Monday, January 4, 2016

மறைக்கப்பட்டதா சீதையின் நியாயங்கள்? நடந்தது என்ன?








மீபத்தில் படித்த மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று. எங்களது மதுரைக் கோட்டத் தோழர் ச.சுப்பாராவ் அவர்கள் எழுதிய 
“வன புத்திரி”. இந்தாண்டு வெண்மணி தினத்தன்று திருவாரூரில் நடைபெற்ற எங்கள் சங்க நிகழ்வின் போது புத்தகக் காட்சியும் அமைந்திருந்தது. அப்போது இப்புத்தகத்தை கையில் எடுத்து புரட்டிய போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த பொது இன்சூரன்ஸில் பணியாற்றும் ரமேஷ் என்ற இன்னொரு மதுரைத் தோழர் “அருமையான நூல் தோழர். இதன் கதைக்கரு உருவானதில் எனக்கும் பங்கு உண்டு. சுப்பாராவும் முன்னுரையில் அது பற்றி எழுதியுள்ளார் என்று சொன்னார்.

மதிய உணவு முடிந்து திருவாரூரிலிருந்து புறப்பட்ட போது படிக்கத் தொடங்கினேன். மாலை இருள் வரும் வரை படித்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே கரகாட்டக்காரன் வண்டிப் பயணம் குறித்து எழுதியிருந்தேன். அதனால் மிகவும் களைப்பாக இருந்த போதும் மறு நாள் சனிக்கிழமை மதியம் அலுவலகம் முடிந்து வந்தும் ஓய்வெடுக்காமல் படித்து முடித்தேன். அவ்வளவு அருமையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது இந்நூல்.

சரி, இப்போது அதன் உள்ளடக்கத்தைப் பார்ப்போம்.

நூல்                                               வன புத்திரி
ஆசிரியர்                                          ச.சுப்பாராவ்
வெளியீடு                                         பாரதி புத்தகாலயம்,
                                                    சென்னை – 18
விலை                                            ரூபாய்  80

ராமாயணத்தின் மறு வாசிப்பு இந்த நூல். இலங்கையில் தீக்குளித்த பின்பும் மீண்டும் ஒரு முறை ராமனால் கானகத்திற்கு அனுப்பப்படுகின்ற சீதையின் கதை இது. வழக்கமான ராமாயணத்தில் வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு அனுப்பப்படுகிற சீதை இந்நூலில் ராமாயணத்தை எழுதிக் கொண்டிருக்கிற வால்மீகியின் ஆசிரமத்திற்கு செல்வதுதான் இக்கதையின் மிகப் பெரிய மாற்றம். படைப்பாளியும் படைப்பின் பாத்திரமும் சந்தித்தால் என்ன நிகழும் என்ற கற்பனையே இந்த நூலின் அடிப்படை. வித்தியாசமான இந்த கருவின் பின்னணியில் நிகழும் சம்பவங்களும் எழுப்பப்படுகிற பல கேள்விகளும் உங்களை உலுக்கிக் கொண்டே இருக்கும்.

வழிப்பறிக் கொள்ளைக்காரனாக  இருந்து முனிவராக மாறிய வால்மீகி, ராமாயண காவியத்தை எழுதி வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற ஆசைப்படுகிறார். தான் எழுதும் படைப்பை கதையின் நாயகி சீதை படித்து கருத்து சொல்ல வேண்டும் என்றும் தான் அறியாத சம்பவங்களை சீதை சொன்னால் அதையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறார். அதனால் தான் எழுதியதை படிக்குமாறு சீதையிடம் வற்புறுத்துகிறார்.

முதலில் ஆர்வம் காண்பிக்காத சீதையும் படிக்க துவங்குகிறார். சில கருத்துக்களையும் முன்வைக்கிறார். சில கேள்விகளை முன்வைக்கிறார்.

“கதையின் நாயகன் ராமனின் குலப்பெருமையை விளக்க இருபத்தி நான்கு ஸ்லோகங்களை எழுதிய நீங்கள் நாயகியான எனது குலப் பெருமையை விளக்க வெறும் பத்து ஸ்லோகங்கள் மட்டுமே எழுதியுள்ளீர்களே” என்று தொடுக்கும் பாணத்தை சமாளிக்க வால்மீகி தடுமாறும் போது “என் தாயார் பெயரைக் கூட சொல்லவில்லையே, ஏன் உங்களுக்குத் தெரியாதா” என்ற அடுத்த பாணத்தில் நிலை குலைந்தே போகிறார்.

