Saturday, May 12, 2012

இனிமே நீங்க மறுத்துக் கிட்டேதான் இருக்கனும்



நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரும்
என்று  மம்தா தீதி  சொன்னதை  காங்கிரஸ் கட்சி 
மறுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியினரே,

பேய்க்கு வாழ்க்கைப் பட்டுவிட்டீர்கள்,
இனி புளிய மரம், முருங்கை மரம், 
சுடுகாடு என்று போய்க் கொண்டே
இருந்தாகனும்.

இனி மம்தா தீதி சொல்வதற்கு மறுப்பு
தெரிவித்தே காலம் போகப் போகுது!

அனுபவிங்க.. நல்லா அனுபவிங்க....

மதுரை ஆதீனம் - நித்தி - நாயன்மார்கள் -சில் உண்மைகள்

 தீக்கதிர் நாளிதழில் வெளியான தோழர் அருணன்,
கௌரவத்தலைவர், த.மு.எ.க.ச அவர்களின் ஆழமான
ஒரு கட்டுரை


ஆதீன விவகாரம் : சில வரலாற்றுத் திரிபுகள்
அருணன்



 
மதுரை ஆதீனகர்த்தராக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்து திருவாளர்கள் அர்ஜுன் சம்பத், பழ.கருப்பையா ஆகியோர் “தினமணி”யில் எழுதியிருக்கிறார்கள். இந்த நியமனத்தை “கேலிக்கூத்து” என்று வருணித்திருக்கிறார் முன்னவர் என்றால், பின்னவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். அவற்றில் சில பகுத்தறிவாளர்களும் பளிச்சென்று சொல்லக்கூச்சப்படக் கூடியவை.“ஒரு காலத்தில் பல்கலைக்கழகத்துணைவேந்தர் பதவிகள் ஏலம் விடப்பட்டது போல ஆதீன கர்த்தர் பதவிகளும் இப்போது ஏலம்விடப்படுகின்றன. பழைய ஆதீன கர்த்தருக்கு ஐந்து கோடி ரொக்கம், தங்கச் சிம்மாசனம், தங்கச் செங்கோல் - அடுத்தடுத்த தவணைகளில் இன்னும் என்னென்ன வழங்கப்படுமோ?”‘பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’ என்று அவர் (சம்பந்தர் சிவபெருமான் பற்றி) மக்களுக்குச் சொன்னதை தங்களுக்குத்தான் பாடியதாக ஆதீனங்கள் சில கருதியதன் விளைவு மடத்தின் போக்கே மாறிவிட்டது”.


“இன்றைய ஆதீனத்திற்கு உதவியாளர்கள் எல்லாம் பெண்கள்தாம்! இன்ன புடவைக் கடையை இன்ன நடிகை திறந்து வைத்தார் என்று பெருமை பேசப் படுவது போல இன்ன ஆதீனம் பதவி ஏற்றுக்கொண்ட போது இன்ன நடிகை முன்னிலை வகித்தார் என்பதும் பெருமையாகப் பேசப்படுகிறதே இது காலக்கொடுமை!”- இப்படியெல்லாம் பழ.கருப்பையா (தினமணி 10.5.2012) தனது மனவேதனை யைக் கொட்டித் தீர்த்திருக்கிறார். இந்து மடாதிபதிகள் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பதை விட, சுயமத நோக்கிலிருந்து பேசாமடந்தையாக இருப்பதைவிட இப்படிப் பொங்கி எழுந்தது வரவேற்கத்தக்கதுதான்.ஆனால், மடாதிபதிகள் சிலரின் போக்கு இப்படி ஆனதற்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சி செய்யப்புகுந்து, மிக மோசமான வரலாற்றுத் திரிபுகளை இந்த பக்திமான்கள் முன் வைக்கிறார்கள்.“மதவெறி கொண்ட சமணர்கள் சம்பந்தரைக் கொலைசெய்யும் உள்நோக்கத் துடன் சம்பந்தர் தங்கியிருந்த இம்மடத்திற்கு தீ வைத்தனர்” என்கிறார் அர்ஜுன் சம்பத். ஆனால், இப்படியாக பெரியபுராணத்தில் சேக்கிழார் கூறவில்லை. “திருமடப்புறம்பு பழுது செய்வதோ” என்று மட்டுமே பாடியிருக்கிறார். ஆனால், எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டது பற்றி விரிவாக விவரித்திருக் கிறார். இந்தக் கொடூரத்தைப் பாண்டிய மன்னன் செய்தபோது அதைத் தடுக் காமல் சம்பந்தர் வெறுமனே வேடிக்கை பார்த்தார் என்றும் சொல்லியிருக்கிறார்.“மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடாது” இருந்தார் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.மடத்திற்கு தீ வைக்கப்பட்டதைச் சொன்ன அர்ஜுன் சம்பத், எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்ட அந்த உலகமகாக் கொடூரம் பற்றி மட்டும் ஏதும் சொல்லவில்லை! மடத்திற்கு தீ வைக்கப்பட்டது உண்மை என்றால் சமணர்கள் படுகொலை செய்யப்பட்டதும் உண்மைதானே? இரண்டும் அதே பெரிய புராணத்தில் இருப்பவைதானே? ஏன் பின்னதை மட்டும் சொல்லவில்லை? இங்குதான் புராணத்தைத் தங்களது வசதிக்கு ஏற்ப இந்துத்துவாவாதிகள் வாசிக்கும் தன்மை பளிச்சென வெளிப்படுகிறது.“சைவம் சாதிகளுக்கு அப்பாற்பட்டது என்பதை 63 நாயன்மார்களின் வாழ்க்கையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்” எனும் ஒரு பழைய துருப்பிடித்த பிரச்சாரத்தை கையில் எடுத்திருக்கிறார் அர்ஜுன் சம்பத். மதுரை ஆதீனமாக ஒரு குறிப்பிட்ட சாதிக்காரர்தான் வரமுடியும் என்று இப்போதும் கூச்சமில்லாமல் வேறு சில ஆதீனங்கள் கூறுகிறார்கள் என்றால், அதுவெல்லாம் இடையில் வந்த சமாச்சாரம் என்பது போலச் சித்தரிக்கப் பார்க்கிறார்.


