சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Sunday, September 16, 2012
Saturday, September 15, 2012
ரத்தத்தில் ரத்தினக் கம்பளம் விரிக்கிறார்கள்
மத்தியில் உள்ள இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்து மக்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. மக்களைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லாத அரசு, மக்களின் துயரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்ற கவலை இல்லாமல் அரசு அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
விலைவாசி உயர்வை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்க தயாராக இல்லாத மத்திய அரசு, உணவுப் பாதுகாப்பு சட்டம் என்பதன் மூலம் ரேஷன் கடைகளையே ஒழித்துக் கட்டப் பார்க்கிறது. வெளிச்சந்தையிலேயே எல்லோரும் எல்லாப் பொருட்களை வாங்கி சிரமப்பட வேண்டும் என்பதுத்தான் இந்த உணவுப் பறிப்புச் (பாதுகாப்பு என்று பெயர் வைத்திருப்பது வெறும் பம்மாத்து வேலை) சட்டத்தின் நோக்கம்.
இந்த சூழலில் அடுக்கடுக்கான தாக்குதல்களை அன்றாடம் மத்தியரசு நடத்தியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக போலியான புள்ளி விபரம் கொடுத்துக் கொண்டு வருகிற மத்தியரசு இப்போது டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் ஐந்து உயர்த்தியுள்ளது. இதனால் அனைத்துப் பொருட்களின் விலையும் மிகக் கடுமையாக உயரப் போகிறது. ஆனால் இதைப் பற்றி மத்தியரசுக்கு என்ன கவலை?
மானிய விலையிலான சமையல் எரி வாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு ஆறு என்று கட்டுப்படுத்தி இன்னொரு சுமையை மக்கள் தலை மீது ஏற்றியுள்ளது மத்தியரசு. லட்சம் கோடிகளில் முதலாளிகள் ஸ்பெக்டரமிலும் நிலக்கரியிலும், எண்ணெய் படுகையிலும், நிறுவன வரிகளிலும் கொள்ளையடிக்க அனுமதிக்கிற மத்தியரசு, சாமானிய மக்களின் உணவுத் தேவைக்கான சிலிண்டருக்கு மானியம் வழங்க அனுமதிப்பதில்தான் தேசம் குடிமுழுகிப் போய்விடும் என ஒப்பாரி வைக்கிறது.
இந்தத் தாக்குதல் நேற்று முன் தினம் நடைபெற்றது என்றால் நேற்று மீண்டும் தொடர் தாக்குதல்கள். தீவிரவாதிகளின் தொடர் குண்டு வெடிப்புக்களில் கூட மக்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு கிடைக்கலாம். மன்மோகன், சிதம்பரம் வகையறாக்களின் தொடர் தாக்குதல்களில் தப்பிக்க வாய்ப்பே கிடைக்காது.
மத்திய அமைச்சரவை மோசமான சில முடிவுகளை நேற்று எடுத்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை எடுப்பது என்று முடிவெடுத்தது. இடதுசாரிக்கட்சிகளும், வணிகர் அமைப்புக்களும் நடத்திய போராட்டங்கள் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட முடிவை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் நிர்ப்பந்தத்திற்கு அடி பணிந்து இப்போது மீண்டும் எடுத்துள்ளது.
கோடிக்கணக்கான வணிகர்கள், அவர்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோரின் வாழ்வை சீரழித்து, அவர்களின் ரத்தத்தைக் கொண்டு வால்மார்ட் போன்ற ராட்சத நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கிறது மத்தியரசு. விலைவாசி குறையும், விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று கற்பனைக் காரணங்களைச் சொல்லி இந்தியர்களை ஏமாளிகளாக்க முயல்கிறது மத்தியரசு. இதனை நம்மால் எப்படி அனுமதிக்க முடியும்?
ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் விமானப் போக்குவரத்துத் துறையை அன்னிய மூலதனத்தை அனுமதிப்பது என்பது ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மூடு விழா நடத்துவதற்கான ஒத்திகை. விஜய் மல்லய்யா போன்ற உல்லாசப் பேர்வழிகள் விமானக் கம்பெனிகள் துவங்கி இந்திய வங்கிகளை ஏமாற்றி வருவதைப் பார்த்து வரும் நமக்கு வெளிநாட்டுக் கம்பெனிகளின் மோசடி அனுபவமும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது மத்தியரசு.