இப்படியாகச் செல்கிற நாவலில் சீதை சொல்கிற பல சம்பவங்கள் வால்மீகிக்கு அதிர்ச்சியளிக்கிறது. கதையின் நாயகனின் பிம்பம் சில இடங்களில் தகர்ந்து போகிறது. சீதையின் வேதனையையும் குமுறல்களையும் உணர முடிகிறது.

அவற்றையெல்லாம் வால்மீகி தான் இயற்றிய ராமாயணத்தில் சேர்த்தாரா இல்லை மறைத்தாரா?

வெள்ளித் திரையில் காண்க என்று சொல்வதைப் போல நாவலை படித்து அறிந்து கொள்ளுங்கள் என்று சொல்வதுதான் இக்கதாசிரியருக்கும் ஏன் சீதைக்குமே செய்கிற நியாயமாக இருக்கும்.

அற்புதமான ஒரு நூலைப் படைத்த தோழர் சுப்பாராவ் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

பின் குறிப்பு : ராமாயணம் தொடர்பாக ஏராளமானவர்களை சந்தித்து விஷயங்களை திரட்டியதாக சொல்கிறீர்களே, கதையின் நாயகன் ராமனைச் சந்தித்து பேசினீர்களா என்று சீதை, வால்மீகியைக் கேட்கிற போது அவர் தன்னை பார்க்கவோ, பேசவோ மறுத்து விட்டார் என்று வால்மீகி பதில் சொல்வார். இக்காட்சியைப் படிக்கிற போது ஊடகங்களை சந்திக்க மறுக்கும் தமிழக முதல்வர் ஜெ தான் என் நினைவிற்கு வந்தார். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

Sunday, January 3, 2016

வேர்கடலையிலும் சாயமா? விளக்குங்களேன் Please




மேலேயுள்ள படத்தில் இருப்பது என்ன சொல்லுங்கள் பார்ப்போம்.

இது  ஒன்றும் ஏதோ ஒரு பானமோ இல்லை எண்ணெயோ இல்லை.

சமையலில் போடுவதற்கு வேர்கடலை நன்றாக வேக வேண்டும் என்பதற்காக  என் மனைவி சுடு நீரில் கொஞ்ச நேரம் ஊற வைத்தார்கள். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் இப்படி செந்நிறத்தில் தண்ணீர் இருந்தது. 

மற்ற சில பொருட்களில் சாயம் ஏற்றுவது போல வேர்கடலையிலும் சாயம் ஏற்றுகிறார்களா என்று ஒரு சந்தேகம் உள்ளது.

இயற்கையிலே கூந்தலுக்கு மணம் உண்டா என்று பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகம் போல இயற்கையிலேயே வேர்கடலைக்கு அப்படி ஒரு நிறம் உண்டா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

விஷயம் தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன்.

Saturday, January 2, 2016

இன்னோவாவை பறிப்பார்களா?




நாஞ்சில் சம்பத்தின் பதவியை பறித்து விட்டார்களாம். அது அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினை. 

அவர் கட்சி மாறிய போது பதவியோடு உபரியாக ஒரு இன்னோவா கார் ஒன்று கொடுத்தார்களே, அதையும் பறித்து விட்டார்களா?

"சத்யா" திரைப்படத்தில் கிட்டி கமலஹாசனுக்கு கொடுத்த ஒரு ஜீப்பை தன்னுடைய வேலை முடிந்ததும் பிடுங்கிக் கொடுத்த காட்சிதான் ஏனோ நினைவுக்கு வருகிறது.

 

26,737 கிலோ மீட்டரும் 11,830 பக்கங்களும்





பொதுவாக புத்தாண்டு சபதங்கள் எதுவும் எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் ஒரு பழக்கத்தை விட்டு விடுவதாக சில வருடங்களில் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறைவேற்ற முடியாத காரணத்தால் எதற்கு வம்பு என்று அந்தப் பக்கமே செல்வதில்லை. “ஏதேனும் புத்தாண்டு சபதம் உண்டா?” நேற்று என் மகன் கூட கேட்ட போது “சபதங்கள் எதுவும் எடுத்துக் கொள்வதில்லை என்று வேண்டுமானால் சபதம் எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னேன். இது பழைய மொக்கை ஜோக் என்று சொல்லி விட்டான்.

