Wednesday, December 4, 2019

டாஸ்மாக் முதலாளியின் வெறியாட்டம்













" வன்முறையற்ற தமிழகம், போதையற்ற தமிழகம்" என்ற முழக்கத்தை டாஸ்மாக் முதலாளியான தமிழக அரசால் ஏற்க முடியவில்லை.

பாலியல் குற்றவாளிகளுக்கு பொள்ளாச்சி உட்பட பல ஊர்களில் பாதுகாப்பு கொடுக்கிற கேவலத்தையும் இவர்கள்தான் செய்து வருகிறார்கள்.

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு தினத்திற்கு இலக்கு வைத்து சாராய விற்பனை செய்கிற அரசாங்கத்தால் மது விலக்கு என்ற வார்த்தையை சகித்துக் கொள்ள முடியவில்லை. 

அதனால்தான் வடலூரிலிருந்தும் திருவண்ணாமலையிலிருந்தும் இரண்டு முனைகளில் நடைப்பயணம் மேற்கொண்டு வந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தோழர்களை சென்னை மாநகரத்திற்குள் அனுமதிக்க மறுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்துள்ளது. 

வன்முறைக் கலவரத்தை நோக்கமாகக் கொண்ட காவிக் கயவர்களின் அனைத்து இயக்கங்களும் வாய் பொத்தி அனுமதி கொடுக்கிற எடுபிடி அரசின் ஏவல் துறைக்கு நியாயமான, மக்கள் நலன் சார்ந்த இயக்கங்கள் மட்டும் எட்டிக்காயாய் கசக்கிறது.

தீண்டாமைச்சுவர் எழுப்பி ஆணவக் கொலை செய்த துணிக்கடை முதலாளியை கைது செய்ய அவ்வளவு தடுமாறினார்கள்.

ஹைகோர்ட்டை அசிங்கப்படுத்திய ஹெச்.ராஜாவையும்
ஜாமீன் மறுக்கப்பட்ட எஸ்.வி.சேகரையும்

நெருங்கக் கூட இவர்களால் முடியவில்லை.

போராட்டத்தை ஒடுக்க மட்டும் வீரம் வந்து விடுகிறது இந்த காட்டுமிராண்டிகளுக்கு.

காலம் நிச்சயம் இதற்கு பதிலடி கொடுக்கும் . . .




Tuesday, December 3, 2019

எல்லாமும் சேர்ந்தே எரியட்டும் . . .


தீண்டாமைச்சுவர் கட்டி
ஆணவக் கொலை புரிந்த முதலாளி,

அராஜகத்தை கண்டுகொள்ளாமல்
அலட்சியமாய் இருந்த அதிகார வர்க்கம்,

முதலாளி வீசிய எலும்புத்துண்டுக்காய்
வாலை ஆட்டிச் சென்ற காவலர்கள்,

இறந்தவர் தலித் என்பதால் கள்ள மௌனம்
காக்கும் ஊடகங்கள்,

தீண்டாமைச் சுவர் என்பதை
திசை திருப்பும் அறிவுஜீவிகள்,

"சக்கிலிய நாய்களிடம் கெஞ்ச வேண்டுமா?
முஸ்லீம்களுக்கு இங்கே என்ன வேலை?"

என்று வெறி கொண்டு பேசிய 
மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி மணி

எல்லோரும் எரியட்டும்
பதினேழு பேர் சிதை துயரம்.
இவர்கள் எரிந்தால்
அதுதான்  நீதி . . .

இனிப்புக்களும் மரணங்களும் பரிசாக . . .



மேட்டுப்பாளையத்தில் நேற்று நடந்தது அப்பட்டமான ஆணவக் கொலைகள்.

தனது வீட்டிற்கு அருகில் உள்ள தலித் மக்களின் வீடுகள் கண்ணில் படக் கூடாது என்ற ஆணவத்தில் இருபது அடிக்கு கருங்கல்லில் எழுப்பப்பட்ட தீண்டாமைச்சுவர் பதினேழு உயிர்களை பலி வாங்கி விட்டது.

தீண்டாமைச் சுவர் கட்டிய சக்கரவர்த்தி துகில் மாளிகை முதலாளியை கைது செய்ய வக்கில்லாத காவல்துறை

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் மீது தடியடி நடத்தி  எலும்புத்துண்டுகளின் ருசிக்கு விசுவாசமாக இருந்து விட்டது.

இந்த முதலாளியின் முக நூல் பக்கத்தில் தீபாவளிக்கு தன் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக வாங்கி வைத்துள்ள இனிப்பு பொட்டலங்களை அடுக்கி வைத்து படம் போட்டுள்ளான்.

தன் அண்டை வீட்டாருக்கு மரணத்தை பரிசாக அளித்துள்ளான் அயோக்கியன் . . .

