் குறைந்து விட்டதாம். 2014 ல் 36,735 என்பது 2015 ல் 34,651 என்று குறைந்துள்ளதாம். 

அப்படியா, நிஜமாகவே குறைந்துள்ளதா என்று யோசிக்கையில் இந்த அறிக்கை  தனது அடிப்படை என்று சொல்வது காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில்தான் இந்த அறிக்கை தயார் செய்யப்படுகிறது.

காவல்துறையும் ஊர்ப் பெரிசுகளும் செய்கிற கட்டப் பஞ்சாயத்துக்கள், சமூகம் என்ன சொல்லுமோ, எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சம் ஆகியவற்றால் பல குற்றங்கள் பதிவாகாமல் புதைக்கப்படுகின்றன. இப்படி இருப்பினும் கூட இவ்வளவு குற்றங்கள் இந்தியாவிற்கு இழிவுதான். 

சரி, இத்தனை குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே, இவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனரா என்று அறிக்கை சொல்கிறதா என்று கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் கிடைப்பது ஏமாற்றமும் அதிர்ச்சியும்தான். 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்ற ஒட்டுமொத்த வகையில் 89 % வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை என்பதைத் தாண்டி குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தண்டிக்கப் பட்டவர்கள் என்று பார்த்தால் வெறும் 21.7% மட்டுமே. 

அரசும் காவல்துறையும் எவ்வளவு அலட்சியமாக வழக்குகளை நடத்தினால் பெரும்பான்மையினரால் தண்டனையின்றி வெளியே வர முடியும்? வழக்கு பதிவு செய்யும்போதே பலவீனமாக,ஓட்டைகளோடு காவல்துறை தன் திருப்பணியை தொடங்கி விடுகிறது என்பது நிதர்ஸனம். 

ஒரு வழக்கின் விசாரணையை ஒழுங்காக எடுத்துச் செல்வதற்கே போராட்டமும் தொடர்ச்சியான முயற்சிகளும் தேவைப்படுகிறது.  இந்த பணியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எவ்வளவு நுணுக்கமாகவும், கவனத்தோடும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் செயல்படுகின்றது என்பதை களப்போராளிகளோடு ஒருநாள் முழுதும் நேரடியாக நின்று பார்க்கும் அனுபவம் கிடைத்தது. 

பிப்ரவரி மாத இறுதியில் தீக்கதிர் நாளிதழில் வந்த செய்தி ஒன்று அதிர்ச்சியளித்தது. அம்மாதத்தில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் மூன்று மோசமான சம்பவங்கள் நடந்திருந்தது.

சிதம்பரம் தாலுக்கா, குமராட்சியைத் தாண்டி மேல வன்னியூர் என்ற கிராமம், அங்கே பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளி விடுதி வளாகத்திற்கு எதிரில் உள்ள ஒரு கொட்டகையில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்ததாக  சொல்லப்படுகிறது. தூக்கு மாட்டிக் கொண்டு இறப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு இளைஞனின் சீண்டல் இருந்திருக்கிறது. வழக்கை தற்கொலை என்று சொல்லி கோப்பை மூடுவதில்தான் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தீவிரமாக இருக்கிறார். பிரேதப்பரிசோதனை அறிக்கையை வாங்கக் கூட அவர் விரும்பவில்லை. வரும் போது வரட்டும் என்று அலட்சியம் காண்பிக்கிறார். 

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ரெட்டியூர் என்ற கிராமத்தில் இன்னொரு பெண், சற்றே மன நலம் பாதிக்கப்பட்டவர். இயற்கையின் அழைப்பிற்காக சென்றவரை ஒரு கேடு கெட்டவன் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான். காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்தாலும் விரைவிலேயே பிணையில் வந்து அதே கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

இந்த இரண்டு சம்பவங்களை விட இன்னும் மோசமான சம்பவம் என்பது தொழுதூரைத் தாண்டி இருக்கிற மாபுடையூர் என்ற கிராமத்தில் நிகழ்ந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண்ணை ஐந்து பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்கள். இதிலே காவல்துறை மூன்று பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து இருவரை கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் செல்வாக்கு உள்ள குடும்பத்து பிள்ளைகள். கல்லூரி முதலாளியின் பேரன். இதற்கு முன்பாக பதிமூன்று பேரை இப்படித்தானே செய்துள்ளேன், இப்போது ஏன் வழக்கு போட வேண்டும் என்று கேட்கிறானாம் அந்த பெரிய இடத்து பொறுக்கி.

பாதிக்கப்பட்ட மூவரும்  தலித் என்பது யதேச்சையானதாக தெரியவில்லை. ஒடுக்கப்பட்டவர்கள் மீது எவ்வளவு தாக்குதல் வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற சிந்தனை இன்னும் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறதே!