லாபத்தில் செயல்படும் நான்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்ற தேசத்துரோக முடிவை எடுத்துள்ளது அமைச்சரவை. இதற்குப் பதிலாக லாபத்தில் செயல்படும் காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணிக் கட்சிகளின் பங்குகளை அன்னியர்களுக்கு விற்று விட்டு அவற்றின் நிர்வாகத்தையும் வெளிநாட்டு நிர்வாகங்களுக்கு அளித்து விடலாமே? திறமையான அன்னிய நிர்வாகங்கள் இந்தக் கட்சிகளின் கோஷ்டிப் பிரச்சினைகளைக் கூட தீர்ப்பார்களே!
கையாலாகாத பிரதமர், முடிவெடுக்க திராணியில்லாத பிரதமர் என்று அமெரிக்க ஊடகங்களும் இந்திய, அன்னிய முதலாளிகளும் வைத்த விமர்சனங்கள் பொய்யாக்க வேண்டும், ஒபாமாவின் மனம் குளிர வேண்டும் என்பது மட்டுமே இவர்களுக்கு முக்கியமாக உள்ளது. மக்கள் வாழ்க்கை என்பது இவர்களுக்கு பொருட்டே கிடையாது.
இத்தகைய போக்கை தேசத்தை நேசிக்கிற எந்த ஒரு அமைப்பாலும் அனுமதிக்க முடியாது. மத்தியரசின் தொடர் தாக்குதல்களை கண்டிப்போம், தொடர்ந்து போராடுவோம். போராடும் இதர அமைப்புக்களோடு கரம் கோர்ப்போம். முறியடிப்போம்.
இந்திய மக்களின் ரத்ததில் அமெரிக்கர்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கிறார்கள்.
அனுமதியோம், அனுமதியோம், அனுமதியோம், அனுமதியோம்
என்றே கிளர்ந்தெழுவோம்.
Friday, September 14, 2012
இந்தியனாய் பிறந்தது உன் தவறு
கல்லைத் தின்பாய்,
மண்ணைத் தின்பாய்,
மக்கிப் போன
இலையைத் தின்பாய்,
சாக்கடையில் ஓடும்
எலியைப் பிடித்து
அப்படியே தின்பாய்,
காசிருந்தால்
கடைக்குச் சென்று
இத்தாலி நாட்டு
பீட்சா தின்பாய்.
சோறு தின்ன
அரிசியும் கிடைக்காது,
கூடவே தின்ன
காய்கறி கிடைக்காது.
பொங்கித் தின்ன
சிலிண்டரும்
கிடையாது.
காங்கிரஸ்காரன் என்றால்
சோனியா வீட்டுக்குச் செல்,
நிச்சயம் விருந்து
கண்டிப்பாய் உண்டு.
அடுத்தவனென்றால்
பட்டினியில் போயிடு.
இந்தியனாய் பிறந்தது
உன் தவறு.
இதைத்தானே சொல்கிறான்,
மன்மோகனும் சிதம்பரமும்.
வெட்கமின்றி
கேட்டுக் கொண்டே
இப்படியே எத்தனை நாள்
நொந்து வாழ்வாய்?
செங்கொடியின் கீழ் வா,
மனிதனாய் போராடுவோம்,
இந்தியாவை மாற்றியமைப்போம்.
மண்ணைத் தின்பாய்,
மக்கிப் போன
இலையைத் தின்பாய்,
சாக்கடையில் ஓடும்
எலியைப் பிடித்து
அப்படியே தின்பாய்,
காசிருந்தால்
கடைக்குச் சென்று
இத்தாலி நாட்டு
பீட்சா தின்பாய்.
சோறு தின்ன
அரிசியும் கிடைக்காது,
கூடவே தின்ன
காய்கறி கிடைக்காது.
பொங்கித் தின்ன
சிலிண்டரும்
கிடையாது.
காங்கிரஸ்காரன் என்றால்
சோனியா வீட்டுக்குச் செல்,
நிச்சயம் விருந்து
கண்டிப்பாய் உண்டு.
அடுத்தவனென்றால்
பட்டினியில் போயிடு.
