எனது 500 வது பதிவு.
ஊக்கமளிக்கும் அனைவருக்கும் நன்றி
செல்வந்தர்களிடம்
கனிவாகவும், தொழிலாளிகளிடம் கொடூரமாகவும்
அமானுல்லாகான்,
தலைவர்,
அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.
2012-2013
ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,
தான் கனிவாக இருப்பதற்காக கொடூரமாக உள்ளதாக குறிப்பிட்டார். அவர் யாரிடம் கனிவாக
உள்ளார், யாரிடம் கொடூரத்தை வெளிப்படுத்தினார் என்பதை கண்டறிய வெகு நேரம் தேவைப்படவில்லை.
பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடிக்கும்போதே அவர் தனது வர்க்கக் கடமையை நிறைவேற்றி
விட்டார் என்பது மிகவும் தெளிவாகி விட்டது. அவரது பட்ஜெட் முன்மொழிவுகள்
தொழிலாளர்களிடம் கொடூரமாகவும் செல்வந்தர்களிடமும் நிதி மூலதனத்திடமும் கனிவாக
இருந்தன.
மக்களின்
வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாகவும் கவலையளிக்கும்விதத்தில் இருந்த ஒரு யதார்த்தமான
சூழலில்தான் நிதியமைச்சர் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். நாடாளுமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை இந்த யதார்த்த நிலையை
சுட்டிக்காட்டியிருந்தது. மனிதவள மேம்பாட்டில் இந்தியா பின் தங்கியுள்ளது என்பதை
இவ்வறிக்கை ஒப்புக் கொண்டுள்ளது. மனித வள மேம்பாட்டு குறீயீடுகளின் அடிப்படையில்
பார்த்தால், அதிலும் கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியா இன்னும் வெகு தூரம்
செல்லவேண்டியுள்ளது
கடந்த
சில ஆண்டுகளாக அதிக வளர்ச்சி இருந்த போதிலும் மனித வள மேம்பாட்டு குறீயீடுகளில்
இந்தியா மிகவும் பின் தங்கியே உள்ளது. சில நாட்கள் முன்பு வெளியான மக்கட்தொகை
கணக்கெடுப்பு பற்றிய விபரங்கள் இந்த யதார்த்தங்களை உறுதிப்படுத்துகின்றன. இந்திய
மக்களில் பெரும்பகுதியினருக்கு மிகவும் அடிப்படைத் தேவைகளான பாதுகாக்கப்பட்ட
குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இன்னமும் கூட கிடைக்கவில்லை என்பதை
சுட்டிக்காட்டுகிறது.
மக்கட்தொகை
கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள வீடுகளில் கிட்டத்தட்ட 54 % வீடுகளில்
கழிவறைகள் கிடையாது, மனிதர்கள் கைகளின் மூலம் கழிவுகளை அகற்றுவது என்பது
ஒழிக்கப்பட்டு விட்டதாக பல ஆண்டுகள் முன்பே அறிவிக்கப்பட்டாலும் அந்த அவலம்
இன்னும் தொடர்கின்றது. வறுமையைக் கட்டுப்படுத்தி, மக்கள் கௌரவத்தோடு வாழ உரிய
நடவடிக்கைகளை வேகமாக எடுப்பது என்ற ஐக்கிய நாடுகள் சபையின் புத்தாண்டு வளர்ச்சி
இலக்கினை அடைவோம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதிலும் இந்தியா பின் தங்கியுள்ளது
என்பதை தெளிவாக இவையெல்லாம் எடுத்துக் காட்டுகின்றது.
ஏழ்மையை
ஒழிப்பதற்காக இந்தியா கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் ஏழ்மை
நிலையில்தான் உள்ளது. பட்டினியில் வாடும் அதிகமான மக்கள் உள்ள நாடு என்ற உலக
சாதனையை இந்தியா படைத்துள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிக்கும்
மேற்பட்டவர்கள் சத்துக்குறைவாக உள்ளது ஒரு தேசிய அவமானம் என்று பிரதமரே ஒப்புதல்
வாக்குமூலம் அளித்துள்ளார்.
