Tuesday, June 7, 2011

அயோக்கியனுங்களா! என்னடா சீன் போடறீங்க!

ஒரு போலிச்சாமியார் , சுகபோக சொர்க்க வாழ்வை நடத்துபவன், 
அவன் பொய்யாய்  ஒரு காரணம் சொல்லி  ஒரு பெரிய மைதானத்தை
வாடகைக்கு  எடுத்து   மிகப் பெரிய போராளி போல உண்ணா விரதம் நடத்துகிறான்.  உண்ணா விரதம் தொடங்கு முன் " போகாதே போகாதே 
என் கணவா " என மத்தியமைச்சர்கள்  காலில் விழுந்து மன்றாடினார்கள். 
தொண்டரடிப்பொடிகளுடன்  உண்ணா விரதம் இருந்த போலிச்சாமியாரை
அங்கிருந்து காவல்துறை மூலம்  அகற்றுகின்றனர்.  இதற்கு என்னவெல்லாம்  எதிர்வினைகள்? 



மீண்டும்  ஒரு ஜாலியன்வாலாபாக்  என்று  இந்தியாவில்  மத மோதல்களுக்கு   வித்திட்ட ரத்த யாத்திரை  அத்வானி சொல்கிறார். 



இந்திய தொழிலாளி  வர்க்கத்தின்  எதிர்காலத்தை நாசம் செய்யும் 
பென்ஷன் மசோதா தோற்றுப் போகும் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு
முட்டு கொடுத்த பாஜக வும் சுஷ்மா ஸ்வராஜும்  பிரத்யேக நாடாளுமன்ற
கூட்டம்  வேண்டும்  என முழங்குகின்றார்கள். 


என்ன செய்வது, வேறு வழியில்லை என மன்மோகன்சிங் பசப்புகிறார். 


உச்ச நீதிமன்றமும் மனித உரிமை ஆணையமும்  தானாகவே மூக்கை 
நுழைக்கின்றன. 


போலிச்சாமியாரின்  விளம்பர உண்ணாவிரதம் முடக்கப்பட்டதற்காக
கலங்கி நின்று கண்ணீர் வடிக்கும் அற்பங்களே,


குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது  எங்கே போனீர்கள்? 


இலங்கையில் தமிழ் இனம் பூண்டோடு துடைத்தெறியப்பட்டபோது
உங்கள் கண்களை என்ன காந்தாரி போல துணியால் கட்டிக்கொண்டிருந்தீர்களா? 


இந்திய தொழிலாளிகள் பன்னாட்டு முதலாளிகளால்  எவ்வளவோ 
முறை தாக்கப்பட்டிருக்கிறார்களே, ஹரியானா ஹோண்டா முதல்
சென்னை ஹுண்டாய்  வரை.  எத்தனை முறை விவசாயிகள் 
தடியடி பட்டுள்ளார்கள்! துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி உள்ளார்கள்?  மாணவர்கள்  வாங்காத குண்டாந்தடியடிகளா? 
பத்திரிக்கையாளர்கள் கூட அடக்குமுறைக்கு தப்பியதில்லையே! 


அப்போதெல்லாம்  வாயில் கொழுக்கட்டை வைத்திருந்தவர்களுக்கு 
இப்போது மட்டும்  மனித உரிமை பற்றி  கோபம் பொங்குகிறது என்பதை
பார்க்கையில்  நானும்  தரமிறங்கி  கூறுகிறேன். 


அயோக்கியனுங்களா!   என்னடா சீன் போடறீங்க!  
 

Monday, June 6, 2011

மருத்துவ மாணவர்களின் தற்கொலை - மனதை தொட்ட கவிதை

சண்டிகரில் தலித் மாணவன் ஒருவன் தேர்ச்சி பெறக்கூடாது என்று
மதிப்பெண்களை குறைத்து அவனை தற்கொலை செய்ய வைத்த கொடூரம்  பற்றி  05.08.2011   அன்று  ஒரு பதிவிட்டிருந்தேன். 

