Thursday, January 23, 2025

ஏன் சீமான் இதுவே பொய்யென்றால் ?

 


பிரபாகரனோடு நீங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படமே போட்டோஷாப் பொய்யென்றால்  



நீங்கள் சொன்ன

 

ஆமையின் மீது அமர்ந்து பயணித்தது,

இட்லிக்குள் ஒளித்து வைத்த கறி,

ஏ.கே 56 துப்பாக்கியில் சுடக் கற்றுக் கொண்டது

நீங்கள் சாப்பிட்ட கணக்கை ஒரு புலி எழுதியது

 போன்ற அனைத்து சுவாரஸ்யங்களும் கூட பொய்தானா?

 எதை எழுதினாலும் நீதான் எழுதினியா என்று கேட்பார்களே என்று புலம்பிய தருமி போல நீங்களும் புலம்புவீர்களா?

 அதெல்லாம் வெ.மா.ரோ.சூ.சொ உள்ளவர்களுக்குத்தானே, எனக்குத்தான் கிடையாதே என்று சொல்கிறீர்களா!

 ஆமாம் அதெல்லாம் இருந்திருந்தால் இந்த பொய்யை வைத்துக் கொண்டு பல கோடி ரூபாய் திரள் நிதி திரட்டியிருப்பீர்களா !

பிகு:  எழுதி இரண்டு நாளாகி விட்டது.

Wednesday, January 22, 2025

இப்பத்தான் பாக்கறியா ஆட்டுக்காரா?

 


பொங்கல் போயிடுச்சு ஆட்டுக்காரா . . .  என்று 21.01.2025 எழுதிய பதிவை படியுங்கள்.

மத்திய சுரங்க மந்திரி 17.01.2025 அன்று மதுரை வந்து ட்ங்க்ஸ்டன் சுரங்கம் ரத்து என அறிவிப்பார் என்று 10.01.2025 அன்று ஆட்டுக்காரன் அளந்து விட்டதை நக்கலடித்து எழுதியிருந்தேன்.

நேற்று ஆட்டுக்காரனின் ட்விட்டர் பக்கம் பார்த்த போதுதான் ஒரு உண்மை தெரிந்தது. நேற்று 22.01.2025 அன்றுதான் ஆட்டுக்காரனும் மற்றவர்களும் டெல்லிக்கு போய் சுரங்க மந்திரியை பார்த்திருக்கிறார்கள்.



கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து நாட்களுக்கு முன்பே தோழர் சு.வெங்கடேசன் மந்திரியை பார்த்துள்ளார். அதற்கு முன்பே மக்களவையிலும் பேசியுள்ளார். தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, மேலூர் பகுதியில் பிரம்மாண்டமான இயக்கம் நடந்துள்ளது.

"செத்ததுக்கு வா என்றால் பத்துக்கு வந்திருக்கியே" என்று கேட்பது போல இவர்கள் நிதானமாக  நேற்றுதான் டெல்லிக்கு போயுள்ளார்கள்.

ஆனால் வெற்றுக்கூச்சலுக்கு மட்டும் குறைவில்லை.

வெட்கங்கெட்ட கயவர்கள் . . .


நண்பரிடம் சண்டை போடுவாரா மோடி?

 



 நேற்று  மீண்டும் அமெரிக்க  ஜனாதிபதியாக பதவியேற்ற மோடியின் நண்பர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு முடிவுகளை அறிவித்துள்ளார்.

 அமெரிக்காவில் பிறக்கிற காரணத்தாலாயே யாருக்கும் இனி அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்பது முதல் முடிவு.

 இதன் மூலம் ஹெச்1 விசாவில் அமெரிக்காவில் பணி செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அங்கே குழந்தை பிறந்தால் அந்த குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிட்டாது. இதன் மூலம் சில லட்சம் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் பிறந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு தங்கள் மூளையை விற்பவர்களுக்கு சிக்கல் வருவதைப் பற்றி நாம் இங்கே பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் மோடியின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது மோடிதான்.

 இரண்டாவது மிகவும் மோசமான முடிவு.