இந்தியனாய் பிறந்தது
உன் தவறு.
இதைத்தானே சொல்கிறான்,
மன்மோகனும் சிதம்பரமும்.
வெட்கமின்றி
கேட்டுக் கொண்டே
இப்படியே எத்தனை நாள்
நொந்து வாழ்வாய்?
செங்கொடியின் கீழ் வா,
மனிதனாய் போராடுவோம்,
இந்தியாவை மாற்றியமைப்போம்.
Thursday, September 13, 2012
எல்லையில் சிந்திய ரத்தம். , நடந்தது என்ன?
அஸ்ஸாம் கலவரம் தொடர்பாக எங்கள் அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாத இதழ்
இன்சூரன்ஸ் வொர்க்கர் ஒரு ஆழமான ஆய்வினை
செப்டம்பர் மாத தலையங்கத்தில் அளித்துள்ளது.
அதை எங்கள் கோட்ட இதழ் சங்கச்சுடருக்காக
தமிழாக்கம் செய்துள்ளேன்.
அது உங்களுக்காகவும் இங்கே.
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாத இதழ்
இன்சூரன்ஸ் வொர்க்கர் ஒரு ஆழமான ஆய்வினை
செப்டம்பர் மாத தலையங்கத்தில் அளித்துள்ளது.
அதை எங்கள் கோட்ட இதழ் சங்கச்சுடருக்காக
தமிழாக்கம் செய்துள்ளேன்.
அது உங்களுக்காகவும் இங்கே.
தெற்கே வரும் ரயில்
சில தினங்கள் முன்பு அஸ்ஸாமிலிருந்து பெங்களூர் நோக்கி புறப்பட்ட ஒரு சிறப்பு ரயில் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் ஒற்றுமையும் மக்கள் மீதான நம்பிக்கையும் இன்னமும் சீர்குலைந்து விடவில்லை என்பதை உணர்த்துகின்றது அந்த ரயில் பயணம். ஏனென்றால் சில தினங்கள் முன்புதான் பெங்களூர், ஹைதராபாத், சென்னை, மும்பை போன்ற மாநகரங்களுக்கு பணி செய்யவும் படிக்கவும் வட கிழக்கு மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் உயிருக்கு பயந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மீண்டும் பணிக்காகவும் கல்விக்காகவும் எங்கிருந்து அச்சத்துடன் புறப்பட்டார்களோ, அங்கேயே மீண்டும் திரும்பி வருவது என்பது ஒரு நல்ல செய்தி.
இந்த நிலை நீடிக்குமா? நீடிக்க வேண்டுமென்றால் அரசு என்ன செய்ய் வேண்டும்? மக்களின் கடமை என்ன?
அதற்கு இப்பிரச்சினை குறித்த ஒரு சரியான புரிதல் வேண்டும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போர் வாளான இன்சூரன்ஸ் வொர்க்கர் மாத இதழின் செப்டம்பர் 2012 மாத தலையங்கம், இப்பிரச்சினையை மிக ஆழமாக அலசியுள்ளது. தேச ஒற்றுமையை பாதுகாக்க வேண்டியது உழைக்கும் மக்களின் கடமை என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. தலையங்கத்தின் தமிழாக்கத்தை கீழே காண்போம்.
துடிப்பு மிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012 ல் வெளிப்படுத்திய அற்புதமான திறன் மூலம் பல லட்சம் உள்ளங்களை கொள்ளை கொண்டார். பதக்கம் வென்ற அவரது முயற்சி மணிப்பூரையும் வட கிழக்கு மாநிலங்களையும் இந்தியாவின் இதரப் பகுதிகளுக்கு நெருக்கமாக்கியது. தேச ஒற்றுமைக்கான புதிய வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதாக பார்க்கப்பட்ட சூழலிலேயே, அரசியல் சந்தர்ப்பவாத எண்ணத்தோடு சில தீய சக்திகள், தேச ஒற்றுமையை சிதைக்கும் அபாயகரமான விளையாட்டை துவக்கியுள்ளனர்.
