Friday, December 22, 2017

விருது மகிழ்ச்சி, நிராகரித்தல் இன்னும் மகிழ்ச்சி




தோழர் இன்குலாபிற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சியான செய்தி. 

திராட்சை கிட்டாத நரிகள் புலம்பும் என்ற எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. மக்களின் பிரச்சினைகளை பாடியதால் அவர் எழுதுவது இலக்கியமே இல்லை, அழகியலே கிடையாது. லாபியிங் காரணமாகவே இந்த விருது என்றெல்லாம் அழுது விட்டார்கள். 

அதே நேரத்தில்

தோழர் இன்குலாப்  குடும்பத்தினர் அழுத்தமான வார்த்தைகளில் விருதை நிராகரித்தது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

அந்த அறிக்கை கீழே


சாகித்ய அகாடமி விருது ஏற்க மறுப்பு - இன்குலாப் குடும்பத்தினரின் அறிக்கை.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் குரல்களில் ஒன்றாக இருந்த இன்குலாபுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்குவது என்பது இப்படிப்பட்ட நிலைகளில் இருந்து வருபவர்களுக்கு ஓர் அங்கீகாரமாக அமையும்.அவர்களது எழுத்துக்கள் இன்னும் பரவலான வாசகர் வட்டத்தை அடையலாம்.

இன்குலாப் விருதுகள் பற்றிக் கூறியது:

’’எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் எதிர்ப்பும், கண்டனமும், தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன்.’’


‘’அவ்வப்பொழுது விசாரணைக்காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகளின் தொடக்கமாகும்.


….அதற்கும் மேலே
என் பேனா அழுந்துகையில்
எழுத்தாளன் எவனுக்கும்
கிடைக்காத பரிசு
இந்திய மண்ணில்
எனக்கு நிச்சயம். ‘’


இவ்வாறு விசாரணைகளை வாழும் காலத்திலும் இறந்த பின்னும் நேர்கொண்ட இன்குலாபிற்கு அரசினால் அளிக்கப்படும் இவ்விருது ஓர் அங்கீகாரமாகலாம்.இன்குலாப் அரசினால் தரப்படும் எவ்விருதையும் வாழும்காலத்திலேயே ஏற்க முடியாது என மறுத்துள்ளார்.


அரசு முகங்கள் மாறலாம்.ஆனால் அவை அணிந்திருக்கும் முகமூடி ஒன்றே.அடக்குமுறையும்,இனவாதமும்,வர்க்கபேதமும்,வன்முறையும் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கிறது. 


விமர்சிப்பவர்கள்,எதிர்ப்பவர்களையெல்லாம் படுகொலை செய்யும் இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக்கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும்.இன்குலாப்பிற்கு அனைத்து இருட்டடிப்புகளையும் தாண்டி பரவலான மக்கள் வாசக வட்டம் உண்டு.அதுவே அவருக்கு ஒப்புகையாகவும் அங்கீகாரமாகவும் இருக்கும்.

இன்குலாப் அவர்களின் விருப்பப்படி இவ்விருதை நாங்கள் ஏற்கவில்லை.

இறுதியாக இன்குலாபின் வரிகளில்

‘’விருதுகள் கௌவரவப்படுத்தும்
பிணமாக வாழ்ந்தால்
என் போன்றோரை…’’.


இவண்,
இன்குலாப் குடும்பத்தினர்.,
கமருன்னிஸா
சா.செல்வம்
சா.இன்குலாப்
சா.அமினா பர்வின்



ஆனால் காலமெல்லாம் இந்திய அரசெதிர்ப்பாளராக பாவனை செய்தவருக்கு அளிக்கப்படும் சாகித்ய அக்காதமி ஒருவகையில் அவர் ஒங்கிக் கூச்சலிட்ட அனைத்து புரட்சிகளையுமே காலிசெய்வது என்பதை அவருக்காக உழைத்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அல்லது அவர்கள்தான் சரியாகப்புரிந்துகொண்டிருக்கிறார்களோ? அவர் ஏங்கியதே இதைத்தானோ?

என்று விஷத்தை கக்கிய இழிந்த குணம் கொண்ட ஜெயமோகனுக்கு இந்த தார்மீகம் எல்லாம் புரியாது.

தோழர் இன்குலாபின்  கொள்கைகளை உயர்த்திப் பிடித்ததால் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். 

பின் குறிப்பு : அருமையான இந்த ஓவியத்தை வரைந்தது தோழர் ஸ்ரீரசா.

பி.கு 2 : யதேச்சையாக நடந்த நிகழ்வொன்று பற்றி மாலையில் 


Thursday, December 21, 2017

ரா.கா சினிமாக்கு போனா குற்றமா?