இந்த மூன்று பிரச்சினைகளிலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலையிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து விபரங்கள் அறிந்து மாவட்ட காவல் கண்காளிப்பாரை சந்தித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிக்கும்வகையில் தொடர்ந்து தொடர்பிலும் உள்ளார்கள்.  பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு பாதுகாப்பான உறைவிடம் அளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள். மேல வன்னியூர் சம்பவத்திலும் மாபுடையூர் சம்பவத்திலும் விசாரணை முறையாக நடைபெற உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரவும் உள்ளார்கள்.

இந்த மூன்று சம்பவங்களும் உங்கள் வேலூர் கோட்ட எல்லைக்குள் நிகழ்ந்துள்ளதால் அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள் என்று எங்கள் தென் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனை சொன்னார்கள். வழிகாட்டுதல் அளித்தார்கள். 

இப்பிரச்சினைகளைச் சொல்லி எங்கள் கோட்டத்து தோழர்களிடம் நிதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம். ரூபாய் 42,150 வசூலானது. அத்தொகையில் ரூபாய் 12,150 ஐ மாதர் சங்கத்திற்கு வழக்கு செலவுகளுக்காகவும் மூன்று குடும்பங்களுக்கும் தலா பத்தாயிரம் என்றும் அளித்தோம். 



நேற்று மதியம் கடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் வழக்கு நிதி வழங்கப்பட்டது. 

நேற்று அந்த கிராமங்களுக்குச் சென்று அக்குடும்பங்களுக்கு நேரடியாக அத்தொகையை வழங்கினோம். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலத்தலைவர் தோழர் வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் பி.சுகந்தி, கடலூர் மாவட்டத் தலைவர்கள் தோழர் மேரி, தோழர் சிவகாமி, தோழர் தேன் மொழி, எங்களது தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் தோழர் கே.சுவாமிநாதன், பொதுச்செயலாளர் தோழர் டி.செந்தில்குமார், வேலூர் கோட்டச்சங்கத்தின் தலைவர் தோழர் டி.மணவாளன், துணைத்தலைவர்கள் தோழர் கே,மீரா, தோழர் டி.தேவராஜ், பொதுச்செயலாளர் எஸ்.ராமன், இணைச்செயலாளர் தோழர் எஸ்.ஜெயஸ்ரீ, மற்றும் முன்னணித் தோழர்கள் வி.சுகுமாரன், ஜி.வைத்தியலிங்கம், கே.சரவணகுமார், ஆர்.வெற்றிவேல், பி.குப்புசாமி, பி.ராஜூ ஆகியோர் சென்றிருந்தோம்.

மேல வன்னியூர் கிராமத்தில் இறந்து போன அந்தப் பெண்ணிற்கு தாயார் கிடையாது. தந்தையோ டாஸ்மாக்கிற்கு அடிமை. பாட்டிகள் மட்டுமே. அந்தப் பெண்தான் அக்குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரம். ஆனால் நட்சத்திரம் உதிர்ந்து விட்டது. அதனை உதிர்த்தது யார் என்று தெரியாததுதான் கொடுமை என்றால் பாதிக்கப்பட்டவர் மீதே பழி போடும் இழி கலாச்சாரம் இன்னும் கொடுமை. அந்தப் பெண்ணின் தம்பி ஏழாம் வகுப்பு படிக்கிறான். அக்கா விட்டுச் சென்ற கனவுகளை அவன் நிறைவேற்றுவான் என்று அவன் கண்களில் வடிந்த கண்ணீரைத் தாண்டி தெரிந்த உறுதி உணர்த்தியது. 





ரெட்டியூர் கிராமத்தில் அந்த சின்னப் பெண்ணை பார்க்கையில் மனதை என்னவோ செய்தது. வந்திருந்த அத்தனை பேரும் டீ சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தியது அந்த வெகுளிப் பெண். அந்தப் பெண்ணின் அக்கா, பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் இந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்காக வேலைக்கு எங்கும் செல்லவில்லை. தந்தை மறைந்து விட்டார். தாய் வயதானாலும் விவசாயத் தொழிலாளியாக உழைத்து வருகிறார். திருமணமாகி விட்டுச் சென்ற இன்னொரு சகோதரி, யாரிடமும் எந்த பணமும் வாங்க வேண்டாம் என்று சொல்கிறார் என்று சொல்ல, மாதர் சங்கத் தோழர்கள் கட்டாயப்படுத்தி அளித்தார்கள். அப்போது அந்தப் பெண் "அக்கா சொன்னா கேட்கனும்" என்ற போது உண்மையிலேயே மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த பெண் சிரித்துப் பேசினாலும் "அவன் இங்கதான் சுத்திக்கிட்டு இருக்கான். பயமா இருக்கு" என்ற போது காவல்துறை எவ்வளவு பலவீனமாக வழக்கு போட்டிருந்தால் அவன் ஜாமீனில் வந்திருப்பான் என்றும் தோன்றியது. 