அஸ்ஸாமை உலுக்கிய இனக்கலவரங்களுக்கு பதிலடியாக மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், பூனா போன்ற பெரு நகரங்களில் உள்ள வட கிழக்கு மாநிலங்களை பிறப்பிடமாகக் கொண்ட மாணவர்களும் தொழிலாளர்களும் தாக்கப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டனர். சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்புணர்வு மிக்க செய்திகள் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டு, இந்நகரங்களில் வாழும் வட கிழக்கு மாநிலத்தவர் மனதில் அச்சம் விதைக்கப்பட்டது. அவர்களுக்கு தங்கள் பாதுகாப்பு பற்றிய பயம் ஏற்பட்டது. ஜனநாயக முற்போக்கு சக்திகள் உறுதியளித்தாலும் இந்த மாணவர்களும் தொழிலாளர்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கினார்கள். தேச ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படக் கூடிய விதத்தில் இந்தியாவின் சமூக நல்லுறவுகளே பாதிக்கப்படுவதுதான் இதன் விளைவாக இருந்தது.
இப்பிரச்சினையின் ஆணி வேர் என்பது அஸ்ஸாம் மாநிலத்தின் போடோ இன மக்களுக்கும் போடா இனம் அல்லாத முஸ்லீம்களுக்கும் இடையேயான இனக்கலவரங்கள்தான். இந்த இனக்கலவரம் எண்பதிற்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலிவாங்கி நான்கு லட்சத்து எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வீடிழிந்தவர்களாக்கி விட்டது. இரு இனங்களையும் சேர்ந்த சாதாரண ஏழை மக்கள்தான் பாதிப்புக்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளானவர்கள். கிராமம் கிராமமாக கொளுத்தப்பட்டு அங்கே வாழ்ந்தவர்கள் துரத்தப்பட்டது என்பது கற்பனை கூட செய்ய முடியாத காட்டுமிராண்டித்தனம். ஐயத்திற்கு இடமில்லாமல் நிச்சயமாக இது ஒரு இன அழித்தல் நடவடிக்கை. மிகவும் மோசமான அவலமான நிலையில் அவர்கள் 278 நிவாரண முகாம்களில் அவர்கள் தங்கியுள்ளனர்.
போடோலாந்து எல்லைப்புறப் பகுதி மாவட்டங்கள் (பி.டி.ஏ.டி) என்பது அஸ்ஸாமின் கோக்ரஜார், சிராங்க், பக்ஸா, உதல்குரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த பி.டி.ஏ.டி மாவட்டங்கள் போடோலாந்து எல்லைப்புற கவுன்ஸில் (பி.டி.சி) என்ற அமைப்பால் நிர்வகிக்கப் படுகின்றது. அஸ்ஸாமின் மிகப் பெரிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் போடோக்கள். சமூக, பொருளாதார அடிப்படையில் மிகவும் பின் தங்கியவர்கள். அரசின் அலட்சியத்திற்கும் பாரபட்சத்திற்கும் நெடுங்காலமாக பலியானவர்கள். பொருளாதாரப் பின்னடைவு, பிரிவினை வாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்தது. தனி போடோலாந்து வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த நிலைமையை சமாளிக்க 2003 ல் மத்திய அரசிற்கும் போடோ விடுதலைப் புலிகள் என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பிற்கும் இடையே போடோ ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தின்படி போடோ மாவட்டங்களுக்கு பிராந்திய சுயேட்சை வழங்கப்பட்டது. இருப்பினும் இப்போது பி.டி.ஏ.டி சுயேட்சை கவுன்ஸிலின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமைப்பு, அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியோடு கூட்டணையில் உள்ளது. ஆனால் அதனால் மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்றார் போல செயல்பட முடியாமல் தோல்வியடைந்து மக்களின் மிகப் பெரும் அதிருப்திக்கு உள்ளானது.
உண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, இன வெறி மூட்டப்பட்டது. தனி போடோலாந்து கோரிக்கை மீண்டும் முன்னிருத்தப்பட்டது. தற்போதைய போடோ பகுதிகளில் இனக் குழுக்களுக்கிடையேயான பதட்ட நிலை என்பது சில காலமாகவே இருந்து வந்தது. எப்போது வேண்டுமானாலும் பற்றியெரியக் கூடிய பதட்ட நிலை இருந்தது என்பது மத்தியரசோ அல்லது மாநில அரசோ அறியாதது அல்ல. ஆனாலும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்து சட்டத்தின் ஆட்சியை நிலவச் செய்வதில் தவறி விட்டது. இன மோதல் வெடித்து ஐந்து நாட்களுக்குப் பின்பே சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த ராணுவம் சென்றது என்பது வருத்தத்திற்குரிய விஷயம். நிலைமை சிக்கலாக மத்திய, மாநில அரசுகள் அனுமதித்துவிட்டது.