உண்மை என்னவென்றால் அப்பர் - சம்பந்தர் காலத்திலும், அதற்கு முன்பும் தமிழகத்தில் பெரிதும் தழைத்திருந்த மதம் சமணம், அடுத்து பௌத்தம். பெரும்பாலான தமிழர்கள் இந்த மதங்களில் இருந்ததால் அவர்களைத் தன் பக்கம் இழுக்க சைவம் சில சாகசங்களைச் செய்தது. அடித்தட்டு சாதிகளைச் சேர்ந்த சிலரையும் நாயன்மார்கள் பட்டியலில் சேர்த்துக் கொண்டது. ஆனால், அப்படிச் சேர்த்த பெரிய புராணமே அவர்கள் இந்த நிலையை அடையச் சில கொடூரமான தியாகங்களை அல்லது அவமானங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் உற்சாகத்தோடு சுட்டிக்காட்டியது.சிதம்பரத்தில் நந்தனாருக்கு ஏற்பட்ட கதியை அறிவோம். சம்பந்தர் தனது பாடல் களுக்கு இசையமைத்துப் பாட பாணர் குலத்தைச் சார்ந்த யாழ்ப்பாணரையும் அவரது மனையாளையும் பயன்படுத்திக் கொண்டார் எனப் பெருமையோடு கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதன் வாயிலில் நின்றுதான் பாடவைத்தார் சம்பந்தர். இதோ அந்த வரிகள் - “கோயிலினில் புறமுன்றில் கொடுபுக்குக் கும்பிடு வித்து/ ‘ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும்’/ என ஆய புகழ்ப்பிள்ளையார்”.இதுதான் “சைவம் சாதிகளுக்கு அப்பாற்பட்டது” என்பதன் சரிதம்! விஷயம் என்னவென்றால் சைவம் - வைணவம் என்பவை எல்லாம் அந்தக் காலத்திய சனாதன மதத்தின் பிரிவுகளே. அவற்றுக்கும் சாதியம் உண்டு. அன்றைய தமிழகத்தின் ஆளும் வர்க்கங்கள் அதைத் தங்களின் சமூகக் கட்டுமானமாக ஏற்றுக் கொண்டிருந்தன. இதற்கு ஆதாரமாக மூவர் தேவாரத்திலேயே நிறைய வரிகள் உள்ளன. சமஸ்கிருதத்தில் இருந்தால் சாதியம், தமிழில் இருந்தால் அது சாதியம் கிடையாது என்பது மெய்யான தமிழ்ப்பற்று ஆகாது, மாறாக இன்றைய நடப்புகளின் நேற்றைய மூலத்தை அறியவிடாமல் செய்துவிடும்.பழ.கருப்பையா எழுதுவதை நோக்குங்கள் - “தமிழனின் சமயங்கள் சைவம், வைணவம், முருக வழிபாடு, இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடு என்றிவை தாம்” சமணம் - பௌத்தத்தை மட்டும் குறிப்பிடவில்லை; கவனமாகத் தவிர்த்து விடுகிறார். இந்தச் சைவம் - வைணவம் தழைத்தோங்குவதற்கு முன்பு தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருந்த மதங்கள் சமணம் - பௌத்தமே எனும் வரலாற்று உண்மையைச் சொல்லக்கூட மகாக் கூச்சம்! இவர்களால் மதுரை மடம் போன்றவற்றில் இன்று ஏற்பட்டுள்ள விவகாரங்களுக்கு நோய் முதல் நாடி சிகிச்சை அளிக்க முடியாது.