Monday, February 6, 2017

கொடுத்ததை சொல்லாத விமு





ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது எழுத்தாளர் திரு வினாயக முருகன் அவர்கள் “சாகித்ய அகாடமி விருதை யாராவது திருப்பித் தந்தால் விருது தொகையைப் போல மூன்று மடங்கு தொகையை நான் தருகிறேன்”  என்று முகநூலில் எழுதியிருந்தார். பழைய அனுபவத்தின் அடிப்படையில் அதற்கான வாய்ப்பு எங்கே வரப்போகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

அதன் பின்பு நான் எங்கள் அகில இந்திய மாநாட்டிற்காக எர்ணாகுளம் சென்று விட்டேன். ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழக அரசால் மத்தியரசு பாணியில் நசுக்கப்பட்டது. நானும் திரு வினாயக முருகனின் அறிவிப்பை மறந்தே போய் விட்டேன்.

இரண்டு நாட்கள் முன்பாக திரு லக்ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” படித்து விட்டு அந்த நூலைப்பற்றியும் பகிர்ந்து கொண்டேன். படிக்காதவர்கள் இந்த இணைப்பிற்குச் சென்று கொஞ்சம் படித்து விடுங்கள்.

திரு லக்ஷ்மி சரவணகுமார் அவர்களின் முக நூல் பக்கத்திற்கு சென்று நான் எழுதியதை பின்னூட்டமாக பகிர்ந்து கொண்ட போதுதான் அவர் கானகன் நாவலுக்காக பெற்ற சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதை திருப்பித் தந்ததும் திரு வினாயக முருகன் தான் சொன்னபடியே நடந்து கொண்டதையும் அறிந்து கொண்டேன்.

லக்ஷ்மி சரவணகுமார், முகநூலில் எழுதியதை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 போராட்டம் துவங்கிய நாளில் நண்பர் விநாயக முருகன் முகநூலில் ஒரு அறிவிப்பு செய்திருந்தார். சாகித்ய அகதெமி விருதை திருப்பி அளிப்பவர்களுக்கு மூன்று மடங்கு தொகையை தருவதாக. நான் விருதை திருப்பி அளிப்பதாக சொன்னவுடனேயே என்னிடம் வந்து பணம் அனுப்ப வங்கிக் கணக்கு கேட்டார். நான் மறுத்துவிட்டாலும் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் உங்களுக்காக இல்லாவிட்டாலும் பதிப்பகத்துக்காக வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னதால். மோக்லி பதிப்பகத்தின் பெயரில் அத்தொகை பெற்றுக் கொள்ளப்பட்டது. அவரது நிதியில் இருந்து வெளிவரும் முதல் நூல் தை எழுச்சி. அவர் கொடுத்த தொகைக்காக புத்தக பதிப்பு விவரங்கள் அவ்வபொது அவருக்கு அனுப்பி வைக்கபடும்.
நன்றி விநாயக முருகன்.

தான் வாங்கிய யுவ புரஸ்கார் விருதை திருப்பி அளித்த திரு லக்ஷ்மி சரவணகுமாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

சொன்னபடியே பணம் கொடுத்தாலும் அதைப் பற்றி திரு வினாயக முருகன் ஒரு வார்த்தை கூட எங்கேயும் குறிப்பிடவில்லை. மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்க வேண்டாம் என்பதற்கு உதாரணமாக இருக்கிற திரு வினாயக முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நேசமும்.

ஸ்கூட்டி கேட்பதை மட்டும் விட்டு விடாதீர்கள் வி.மு. அதற்கான முழு உரிமை உங்களுக்கு உண்டு.

