Thursday, February 6, 2014

நீங்கள் அறிந்து கொள்ள... அனானிகள் பின்னூட்டம் போட

எங்களது அகில இந்திய மாநாட்டு அறிக்கையிலிருந்து சில முக்கியமான
பகுதிகளை எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலார் தோழர்
கே.சுவாமிநாதன்  தமிழாக்கம் செய்திருந்ததை  சில தினங்கள் முன்பு
பதிவு செய்திருந்தேன்.

இன்னும் சில முக்கியமான பகுதிகள் என் தமிழாக்கத்தில் கீழே.





* முதலாளித்துவ நாடுகள் தாங்கள் இதுவரை சந்திக்காத பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் வாழ்க்கைத்தரத்தின் மீதும் இதுவரை காணாத தாக்குதல்களை நடத்தி உள்ளது. லட்சக்கணக்கான பணிகள் வெட்டப்பட்டுள்ளன. சமூக நலத் திட்டங்கள் சுருக்கப்பட்டுள்ளன. நீண்ட நெடிய போராட்டங்களால் எந்த உரிமைகளெல்லாம் வென்றெடுக்கப்பட்டதோ அவையெல்லாம் காற்றில் வீசியெறியப்பட்டுள்ளது. சிக்கனம் என்பதே மந்திர வார்த்தையாகி விட்டது. ஆனால் தொழிலாளி வர்க்கம் இந்த தாக்குதல்களுக்கு அடி பணிந்து விடவில்லை. அவர்களின் வாழ்வாதாரத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு எதிராக உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட்டு போராடியதை இக்காலகட்டத்தில் பார்த்தோம்.

* மக்களின் வாங்கும் சக்தி, கடன் வலையை மிகவும் விரிவுபடுத்தியதால் செயற்கையாக அதிகரிக்கப்பட்டது. கடன் வசதியை பெருக்குவதன் மூலம் கிராக்கியை செயற்கையாக தக்க வைத்து அதன் மூலம் சிக்கலை தவிர்க்க எண்ணியது என்பது முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடு. இந்த முரண்பாட்டின் பிரதிபலிப்பே தற்போதைய சிக்கலாக உலகெங்கும் எதிரொலிக்கிறது.

* “முதலாளிகள் எப்போதுமே தங்களது சிக்கல்களிலிருந்து விடுபட இன்னும் கடுமையான, அழிவை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு வழி வகுப்பார்கள். அதே போல் சிக்கல்களை மட்டுப்படுத்த எது காரணியாக இருந்ததோ அதையும் அழித்து விடுவார்கள்” என்று கம்யூனிஸ்ட் பிரகடனத்திலேயே தோழர்கள் மார்க்ஸும் ஏங்கல்ஸும் குறிப்பிட்டுள்ளனர் என்றால் அவர்கள் எவ்வளவு சிறந்த தீர்க்கதரிசிகள்!

* உழைக்கும் மக்கள் நெருக்கடியின் பாதிப்புக்களுக்கு உள்ளான போது இந்த நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கோ கூடுதல் ஊதியங்களும் பெருத்த போனஸையும் சன்மானமாக வழங்கப்பட்டது. இது இயல்பாகவே சாமானிய மக்களை கொதிப்படையச் செய்தது. நெருக்கடிக்குக் காரணமானவர்களே அதற்கான சுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையோடு இயக்கங்கள் தொடங்கியது. இந்த இயக்கம் அமெரிக்காவின் எல்லைகளைக் கடந்தும் விரிந்தது.

* அமெரிக்காவின் நெறிமுறைப் போலித்தனம் உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கும் அதிசயம். வியட்னாம் போரின் போது அமெரிக்கா பயன்படுத்திய ஏஜெண்ட் ஆரஞ்சு என்ற ரசாயனப் பொருள் சுற்றுச்சூழலில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தி லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் போதே ஊனமாக பிறக்கும் வண்ணம் சேதங்களை உருவாக்கியது. மிகவும் சமீபத்தில் கூட அமெரிக்கப்படைகள் இராக்கில் யுரேனியம் மற்றும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பிரயோகித்து மக்களை வாட்டி வதைத்தது. இப்போது அதே ஏகாதிபத்திய சக்தி தன் சட்ட விரோத ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்துகிறது.

