சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Saturday, March 4, 2017
துரோகத்துறை அமைச்சகம் ????????
காங்கிரஸ் அரசுக்கும் மோடி அரசுக்கும் ஒரே ஒரு அம்சத்தில் மட்டும் ஏகப்
பொருத்தம். பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு இந்தியப் பொருளாதாரத்தை அடகு
வைப்பதிலும் அவர்கள் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதிலும் இரண்டு கட்சிகளுக்கும்
வித்தியாசமே கிடையாது. இதிலே மோடி ஒரு முரடர், முட்டாள் என்பதால் தங்களின் வேலைகளை வேகமாக நிறைவேற்ற
மிகவும் அனுசரணையாக இருப்பார் என்று பழைய பொம்மை மன்மோசனை தூக்கி விட்டு புதிய
பொம்மை மோடியை கொண்டு வந்தார்கள் முதலாளிகள்.
அந்த விசுவாசத்தில் முதலாளிகளின் தரகராகவே மாறிப் போனவர் மோடி. நாடோ,
நாட்டு மக்களோ நாசமாகப் போனால் அவருக்கு கவலை இல்லை. அவருடைய இன்னொரு எஜமானனான
ஆர்.எஸ்.எஸ் ஏவும் கட்டளைகளை நிறைவேற்றினால் அதுதான் அவருக்கு மகிழ்ச்சி.
இந்த இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் மோடி நிறைவேற்றிய அனைத்து சட்டங்களும்
நடவடிக்கைகளூம் முதலாளிகளுக்கு ஆதரவானது மட்டுமே.
இந்த வரிசையில் மோடி அரசு ஒரு
புதிய சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம்
அது.
தற்போதைய சட்டங்களின்படி நூறு தொழிலாளர்களுக்கு மேல் ஒரு தொழிற்சாலையில்
பணியாற்றினால் அந்த நிறுவனத்தை அரசு அனுமதி இல்லாமல் மூட முடியாது. (ஆனாலும்
நோக்கியா, ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் மூடின. இந்தியச் சட்டங்களுக்கு
பன்னாட்டுக் கம்பெனிகள் அளிக்கும் மரியாதை அவ்வளவுதான்)
இப்போது கொண்டு வரவுள்ள திருத்தத்தின்படி முன்னூறு தொழிலாளர்கள் என்று
வரம்பை உயர்த்தப் போகிறார்கள். மூவாயிரம் என்று மாற்ற வேண்டும் என்பதுதான் முதலாளிகளின்
விருப்பம். இப்போது முன்னூறு என்று தொடங்கி படிப்படியாக அதனை உயர்த்தும் திட்டமும்
அரசுக்கு உள்ளது.
ஒரு தொழிற்சாலை தொடங்கும்போது அரசு அளிக்கும் சலுகைகள் ஏராளம். நிலம்,
மின்சாரம், நீர் என்று மட்டுமல்லாமல் வரிச்சலுகை, வரி விடுமுறை என்றெல்லாம்
அள்ளித்தரப் படுகிறது. அரசு கொடுக்காமல் இவர்களே எடுத்துக் கொள்கிற முக்கியமான
சலுகை “குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள்”.
எல்லா சலுகைகளையும் அனுபவித்து விட்டு இதற்கு மேல் அந்த இடத்தில் கூடுதல் லாபம் பெற முடியாது என்ற
நிலை வருகிறபோது “இந்த மடம் இல்லையென்றால் அடுத்த மடம்” என்று தொழிற்சாலைகளை மூடி
விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள், கடைசியில் நடுத்தெருவில் நிற்பது
தொழிலாளர்கள்தான்.
ஏற்கனவே தொழிற்சாலைகளை தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்வது
என்பதை மோடி கைவிட்டு விட்டார். எல்லாம்
முறையாக நடக்கிறது என்று அவர்களே ஒரு தன்னிலை அறிக்கை கொடுத்துக் கொண்டால்
போதும் என்று சொல்லி விட்டார்கள்.
இப்போது இந்த எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டால் ?????//
நாட்டில் பெரும்பாலான தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை முந்நூறுக்கும் குறைவுதான் உலகமயம்
உருவாக்கிய ஒரு மோசமான விளவாக பல பெரிய நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும்
பொருட்களை ஒரே தொழிற்சாலையில் தாங்களே நேரடியாக உற்பத்தி செய்வதற்குப் பதிலாக
அவுட்சோர்ஸிங் முறைக்கு மாறியது. வேறு பல நிறுவனங்களோ, குறிப்பாக ஆயத்த ஆடைகள்
தயாரிக்கும் நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார, ஏற்றுமதி அபிவிருத்தி
மண்டலங்களுக்குள் ஒளிந்து கொண்டு தொழிலாளர் நலச்சட்டங்கள் எங்களுக்கு பொருந்தாது
என்று கை கொட்டி சிரிக்கின்றன.