Sunday, February 5, 2017

இனி என்ட ஸ்டேட்டு





1994 ம் வருடம் அகமதாபாத்தில் எங்களது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாள் பேரணியின்போது வேட்டி கட்டிக் கொள்வது என்று முடிவெடுத்திருந்தோம். ஆனால் பேரணிக்கு முதல் நாள் சாமியார்கள் ஏதோ ஊர்வலம் போய் கலவரம் வெடித்ததால் பேரணி ரத்து செய்யப்பட்டு விட்டது. மாநாடு முடிந்து இரண்டு நாட்கள் கழித்துதான் எங்களுக்கு ரயில். காந்திநகரில் சில மாதங்கள் முன்பாக திறக்கப்பட்ட அக்ஷ்ர்தம் கோயில் சிறப்பாக உள்ளது. பார்க்க நன்றாக இருக்கும் என்று கூறியதால் நான் தோழர் ஆர்.பி.எஸ் என்ற மூத்த தோழர் (இப்போது மறைந்து விட்டார்) அண்ணாதுரை என்ற தோழர் (இப்போது அதிகாரியாக உள்ளார்) மூவரும் போனோம்.

முதல் நாள் கட்டிக் கொள்ள முடியாத வேட்டியை அன்று கட்டிக்கொண்டு போனோம். அக்ஷ்ர்தம் வாசலில் டிக்கெட் கவுண்டர் திறப்பதற்காக காத்திருந்த போது ஒரு பெண்மணி எங்களை நோக்கி வேகமாக வந்தார்.

நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறீர்களா என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

ஆம் என்றதும்

ஜெயலலிதாவைப் போய் முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று சொல்லி விட்டு போய்க் கொண்டே இருந்து விட்டார். தோழர் ஆர்.பி.எஸ்ஸிடம் சொன்னேன். நீங்கள் பாண்டிச்சேரி. அதனால் இந்த திட்டு உங்களுக்கு பொருந்தாது. அந்த சம்பவத்தை இன்னும் மறக்க முடியவில்லை.

ஜெயலலிதாவிற்கே இப்படி என்றால், சசிகலாவிற்கு என்ன சொல்வார்க்ள்?

(மோடியை இந்தியாவும் ட்ரம்பை அமெரிக்காவும் சர்கோஸியை பிரான்சும் தேர்ந்தெடுத்த கொடுமையெல்லாம் இருக்கிறது என்றாலும்)

நல்ல வேளை, எங்களின் அகில இந்திய மாநாடு முடிந்து விட்டது. அப்போது பேசிக்கொண்ட வெளி மாநிலத் தோழர்கள் எல்லாம் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக தமிழ்நாட்டு மக்களை பாராட்டினார்கள். உடனடியாக அவர்கள் யாரையும் சந்திக்க வேண்டிய தேவை இல்லை என்பது சந்தோஷம்.

இருப்பினும் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கிறது.

அதனால் விவேக் வழி என் வழி.

என்ட ஸ்டேட்டு கேரளா,
என்ட சீஃப் மினிஸ்டர் பினராயி விஜயன்

Friday, February 3, 2017

ஆதரவாய் மீண்டும் நீண்ட கரம்





அரியலூர் நந்தினி - தமிழகம் சமீபத்தில் மீண்டும் தலை குனிந்தது இந்த பதினாறு வயது பெண்ணிற்கு நடந்த கொடூரத்தால். திருமணம் செய்து கொள்வதாக ஆசை காண்பித்து ஏமாற்றி ஒரு கருவையும் அளித்து, பின் அப்பெண்ணை தனியாக வரவழைத்து நண்பர்களோடு சேர்ந்து கூட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி சீரழித்து கொலை செய்தான் ஒரு அயோக்கியன். மத்தியில் ஆளும் காவிக்கூட்டத்தின் ஒரு அங்கமான இந்து முன்னணியைச் சேர்ந்தவன் என்பதால் அவனை அழைத்து விசாரிக்கக் கூட தயங்கியது ஏவல் துறை. கிணற்றில் பல நாட்கள் முழுகி அழுகிய நிலையில்தான் சடலத்தை கண்டறிந்தார்கள்.  அதன் பின்புதான் அந்த குற்றவாளியை கைது செய்தார்கள். இந்த அராஜகத்திற்கு திட்டம் போட்டுக் கொடுத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளரை இன்னும் நெருங்க காவல்துறை தயாராக இல்லை.