* அமெரிக்கா 2012 ம் ஆண்டில் மட்டும் தனது ராணுவச் செலவினங்களுக்கு மட்டும் 682 பில்லியன் டாலர் செலவிட்டது. உலக ஆயுத விற்பனையில் நாற்பது சதவிகிதம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 2012 ல் மட்டும் 1753 பில்லியன் டாலர் அளவிற்கு ஆயுதத் தளவாட விற்பனை நடந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்த புத்தாயிரத்தாண்டு வளர்ச்சிக்கான இலக்கை வெற்றிகரமாக அமலாக்க இத்தொகையே போதுமானது. உலகில் அமைதியை உருவாக்க பாடுபடுவதாக மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா தனது பெரு நிறுவனங்கள் ஆயுதங்களை தயாரித்து விற்று ஏழைகளின் துயரத்திலிருந்து லாபம் ஈட்ட அனுமதிக்கிறது.

* அமெரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என்ற நிலையை அமெரிக்கா கொண்டுள்ளது. உலக கார்பன் வெளியீட்டில் நான்கில் ஒரு பகுதி அமெரிக்காவில்தான் நிகழ்கிறது. அந்த அளவை குறைத்துக் கொள்ள முடியாது என்றும் கூறி விட்டது.

* முதலாளித்துவம் தன் குணாம்சத்திற்கு ஏற்ப  நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்களின் தோள்களுக்கு மாற்ற முயல, அடி பணியாத உழைக்கும் மக்கள் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்காக போராடுகிறது. தனது விருப்பத்திற்கு ஏற்ப உலக அமைப்பையே மாற்ற ஏகாதிபத்திய முயற்சிகளுக்கு எதிராக போராடும் மக்களின், நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சோஷலிச நாடுகளும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் உலகில் உள்ள உழைப்பாளி மக்களுக்கு மிகச் சிறந்த உதாரணத்தைக் காட்டியுள்ளது. மாற்றை நனவாக்க உழைப்பாளி வர்க்கம் கடுமையாக போராட வேண்டும்.


இந்தியப் பொருளாதாரம் அனைத்து அம்சங்களிலும் சிக்கலை அனுபவிக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளை பின்பற்றியதன் விளைவே இந்த நெருக்கடி. இக்கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்குப் பதிலாக துரதிர்ஷ்டவசமாக மத்தியரசு அதையே விடாப்பிடியாக தொடர்ந்து அமலாக்குகிறது. பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்நிலையில் பெருத்த பாதிப்பை உருவாக்கி அவர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த அதிருப்தியை வலதுசாரி அடிப்படைவாதிகள் தங்களின் மதவாத அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நவீன தாராளமயமாக்கலை ஒதுக்கி வைத்து விட்டு ஊழல் பற்றி நாம் விவாதித்தால் நம்மால் அதற்கான தீர்வை கண்டறியவே முடியாது. ஏனென்றால் ஊழல் என்பது முதலாளித்துவத்தின் ஒரு பகுதி.

நிதி மூலதனத்தால் இயக்கப்படும் ஏகாதிபத்திய உலகமயம், “பின் நவீனத்துவம்” என்றொரு கலாச்சார ஆயுதத்தை கண்டெடுத்தது. பின் நவீனத்துவத்தின் படைப்பான “அடையாள அரசியல்” மக்களை வர்க்க ரீதியாக திரட்டுவதற்கு எதிரான பணியை செய்கிறது.

இடதுசாரிகள் பலவீனமாக உள்ள இடங்களில் அடையாள அரசியல் அடிப்படையில் மக்களை திரட்டுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இடதுசாரிகளின் வளர்ச்சியை தடுக்க அடையாள அரசியலை கருவியாக பயன்படுத்துகின்றன.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எழுப்பிய எதிர்ப்புக்கள், கவலைகள், கருத்துக்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டே   எல்.ஐ.சி சட்ட (திருத்த) மசோதா 2009 நிறைவேற்றப்பட்டுள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நிகழ்த்திய போராட்டங்கள், பிரச்சார இயக்கங்கள் மற்றும் முயற்சிகள் மூலமே எல்.ஐ.சி யின் பொதுத்துறைத் தன்மை பாதுகாக்கப்பட்டது.