அஸ்ஸாம் நிகழ்வுகளை சில தீய சக்திகள் தங்களுக்கான மிகப் பெரிய அரசியல் வாய்ப்பாகப் பார்த்தன. இந்த இன மோதலுக்கு மதச்சாயம் பூசப்பட்டது. பங்களாதேஷ் ஊடுருவாளர்கள் இந்தியர்கள் மீது நடத்திய ஆக்கிரமிப்புத் தாக்குதல் இந்த கலவரம் என்று இந்த தேசத்தின் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிற ஒரு முக்கிய அரசியல்வாதி அறிவிக்கிறார். எந்தப் பகுதியில் ஊடுருவல் நிகழ்ந்தாலும் அங்கே மக்கட்தொகை பெருகும் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் போடோ மாவட்டங்களிலோ, ஏன் ஒட்டு மொத்த அஸ்ஸாம் மாநிலத்திலே கூட இவ்வாறு மக்கட்தொகை பெருகவில்லை என்பதுதான் உண்மை..
2011 மக்கட்தொகை கண்க்கெடுப்பு அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் அஸ்ஸாம் மாநிலத்தில் மக்கட்தொகை உயர்வான 16.93 % என்பது தேசிய அளவு உயர்வான 17.64 % ஐ விட குறைவானது. கோக்ரஜார் மாவட்டத்தில் உயர்வு என்பது 5.19 % தான். மற்ற போடோ மாவட்டங்களான சிராங், பக்ஸா, மற்றும் உதல்கிரியில் மக்கள் தொகை உயர்வு என்பது முறையே 11.26 %, 11.17%, மற்றும் 9.76 % மட்டுமே. இது அஸ்ஸாம் மாநில சராசரியை விடவும் தேசிய சராசரியையும் விட குறைவு. எனவே அஸ்ஸாமிலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் மத வெறியை ஊட்டி அரசியல் ஆதாயம் அடையவே, சட்ட விரோத ஊடுறுவல் என்ற பிரச்சினை எழுப்பப் படுகின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதனால் ஊடுருவலே கிடையாது என்று நாம் சொல்லவில்லை. இந்தியாவின் பங்களாதேஷ் எல்லை என்பது பலவீனமான ஒன்று. ஊடுறுவல் என்பது நிச்சயமாய் நிகழ்கிறது. அதனை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எல்லை மூடப்பட வேண்டும். ஆனால் தற்போதைய இனக் கலவரத்தை சட்டவிரோத பங்களாதேஷ் ஊடுருவாளர்கள் இந்தியர்கள் மீது நடத்திய ஆக்கிரமிப்புத் தாக்குதல் என்று கூறுவது முற்றிலுமாக உண்மைக்கு அப்பாற்பட்டது.
இனக்கலவரங்களும் மோதல்களும் போடோ மாவட்டங்களுக்கு 1996 க்கும் 1998 க்கும் இடையே போடோக்களுக்கும் ஆதிவாசிகளுக்கும் இடையேயான இனக் கலவரங்கள் 198 உயிர்களைக் குடித்து இரண்டு லட்சம் பேரை அவர்களது வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தியது. புலம் பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதிவாசிகள். 32,000 க்கும் மேற்பட்ட ஆதிவாசிக் குடும்பங்கள் இன்னமும் நிவாரண முகாம்களில்தான் வாழ்கின்றன. இந்த ஆதிவாசிகளை ஊடுருவாளர்கள் என்று எவராலும் கூற முடியுமா?
சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த அடிப்படைவாதிகளும் மதத்தின் அடிப்படையில் தங்களை வலிமைப் படுத்திக்க்கொள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். போடோலாந்து எல்லைப் பிரதேச கவுன்ஸிலை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை அபாயகரமானது. மாறாக ஊழல் களையப் படவேண்டும். கவுன்ஸில் மேலும் ஜனநாயக பூர்வமாக மாற்றப்பட்டு போடோக்கள், போடோக்கள் அல்லாதவர்கள் ஆகிய இரு பகுதி மக்களுடைய முன்னேற்றத்திற்காக செயல்பட வேண்டும்.
