Monday, January 5, 2015

அவர்கள் எங்கே தொலைந்து போனார்கள்?

 http://vadakkus.com/wp-content/uploads/2014/05/Manmohan-Singh-and-Narendra-Modi1.jpg

இன்று போல்
அன்றும் ஒரு
மக்கள் விரோத ஆட்சி.

தேசத்தை விலை பேசினார்கள்,
மக்களை வாட்டி வதைத்தார்கள்,
ஜனநாயகத்தை மீண்டும் மீண்டும்
படுகொலை செய்தார்கள்.
அவசரச் சட்டத்தின் மூலமே
ஆட்சி நடத்தினார்கள்.

அன்றும் நான்
அவர்களை எதிர்த்தேன்
ஆக்ரோஷமாய் எழுதிக் குவித்தேன்.

ஆமாம் என்று
ஆத்திரப்பட்டார்கள்.
அனுமதிக்கக் கூடாதென
ஆதரவாய் குரல் கொடுத்தார்கள்.

நேற்று போலவே
இன்றும் ஒரு ஆட்சி
தேசத்தை விலை பேசுகிறது,
மக்களை வாட்டி வதைக்கிறது,
ஜனநாயகத்தை மீண்டும் மீண்டும்
படுகொலை செய்து கொண்டே இருக்கிறது.
அவசரச் சட்டம் மூலமாய்
ஆட்சி நடத்துகிறது.

இன்றும் நான் எதிர்க்கிறேன்,
ஆக்ரோஷமாய் எழுதிக் குவிக்கிறேன்.

அன்றைக்கு ஆதரித்து
ஆத்திரமாய் குரல் கொடுத்த
அந்த ஆவேச மனிதர்களைத்தான்
இன்றைக்கு காணவில்லை.
எங்கே போனார்கள் 
என்பதும்  தெரியவில்லை.

ஆட்சி மாறினாலும்
காட்சி மாறாததால்
பாவம் அவர்கள்தான்
தங்களை தாங்களே
கடிந்து கொள்ள முடியாமல்
மறைந்தே போய்விட்டார்கள்.
மனசாட்சியின் உறுத்தலோ?


Sunday, January 4, 2015

போக்குவரத்து விதி மட்டுமல்ல






காரிருள் சூழ்ந்து
கதிரவன் மறைந்தது போல
மாயத் தோற்றத்தில்
மதி மயங்கிய மக்கள்
மாற்றமென்று தடுமாறி 
மாபெரும் தவறிழைத்ததாய்
வரலாற்றில் பதிவான
ஆண்டொன்று முடிந்தது.

தொட்டால் சுடுமென்று
உண்மை உரைத்திட்ட
நல்லவரைப் புறக்கணித்து
நாகம் நிகர் நயவஞ்சகரை
அரவணைத்து, ஏற்றிக் கொண்ட
நச்சை போக்கும் வழியின்றி
தவிக்கும் மக்களின்
துயரம் தோய்ந்ததாய் அமைந்தது
கடந்து போன ஆண்டு.

பால் போல் தோற்றமளிக்கும்
பாழுங்கள்ளைப் பாராட்டினர்
பாதகம் அது என்பதை
உள்ளத்தில் உணராமல்,

தனக்கான சவக்குழியை
முதலாளித்துவம் தானே
தயார் செய்யும் என்றுரைத்த
மார்க்ஸின் வார்த்தைக்கு முரணாக,

ஜனநாயகம் எதுவென்றும்
சர்வாதிகாரம் எதுவென்றும்
புரியாமல் குழம்பிப் போய்
தன் மீதே தாக்குதல் நடத்த
எதிரியின் கையிலே
ஆயுதம் அளித்தார்.

இனி வரும் ஆண்டாவது
இனிமையாய் மாற
அறியாமை இருள் அகற்றி
அறிவுச் சுடர் ஏற்றி வைப்போம்.

சமரசத்தில் அல்ல,
சத்தியத்தின் போராட்ட்த்தில்தான்
சாத்தியமாகும் ஒற்றுமை என
உரக்கச் சொல்வோம்.

“இடது பக்கம் செல்க”
எனும் போக்குவரத்து விதிதனை
வாழ்க்கையின் விதியாய்
மாற்றி அமைப்போம்
மக்களின் வாழ்விலே
விடியல் காண.