Sunday, December 1, 2019

நிறைவளித்த வாழ்த்துச் செய்தி . . .

எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இதனை சாத்தியமாக்கிய எங்கள் கோட்டத் தோழர்கள் அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.








*மாதர் நடைபயணம்* 

*மையங்கள் தோறும் கரம் கோர்த்த வேலூர் கோட்டம்*
_________________________________

*பாலின வன்முறைக்கு எதிரான ஜனநாயக மாதர் சங்கத்தின் நடைபயணம் வலம் வருகிற பகுதிகள் பெரும்பாலும் வேலூர் கோட்டத்திற்கு உட்பட்டதாகவே உள்ளன. இரு பயணக் குழுக்களும் வெவ்வேறு வழிகளில் வேலூர் கோட்டத்திற்குள் பயணித்தன. ஆகவே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பங்களிப்பு சிறப்பாக அமைய வேலூர் கோட்டத்தின் பணி முக்கியமானதாக இருந்தது.*

*வேலூர் கோட்ட சங்கத்தின் தலைவர்கள் எஸ்.இராமன், பழனிராஜ், மணவாளன் ஆகியோரிடம் முதற்கட்டமாக பேசியபோது அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை விளக்கினோம். ஆனால் தேவைகளோ, வேலூர் பணிகளோ அந்த எதிர்பார்ப்புகளை விட பன் மடங்காக அமைந்து விட்டது என்பதே உண்மை.* 

*பயணம் துவங்குவதற்கு முன்பே அதற்கான ஆயத்தங்களை கோட்ட சங்கம் திட்டமிட்ட வகையில் செய்தது. மாநிலம் முழுமையுமிருந்து வருகிற தோழர்களை நெய்வேலியில் வரவேற்று முதல் நாள் பயணத்தில் பங்கேற்கச் செய்கிற பணியை வேலூர் கோட்டச் சங்கம் நேர்த்தியாக செய்தது. வெறும் வரவேற்பு, காலை உணவாக மட்டும் அந்த நிகழ்ச்சியை அவர்கள் சுருக்கி விடவில்லை. அழகான கவிதை, பாலின வன்முறைக்கு எதிரான முழக்கங்கள் இடம் பெற்ற அட்டைகள் அங்கு வந்தவர்களை வரவேற்றன. வியக்க வைத்தன.*

*துவக்க நிகழ்ச்சியில் நெய்வேலி, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி மகளிர் தோழர்கள் பங்கேற்று நடை பயணத்திலும் பல கிலோ மீட்டர்கள் அணி வகுத்தனர்.*

*எல்லா கிளைச் சங்கங்களுமே பயணக் குழுவிற்கு வரவேற்பு, பழங்கள், பிஸ்கட்டுகள், நிதி அளிப்பு என்பதை செய்தும் வருகின்றன. ஏ.ஐ.ஐ.இ.ஏ கொடிகள் பயணக் குழு செல்லும் வழியெல்லாம் அசைகின்ற காட்சிகளை பார்க்கிறோம். இராணிப்பேட்டை, புதுச்சேரி, திண்டிவனம், போளூர் என...*

*மழையால் பயணக் குழுவினர் நனைந்து துணிகள் கூட காயாமல் தோளில் போட்டுக் கொண்டு நடக்கிறார்கள் என்ற செய்தி வந்தவுடன் பலர் தமிழ்நாடு முழுமையும் இருந்து நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தொடர்பு கொண்டார்கள். வேலூர் கோட்ட சங்க பொதுச் செயலாளர் எஸ்.ராமன் அவர்களை தொடர்பு கொண்டதும் 83 நைட்டிகளுக்கான தொகையை இன்னும் ஒரு மணி நேரத்தில் தந்து விடுகிறோம்; வேலூர் கோட்ட சங்க கணக்கில் தொகைகளை போடச் சொல்லுங்கள் என்று கூறி விட்டு உடனே பயண வழித் தடத்திற்கு முன்னணித் தோழர்களோடு சென்று வழங்கினார். பெண்களுக்கே உரிய பிரத்தியேக பிரச்சினைகளை எதிர்கொள்வதிலும் உடனடி உதவிகளை தோழர் எம்.கிரிஜா ஒருங்கிணைப்பில் பயணக் குழுவில் வரும் நமது தோழர்கள் வாயிலாக செய்துள்ளோம்.*

*தோழர் மணவாளன் அவர்களின் ஒருங்கிணைப்பும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 6 வது நாளாக நடந்து வந்து கொண்டிருக்கும் மதுரை மகளிர் தோழர்களுக்கு அதிகாலையிலும் இரவிலும் பயணம் துவங்குகிற முடிகிற இடங்களில் உரிய உதவிகளை செய்வதிலும், தங்குமிட தேவைகளை நிறைவு செய்வதிலும் அவர் காட்டிய அக்கறை, ஆதரவு ஆகியன வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.*

