Sunday, July 21, 2019

பராசக்தியும் இப்போது . . .



ஆண்டவன் கட்டளை படத்தின் "அமைதியான நதியினிலே ஓடம்" பாடலை வண்ணத்தில் மாற்றியிருந்ததை சில நாட்களுக்கு முன்பு பகிர்ந்து கொண்டிருந்தேன்.

பராசக்தி படத்தின் "தேசம், ஞானம்" பாடலும் வண்ணத்தில் மாற்றப் பட்டுள்ளதாக அதன் காணொளியை எங்கள் தோழர் ஆரோக்கியராஜ் அனுப்பியிருந்தார்.

அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

முதல் படத்திலேயே என்ன அட்டகாசம்!

நடிகர் திலகத்திற்கு ஈடு இணை எவருமில்லை . . .


Saturday, July 20, 2019

ஏகலைவன் கதை - எதிர்பாராத ட்விஸ்ட்





உங்களுக்கு தெரிந்ததுதான்
ஆனால் இதை நீங்களும் அறிந்திருக்க மாட்டீர்கள்.

ஏகலைவன் யார் தெரியுமல்லவா?

மகாபாரதத்தில் வருகிற குரு. வில் வித்தையில் தேர்ந்தவர். தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் அர்ஜுனனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர். 

ஒருநாள் ஏகலைவன் அவரிடம் வந்து, தனக்கும் வில் வித்தை கற்றுத்தர வேண்டுகிறான். 

ஆனால் ஏகலைவன் வேடகுலத்தவன். சத்திரியன் அல்ல. எனவே அவனுக்குக் கற்றுத்தர முடியாது என்று அனுப்பி விடுகிறார் துரோணர்.

ஏகலைவன், துரோணரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, துரோணர் வடிவில் சிலை ஒன்றை செய்து கொண்டு, தானாகவே வில்வித்தையை சிறப்பாகக் கற்கிறான். 

ஒருநாள், ஏகலைவன் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது , ஒரு நாய் குலைத்துக்கொண்டே இருந்தது. ஏகலைவன் தன் அம்புகளால் நாயின் வாயைத் தைத்து விட்டான். 

அந்த நாயைக் கண்ட அர்ஜுனன், துரோணரிடம் சென்று, "இவ்வளவு சிறந்த வில்வித்தையைக் கற்றுக்கொண்டவன் யாராக இருக்கும்?" என்று வியப்புடன் கேட்கிறான்.

துரோணர் காட்டுக்குச் செல்கிறார். அங்கே ஏகலைவனைப் பார்க்கிறார். "எப்படி வில்வித்தையைக் கற்றுக்கொண்டாய்?"என்று கேட்கிறார்.

"உங்களை மானசீகக் குருவாகக் கருதி கற்றுக் கொண்டேன்" என்கிறான்.

அர்ஜுனன் மட்டுமே சிறந்த வில்வித்தைக்காரனாக இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவர் அல்லவா துரோணர்? எனவே, ஏகலைவனின் திறமையை இல்லாதொழிக்க விரும்பினார். 

"ஏகலைவா, அப்படியானால், எனக்கு குரு தட்சணை வேண்டும்" என்றார். 
*என்ன கேட்டாலும் தருகிறேன்" என்றான் ஏகலைவன்.

"உன் வலதுகைக் கட்டை விரலைக் கொடு",என்கிறார் துரோணர்.

மறுபேச்சுப்பேசாமல் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுக்கிறான் ஏகலைவன். 

ஆறு மாதம் கழித்து...

 துரோணாச்சாரி தனது பாசறைக்கருகில் உள்ள குளத்தில் நிராயுதபாணியாக நீராடிக் கொண்டிருந்த போது குளத்துக்கரையில் இரு புலிகள் அவரை தங்களுக்கு இரையாக்கக் காத்திருந்தன...

செய்வதறியாது தவித்த துரோணர் உதவி கேட்டு அலறுகிறார். 

அப்போது ஒரு அம்பு பாய்ந்து வந்தது.
இரு புலிகளும் செத்து விழுந்தன.

கரையேறிய துரோணர் அம்பு வந்த திசையை பார்க்கிறார்.