அஸ்ஸாமின் அமைதியை நேசிக்கிற, சரியான சிந்தனை கொண்ட மக்கள் ஒன்றிணைந்து அங்கே நடைபெறும் நிகழ்வுகளுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது மகிழ்ச்சியான ஒன்று. மேற்கு அஸ்ஸாமில் நடைபெற்ற துயர சம்பவங்களும் இன மோதல்களும் மனித குலத்திற்கும் ஜனநாயக மாண்புகளுக்கும் பெருத்த அடி என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். பரஸ்பர நம்பிக்கையின்மை, அச்ச உணர்வு, இனக்குழுக்களிடையேயான பயங்கரவாதம் என இன்று நிலவும் சூழலை மத அடிப்படைவாதிகளும் பிரிவினைவாத சக்திகளும் முழுமையாக பயன்படுத்திக் கொள்வது, அஸ்ஸாமின் வாழ்நிலைக்கே மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சினையை கையாண்ட முறையினால் மிகக் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன. அமைதியை உத்தரவாதப் படுத்தவும், நிவாரணப் பணிகளை வேகமாக மேற்கொள்ளவும் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அனைத்து சட்ட விரோத ஆயுதங்களையும் பறிமுதல் செய்ய தேவைப்படும் அரசியல் உறுதியையும் அரசாங்கம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வட கிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ஒன்றிணைந்த பகுதி. இதர பகுதிகளில் உள்ளவர்களைப் போலவே வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியா சொந்தமானதுதான். அவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் காண்பிக்கக் கூடாது. அவர்கள் தங்கள் பணியிடங்களுக்கும் கல்விச்சாலைகளுக்கும் திரும்புவதை ஊக்குவிக்க வேண்டும். வட கிழக்கு மாநில மக்களை இந்தியாவிற்கு எதிராக அணி திரட்ட பிரிவினைவாத சக்திகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த முயற்சி முற்றிலுமாக முறியடிக்கப்பட வேண்டும்.
வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடத்தில் நம்பிக்கையை தோற்றுவிப்பதும், அவர்களது பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதும் உழைக்கும் மக்களுடைய, முற்போக்கு சக்திகளின் கடமை. மத வெறியூட்டி, தேச ஒற்றுமையை சீர் குலைக்கிற சுய நல சக்திகளின், சந்தர்ப்பவாத அரசியல் சக்திகளின் அபாயகர விளையாட்டு தோற்கடிக்கப்பட வேண்டும். உள்நாட்டில் உருவாகியுள்ள அதிருப்தியை பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையை எல்லைக்கு அப்பால் உள்ள சக்திகள் செய்கின்றனர் என்பதில் சிறிதளவு உண்மையும் உண்டு.
நமது தேச ஒற்றுமை என்பது மகத்தானது. அதனோடு தங்களது அரசியல் ஆதாயங்களுக்காக உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள சுய நல சக்திகள் விளையாடுவது என்பதை அனுமதிக்க முடியாது. இந்தச் செய்தியை உழைக்கும் வர்க்கம், சுய நல சக்திகளுக்கு ஆணித்தரமாக உரத்த குரலில் கூறிட வேண்டும்.
Tuesday, September 11, 2012
Monday, September 10, 2012
சிங்களர் மீதான தாக்குதல் - இலக்கு மாறிய கோபம்
தமிழக தேவாலயங்களுக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்கள் தாக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதே போல விளையாட்டு அணி ஒன்றும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை அரசின் மீது தமிழகத்தில் உள்ளவர்களுக்கு கோபம் வருவது என்பது இயல்பானது. நியாயமானது. இலங்கைத் தமிழர்கள் இன்றும் இரண்டாம்தர குடிமக்களாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருவது, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் இக்கோபத்திற்கான காரணம்.
இலங்கை ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கும் சாதாரண மக்கள் பயணம் வருவதற்கும் வேறுபாடு உள்ளது. பயிற்சி அளிப்பதை நிறுத்த முடியாது என்று ஆணவமாக பேசிய மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் மீது யாரும் பாயவில்லை. யாரும் தாக்கவில்லை.