அக்கொடுமை பற்றி 
மதுரை  பாரதியின்  கவிதை  இங்கே  உங்களுக்காக


மேல் வர்ணத்திற்கு மட்டும் 
கூர்மதி  என்ன 
குத்தகையா ? 
கட்டை விரலில் ஆரம்பித்து
கழுத்திற்கு  வந்தது
துரோணரின்  துரோகம் . . .
ஜஸ் பிரீத்சிங் , பாய் முகுந்தின் 
பாழும்  உயிரை  மாய்த்தது
மனுவின் மாய்மாலம் . . .  

 
   

Sunday, June 5, 2011

மரண மருத்துவர் (டாக்டர் டெத்) மரணம்






டாக்டர் டெத் என்று  அழைக்கப்பட்டிருந்த  ஜாக் கேவோர்கியான் இறந்து விட்டார். உயிர் காக்கும்  தொழிலான  மருத்துவத் தொழில்  செய்து வந்த 
ஜாக் கேவோர்கியான்  பல உயிர்களை  காத்த மருத்துவர்  என்று புகழ் 
பெறவில்லை.  தனது நூற்று முப்பது  நோயாளிகளை  கருணைக் கொலை
செய்தவர்  என்பதால்  செய்திகளில்  இடம் பிடித்தவர்.

நீதி மன்றம்  அளிக்கும் தூக்கு தண்டனைகளே கூடாது  என்ற குரல்  உலகெங்கும்  ஒலிக்கும்  நேரத்தில்  உயிர் காக்கும்  மருத்துவர்  உயிரெடுக்கும்  பேர்வழியாய்  மாறிப்போனார். 





1990   முதல்  1998  வரை  130   நோயாளிகள்  இவரால்  கருணைக்கொலை 
செய்யப்பட்டு  இறந்துள்ளனர்.  தான்  செய்த  செயலை  தனது  இறுதிக்காலம்  வரை   ஜாக் கேவோர்கியான்   நியாயப்படுத்தியுள்ளார். 
நோயின் பிடியில்  அவஸ்தைப் படும் நோயாளிகளுக்கு  விடுதலை 
கொடுத்தே. இதிலே  என்ன  தவறு  உள்ளது  என்று  தனது இறுதி மூச்சு 
வரை  வாதிட்டுள்ளார். அதை சட்டபூர்வமாக்க வேண்டும்  என்றும் 
வலியுறுத்தியுள்ளார். 






ஒரு நோயாளி  இறந்து போய் விடுவான், குணமாக விட்டான்  என்று முடிவு  செய்ய  இவருக்கு  எந்த அதிகாரமும்  கிடையாது. ஆனாலும் 
அப்படி  இருப்பதாக  இவரே  நினைத்துக் கொண்டு  செயல்பட்டுள்ளார். 
அதற்காக  ஒரு முறை கைது செய்யப்பட்டு  தண்டனையும்  பெற்றுள்ளார். 
தண்டனைக் காலம் முடிவதற்கு  முன்பே  விடுதலை பெற்று  மீண்டும் 
அதே கொலைத் தொழிலை மீண்டும்  செய்துள்ளார். 



கருணைக் கொலை, அவஸ்தையிலிருந்து  விடுதலை என்றெல்லாம் 
சொல்லிக் கொண்டாலும்  வக்கிரம்  பிடித்த  மனிதர்  என்பது நன்றாக 
தெரிகிறது. ஏனென்றால்  தற்கொலை  செய்ய வைப்பதற்காகவே  இவர் 
ஒரு இயந்திரத்தை  உருவாக்கி  அது பற்றி  பெருமையாக பீற்றிக் கொண்டிருக்கிறார்.  அதே போல் ஒரு நோயாளி  இறப்பதை  வீடியோ 
எடுத்து  அதனை  எல்லோருக்கும் போட்டுக் காட்டியுள்ளார். 