கையில் வில்லம்புடன் ஏகலைவன் எதிர்வருகி்றான்.
திடுக்கிட்ட துரோணர் ஏகலைவனப் பார்த்து
"இது எப்படி சாத்தியம்...?
கட்டை விரலின்றி எவ்வாறு அம்பெய்தினாய்?" என வினவினார்.

"தங்களுக்கு குருதட்சணையாக எனது வலது கட்டை விரலைக் கேட்டீர்கள்.
நானும் வெட்டிக் கொடுத்தேன் குருவே..."

"நான் பயிற்சி எடுத்தது இடது கையினால் என்பதை தாங்கள் அறிந்திருக்கவில்லை துரோணரே", என்றான்.

துரோணர் மிரண்டார்

இடதுசாரி ஏகலைவனைக் கண்டு...

Friday, July 19, 2019

ஜீவனாம்சம் ஐந்து கிலோ நெய் . . .




பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு விவாக ரத்து வழக்கில் கணவன் மனைவிக்கு மாதம் ஐயாயிரம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்ல முதலில் மறுத்த கணவன், பின்பு தன் வக்கீல் மூலம் பணத்திற்குப் பதிலாக

ஒவ்வொரு மாதமும்

20 கிலோ அரிசி
ஐந்து கிலோ சர்க்கரை,
ஐந்து கிலோ பருப்பு வகைகள்
15 கிலோ கோதுமை
ஐந்து கிலோ நெய்

மற்றும்

தினம் இரண்டு லிட்டர் பால்,
மூன்று மாதத்திற்கு ஒரு முறை மூன்று செட் சுடிதார்.

இந்த முன்மொழிவை பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு விட்டது.

சில சமயம் தீர்ப்புக்கள் வினோதமானவைதான்


முப்பது வருடங்களுக்கு முன் இதே நாளில் . . .




இந்த நாள் வாழ்க்கையின் முக்கியமான நாள். அதிகாரபூர்வமான ஆவணங்கள் படி இன்றுதான் பிறந்த நாள். உண்மையான பிறந்த நாள் மே 19 ஆக இருந்தாலும் பள்ளியில் சேர்க்கையில் பத்து மாதங்கள் முந்தைய நாளை கொடுத்து விட்டார்கள். அதனால் பத்து மாதங்கள் முன்பே ஓய்வு பெற வேண்டியிருக்கும்.

அதைத் தவிரவும் இந்த நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறியது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் நடைபெற்ற ஒரு சம்பவம்தான்.

நெய்வேலி கிளையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  ஒரு சாதாரணப் பிரச்சினையை அன்றிருந்த கிளை நிர்வாகமும் கோட்ட நிர்வாகமும் சொதப்பிய காரணத்தால் அது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியது. அவ்வப்போது மோதல்கள், போராட்டங்கள், சமரசப் பேச்சு வார்த்தை, அதன் முறிவு என்றெல்லாம் போய்க் கொண்டிருந்தது.

18 ஜூலை 1989 அன்று ஒரு ஊழியருக்கும் முகவர் என்ற போர்வையில் உலவிய ஒரு தவறான நபருக்கும் ஒரு வாக்குவாதம். அநாகரீகமான வார்த்தைகளை அந்த நபர் பேசியதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிளை நிர்வாகத்திடம் வலியுறுத்தினோம். அவருக்கு முதலில் ஒரு விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்து  பிறகு நடவடிக்கை எடுப்பதாக ஒப்புக் கொண்டது.

மறு நாள் காலை அலுவலகத்திற்கு வர வீட்டிலிருந்து வெளியே வந்தால் ஊழியர் குடியிருப்பின் முன்பாக நெய்வேலியின் பிரபலமான மூன்று அடியாட்கள் நின்று கொண்டிருந்தார்கள்.  முந்தைய நாள் பிரச்சினைக்கு உள்ளான தோழரைத்தான் தாக்க வந்துள்ளார்கள் என்று நினைத்து அலுவலகம் சென்று ஊழியர்களை திரட்டுவோம் என ரவிக்குமார் என்ற தோழரின் சைக்கிளில் அமர்ந்து அலுவலகத்திற்கு புறப்பட்டால் அந்த அடியாட்கள் என்னை தாக்கினார்கள். 