சபதம் என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்த வருடம் ஒரு முடிவு எடுத்தேன். மதுரைத் தோழர் ச.சுப்பாராவ் தான் ஒவ்வொரு நாளும் என்ன படிக்கிறேன், எவ்வளவு பக்கங்கள் படிக்கிறேன் என்பதை பதிவு செய்கிறார் என்ற தகவல் மிகவும் வசீகரித்தது. அன்றாடம் படிப்பதை பதிவு செய்வது சாத்தியமில்லை என்பதால் கடந்தாண்டு படிக்கும் புத்தகங்கள் பற்றிய விபரங்களையாவது பதிவு செய்து கொள்வோம் என்று முடிவெடுத்தேன். அதை வெற்றிகரமாக அமலாக்கியும் உள்ளேன்.

அதன் படி கடந்தாண்டு நான் படித்தது 64 புத்தகங்கள். அதன் பட்டியலை கீழே கொடுத்துள்ளேன். அதன் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை 11,830. 

நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், இயக்கப் பிரசுரங்கள், ஆவணங்கள் ஆகியவையெல்லாம் இந்த கணக்கில் வராது.

தலைப்பில் கிலோ மீட்டர் என்று உள்ளதே என்று நீங்கள் கேட்பது காதில் ஒலிக்கிறது.

கடந்த ஆண்டில் மேற்கொண்ட பயணங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளேன். மொத்தம் 62 பயணங்கள் நடந்துள்ளது. அதில் 45 பயணங்கள் ஒரே நாளில் முடிந்துள்ளது. நீண்ட தூர பயணம் என்பது மே மாதம் புவனேஸ்வரில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றதுதான். மொத்தமாக பார்த்தால் கடந்தாண்டில் 93 நாட்கள் பயணத்தில் கழிந்துள்ளது.

பயணத்திற்கும் நூல்கள் படித்ததிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனென்றால் பெரும்பாலான நூல்களை படித்து முடித்ததே பயணங்களின் போதுதான். இவற்றில் பதினைந்து நூல்கள் பற்றிய எனது கருத்துக்களை வலைப்பக்கத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இந்த ஆண்டும் மாறுபட்டதாக இருக்காது என்று நம்புகிறேன். ஜனவரி மாதத்தில் மட்டும் இதுவரை மூன்று பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

நூறு பக்கங்கள் மட்டும் படித்து நீண்ட வருடங்களாக தொடப்படாத ஆயிரம் பக்க “காவல் கோட்டம்” தோழர் ச.சுப்பாராவ் தமிழாக்கம் செய்துள்ள “இடது திருப்பம் எளிதல்ல” உள்ளிட்ட பல நூல்கள் இன்னும் படிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஏப்ரலில் சென்னை புத்தகக் கண்காட்சி வருவதற்குள் அத்தனையையும் முடித்து விட வேண்டும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

இதோ கடந்தாண்டில் நான் படித்து முடித்த நூல்களின் பட்டியல். இவற்றில் **** என்று போட்டுள்ளது பரிசாகக் கிடைத்தவை. *** என்று போட்டுள்ளது இரவல் வாங்கிப் படித்து திருப்பிக் கொடுத்தது. மற்றவை நான் பணம் கொடுத்து வாங்கியவை. எந்த ஒரு நூலையும் யாரிடமிருந்தும் சுடுவதற்கான வாய்ப்பு மட்டும் பல வருடங்களாக கிடைக்கவேயில்லை. 
 