 டாலருக்கு மாற்றாக ஒரு புதிய நாணயத்தை உருவாக்க முயன்ற (இப்போது அந்த முயற்சி இல்லை என்பதுதான் யதார்த்தம்) பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் பொருட்களுக்கு 100 % வரி விதிப்பது என்-பதுதான் அந்த முடிவு. பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா மட்டும் இப்போது பிரிக்ஸ் இல்லை. மேலும் 23 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர்ந்துள்ளது.

 அந்த அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் 100 % வரி என்றால் அவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வது குறைந்து போகும். அதன் மூலம் உற்பத்தி குறைவு என்று தொடங்கி தொடர்ச்சியாக பணி இழப்பு என்று சங்கிலித் தொடர் போல பாதிப்புக்கள் உண்டாகி பொருளாதார நெருக்கடி உருவாகும்.

 முதல் முடிவால் மோடி ஆதரவாளர்களுக்கு பாதிப்பு என்றால் இரண்டாவது முடிவால் நாட்டின் பொருளாதாரத்திற்கே பாதிப்பு.

 56 இஞ்ச் மாவீரன் மோடி என்ன செய்யப் போகிறார்?

 பதவியேற்பிற்கு அழைப்பு கூட அனுப்பாத நண்பனோடு சண்டை போட்டு முடிவுகளை மாற்ற வைப்பாரா இல்லை என்ன நடந்தால் எனக்கென்ன என்று மழையை பொருட்படுத்தாத எருமையாகி விடுவாரா?

 சீனா பெயரையே சொல்ல பயப்படும் மோடி எங்கே ட்ரம்போடு சண்டை போடப் போகிறார்! 


ஒரு வேளை அம்பானி, அதானிக்கு பிரச்சினை வரும் என்றால் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி வல்லவராயன் காலில் விழுந்தது போல ட்ரம்பிடம் சரணாகதி அடையலாம்.

Tuesday, January 21, 2025

நீங்க சாம்சங்கை விடுங்க மந்திரி

 


கீழேயுள்ள காணொளியை முதலில் பாருங்க . . .


சாம்சங் தொழிற்சங்க பதிவு கேட்டவுடன் "அதை விடுங்க" என்று சொல்லிக் கொண்டே ஓடுகிறார் தமிழ்நாட்டின் தொழிலாளர் நல(😁😁)த்துறை அமைச்சர் சி.வி.கணேசன்.

அமைச்சரிடம் சொல்ல வேண்டியது ஒன்றுதான்.

நீங்கள் தமிழ்நாட்டின் தொழிலாளர்களின் நலத்தை பாதுகாக்க வேண்டிய அமைச்சர். அந்த பதவிக்கு நியாயமாக இருக்க வேண்டுமானால் முதலில் சாம்சங் நிர்வாகத்திற்கு விசுவாசமாக இருப்பதை விடுங்கள்.

அதுதான் தமிழ்நாட்டிற்கும் நல்லது. உங்கள் ஆட்சிக்கும் நல்லது,


பால் பணியாரம் மாநில உணவாகுமா?

 


முதல்வருக்கு இவ்வளவு பெருந்தன்மையெல்லாம் அவசியமில்லை. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரை இழிவுபடுத்துவதற்காகவே எழுதப்பட்ட "சூல்" சோ.தர்மனுக்கு நேரடியாக கனவு இல்லம் ஆவணம் கொடுத்ததே அதீதமான செயல்.

அதற்கு நிகரான ஒன்று நேற்று அவர் செய்தது.

எஸ்.வி.சேகரின் அப்பாவின் பெயரை அவர்கள் தெருவுக்கு சூட்டுவது என்பது. அப்படி என்ன செய்து விட்டார் அவர்!

பால் பாக்கெட் மாற்றிக் கொடுத்த எடப்பாடிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் வித்தியாசமே இல்லை என்றாகி விட்டதே!

பெண்களை இழிவுபடுத்தியவர் எஸ்.வி.சேகர் என்பது அதற்குள்ளா மறந்து விட்டது! கொடுமை!

பிகு: தலைப்பிற்கான காரணம் புரியாதவர்களுக்காக . . .