முகத்தில்
அறையும் இந்த உண்மைகள், நவீன தாராளமயமாக்கல் சாமானிய மக்களின் வாழ்வில் துயரத்தை
ஏற்படுத்தியுள்ளது என்பதை நிரூபிக்கிறது. மிகவும் பீற்றிக் கொள்ளப்படுகின்ற
வளர்ச்சி சமமாக பகிர்ந்து கொள்ளப் படாததால் இந்தியாவை ஒரு ஏற்றத்தாழ்வு மிக்க
சமுதாயமாக்கியுள்ளது.
நவீன
தாராளமயமாக்கல் கொள்கைகளை மறு ஆய்வு செய்து, உழைக்கும் மக்கள் மீதான அழுத்தத்தை
போக்கி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தக் கூடிய விதத்திலான கொள்கை முடிவுகளை
நிதியமைச்சர் மேற்கொள்வார் என உழைக்கும் மக்கள் நம்பினார்கள். ஆனால் பட்ஜெட் 2012-2013 சாமானிய மக்களின் கவலைகளைப் போக்குவதற்குப்
பதிலாக நவீன தாராளமயமாக்கல் மீதான தனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச
பொருளாதார நெருக்கடியிலிருந்து எந்த ஒரு பாடத்தையும் கற்காத நிதியமைச்சர்,
நிதித்துறை சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வேன் என வலியுறுத்தியுள்ளார். இன்சூரன்ஸ்
சட்ட திருத்த மசோதா, வங்கிகள் சட்ட திருத்த மசோதா, பென்ஷன் வளர்ச்சி மற்றும்
ஒழுங்காற்று ஆணைய மசோதா ஆகியவற்றில் அரசுத் தரப்பு திருத்தங்களை நடப்பு நாடாளுமன்ற
கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்போவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இந்தியப்
பொருளாதாரத்திற்கு உருவாக உள்ள அளவிட முடியாத சேதங்களைக் கொஞ்சமும்
பொருட்படுத்தாமல் இம்மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
என்பதை இது காண்பிக்கிறது.
விமானப்
போக்குவரத்துத்துறையில் அன்னிய மூலதனத்தை அனுமதிப்பது பற்றி அரசு தீவிரமாக
ஆராய்ந்து வருவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய
மூலதனத்தை அனுமதிப்பதிலும் அரசு மிகவும் முனைப்பாக உள்ளது. அன்னிய மூலதனத்தை
வரவேற்கவும் அதனை மகிழ்விக்கவும் மத்தியரசு எந்த அளவிற்கும் செல்ல தயாராகவுள்ளது.
இந்திய நாட்டின் வளர்ச்சியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அன்னிய மூலதனத்திடம்
பணயக் கைதியாக ஒப்படைத்து விட்டது.
பொதுச்சொத்துக்களை
தனியார்மயமாக்குவது என்பது அரசின் ஒட்டு மொத்த கொள்கைகளில் மிக முக்கியமான
அங்கமாகி விட்டது. பொதுத்துறை பங்குகளை விற்பது மூலம் முப்பதாயிரம் கோடி ரூபாய்களை
திரட்டப் போவதாக நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார். பொது சேவைகளும் கொஞ்சம்
கொஞ்சமாக தனியார்வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அரசு-தனியார் கூட்டணியில்
கல்வித்துறையை கொண்டு வரப்போவதாக நிதியமைச்சர் கூறி உள்ளார். இது அரசு தனது
பொறுப்பை கை கழுவுவது ஆகும். ஏழை மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகும்.
கட்டமைப்பு
வளர்ச்சிக்கும் ஐம்பது லட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும் என்று கணித்துள்ள
நிதியமைச்சர், இந்த நிதித்தேவையில் ஐம்பது சதவிகிதம் தனியார் துறை வழங்கும் என்று
எதிர்பார்க்கிறார். தங்களுக்கு மிகுந்த ஆதாயம்
கிடைக்கும் என்ற அர்சின் உத்தரவாதம்
இல்லாமல் கட்டமைப்பு வளர்ச்சிக்கு தனியார்துறை பங்களிக்கும் என்று எதிர்பார்ப்பது
மூடத்தனமானது.