*இன்று ஒரு குழு வேலூர்க் கோட்ட எல்லையை கடக்கவுள்ளது. இன்னொரு குழுவும் வேலூர் எல்லையை இன்றோ நாளையோ கடக்கலாம். நமது வேலூர் கோட்ட தோழர்களின் பங்களிப்பை மாதர் சங்கத் தலைவர்கள் மனமார பாராட்டுகிறார்கள்.*

*வேலூர் கோட்டத்தின் அற்புதமான பணியை போற்றுவோம்! வாழ்த்துவோம்!*
*************************************

பிகு

மேலே குறிப்பிட்டிருந்த நெய்வேலி கிளையை
அலங்கரித்த கவிதைகள், போஸ்டர்கள் கீழே







நிறைய பெருமை, லைட்டா பொறாமை...



"வன்முறையற்ற தமிழகம், போதையற்ற தமிழகம்" என்ற முழக்கத்தோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மேற்கொண்டு வருகிற நடைப் பயணத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் பெருமை கொள்வதற்கான ஒரு முக்கிய அம்சம் ஒன்று உள்ளது.

துவக்க நாளன்று வடலூரில் எல்.ஐ.சி யில் பணியாற்றும் கிட்டத்தட்ட நூறு மகளிர் தோழர்கள் பங்கேற்றனர். பயணக்குழு செல்லும் வழிகளில் உள்ள மையங்களில் வரவேற்பு அளிக்கின்றனர்.

அதை விட மிக முக்கியமான அம்சம் என்னவென்றால்

மதுரைக் கோட்டத்தில் பணியாற்றுகின்ற

தோழர் சித்ரா,
தோழர் ராஜேஸ்வரி,
தோழர் கார்த்தீஸ்வரி

ஆகிய மூன்று தோழர்கள் நடைப்பயணத்தில் முழுமையாக பங்கேற்கின்றனர்.

மத்தியதர ஊழியர்களுக்கான மனத்தடையை உடைத்து புதிய முன்னுதாரணத்தை அவர்கள் படைத்துள்ளார்கள்.

பாதங்கள் வலிக்க வலிக்க அவர்கள் பயணம் சென்னை  நோக்கி தொடர்கின்றது. 

நடைப்பயணத்தின் சிரமங்கள் அவர்களை கொஞ்சமும் பாதிக்கவில்லை என்பதை புதுவை சென்ற போது அவர்களை சந்தித்த போது உணர்ந்து கொள்ள முடிந்தது.

"ஒரு இரண்டு நாள்தான் கஷ்டமாக இருந்தது. இப்போ அதெல்லாம் ஒன்றுமில்லை தோழர்"

என்று உற்சாகமாக சொன்னார்கள்.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தோழர்களே !
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு நீங்கள் பெருமை சேர்த்துள்ளீர்கள்.

பிகு: அதென்ன தலைப்பில் "லைட்டா பொறாமை'?

எங்கள் வேலூர் கோட்டத்திற்கு இந்த பிரத்யேகமான பெருமை கிடைக்கவில்லை என்பதால் லைட்டா பொறாமை. ஆனால் எங்களாலும் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ள இந்த மூன்று தோழர்களுக்கு நன்றிகளும் கூட. 






இந்தியாவிடமிருந்து . . .அவ்வளவுதான் . . .



மேலே உள்ள  செய்தியில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

இந்தியாவிடமிருந்த காசு அம்பானிக்கு இடம் மாறுகிறது. அவ்வளவுதான். 

மோடி 2.0 முடிவதற்குள் நம் நாட்டின் பெயரை அம்பானியா என்று மாற்றினாலும் கூட  ஆச்சர்யப்பட வேண்டிய அவசியமில்லை.

எலும்புத்துண்டு வீசும் எஜமானனுக்கு இது கூட செய்யவில்லை என்றால் எப்படி!

அப்போ அதானிக்கு?

குஜராத்தின் பெயரை அதானிக்கு கொடுத்து விடுவார்கள்.

நடைப் பயணம் – மனக்குறை நீங்கியது




“வன்முறையற்ற தமிழகம், போதையற்ற தமிழகம்” என்ற முழக்கத்தோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் 25.11.2019 அன்று வடலூரில் இருந்தும் திருவண்ணாமலையிலிருந்தும் இரண்டு குழுக்களாக சென்னை நோக்கி நடைப்பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மிக முக்கியமான இந்த இயக்கத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தோழர்களும் பங்கேற்க வேண்டுமென்று எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு அறைகூவல் அளித்தது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலிருந்தும் மகளிர் தோழர்கள் பயணம் தொடங்குகிற முதல் நாள் அன்று வடலூரில் பங்கேற்பது என்று திட்டமிடப்பட்டது. வடலூர் எங்கள் வேலூர் கோட்ட எல்லைக்குள் இருப்பதால் மற்ற கோட்டங்களிலிருந்து வருகிற தோழர்களுக்கான தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்வது, எங்கள் கோட்ட மகளிர் தோழர்களை பங்கேற்க  வைப்பது என்று இரண்டு பொறுப்புக்கள் இருந்தது.

