09.07.2025 அன்று நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தம் என் வாழ்வில் மிக முக்கியமான வேலை நிறுத்தமாக அமைந்தது.
முதலில் 20.05.2025 என்றுதான் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான தயாரிப்பு பணிகளும் துவங்கியிருந்தது.
இந்த நிலையில்தான் 02.05.2025 அன்று காலையில் அலுவலகம் செய்கையில் ஒரு வேன் என் ஸ்கூட்டரின் பின் பக்கத்தில் மோத சாலையில் சறுக்கிக் கொண்டே சென்றேன். பேண்ட் இரு இடங்களில் கிழிந்து தொங்கியது. இடுப்பிலும் கழுத்திலும் கடுமையான வலி. முழங்காலில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. எழுந்து நிற்கவே முடியவில்லை. எனக்கு பின்னால் வந்து கொண்டிருந்த எங்கள் கோட்ட அலுவலகக்கிளைத் தலைவர் தோழர் ஜெயகாந்தம் தகவல் சொல்ல மற்ற தோழர்கள் வந்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
இடுப்பிலும் கழுத்தெலும்பிலும் ப்ளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி அதன் படியே 03.05.2025 அன்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
மறுநாள் காலையில் முதலில் வந்த ஆர்தோ மறுத்துவரிடம் 20 தேதி வேலை நிறுத்தம் உள்ளது. அன்று நான் அலுவலகம் சென்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும். அதற்கேற்றார்போல என் சிகிச்சையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல அவர் புன்னகைத்து விட்டு போய் விட்டார்.
உடலின் இரண்டு பக்கங்களிலும் அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் குறைந்த பட்சம் ஆறு வாரங்கள் படுக்கையில்தான் இருக்க வேண்டும், அது வரை நிற்பதோ, உட்கார்வதோ வாய்ப்பில்லை என்று சொன்னபோதுதான் முந்தைய டாக்டரின் புன்னகைக்கான அர்த்தம் புரிந்தது.
பணிக்காலத்தின் இறுதி வேலை நிறுத்தத்தில் நேரடியாக பங்கேற்க முடியாது என்பது மிகப் பெரிய ரணமாக இருந்தது.
இந்த சூழலில்தான் வந்தது அந்த நற்செய்தி.
எல்லையில் உருவான பதற்றத்தின் காரணமாக வேலை நிறுத்தத்தை 09.07.2025 அன்று ஒத்தி வைத்த நற்செய்தி.
வாக்கர் துணை கொண்டு மெதுவாக நடக்கலாம் என்று ஜூன் மத்தியில் மருத்துவர் அனுமதி கொடுக்க அலுவலகம் செல்ல தொடங்கினேன். அதனால் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிளாட்டினம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ள முடிந்தது. பிளாட்டினம் ஆண்டு இலச்சினையை வெளியிடும் நல் வாய்ப்பையும் எங்கள் கோட்டத் தலைவர்கள் அளித்தார்கள்.
ஒரு வழியாக வந்தது 09.07.2025. அன்றைக்கு ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தோழர்களின் எண்ணிக்கை சிறப்பாகவே இருந்தது. பணிக்காலத்தின் இறுதி வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதன் மூலமாக ஒரு விசுவாசமான உறுப்பினராக உழைக்கும் வர்க்கக் கடமையை நிறைவேற்றிய நிறைவு கிடைத்தது. பறி போயிருக்க வேண்டிய வாய்ப்பு மீண்டும் கிடைத்ததில் நெகிழ்ச்சியும் கிடைத்தது. பணிக்காலத்தின் இறுதி வேலை நிறுத்தத்தில் நான் பங்கேற்ற அதே நாளில் மே மாத துவக்கத்தில் பணியில் சேர்ந்து தன் பணிக்காலத்தின் முதல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற இளைய தோழர் டி.அஜித் குமாரை( மறைந்த எங்கள் தோழர் டி.தேவராஜ் அவர்களின் மகன்) ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பார்க்கையில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அடுத்த தலைமுறை தயாராகிக் கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சி.
பிகு: மேலே உள்ள படங்கள் எங்கள் வேலூர் கோட்டத்தின் பல்வேறு கிளைகளில் நடந்த வேலை நிறுத்தக் கூட்டங்களின் போது எடுக்கப்பட்டது. உள்ளூர் தோழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் உணர்வை வெளிப்படுத்த அர்க்கோணம், ஆரணி, குடியாத்தம், ராணிப்பேட்டை கிளைத் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் தயங்கவில்லை. ஆறாவது புகைப்படம் எங்கள் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பொறுப்பாளர்கள். ஏழாவது புகைப்படம் எங்கள் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.பழனிராஜ். எட்டாவது புகைப்படம் பணிக்காலத்தில் இறுதி வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற நான்.
பிகு: இன்னமும் "வாக்கர்" துணையுடன்தான் நடை. இயல்பு வாழ்க்கை திரும்பும் நாள் இன்னும் கண்ணில் தென் படவில்லை.
உஙகள் அர்ப்பணிப்பு, நீங்கள் சங்கத்தை வழிநடத்தி எங்கள்.. குறிப்பாக பெண் ஊழியர்களை... சங்க பொறுப்பில் ஈடுபடுத்தி.. துணையாக நின்ற பாங்கு மறக்க முடியாது தோழர்🙏கிட்டதட்ட நானும் ... அதே நிலைமையில்..I joined the strike after discharged from hospital for fixing two stents in heart...15 days after...
ReplyDeleteஉங்கள் உணர்வு போற்றுதலுக்கு உரியது
Deleteஇந்த காலகட்டத்தில் உங்கள் மகன் திருமணத்திலும் தோழர் பழனிராஜ் மகன் திருமணத்திலும் கலந்த் கொள்ள முடியாமல் போய் விட்டது. உடல் நலம் தேறி எப்போதும் போல சிறப்பாக, உற்சாகமாக ப்ணியாற்ற வாழ்த்துக்கள் தோழர் சிவப்ரியா
Deleteநன்றி நன்றி.. தோழர் 🙏
Deleteவெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவீர்கள் தோழர் அதில் எள்ளளவும் சந்தேகமில்லை...
ReplyDeleteஇளைஞர்களுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் kodukkum உங்களின் அர்ப்பணிப்பு மிக்க செயல்.
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteநம் சங்கத்தை கால் நூற்றாண்டுக்கும் மேலாக அற்புதமான முறையில் அர்ப்பணிப்போடும் வழநடத்திய தாங்கள் வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவீர்கள்.கவலை வேண்டாம்.
ReplyDeleteஅன்பு தோழருக்கு, தங்கள் எண்ணத்தின் வலிமையே வேலைநிறுத்தத்தில் தங்களை பங்கேற்க செய்துள்ளது, வாழ்த்துக்கள் தோழர்
ReplyDeleteD Ajith kumar
ReplyDeleteI very proud to be a member of aiiea and 09/07/25 it's a very special day for me as sir com.raman said it's my 1st strike were 22 crore people participated all over India and I am very much happy to be a part of the strike for raising voice against the anti labour laws, neo liberal policies, privitizing government sectors etc.. thank you