Monday, March 9, 2015

மோடியின் மோசடிக்கு எதிராக இந்தியா முழுதும் ஒரே குரலில்

மோசடியான வாக்குறுதிகள் கொடுத்தவர் அவர்.

மோசடியான போட்டோஷாப் புகைப்படங்கள் மூலம் ஒரு மோசடி பிம்பத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றியவர் அவர்.

அவர் நடத்தும் ஆட்சி மட்டும் நேர்மையாக இருக்குமா என்ன?

மோடியின் அரசு இன்சூரன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது கூட மோசடியைக் கையாண்டுதான்.

மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கிற இன்சூரன்ஸ் சட்ட (திருத்த) மசோதா 2008 ஐ திரும்பப் பெறாமலேயே புதிதாக இன்சூரன்ஸ் சட்ட (திருத்த) மசோதா 2015 என ஒன்றை அறிமுகம் செய்து தனது மிருக பலம் கொண்டு நிறைவேற்றியுள்ளார். அவரது 56 இஞ்ச் மார்பு நாடாளுமன்ற மரபையும் ஜனநாயகத்தையும் சீர்குலைக்க மட்டுமே  சக்தி உடையதாக உள்ளது. 

ஆனால் இவற்றை அனுமதிக்க முடியாது, மோடியின் மோசடிக்கு எதிராக இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன அளவை உயர்த்தாதே, பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனப் பங்குகளை விற்காதே என்ற முழக்கத்தோடு எல்.ஐ.சி யின் பொதுத்துறைத் தன்மையை எந்நாளும் பாதுகாப்போம் என்ற உறுதியோடு நாடெங்கிலும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைமையில் எழுச்சி மிக்க ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தியுள்ளனர். 

குமரி முதல் காஷ்மீர் வரை ஒரே குரலில் எங்கள் சங்க உறுப்பினர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டக் காட்சிகள் இங்கே.

எங்கள் வேலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். 













































































Sunday, March 8, 2015

தியேட்டர் வாசலில் செய்த சபதம்





 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikKb7hLNW5w28oHuaSLIzZY8kN6iVOfFJOiDWvNxLYWVzhTnpkNl2AgOy-YQpcs7wZqQUvGkV6CF323e7Etjlf0rkkKs4xjReHbe3dopWJTO8oQpqgJZErbnYrCAq6dGWr4nqWbQh7Z0U/s1600/IMG_0009.JPG



கோபுர வாசலிலே படம் பற்றி நேற்று நான் பதிவிட்டிருந்ததற்கு பின்னூட்டம் எழுதியிருந்த ஒருவர் "அந்த திரைப்படம் பார்த்த பின்பு நான் திரைப்படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன்"  என்று எழுதியிருந்தார். 

நான் அவ்வளவு வைராக்கியம் கொண்டவன் அல்ல. திரைப்படம் பார்ப்பதையெல்லாம் நிறுத்தவில்லை. ஆனாலும் ஒருவரது திரைப்படம் மற்றும் பார்ப்பதில்லை என்று சத்தியம் செய்து அதை இன்று வரை அதைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.

1981 என்றுதான் நினைக்கிறேன். மதுரை திருநகரில் உள்ள கலைவாணி திரையரங்கத்தில் இரண்டாவது ஆட்டத்திற்கு டி.ராஜேந்தர், கதை திரைக்கதை, வசனம்  எழுதி, பாடல் இயற்றி  இசையமைத்து இயக்கி இரட்டை வேடத்தில் நடிக்கவும் செய்த "உறவைக் காத்த கிளி" படத்திற்கு ஒரு பத்து பேராக சென்றோம். 

உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம் படங்களை பார்த்த போதே  உஷாராகியிருக்க வேண்டும். தியேட்டர் வாசலில் இருந்த சுவரொட்டி அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று சொன்ன போதாவது எச்சரிக்கையாகி பின்வாங்கியிருக்க வேண்டும். 

வேட்டி கட்டியவர் அண்ணன், பேண்ட் போட்டவர் தம்பி என்று இரட்டை வேடத்தில் மிகப் பெரிய வித்தியாசம் காண்பித்து சாதனை படைத்தவர் உலக திரைப்பட வரலாற்றிலேயே டி.ஆர் மட்டுமே. படம் முழுதுமே அவர் மட்டுமே வந்து கொண்டிருந்தார். இருவரும் கத்தி கத்தி பேசிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு "இனிமே என் படம் பாக்க வருவாயா" என்று மிரட்டிக் கொண்டிருந்தார்கள். 

படம் முடிந்து வெளியே வந்து கலைவாணி தியேட்டர் வாசலில் சபதம் எடுத்துக் கொண்டோம். இனி வாழ்நாளில் டி.ஆர் படம் பார்க்கவே மாட்டோம் என்பதுதான் அந்த சபதம். முப்பத்தி இரண்டு வருடங்களாக அந்த சபதத்தை காப்பாற்றி வருகிறேன்.

"வீராச்சாமி" என்று அற்புதமான காவியம் ஒன்றை எடுத்துள்ளார். அவசியம் பாருங்கள் என்று சிலர் சொன்ன போது கூட சபதத்தை காப்பதுதான் முக்கியம் என்று உறுதியாக இருந்து விட்டேன்.