இப்பிரச்சினையில் தொடக்கம் முதலாக போராடி வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இடதுசாரி அமைப்புக்கள்தான். 

கொல்லப்பட்டது தலித் பெண் என்பதாலோ, அல்லது கொலையாளிகள் இந்து முன்னணி என்பதாலோ மற்ற அரசியல் கட்சிகள் இப்பிரச்சினைக்கும்  தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று ஒதுங்கிப் போய் விட்டார்கள்.

இச்சூழலில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் அரியலூர் சென்று நந்தினியின் குடும்பத்தை சந்தித்துள்ளனர். அவர்க்ளோடு எங்களது தஞ்சைக் கோட்டத்தின் பொறுப்பாளர்களும் சென்றுள்ளனர்.

அக்குடும்பத்திற்கு எங்களது  தஞ்சைக் கோட்டச் சங்கம் ரூபாய்  25,000 நிதி உதவி அளித்துள்ளனர்.

பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாய் என்றென்றும் நீளும் முதல் கரமாய் இருப்பது எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பாரம்பரியம் என்பதை நிரூபித்த தஞ்சை கோட்டச் சங்கத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
 

நான்கு லட்ச ரூபாய் ஏமாற்றம்



தன் வாழ்க்கையில் இப்படி ஒரு பட்ஜெட் பார்த்தது கிடையாது என்று தமிழிசை சொல்கிறார்களே, அப்படி என்ன உள்ளது என்று  முழுமையாக படித்து பார்த்தேன். ஆனால் அருண் ஜெய்ட்லி  என்னை ஏமாற்றவில்லை. நான் எதிர்பார்த்தது போலவே உருப்படியாக எதுவும் இல்லை.

ஆனால் பல நடுத்தர மக்கள் வருமான வரி வரம்பில் மாற்றம் வரும் என்று நம்பி ஏமாந்தார்கள். பட்ஜெட்டிற்கு சில நாட்கள் முன்பாக வாட்ஸப்பில் ஒரு வதந்தி பரவியது. Central Board of Direct Taxes வழங்கிய தகவல் என்று அது சொன்னது.

நான்கு லட்ச ரூபாய் வரை வருமான வரி கிடையாது. 20 % ஸ்லாபெல்லாம் பத்து சதவிகிதமாக குறைந்து விட்டது. சேமிப்புக்கான வரம்பு இரண்டரை லட்சம் என்று ஏராளமாய் மோடி அள்ளிக் கொடுக்க முடிவு செய்து விட்டார் என்று வந்த வதந்தியை நம்பி பாவம் பலர் சுற்றுக்கெல்லாம் விட்டார்கள். 

படிக்காதவன் படத்தில் மக்கள் விவேக்கை டான் டான் என்று உற்சாகமாக கொண்டாடும்போது அவரது அல்லக்கைகள் "உங்களை இவ்வளவு பேர் நம்பறாங்களே, இவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க" என்று கேட்பார்கள். உங்களுக்கு நான் என்ன செஞ்சிருக்கேன் என்று விவேக் கேட்க "ஒன்னும் செய்யல" என்று வெறுப்போடு பதில் சொல்வார்கள். "அதுதான் இவங்களுக்கும்" என்று விவேக் சொல்வார்.

அது போன்ற அரசுதான் மோடி அரசு என்பதை இரண்டரை ஆண்டு அலங்கோல ஆட்சியைக் கண்டும் புத்தி வராமல் நம்பி ஏமாந்த அதி மேதாவி நடுத்தர மக்களைப் பார்த்து எனக்கு பரிதாபம் வரவில்லை. பட்ஜெட் அன்று காலையில் நம்பிக்கையோடு காத்திருந்த முகங்கள் மதியம் வாடிப் போனதை பார்க்கையில் சிரிப்புதான் வந்தது.

இத்தனை அடிபட்டும் திருந்தாவர்களை என்னவென்று அழைப்பது?

