Sunday, July 5, 2015

சிறியதாயினும் சிறப்பு



ஹிந்து பத்திரிக்கையில் ஒரு செய்தி. பெரம்பலூர் மாவட்டத்தில் பிரஷாந்த் என்ற மாணவர் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் சிரமப்படுவதாக வந்த அந்த செய்தியை படித்த அகில இந்திய இன்சூரன்ஸ் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம், எங்களது தஞ்சைக் கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர் ஆர்.புண்ணியமூர்த்தியை தொடர்பு கொண்டு" ஏதாவது உதவ முடியுமா பாருங்களேன்" என்று சொல்கிறார்.

தஞ்சைக் கோட்டச் சங்கத்தின் தோழர்களும் உடனே செயல்பட்டு அந்த மாணவனை தொடர்பு கொண்டு முப்பதாயிரம் ரூபாய் நிதி அளித்து பிரஷாந்த் கல்லூரியில் கட்டணம் செலுத்த உதவினார்கள்.

நேற்று தஞ்சையில் நடைபெற்ற எங்கள் சங்க விழாவில் அந்த மாணவனுக்கு நினைவுப் பரிசளித்த சால்வை போட்டு கௌரவித்தார்கள். மிகுந்த மன நிறைவினைக் கொடுத்த நிக்ழ்வு இது. 

பின் குறிப்பு : இது மிகச் சிறிய உதவி என்று தஞ்சைக் கோட்டத்தின் தலைவர் தோழர் ஆர்.புண்ணியமூர்த்தியும் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.செல்வராஜும் அழுத்திச் சொன்னதால் "சிறியதாயினும்" என்று தலைப்பு கொடுத்துள்ளேன்.

ஆனால் வள்ளுவர் சொன்னது போல காலத்தே செய்த அந்த உதவி மண்ணை விட மகத்தானது, விண்ணை விட சிறப்பானது.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பாரம்பரியம் இதுதான்.

Friday, July 3, 2015

கல்யாணக் கச்சேரி கேட்கவும் கூட…..






பொதுவாக திருமண வரவேற்பு நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் கலைஞர்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அது கர்னாடக இசையாக இருந்தாலும் சரி, மெல்லிசையானாலும் சரி. அவர்கள் பாட்டிற்கு பாடிக் கொண்டிருப்பார்கள். திருமணத்திற்கு வந்தவர்களோ, மேடைக்கு சென்று மணமக்களைப் பார்த்து மொய் கவரையோ அல்லது பரிசுப் பொருளையோ கொடுத்து விட்டு டைனிங் ஹாலுக்கு சென்று பந்தியில் இடம் பிடிப்பதில் மும்முரமாக இருப்பார்கள். இன்றைய வேகமான வாழ்வில் நிலைமை அப்படியாகி விட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் வீடு சேர வேண்டும் என்று நினைப்பதும் தவறல்ல. அப்படி இருக்கையில் கல்யாணக் கச்சேரிகளை நிதானமாக எங்கே கவனித்து ரசிப்பது?

ஒரு மாறுதலான காட்சியை கடந்த ஞாயிறன்று சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பில் பார்க்க முடிந்தது. அது ஒரு கர்னாடக இசை நிகழ்ச்சி.  வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், கடம், கஞ்சிரா, தபேலா, மோர்சிங் என்று இசைக்கருவிகள் மட்டுமே. மைக்காரர் கொஞ்சம் படுத்தினாலும் இரண்டாவது பாடலில் சரியாகி விட்டது.

மூன்றாவது பாடலின் போது மணமக்கள் மேடைக்கு வந்து விட்டதால் கியூ வரிசையில் இடம் பிடிக்க பாதி பேர் ஓடினாலும் (என்னையும் சேர்த்துதான். நான் வேலூர் திரும்ப வேண்டிய ஆளுங்க) பாதிப் பேர் அசையாமல் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்ததே ஒரு சாதனை.

முதல் கடமை (அதுதான் பரிசுப் பொருள் தருவது) முடிந்து அடுத்த கடமைக்குச் (பந்திக்கு முந்துவது) செல்லும் முன் “எந்தரோ மகானுபாவ”னோடு கொஞ்ச நேரம் நானும் ஸ்ரீ ராகத்தில் சஞ்சாரித்துக் கொண்டிருந்தேன்.

சாப்பிட்டு முடித்த பின்பு சொல்லிக் கொண்டு போகலாம் என்று மீண்டும் வந்தால் அந்த பாதி பேர் இன்னும் அசையாமல் கச்சேரியை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து  “கொஞ்சம் டிஸ்டர்ப் செய்யாதீங்க” என்று ஒருவர் அதட்டவும் செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அன்றைய தினம் அக்கலைஞர்கள் மன நிறைவோடு உறங்கியிருப்பார்கள்.

ரசிக்க யாரும் இல்லையெனில் அந்த கலைக்கு என்ன மதிப்பு?

ஒரு சந்தேகம் : தபேலா வாசிக்கிறவர்கள் என்றால் ஜாகீர் ஹூசேன் மாதிரிதான் முடி வைத்திருக்க வேண்டுமா? பல தபேலா கலைஞர்கள் அப்படிப்பட்ட முடியலங்காரத்துடன்தான்  இருக்கிறார்களே ஏன்?