மேலே படத்தில் உள்ளவர்தான் எஸ்.வி.சேகரின் அப்பா. ரோஜா திரைப்படத்தில் அவர் மதுபாலாவிடம் பால் பணியாரம் செய்யத் தெரியுமா என்று கேட்கும் காட்சி அது. யார் கண்டது அப்படி ஒரு கோரிக்கை வந்திருந்தால் அது கூட ஏற்கப்பட்டிருக்கலாம். அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியக் கோரிக்கையோ அல்லது சாம்சங் தொழிற்சங்கப்பதிவு போன்ற சில்லறை கோரிக்கைகளா என்ன? அலட்சியப்படுத்துவதற்கு!

பொங்கல் போயிடுச்சு ஆட்டுக்காரா

 


மதுரை மாவட்டம் மேலூர்டில் டங்க்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் குரல் கொடுத்தது. தோழர் சு.வெங்கடேசன் பதிவு மத்தியரசின் சதிகளை தோலுரித்தது. வாலிபர் சங்கம் விரிவான நடைப்பயண இயக்கத்தை நடத்தியது. பகுதி மக்களும் இப்போது போர்ப்பரணி ஒலித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில் போராட்டத்தை ஒத்தி வைக்க ஆட்டுக்காரன் தலையிட்டான். 




17 ம் தேதி மந்திரி வருவாரு, பொங்கல் முடிஞ்சு வருவாருன்னு என்றெல்லாம் சொல்லிப்பார்த்தான்.

இதோ 17 ம் தேதியும் முடிஞ்சு போச்சி, பொங்கலும் ஓடிப் போச்சு.

ஆனா மந்திரியையும் காணோம். திட்டம் கைவிடப்பட்டதுங்கற அறிவிப்பும் காணோம்.

ஆட்டுக்காரன் அல்லக்கைகள் மட்டும் ஜனவரி 17ம் தேதி எப்போது வரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்களாம்.

Monday, January 20, 2025

கோமியமா மாட்டிறைச்சியா?

ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் பதிவை சுட்டு இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 



சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி கோமியத்தின் மருத்துவப் பயன்கள் குறித்துப் பேசியது தனியான செயல் அல்ல. 2016ஆம் ஆண்டு டெல்லி ஐஐடி ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தியது. என்ன தலைப்பு தெரியுமா? பஞ்சகவ்யாவின் பலன்களை அறிவியல் பூர்வமாக நிறுவது. இந்த பஞ்சகவ்யா கோமியத்தின் ஒரு உன்னத வடிவம். சுதேசிப் பசுவின் சாணம், மூத்திரம், பால், நெய் தயிர் ஆகியவற்றைக் குழைத்து தயாரிக்கப்படும் சாறுதான். அதனை விவசாயம் மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ச்சி செய்வதுதான் நோக்கம். பூச்சி மருந்தடித்து விளைவிக்கப்பட்ட புல் வகைகளை உண்ணும் மாட்டின் இறைச்சியை உண்பதால் உடல்நலம் பாதிக்கப் படுமா என்பதும் ஆராய்ச்சிகளின் நோக்கம். (நம் மேல்தான் எவ்வளவு அக்கறை?)

இந்த ‘ஆராய்ச்சிக்கான’ 50 ஆலோசனைகள் அடுத்த சில ஆண்டுகளில் குவிந்தன. இந்தியாவிலிருக்கும் ஐஐடிகள், ஐ ஐ எம் கள், CSIR, ICMR போன்ற பொதுப் பணத்தில் நடத்தப்படும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்தான் போட்டி போட்டுக் கொண்டு இந்த ‘ஆராய்ச்சி’ ஆலோசனைகள் வந்தன. இந்த ஆராய்ச்சிக்கான தேசிய வழிநடத்தும் குழுவை அமைத்திருப்பது ஒன்றிய அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.

ஒரு டம்ப்ளர் கோமியத்துக்கே இவ்வளவு ‘பவர்’ என்றால் மாட்டிறைச்சிக்கு எவ்வளவு பவர் இருக்குமென்று நேற்று இரவு பீஃப் + பரோட்டா சாப்பிட்டுக் கொண்டே ஒரு கூகுள் ஆய்வைச் செய்தேன். அதன் முடிவு கீழே.





காமகோடி அவர்களே இதற்கும் ஒரு பயிற்சிப் பட்டறை நடத்துங்கள்.