விளக்கம் கேட்கும் கடிதத்தை கொடுத்த கிளை நிர்வாகம் “தப்பா நெனைச்சுக்க வேண்டாம், எங்களுக்கு இஷ்டமில்லை. யூனியன் கடுமையாக பேசினதாலதான் தர வேண்டியிருக்கு” என்று போட்டுக் கொடுத்ததால்தான் தாக்குதலின் இலக்காக நான் மாற்றப்பட்டேன் என்பது பிறகு தெரிய வந்தது.

வாயில் குத்தியதில் பல் உடைந்து உதடு கிழிந்து ஐந்து தையல்கள் போட்டு ஒரு வாரம் மருத்துவ மனையில் இருக்க நேரிட்டது. உடலில் வேறு காயம் இல்லை. ஆனாலும் உதட்டில் காயம் என்பதால் “பிரியாணி கூட சாப்பிடலாம்” என்று சொன்னாலும் தையல் பிரிக்கும் வரை  வெறும் ஜூஸ் மட்டுமே ஸ்ட்ராவில் குடிக்க வேண்டிய நிலைமை. முழுக்க முழுக்க தோழர்களால் சூழப்பட்டிருந்த காலமாக மருத்துவமனைக் காலம் அமைந்திருந்தது. பேசுவது சிரமம் என்பதால் எழுதிக் கொடுத்தே தகவல் பரிமாற்றமும். அப்போதே அது காமெடியாக இருந்தது.

சங்கத்தின் வலிமையை நேரடியாக உணர்ந்து கொள்ள வைத்த சம்பவம் அது. கோட்டத்தின் தலைவர்கள் தோழர் ஆர்.ஜகதீசன், தோழர் ஆர்.கேசவன் உடனடியாக நெய்வேலி வந்தார்கள். கோட்டம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆனாலும் அன்றைய  கோட்ட நிர்வாகம் சுணக்கமாகவே இருந்ததால் போராட்ட நடவடிக்கைகள் தீவிரமானது.

மருத்துவ மனையிலும் என்.எல்.சி நிறுவனத்தின் சி.ஐ.டி.யு மற்றும் ஹெ.எம்.எஸ் சங்கத் தோழர்கள் வந்து பார்த்தார்கள். அன்றைய சி.ஐ.டி.யு சங்க பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் ஜி.ராமகிருஷ்ணன் “இவர் எங்கள் தோழர். கவனமாக சிகிச்சை அளியுங்கள்” என்று என்.எல்.சி பொது மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் சொன்னது மட்டுமல்ல, முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று காவல் துறையிடமும் வலியுறுத்தினார்.

சற்றே ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது தாக்குதலின் நோக்கம். தொழிற்சங்கத்திலிருந்து முழுமையாக ஒதுங்கி விட வேண்டும் என்பது குடும்பத்திலிருந்து வந்த நிர்ப்பந்தம். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி திருக்காட்டுப்பள்ளியில் இருந்த என் அக்கா வீட்டில் ஒரு வாரம் போல இருந்து விட்டு நான் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி, வேலூரில் நடைபெற்ற கோட்டச்சங்கத்தின் இரண்டாவது மாநாடுதான்.

 உள்ளத்தில் உறுதி கொடுத்தது அந்த சம்பவம்தான். எந்த பிரச்சினையானாலும் எதிர் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் கூட.  இதை விட என்ன பெரிய சவால் வரப்போகிறது என்ற மனோபாவத்தையும் அளித்தது அச்சம்பவமே!

பிகு

காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் அடியாட்களின் பெயர்களை பதிவு செய்து கைது செய்தது. ஆனால் ஏவி விட்டவர்களை விட்டு விட்டது (பணம் விளையாடியது என்று கேள்வி).

இரண்டு வருடங்களுக்குப் பிறகு வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அந்த அடியாளில் ஒருவர் என்.எல்.சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட  நெய்வேலி அமராவதி திரை அரங்கில் தற்காலிக ஊழியர். தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்வது என்று அப்போது என்.எல்.சி நிர்வாகம் எடுத்த முடிவை வழக்கு இருந்த காரணத்தால் அவருக்கு அமலாக்க முடியவில்லை. உதவி செய்ய வேண்டும் என்று ஒரு தூதுவர் மூலமாக என்னிடம் வந்தார்கள்.