உள்நாட்டு
சேமிப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது கவலையளிக்கும் ஒன்றாகும். 2006 – 2007ல்
34.06
% ஆக இருந்த உள்நாட்டு சேமிப்பு
2010-2011 ல் 32.3%
ஆக குறைந்து விட்டது. அதிலும் குடும்ப சேமிப்பு 2009-2010
ல் 25.4% ஆக இருந்தது 2010-2011
ல் 22.8% ஆக குறைந்து விட்டது. நிதித்துறை சேமிப்பிலும்
சரிவு உள்ளது என்பது முந்தைய ஆண்டில் 12.9%
ஆக இருந்தது தற்போது 10% ஆக குறைந்துள்ளது
என்பதிலிருந்து அறியலாம். இது எப்படி பிரதிபலிக்கிறது என்பதை நடப்பாண்டு ஆயுள்
காப்பீட்டு வணிகத்தில் நிலவும் எதிர் மறை வளர்ச்சியிலிருந்து உணரலாம்.
இந்த
நிலைமையை சரி செய்வதற்குப் பதிலாக சேவை வரி உயர்வின் மூலமாக பட்ஜெட் ஆயுள்
காப்பீட்டை மேலும் விலை உயர்த்தியுள்ளது. வரி விலக்கு பெறுவதற்கான ஆயுள்
காப்பீட்டு பாலிசியின் குறைந்த பட்ச காப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளது.
அதே போல வருமான வரிச்சட்டம், பிரிவு 80 C மற்றும் 10 (10 D )
படி வருமான வரி விலக்கு பெறுவதற்கான வரம்புகளை முந்தைய காப்பீட்டுத்தொகையிலிருந்து
பிரிமியத் தொகையாக ஐந்திலிருந்து பத்து மடங்காக உயர்த்தியுள்ளது. நீண்ட கால
ஒப்பந்தங்களையும் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசிகளில் கூடுதல் காப்பீட்டு தொகையின் அளவை
அதிகரிப்பதையும் ஊக்குவிக்கவே இவ்வாறு செய்யப் பட்டுள்ளதாக நியாயம்
கற்பிக்கப்படுகின்றது. ஆனால் ஆயுள் காப்பீட்டுத்துறை கடினமான காலத்தில் உள்ள
சூழலில், இந்த கொள்கை முடிவுகள் எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கும் என்பதை நாம்
பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.
மூலதனப்
பெருக்கத்திற்கு உள்நாட்டு சேமிப்பு முக்கிய பங்காற்றுகின்றது. அது அன்னிய
மூதலீடுகளை விட எவ்வளவோ மேன்மையானது. சேமிப்பினை ஊக்குவிக்க எந்த முன்மொழிவும்
பட்ஜெட்டில் அளிக்காததன் மூலம் சேமிப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை
கட்டுப்படுத்த நிதியமைச்சர் தவறிவிட்டார்.
பங்குச்சந்தை
மீது கொண்டுள்ள அபரித மோகம், பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீட்டிற்கு
அளிக்கப்பட்டுள்ள வரி விலக்கிலிருந்து தெரிய வருகின்றது. மேலும் பங்குச்சந்தையில்
செய்யப்படும் பறிமாற்றங்களுக்கான வரியை வேறு குறைத்துள்ளனர். நவீன தாராளமயத்தில்
பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாக பங்குச்சந்தை குறியீடுகளே பார்க்கப்படுவதால்
விளைகின்ற மோகம் இது. மத்தியரசு அமுலாக்கத் துடிக்கிற, மிகவும் உறுதியாக உள்ள
நிதித்துறை சீர்திருத்தம் உள்நாட்டு சேமிப்பையும் அன்னிய மூலதனத்தின்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதையே ஊக்குவிக்கும்.
இந்திய
விவசாயம் மோசமான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 60 % மக்களுக்கு
வாழ்வளிப்பது விவசாயம்தான். தேசத்தின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 1990-91
ல் 29.6
% ஆக இருந்த
விவசாயத்தின் பங்கு 2011-12 ல் வெறும்
13.9
% ஆக குறைந்து விட்டது.