அங்கிருந்து மாபுடையூர் செல்ல இரவு பத்து மணியாகி விட்டது. அந்த பெண்ணின் அப்பா கேரளாவில் ஒரு தொழிலாளியாக வேலை செய்பவர். தனது பெண்ணிற்கு நியாயம் கிடைக்காமல் வேலைக்கு போகப்போவதில்லை என்று உறுதியாக இருக்கிறார். இன்னும் மின்சார வசதி இல்லாத குடிசை வீடு. குடிசைக்குள் பரண் அமைத்து பொருட்களை வைத்து வீட்டிற்குள்ளேயே சமையலும் செய்து அங்கேயேதான் தூங்கவும் செய்கிறார்கள். அந்தப் பெண் தன் படிப்பை தொடர விரும்புகிறாள். கல்விதான் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் என்று மாதர் சங்கத் தலைவர்கள் எடுத்துச் சொன்னார்கள். பணம் வேண்டாம் என்று அத்தந்தையும் மறுத்தார். ஒரு மாதத்திற்கும் வேலைக்கு போகாமல் இருக்கிற உங்களுக்கு இச்சிறுதொகை உதவியாக இருக்கும் என்று எங்கள் தென் மண்டலத் தலைவர்கள் வற்புறுத்தி அளித்தார்கள். வழக்கில் நீதி கிடைக்கவும் படிப்பை பாதுகாப்பான இடத்திலிருந்து தொடரவும் ஏற்பாடு செய்கிறோம் என்று மாதர்சங்கத் தலைவர்கள் உறுதி அளித்தார்கள்.





நாங்கள் சென்ற மூன்று இடங்களிலும் கவனித்த முக்கியமான விஷயம் பாதிக்கப்பட்ட குடும்பங்களோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தோழர்கள் இயல்பாக கலந்து பழகியது. அவர்கள் மனதில் நம்பிக்கையையும் உறுதியையும் விதைத்தது. தங்களுக்காக குரல் கொடுக்க ஒரு அமைப்பு இருக்கிறது என்ற உணர்வை அளித்தது. 

இந்தியா முழுதும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்கிற, போராடுகிற அமைப்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். அதனை ஏதோ பீப் பாட்டிற்கு எதிராக மட்டும் போராடுபவர்கள் என்று சில குறுகிய எண்ணம் கொண்டவர்கள் சித்தரிப்பதால் சற்று விரிவாக எனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளேன். 

எப்போது கேட்டாலும் உடனே நிதி வழங்கும் எங்கள் கோட்டத் தோழர்களுக்கு முதல் நன்றி. அத்தொகையை பெற்றுக் கொண்ட அக்குடும்பங்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை அளித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கும் வழிகாட்டுதல் வழங்கிய தென் மண்டலப் பொறுப்பாளர்கள் தோழர்கள் டி.செந்தில்குமார், கே.சுவாமிநாதன், அகில இந்திய இணைச் செயலாளர் தோழர் எம்.கிரிஜா (அவரும் நேற்று வருவதாக இருந்தார். உடல் நலன் காரணமாக வர இயலாமல் போய் விட்டது) ஆகியோருக்கும் நன்றி.

நாங்கள் அளித்த தொகை சிறிதுதான்.  தொகையை விட ஏராளமான தோழர்கள் நேரில் சென்றது அவர்களுக்கு நம்பிக்கையையும் உறுதியையும் அளித்திருக்கும் என்று நம்புகிறோம்.

கடலூரிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்பட்டோம். மாபுடையூரிலிருந்து புறப்பட்டது இரவு பதினோரு மணிக்கு. வீடு வந்த சேர்ந்த போது காலை மூன்று மணி. 

சற்றே நீண்ட பயணம்தான்.

ஆனால் நெகிழ்ச்சியான பயணம். 

பின் குறிப்பு : பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களையோ புகைப்படங்களையோ வெளியிடுவது சரியல்ல என்ற மரபின் அடிப்படையில் பெயர்களை குறிப்பிடவில்லை. முகத்தையும் நீக்கி உள்ளேன்.




 

Saturday, April 1, 2017

இந்த நகையையெல்லாம் யாரால் ????????????










இது வாட்ஸப் உபயம். துபாயில் ஒரு நகைக்கடை என்று சொல்லியிருந்தார்கள்.

இதிலே கடைசியாக இருக்கிறதே, அந்த நகையை யாரால் அணிந்து கொள்ள முடியும்? அணிந்து கொண்டால் உடல் வெந்து போகாதோ/

ஒரு வேளை உள்ளுக்குள்ளே ஒரு ஏ.சி பொறுத்தினால் அணிந்து கொள்ள முடியுமோ? இவ்வளவு பெரிய நகையை வாங்கக் கூடிய சக்தி படைத்தவர்களுக்கு ஏ.சி வாங்குவது ஒன்றும் சுமையாக இருக்காது. ஆனால் ஏ.சி யின் சுமையையும் சேர்த்து சுமக்கும் தெம்பு வேண்டும்.

சரி, இதைப்பற்றி நமக்கென்ன கவலை?

யார் வாங்குகிறார்களோ அவர்கள் படட்டும் அந்த கவலையை.