முன் குறிப்பு : ராகுல் காந்தி மீது என்றுமே எனக்கு பெரிய அபிப்ராயம் இருந்தது கிடையாது.  இப்போதும் அந்த நிலையில் மாற்றம் கிடையாது.  மோடி எப்படி பிரதமருக்கு லாயக்கில்லாதவரோ, எப்படி அவர் பெரு முதலாளிகளின் எடுபிடியோ அது போலத்தான் ராகுல் காந்தியும் என்பதுதான் யதார்த்தம்.

சரி இப்போது பதிவிற்கு வருகிறேன்.

குஜராத், ஹிமாச்சல் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மோடி கடமை உணர்வோடு ஓஹி புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடப் போய் விட்டார். ஆனால் ராகுல் காந்தியோ தன் நண்பர்களுடன் சினிமா பார்க்க போய் விட்டார்.

இப்படி ஒரு செய்தியோடு “டைம்ஸ் நவ்” தொலைக்காட்சி ஒரு சீரியஸ் விவாதம் நடத்தி உள்ளது.

முதலில் அண்ணன் மோடியின் பொறுப்புணர்வைப் பார்ப்போம்.

நமக்கு பிடிக்குதோ, பிடிக்கலையோ அவர்தான் பிரதமர். பிரதமர் பதவிக்கு என்று சில கடமைகள் உள்ளது, நாடாளுமன்றத்திற்கு போவது, பேரிடர் நடந்த இடத்தினை பார்வையிட்டு நிவாரணத்திற்கு நிதி வழங்குவது என்று ஏராளமாக உள்ளது.

“செத்ததுக்கு வா என்றால் கருமாதிக்கு வந்திருக்கியே”

என்பது போல மிகப்பெரிய  பேரிடர் நிகழ்ந்து வெகு நாட்களுக்குப் பிறகு நிதானமாக வந்தார் மோடி. அதிலும் பாதிப்பை வெறும் புகைப்படங்களில் பார்த்தார். இதைத்தான் பொறுப்பு என்று சொல்கிறது “டைம்ஸ் நவ்”.

நாடாளுமன்றம் செல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம். அவ்வளவுதான். வெளிநாட்டுப் பயணம் இல்லாததால் கன்னியாகுமரி வந்து விட்டார்.

இதை பொறுப்புணர்ச்சி என்று புளகாங்கிதம் அடைவதெல்லாம் “சின்ன புள்ளதனம்” ஆக அல்லவா இருக்கிறது!

சரி, ராகுல் காந்தி சினிமாவிற்குப் போனது என்பது என்ன பெரிய குற்றமா இல்லை தேசத்துரோகச் செயலா? தேர்தல் முடிவிற்குப் பிறகு ஒன்றும் அவர் ஒளிந்து கொள்ளவில்லையே! மாறாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தாரே! மோடி செல்வதற்கு பல நாட்கள் முன்பே ஓஹி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராகுல் காந்தி வந்து போனார் என்பதுதான் உண்மை.

தனிப்பட்ட விருப்பத்திற்கென்று நேரம் ஒதுக்கக் கூடாதா என்ன? நாட்டிற்காக உழைத்துக் கொண்டே இருக்கிறேன் என்று மோடி போல வெட்டி சீன் போட வேண்டுமா என்ன?

மோடிக்கு ஜால்ரா அடிப்பதற்காக எந்த  அளவிற்கும் ஊடகங்கள் கீழிறங்கும் என்பதற்கு டைம்ஸ் நவ்வின் செயல் ஒரு எடுத்துக்காட்டு.

Wednesday, December 20, 2017

மோடி படிக்க வேண்டிய ஔரங்கசீப் கடிதம்.



வாட்ஸப்பில் வந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

ஔரங்கசீப் பற்றி உருவாக்கப்பட்ட மோசமான பிம்பங்களை தகர்ப்பதாக  அவர் எழுதிய கடிதம் அமைந்துள்ளது. நிதானமாக படியுங்கள். 

யார் படிக்காவிட்டாலும் மோடி நிச்சயம் இக்கடிதத்தை படிக்க வேண்டும். ஏனென்றால் அவரது ஆசிரியரும் இது போல மோசமான ஒருவராகக் கூட இருந்திருக்கலாம் அல்லவா?

யாருங்க அது? மோடி நிஜமாகவே படிச்சாரா இல்லையான்னு இன்னும் முடிவு தெரியாத போது அவருடைய ஆசிரியரைப் பத்தி பேசறதுன்னு சத்தம் போடறது?