கோட்டத் தலைவர்களோடு ஆலோசித்து நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்து விட்டேன்.

எய்தவர்கள் சொகுசாக இருக்கையில் அம்புகளை மட்டும் ஏன் பழிக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.

பிகு 2

எய்தவர்கள் மூன்று பேர். அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்து போனார். இன்னொருவர் கொலை வழக்கிலும் மோசடி வழக்கிலும் சிக்கி சிறைக்குப் போனார். மூன்றாமவர் திவாலாகி காணாமல் போய் விட்டார்.

Thursday, July 18, 2019

ஒரு போலீஸ் அதிகாரியின் எச்சரிக்கை

காலையில் எழுதிய பதிவில் காவல்துறை அதிகாரி திரு சைலேந்திர பாபு எழுதிய கட்டுரையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். 


அக்கட்டுரை கீழே உள்ளது.



கைப்பேசி விளையாட்டு போதை


வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஏதேனும் செய்திகள் வந்துள்ளதா என்று அடிக்கடி செல்பேசியை திறந்து பார்ப்பதே ஒரு கட்டாயச் செயலாகிவிட்டது. இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடவே முடியாது போலிருக்கிறது. கடமையாற்ற வேண்டிய அலுவலர்கள் கூட கைப்பேசியை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அங்காடி, பஸ், பஸ் நிலையம், ரயில், ரயில் நிலையம் என்று எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது. பள்ளிகளில் செல்பேசியை எடுத்துச்செல்ல தடை உள்ளது. ஆனாலும் சில மாணவர்களிடம் செல்பேசிகள் உள்ளன. சிறைச்சாலைக்குள் கைப்பேசிகள் இருப்பதைப் போலத்தான் தடை செய்யப்பட்ட பள்ளி விடுதியிலும் கைப்பேசிகள் உள்ளன. சில வேளை களில் பெற்றோர்களே ரகசியமாக பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுகிறார்கள். மாணவர்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டரில் விளையாடிய விளையாட்டை இப்போது கைப்பேசியில் விளையாட வசதி வந்துவிட்டது. இதனால் இளைஞர்கள் கைப்பேசியில் தீவிரமாக புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். இது ஒரு வகை போதை. இந்த போதைக்கு அடிமையானவர்களுக்கு தினசரி கடமை களை செய்து முடிக்க முடியாமல் போய்விடுகிறது. காலப்போக்கில் எந்த தொழிலையும் செய்து முடிக்கும் திறமையும், மனமும் இல்லாமல் போய்விடுவதால் அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது.
மாய விளையாட்டு
கைப்பேசி விளையாட்டுகள் சிலிர்ப்பையும், நடுக்கத்தையும், திகிலையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்துகிறது. இளைஞர்களை கவர்ந்து ஈர்க்கும் விதமாகத்தான் விளையாட்டுகளை சுவாரசியமாக வடிவமைத்திருக்கிறார்கள். வளர் இளம் பருவத்தினர் தேடும் புதுமை, சாகசம், திரில், வெற்றியுணர்வு போன்றவை இந்த விளையாட்டில் கிடைக்கிறது. பாலி யல் உணர்வு, பலாத்கார உணர்வு போன்றவை தூண்டப் பட்டு மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு உடல் முழுவதும் அது உற்சாக தீயாக பரவுகிறது. எனவே தான் இந்த கம்யூட்டர் விளையாட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் மாணவர்கள் பல மணிநேரம் அதிலே விழுந்துகிடக்கிறார்கள். இவர்கள் இரவு முழுவதும் இந்த மாய விளையாட்டில் முடங்கிக் கிடப்பதால் பகலில் அவர்களால் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்ல முடிவ தில்லை. சென்றாலும் அங்கேயே