Friday, December 30, 2011

2011 ஒரு அலசல் , 2012 - ஒரு எதிர்பார்ப்பு

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க 
சுற்றறிக்கையின் தமிழாக்கம். ஆனால் அது 
அனைத்து  உழைக்கும் மக்களுக்கானது. 

 
காப்பீட்டுக்  கழக  ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம், பதிவு எண் 640 / என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 64 / 11                              29.12.2011
அனைத்து உறுப்பினர்களுக்கும்,
அன்பார்ந்த தோழரே,
புத்தாண்டு 2012
புத்தாண்டு 2012 குறித்து  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை கீழே  தந்துள்ளோம். வரும் ஆண்டு உழைக்கும் மக்களின் ஆண்டாகத் திகழ நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்வோம்.
புத்தாண்டு  வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒம் எஸ்.ராமன் 
பொதுச்செயலாளர்
2011 ம் ஆண்டு வரலாற்றுக்குள் ஐக்கியமாக, புத்தாண்டு உதயமாகிறது. உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களுக்கு அவர்தம் வாழ்விலும் வாழ்க்கைத் தரத்திலும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்போம். இந்த நம்பிக்கையோடு இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் உலகம் எங்கும் உள்ள உழைப்பாளி மக்களுக்கும் இப்புத்தாண்டு மகிழ்ச்சி நிறைந்ததாய், பயனுள்ளதாய் அமைய வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

புத்தாண்டை நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் நோக்குகையில் மனித குலம் ஒரு நல்ல வாழ்க்கையை அடைய வேண்டும் என்பதற்கான போராட்டத்தை வடிவமைத்த கடந்தாண்டு நிகழ்வுகள் பற்றி நினைவு படுத்திக்கொள்வது மிகவும் அவசியமாகும். கடந்து கொண்டிருக்கும் ஆண்டானது சமீப காலங்களிலேயே உலகத்து உழைக்கும் மக்களுக்கு மிகவும் கடினமாக அமைந்த ஆண்டாகும்.

முதலாளித்துவம் 2007 ம் ஆண்டு சந்தித்த நெருக்கடி அமெரிக்காவிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும்  மேலும்  அதிகமானது. உலகின் மற்ற பகுதிகளும் கூட பாதிப்புக்களிலிருந்து தப்ப இயலவில்லை. 2008 ம் ஆண்டின் வங்கித்துறை நெருக்கடி, பல ஐரோப்பிய நாடுகளின் மிகப் பெரிய கடன் பிரச்சினையாய் உருவெடுத்தது. பல நாடுகளால் தங்களது கடன்களை திருப்பி செலுத்த இயலாமல் திவாலாகும் அபாய நிலையை சந்தித்தது. வரலாறு காணாத மிக அதிகமான வேலையின்மை விகிதத்துடன் அமெரிக்கப் பொருளாதாரம் பிரச்சினையில் உள்ளது. மாபெரும் மந்தம்

போன்ற மோசமான சூழலை நோக்கி முதலாளித்துவப் பொருளாதாரம் மூழ்கிப் போகும் நிலையில் உள்ளது என்ற பரவலான எதிர்ப்பார்ப்பு உள்ளது.

மக்களின் வாழ்வாதரங்கள் மீது இது நாள் வரை இல்லாத கடுமையான தாக்குதல்களை தொடுப்பதன் மூலம் முதலாளித்துவ நாடுகள் சிக்கல்களை தீர்க்கப்பார்க்கிறது. லட்சக்கணக்கான வேலைகள் வெட்டப்பட்டு விட்டன, சமூக நலப் பலன்கள்  முடக்கப்படுகின்றன. மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் கூட தாக்குதலுக்கு உள்ளாயின. உழைக்கும் மக்கள் இத்தாக்குதல்களுக்கு அடி பணிய, அவை அமுலாக அனுமதிக்கவில்லை, தயாராக இல்லை. தங்கள் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடுவதையும் இந்த ஆண்டு கண்ணுற்றது. பொருளாதார, சமூக சீர்கேடுகளுக்கு எதிராக மக்கள் வீரம் செறிந்த போராட்டங்கள் மேற்கொள்வதை அமெரிக்கா பார்த்தது, பார்த்துக் கொண்டிருக்கிறது.

“வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்” போராட்டம், 99 % மக்களை இனியும் தொடர்ந்து சுரண்ட அனுமதிக்க முடியாது என்ற செய்தியை தெளிவாகக் கூறியுள்ளது. இப்போராட்டம் பல்வேறு வளர்ந்த நாடுகளில் நூற்றுக் கணக்கான போராட்டங்கள் நடைபெற எழுச்சி அளித்துள்ளது. ஐரோப்பா ஒரு போர்க்களமாகவே மாறி விட்டது. சமீப காலத்தில் தொழிலாளர்களின் போராட்டங்கள் இங்கிலாந்து, பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சமத்துவமற்ற சுரண்டல் சமுதாய அமைப்பிற்கு சரியான சவாலாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை உழைக்கும் மக்களின் ஒற்றுமையும் போராட்டங்களும் ஏற்படுத்தி உள்ளது. ஏகாதிபத்திய சக்திகளால் ஆதரிக்கப்பட்ட அடக்குமுறை அரசுகளுக்கு எதிராக, ஜனநாயகம் கோரி மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாட்டு மக்கள் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்திய அரசியலும் பொருளாதாரமும் கூட இந்த ஆண்டு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தது. இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தோல்வியை அரசு நிர்வாகத்தின்  ஒவ்வொரு அம்சத்திலும்  உணர முடிந்தது. பணவீக்கம் மிகவும் பெருகியது. இதனை மட்டுப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும் அரசியல் உறுதி அரசுக்கு இல்லை. பொருளாதாரம் தடுமாறுகின்றது. தொழில்துறை உற்பத்தி எதிர்மறை வளர்ச்சி கண்டுள்ளது. கற்பனை கூட செய்ய முடியாத பிரச்சினைகளில் உழவர்கள் தவிக்க விவசாயத் துறையும் உண்மையிலேயே மிகப் பெரும் சிக்கலில் உள்ளது. வேலையின்மை விகிதம் அதிகரித்து சமூகப் பதட்டங்களை உருவாக்குகின்றது.


தேசம் மிகப்பிரம்மாண்டமான ஊழல்களால் திகைத்து நின்றது. அந்த ஊழல்கள் பல அமைச்சர்களையும் பல பெரும் முதலாளிகளையும் ஓய்வெடுக்க சிறைக்கு அனுப்பியது. முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் இப்போட்டியில் பின் தங்கவில்லை. கர்னாடக மாநில பாஜக அரசு ஊழல்கள் குறித்த அனைத்து சாதனைகளையும் முறியடித்து அம்மாநில முதல்வரையும் பதவியிலிருந்து விலக வைத்தது.

இந்த ஊழல்கள், ஆட்சியாளர்கள், உயர்மட்ட அதிகார வர்க்கத்தினர், மற்றும் முதலாளித்துவ பெரும் நிறுவனங்கள் ஆகியோரிடையே உள்ள மோசமான இணைப்புக்களை வெளிப்படுத்தியுள்ளது. ஊழல்கள் அதிகரிக்க ஊற்றுக் கண்ணாக உள்ளது நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள்தான் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது. ஊழலுக்கு எதிராக போர் நடத்துவதாக சொல்லிக் கொள்கின்ற இயக்கங்கள் நவீன தாராளமயத்தை அப்படியே அரவணைத்துக் கொண்டுள்ளது. எவ்வளவு கடுமையான சட்டத்தை இயற்றினாலும் கூட தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை ஒரு சேர எதிர்த்துப் போராடாமல் ஊழல்களை கட்டுப்படுத்த முடியாது. ஊழல் மற்றும் தாராளமயத்திற்கு எதிராக உழைக்கும் மக்களிடையே இது நாள்வரை இல்லாத மிகப் பெரிய ஒற்றுமை உருவானது என்பதையும் அதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு  கண்ணுற்றது.

இன்சூரன்ஸ் ஊழியர்களின் இயக்கமும் முக்கிய சாதனைகளை படைத்து புதிய சிகரங்களைத் தொட்டது. எல்.ஐ.சி யை தனியார்மயமாக்கும் பிர்ச்ச்சினையில் மத்தியரசு பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அன்னிய மூலதன உயர்விற்கு எதிராக நாம் நடத்திய இயக்கங்கள், நாடாளுமன்ற நிதியமைச்சக நிலைக்குழுவிடம் இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும் அரசின் பரிந்துரையை நிராகரிக்கக்கூடிய அளவில் சாதகமான விளைவுகளை உருவாக்கின. இந்த இரண்டு அம்சங்களிலும் ஆபத்து முழுமையாக மறைந்து விட்டது என்று நம்பி விட முடியாது. அரசு தற்காலிகமாக பின்வாங்கி உள்ளது. நாம் விழிப்புடன் இருந்து  நம் பிரச்சாரத்தை வேகப்படுத்த வேண்டும். நிலைக்குழு அளித்த பரிந்துரை மூலம் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்கலாம் என்ற ஆபத்து இப்போது உண்மையாகி விட்டது. இப்பிரச்சினையில் நமது போராட்டம் இன்னும் தீவிரமாக வேண்டும்.