உலகப் பொருளாதார நெருக்கடியின் கரிய நிழல் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் ஊழியர்களையும் துரத்தியது. பிரிட்டனின் இரண்டாவது பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான அவயா, 2012 ல் தனது அமெரிக்க நிறுவனத்தை விற்றதன் மூலம் 4.5 பில்லியன் பவுண்டுகளை இழந்தது. அதனால் 2000 ஊழியர்களின் வேலை பறி போனது. இன்னொரு பெரிய நிறுவனமான ஏ.எக்ஸ்.ஏ வில் ஐநூறு ஊழியர்கள் பணியிழந்தனர். இங்கிலாந்தின் நிதித்துறையில் மட்டும் அக்டோபர் 2012 லிருந்து மார்ச் 2013 வரை 43,000 ஊழியர்கள் பணியிழந்துள்ளனர்.

இந்திய தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாடும் மாறுபட்டது இல்லை. அவர்களின் புது வணிகத்தில் வளர்ச்சியில்லை. ரெனியுவல் பிரிமியம் குறைந்து வருகிறது. அவர்களின் சந்தைப்பங்கும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது.

இன்சூரன்ஸ்துறையின் வளர்ச்சி என்பது தேசத்தின் பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது என்று ஏ.ஐ.ஐ.இ.ஏ உறுதியாக நம்புகிறது. தேசத்தின் பொருளாதார நிலையிலிருந்து இன்சூரன்ஸ்துறையின் செயல்பாடு மட்டும் தனித்திருக்க முடியாது.

தனியார் கம்பெனிகளின் முகவர்களால் கடந்த நிதியாண்டில் சராசரியாக மூன்று பாலிசிகள் மட்டுமே விற்பனை செய்ய முடிந்திருக்கிறது. ஆனால் எல்.ஐ.சி முகவர்களோ சராசரியாக 29 பாலிசிகள் விற்பனை செய்துள்ளனர். ரூபாய் ஐந்து லட்சம் முதல் ரூபாய் 1.4 கோடி வரை பத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஓழுங்காற்று ஆணையம் பல்வேறு காரணங்களுக்காக அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. அப்படி எந்த நடவடிக்கையையும் சந்திக்காத ஒரே நிறுவனம் எல்.ஐ.சி மட்டுமே.

கடந்த நிதியாண்டில் எல்.ஐ.சி தன் முதலீட்டிலிருந்து மட்டும் ரூபாய் 21,103 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. இது முந்தைய ஆண்ட விட 6,805 கோடி ரூபாய் அதிகமாகும். எல்.ஐ.சி பொதுத்துறை பங்குகளை வாங்குவதன் மூலம் எல்.ஐ,சி மக்கள் பணத்தை விரயம் செய்கிறது என்று வானுக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தவர்களை இந்த அபரிதமான் 47.5 % உயர்வு வாயடைக்கச் செய்தது.


பின் குறிப்பு

பொறாமை பிடித்த அனானி ஒன்று உபயோகமுள்ள விஷயங்களை
எழுத முடியாதா என்று நேற்று புலம்பியிருந்தது. 

இந்த செய்திகளாவது உபயோகமாக இருந்தது என்று அந்த அனானி
பின்னூட்டமிடுகிறதா என்று பார்ப்போம்.

6 comments:

  1. எனது கருத்துக்களை வெளியிட அனுமதி கோருகிறேன்.

    கொள்கையளவில் கம்யூனிசம் மிக உயர்ந்தது. எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்பது எல்லோரது எண்ணமும்தான். ஆனால் அதைக் கடைப்பிடிப்பதில் ஏற்பட்ட தவறுகள்தான் தற்போதுள்ள நிலை.

    மிகமிகச் சுருக்கமாக சொல்லப்போனால், தமிழக ஆட்டோ ஓட்டுனர்களின் சங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து போராடுவதால் சங்கங்களின் மீது சாதாரண மக்களுக்கே வெறுப்பு வருமல்லவா. ஒரு தொழிற்சங்க ஊழியராக நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்.

    எங்கும் போராட்டம், எதிலும் போராட்டம், எங்கும் பந்த், எப்போதும் பந்த் என்ற நிலைப்பாடுதான் இந்திய மக்களிடமிருந்து அவர்களைப் பிரித்தது.

