Saturday, January 4, 2020

செத்தது அமெரிக்க தளபதியென்றால்????


இரானின் தளபதி காசீம் சுலைமானி அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார்.

என்னுடைய ஆணைப்படியே அவர் கொல்லப்பட்டார் என்று டொனால்ட் ட்ரம்ப் பீற்றிக் கொள்கிறார். பதவி நீக்கம் பிரச்சினையில் சிக்கியுள்ள அவருக்கும் ஒரு திசை திருப்பும் நடவடிக்கை தேவைப்படுகிறது. 

நடந்த கொலையை விட எரிச்சலூட்டுவது இந்திய அரசின் அறிக்கைதான்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு யாரும் எதுவும் எதிர்வினையாற்றக் கூடாது, அமைதியாகவும் பொறுமையாகவும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடும் இருக்க வேண்டும் என்று சொல்கிறது இந்திய அறிக்கை. 

இதுவே தாக்குதலில் செத்துப் போனது அமெரிக்க தளபதி என்றாலும் இந்திய அறிக்கை இப்படித்தான் உபதேச பாணியில் இருக்குமா?

ட்ர்ம்பை விட வெறிக் கூச்சல் கொண்டதாக அமைந்திருக்கும்.

இந்த அரசிடம் நேர்மை எல்லாம் எதிர்பார்ப்பது வீண்.

Friday, January 3, 2020

டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை




டாஸ்மாக் அதிகாரிகள் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த காணொளியை பார்த்தால் புரியும்.

இப்படி நிறைய பேர் கிளம்பினால் அவர்களால் எப்படி எடுபிடி நிர்ணயிக்கும் இலக்கை அடைய முடியும்?





பிகு

சீரியஸ் பதிவுகளிலில் இருந்து மாறுதலாக வாட்ஸப்பில் வந்த காணொலியை பகிரலாம் என்று நினைத்தேன். ஆனால் அதிலும் அரசியல் வந்து விட்டது. நான் என் செய்வேன்!!!!

இதுதான் சிறப்பான வெற்றி


உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி அளித்த செய்தி இது.

இதற்கு முன்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலிலோ அல்லது இந்தோரிலோ திருநங்கைகள் மேயராக வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இதுதான் முதல் முறை என்று கருதுகிறேன்.

வெற்றி பெற்ற ரியா,
அவர் போட்டியிட வாய்ப்பளித்த திமுக,
வெற்றி பெற வாக்களித்த வாக்காளர்கள்

அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்


Thursday, January 2, 2020

அலங்கோலம், வெடிகுண்டு – கப்சிப் எடுபிடி





ஸ்டாலின் பேச்சைக் கேட்டு கோலம் போட்டால் குடும்பத்தையே குளோஸ் செய்து அலங்கோலமாக மாற்றி விடுவேன் என்று மிரட்டுகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் பொராகி.

மாணவர்கள் கல்லெறிந்தால் வெடிகுண்டு வீசுவோம் என்று திமிராக பேசுகிறார் எச்.ராசா.

இதெல்லாம் பழைய சம்பவங்கள் அல்ல. “ஜோலியை முடிச்சிருக்க வேண்டாமா” என்று பேசிய நெல்லை கண்ணனை கைது செய்து தர்மத்தையும்  நேர்மையையும் தமிழக காவல்துறையும் எடுபிடி அரசு நிலை நாட்டிய அதே சமயத்தில்தான்.

நெல்லை கண்ணனை கைது செய்த  தமிழக ஏவல்துறை இப்படி வெளிப்படையாக மிரட்டுகிற. வன்முறையை தூண்டுகிற பொராகியையும் எச்.ராசாவையும் ஏன் கைது செய்யவில்லை?

அவர்களை கைது செய்யாமல் எடுபிடி அரசு ஏன் கப்சிபென்று கள்ள மௌனம் சாதிக்கிறது?

அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்றால் நெல்லை கண்ணனை விடுதலை செய்வதுதான் சரியாக இருக்கும்.

எடுபிடி அரசு என்ன செய்யப் போகிறது?



ராணுவத்தை மதிக்க வேண்டாமா?

ராணுவத்தைப் பார்த்தால் மக்கள் பயப்பட வேண்டும் என்று  முப்படைத் தளபதி என்ற புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள மோடியின் சீடர் பிபின் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

அவருக்கு ஒரே ஒரு வார்த்தை.



இப்படியெல்லாம் முறைச்சு பார்த்தா மோடி கூட உங்களைப் பார்த்து பயப்படுவார். ஆனால் ராணுவம் என்பது மக்களால் மதிக்கப்படக் கூடிய விதத்தில்  செயல்பட வேண்டுமே தவிர அச்சப்படக்கூடிய விதத்தில் அல்ல.