மருத்துவர் என்ற பெயரில் நடமாடிய இந்த மன நோயாளியை போற்றும் விதத்தில்  ஹாலிவுட்டில்  ஒரு திரைப்படம்  எடுக்கப்பட்டு  அது வெற்றிகரமாக வேறு  ஓடியுள்ளது. 



இறுதியில்  இந்த  மருத்துவர்  இரண்டு நாட்களுக்கு முன்னால்   இறந்து போய் விட்டார். இயற்கையாக , தற்கொலை செய்து கொள்ளாமலேயே. 



அவரும்  ஒரு மாதம் உடம்பு  முடியாமல்  அவஸ்தைதான் பட்டுள்ளார். மற்றவர்களுக்கு  அவர் அளித்த  கருணைக்கொலை என்ற பரிசை  அவர் தனக்கு மட்டும் பயன்படுத்தவில்லை.   



ஆயிரம் பேரை  கொல்பவன்  அரை வைத்தியன்  என்பது  தமிழ் பழமொழி. அதை உண்மையாக்க முயன்றவர்   ஜாக் கேவோர்கியான்

Saturday, June 4, 2011

வெறி பிடித்த ஃ பிராடு சாமியார் சாகட்டும்!




டெல்லியில்   இன்று  புதிதாக  இன்னொரு  உண்ணாவிரத  நாடகம்  
தொடங்கி விட்டது.  கார்ப்பரேட்டுகளின்  துணையோடு  நடைபெற்ற 
அண்ணா ஹாசாரே   உண்ணா விரதத்திற்கு   பின்பு   அடுத்த  உண்ணா 
விரதத்தை  போலிச்சாமியார்   பாபா ராம்தேவ்  துவக்கி விட்டார்.  

ஊழலுக்கும்  கறுப்புப் பணத்திற்கும்  எதிராக   இவர் போராடுகின்றாராம்! 
இந்த  மோசடி ஆசாமி  பற்றி  முன்னரே கூட  எழுதியுள்ளேன்.  அந்த பதிவில்   எழுதியது   மீண்டும்  உங்களின்  கவனத்திற்காக கீழே .
                                    
                    இது  நான்  முன்பு  எழுதியது  
லோக் பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர் 
அண்ணா ஹசாரே மேற்கொண்டிருந்த உண்ணா விரதம் ஊழலுக்கு 
எதிரான ஒரு அலையை இந்திய மக்களிடத்தில் உருவாக்கியது. 
அரசும் இறுதியில்  அடிபணிந்தது.  ஊழலுக்கு எதிராக போராட 
வேண்டும்  என்ற உணர்வை உருவாக்குவதில் அண்ணா ஹசாரே நடத்தியபோராட்டத்திற்கு  முக்கிய பங்கு உண்டு. அவரது நோக்கங்களும் செயல்களும் உன்னதமானது.  

ஆனால் அவரை சுற்றியுள்ள அனைவரும் அவரைப் போலவே நேர்மையானவர்களா? 

கிரண் பேடி  உண்மையிலேயே  நெருப்பு போன்ற ஒரு நேர்மையான
அதிகாரி. பணியில் தனது நேர்மையை இறுதி வரை கடைபிடித்தவர். 

மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவானவராக தோற்றமளிக்கும் சுவாமி 
அக்னிவேஷைக் கூட குறை சொல்ல முடியாது.  
ஆனால் சுவாமி ராம்தேவ்? 

தமிழகத்தின் பிரபல சாமியார்கள் போல வட இந்தியாவின் பாபுலர் 
சாமியார். பதஞ்சலி யோக மையம் என்ற அமைப்பின் மூலம் 
யோகா கற்றுத்தரும் சாமியார், வெளி நாடுகளில் இன்னும் பிரபலம். 
அந்த பிரபலம் காரணமாக தன்னுடைய யோகா மூலமாக 
கான்சரை குணப்படுத்தலாம், எய்ட்சை குணப்படுத்தலாம் என்று 
பரபரப்பான  விளம்பரம் தருபவர். 