விவசாயத்தின் கடினமான நிலையையும் விவசாயிகளின் தற்கொலையையும் இதுவே
விளக்குகின்றது. அரசு மற்றும் பொது முதலீடுகள் இல்லாததும், அதனை நிறுவனமயமாக்க
முயற்சிப்பதுமே விவசாயத்துறையின் முக்கியமான பிரச்சினைகள். அறைகுறை மனதோடு
பட்ஜெட்டில் சொல்லப்பட்டவையெல்லாம் துயரத்தைப் போக்கவோ, விவசாயத்துறையில்
வளர்ச்சியை ஏற்படுத்தவோ உதவாது.
அதே
போல ஒட்டு மொத்த வளர்ச்சியில் இந்திய
தொழில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 1990-91
ல் 27.7% என இருந்தது இப்போதும் ஒரு தேக்க நிலையில் 27% என்றே
உள்ளது. தொழில் உற்பத்தித்துறையை மறு சீரமைக்க பட்ஜெட் தவறி விட்டது. எனவே இந்த
பட்ஜெட்டில் விவசாயத்துறையையோ அல்லது
தொழில் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் திசைவழியே தென்படவில்லை. எனவே வேலை
வாய்ப்புக்களை உருவாக்கும் வழியும் அடைபட்டு விட்டது.
ஐக்கிய
நாடுகள் சபையின் புத்தாயிரத்தாண்டு இலக்குகளை அடைய சமூக நலத்துறையில் அரசு புதிய
கொள்கைகளை வகுத்தாக வேண்டும் என்று பரவலான எதிர்பார்ப்பு உள்ளது. சமூக நலத்துறையில்
ஒதுக்கீட்டில் சற்றே கூடுதலான ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் இந்த இலக்கை
அடைவதற்கான வழி எதுவும் காணப்படவில்லை. கல்விக்கான அரசு ஒதுக்கீடு ஒட்டு மொத்த
உற்பத்தியில் 6 % ஆக
உயர்த்தப்படும் என்று நீண்ட காலம் முன்பே முடிவு செய்யப்பட்ட பின்பும் இன்னமும் 3 % லியே சுழன்று
கொண்டிருக்கிறது. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கான ஒதுக்கீட்டில்
மிகச் சிறிய முன்னேற்றம் இருந்தபோதும், நிலைமையின் தீவிரத்தைப் பார்க்கிற போது இது
போதுமானதே அல்ல. இன்று இந்தியாவின் மருத்துவத்துறை பெருமளவு தனியார்வசம் சென்று
விட்ட சூழலில் ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை என்பது அடைய முடியாத கனவாகி விட்டது.
இப்படிப்பட்ட சூழலில் மத்தியரசு பொதுநல சேவைகளை மேலும் மேலும் தனியார் பக்கமே
தள்ளி விடுகின்றது.
மானியங்கள்
தொடர்பாக அதிகமான கவலை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த உற்பத்தியில்
மானியத்தின் அளவை 2 % என குறைப்பது என்ற
நிதியமைச்சரின் முடிவு யதார்த்தத்திற்கு பொருந்தாதது, ஏழை மக்களை வெகுவாக
பாதிக்கும். இதிலே இன்னும் மூன்றாண்டுகளின் மானிய அளவை 1.75 %
என்று குறைக்கப்போவதாக வேறு சொல்லியுள்ளார். மானிய அளவை 1.5 %
என குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வேறு எழுந்துள்ளது. நிதிப் பற்றாக்குறையை குறிப்பிட்ட
வரம்பிற்குள் சமாளிக்க மானிய அளவை
கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நியாயம் கற்பிக்கப்படுகின்றது.