அவர்களுக்கு வேலை மிச்சம்தான். ஆனால்???





கடந்த வாரம் அரக்கோணம் அருகே கீழ்ப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற பஞ்சமி நில மீட்புப் போராட்டம் பற்றி எழுதியிருந்தேன். அப்போராட்டம் முடிந்து வேலூர் திரும்பும் வழியில் காபி குடிக்கலாம் என்று காவேரிப்பாக்கத்தில் உள்ள “முருகன் இட்லி கடை” யின் காவேரிப்பாக்கம் கிளைக்குள் நுழைந்தோம்.

பிளாஸ்டிக் கப்பில்தான் தண்ணீர் கொடுத்தார்கள். ஒரு எவர்சில்வர் டம்ப்ளர் போன்ற வடிவில் செய்யப்பட்ட பாத்திரத்திற்குள் பிளாஸ்டிக் கப்பை சொருகி தண்ணீர் தருகிறார்கள்.

பார்க்க புதுமையான ஏற்பாடாகத் தெரிந்தாலும் இரண்டு விதங்களில் மோசமானது. பாத்திரம் கழுவும் ஒரு தொழிலாளியின் வேலையை பறிக்கிறது. இன்னொன்று மக்காத தன்மையுடைய பிளாஸ்டிக் மண்ணை மாசு படுத்தும் தன்மையுடையது.

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் முன்னூறு கார்களாவது நின்று போகும் என்றார்கள். அப்படியென்றால் குறைந்த பட்சம் ஆயிரம் பேராவது வந்து போவார்கள். அப்படியானால் ஒரு நாளைக்கு ஆயிரம், மாதத்திற்கு முப்பதாயிரம், ஒரு வருடத்திற்கு மூன்று லட்சத்து அறுபதாயிரம் பிளாஸ்டிக் கப்கள் இந்த ஒரு கடையில் மட்டும் கிடைக்கிறது. அப்படியென்றால் எல்லா கடைகளையும் சேர்ந்தால் மலைப்பாக வருகிறது.

சம்பந்தப்பட்டவர்கள் கவனித்து நல்ல முடிவெடுப்ப்பார்கள?

எம்.பி க்கள் ஊதியத்தை உயர்த்தும் முன்பாக

 http://im.rediff.com/news/2012/aug/24ls1.jpg

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை நூறு சதவிகிதமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை எழுபத்தி ஏழு சதவிகிதமும் மற்ற படிகளில் கணிசமான உயர்வும் அளிக்க வேண்டும் சாமியார் அவைத்யநாத்  தலைமையிலான நாடாளுமன்றக்குழு பரிந்துரை செய்துள்ளதுதான் இன்றைய தலைப்புச் செய்தி.

நானூறுக்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் எம்.பிக்களாக உள்ள போது அவர்களுக்கு ஊதியமே தேவையா என்ற கேள்வி பலர் மனதில் எழுகிறது. இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் ஊதியத்திற்கான தேவை என்பதே கொஞ்சமும் கிடையாது. ஊதியமே கொடுக்காவிட்டால் கூட அவர்களது பிழைப்பு அமோகமாக நடக்கும். ஊதியத்திற்காகவா  கையூட்டு கொடுத்து சீட் வாங்கி, வாக்குக்கு பணம் கொடுத்து எம்.பி யாகிறார்கள்! 

ஆனாலும் வந்தவரை ஆதாயம் என்று ஊதியமும் வாங்கிக் கொள்கிறார்கள். என்னென்ன சலுகைகள் உண்டோ, அதையெல்லாம் வாரி சுருட்டிக் கொள்கிறார்கள். முன்னொரு காலத்தில் தொலைபேசி இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பு இவையெல்லாம் விற்கப்பட்டது நினைவில் உள்ளதா? எங்கள் ஊர் முன்னாள் எம்.எல்.ஏ  தனது கடைசி இரண்டு டேர்மில் "எம்.எல்.ஏ க்களுக்கு சென்னையில் வீட்டு மனை வேண்டும்" என்ற கோரிக்கைக்காக மட்டுமே வாய் திறந்தார் என்பது ஒரு கிளைக்கதை.

எங்களைப் போன்ற ஊழியர்கள், எங்களுக்கு மேலேயுள்ள அதிகாரிகள் என ஊதியம் வாங்கும் எல்லோருக்குமே சில பொறுப்புக்கள், பணிகள் உண்டு. அந்த பணிகளைச் செய்து விட்டுத்தான் நாங்கள் ஊதியம் வாங்குகிறோம். 

அது போல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட பல பணிகள், கடமைகள் உண்டு.

முதல் கடமையாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். (இப்படி ஒரு நிபந்தனை போட்டால் மோடி பெயில்)

மசோதாக்கள் உள்ளிட்டவற்றில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். 

தனது தொகுதிப் பிரச்சினைகளை எழுப்பிட வேண்டும்.

தொகுதிக்குள் இருந்து மக்களின் குறை கேட்டு சரி செய்ய வேண்டும்.