ஆனால் அரசின் மீதுள்ள கோபத்தை சாதாரண மக்கள் மீது வெளிப்படுத்துவது எப்படி சரியாக இருக்கும்? இத்தாக்குதல் மூலம் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு வந்திடுமா? இல்லை, மாறாக புதிய பிரச்சினைகளைத்தான் ஏற்படுத்தும். சிக்கல்களை அதிகரிக்கும்.
பணம் கொழிக்கும் ஐ.பி.எல் விளையாட்டில் ஏதோ தமிழகத்தின் ரஞ்சிக் கோப்பை அணி போல கொண்டாடப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாடியபோது இந்த கோபம் எங்கே போனது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே அருகாமையில் உள்ள திருப்பதிக்கு வந்த போது எங்கே போயிருந்தார்கள். பண பலமோ, அரசியல் செல்வாக்கோ இல்லாத சாமானிய இலங்கை மக்களிடம்தான் இவர்களின் கோபத்தை வெளிப்படுத்த முடியும் போல!
இந்திரா காந்தியின் படுகொலைக்கு ஒட்டு மொத்த சீக்கிய இனத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது போன்ற செயல் இது. இது போன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வு என்பது சாதாரண சிங்கள் மக்களைத் தாக்குவதால் கண்டிப்பாக வரப்போவதில்லை. இந்த புரிதலோடு இந்த அமைப்புக்கள் தங்களது எதிர்கால செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளட்டும்
Sunday, September 9, 2012
பல் இல்லாவிட்டாலும் பக்கோடா சாப்பிடலாம் - நோபல் பரிசுக்கான கண்டுபிடிப்பு
காரசாரமான ஒரு பதிவு. இல்லை ஏதேனும் ஒரு பிரச்சினை
பற்றிய பதிவு என்று நினைத்தால் தயவு செய்து வேறு
உருப்படியான வேலை இருந்தால் அதை செய்யுங்கள்.
ஏனென்றால் மிகவும் மொக்கை என்று தெரிந்தே
வேண்டுமென்றே எழுதும் பதிவு. இதற்குப் பிறகும் நீங்கள்
முழுமையாக படித்து விட்டு என்னை திட்டினால் நான்
நிச்சயம் அதற்கு பொறுப்பில்லை.
வெகு நாட்களாக என்னை அரித்துக் கொண்டிருந்த ஒரு
பின்னூட்டம் ஒன்று உண்டு.
துவக்க காலத்தில் சல்மான் கான் பங்களாவைப் பற்றி
ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு ஒரு நண்பர்
" பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். உங்களுக்கு
என்ன? " என்று எழுதியிருந்தார்.
நான் கூட பல் இல்லாதவனால் பக்கோடா சாப்பிட முடியாது
என்றுதான் நினைத்திருந்தேன், நேற்று வரை.
நேற்று ஒரு ஹோட்டலில் நானும் இன்னும் ஒருவரும்
பக்கோடா சாப்பிட்ட போது, பல் பிரச்சினையுள்ள ஒருவர்
இட்லி சாம்பார் சாப்பிட்டார். அவரைக் கிண்டல் செய்த
போது அவருக்கு கோபம் வந்து விட்டது.
உடனே பக்கோடாவை எடுத்தார். சாம்பார் இட்லியில்
மூழ்க வைத்தார், சாப்பிட்டார்.
பல் உள்ளவன் மட்டுமே பக்கோடா சாப்பிடலாம்
என்ற தத்துவம் அங்கே தகர்ந்து கொண்டிருந்தது.
தேவைதான் அறிவியலின் தாயகம் என்பார்கள்.
சுய கௌரவமும் கண்டுபிடிப்புக்களின் தாயகம் என்பதை
அந்த மூத்தவர் நிரூபித்து விட்டார்.
இந்த அறிவியல் கண்டுபிடிப்பு பல் இல்லாதவர்களுக்கு
ஒரு வரப் பிரசாதம்.
நோபல் பரிசு எனக்கு வேண்டாம். அவருக்கே கொடுத்து
விடுங்கள்.
Subscribe to:
Posts (Atom)
































