Saturday, February 8, 2014

இழிவு படுத்தாதீர்கள் – கோபத்தோடு ஒரு குரல்



அடர்ந்த அந்த
கானக வாழ் ஜீவராசிகள்
கோபமும் குமுறலுமாய்
குறைகளைக் கொட்டினார்கள்.

எங்களுக்குள் மதமும் இல்லை,
மத மோதலுமில்லை.
உங்கள் மத்தியில் வாழ்கிற போதுதான்
யானைக்குக் கூட மதம் பிடிக்கிறது.

நாற்காலி ஆசை
எங்களுக்கு இல்லை.
நாற்காலிக்காக  விலங்கு வேட்டை
நடத்தியதும் இல்லை.

சிங்கம், புலி, யானை, நரி
மான், மயிலென்று
விதம் விதமாய் நாங்கள்
இருந்தாலும்
மனிதர்களைப் போல்
தங்களுக்குள் மோதுவதில்லை.
பகைமைத் தீயை
மூட்டி விட்டு
அதிலே குளிர்
காய்வதுமில்லை.

பொய்கள் பழக்கமில்லை,
மனைவியை தள்ளி வைக்கும்
வழக்கமும் எங்களுக்கில்லை.

பின் ஏன்
வண்டலூர் வருபவரை
மிருகமெனச் சொல்லி
எங்களை ஏன்
இழிவு செய்கிறீர்?

Friday, February 7, 2014

இவர்கள்தான் இந்தியாவை காப்பாற்றப் போகிறார்களாம்?






இன்றைய மன்மோகன் அரசும் சரி, நேற்றைய வாஜ்பாய் அரசும் சரி இந்திய பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவே தங்கள் கொள்கைகளை வகுத்து வைத்துள்ளனர்.

சாமானிய மனிதனுக்கு ரேஷன் அரிசி கொடுப்பதற்கோ இல்லை எரிவாயு சிலிண்டருக்கோ செலவாகும் தொகையை மானியம் என்று கொச்சைப் படுத்தி அதனால் எங்களின் உறக்கமே தொலைந்து போகிறது என்று புலம்பிக் கொண்டே பெரு முதலாளிகளுக்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் நேரடியாக வாரி வாரி வழங்குவார்கள்.

இதைத்தவிர ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, இத்யாதி இத்யாதி என்று அடிமாட்டு விலைக்கு ஒதுக்கீடு செய்வது தனி. இந்த முதலாளிகளுக்கு வாரி வாரி வழங்கினால் அவர்கள் தொழில்களில் முதலீடு செய்து அது அப்படியே சொட்டு சொட்டாக வடிந்து கடைசி மனிதனுக்கு வந்து சேரும் என்று வியாக்யானமும் செய்வார்கள்.

அப்படி அரசு வாரி வாரி கொடுப்பதை பெற்றுக் கொள்பவர்கள் தங்கள் முதலீடுகளை எப்படி செய்கிறார்கள் என்று ஒரு சின்ன சாம்பிள் பாருங்கள்.

2011 – 12 நிதியாண்டில் சில இந்திய பெரு முதலாளிகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் செய்த முதலீடுகளின் பட்டியல் கீழே உள்ளது.

எண்
பெயர்
உள் நாட்டில் செய்த முதலீடு
(டாலர்களில்)
வெளி நாட்டில்
செய்த முதலீடு
(டாலர்களில்)
1
முகேஷ் அம்பானி
2.7 பில்லியன்
8 பில்லியன்
2
அனில் அம்பானி
400 மில்லியன்
3 பில்லியன்
3
ரத்தன் டாடா
200 மில்லியன்
3 பில்லியன்
4
சுனில் மிட்டல்
2 பில்லியன்
16 பில்லியன்
5
சஷி ரூயா
200 மில்லியன்
1.2 பில்லியன்

இவர்கள்தான் இந்தியாவை உய்விக்க அவதாரம் எடுத்தவர்கள் என்ற ரீதியில் அரசுகள் செயல்படுகிறது. அவர்கள் தங்கள் லாபத்தை பெருக்கிக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் வறுமையில் வாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

பிரதமர் கனவில் மிதக்கும் மோடியும் ராகுலும் இந்த பண நாயகர்களின் எடுப்பார் கைப்பிள்ளைகள்தான்.