Saturday, March 7, 2015

இளையராஜாவால் ஏமாந்த கதை

 http://upload.wikimedia.org/wikipedia/en/d/d1/Gopura_Vasalile_dvd.jpg

இரண்டு நாட்களுக்கு முன்பாக இளையராஜாவின் இசைக் கோர்வை ஒன்றை பகிர்ந்து  கொண்டிருந்தேன். அப்போது கண்ணில் பட்டு, காதால் கேட்டது இந்த இசைக்கோர்வை . 

தனியார் தொலைக்காட்சி சேனல்கள் இல்லாத காலம்  அது. நெய்வேலியில் புதுப்படம் வெளியிட ஒரே ஒரு தியேட்டர் மட்டுமே இருந்தது. எல்லா படங்களும் முதல் நாளே ரிலீஸாகாது. தூர்தர்ஷனின் ஒளியும் ஒலியும் நிகழ்வில் இப்படத்தில் வரும் பாடலான "தேவதை போல் ஒரு பெண்ணிங்கு" பாடலைக் கேட்டு அப்படியே மெய் மறந்து போனேன்.

இரண்டு மூன்று நாட்களிலேயே நெய்வேலியில் வந்து விட, நான்கைந்து நண்பர்களை அழைத்துக் கொண்டு போனேன். டைட்டில் இசை (அதுதான் மேலே உள்ள இணைப்பு) கேட்டவுடனேயே  "ஆஹா, சூப்பர்" என்றெல்லாம் விசிலடிக்காத குறையாக துள்ளிக் குதித்தேன்.

ஆனால் அதற்குப் பிறகுதானே தெரிந்தது படம் படு மொக்கை என்பது.

படம் முடிந்து வெளியே வந்ததும் நண்பர்கள் "உன்னை நம்பி வந்தோம் பாரு" என்று திட்டினார்கள்.

இளையராஜாவை நம்பி நான் வந்தேன் என்று சொல்ல முடியுமா?

அதனால் "பாட்டெல்லாம் சூப்பர்பா" என்று சமாளித்தேன்.

அப்போது ஒருவர் முறைத்தது இப்போதும் நினைவில் உள்ளது.

Friday, March 6, 2015

தவறிழைத்தது அமைச்சரா? மாவட்டச் செயலாளரா?

 

வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அவர் அதிமுக கட்சியில் வகிக்கும் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அக்கட்சித்தலைமை நீக்கியுள்ளது.

கடந்த பத்து நாட்களாகவே அவரது பெயர் ஊடகங்களில் அடிபட்டு வருகிறது. நெல்லையைச் சேர்ந்த நேர்மையான அதிகாரி திரு முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள இந்த அமைச்சர்தான் காரணம் என்பதே அச்செய்தி.

வேளாண்மைத்துறையில் தற்காலிக ஓட்டுனர்கள் பணி நியமனத்தில் மந்திரி கொடுத்த பரிந்துரையை ஏற்காமல் நியாயமாக நடந்து கொண்டதால் வருமானம் பாதிக்கப்பட்டதால் அத்தொகையை வழங்க வேண்டும் என்று  அளிக்கப்பட்ட நிர்ப்பந்தம்தான் அந்த அதிகாரியை தற்கொலையை நோக்கி தள்ளியிருக்கிறது என்பதுதான் அமைச்சர் மீது வைக்கப்பட்ட புகார்.

அதிமுக தலைமை அவரை கட்சிப் பதவிலிருந்து நீக்கியுள்ளது. அமைச்சர் மீதான நடவடிக்கை இதுதான் என்றும் சொல்லப்படுகிறது.

தவறு அமைச்சர் என்ற பதவியின் காரணமாக நிகழ்த்தப்பட்டதா?
இல்லை மாவட்டச் செயலாளர் என்ற ரீதியில் செய்ததா?

அமைச்சர் பதவியிலிருந்து ஏன் அவரை நீக்கவில்லை?

ஒரு வேளை இப்படி இருக்குமோ?

மாவட்டச் செயலாளரை  நீக்கும் அதிகாரம் ஜெ விற்கு உண்டு.
ஆனால் சட்டபூர்வமான முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஸிற்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் கிடையாது. அப்படி ஒரு அதிகாரத்தை பெயரளவிலாவது ஏன் தர வேண்டும் என்பதுதான் காரணமாக இருக்குமோ?
 

 

Thursday, March 5, 2015

இளையராஜா கொடுத்த சுகானுபவம்

 http://www.seythigal.com/wp-content/uploads/2013/12/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.jpg

ஒரு களைப்பான நாள் இன்று.  வழக்கம் போல ஒரு பதிவை எழுதி விட்டு புதிதாக ஒரு நூலை படிக்கத் தொடங்கினேன். உடலின் சோர்வு முப்பது பக்கங்களுக்கு மேல் தொடர அனுமதிக்கவில்லை.

அப்படியே இணைய தளத்தில் உளவிய போது இந்த அற்புதமான இசைக் கோர்வை   கிடைத்தது. இது ஒரு பழைய நிகழ்ச்சியாக இருந்தாலும் இப்போதுதான் நான் முதல் முறையாக கேட்கிறேன்.

நீங்களும் கேளுங்கள்.

நிச்சயம் ஒரு சுகானுபவமாகத்தான் இருக்கும்.

ராஜா ராஜாதான்.