ராம்தேவ் சொல்வது எல்லாம் கட்டுக்கதை, அறிவியல் ரீதியாக
சாத்தியமே  இல்லை  என்று இந்திய மருத்துவர் சங்கம் மறுத்துள்ளது. ஆனாலும் விளம்பரங்கள் நின்றபாடில்லை.  பணம் சம்பாதிக்க 
என்ன வேண்டுமானாலும்  செய்யக்கூடிய ஆசாமி இந்த ராம்தேவ். 

ஆயுர்வேத மருந்துகள்  என இவர் தயாரித்து விற்கும் மருந்துகளில்
விலங்குகளின் கொழுப்புகள்  அடங்கியுள்ளது என்று சோதனை செய்த
அறிக்கைகளோடு  இவர் செய்த மோசடிகளை  மார்க்சிஸ்ட் கட்சியின் 
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்ந்தா காரத், மாநிலங்களவையில்  அம்பலப்படுத்தினார்.   அதற்காக மார்க்சிஸ்ட் 
கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தை  ராம்தேவின் குண்டர்கள் 
தாக்கினார்கள். 

பாரத் ஸ்வபிமான் என்ற பெயரில் அரசியல் கட்சி துவக்கி வைத்துள்ள 
இந்த ஆசாமி   இந்தியர்கள் முழுவதும்  சைவ உணவு மட்டுமே சாப்பிட
வேண்டும்  என்று பிரச்சாரம் செய்பவர். ஆனால் இவர் தயாரிக்கும்
மருந்துகளில்  மட்டும் மிருகங்களின்  கொழுப்பைக் கலப்பாராம்.
கலப்படப் பொருட்கள் சட்டத்தின்படி கைது செய்யப்பட வேண்டிய 
இந்த பேர்வழிக்கு பிரதமர் கனவு வேறு வந்து விட்டது. அதனால் ஊழல்
எதிர்ப்பு முழக்கத்தை  எடுத்துள்ளார். இந்தியர்களெல்லாம் இளிச்சவாயர்கள்  என்பதில் என்ன ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை! 

இது போன்ற ஆட்களை அருகில் வைத்தால் அது அண்ணா ஹசாறேவுக்கு  ஆபத்து. கரையான் கட்டி வைத்த புற்றில்  கருநாகங்கள்  குடியேறிய கதை  எத்தனை பார்த்துள்ளோம். நல்ல இயக்கங்களில் 
சில புல்லுருவிகள்  தலைமைப் பொறுப்பிற்கு வந்து அந்த இயக்கத்தையே  நாசப்படுத்துவதையும் சீரழிப்பதையும் எத்தனை முறை 
பார்த்துள்ளோம், வேதனையை  உணர்ந்துள்ளோம். 

ராம்தேவ் போன்ற மோசடிப் பேர்வழிகளை பக்கத்தில் வைத்திருந்தால்
அண்ணா ஹசாராவிற்கும்  ஒரு நாள் வேதனைதான் மிஞ்சும்."""
    


இன்றைய  பதிவு தொடர்கின்றது 

இப்போது  இந்த சாமியாரும்  உண்ணா விரதத்தை  தொடங்கி விட்டார். 
இதற்கு முன்பாக  ஐந்து நட்சத்திர விடுதியில்  மத்திய அமைச்சர்கள் 
இருவர்  பேச்சு வார்த்தை வேறு  நடத்தியுள்ளார்கள்.  கறுப்புப் பணம் மற்றும்  ஊழல் குறித்து  இந்த நபர் வைத்திருக்கும் கோரிக்கைகள் 
பற்றி  விவாதிப்பதை  விட அந்த கோரிக்கைகளை முன் வைக்க இவருக்கு  தகுதியிருக்கிறதா என்று பார்ப்போம்.  




