Wednesday, June 29, 2016

எதுக்கய்யா விட்டுத் தரணும்?





இளிச்சவாய் இந்தியர்கள் ஒரு கோடி பேரா நேற்றைய பதிவிற்கு வந்த இரண்டு பின்னூட்டங்களில் ஒன்று ஒரு அனானியுடையது. இன்னொன்று ஒரு நாடறிந்த மோடி ஆதரவாளருடையது.

அதில் என்ன தவறு என்ற கேள்வியோடு அனானி நிறுத்திக் கொண்டார். திரு நடராஜன் நாராயணசுவாமி என்ற ஆர்.எஸ்.எஸ், மோடி ஆதரவாளர், இன்னும் மானியத்தை விட்டுத் தராத நீங்கள் எல்லாம் ஒரு மார்க்சிஸ்டா, சுரண்டல்வாதிகள் என்ற அளவிற்குப் போய் விட்டார். அது மட்டுமல்ல, சந்தை விலையில் வாங்க வக்கில்லாதவர்களுக்கு எதற்கு சமையல் எரிவாயு என்ற கேள்வியைக் கேட்டு தனது சுய உருவத்தை தானே அம்பலப்படுத்திக் கொண்டு விட்டார்.

வக்கில்லாதவனுக்கு எதற்கு கல்வி, சோறு, உயிர் என்று கூட நாளை திரு நடராஜன் நாராயணசுவாமி கேட்கலாம். ஏன் இந்த கேள்வியில் அவையும்தானே அடங்கியிருக்கிறது. அவர்களை அப்படி வக்கற்றவர்களாக மாற்றியது யார் என்ற கேள்விக்கு அவர் பதில் தருவரா? அது ஒரு பெரிய விஷயம். அதற்குள் இப்போது நான் செல்லவில்லை. 

அதனால் சமையல் எரிவாயு மானியத்தை கைவிட வேண்டும் என்ற மோடியின் விருப்பத்தை முன்மொழிந்துள்ள இந்த இருவருக்கும் தனியாக பதில் சொல்வதை விட விரிவான ஒரு பதிவாகவே எழுதுவது மேல் என்று தோன்றியது.

மானியம் என்ற சொல்லாடலே முதலில் தவறு. அரசாங்கத்திற்கு மக்களுக்கு சில அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய கடமை இருக்கிறது. கல்வி, சுகாதாரம், விவசாயம், வேலை வாய்ப்பு, உணவு போன்றவை அந்த அடிப்படை வசதிகள். ஆனால் உலகமய எஜமானர்கள் அரசாங்கத்தின் கடமை என்பதை கெட்ட வார்த்தையாக மாற்றி விட்டார்கள். கடைக்கோடி மனிதனுக்கும் அனைத்து உரிமைகளும் சென்றடைய வேண்டும் என்ற சிந்தனைகள் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் மூளையிலிருந்து நீக்கப்பட்டு விட்டது.

அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருவது போல தொழில் வளர்ச்சிக்கான உதவிகள் செய்து தர வேண்டியதும் ஒரு அரசின் கடமைதான். முதல் கடமையை மறந்து போனாலும் இரண்டாவது கடமையை மட்டும் கரடியை கட்டிப்பிடித்த மனிதன் போல கெட்டியாக பிடித்துக் கொண்டு விட்டார்கள்.

முதலாளிகளுக்கு என்னென்ன சலுகைகள் வழங்க முடியுமோ, அத்தனையையும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அடி மாட்டு விலைக்கு நிலம், இலவச தண்ணீர், நிற்கா மின்சாரம், வரி விடுமுறை, வரி விலக்கு, ஒவ்வொரு வருடமும் வரி குறைப்பு என்று அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அற்பமான சதவிகித வரி என்றாலும் அவர்கள் அதனை கட்ட மாட்டார்கள். அதனை வரி இழப்பு என்று கணக்கு காண்பித்து கதையை முடித்து விடுவார்கள்.

இப்படி வரி இழப்பாக மட்டும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக இழந்து கொண்டிருக்கிறது, நினைவில் கொள்ளுங்கள். இத்தொகை வரிச் சலுகை அல்ல. நிர்ணயிக்கப்பட்ட வரியை தொழில் நிறுவனங்கள் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்ற தொகை, வரிச்சலுகை, வரி விடுமுறை என்று இழக்கிற தொகை கூடுதல் இழப்பு.

இதைத்தவிர இயற்கை எரி வாயு படுகைகள், நிலக்கரிச் சுரங்கங்கள், இதர இயற்கை வளங்கள் என்று பல லட்சம் கோடி ரூபாய்களை உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்த்துள்ளோம். அப்படி முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் தொகைகளுக்கு “ஊக்கத் தொகை” என்று பெயர் வைத்து விட்டு சாமானிய மக்களுக்கு செலவழிக்கும் தொகைக்கு “மானியம்” என்று பெயர் வைப்பதே அயோக்கியத்தனம்.