Saturday, January 3, 2015

ராஜீவ் நினைவகத்தில் இருட்டடிப்பு

ராஜீவ் நினைவகத்திற்கு சென்று வந்தது பற்றி இரு தினங்கள் முன்பாக எழுதியிருந்தேன்.
 http://im.rediff.com/election/2009/may/06sld2.jpg
 
 
அது ராஜீவ் காந்திக்கான நினைவகம்தான், காங்கிரஸ் ஆட்சியால் துவக்கப் பட்டதுதான். அங்கே ராஜீவ் காந்தியின் புகழ் பாடுவதுதான் அரசின் நோக்கமாகவும் இருக்க முடியும்.
 
ஆனால்
 
அந்த கொடூர சம்பவத்தில் ராஜீவ் மட்டும் கொல்லப் படவில்லை. மேலும் ஒரு பதினாலு பேர் கொல்லப்பட்டனர், தனுவைத் தவிர. அதில் போட்டோகிராபர் ஹரிபாபுவைத் தவிர வேறு யாருக்கும் கொலை முயற்சிக்கும் தொடர்பில்லை.
 
ராஜீவ் காந்திக்கு பாதுகாப்பு அளிக்க வந்த காவல்துறையினர், அவரது கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஆகியோர்தான் கொல்லப் பட்டனர். ராஜீவ் காந்தி கொல்லப்படவில்லை என்றால் இவர்களும் இறந்து போயிருக்க மாட்டார்கள்.
 
அவர்களுக்கெல்லாம் சிலை வைத்திருக்க வேண்டாம், ஓவியம் எழுதியிருக்க வேண்டாம், வாழ்க்கை வரலாறெல்லாம் கூட சொல்லி இருக்க வேண்டாம். அந்த பிரம்மாண்டமான வளாகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அந்த பதினாலு பேருடைய பெயர்களையாவது எழுதி இவர்களும் அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் என்றாவது பதிவு செய்திருக்கலாம். 
 
எந்த வரலாறும் தெரியாதவர்கள் அங்கே வந்தால் ராஜீவ் காந்தி மட்டுமே அன்று கொல்லப்பட்டார் என்றுதான் நினைப்பார்கள். 
 
அதே நேரம் வெண்மணி நினைவகம் ஒன்றும் பிரம்மாண்டமானதில்லை. பச்சை புல்வெளிகள் அங்கே கிடையாது, பத்துக்கு பத்து அறை, அங்கே ஒரு ஸ்தூபி, அதற்கு வெளியே இன்னொரு ஸ்தூபி. மிகப் பெரிய கலைநயம் என்பதெல்லாம் கிடையாது. ஆனால் அந்த ஸ்தூபியில் தீயில் எரிக்கப்பட்ட நாற்பத்தி நான்கு  தியாகிகள் பெயர்கள் மட்டுமல்ல, கீழத்தஞ்சை மாவட்டத்தில் கொல்லப்பட்ட தியாகிகள் அனைவரது பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGjmZNuYV9Znub6c-CywL_YbWSqtarC-xrv7UM5MtZjjQWNw82sID52VCKfvAIYBP6fgo1o-pkhChMhrJxOoaQBUCbrHVqlXfncvm55jQtJbDgceVvMbGHUmOzxd4fGACbYT6ZSizGEEI/s1600/Venmani.jpg
 
 
ஏனென்றால் வெண்மணி நினைவகத்தை கட்டியது உழைப்பாளி மக்களின் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி.
 
ராஜீவ் நினைவகத்தை கட்டியது முதலாளித்துவக் கட்சியான காங்கிரஸ் த்லைமையிலான அரசு. அங்கே மற்றவர்களின் தியாகத்திற்கு மதிப்பில்லை. 

Friday, January 2, 2015

அழகு கொஞ்சும் இந்தியா -நிஜமாய்த்தான்

மின்னஞ்சலில் எனக்கு கிடைத்த  படங்கள், இந்தியாவில்  எப்படி அழகு கொட்டிக்கிடக்கிறது என்பதைச் சொல்லும். ரசியுங்கள்










 

Thursday, January 1, 2015

தியாகிகளை மறக்கவில்லை. தலைவரை நினைக்கவில்லை




நேற்று திருவள்ளூர் சென்றிருந்தேன். மாலை ஆறு மணிக்கெல்லாம் அங்கிருந்து புறப்பட்டு வேலூர் வரும் வழியில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவகம் சென்றேன்.

அந்த வழியில் எத்தனையோ முறை பயணம் செய்தாலும் அந்த நினைவகம் அமைக்கப்பட்ட பின்பு நேற்றுதான் முதல் முறையாக உள்ளே சென்றேன். மிகவும் பிரம்மாண்டமான பச்சை பசேல் புல்வெளியில் ஏழு பிரம்மாண்ட தூண்கள் ராஜீவ் உடல் கண்டெடுக்கப்பட்ட இட்த்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. அந்த இட்த்தில் கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் ஓவியமும் உள்ளது.