தூங்கிவிடுகிறார்கள். பாடங்களில் இவர்கள் சாதாரணமாக தோற்றுவிடு கிறார்கள். அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. இந்த சூழ்நிலையில்தான் பெரும்பாலும் பெற்றோர்கள் விழித்துக்கொள்கிறார்கள். கல்லூரிகளிலிருந்தும் பெற்றோர்களுக்கு தகவல் வந்துள்ளது. அதில் இப்போது ‘பப்ஜி’ என்ற ஆன் லைன் விளையாட்டுதான் பெருவாரியாக மாணவர்கள் விளையாடும் கம்ப்யூட்டர் விளையாட்டு என்றும், 40 கோடி இளைஞர்கள் உலகளவில் விளையாடுகிறார்கள் என்றும், அதில் 8 கோடி பேர் இந்தியர்கள் என்றும் தெரி வித்திருக்கிறார்கள். இது தடை செய்யப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் விளையாட்டு. ஆனால் இளைஞர்கள் எந்த தடையுமின்றி விளையாடுகிறார்கள். இதற்கு முன்னர் தடை செய்யப்பட்ட ‘ப்ளு வேல்’ என்ற விளையாட்டால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதையும் சிலர் பெற்றோர்களை கூட கொலை செய்ததையும் நாம் கேள்விப்பட்டோம். இன்று கிட்டத்தட்ட எல்லா கைப்பேசியிலும் இந்த விளையாட்டுகளை விளையாடலாம். சராசரி இந்தியன் ஒரு மணி நேரம் விளையாடும் அளவிற்கு கைப்பேசி விளையாட்டு வளர்ந்துவிட்டது. அதாவது எல்லாரும் விளையாடவில்லை என்றாலும் ஒரு சிலர் பல மணிநேரங்கள் விளையாடுகிறார்கள் என்பது அதன் பொருள். விளையாடும் நபர் தினமும் 2 முறையாவது விளையாடுகிறார்கள். இந்தியாவில் 25 கோடி மக்கள் இந்த கைப்பேசி வீடியோ விளையாட்டு விளையாடி உலகில் முதல் ஐந்து இடத்தில் நாம் இருக்கிறோம். நான் குறிப்பிட்ட பப்ஜி என்ற ஆபத்தான விளை யாட்டு கடந்த மார்ச் மாதம் தான் கைப்பேசியில் அறிமுக மாகி இருக்கிறது. அதற்குள் அத்தனை பேர் பதிவிறக்கம் செய்துவிட்டார்கள்.
இந்த பப்ஜி விளையாட்டில் விமானத்திலிருந்து பாரா சூட்டில் குதித்து ஒரு தீவில் இறங்க வேண்டும். அங்கு கவசத்தையும் வாங்கிக்கொண்டு துப்பாக்கியையும், எதிரிகளையும் எதிர்கொள்ள வேண்டும். பின்னர் பாது காப்பான இடத்தில் இருந்து கொண்டு ஒரு கமாண்டோ வீரர்போல எதிரிகளைச் சுட்டுக்கொல்ல வேண்டும். அனைத்து எதிரிகளையும் ஒழித்த பின்னர் இறுதியில் நாம் மிஞ்சியிருந்தால் நாம்தான் வெற்றியாளர். நாம் சுடப்பட்டால் போர்க்களத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். ஒரு ரவுண்டு விளையாட 30 நிமிடம் என்று பத்து ரவுண்டு விளையாடினால் என்னவாகும்? கிட்டத்தட்ட ஒரு 20 மதிப்பெண் பாடம் படித்து முடிக்கும் நேரம் வீணாகி விடும். ஆனால் பாடம் படிக்கும் ஒரு அயற்ச்சியோ இதில் இல்லை. இங்கு உலக மக்களை எதிர்கொள்ளவும், ராணுவப் போர் புரியவும் வாய்ப்பு கிடைக்கிறது. வாய்மொழி உத்தரவு பிறப்பித்துக்கூட எதிரியை சாகடிக்கலாம். இதில் போட்டிகள் உண்டு. அதில் பதக்கங்கள் வேறு கிடைத்துவிடுகிறது. எனவே மாண வர்கள் இதனால் கவரப்பட்டும், கவ்வப்பட்டும், விளையா டியும், தோற்றும், ஜெயித்தும் அடிமையாகி விடுகின்ற னர். தொடர்ந்து விளையாடுவது அவர்களின் உயிரியல் தேவையாக மாறிவிடுகிறது. அதாவது விளையாடவில்லை என்றால் குடிகாரர்களைப் போல கை உதறல்ஏற்படும்.
இரவு முழுவதும் கைப்பேசியுடன் உறவு