ஒளரங்கசீப் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

வரலாற்றில் இடம் பெற்ற புகழ்பெற்ற கடிதங்களில் ஒளரங்கசீப் தன் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் மிக முதன்மையானது. ஆசிரியர்கள் இன்றியமையாது படிக்க வேண்டியது; கல்வியியல் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டியது.

1658இல் ஒளரங்கசீப் ஹிந்துஸ்தானத்தில் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டார். அவருடைய இளம் வயது ஆசிரியர் முல்லாசாஹப் தனக்கு அரசசபையில் பதவியும், பரிசும் தர வேண்டும் என்று கோரியிருந்தார். அதற்கு ஒளரங்கசீப் எழுதிய பதில் கடிதம் தான் இது.

அன்று ஒளரங்கசீப் கற்ற கல்வியைப் பற்றியும், ஆசிரியர் தனக்கு வாழ்வியலைக் கற்பிக்க வில்லையே! என்ற ஆதங்கத்தையும் அக்கடிதம் உணர்த்துகிறது. 350 ஆண்டிற்கு முன்னே கல்வி எப்படி இருந்திருக்க வேண்டும்? என்று விவாதிப்பது இன்றும் பொருத்தமுடையதாகவே இருக்கிறது. இந்தப் பின்னணியில் கடிதத்தைப் படியுங்கள்; பயனள்ள செய்திகளை (வாழ்வியல்) இளமைப் பருவத்திலேயே கற்றுக் கொடுக்காமல் போய் விட்டார்களே என்று வயிறெரிந்து எழுதுகிறார், ஒளரங்கசீப்.

கற்றவரே!

நீர் என்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரசவையில் ஒரு முதன்மைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா?

ஒன்று சொல்கிறேன் – நீங்கள் எனக்கு எப்படிக் கல்வி போதித்து இருக்க வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால் உங்களுக்கு நான் பதவியைத் தருவது போன்று நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது.

ஏனென்றால், நான் ஒரு செய்தியை உறுதியாக ஒப்புக் கொள்வேன். ஒரு குழந்தை தன்னுடைய தந்தைக்கு எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்குத் தனக்கு முறையான கல்வியைப் போதித்த ஆசிரியருக்கும் கடமைப்பட்டிருக்கிறது.

ஆனால், நீங்கள் எனக்குப் போதித்த முறையான கல்வி என்பது எங்கே இருக்கிறது? ஐரோப்பாவை ஒன்றுமில்லாத ஒரு சூன்யப் பிரதேசம் என்று போதித்தீர்கள். போர்ச்சுக்கீசிய நாட்டு மாபெரும் மன்னரைப் பற்றியோ, அவருக்கு அடுத்த ஹாலந்து மன்னரைப் பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ, நீர் எனக்கு ஒரு விபரமும் கூறவில்லை. பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாட்டு மன்னர்கள் எல்லாம் நமக்கு அடங்கிய, மிகச் சிறிய குறுநில மன்னர்கள் என்று கூறினீர்கள்.

ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே, உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங்கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டுமே என்பதற்காக உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் நமக்கு அடங்கினவையே என்று கூறினீர்கள். ஆழமான வியந்து பாராட்ட வேண்டிய சரித்திர அறிவு!

எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்? உலக நாடுகளில் எல்லாம் என்ன நடக்கிறது? அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர் முறைகள் என்ன? மதக் கோட்பாடுகள் என்ன? ராஜ தந்திரங்கள் என்ன? இவற்றையெல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா?

உண்மையான சரித்திரத்தை எனக்குக் கற்றுக் கொடுத்து, பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும் தாழ்வையும் அவர்களது எழுச்சியையும், வீழ்ச்சியையும் நான் உணரும்படிச் செய்திருக்க வேண்டாமா?

எந்த விதமான தவறுகள் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால், அங்கே புரட்சிகள் தோன்றின. எந்தச் சாம்ராஜ்யங்கள் அழிந்தன என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?

உங்களிடம் இருந்து என்னுடைய முப்பாட்டனார்கள் பெயர்களைக் கூட நான் அறிந்து கொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்திற்கும், நீங்கள் எனக்குக் கற்பித்ததற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி இருந்திருக்கிறது?

எனக்கு அரேபிய மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுக்க முனைந்தீர்கள். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக விழுந்து விழுந்து படித்தாலும், முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியாத ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்ததன் விளைவாக எனது வாழ்நாளில் அவ்வளவு நேரத்தை வீணடித்ததற்காக உங்களுக்கு நான் ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரு வருங்கால அரசன் பன்மொழிப் புலவனாக இருந்துதான் தீர வேண்டுமா என்ன? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து, இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஓர் அரசனுக்குப் பெருமையா? ராஜ பரிபாலனம் செய்வதற்கான அவசியமான முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய நான், அரேபிய மொழியைக் கற்பதில் காலம் கழித்தேன்.

ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டால், அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனை செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும்.

சட்டம் – மத வழிபாட்டு முறைகள் – விஞ்ஞானம் – அவற்றையெல்லாம் எனது தாய்மொழியில் நான் கற்றிருக்க முடியாதா? அரேபிய மொழியை ஏன் என் தலையில் கட்டினீர்கள்?

என் தந்தை ஷாஜஹானிடம் எனக்கு மதத் தத்துவங்களைப் போதிக்கப் போவதாக நீங்கள் சொன்னது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அர்த்தமே இல்லாத – இருந்தாலும் புரிந்து கொள்ள முடியாத – புரிந்து கொண்டாலும் மனத் திருப்தி அளிக்காத – மனத் திருப்தி அளித்தாலும் கூட, இன்றைய சமுதாயத்தில் எந்தவிதப் பயனுமே இல்லாத புதிர்களையெல்லாம் என்னிடம் போட்டுக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் கற்றுக் கொடுத்த தத்துவங்களைப் பற்றி இப்படித்தான் புகழ முடியும். அவையெல்லாம் புரிந்துகொள்ள மிகக் கடினமானவை; மறப்பதற்கு மிக எளியவை.

நீங்கள் போதித்த மதத் தத்துவங்களைப் பற்றி என் நினைவில் மீதம் இருப்பதெல்லாம் காட்டு மிராண்டித்தனமான இருள் அடைந்த மிகப் பெரிய வார்த்தைகள்தாம்; மேதாவிகளைக் கூடக் குழப்பக் கூடிய பயங்கரமான வார்த்தைகள். உங்களைப் போன்றவர்களின் அறியாமையையும், இறுமாப்பையும் மறைக்க உங்களைப் போன்றவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள்.
உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும்.

உங்களைப் போன்ற மேதாவிகளுக்குத்தான் இந்தப் பயங்கர வார்த்தைகளில் அடங்கியிருக்கக் கூடிய அரிய தத்துவ ரகசியங்கள் புரியும் என்று மற்றவர்கள் நினைத்து ஏமாந்து போவதற்காக உங்களைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வெறும் வார்த்தைகள்.

காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப் பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய மதத் தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால், மனத்தை ஒரு நிதானத்தில் அடக்கி வைக்கப் பயன்படும் அரிய தத்துவங்களை எனக்கு நீங்கள் போதித்திருந்தால்,

அதிர்ஷ்டத்தினால் தாக்கப்பட்டு, செல்வத்தில் திளைத்தாலும் சரி, துரதிர்ஷ்டத்தினால் தாக்கப்பட்டுத் தோல்வியைத் தழுவினாலும் சரி, இரண்டுக்குமே மயங்காத மனோ தைரியத்தை அளிக்கக் கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால்,

நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்தப் பூமி இயங்குகிறது? என்பதையெல்லாம் நான் உணர்ந்து கொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்வி போதித்திருந்தால்,

இப்போதும் சொல்கிறேன்; இந்த மாதிரி விஷயங்களையும் தத்துவங்களையும் நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்திருந்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருந்திருப்பேன்.

அலெக்ஸாண்டர் அவனுடைய குரு அரிஸ்டாடிலுக்கு எவ்வளவு கடமைப்பட்டிருந்தானோ அதைவிட உங்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பேன். அலெக்ஸாண்டர் அரிஸ்டாடிலுக்குச் செய்ததற்கும் மேலாக உங்களுக்குச் செய்திருப்பேன்; நன்றி காட்டியிருப்பேன்.

சதா என்னை முகஸ்துதி செய்து கொண்டே இருந்ததற்குப் பதிலாக, ராஜ பரிபாலனத்துக்குத் தேவையான விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா?

குடிமக்களுக்கு அரசன் செய்ய வேண்டிய கடமை என்ன? அரசனுக்கு குடிமக்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?

எனது வாழ்க்கைப் பாதையில் ஒரு கால கட்டத்தில் என்னுடைய பதவிக்காகவும், உயிருக்காகவும் கூட, என்னுடைய உடன்பிறந்த சகோதரர்களுடனேயே நான் வாள் எடுத்துப் போரிட நேரிடும் என்பதையும் உணரும் அளவிற்கு நீங்கள் போதித்த கல்வி அமைந்திருக்க வேண்டாமா?