இன்னும் பல மசோதாக்களை வேறு மோடி அரசு தயாராக வைத்துள்ளது. அவை எல்லாமே
தொழிலாளர்களுக்கு எதிரானது. தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம்
நிர்ணயம் செய்வது, ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு, போனஸ்
உச்சவரம்பை அகற்றுவது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட ஏராளமான
கோரிக்கைகள் உள்ளது, அவற்றைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருக்கும்
உரிமைகளை பறிப்பதற்கும் நடுத்தெருவில் நிறுத்தவும் திட்டமிடுகிறது மோடியின்
தலைமையிலான மத்திய அரசு. பண்டாரு தத்ராயா (ஆம் ரோஹித் வெமுலாவை தற்கொலைக்கு துரத்திய குற்றவாளிகளில்
ஒருவர்தான்) அமைச்சராக இருக்கும் இத்துறைக்கு தொழிலாளர் நல அமைச்சகம் என்று பெயர்.
துரோகத்துறை என்று பெயர் மாற்றினால் பொருத்தமாக இருக்கும்.
ஆனால் இந்த துரோகம் நிகழ்வதை இந்திய தொழிலாளி வர்க்கம் அனுமதிக்காது. உறுதியோடு எதிர்த்து போராடும். முறியடிக்கும்
Friday, March 3, 2017
போர் வேண்டாமென்றால் ஏனப்பா பொங்குகிறீர்????
குர்மெஹர் கவுர் – சங்கிகளின் மாணவர் அமைப்பால் மிரட்டப் பெண். அந்தப் பெண்
பற்றி கடந்த அக்டோபர் மாதத்திலேயே எழுதிய பதிவின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன்.பதிவு இது.
அந்த பதிவில்
இணைக்கப்பட்டுள்ள காணொளியின் இணைப்பை இங்கே மீண்டும் தந்துள்ளேன்.
அந்த காணொளிக்கு ஒரு பாகிஸ்தானியர் அளித்த பதில் காணொளியும் இங்கே
இருக்கிறது.
நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன். உங்கள் அளவிற்கு நானும் இந்தியாவை நேசிக்கிறேன் என்று ஒரு அட்டையில் எழுதி இங்கே ஒருவர் சொல்கிறார். அவருக்கு கிடைக்கும்
எதிர்வினையை இந்த இணைப்பின் மூலம் சென்று காணொளியில் பாருங்கள்.
பொறுப்பான இந்தியர்கள் பாகிஸ்தானியர்களை வெறுப்பதில்லை. அதே போல் பொறுப்பான
பாகிஸ்தானியர்கள் இந்தியர்களை வெறுப்பதில்லை. சிக்கலே வெறியூட்டப்பட்டவர்களால்தான்
வருகிறது. அதுதான் குர்மெஹர் கவுரை பாலியல் வன் கொடுமை செய்வோம் என்று மிரட்ட
வைக்கிறது.
இப்போது சங்கிகளுக்கு பிரச்சினையாக இருப்பது இந்தப் பெண் ஏ.பி.வி.பி யை
எதிர்ப்பது மட்டுமல்ல. போர் வேண்டாம் என்று முன்பு சொன்னதுதான். அப்போது அமைதியாக
இருந்த பலரும் கூட இப்போது உபதேசம் செய்கிறார்கள். வழக்கம் போல போலி தேச பக்த
முழக்கம் உச்சத்தில் கேட்கிறது.
அந்த பெண் சொன்ன ஏராளமான செய்திகளில் ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு
அடிக்கிறார்கள்.
“என் அப்பாவைக் கொன்றது பாகிஸ்தானல்ல. போர்தான் கொன்றது” என்ற அந்த ஒற்றை வாசகத்தோடு அவர்
நிற்கவில்லை. இரு நாட்டு மக்களும் அடிப்படையில் போரை விரும்பவில்லை. மக்கள்
அமைதியைத்தான் விரும்புகிறார்கள். ஆட்சியாளர்கள்தான் தங்களின் சுயநலத்திற்காக போரை
தூண்டுகிறார்கள். ராணூவத்திற்காக செலவழிக்கிற தொகையை வளர்ச்சிப் பணிகளுக்காக
செலவழிக்கலாமே. ஜெர்மனியும் பிரான்சும் பழைய பகைமையை மறந்து போய் விட்டார்கள். அது
போலவே அமெரிக்காவும் ஜப்பானும். அப்படி இருக்கையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன்
அமைதியாக இருக்க முடியாது?