    ஒரு தொலைபேசி இணைப்புக்காக 100 ரூபாய் கேட்ட தொழிற்சங்க உறுப்பினர்களை எல்லோரும் பார்த்துள்ளோம். இதுபோன்ற பலர் சில இட்துசாரித் தலைவர்களின் நேர்மையைப் பின் தள்ளிவிட்டார்கள்.

    தங்கள் மீதுள்ள தவறுகளை திசைதிருப்ப முதலாளித்துவத்தையும் அமெரிக்காவையும் பற்றிப் பேசும் சந்தர்ப்ப வாதம் தங்களை இன்னும் பின்னுக்குத்தான் கொண்டுசெல்லும்.

    சாதாரண மக்கள் செல்லும் இடங்களில் ஊழலை வளர்த்த்து ஊழியர்களை முன்னிலைப்படுத்தும் சங்கங்கள்தானே. தொழிற்சங்கங்கள் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்துபவர்கள்தான் உயர்வான கம்யூனிசக் கொள்கைகளை அழித்தார்கள். முதலாளிகள் இல்லை.

    நான் அறித்தது இதுதான்.

    கே. கோபாலன்

    ReplyDelete
  2. நன்றாக செயல்படும் இன்சூரன்ஸ் கம்பெனி என்பது பொன் முட்டையிடும் வாத்து. ஒரு பக்கம் ப்ரீமியம் வந்து கொண்டே இருக்கும். அதனால் அதன் கணக்கில் ஏகப்பட்ட பணம் இருந்து கொண்டே இருக்கும். இந்த கையிருப்பு என்பது தான் தனியாருக்கு விற்கத் துடிக்கும் அனைவருக்கும் கண்ணை உறுத்துகிறது. உலகின் தற்போதய நம்பர் 2 பணக்காரரான Warran Buffet அந்த பணத்தை பெருமளவு சேர்த்தது இந்த கையிருப்பை ஸ்டாக் மார்கெட்டில் முதலீடு செய்ததால்தான். General Re என்ற மிகப்பெரிய இன்சுரன்ஸ் கம்பெனியின் ஓனர் இவர் தான்.

    அதே சமயத்தில் எத்தனை பேர் இது போல புத்திசாலித்தனமாக முதலீடு செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்!

    நம் நாட்டிலேயே, இந்த அளவு மிகப்பெரிய கையிருப்பு இருந்த uti அந்த பணத்தை எப்படி ஊதாரித்தனமாக பங்கு சந்தையில் இழந்தது என்று படித்திருப்போம். (ரிலையன்ஸ் பங்கு பதிப்பு ரூபாய் 395 இருக்கும்போது uti அதை ரூபாய் 450 என்ற மதிப்பில் ஒரு லட்சம் பங்குகளோ அதற்க்கு மேலோ வாங்கியது, சில வருடங்களுக்கு முன்)

    இதையெல்லாம் பார்க்கும்போது LIC தன் கையிருப்பை மிக கவனத்துடன் நாட்டு முன்னேற்றத்திற்கு மட்டுமே செலவு செய்கிறது.

    எந்த காலத்திலும் LIC பங்குகள் தனியாருக்கு விற்கக் கூடாது. விற்றால், இந்த கையிருப்பு நாட்டு முன்னேற்றத்திற்காக இல்லாமல் போய்விடும்!

    ReplyDelete
  3. திரு பந்து சரியாகவே சொல்லியுள்ளீர்கள், நன்றி

    ReplyDelete
  4. திரு கோபாலன், உங்களுடைய புரிதல் மிக மிக தவறு. உங்களுக்கு விளக்கம் சொல்லவே தனியாக பதிவு எழுத வேண்டும். அடுத்த
    வாரத்திற்குள் எழுதுகிறேன். ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசி
    என்று சொல்வார்கள். அது போல முதலாளிகளை மிஞ்சிய முதலாளித்துவ விசுவாசி போல நீங்கள்

    ReplyDelete
  5. athu sari uruppadiyaaka ulla oru sosalisa allathu communist naaddai kaaddunkal paarppom

    ReplyDelete
  6. பெயர் சொல்ல தைரியம் இல்லாத அனானியே உன் அடையாளத்தோடு இதே கேள்வியை கேள். அப்போது பதில் சொல்கிறேன். அனானிகளுக்கு பதில் அவசியமில்லை

    ReplyDelete