2011 ம் ஆண்டு ஏராளமான நிகழ்ச்சிப் போக்குகளையும் சிக்கல்களையும் கொண்டிருந்தது.  2011 ம் ஆண்டு ஏற்படுத்திய காயங்கள், முதலாளித்துவ சுரண்டல்களுக்கு எதிரான வலிமையான, ஒற்றுமையான இயக்கங்களை உருவாக்கியது. இந்த ஒற்றுமையும் எதிர்ப்பியக்கங்களும் 2012 ல்

சுரண்டுகின்ற முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு கடுமையான சவாலாக திகழும்.

அப்படிப்பட்ட போராட்டங்கள் இந்தியாவிலும் நிகழும். புதிய பொருளாதார, நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவுகளால் பரவலான அதிருப்தி நிலவுகின்றது. இக்கொள்கைகளுக்கு எதிராக மக்கள் அணி திரள்கின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளோடு இணைந்துள்ள தொழிற்சங்கங்களெல்லாம் இணந்து, மக்களின் வாழ்வின் மீதும் வாழ்வாதாரங்கள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராகவும் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் 28.02.2012 அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள அறைகூவல் விடுத்துள்ளன. உலகமயமாக்கலுக்கு எதிரான உறுதியான தொடர் போராட்டங்கள் இந்தியாவில் நடைபெற இந்த வேலை நிறுத்தம் ஒரு நல்ல துவக்கமாக இருக்கும்.

2012 ம் ஆண்டு உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கான ஆண்டாக திகழும் என்பதற்கான ஏராளமான சமிஞ்சைகள் தென்படுகின்றது. 2012 ம் ஆண்டு உலகெங்கும் உழைக்கும் மக்கள் போராட்டங்கள் அதிகரிக்கப் போவதை காணப் போகின்றது.   முதலாளித்துவம் மீண்டும் தலை தூக்க நடக்கும் முயற்சிகளை தீவிரமாக தடுக்கும் ஆண்டாக அமையும். முதலாளித்துவத்திற்கான மாற்றை உழைக்கும் மக்களின் போராட்டங்கள் முன் நிறுத்துகின்ற ஆண்டாக அமையும். எனவே 2012 ம் ஆண்டை நம்பிக்கையோடும் மன உறுதியோடும் வரவேற்போம். .

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கும் இனிய, மகிழ்ச்சியான, அர்த்தபூர்வமான, புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றது.  


தோழமையுள்ள
ஒம் .. கே.வேணுகோபால்
பொதுச்செயலாளர்

Thursday, December 29, 2011

குடம் பாலில் கலந்திட்ட ஒரு துளி விஷம்



பொதுத்துறை பொது இன்சூரன்ஸை பாதுகாப்போம்

இன்சூரன்ஸ்துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை, சர்வதேச பொருளாதர நெருக்கடி நிலவும் சூழலில் அன்னிய மூலதனத்தின் ஆதிக்கம் அதிகமாவது சரியல்ல என்று நாடாளுமன்ற நிதியமைச்சக நிலைக்குழு தனது பரிந்துரையை அளித்துள்ளது. இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா குறித்த தனது அறிக்கையில்  இதனை ஆணித்தரமாக தெரிவித்து விட்டது.

பன்னாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்தியரசு கொண்டு வந்த பல்வேறு அம்சங்களையும் நிலைக்குழு நிராகரித்துள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடர்ந்து மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள், இயக்கங்கள், பிரச்சாரங்கள், போராட்டங்கள் ஆகியவற்றுக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது.

அதே நேரம் நிலைக்குழு மற்றொரு அபாயகரமான பரிந்துரையையும் அளித்துள்ளது. பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது மூலதனத்தை அதிகரித்துக்கொள்ள  தங்கள் பங்குகளை விற்றுக் கொள்ளலாம் என்றும் அரசின் உடமை ஐம்பத்தி ஓன்று சதவிகிததிற்கு குறையாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்றும் சொல்லியுள்ளது. குடம் பாலில் கலந்திட்ட ஒரு துளி விஷமாக இந்த பரிந்துரை அமைந்து விட்டது. இதனை ஏற்க முடியாது, அமுலாவதை அனுமதிக்கவும் முடியாது.

வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாரிடம் தாரை வார்க்கும் முயற்சி இது. மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் மொய்னுல் ஹாசன் மட்டுமே இதனை எதிர்த்து தனது கருத்தையும் எதிர் கருத்தாக (Dissent Note ) பதிவு செய்துள்ளார். பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒரே நிறுவனமாக இணைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்தியரசு இம்மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கும். இந்த கால வெளியில் இம்முயற்சிக்கு எதிரான போராட்டங்களை நடத்தி அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க வேண்டியது அனைத்து எல்.ஐ.சி, ஜி.ஐ.சி  ஊழியர்களின் கடமை. இதர பகுதி உழைப்பாளி மக்களையும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும்.

பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை பாதுகாப்பதும் ஒரு தேச பக்த கடமைதான்.

அழகானது - ஆபத்தானது

கீழே உள்ள புகைப்படங்களைப் பாருங்கள்.

அழகான சாலைகள், பாதைகள்,
 அதே நேரம்  அபாயகரமானதும் கூட.



Wednesday, December 28, 2011

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா? நோ நோ நோ




ஞானி சொல்வதை வழி மொழிகின்றேன்.

கல்கி பத்திரிகையில்  ஞானி கூறியுள்ளது

" விளம்பரப் படங்களில் நடித்து கிடைத்த வருமானத்திற்கு
வரி கட்டாமல் தவிர்ப்பதற்காக, தம் தொழில் நடிப்பு என்று 
கூசாமல்  போய் சொன்ன கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சின் 
டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது தருவது  எப்படி 
நியாயமாகும்? பாரத ரத்னா விருதுக்கான தகுதி என்பது
திறமை மட்டும்தானா? மதிப்பீடுகள்  ஒழுக்க நெறிகள் 
எதுவும் கிடையாதா"

இதை நான் அப்படியே முழுமையாக ஏற்கிறேன், பரிசாக்
கிடைத்த சொகுசுக் காருக்கு கூட வரி விலக்கு பெற்றவர்
அவர். 

நிச்சயமாக அவருக்கு பாரத ரத்னா பெறும் தகுதி 
கிடையவே கிடையாது.

என்னைப் பொறுத்தவரை தற்சமயம் பாரத ரத்னா 
விருது பெற இருவர் தகுதியானவர்கள்.

இறந்தவர்களில் தோழர் ஜோதி பாசு.
இருப்பவர்களில் கேப்டன் லட்சுமி

ஆனால் இருவரும் கம்யூனிஸ்டுகள்,
அரசும் தராது, இவர்களும் வாங்க மாட்டார்கள்
    

இருபத்தி நான்கு எதிரிகள், ஒரு ஆணையம், ஒரு அரசு. – ஆனாலும்



அதிகரித்து வரும் எல்.ஐ.சி யின் சந்தைப்பங்கு

ஐ.ஆர்.டி.ஏ வெளியிட்டுள்ள தகவல்படி 31.10.2011 வரையிலான இந்த ஆண்டு நிலவரம்


எல்.ஐ.சி
அனைத்து
தனியார் கம்பெனிகளும்
சேர்ந்து
எல்.ஐ.சி
அனைத்து
தனியார் கம்பெனிகளும்
சேர்ந்து

31.10.2011 வரை
31.10.2010 வரை
பாலிசிகள்
எண்ணிக்கை
1,54,47,395
4148993

முதல் வருட பிரிமியம்
41,259 கோடி ரூபாய்
14,478
கோடி ரூபாய்
பாலிசிகள் எண்ணிக்கை சந்தைப்பங்கு
78.83 %
21.17 %
72.59 %
27.41 %
முதல் வருட பிரிமியத்தில்
சந்தைப்பங்கு
74.02 %
25.98 %
72.60 %
27.40 %

இருபத்தி நான்கு தனியார் நிறுவனங்கள், அவர்களுக்கு ஆதரவாக மட்டுமே, இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று ஆணையம், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வால் பிடிக்கும் மத்தியரசு ஆகியவை இருந்த போதிலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற முதன்மையான ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி மட்டுமே திகழ்கின்றது என்பதற்கு அதன் புது வணிகமே சான்று. எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்கும் என்பது இப்போது நாடாளுமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அதன் வளர்ச்சி எல்லைகளற்று விரிவடையும் என்பது நிச்சயம்.