இரண்டு நாட்டு ஆட்சியாளர்களையும்தான் அந்தப் பெண் விமர்சித்துள்ளார்.
இரண்டு நாடுகளுமே அமைதிக்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.
இதிலே என்ன தவறு இருக்கிறது?
அந்த பெண்ணின் மனதிலே இவ்வளவு நச்சை யார் விதைத்தது என்று தெரியவில்லை என
“அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு புகழ்” மத்திய
உள்துறை இணை அமைச்சர் கிரண் ராஜூ கேட்கிறார். அமைதியாக இருக்க வேண்டும் என்று
சொல்வதே விஷம் என்றால் அந்த மனிதரின் மனதில் எவ்வளவு நச்சு குடிகொண்டுள்ளது? வீரேந்திர
சேவாக் வேறு ஜோக்கடித்து வெறுப்பேற்றுகிறார்.
பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் ராணுவமும் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகளை
தூண்டுகிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அது போல பாகிஸ்தானுக்கு எதிரான
உணர்வுகளை இந்தியாவில் யாரும் தூண்டுவதே கிடையாதா? சங் பரிவாரத்தின் சிவ சேனாவின்
முக்கிய பணியே அதுதானே! அது இந்தியாவின் மீதான தேச பக்தியா இல்லை மத வெறியின்
வெளிப்பாடா?
கிரிக்கெட் என்பது ஒரு சாதாரண விளையாட்டு. இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடினால்
அதனை ஒரு யுத்தம் அளவிற்கு சித்தரித்து வெறி ஏற்றுவது யார்? இதுவே இந்தியாவிற்கும்
பாகிஸ்தானுக்கும் இடையேயான ஹாக்கி பந்தயம் என்றால் அதனை யாரும் சீண்டுவது கூட
இல்லை. அப்போது தேசபக்தி எங்கே அமுங்கிப் போகிறது என்றுதான் தெரியவில்லை.
போர் வேண்டாம். அமைதி வேண்டும் என்று சொல்வதை விமர்சிப்பவர்கள், தேச
பக்தர்கள் அல்ல. போர் வெறியர்கள். ஆயுத வியாபாரிகளின் வணிகம் பாதிக்கப்படக் கூடாது
என்று நினைப்பவர்கள்.
அவர்களால் ஆபாசக்கூச்சல் மட்டும்தான் எழுப்ப முடியும்.
ஆம். அமைதி நிலவினால் அவர்களின் தொழில்தானே கெட்டுப்போகும்!
அதன் உள்ளர்த்தம் புரியாத அப்பாவி மக்களை நினைத்தால்தான் கவலையாக
இருக்கிறது.
Thursday, March 2, 2017
சங்கிகளே, கெண்டைக்கால் ரோமத்தின் நுனியைக் கூட . . .
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மத்தியப்பிரதேச மாநிலத் தலைவரான டாக்டர் சந்திராவத்
என்பவர் கேரள முதல்வர் தோழர் பினராயி
விஜயன் அவர்களின் தலையை வெட்டிக் கொண்டு
வருபவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் மங்களூரில் நடைபெற்ற மத நல்லிணக்கப் பேரணியில் தோழர் பினராயி
விஜயன் பேசியதில் ஒரு பகுதியை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
“நான் ஒன்றும் ஒரே நாளில் வானத்தில் இருந்து குதித்து முதலமைச்சர்
ஆகவில்லை. கல்லூரியிலிருந்து வெளி வந்த காலத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வாள்களைக்
கடந்துதான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே இந்த மிரட்டல் எல்லாம் என்னிடம்
வேண்டாம்”
கேரளாவின் அமைதியை சீர்குலைக்க தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிற பல
சதிகளை அந்த அமைப்பில் இருந்தவர்களே இன்று அம்பலப் படுத்தி வருதால் பாவம்
பதற்றத்தில் இருக்கிறார்கள். மங்களூர் பேரணியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று
முயன்று தோற்றுப் போனார்கள். அந்த தோல்வி வெறி கொலை வெறியாக மாறியுள்ளது.