தங்கும் வசதி மற்றும் இதர ஏற்பாடுகளை நெய்வேலி கிளைச்சங்கத் தோழர்கள் அற்புதமாக செய்திருந்தார்கள். வேலூரிலிருந்து சில மகளிர் தோழர்களோடு 25.11.2019 அதிகாலை புறப்பட்டு வடலூர் செல்வது என்று திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் எதிர்பாராத பேரிழப்பாக 24.11.2019 ஞாயிறு மதியம் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் என் மாமனார் காலமாகி விட்டார். அதனால் வடலூர் செல்ல இயலவில்லை. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டச்சங்கப்ப் பொறுப்பாளர்கள் தோழர் டி.மணவாளன் மற்றும் தோழர் ஜி.வைத்தியலிங்கம் ஆகியோர் பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

மறு நாள் தகனம் முடிந்து மயானத்திலிருந்து வீட்டிற்கு வந்து அலைபேசியை உயிர்ப்பித்தால் வந்து விழுந்த செய்திகள் நடைப்பயணத்தின் சிறப்பான துவக்கத்தை சொன்னது. நெய்வேலி கிளைச்சங்கத் தோழர்களுக்கு மற்ற கோட்டத்து தோழர்களின் பாராட்டுக்களை எடுத்துரைத்தது. பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் மற்றும் கடலூர் கிளைகளிலிருந்து 28 தோழர்கள் கலந்து கொண்டார்கள் என்று பெருமிதம் கொள்ள வைத்தது.

வேலூர் கோட்டத்திற்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றினோம் என்ற நிறைவு இருந்தாலும் நம்மால் நேரடியாக பங்கேற்க இயலவில்லையே என்ற குறை மனதில் இருந்து கொண்டே இருந்தது.

வேலூர் கோட்டத் தோழர்களின் பணி துவக்க நாளோடு நின்றுவிடவில்லை. வடலூரிலிருந்து புறப்பட்ட பயணக்குழுவிற்கு எங்கள் தோழர்கள் புதுச்சேரியிலும் திண்டிவனத்திலும் வரவேற்பு அளித்தனர். திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்ட பயணக்குழுவிற்கு போளூரிலும் ராணிப்பேட்டையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டையில் பயணக்குழுவிற்கு வரவேற்பு அளிக்க ராணிப்பேட்டை கிளையின் எட்டு பெண் தோழர்கள், ஆறு ஆண் தோழர்கள் மட்டுமல்லாமல் வேலூரிலிருந்தும் ஏழு மகளிர் தோழர்களும் பத்து ஆண் தோழர்களும்   ராணிப்பேட்டை சென்றிருந்தோம். 

பயணக் குழுவிற்கு வரவேற்பு அளித்த பின்புதான் வடலூர் செல்ல முடியாத மனக்குறை நீங்கியது.

“வன்முறையற்ற தமிழகம், போதையற்ற தமிழகம்” என்பது இன்றைய சமூக சூழலில் மிக முக்கியமானது. அரசு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறுகிற இந்த இயக்கத்திற்கு தமிழக ஊடகங்கள் உரிய கவனம் அளிக்கவில்லை.

நல்ல விஷயங்களை நம் முதலாளித்துவ ஊடகங்கள் என்றைக்கு ஆதரித்துள்ளன?

பிகு 1 : இந்த நடைப்பயணம் குறித்து இன்னொரு முக்கியமான செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அது நாளை . . .

பிகு 2 :  நடைப்பயணத்தில் எல்.ஐ.சி ஊழியர்கள் பங்கேற்பு தொடர்பான புகைப்படங்கள் கீழே











பிகு 3 :

நடைப்பயணக்குழுத் தோழர்களிடம் ஒரு தொகையை உடனடியாக சேர்க்க வேண்டுமென்று 28.11.2019 அன்று எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் சொல்ல, புதுவையில் ஒரு முன்னணித் தோழரின் பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு செல்லும் வழியில் தாமரைப்பாக்கம் என்ற ஊரில் இருந்த தோழர்களை சந்தித்து தொகையை அளித்து விட்டு திரும்புகையில் நிதி அளிப்பதை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர்  வாலண்டினா கூற அப்போது எடுத்துக் கொண்ட படம் கீழே.