2011-12
நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டு மொத்த உற்பத்தியில் 5.9 %
ஆக 5,21,980
கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.இதே காலக்கட்டத்தில் அரசுக்கு ஏற்பட்டுள்ள வரி
இழப்பு 5,29,432
கோடி ரூபாய், அதிலே பெரும் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் 50,000
கோடி ரூபாய் என்கிற போது அது அரசின் போலித்தனத்தை
அம்பலப்படுத்துகின்றது. ஏழைகளுக்கு மானியம் அளிப்பது கெட்டது,
பணக்காரர்களுக்கு அளிக்கும் சலுகைகள் தேசத்தின் பொருளாதாரத்திற்கு நல்லது என்ற
அபத்தமான வாதத்தை தோலுரிக்கிறது. 2012-13 ம்
ஆண்டில் நிதிப் பற்றாக்குறையினை 5.1 % க்குள்
கட்டுப்படுத்துவது என்ற இலக்கு எட்டுவதற்கு சாத்தியமே இல்லாதது.
மறைமுக
வரிகள் மூலம் கடுமையான தாக்குதல் நடத்தி மக்கள் மீது கூடுதல் சுமையை நிதியமைச்சர்
சுமத்தியுள்ளார். 46,000 கோடி
ரூபாய் அளவிற்கு மறைமுக வரிகளை உயர்த்தியுள்ளதன் மூலம் வாழ்க்கைத்தரம் மேலும்
பாதிக்கப்படும். கடந்த பல வருடங்களாகவே அதிகமான பணவீக்கத்தினால் உழைக்கும் மக்கள்
அவதிப்பட்டு வருகின்றனர். இந்த வரி விதிப்பு பண வீக்கத்தை மேலும் அதிகரிக்கும்.
எண்ணெய் மீதான மானிய வெட்டு பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்களின்
விலைகளை விரைவிலேயே இன்னும் கடுமையாக உயர்த்தப் போகின்றது. பணவீக்கம் மேலும்
மேலும் அதிகரித்து சாமானிய மக்களின் தலையில் பாறாங்கல்லாய் விழப்போகின்றது.
பட்ஜெட்டிற்கு
சற்று முன்னதாக, வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 9.5% லிருந்து 8.25%
ஆக குறைத்துள்ளது மத்தியரசு. நான்கு கோடி தொழிலாளர்களின் அரிய சேமிப்பு இதனால்
மோசமாக பாதிக்கப்படும். பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் சலுகைகளை வாரி
வழங்குகின்ற மத்தியரசிற்கு தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, வட்டி விகிதத்தை
அதே அளவில் நிலை நிறுத்த சொற்ப தொகையை ஒதுக்க மட்டும் மனமில்லை.
மொத்ததில்
இந்த பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது. வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் தோற்றுப்
போயுள்ளது. விவசாய நெருக்கடியை தீர்க்க நடவடிக்கைகள் தேவைப்படுகின்றது. சமூக
நலத்துறை சந்திக்கும் சவால்களுக்கேற்ப நிதி ஒதுக்கப்படவில்லை. பட்ஜெட் விலைவாசியை
மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. சேமிப்பை அதிகரிக்க, உற்சாகப் படுத்தும்
எந்த நடவடிக்கையும் இல்லை. வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் நுகர்வுகளை
ஊக்கப்படுத்தும் நடவடிக்கையும் இல்லை. 2012-13
ம் ஆண்டின் வளர்ச்சி இலக்காக பட்ஜெட் திட்டமிட்டுள்ள 7.6 %
ஐ அடைவது என்பது ஐயமே.
இந்த
பட்ஜெட்டின் கொடூரத்தை உழைக்கும் மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அரசின்
பொருளாதார திசை வழியை அனுமதிக்க முடியாது, மாற்றிட வேண்டும். அரசியல் நிலைகளுக்கு
அப்பாற்பட்டு தொழிற்சங்கங்கள் நாடெங்கும்
மேற்கொண்ட, மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற
பிப்ரவரி 28 வேலை நிறுத்தத்தின் மாபெரும் வெற்றி,
மத்தியரசு தனது நவீன தாராளமயக் கொள்கைகளிலிருந்து பின் வாங்க வேண்டும் என்று
மேலும் மகத்தான போராட்டங்கள் நடத்துவதற்கான தளத்தை உருவாக்கியுள்ளது. அதே
உற்சாகத்துடன் போராட்டங்களை தொடர்வோம்.
“இன்சூரன்ஸ்
வொர்க்கர்” ஏப்ரல் 2012 மாத இதழில் வெளியான
கட்டுரையின்
தமிழாக்கம்.