ஜனநாயகத் தேர்தலில் உங்களின் வாக்கு ராகுலுக்கோ, மோடிக்கோ சென்றால் அது இந்த பண நாயகர்கள் தழைக்க செலுத்தும் வாக்காகவே அமையும்.  உங்கள் வாக்கு விரயமாக வேண்டுமா?

சிந்திப்பீர், இடதுசாரிகள் சொல்லும் மாற்றுக் கொள்கைகளை ஆதரிப்பீர்.

Thursday, February 6, 2014

தெலுங்கானா - எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

 http://www.thehindu.com/multimedia/dynamic/01745/KIRAN_KUMAR_REDDY__1745114f.jpg

 http://archives.deccanchronicle.com/sites/default/files/mediaimages/gallery/2013/Aug/2901p-Kiran-Kumar-Reddy-2_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0.jpg

காங்கிரஸ் கட்சி தெலுங்கானா விஷயத்தில் ஒரு நாடகம் நடத்திக்
கொண்டிருக்கிறதோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.

தெலுங்கானா தொடர்பாக காங்கிரஸ் அரசு நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றிய மசோதாவை ஆந்திராவின் சட்டப் பேரவையில்
ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி தோற்கடித்து விட்டார். தெலுங்கானா எதிர்ப்பாளர்களோடு வெளிப்படையாக விவாதிக்கிறார். 
புது டெல்லி வந்து தர்ணா நடத்துகிறார். தலைமைக்கு எதிரான
வெளிப்படையான போர் இது.

காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு கலாச்சாரம் உண்டு. அதனுடைய
வரலாற்றில் எந்த ஒரு முதலமைச்சருடைய உயரமாவது அரை
இஞ்ச் உயர்ந்தாலே அவரை மாற்றி விடுவார்கள். அந்த முதல்வரின்
எதிர் கோஷ்டி எம்.எல்.ஏ க்கள் ஒரு பத்து பேர் டீ சாப்பிட
ஒன்றாக சேர்ந்தாலே அந்த முதல்வரை மாற்றி விடுவார்கள்.
பாதியில் பதவி பறிக்கப்பட்ட காங்கிரஸ் முதல்வர்கள் சங்கம்
என்று துவக்கினால் அதுவே ஒரு மாநாடு போல இருக்கும்.

அப்படி இருக்கும் போது கட்சித் தலைமைக்கு எதிராக 
கிரண் குமார் ரெட்டி வெளிப்படையாக கலகம் செய்கிற போது
காங்கிரஸ் தலைமை ஏன் மவுனம் காக்கிறது? அந்த அளவிற்கு
அந்த தலைமை பலவீனமாகி விட்டதா?

இல்லை தெலுங்கானா பிரிப்பது போல நாங்கள் சொல்கிறோம்,
எதிர்ப்பது போல நீ நடி என்று காங்கிரஸ் கட்சி பேசி வைத்துக்
கொண்டு நாடகம் நடிக்கிறதோ என்று எனக்கு சந்தேகம்.

விஷயம் தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்களேன்.

நீங்கள் அறிந்து கொள்ள... அனானிகள் பின்னூட்டம் போட

எங்களது அகில இந்திய மாநாட்டு அறிக்கையிலிருந்து சில முக்கியமான
பகுதிகளை எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலார் தோழர்
கே.சுவாமிநாதன்  தமிழாக்கம் செய்திருந்ததை  சில தினங்கள் முன்பு
பதிவு செய்திருந்தேன்.

இன்னும் சில முக்கியமான பகுதிகள் என் தமிழாக்கத்தில் கீழே.