பிற மத வெறுப்பு, சாதியம், பண ஆதிக்கம், மூடநம்பிக்கைகள் போன்றவை சைவத் திலும் புகுந்திருந்தன. அவை மெல்ல மெல்லப் பரவி ஆதீன கர்த்தாக்களின் தனி மனித ஒழுக்கவியலையும் அரித்துத் தின்றன. வெகு மக்களுக்கு இருக்கக்கூடிய மத நம்பிக்கையை, அதன் தோற்றுவாயை மார்க்சியர்கள் புரிந்து கொள்கிறார்கள். அதற்காக ஒரு மதமானது மேலே குறிப்பிடப்பட்ட கேடுகளைத் தழுவ வேண் டியதில்லை என்கிறார்கள். அப்படி அது செய்யும் போது அவற்றை எதிர்த்து பகுத் தறிவாளர்கள் மட்டுமல்ல பக்திமான்களும் போராட வேண்டும் என்கிறார்கள்.இங்கோ பழ.கருப்பையா போன்றோர் விஷயத்தைத் தனிமனித ஒழுக்கக் குறை வாகவே, துணிவின்மையாகவே பார்க்கிறார்கள். “ஞானசம்பந்தர் வாதுக்குப் போனார். அவரிடம் தோல்வியடைந்ததாகச் சொல்லப்பட்ட ஏழாயிரம் சமணர் களைக் கழுவிலேற்றினார். சமணம் ஒழிந்தது, சைவம் தழைத்தது. மெத்த சரி! திருமறைகளும், பிரபந்தங்களும், சிவலிங்கமும் பெரியாரால் கேலிக்குள்ளாக்கப் பட்ட போது எந்த ஆதீனமாவது பெரியாரை வாதுக்கு அழைத்ததுண்டா?” - என்று ஆத்திரத்தோடு கேட்கிறார்.இவர் ஆசையைப் பாருங்கள்! இதே மனிதர் கீதையைத் தமிழரின் தத்துவ நூலாக ஏற்க முடியாது என்கிறார். ஆனால் சைவர்களது திருமறைகளையும் வைணவர் களது பிரபந்தங்களையும் விமர்சித்தால் விடக்கூடாது என்கிறார்! சம்பந்தரைப் போல வாதுக்கு இழுத்து கழுவில் ஏற்ற வேண்டும் என்கிறார். பெரியாரை அப்படிச் செய்திருந்தால் தற்காலத்தில் சைவம் தழைத்திருக்கும் என்கிறார். அண்ணா பெயரால் உள்ள கட்சி சார்பாக நின்று இந்த மகானுபாவர் எம்எல்ஏ ஆகியிருக்கிறார்!
பெரியார் மட்டுமல்ல அண்ணாவும் பெரிய புராணம், தேவாரம், ஆழ்வார் பாசுரம் இத்யாதி இத்யாதிகளை விமர்சித்தவர் என்பதை இவர் அறியாரா?? அறிந்தேதான் இப்படி எழுதியிருக்கிறார்!அவருக்குச் சொல்லிக் கொள்வோம். சமஸ்கிருத கீதையானாலும் சரி, தமிழ்ச் சமய நூல்களானாலும் சரி விஷயம் மொழி பற்றியது அல்ல. அவற்றில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதுதான் முக்கியம். அது பிறமத வெறுப்பாக, சாதியமாக, ஆணாதிக்கமாக, பணஆதிக்கமாக, மூடநம்பிக்கைகளாக இருந்தால் நிச்சயம் மார்க்சியர்கள் எதிர்ப்பார்கள்.பெரியார் தனது எதிர்ப்பைச் சற்று முரட்டுத்தனமாகச் செய்திருக்கலாம். மார்க் சியர்களோ இன்னும் தர்க்கரீதியாக, இன்னும் சரித்திர ரீதியாகச் செய்வார்கள். அப்படியாக வாது செய்ய அவர்கள் தயார் - எதிராளிகள் கழுமரத்தோடு வந்தாலும் சரி, நவீன காலத்திற்கு ஏற்ப கடப்பாரையோடு வந்தாலும் சரி! 