யோகா, ஆயுர் வேதா என்று செய்யும்  மோசடிகள் பற்றி  முன்னரே 
எழுதியுள்ளேன்.  இப்போது கூட உண்ணா விரதம் இருக்கும் ராம் லீலா 
மைதானத்தையே  யோகா வகுப்பு எடுக்கப் போவதாக சொல்லித்தான் 
அனுமதி வாங்கியுள்ளார்.  ஒரு அனுமதி வாங்குவதில் கூட பொய்
சொல்கிற இந்த யோக்கியன்தான்  ஊழலுக்கு எதிராக போராடுகின்றானாம். 


எட்டியூரப்பவையும்  ரெட்டி சகோதரர்களையும் பாதுகாத்து வரும் 
சங் பரிவார அமைப்புக்கள்  இந்த போலிச்சாமியார்  உண்ணா விரத்ததிற்கு  ஆதரவு அளிக்கின்றன.  அயோத்தி மசூதி இடிப்பு 
புகழ் பெண் சாமியார் சாத்வி ரிதம்பரா வேறு அங்கே எழுந்தருளி 
அருள் பாலித்துள்ளார். 


நியாயமான காரணங்களுக்காக விவசாயிகளும் தொழிலாளர்களும் 
நடத்தும்  போராட்டங்களை  கண்டு கொள்ளாத ஊடகங்கள் சாமியார்
உண்ணா விரதம் என்றால் மட்டும்  கேமராவை தூக்கிக் கொண்டு ஒடி 
வந்து விடுகின்றார்கள்.  பிப்ரவரி மாதம்  நாடாளுமன்றம் நோக்கி 
லட்சக்கணக்கான தொழிலாளர்கள்  திரண்ட போது  அச்செய்தியை 
அப்படியே  புறக்கணித்தார்கள். 




போபால் மக்கள் நியாயம் கேட்டு நடத்தும் எத்தனையோ போராட்டங்கள்   புது டெல்லியில்  கண்டு கொள்ளப்படுவதேயில்லை. 




ஆனால்  சாமியார் என்றால் வேறு நியாயம் போலும். மத்தியரசு 
இந்த ஆளை உண்ணா விரதத்தை வாபஸ் வாங்கு என்று தொங்கிக் கொண்டு  இருக்காமல்  அப்படியே  சாகட்டும்  என்று  விட்டு விட வேண்டும். 




இந்த மாதிரி  ஒரு மோசடி ஆசாமி  செத்தால்தான்  டிராமாக்கள் 
குறையும்.  








  

Friday, June 3, 2011

ஜெயலலிதாவை பாராட்டும் வேலூர் மக்கள் - நிஜம்தான் நக்கலில்லை.

வழக்கமான  ஜெ  அதிரடி நடவடிக்கைதான்.  ஆனால்  அது  அவரது கட்சிக்காரர்கள்  மட்டுமல்லாமல்  வேலூர் மக்களையும்  பாராட்ட 
வைத்துள்ளது.  
1977  தேர்தலுக்கு பிறகு  இந்த முறைதான்  அதிமுக  முதல் முறையாக 
வேலூர் சட்டமன்ற தொகுதியை  வென்றது.  அதிமுக வேட்பாளரான 
டாக்டர் விஜய்  சுகாதாரத்துறை  அமைச்சராகி , இந்திய சுதந்திரத்திற்குப் 
பின்பு  வேலூர்  தொகுதியிலிருந்து  அமைச்சரான  முதல் எம்.எல்.ஏ  என்ற
பெருமையையும்  பெற்றார். 