சமையல் எரி வாயுவிற்கான மானியத்தை கைவிட வேண்டும் என்று கோடிக்கணக்கான ரூபாய் விளம்பரம் கொடுத்து கேட்கின்ற மோடி அரசு, விறகு அடுப்பில் சமைக்கிற ஏழைப் பெண்களுக்காக கண்ணீர் சிந்துகிற மோடி, வரிச்சலுகைகளை விட்டுக் கொடுங்கள் என்று ஏன் முதலாளிகளைப் பார்த்து கேட்கக் கூடாது. ஒவ்வொரு வருடமும் செலுத்த வேண்டிய வரியை ஒழுங்காக கட்டுங்கள் என்று கதறக் கூடாது? (விறகு அடுப்பில் சமைக்கிறவர்களுக்கு கேஸ் அடுப்பு ஒரு கேடா  என்று திருவாளர் நடராஜன் நாராயணசுவாமி கேட்டதை மறந்து விடாதீர்கள். மோடி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் மனதில் உள்ளதைத்தான் அவர் வெளியே சொல்லி இருக்கிறார்). நடுத்தர மக்கள் மானியத்தில் சிலிண்டர் வாங்குவதால்தான் ஏழை மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற கேவலமான பிரிவினை உத்திதான் “விட்டுக் கொடுங்கள்”. ஏழை மக்களை நடுத்தர மக்களுக்கு எதிராக நிற்க வைக்கும் மட்டமான புத்திதான் மோடியுடையது. திருவாளர் நடராஜன் நாராயணசுவாமி அவர்களால் என்னைப் பார்த்து சுரண்டல்வாதி என்று சொன்னதும் அதே தீய எண்ணத்தால்தான். அவரும் முதலாளிகள் அனுபவிக்கும் கொள்ளை பற்றி வாய் திறக்க மாட்டார்.

அடுத்த முக்கியமான கேள்வி சமையல் எரிவாயுவிற்கான மானியம் என்று சொல்லப்படுவது நிஜமாகவே மானியம்தானா?

பெட்ரோல், டீசல் போல கேஸ் சிலிண்டரின் விலையிலும் அதன் உற்பத்திச் செலவைக் காட்டிலும் வரியின் அளவே அதிகம். உற்பத்திச் செலவு, போக்குவரத்துச் செல்வு, டீலருக்கான கமிஷன், நேர்மையான லாபம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்தால் மானியம் என்பதே தேவைப்படாத அளவிற்குத்தான் இருக்கும். ஆக மானியம் என்பது வெறும் மாயையே. பொய்க் கணக்கே.

பல லட்சம் கோடி ரூபாய்களை முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் மோடிக்கு சில நூறு ரூபாய்களை விட்டுக்கொடுங்கள் என்று மக்களைக் கேட்பதற்கான அருகதையே கிடையாது. பெருந்தன்மையான மனிதர்கள் போல காட்டிக் கொண்டாலும் மோடியின் பேச்சில் மயங்கி விட்டுக் கொடுத்தவர்கள், அவர்கள் சில ஆயிரம் பேரோ இல்லை மோடி கதைப்பது போல ஒரு கோடி பேரோ அவர்கள் கண்டிப்பாக இளிச்சவாயர்கள்தான்.

அந்த இளிச்சவாயர்களுக்கும் ஒன்று சொல்ல வேண்டும். நீங்கள் விட்டுக் கொடுத்த பணத்தில்தான் மோடி தனக்கென்று இரண்டாயிரம் கோடி ரூபாயில் சொகுசு விமானம் வாங்குகிறார். இளிச்சவாயர்களின் எண்ணிக்கை அதிகமானால் அந்த தொகை ஏழைகளுக்குச் செல்லாது. மோடியின் ஊதாரித்தனத்திற்கே பயன்படும்.

இருப்பவர்களிடமிருந்து இல்லாதவர்களுக்கு தருவதற்குப் பதிலாக இல்லாதவர்களிடம் எஞ்சியிருப்பதையும் பறித்து கொழுத்துக் கிடப்பவர்களுக்கு தருவதுதான் மோடியிசம்.

2 comments:

  1. First Mr modi should stop visiting foreign countries involving huge expenditure let him rule by remaining in india. This will save a lot of money.so mr modi give up your foreign trips

    ReplyDelete
  2. மோடியிசம் அருமையான சொல்லாடல் சார் !!!

    ReplyDelete