கைப்பேசி விளையாட்டு போதைக்கு அடிமையான மாணவர்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். இரவு முழு வதும் கம்ப்யூட்டர் அல்லது கைப்பேசியுடன் உறவாடிக் கொண்டிருப்பார்கள். பெற்றோர் பார்த்ததும் சுதாரித்துக் கொண்டு பள்ளி அசைன்மெண்ட் என்று சொல்லிவிடு கிறார்கள். காலையில் எழமாட்டார்கள், கல்லூரிக்கும் வழக்க மாக போகமாட்டார்கள். பகலிலும் தூங்கிவழிவார்கள். வீடியோ விளையாட்டிற்கு அடிமையானவர்கள் கம்ப்யூட்டர் விளையாட்டு உலகத்தில் மட்டும் இருந்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு தன்னை சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. அவர்கள் விளையாட தேவை யான நபர்கள் வரும் நேரத்திற்காக காத்திருப்பார்கள். அந்த நேரம் வந்ததும் துரிதமாக ஓடிச்சென்று அவர்கள் விளையாட்டைத் தொடர்வார்கள். செய்ய வேண்டிய தினசரி கடமைகளையும் புறக்க ணித்து இந்த கம்ப்யூட்டர் விளையாட்டில் மூழ்கிக் கிடப்ப தால் இந்த இளைஞர்கள் பெரிய உடல்நலப்பாதிப் பிற்கும், மனநல பாதிப்பிலும், சமூக நல பாதிப்பிற்கும், அவமதிப்பிற்கும் உள்ளாகி விடுகிறார்கள்.
பிள்ளைகளைக் கவனியுங்கள்
இப்படிப்பட்ட நிலையை கண்டதும் உடனே மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. பெற்றோர், ஆசிரியர், உறவினர் என்று தனித்தனியாகவும் கூட்டாக வும் இவனது செயல்பாட்டில் தலையிட்டு இந்த விபரீத விளையாட்டை நிறுத்த முயற்சிக்கலாம். மாணவர்கள் மதிக்கும் ரோல்மாடல்கள் உண்டு. அவர்களிடம் அழைத்துச்சென்று ஆலோசனை பெறலாம். ஒரு சுற்று லாவிற்கு அழைத்துச்சென்று இந்த விளையாட்டிற்கு இடைவெளி ஏற்படும் ஒரு சூழ்நிலையை உருவாக்க லாம். உடலால் விளையாடும் ஓடுதல், சைக்கிள், கைப்பந்து, கால்பந்து என்ற விளையாட்டுகளில் தினமும் 2 மணி நேரமாவது ஈடுபடுத்தலாம். பெற்றோர் களாகிய நீங்களே பிள்ளைகளுடன் நடைபயணம் செல்லலாம். விளையாட்டிற்காக ஒரு ஆண்டு பள்ளிப் படிப்பு வீணானாலும் பரவாயில்லை. இது ஒரு சிகிச்சை என்றே எடுத்துக்கொள்ளலாம். 1996-ம் ஆண்டு முதல் போக்கிமேன் விளையாட்டை பல மாணவர்கள் விளையாடி நேரத்தை வீணடித்து பள்ளி கல்வியை தவறவிட்டார்கள். அதில் சிலர் சுதாரித் துக்கொண்டு பின்னர் தங்களை திருத்திக் கொண்டார்கள்.
கொடிய போதை இது
உணவு போதை, சினிமா போதை, கிரிக்கெட் போதை, புகை போதை, மது போதை, பாலியல் போதை என்ற  வரி சையில் இன்று இளைஞன் சீரழிவது இந்த கைப்பேசி போதை யால்தான். மற்ற எல்லா போதைகளையும் விடகொடிய ஒரு நோய் இது என்று சந்தேகமின்றி கூறி விடலாம். மாணவர்கள் கைப்பேசி விளையாட்டிற்கு அடி மையாயிருப்பதை அறிந்த தயாரிப்பு நிறுவனங்கள் 700 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு செய்தி ருக்கிறார்கள். எனவே இன்னும் அதிகமாக போதை தரும் கவர்ச்சி விளையாட்டுகள் சந்தையில் விரைவில் வெளிவந்துவிடும். எனவே பெற்றோர்களே விழித்துக் கொள்ளுங்கள். கஜா புயல் எச்சரிக்கை, ஆசிய சுனாமி எச்சரிக்கை போன்று இந்த கைப்பேசி விளையாட்டு போதையின் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை சீரியசாக எடுத்துக் கொள்ளுங்கள். மாணவர்களே, இது வேண்டாம். நீங்கள் விளையாட வேண்டியது கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், நீச்சல் போன்ற நிஜமான விளையாட்டுகள். மொபைல் கேம் என்ற போலி விளையாட்டு விபரீதமானது. அது உங்கள் நிகழ்காலத்தைக் கொல்லும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.
கட்டுரையாளர் : காவல்துறை இயக்குநர்(ரயில்வே) 
நன்றி: தினத்தந்தி, 16.7.19