வேலூர் மாவட்டத்தில்  திமுக வின் சார்பாக   அமைச்சராக இருந்த துரைமுருகன்    அருகாமை காட்பாடி தொகுதியைசேர்ந்தவர். ஜெ வின் முந்தைய ஆட்சிக்காலத்தில்  அமைச்சர்களாக இருந்த  ஜி.விஸ்வநாதன், கன்னத்தில் போட்டுககொல்லுதல்  புகழ்  பாண்டுரங்கன்  ஆகியோர் வேலூருக்கு  இன்னொரு பக்கத்தில்  இருக்கும்  அணைக்கட்டு  தொகுதியை  சேர்ந்தவர்கள்.    



அமைச்சராக டாக்டர் விஜய் பதவியேற்ற பின்பு   வேலூருக்கு  முதல் முறையாக  வந்த போதே  அருகில் இருந்த சில நபர்களை பார்த்து 
மக்கள்  முகம் சுளித்தனர்.  அதிலே  மிக முக்கியமானவர்  ஜி.ஜி.ரவி 
என்ற கல்வி வள்ளல்.  அனைத்து விதமான சமூக விரோத செயல்களையும்   செய்பவர்கள்  போல  ஒரு பொறியியல் கல்லூரி
துவங்கி   வள்ளல் வேடம் போட்டாலும்  எந்த பழைய தொழில்களையும்
இன்னும் விடாமல்  உறுதியாக  தொடருபவர். 



காங்கிரஸ், தமாகா , காங்கிரஸ்,  என்று  வலம்  வந்து  எம்.எல்.ஏ சீட் 
கிடைக்காமல்  முலாயம் கட்சி வேட்பாளராக, சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு  இறுதியில்  அதிமுகவில் அடைக்கலம் ஆகி கவுன்சிலராக 
உள்ளவர். இவரும்  சில   தொழில் முறை மோசடிப் பேர்வழிகளும்தான்
அமைச்சரை  சுற்றி வலம் வந்தனர். ஆட்டமும் தொடங்கியது. 
ஆனால் ஆட்டம் நெடு நாட்கள் நீடிக்கவில்லை. இவர்களைப் பற்றிய 
புகார் மேலே  செல்ல  ஜெ வும் இவர்களை  அனைவரையும்  கட்சியில் 
இருந்து நீக்கி விட்டார். மறு நாளே  ஒரு ரியல் எஸ்டேட்  அதிபரை 
மிரட்டிய புகாரில்  கைது  செய்து  உள்ளேயும் தள்ளி விட்டார்.   



அராஜகப் பேர்வழிகள்  அரசு நிர்வாகத்தில்  தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று  அரசு சொல்லிய செய்தியாகவே  வேலூர் மக்கள் 
பார்க்கிறார்கள்.  துணிச்சலான நடவடிக்கை , திமுக என்றால் வாய்ப்பே 
கிடையாது  என்று   திமுக  அனுதாபிகளே  சொல்கின்றனர். 
ஆரம்ப உற்சாகமாக  இல்லாமல்  இந்த அணுகுமுறை  தொடர வேண்டும் 
என்பதே  அனைவருக்கும்  உள்ள    எதிர்பார்ப்பு.

 
 

Thursday, June 2, 2011

மூவாயிரமாவது ஆண்டின் முழு சோம்பேறிகள் ! ரூம் போட்டு யோசிக்கறாங்கப்பா!


















மூவாயிரமாவது  ஆண்டில்  அறிவியல்  வளர்ச்சி  எப்படி  இருக்கும் என்ற
கற்பனை  இது. மனிதர்களின்  வசதிகள்  பெருக பெருக உடல் உழைப்பு 
குறைவதும்   சோம்பேறிகள்  ஆவதும்  ஆரோக்கியமானது   அல்ல. 
 