* முதலாளித்துவ நாடுகள் தாங்கள் இதுவரை சந்திக்காத பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் வாழ்க்கைத்தரத்தின் மீதும் இதுவரை காணாத தாக்குதல்களை நடத்தி உள்ளது. லட்சக்கணக்கான பணிகள் வெட்டப்பட்டுள்ளன. சமூக நலத் திட்டங்கள் சுருக்கப்பட்டுள்ளன. நீண்ட நெடிய போராட்டங்களால் எந்த உரிமைகளெல்லாம் வென்றெடுக்கப்பட்டதோ அவையெல்லாம் காற்றில் வீசியெறியப்பட்டுள்ளது. சிக்கனம் என்பதே மந்திர வார்த்தையாகி விட்டது. ஆனால் தொழிலாளி வர்க்கம் இந்த தாக்குதல்களுக்கு அடி பணிந்து விடவில்லை. அவர்களின் வாழ்வாதாரத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு எதிராக உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட்டு போராடியதை இக்காலகட்டத்தில் பார்த்தோம்.

* மக்களின் வாங்கும் சக்தி, கடன் வலையை மிகவும் விரிவுபடுத்தியதால் செயற்கையாக அதிகரிக்கப்பட்டது. கடன் வசதியை பெருக்குவதன் மூலம் கிராக்கியை செயற்கையாக தக்க வைத்து அதன் மூலம் சிக்கலை தவிர்க்க எண்ணியது என்பது முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடு. இந்த முரண்பாட்டின் பிரதிபலிப்பே தற்போதைய சிக்கலாக உலகெங்கும் எதிரொலிக்கிறது.

* “முதலாளிகள் எப்போதுமே தங்களது சிக்கல்களிலிருந்து விடுபட இன்னும் கடுமையான, அழிவை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு வழி வகுப்பார்கள். அதே போல் சிக்கல்களை மட்டுப்படுத்த எது காரணியாக இருந்ததோ அதையும் அழித்து விடுவார்கள்” என்று கம்யூனிஸ்ட் பிரகடனத்திலேயே தோழர்கள் மார்க்ஸும் ஏங்கல்ஸும் குறிப்பிட்டுள்ளனர் என்றால் அவர்கள் எவ்வளவு சிறந்த தீர்க்கதரிசிகள்!

* உழைக்கும் மக்கள் நெருக்கடியின் பாதிப்புக்களுக்கு உள்ளான போது இந்த நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கோ கூடுதல் ஊதியங்களும் பெருத்த போனஸையும் சன்மானமாக வழங்கப்பட்டது. இது இயல்பாகவே சாமானிய மக்களை கொதிப்படையச் செய்தது. நெருக்கடிக்குக் காரணமானவர்களே அதற்கான சுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையோடு இயக்கங்கள் தொடங்கியது. இந்த இயக்கம் அமெரிக்காவின் எல்லைகளைக் கடந்தும் விரிந்தது.

* அமெரிக்காவின் நெறிமுறைப் போலித்தனம் உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கும் அதிசயம். வியட்னாம் போரின் போது அமெரிக்கா பயன்படுத்திய ஏஜெண்ட் ஆரஞ்சு என்ற ரசாயனப் பொருள் சுற்றுச்சூழலில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தி லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் போதே ஊனமாக பிறக்கும் வண்ணம் சேதங்களை உருவாக்கியது. மிகவும் சமீபத்தில் கூட அமெரிக்கப்படைகள் இராக்கில் யுரேனியம் மற்றும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பிரயோகித்து மக்களை வாட்டி வதைத்தது. இப்போது அதே ஏகாதிபத்திய சக்தி தன் சட்ட விரோத ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்துகிறது.

* அமெரிக்கா 2012 ம் ஆண்டில் மட்டும் தனது ராணுவச் செலவினங்களுக்கு மட்டும் 682 பில்லியன் டாலர் செலவிட்டது. உலக ஆயுத விற்பனையில் நாற்பது சதவிகிதம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 2012 ல் மட்டும் 1753 பில்லியன் டாலர் அளவிற்கு ஆயுதத் தளவாட விற்பனை நடந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்த புத்தாயிரத்தாண்டு வளர்ச்சிக்கான இலக்கை வெற்றிகரமாக அமலாக்க இத்தொகையே போதுமானது. உலகில் அமைதியை உருவாக்க பாடுபடுவதாக மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா தனது பெரு நிறுவனங்கள் ஆயுதங்களை தயாரித்து விற்று ஏழைகளின் துயரத்திலிருந்து லாபம் ஈட்ட அனுமதிக்கிறது.

* அமெரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என்ற நிலையை அமெரிக்கா கொண்டுள்ளது. உலக கார்பன் வெளியீட்டில் நான்கில் ஒரு பகுதி அமெரிக்காவில்தான் நிகழ்கிறது. அந்த அளவை குறைத்துக் கொள்ள முடியாது என்றும் கூறி விட்டது.

* முதலாளித்துவம் தன் குணாம்சத்திற்கு ஏற்ப  நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்களின் தோள்களுக்கு மாற்ற முயல, அடி பணியாத உழைக்கும் மக்கள் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்காக போராடுகிறது. தனது விருப்பத்திற்கு ஏற்ப உலக அமைப்பையே மாற்ற ஏகாதிபத்திய முயற்சிகளுக்கு எதிராக போராடும் மக்களின், நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சோஷலிச நாடுகளும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் உலகில் உள்ள உழைப்பாளி மக்களுக்கு மிகச் சிறந்த உதாரணத்தைக் காட்டியுள்ளது. மாற்றை நனவாக்க உழைப்பாளி வர்க்கம் கடுமையாக போராட வேண்டும்.


இந்தியப் பொருளாதாரம் அனைத்து அம்சங்களிலும் சிக்கலை அனுபவிக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளை பின்பற்றியதன் விளைவே இந்த நெருக்கடி. இக்கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்குப் பதிலாக துரதிர்ஷ்டவசமாக மத்தியரசு அதையே விடாப்பிடியாக தொடர்ந்து அமலாக்குகிறது. பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்நிலையில் பெருத்த பாதிப்பை உருவாக்கி அவர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த அதிருப்தியை வலதுசாரி அடிப்படைவாதிகள் தங்களின் மதவாத அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நவீன தாராளமயமாக்கலை ஒதுக்கி வைத்து விட்டு ஊழல் பற்றி நாம் விவாதித்தால் நம்மால் அதற்கான தீர்வை கண்டறியவே முடியாது. ஏனென்றால் ஊழல் என்பது முதலாளித்துவத்தின் ஒரு பகுதி.

நிதி மூலதனத்தால் இயக்கப்படும் ஏகாதிபத்திய உலகமயம், “பின் நவீனத்துவம்” என்றொரு கலாச்சார ஆயுதத்தை கண்டெடுத்தது. பின் நவீனத்துவத்தின் படைப்பான “அடையாள அரசியல்” மக்களை வர்க்க ரீதியாக திரட்டுவதற்கு எதிரான பணியை செய்கிறது.

இடதுசாரிகள் பலவீனமாக உள்ள இடங்களில் அடையாள அரசியல் அடிப்படையில் மக்களை திரட்டுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இடதுசாரிகளின் வளர்ச்சியை தடுக்க அடையாள அரசியலை கருவியாக பயன்படுத்துகின்றன.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எழுப்பிய எதிர்ப்புக்கள், கவலைகள், கருத்துக்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டே   எல்.ஐ.சி சட்ட (திருத்த) மசோதா 2009 நிறைவேற்றப்பட்டுள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நிகழ்த்திய போராட்டங்கள், பிரச்சார இயக்கங்கள் மற்றும் முயற்சிகள் மூலமே எல்.ஐ.சி யின் பொதுத்துறைத் தன்மை பாதுகாக்கப்பட்டது.

உலகப் பொருளாதார நெருக்கடியின் கரிய நிழல் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்களையும் துரத்தியது. பிரிட்டனின் இரண்டாவது பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான அவயா, 2012 ல் தனது அமெரிக்க நிறுவனத்தை விற்றதன் மூலம் 4.5 பில்லியன் பவுண்டுகளை இழந்தது. அதனால் 2000 ஊழியர்களின் வேலை பறி போனது. இன்னொரு பெரிய நிறுவனமான ஏ.எக்ஸ்.ஏ வில் ஐநூறு ஊழியர்கள் பணியிழந்தனர். இங்கிலாந்தின் நிதித்துறையில் மட்டும் அக்டோபர் 2012 லிருந்து மார்ச் 2013 வரை 43,000 ஊழியர்கள் பணியிழந்துள்ளனர்.