--
அப்பர் - சம்பந்தர் காலத்திலும், அதற்கு முன்பும் தமிழகத்தில் பெரிதும் தழைத்திருந்த மதம் சமணம், அடுத்து பௌத்தம். பெரும்பாலான தமிழர்கள் இந்த மதங்களில் இருந்ததால் அவர்களைத் தன் பக்கம் இழுக்க சைவம் சில சாகசங்களைச் செய்தது.
--

நன்றி - தீக்கதிர்

Thursday, May 10, 2012

நிஜமும் நிழலும் - அற்புதப் படங்கள் ... தவறாமல் பாருங்கள்

இன்று எனக்கு மின்னஞ்சலில் கிடைக்கப் பெற்ற
படங்கள். அற்புதமாய் உள்ளதால் உங்களின்
பார்வைக்கும் இங்கே.

பார்த்து ரசியுங்கள்













 

Wednesday, May 9, 2012

இது என்ன அபத்தம் யுவர் ஹானர்? சீதையும் வேண்டாம், ராமனும் வேண்டாமே...



நீதித்துறை  எவ்வளவு தூரம் காவிமயமாகி உள்ளது என்பதன்
அடையாளமாக மும்பை உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் 
அறிவுரை வழங்கியுள்ளார்.

விவாகரத்து பிரச்சினை நீதிமன்றத்திற்கு வருகின்றது. கணவன்
அந்தமான் தீவில் வசிக்க நினைக்கிறான். மனைவிக்கு மும்பையை
விட்டு வெளியே வர விருப்பமில்லை. எனவே அவன் விவாகரத்து
கேட்கிறான். 

இதற்கு மனைவியிடம் நீதிபதி கணவனோடு காட்டுக்குப் போன
சீதாபிராட்டியை பின்பற்றி நடக்க வேண்டும். அதுதான் நீதி என்று
கூறியுள்ளார். மனைவியின் விருப்பத்தை மதிக்காத கணவனுக்கு
அறிவுரை வழங்க அவர் தயாராக இல்லை. ராமன் இருக்கும் 
இடம்தான் சீதைக்கு அயோத்தி என்று உளுத்துப் போன அறிவுரை
மீண்டும் சொல்லப்பட்டுள்ளது. 

ராமன் இருக்கும் இடம்தான் சீதைக்கு அயோத்தி என்பதே ஒரு
ஆணாதிக்க சிந்தனைதான். ஒரு சமூகப் பிரச்சினையும் கூட.

கணவன், மனைவி இருவரும் பணி புரிந்தால் கணவன் இருக்கும்
இடத்திற்கே மனைவி மாற்றலில் செல்ல வேண்டும். மனைவி
இருக்கும் இடத்திற்கு கணவன் வர மாட்டான். இதிலே மனைவியின்
பணி என்பது பல முறை பலியாகியுள்ளது. 

மனைவி பணிபுரியும் இடத்திற்கு கணவன் மாற்றலில் வருவது
என்பது மிகவும் அரிய ஒன்று. என் தொழிற்சங்க அனுபவத்தில்
கண்கூடாக பார்த்து வருவது. 

இப்படிப்பட்ட நிலையில் இது போன்ற சிந்தனைகளை நீதிபதிகள்
விதைப்பது நல்லதல்ல. 

இந்த உதாரணமும் சரியானதா?

சின்ன மாமியார் கொடுமையை இளமையில் அனுபவித்தவர் 
சீதை. காட்டுக்கு செல்வது நியாயமா என்ற கேள்வியை கேட்கத்
தவறியதன் விளைவு அவர் கடத்தப்பட்டார். 

அத்தோடு நின்று போனதா அவர் அனுபவித்த கொடுமைகள்?

தீயில் குதிக்க நிர்ப்பந்தப்பட்டார். இதன் பின்பும் சந்தேகத்தின்
நிழல் படிந்ததால் காட்டுக்குத் துரத்தப்பட்டார். என்ன கொடுமை
இழைக்கப்பட்டாலும் அதை சீதை போல மௌனமாக ஏற்க 
வேண்டும் என்று நீதிபதி விரும்புகிறார் போலும்.