ஒரு நகரத்தை எப்படிக் கைப்பற்றுவது? ஒரு போர்ப்படையை எப்படி நடத்திச் செல்வது? என்பதையெல்லாம் நான் அறிந்து கொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா?

பயனள்ள விஷயங்களை ஏதாவது நான் அறிந்து கொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா? பயனள்ள விஷயங்களை எதாவது நான் இப்போது அறிந்து வைத்திருந்தால், அதற்காக நான் மற்ற பலருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; நிச்சயமாக உமக்கல்ல.

“போங்கள்! நீங்கள் எந்தக் கிராமத்திலிருந்து வந்தீர்களோ, அந்தக் கிராமத்திற்கே போய்ச் சேருங்கள்! நீர் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்ன ஆனீர்கள்? என்பதையெல்லாம் எவருமே தெரிந்து கொள்ள வேண்டாம்.”

-ஒளரங்கசீப்

இப்போ எதுக்கய்யா இந்த பூ அலங்காரம்?




ஒரு மிகப்பெரிய பேரிடர் நிகழ்ந்தவுடன் வர முடியாத அளவிற்கு "வாழ்வா-சாவா" பொதுத்தேர்தலில் பிரதமர் ஐக்கியமாகி இருந்தார், அப்படியே வந்தாலும் அவரால் எதுவும் செய்ய முடியாது, செய்வதற்கு மனமில்லாதவர் என்பதும் நமக்கு தெரியும்.

ஓகி புயலின் பாதிப்பு என்ன என்பதை புகைப்படத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதையும் உணர முடிகிறது.

பாதிப்புக்களைச் சொல்லும் புகைப்படங்களுக்கு மத்தியில் எதற்கய்யா மலர் அலங்காரம்?

கொஞ்சம் கூட விவஸ்தை கிடையாதா?

இழவு வீட்டிலுமா உங்க அழகியல்?
 

Tuesday, December 19, 2017

அவரைப் பத்தி . . . நீங்களே சிரிங்க . . .

நான் எந்த முன்னுரையும் எழுதப் போவதில்லை. 

இணைப்பின் மூலம் காணொளியைப் பார்த்து நீங்களே மனம் விட்டு சிரியுங்கள். 

அண்ணன் மட்டும் இல்லையென்றால் தமிழகம் என்ன ஆகும்?

 


கண்டிப்பா இந்த இணைப்பை பாருங்க, வாய் விட்டு சிரிங்க

சூப்பரான இரண்டு வெற்றிகள் – இரண்டு தோல்விகள்




குஜராத், ஹிமாச்சல் பிரதேச தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சியளித்த சில முடிவுகளும் உண்டு.

ஹிமாச்சல் பிரதேசத்தின் தியோக் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் ராகேஷ் சின்ஹா வெற்றி பெற்றுள்ளார் இருபது வருடங்களுக்குப் பிறகு ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் செங்கொடியின் குரல் உழைப்பாளி மக்களுக்காக ஒலிக்கப் போவது மகிழ்ச்சியளிக்கிறது.

செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்று சொல்லி மனிதத்தோலை சவுக்கால் அடித்து சித்திரவதை செய்த மத வெறியர்களுக்கு எதிரான போராட்டத்தை எழுச்சியாக நடத்திய ஒடுக்கப்பட்ட  மக்களின் “உனா நாயகன்”  ஜிக்னேஷ் மேவானி குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடியது மகிழ்ச்சியளிக்கும் இன்னொரு செய்தி.

வெற்றி வாகை சூடிய தோழர்கள் ராகேஷ் சின்ஹா மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகிய இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இந்த இரு வெற்றி போலவே இரு தோல்விகளும் மகிழ்ச்சியளித்தது.

தேர்தல் வெற்றிக்காக எந்த அளவிற்கும் கீழிறங்கத் தயங்காத மோடி, நான் மண்ணின் மைந்தன் என்ற டயலாக்கை அதிகமாக பயன்படுத்தினார்.  அவரது சொந்த ஊரை உள்ளடக்கிய தொகுதியில் பாஜக தோற்றுப் போயிருக்கிறது. மண்ணின் மைந்தனை அந்த மண்ணின் மக்களே மண்ணைக் கவ்வ வைத்தது மகிழ்ச்சிதானே!

ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக வென்றிருக்கலாம். ஆனால் அங்கே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவரை, பி.கே.துமாலை, அவரது தொகுதி வாக்காளர்கள் நிராகரித்து விட்டார்கள்.  தொகுதி மக்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியாதவரைத்தான் பாஜக முதல்வர் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.