கொலை செய்வது ஒன்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு புதிதல்ல. மகாத்மா
காந்தியிலிருந்து கொலைக் கணக்கை துவக்கியவர்கள் அல்லவா?
ஆனால் இந்த மிரட்டல் எல்லாம் தோழர் பினராயி விஜயனிடம் எடுபடாது. அவரின்
கெண்டைக்கால் ரோமத்தின் நுனியைக் கூட அவர்களால் நெருங்க முடியாது.
எனக்கு ஒரே ஒரு கேள்வியும் ஒரே ஒரு கவலையும்தான்.
ஒரு மாநில முதல்வரை கொல்வேன் என்று வெளிப்படையாக சொல்லும் தைரியம்
எங்கிருந்து வந்தது? மோடி பிரதமராக, மத்தியில் ஆட்சியில் இருப்பதால் கிடைக்கிற
ஆணவம்தானே?
எனது கவலை வேறு தலையை எடுப்போம் என்று சொன்னதை கண்டு கொள்ளாமல் ரோமம் என்ற
வார்த்தையை பயன்படுத்தியுள்ளதை ஆபாசம்
என்று பெரியவர் கோபாலகிருஷ்ணன் பின்னூட்டம் எழுதி விடுவார் என்பதுதான்.
Wednesday, March 1, 2017
நெல்லை பாதி, உடுப்பி மீதி – சேர்ந்து செய்த . . . .
கடந்த வியாழனன்று புதுச்சேரியில் எங்கள் சங்கத்தின் ஒரு கருத்தரங்கம்
புதுச்சேரியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எங்கள் அகில இந்திய
இணைச்செயலாளர் ஒரு பிரச்சினைக்கு உதாரணம் சொல்கையில் “தோழர் ராமன் நன்றாக
சமைப்பார். இருந்தாலும் அவரே வேறு ஒரு தோழர் வீட்டில் போய் சமைத்தால்
சிரமப்படுவார்” என்று சொல்ல அவையில் ஒரே சிரிப்பொலி,
அவர் ஒரு உதாரணத்திற்காக சொன்னாலும் கூட, நீண்ட நாட்களாக என்னுள் உறங்கிக்
கொண்டிருந்த சமையல் கலைஞனை எழுப்பி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதன் விளைவு ஞாயிறு அன்று ஒரு புதிய முயற்சிக்கு வித்தானது.
ஒக்காரை என்ற நெல்லை மாவட்ட இனிப்பு பற்றிய ஒரு சமையல் குறிப்பையும்
ஹயக்ரீவா மட்டி என்ற உடுப்பி பகுதி இனிப்பு பற்றியும் சமீபத்தில் படித்தது
நினைவுக்கு வந்தது. இரண்டும் அடிப்படையில் கடலைப்பருப்பில் செய்யப்படுகிற இனிப்பு.
இந்த இரண்டு குறிப்புகளையும் இணைத்து புதிதான முறையில் முயற்சி செய்தேன்.
அந்த அனுபவம் உங்களுக்காக இங்கே.
தொடங்கும் முன்பாக முந்திரியை நெய் விட்டு வறுத்து தனியாக வைத்துக்
கொண்டேன். பிறகு கடலைப் பருப்பை நன்றாக வறுத்து குக்கரில் வேக வைத்து வேக வைத்த
பருப்பை மிக்ஸியில் கொஞ்சமே கொஞ்சமாக தண்ணீர் விட்டு அறைத்து வைத்துக் கொண்டேன்.
பின்னர் வாணலியில் சிறிதளவு தண்ணீரில் சர்க்கரையை (வெல்லம் போட்டும்
செய்யலாம். என் மகனின் நேயர் விருப்பமாக சர்க்கரை) பாகு வைத்து அது நன்றாக கொதிக்கையில்
கடலைப் பருப்பு கலவையை போட்டு கிளறி பிறகு தேங்காய் துறுவலையும் போட்டு கிளறிக்
கொண்டேன். எல்லாம் நன்றாக கலந்த பின்பு முந்திரியையும் சேர்த்து இறுதியாக கொஞ்சமாக
நெய், ஏலக்காய் பொடி போட்டு இறக்கி வைத்தேன்.
பெயர் எதுவும் வைக்கவில்லை.
பெயரில் என்ன இருக்கிறது. சுவை நன்றாக இருந்தால் போதாதா?
அது?
ஒரே நாளில் தீர்ந்து விட்டது. அதை விட வேறென்ன சான்று வேண்டும்!!!
Subscribe to:
Posts (Atom)