ராணுவம் தன் மதிப்பை வி.கே.சிங் காலத்தில் இழக்க ஆரம்பித்தது. உங்கள் காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. 

Wednesday, January 1, 2020

போன வருஷ வாசிப்புக் கணக்கு



கடந்த வருடத்தில் வாசித்த நூல்களின் பட்டியல் கீழே உள்ளது. 
இந்த பழக்கத்தை உருவாக்கிய தோழர் ச.சுப்பாராவ் அவர்களுக்கு நன்றி.

எண் பெயர் ஆசிரியர் நூலின் தன்மை பக்கம்
1 எம்.எஸ்.சுப்புலட்சுமி உண்மையான வாழ்க்கை வரலாறு டி.ஜே.எஸ்,ஜார்ஜ், தமிழில் ச.சுப்பாராவ் வாழ்க்கை வரலாறு 256
2 நானும் வீரப்பனும் நக்கீரன் கோபால் அனுபவம் 96
3 நீதி தேவன் மயக்கம் அறிஞர் அண்ணா நாடகம் - மறு வாசிப்பு 81
4 மனைவி கிடைத்தாள் சுஜாதா நாவல் - புனைவு 80
5 ஜோதி சுஜாதா நாவல் - புனைவு 56
6 ரோஜா சுஜாதா நாவல் - புனைவு 72
7 கேரக்டர் சாவி நகைச்சுவை கட்டுரைகள் 118
8 குருதி ஆட்டம் வேல ராமமூர்த்தி நாவல் - புனைவு 88
9 சிறைப்பறவை சி.ஏ.பாலன் சிறைப் போராட்டம் 66
10 சேதுக்கால்வாய் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும் குமரன் தாஸ் கட்டுரைகள் 96
11 அரிய நாச்சி வேல ராமமூர்த்தி நாவல் - புனைவு 120
12 காவல் கோட்டம் சு.வெங்கடேசன் நாவல் - புனைவு 1050
13 பாளையங்கோட்டை நினைவலைகள் ப. எசக்கிராஜன் அனுபவம் 172
14 ஜிப்ஸி ராஜூ முருகன் கட்டுரைகள் 136
15 பாடலென்றும் புதியது கலாப்ரியா கட்டுரைகள் 119
16 மணல் பூத்த காடு முஹம்மது யூசுஃப் நாவல் - புனைவு 448
17 கதைகளின் கதை சு.வெங்கடேசன் கட்டுரைகள் 128
18 கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி அஜயன் பாலா சிறுகதைகள் 160
19 சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை அ.கரீம் சிறுகதைகள் 104
20 பேட்டை தமிழ்ப்பிரபா நாவல் - புனைவு 350
29 கெத்து சாத்தூர் இலட்சுமணப் பெருமாள் சிறுகதைகள் 96
30 நீல நதி லஷ்மி சரவணகுமார் சிறுகதைகள் 118
31 காளி ச.விஜயலட்சுமி சிறுகதைகள் 144
32 எசப்பாட்டு ச.தமிழ்ச்செல்வன் கட்டுரைகள் 216
33 மதுரம் வண்ணதாசன் சிறுகதைகள் 136
34 எதிர்ச்சொல் பாரதி தம்பி கட்டுரைகள் 120
35 கரும்பலகை எஸ். அர்ஷியா நாவல் - புனைவு 170
36 நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள் ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் 112
37 நகரத்துக்கு வெளியே விஜய மகேந்திரன் சிறுகதைகள் 132
38 தேர்தலின் அரசியல் அ.வெண்ணிலா கட்டுரைகள் 104
39 பழைய பேப்பர் ஞானி கட்டுரைகள் 144
40 போருழல் காதை குணா கவியழகன் நாவல் - புனைவு 350
41 சம்ஸ்காரா யு.ஆர். அனந்தமூர்த்தி தமிழில் டி.எஸ்.சதாசிவம் நாவல் - புனைவு 156
42 காட்டில் உரிமை மகாசுவேதா தேவி தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கை வரலாறு 368
43 கறுப்பர் நகரம் கரன் கார்க்கி நாவல் - புனைவு 350
44 1729 ஆயிஷா நடராஜன் நாவல் - புனைவு 80
45 குஜராத் - திரைக்குப் பின்னால் ஆர்.பி.ஸ்ரீகுமார் தமிழில் ச.வீரமணி, தஞ்சை ரமேஷ் குஜராத் கலவரம் 240
46 குறுக்கு வெட்டு சிவகாமி நாவல் - புனைவு 170
47 பால்கட்டு சோலை சுந்தரப் பெருமாள் நாவல் - புனைவு 336
48 மலை மாளிகை சுஜாதா நாவல் - புனைவு 48
49 விழுந்த நட்சத்திரம் சுஜாதா நாவல் - புனைவு 62
50 இராமானுஜர் - எளியோரின் ஆச்சார்யர் கன்யூட்ராஜ் வாழ்க்கை வரலாறு 211
51 பார்பி சரவணன் சந்திரன் நாவல் - புனைவு 160
52 வெக்கை பூமணி நாவல் - புனைவு 172
53 வானம் வசப்படும் பிரபஞ்சன் நாவல் - புனைவு 496
54 திருவரங்கன் உலா 1 ஸ்ரீவேணுகோபாலன் நாவல் - புனைவு 675
55 திருவரங்கன் உலா 2 ஸ்ரீவேணுகோபாலன் நாவல் - புனைவு 631
56 ஒரு புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி நாவல் - புனைவு 220
57 தேசத்துரோகி ஷோபா சக்தி சிறுகதைகள் 224
58 பாரதியும் ஷெல்லியும் தொ.மு.சி.ரகுநாதன் கட்டுரைகள் 24
59 இந்துத்துவமும் சியோனிசமும் அ.மார்க்ஸ் கட்டுரைகள் 56
60 பாலஸ்தீன்  எட்வர்ட் செய்த் தமிழில் எஸ். அர்ஷியா வரலாறு 64
61 சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்தது ஏன் எம். எம். சசீந்திரன் தமிழில் யூமா வாசுகி கட்டுரைகள் 64
62 தேரிக்காடு அமல்ராஜ் நாவல் - புனைவு 270
63 ரோஹிங்கிய இன அழிப்பு வீரைய்யன் கட்டுரைகள் 72
64 கர்ணனின் கவசம் கே.என்.சிவராமன் புனைவு 247
65 நினைவோடைகள் தீஸ்தா செதல்வாட் குஜராத் கலவரம் 231
66 பாடலென்றும் புதியது கலாப்ரியா கட்டுரைகள் 119
67 பாபா ஆம்தே கோபி ஆனயடி தமிழில் யூமா வாசுகி வாழ்க்கை வரலாறு 136
68 வேள்பாரி - 2 பாகங்கள் சு.வெங்கடேசன் நாவல் - புனைவு 1408
69 ஜிப்ஸியின் துயர நடனம் யமுனா ராஜேந்திரன் கட்டுரைகள் 190
70 ராஜீவ் காந்தி சாலை வினாயக முருகன் நாவல் புனைவு 328
71 சிவந்த கைகள் சுஜாதா நாவல் புனைவு 136
        13582