இந்திய தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாடும் மாறுபட்டது இல்லை. அவர்களின் புது வணிகத்தில் வளர்ச்சியில்லை. ரெனியுவல் பிரிமியம் குறைந்து வருகிறது. அவர்களின் சந்தைப்பங்கும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது.

இன்சூரன்ஸ்துறையின் வளர்ச்சி என்பது தேசத்தின் பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது என்று ஏ.ஐ.ஐ.இ.ஏ உறுதியாக நம்புகிறது. தேசத்தின் பொருளாதார நிலையிலிருந்து இன்சூரன்ஸ்துறையின் செயல்பாடு மட்டும் தனித்திருக்க முடியாது.

தனியார் கம்பெனிகளின் முகவர்களால் கடந்த நிதியாண்டில் சராசரியாக மூன்று பாலிசிகள் மட்டுமே விற்பனை செய்ய முடிந்திருக்கிறது. ஆனால் எல்.ஐ.சி முகவர்களோ சராசரியாக 29 பாலிசிகள் விற்பனை செய்துள்ளனர். ரூபாய் ஐந்து லட்சம் முதல் ரூபாய் 1.4 கோடி வரை பத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஓழுங்காற்று ஆணையம் பல்வேறு காரணங்களுக்காக அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. அப்படி எந்த நடவடிக்கையையும் சந்திக்காத ஒரே நிறுவனம் எல்.ஐ.சி மட்டுமே.

கடந்த நிதியாண்டில் எல்.ஐ.சி தன் முதலீட்டிலிருந்து மட்டும் ரூபாய் 21,103 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. இது முந்தைய ஆண்ட விட 6,805 கோடி ரூபாய் அதிகமாகும். எல்.ஐ.சி பொதுத்துறை பங்குகளை வாங்குவதன் மூலம் எல்.ஐ,சி மக்கள் பணத்தை விரயம் செய்கிறது என்று வானுக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தவர்களை இந்த அபரிதமான் 47.5 % உயர்வு வாயடைக்கச் செய்தது.


பின் குறிப்பு

பொறாமை பிடித்த அனானி ஒன்று உபயோகமுள்ள விஷயங்களை
எழுத முடியாதா என்று நேற்று புலம்பியிருந்தது. 

இந்த செய்திகளாவது உபயோகமாக இருந்தது என்று அந்த அனானி
பின்னூட்டமிடுகிறதா என்று பார்ப்போம்.

Wednesday, February 5, 2014

இவர் சிங்கம் 3 கதாநாயகர் இல்லை






மேலே படத்தில் உள்ளவரை பார்த்தீர்களா?

பார்த்தால் ஏதோ சிங்கம் 3 படத்தில் கதாநாயகராக நடிப்பவர் உள்ளது அல்லவா? படத்தில் நடிப்பதற்காக மீசை வளர்த்துக் கொண்டவர் போல தோன்றுகிறது அல்லவா?

ஆனால் உண்மை மிகவும் வித்தியாசமானது.

இவர் எங்களது மதுரைக் கோட்டத் தோழர் ஆர்.தண்டபாணி. மதுரை கோட்டத்தின் சுடர் கலைக்குழுவின் முக்கியமான தோழர். அடுத்த படத்தில் உடன் இருப்பவர் எங்கள் மதுரைக் கோட்டத் தலைவர் தோழர் ஜி.மீனாட்சி சுந்தரம். தோழர் தண்டபாணி ஆசையாய் மீசை வளர்ப்பார். ஆனால் அந்த ஆசை மீசையை சுடர் கலைக்குழு நடத்தும் முருக விஜயம் நாடகத்திற்காக அவ்வப்போது எடுத்து விடுவார். என்ன செய்வது முதன்முதலாக  முருகர் படத்தை படைத்தவர்கள் முருகருக்கு மீசை வைக்கவில்லையே!


காசு கொட்டும் நடிப்பிற்காக மீசை வளர்த்து எடுப்பது பெரிய விஷயம் அல்ல. கொள்கைகளைச் சொல்வதற்காக மட்டுமே நடத்தப்படும் நாடகங்களுக்காக ஆசையாக வளர்க்கும் மீசையை துறப்பது பாராட்ட வேண்டிய விஷயமல்லவா?

என்ன சொல்கிறீர்கள்?