ராஜீவின் புகழ் பாடும் கல்வெட்டுக்கள் அங்க்ங்கே உள்ளது. மாமல்லபுரம் சிற்ப பாணியில் “ராஜீவின் கனவுகள்” என்று ஒரு நாற்பது அடி நீளத்தில் ஒரு பெரிய சிற்பம் உள்ளது.

ராஜீவ் காந்தி நினைவகத்தை பார்த்துக் கொண்டிருக்கி போது மனதில் இன்னொரு சிந்தனையும் ஓடிக் கொண்டே இருந்த்து.

ஒரு நான்கைந்து வருடங்களாவது ராஜீவ் காந்தி நினைவு நாளன்று ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை சென்று திரும்பியுள்ளேன். சோனியா காந்தி, பிரியங்கா, ராகுல் ஆகியோர் வருவதாக இருந்தால் காலை வேளையில் பரபரப்பாக இருக்கும் அந்த இடம் மதியத்திற்கு மேல் கொஞ்சம் வெறிச்சோடி விடும். பல்லாயிரக்கணக்கான மக்கள், காங்கிரஸ் தொண்டர்கள் வருகை என்பதெல்லாம் அவ்வளவாக இருக்காது.

ஆனால் அதே நேரம் நில உடமையாளர்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட நாற்பத்தி நான்கு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் வெண்மணிக்கு வருவதை பார்க்க முடிகிறது. இறந்து போனவர்கள் ஒன்றும் தலைவர்கள் கிடையாது. ஆனாலும் அவர்கள் தியாகிகள். அவர்களது தியாகத்தை மக்கள் மறக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக, பிரதமராக இருந்தபோதும் வெண்மணி தியாகிகளை நினைவுகூர்வது போல ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப் படுகிறதா? தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்ள சிலர் சுவரொட்டிக்களை அச்சிடுவதை பார்க்க முடிகிறது. அது கூட சோனியாவும் ராகுலும் அதிகார பீட்த்தில் தொடரும் வரையில்தான்.

என்ன காரணம்?

வெண்மணி தியாகிகள் உழைப்பாளி மக்களைச் சேர்ந்தவர்கள். அவ்வளவுதான்.

நினைவகத்தை சுற்றி வருகையில் நான் கவனித்த மற்றொரு முரண்பாடு பற்றி நாளை எழுதுகிறேன்.

சென்று வா 2014 , வருகவே 2015 மாற்றம் தருகவே





2014 ம் வருடம் ஒன்பது மணி நேரத்திற்கு முன்பாக முடிந்து புத்தாண்டு பிறந்துள்ளது.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் இனிமையும் எப்போதும் ததும்ப அன்பு நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

கடந்து போன ஆண்டு எப்படி?

பதினாறாவது மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மிகவும் தெளிவாக வெளியிட்ட சுற்றறிக்கையின் சில பகுதிகளை கீழே பாருங்கள்


2014 தேர்தல்கள் பொதுத்துறை இன்சூரன்ஸ்துறையின் எதிர்காலத்தை நிச்சயம் வரையறுக்கப் போகிறது. 2014 ல் ஆட்சிக்கு வந்தால் நிதித்துறையில் மேலும் பல தாராளமயமாக்கல் சீர்த்திருத்தங்களைச் செய்வதுதான் எங்கள் முன்னுரிமை என்று இரு முக்கியமான கட்சிகளும் காங்கிரஸும் பாஜகவும் ஏற்கனவே அறிவித்துள்ளன.

எனவே இத்தேர்தல் பொதுத்துறை இன்சூரன்ஸ்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் மிகவும் முக்கியமானது. நம்முடைய துறையை பாதுகாக்க வேண்டுமானால் நாம் இந்த அதி முக்கியமான தேர்தலில் திட்டவட்டமாக செயல்பட வேண்டும். நாம் யார் பக்கம் நிற்கிறோம் என்று சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

பொதுத்துறைக்கும் பொதுத்துறை இன்சூரன்ஸ்துறைக்கும் எதிராக இருக்கிற அரசியல் அணிகளையா நம்மால் தேர்ந்தெடுக்க முடியும்? ஏழைகளுக்கு எதிரான, தொழிலாளர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டவர்களையா இந்திய மக்கள் தேர்ந்தெடுக்க முடியும்? பெரும்பான்மை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பை தட்டிக் கழித்த அரசியல் அணிகளையா நம்மால் ஆட்சியில் அமர்த்த முடியும்?