கடந்த வருடம் சென்னை புத்தக விழாவில் வாங்கிய நூல்கள் அனைத்தையும் படித்து முடித்தது என்பது மன நிறைவளிக்கிறது. அதே வருடம் இதற்கு முந்தைய வருடங்களை ஒப்பிடுகிற போது வாசித்த நூல்களின் எண்ணிக்கையும் பக்கங்களின் எண்ணிக்கையும் குறைவுதான். 

இந்த நூல்களில் பரவச அனுபவம் கொடுத்த வேள்பாரி பற்றி தனியாக எழுதிட வேண்டும். 

அதே போல குஜராத் காவல்துறை அதிகாரி ஸ்ரீகுமார் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் அவர்கள் இருவரின் நூல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக படிக்க வேண்டும். பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் உண்மை முகம் நன்றாக புரியும்.

தோழர் கரீம் அவர்களின் "சித்தார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை" நூலும் மிக முக்கியமான நூல்.

தோழர் வேல.ராமமூர்த்தியின் குருதி ஆட்டமும் அரிய நாச்சியும் ஏதோ அவசரகதியில் எழுதப்பட்ட நூல்கள் போல இருந்து ஏமாற்றியவை. 

"மணல் பூத்த காடு" மூலம் சவுதி அரேபிய பயணமே சென்று வரலாம்.

இந்த வருட சென்னை புத்தக விழாவிற்காக ஆவலோடு காத்திருக்கிறேன். 


புத்தாண்டே வருக



புத்தாண்டே வருக  . . .
புத்துணர்ச்சி தருக . . .
போராட்டக் களம்
புகும் நேரமிது,
புது வலிமை தருக.

புதிதாய் எல்லாம் மாறிட
புதிய பாதையில் செல்க.

மாற்றம் வரும் என்ற
நம்பிக்கையை சுமந்து
புத்தாண்டே வருக . . .