Wednesday, June 1, 2011

பெருமிதமும் வேதனையும் ஒரே தருணத்தில்




சுடுகாட்டில் குடியேறிய  தலித்துகள்  என்று  ஒரு ஆக்கிரமிப்பு பற்றி  நேற்று  எழுதியிருந்தேன். தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி அப்பிரச்சினையை  கையில் எடுத்துள்ளது  என்பதையும்  எழுதியிருந்தேன்.  குடியாத்தம்  தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ  தோழர் லதா அவர்களோடு  அந்த கிராமத்திற்கு  சென்றிருந்தோம். அந்த ஊருக்கு செல்வதற்கு  முன்பாக  நடைபெற்ற ஒரு நிகழ்வை  இங்கே பதிவு செய்கிறேன். 



வேலூர் பழைய பேருந்து நிலையத்தில்  காலை  எட்டரை மணிக்கு சந்தித்து   அங்கிருந்து  புறப்படுவதாக  ஏற்பாடு. நான், மாவட்ட அமைப்பாளர்  தோழர்  குபேந்திரன்,  அரசு ஊழியர் சங்க, வாலிபர் சங்கத் 
தோழர்கள் வந்து விட்டோம். தோழர் லதா வந்து கொண்டிருப்பதாக 
சொன்னார். 



அவர் வருவதற்குள்  இரண்டு இட்லி  சாப்பிட்டு விடலாம்  என்று  அங்கே
இருந்த  அலங்கார் ஹோட்டலில்  சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்து மேஜையில்  நான்கு பேர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென
அவர்களிடம்  ஒரு பரபரப்பு.  ஹோட்டலுக்கு வெளியே ஜன்னல் வழியாக 
பார்த்து எதோ பேசத் துவங்கினர். 



அந்த பரபரப்பை பார்த்து  அவர்கள்  என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று 
அறியும்  ஆர்வம்  இயல்பாகவே  வந்தது.  நானும் ஜன்னல் வழியே 
பார்த்தேன். தோழர் லதா அவரது கணவரோடு  இரு சக்கர வாகனத்தில் 
வந்திருந்தார். 



இவர்கள்  இவ்வாறு  பேசிக் கொண்டார்கள் 



" இவங்கதான் குடியாத்தம்  எம்.எல்.ஏ  லதா. (தேர்தல் முடிந்து வேறு  ஒருவர்  வந்த பின்பும்  அப்படித்தான்  சொன்னார்கள்). தொகுதிக்கு 
எவ்வளவோ  நல்லது  செய்தார்கள்.  எம்.எல்.ஏ னா   இப்படித்தான்   
இருக்கணும்.  அவங்க கட்சி என்னமோ  இந்த  முறை  அங்க நிக்கலை. 
நின்னுருந்தா  நிச்சயமா  ஜெயிச்சிருப்பாங்க! இன்னும் நல்லது செஞ்சிருப்பாங்க. பாரு எவ்வளவு  சாதரணமா டூ வீலருல  வராங்க" 



இவர் மீண்டும் போட்டியிடவில்லையே  என்று  மக்கள் வருத்தப்பட்டால் 
அதுதான்  ஒருவருக்கு மக்கள்  அளிக்கும்  அங்கீகாரம்.  மிகச்சரியான 
ஒருவரைத்தான்  மார்க்சிஸ்ட் கட்சி  கடந்த முறை நிறுத்தியுள்ளது, 
அந்த நம்பிக்கையை  காப்பாற்றும் வண்ணம் தோழர் லதாவும் பணி
செய்துள்ளார் , அதன் மூலம் அவரது  இயக்கத்திற்கும்  பெருமை 
சேர்த்துத் தந்துள்ளார்  என்பதை  நினைக்கையில்  உண்மையிலேயே  மிகவும்  பெருமிதமாக  இருந்தது. 


இந்த உழைப்பின் பலன்  அனைத்தையும்  கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக  மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து   நீக்கப்பட்ட   லிங்கமுத்து  என்ற ஒரு நபர்  தற்போது  அனுபவிக்கின்றாரே   என்கிற போது  வேதனையாகவும்  இருந்தது. 


எனது  உணர்வுகள்  நியாயம்தானே!