 
   

Thursday, February 2, 2017

அடர் காட்டுக்குள்ளே கை பிடித்து







ஒரு முன்னணி தோழரின் புதுமனை புகுவிழாவிற்காக ஆவடி வரை போய் வந்தேன்.

கையில் எடுத்துக் கொண்ட புத்தகம் லக்ஷ்மி சரவண குமார் எழுதிய "கானகன்". வீடு வருவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்பாக முடித்து விட்டேன். என் மீது படிந்திருக்கிற காட்டின் வாசனை மறையும் முன்பாக இந்த நூல் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இன்று எழுத திட்டமிருந்த பட்ஜெட்டைக் கூட ஒத்தி வைத்து விட்டேன்.  நடப்பு உறுப்பினர் இறந்தாலும் அது பற்றி கவலைப்படாமல் இன்றே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதமாக அராஜகமாக செயல்பட நான் ஒன்றும் மோடி அல்லவே!

புலி வேட்டையோடு தொடங்குகிறது நாவல். புலி வேட்டையாடும் தங்கப்பனுக்குப் பக்கத்தில் பரணில் அமர்ந்து வேட்டையை பார்த்தது போன்ற விவரிப்பை படிக்கையில் "என்ன ஒரு வீரன்யா!" என்ற உணர்வை உருவாக்குகிற ஆசிரியர் அடுத்த அத்தியாயத்திலேயே புலியின் வேட்டைக்காக வருத்தப்படுகிற பளியர்குடி மக்கள் மூலமாக தங்கப்பனை வில்லனாக உணர வைத்து விடுகிறார்.

காடு, அதை அழிக்கும் நகரத்து பேராசைக்காரர்கள், பாதுகாக்க நினைக்கும் பழங்குடி மக்கள், அவர்களை மிரட்டும் வனத்துறை, தங்களின் தடம் அழிக்கப்பட்டதால் தடுமாறி வெறி கொண்டு அலையும் யானைக்கூட்டம், கஞ்சா தோட்டத்தை பாதுகாக்க யானைகளை வேட்டையாட முயலும் முதலாளிகள், தங்களின் வீரதீர பிரதாபங்களை நிரூபிக்க வேட்டைக்கு வரும் பெரிய மனிதர்கள், இந்த பின்னணியில் வேகமாக நகரும் நூல் கானகன்.

வேட்டைக்காரன் தங்கப்பன், அவனது மூன்று மனைவிகள், மூன்றாவது மனைவியின் முதல் கணவன் சடையன், அவனுக்குப் பிறந்து தங்கப்பன் குடிசையில் வளரும் வாசி  ஆகிய முக்கிய பாத்திரங்கள் வழியே கதை பயணப்படுகிறது. வேட்டையில் பெரும் வெறி கொண்ட தங்கப்பனுக்கும் காட்டையும் விலங்குகளையும் பாதுகாக்க நினைக்கும் வாசிக்குமான முரண்பாடு கதையின் வேகத்தை அதிகரிக்கிறது.

காட்டின் உண்மையான பாதுகாவலர்கள், காட்டை முழுமையாக புரிந்து கொண்டிருப்பவர்கள் பழங்குடி மக்கள்தான் என்பதை "கானகன்" ரத்தமும் வேட்டையும் மாமிச சிதறல்களோடு அழுத்தமாக சொல்லியுள்ளது. ஜ்மீந்தார் நடத்தும் வேட்டையின் போதும் சரி, யானைகளை தங்கப்பன் கொல்லும் போதும் சரி நம்மை ஆசிரியர் பதற வைக்கிறார். பளியர்குடி மக்களின் இயல்பான வாழ்க்கை முறையையும் நமக்கு புரியவைக்கிறார்.

தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் உலா வருபவர்களின் நோக்கம் இயற்கை வளத்தை சூறையாடுவதுதான் என்பதையும் அப்பாவி மலை வாழ் மக்களுக்கு உண்மையிலேயே உதவ வருபவர்கள் சிவப்புச்சட்டைக் கம்யூனிஸ்டுகள் என்பதையும் கூட கதையின் போக்கில் போகிற போது சொல்லிப் போகிறார்.