தொகுதி வளர்ச்சி நிதியை முழுமையாக முறையாக பயன்படுத்திட வேண்டும்.

இவையெல்லாம் குறைந்த பட்சக் கடமைகள். இதையெல்லாம் எல்லா எம்.பிக்கள் சரியாக செய்து விட்டு பிறகு ஊதிய உயர்வை கோருவது சரியாக இருக்கும்.

இன்னும் முக்கியமான இரண்டு விஷயங்கள் இருக்கிறது. 

எம்.பி க்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் முன்பாக மத்தியரசு, மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதை நிறுத்த வேண்டும்.   

குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து பதினைந்தாயிரம் ரூபாயை குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்திட வேண்டும். இந்த கோரிக்கை நிகழவிருக்கும் இரண்டு செப்ட்ம்பர் வேலை நிறுத்தப் போராட்டத்தின் மிக முக்கியமான கோரிக்கை. 

முதலில் இந்தியத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய்ங்கள். பிறகு உங்கள் ஊதியத்தைப் பற்றி கவலைப்படுங்கள்.

 

 

Thursday, July 2, 2015

விஜய் மேல என்னப்பா கோபம்?



ஒரு பத்து நாட்களுக்கு முன்பாக ஒரு தோழரின் தந்தை இறந்து போனார். அந்த துக்க வீட்டிற்குப் போன போது  ஒரு வித்தியாசமான காட்சி கண்ணில் தென்பட்டது.

அங்கே தப்பாட்டம் இசைக்க வந்திருந்தவர்களில் ஒருவரின் கையில் இருந்த தப்பில் (அது ஃபைபரால் செய்யப்பட்டது) விஜயின் படம் வரையப் பட்டிருந்தது. சரி விஜய் ரசிகர் போல, தன்னுடைய வாத்தியத்தில் அவரது படத்தை வரைந்து வைத்திருக்கார் என்று எண்ணிக் கொண்டேன்.

நேற்று இன்னொரு தோழரின் தாயின் மறைவுக்காக சென்ற போது அதே போல இன்னொருவரும் விஜயின் படத்தை தன்னுடைய தப்பில் வரைந்து வைத்திருந்தார். இருவரும் வேறு வேறு. ஒரு வேளை ஒரே தப்பாகக்கூட இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.

வேகமாக தப்பிசைக்கும் போது ஒவ்வொரு அடியும் விஜயின் படத்தின் மேல்தான் விழுந்து கொண்டிருந்தது. எந்த ஒரு ரசிகராகவது தன்னுடைய அபிமான நட்சத்திரத்தின் மீது அப்படி வேகமாக அடிப்பார்களா என்று ஒரு சந்தேகம் கூட வந்தது.

ஒரு வேளை "சுறா", "வேட்டைக்காரன்" போன்ற படங்களைப் பார்த்து நொந்து போன ரசிகர்களாக இருப்பார்களோ?



பின் குறிப்பு : மேலேயுள்ள படம் நான் செய்த காபி, பேஸ்ட் வேலை

Wednesday, July 1, 2015

அமைதியாகி விட்டதே சாலைகள்?



வாகனங்களின் இரைச்சல் சப்தம் இல்லை,
பின்னால் ஒலிக்கும் ஹாரனும் இல்லை.
குறைந்தது இரு முறையாவது ஒலிக்கும்
அலைபேசியின் அழைப்போசையும் இல்லை.
நாய்களின் குரைப்பு கூட கேட்கவில்லை.
சாலைகளில் ஒன்றும் மாற்றமில்லை.
என் தலையில்தான் இன்று ஹெல்மெட்
 

கதைகளைத் தாண்டிய உண்மை



 

படைத்தலும் காத்தலும் அழித்தலும்
கடவுளின் பணியென்று
கதைகள் சொன்னதுண்டு.

கதைகளைத் தாண்டி,
உண்மையை உணர்ந்து
உரைக்கிறேன் இங்கே.
 
படைத்தலும் காத்தலும்
தீயதை அழிக்கும்
நிஜமான் சக்தி பற்றி

எல்.ஐ.சி எனும் நிறுவனத்தை
போராட்டம் மூலம் படைத்தாய்!


காப்பீடு அளிக்கும் நிறுவனத்திற்கே
காப்பீடு அளித்து காவல் அரணாய்
நிற்பது உன் போராட்டமன்றோ!

பாரதப் பிரதமர்கள் முதல்
பன்னாட்டுக் கம்பெனிகள் வரை
தீட்டிய சதிகளையெல்லாம்
அழித்திட்ட தீரமும்
உனக்குத்தானே சொந்தம்!

எல்.ஐ.சி யின் உதயம்
உந்தன் உதயத்தால்தான்
ஆனது சாத்தியம்.

எல்.ஐ.சி
இன்றும் இருப்பதும்
உன்னால்தான் என்பதும்
சத்தியம்.

அறுபத்தி ஐந்து அகவை கடந்த
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
வாழ்க, வாழ்க, வாழ்கவே என
வாழ்த்துப்பா பாட
வாரீர், வாரீர்