இக்கேள்விகளுக்கெல்லாம் விடையளித்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இருபத்தி மூன்றாவது  மாநாடு “தலைவர்களில் அல்ல கொள்கைகளில்தான் மாற்றம் தேவை” என்று இத்தேசத்து மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. அடுத்த பிரதமர் மோடியா, ராகுலா என்று ஊடகங்களில் நடக்கும் விவாதத்தால்  மக்களுக்கு எவ்வித பயனுமில்லை ஏனென்றால் அவர்கள் இருவருமே சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின் கொள்கைகளை பிரதிநிதிப்படுத்துபவர்கள்.

இதுதான் யதார்த்தமான உண்மையாக இருப்பதால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாடு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை நிராகரிப்பீர், பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோற்கடிப்பீர் என்று இத்தேசத்து மக்களுக்கு தெளிவான வேண்டுகோள் விடுத்தது.

இப்பின்னணியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இடதுசாரி, மதச்சார்பற்ற, முற்போக்கு ஜனநாயக அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் அறைகூவல் விடுக்கிறது. எந்த தொய்வும் இன்றி நாம் அனைவரும் இப்பணியை முழுமையாக செய்து முடிப்போம். ஒரு சிறப்பான இந்தியாவையை உருவாக்கிய பெருமையில் நாமும் பங்கு பெறுவோம்.

ஆனால் அப்படி நடக்கவில்லை என்பதில் 2014 ஒரு ஏமாற்றமே.  ஆனால் எங்கள் சங்கம் எச்சரித்தபடியே நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது, பொய்ப்பிரச்சாரத்தை நம்பி வாக்களித்தவர்களே நொந்து போகும் படி மோடி அரசின் நடவடிக்கைகள் மோசமாக அமைந்து வருகிறது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்தியாவின் செல்வாதாரங்களை ஒப்படைப்பதில் காண்பிக்கிற அதே வேகத்தோடு தனது “ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம்” என்ற கோட்பாட்டை நிறுவ சகல சதிகளையும் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மக்கள் ஒற்றுமை என்பதை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது மோடி அரசு.

இந்த நிலைமை வரும் 2015 ம் ஆண்டிலாவது மாற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எதிர்பார்ப்பு. நடக்கும் என்று நம்புவோம்.

தனிப்பட்ட முறையில் பார்த்தால் 2014 ஒரு கலவையான ஆண்டு.

பயணங்களின் ஆண்டாகவே 2014 அமைந்திருந்த்து. 2013 ம் ஆண்டின் கடைசி நாளில்தான் நெல்லை மாவட்டம் பாபநாசத்திலிருந்து திரும்பி மூன்றே நாட்களில் தூத்துக்குடி நோக்கி பயணித்தேன் பொங்கலுக்கு பின்பு நாக்பூர் என்று தொடங்கிய பயணம் இதோ நேற்றுன் கூட திருவள்ளூர் சென்று திரும்பி வந்தேன்.

பல்வேறு இயக்கங்கள் திருப்திகரமாக நடந்த நிறைவு உள்ளது. பல மனிதர்களை புரிந்து கொண்ட அனுபவமும் கிடைத்த்து. உண்மையாகவே நம்மை நேசிப்பவர்கள் யார், போலியாக பழகியவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. முகநூலிலும் வலைப்பக்கத்திலும் தீவிரமாக செயல்பட முடிந்த்து. பல முகநூல் நண்பர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த்து. கடந்தாண்டு வாங்கிய நூல்களில் பெரும்பாலானவற்றை படித்து முடித்ததால் ஒரு வெற்றிகரமான ஆண்டு என்றும் சொல்லலாம். பல சமையலறை பரிசோதனைகள் வெற்றிகரமாக நடந்த்தில் ஒரு சந்தோஷம். சிறுகதை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ளும் வண்ணம் எட்டு சிறுகதைகள் பிரசுரமானது மிகவும் பெருமையளிக்கிறது. அந்தா முயற்சியை தொடங்கியது என்ற முறையில் 2014 முக்கியமான ஆண்டு.

எங்கள் தலைவர்கள் தோழர் சரோஜ் சவுத்ரி, தோழர் சுனில் மைத்ரா ஆகியோரது முக்கியமான பல கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய வேண்டும் என்ற கனவு ஒன்றுள்ளது. அது 2015 ம் ஆண்டிலாவது கைகூட வேண்டும்.

மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயருகிறவகையில் வரும் ஆண்டு அமையட்டும் என்பது முக்கியமான விருப்பம். அதற்காக பாடுபடும் வித்த்தில் 2015 ல் பணி செய்ய வேண்டும் என்ற உறுதியோடு அனைவருக்கும் மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.