கதையின் முடிவு - Poetic Justice என்று சொல்வதுதான் மிகச் சரியான வார்த்தை.  

அது என்ன என்பதை நீங்களே படித்து தெரிந்து கொள்வதுதான் சரியாக இருக்கும். 

சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுக்கு மிகவும் பொருத்தமான நூல்.

ஒரு ஆறு மணி நேரம் என்னை அடர்ந்த காட்டிற்குள் கை பிடித்து கூட்டிப் போன லக்ஷ்மி சரவண குமாருக்கு நன்றியும் அன்பும் ஏராளமாய். 



 

Wednesday, February 1, 2017

இது வேறு எழுத்தாளர், வேறு உச்ச நடிகர் சர்ச்சை




அமிதாப் பச்சனை யாரென்று கேட்ட எழுத்தாளர் க.நா.சு பற்றி நேற்று பகிர்ந்து கொண்ட போதே சமீபத்திய சர்ச்சை ஒன்று நினைவிற்கு வரத்தான் செய்தது.  அந்த பதிவில் எதற்கு அதையும் எழுதிக் கொண்டு என தவிர்த்து விட்டேன்.

சாரு நிவேதிதாவிற்கு கை கொடுக்காமல் போன கமலஹாசன் பற்றிய அவரது நீண்ட புலம்பலை இந்த இணைப்பில் அவசியம் படியுங்கள்.  இது நியாயமில்லை கமல் என்ற பதிவு அது.

எழுத்தாளர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற சாருவின் புலம்பலை உங்களால் நிச்சயம் உணர முடியும். தயவு செய்து படித்து விடுங்கள். ஆசானை படிப்பவர்களுக்கு இது சிரமம் இல்லை.

மரியாதை என்று சொல்லும் போது வேறு ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறதே!

சரி, அதை நாளை பார்த்துக் கொள்ளலாம்.

பட்ஜெட் தாக்கல் - மோடியின் அராஜகம்




இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பற்றி எதுவும் இந்த பதிவில் எழுதப் போவதில்லை. முழுமையாக படித்த பின்புதான் எழுதுவேன்.

ஆனால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ததே மோடியின் இன்னொரு அராஜக நடவடிக்கை. நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரான வழக்கமான அயோக்கியத்தனம்.

தற்போதைய உறுப்பினர்கள் யாராவது இறந்து போனால் அவருக்கு அஞ்சலி செலுத்தி நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பது என்பதுதான் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகின்ற மரபு. அதை காலில் போட்டு மிதித்துள்ளார் மோடி.

கேரள மாநிலம் கண்ணூர் தொகுதி மக்களவை உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.அகமது நேற்று அவை நடக்கையிலேயே மாரடைப்பால் மயங்கி விழுகிறார். இன்று காலையில் அவர் இறந்து போனதாக அறிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற மரபுப்படி இன்று அவையை ஒத்தி வைக்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி அவை நடந்துள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தன் தந்தையை பார்க்க மருத்துவமனை அனுமதிக்கவில்லை என்று அகமதின் மகன் தெரிவித்துள்ளார். இன்றைய பட்ஜெட் தாக்கலில் சர்ச்சை வரக்கூடாது என்பதற்காக தன் தந்தையின் மரணச் செய்தியை வெளியிடாமல் இருக்க அரசு முயன்றதோ என்ற சந்தேகம் வருகிறது என்பதை புறக்கணித்து விட முடியாது.

அப்பல்லோ மர்மங்களை சமீபத்தில் பார்த்தவர்கள்தானே நாம். 

எட்டு முறை எம்.பி யாக இருந்தவருக்கு மோடி தரும் மரியாதை இதுதான். கார்ப்பரேட்டுக்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பதை ஒரு நாள் கழித்து அறிவித்தால் குடியா முழுகி விடும்? அப்படி என்ன அவசரம்?
 
 இதுதான் மோடியின் அராஜகம். எவன் செத்தா எனக்கென்ன என்ற திமிர்.