அனைத்து கொடுமைகளையும் பொறுத்துக் கொள்ளும் சீதை
போலவோ, தன்னை நியாயவான் என காண்பித்துக் கொள்ள
மனைவியை இன்னல் செய்த ராமன் போலவோ யாரும் 
இருந்திட வேண்டும்.

இந்த அபத்ததை கண்டிக்க வேண்டும். இல்லையென்றால்
பாஞ்சாலி போல, நளாயினி போல ஐவரை மணந்து கொள்,
கணவனை கூடையில் வைத்து தாசி வீட்டுக்கு எடுத்துச் செல்
என்று நீதிமன்றத்தில் உபதேசம் செய்யத் தொடங்கி விடுவார்கள்.

இனியும் இந்த அபத்தம் வேண்டாமே யுவர் ஹானர்.....
 

Tuesday, May 8, 2012

மற்ற உண்மைகளையும் கூட ஹிலாரி கிளின்டன் சொல்லி இருக்கலாமே?




இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளதற்காக தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், சில அரசியல் காரணங்களால் இதுவரை மேற்கு வங்கத்தில் அமெரிக்கா முதலீடு செய்யவில்லை என்றும் இனி தாராளமாக செய்யும் என்றும் கூறியுள்ளார். சரியாக சொல்ல வேண்டுமானால் இவ்வாறு ஹிலாரி கூறியதாக மம்தா தெரிவித்துள்ளார்.

இத்தோடு மட்டும் ஏன் ஹிலாரி நிறுத்திக் கொண்டார் என்று தெரியவில்லை.

“”மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து நடப்பது அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வலிமையாக உள்ளதால் அதிகமான இடங்களை நாடாளுமன்றத்தில் பெற்றதும் அக்கட்சி உதவியோடு மத்தியரசு நடப்பதும் எங்களுக்கு பிடிக்கவில்லை.

இந்திய நாட்டை அமெரிக்கா கொள்ளையடிக்கும் சூழ்ச்சிகளுக்கு எல்லாம் மார்க்சிஸ்டுகள் முட்டுக்கட்டை போடுவதும்  எங்களுக்குப் பிடிக்கவில்லை.

ஆகவே அவர்களை பலவீனப்படுத்த உங்களைப் பயன்படுத்திக் கொண்டோம் எங்கள் அறக்கட்டளைகள் மூலமாக உங்கள் நண்பர்கள் பெயரில் இருந்த தன்னார்வ அமைப்புக்களுக்கு  . கோடிக்கணக்கில் டாலர்களை அனுப்பினோம்.

நீங்களும் அந்த விசுவாசத்தோடு நடந்து கொண்டீர்கள். மாவோயிஸ்டு கும்பல்களையும் திறம்பட பயன்படுத்தி மேற்கு வங்க இடது முன்னணி ஆட்சியை அகற்றி விட்டீர்கள்.

எங்கள் ஆசையை அமுல்படுத்திய உங்களுக்கு நன்றி.””

இதையெல்லாம்  ஹிலாரி கிளின்டன் சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் ஒரு நன்றி மறந்தவர். பாவம் மம்தா எவ்வளவு செய்தார்! ஒரு நன்றி கூட சொல்லவில்லையென்றால் எப்படி சரியாக இருக்கும்?

Monday, May 7, 2012

நேரு குடும்பத்தை பழி வாங்க இதுதான் நல்ல வாய்ப்பு, பிரணாப் முகர்ஜி, இதை நழுவ விடாதீர்கள்



மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படலாம் ஊடகங்களில் என்று பரவலான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரம் அவர் காங்கிரஸ் கட்சிக்கும் மத்திய அரசிற்கும் மிகவும் முக்கியமானவர் என்றும் அவர் மீது பாச மழை மொழியப்படுகின்றது.

பிரணாப் முகர்ஜி நல்லவரா, கெட்டவரா, அவர் ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா, இல்லையா  என்ற அலசல்கள் இப்பதிவின் நோக்கம் அல்ல. அவருக்கு ஆதரவான கட்டுரையும் இது அல்ல. ஏனென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான விசுவாசியாகவே தான் உள்ளதை நிரூபிக்க இந்திய நிதித்துறையை சர்வதேச நிதி மூலதனம் கொள்ளையடித்துச் செல்ல வழிவகுக்கும் மசோதாக்களை நிறைவேற்ற துடிப்பவர் இவர். அந்த அலசலுக்கான நேரம் இன்னும் கனியவில்லை.