இங்க கூடவா போன்? கருமம்டா



நேற்று மதியம் என்னை எரிச்சலூட்டிய நிகழ்வு.

மதியம் ரெஸ்ட் ரூம் சென்ற போது ஒரு வாலிபர், அலுவலகத்திற்கு ஏதோ சேவைக்காக வந்தவர்  யூரினலில் நின்று கொண்டு அலைபேசியில் வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஏதோ ஒரு தொலைக்காட்சி சேனலின் செய்தி என்பது காதில் வந்து விழுந்ததிலிருந்து தெரிந்தது.

என்னதான் தலை போகிற செய்தியாக இருந்தாலும் அதற்கு நேரம், இடம் எல்லாம் கிடையாதா? ஒரு இரண்டு நிமிடம் கூட பொறுமையாக இருக்க முடியாதா?

சூடாக திட்டலாம் என்றால் அதற்கு முன்பாக அவர் கிளம்பிப் போய் விட்டார்.

ஒரு தகவல் தொடர்பு சாதனமான அலைபேசி ஸ்மார்ட்டாக மாறியதிலிருந்து மக்களின் வாழ்க்கை முறை மோசமாகிக் கொண்டே போகிறது.

காவல்துறை அதிகாரி திரு சைலேந்திர பாபு தினத்தந்தியில் எழுதிய கட்டுரையை தீக்கதிர் இதழில் நேற்று மறு பிரசுரம் செய்திருந்தார்கள். அதை  காலையில் படிக்கும் போதே மிகவும் கவலையாக இருந்தது.

இந்த சம்பவம் கவலையை அதிகரித்து விட்டது. 


Wednesday, July 17, 2019

இன்னும் எமோஷன் வேணும் தமிழிசை மேடம்




தமிழிசை பார்ம் அவுட்டா?

தூத்துக்குடி தோல்வியால் தமிழிசை அம்மையார் துவண்டு போய் விட்டார் போல.

புதிய கல்விக் கொள்கை மீதான நடிகர் சூர்யாவின் விமர்சனத்திற்கு

“மாணவர்களை வன்முறைக்குத் தூண்டுகிறார்” என ஹெச்.ராஜாவும்

“சூர்யா ஒரு அரை வேக்காடு”  என தமிழக அமைச்சர் கடம்பத்தூர் ராஜூவும்

சங்கி ஸ்டைல் எதிர்வினையாற்ற

அம்மையாரோ

“சூர்யா கிராமப்புற ரசிகர்களுக்கு குறைந்த விலையில் தன் படத்துக்கு டிக்கெட் தருவாரா?”

என்று சம்பந்தமே இல்லாமல் கேட்டுள்ளார்.

பாவம்! பார்ம் போயிடுச்சு போல!

ஆனால்

சிவகங்கை மக்கள் துரத்தியடித்தாலும் எப்படி ராசா துடைத்துக் கொண்டு வழக்கம் போல விஷத்தை கக்கிக் கொண்டே இருக்கிறார்.