பிரணாப் முகர்ஜி இழந்த வாய்ப்புக்கள் பற்றி நினைவு கொள்வதுதான் இப்பதிவின் நோக்கம்.

நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரைப் போல இவருக்கும் நிரந்தர இரண்டாம் இடம்தான் என்பது பரிதாபகரமான ஒன்று.

இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக இரண்டாம் இடத்தில் இருந்தார். இந்திரா காந்தி இறந்த போது காண்பித்த அவசரம் அவருக்கு இன்றளவும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது ராஜீவ் காந்தி கல்கத்தாவில் இருந்தார். பிரணாப் முகர்ஜியும் அங்கேதான் இருந்தார். ராஜீவ் காந்தி தன் தாயின் மரணத்திற்காக துடித்து டெல்லி புறப்பட்ட வேளையில் பிரணாப் முகர்ஜியும் டெல்லி புறப்பட்டார். அப்போது தன் பக்கத்தில் இருந்தவர்களிடம் பிரணாப் “ டெல்லி சென்றதும் ஜனாதிபதி தன்னை காபந்து பிரதமராக பதவியேற்கச் சொல்வார்” எனச் சொல்ல அது ராஜீவ் காந்தியின் காதுகளை எட்டியது. அவர் எரிச்சலுற்றார்.

நேரு குடும்ப விசுவாசிகள் அதிலும் முக்கிய விசுவாசியான ஜனாதிபதி கியானி ஜெயில்சிங், காபந்து பிரதமர் பதவிக்கு வாய்ப்பே அளிக்காமல் ராஜீவ் காந்தியை நேரடியாக பிரதமராக்கினார்கள். தன் தாய் இறந்தவுடன் பதவிக்கு ஆசைப்பட்டவர் என்ற காரணத்தால் ராஜீவ் காந்தி பிரணாப் முகர்ஜியை ஒதுக்கியே வைத்தார். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவமானமும் படுத்தினார்.

தனிக்கட்சி ஆரம்பித்த பிரணாப் முகர்ஜி, அக்கட்சி போணியாகாததால் மீண்டும் தாய்க் காங்கிரஸிலேயே ஐக்கியமானார். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் கூட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி வைத்து டெல்லிக்கு டாட்டா சொல்லிப் புறப்பட தயாராக இருந்த நரசிம்மராவிற்கே பிரதமர் வாய்ப்பு கிடைத்தது. கணவனால் இழிவுபடுத்தப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு மனைவி சோனியாவும் வாய்ப்பளிக்கவில்லை.

பிரதமர் பதவியை  சோனியா காந்தி ஏற்காமல் சொக்கத்தங்கம் பட்டம் பெற்றபோதும் கூட வாய்ப்பு மன்மோகன் சிங்கிற்கே போனதே தவிர பிரணாப்பை பிரதமராகப் பார்க்க சோனியா காந்தி இப்போதும் தயாராக இல்லை.

இச்சூழலில்தான் ஜனாதிபதியாக பிரணாப் என அடிபடுகின்றது. இந்த வாய்ப்பை அவர் நழுவவிட்டால் நேரு குடும்பத்தை பழிவாங்கும் வாய்ப்பையும் அவர் நழுவ விடுகின்றார் என்று பொருள். ஜனாதிபதிக்கு பெரிய அதிகாரங்கள் இல்லையென்றாலும் சில மரியாதைகள் உண்டு.

இது நாள் வரை அவர் யாருக்கெல்லாம் மரியாதை செலுத்தி வந்தார்களோ அவர்களெல்லாம் இப்போது பிரணாப்பிற்கு மரியாதை செலுத்தியே ஆக வேண்டும்.

மிக முக்கியமாக ராகுல் காந்தி பிரதமராவதை தடுக்கும் வாய்ப்பும் பிரணாப்பிற்கு கிடைக்கும். இதை உணர்ந்ததாலோ என்னவோ அவர் கட்சிக்கு வேண்டும், அரசுக்கு வேண்டும் என பாசமழை பொழிகின்றன்ர்.

இதனை அவர் மனதில் கொண்டு வாய்ப்பு கிடைத்தால் அதை நழுவ விடாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசிலிருந்து தப்பித்துச் சென்றிட வேண்டும். இல்லையென்றால் ராகுல் காந்தி காலத்திலும் இரண்டாம் இடம்தான்.

இந்தியாவின் இரண்டாமவர்கள் என்ற பட்டியலில் அத்வானி, நாவலர், பேராசிரியர் ஆகியோரோடு இவருக்கும் இடம் கிடைத்து விடும்.