Sl No Name Author Type Pages Cost
1 இசையாலானது கிருஷ்ணா டாவின்ஸி வாழ்க்கை வரலாறு 96 50
2 காட் ஃபாதர்  மரியோ பூ்ஸோ திரைக்கதை 200 200
3 மாதொருபாகன் பெருமாள் முருகன் புனைவு 190 175
4 நயாகாராவில் மாயாவி   காமிக்ஸ் 128 50
5 அனிதா இளம் மனைவி சுஜாதா மர்ம்ம் 158 90
6 பெய்ரூட்டில் ஜானி   காமிக்ஸ் 130 50
7 எரியும் பனிக்காடு பி.எச்.டேனியல்/முருகவேள் புனைவு - தமிழாக்கம் 336 200
8 கடல் சமஸ் சமூகம் 200 180
9 மெல்ல விலகும் பனித்திரை லிவிங் ஸ்மைல் வித்யா திருநங்கையர் சிறுகதைகள்  80 50
10 அல்ங்காரப்பிரியர்கள் சு.வெங்கடேசன் சமூகம் - கட்டுரைகள் 127 90
11 தோட்டியின் மகன் தகழி சிவசங்கரப் பிள்ளை நாவல் - சமூகம் 173 150
12 தீண்டும் இன்பம் சுஜாதா நாவல் -புனைவு 224 125
13 பதேர் பாஞ்சாலி சத்யஜித்ரே - செழியன் திரைக்கதை 93 75
14 சந்தித்தேன் ச.தமிழ்ச்செல்வன் நேர்முகங்கள் 111 60
15 சஞ்சாரம் எஸ்.ராமகிருஷ்ணன் நாவல் -புனைவு 375 370
16 அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புக்கள் கே.சந்துரு தீர்ப்புக்கள் - கட்டுரைகள் 116 95
17 மேலும் ஒரு குற்றம் சுஜாதா நாவல் -புனைவு 111 60
18 ஜன்னல் மலர் சுஜாதா நாவல் -புனைவு 78 50
19 நோயர் விருப்பம் டாக்டர் ஜி.ராமானுஜம் கட்டுரைகள் -நகைச்சுவை 80 50
20 கோவில்கள், மசூதிகள் அழிப்பு அ.அன்வர் உசேன், வெ.பத்மனாபன் மத வெறி - கட்டுரைகள் 96 70
21 நெப்போலியனின் கடிதம் சத்யஜித்ரே மர்ம்ம் - நாவல் 78 50
22 கூளமாதாரி பெருமாள் முருகன் நாவல் -புனைவு 302 275
23 விரும்பிச் சொன்ன பொய்கள் சுஜாதா நாவல் -புனைவு 88 50
24 லெனின் வெ.மன்னார் வாழ்க்கை வரலாறு 32 25
25 அருந்தவப்பன்றி சுப்ரமணிய பாரதி பாரதி கிருஷ்ண குமார் பாரதி வாழ்க்கை 148 200
26 கட்டியக்காரன் முகில் இலக்கியக் கட்டுரைகள் 160 130
27 பட்டத்து யானை வேல ராம்மூர்த்தி நாவல் - புனைவு  376 300
28 ரஃப் நோட்டு *** ஆயிஷா நடராஜன் குழந்தை நாவல் 50 60
29 சிவாஜி - வரலாற்றின் வரலாறு *** கே.சந்திரசேகரன் வாழ்க்கை வரலாறு 432 180
30 வித்தகர்கள் **** கரந்தை ஜெயகுமார் வாழ்க்கை வரலாறு 60 60
31 பனைமரக்காடு **** ஈழபாரதி கவிதை 62 70
32 மௌனத்தின் சாட்சியங்கள் சம்சுதீன் ஹீரா நாவல் - புனைவு  454 350
33 அரசியல் பேசும் அயல் சினிமா இ.பா.சிந்தன் திரைப்பட ஆய்வு 192 140
34 பற்றி எரியும் பாலஸ்தீனம் கி.இலக்குவன் அரசியல் 71 60
35 ஜெய்லலிதா வழக்கு வெ.ஜீவகுமார் அரசியல் 64 40
36 விசுவாசமின் சகவாசம் விசு "Awesome" நகைச்சுவை பதிவுகள் 303 180
37 பம்பாய் கொள்ளையர்கள் சத்யஜித்ரே மர்ம நாவல் 102 70
38 கனம் கோர்ட்டார் அவர்களே நீதிபதி கே.சந்துரு கட்டுரைகள் - சட்டம்  263 225
39 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சாதனைச் சரித்திரம் அருணன் அரசியல் 63 35
40 அக்னிச் சிறகுகள் **** அப்துல் கலாம் சுய சரிதை 374 130
41 தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்        
  இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்.ராமகிருஷ்ணன் அரசியல் 592 500
42 களப்பணியில் கம்யூனிஸ்டுகள் ஜி,ராமகிருஷ்ணன் அரசியல் 352 250
43 ஒரு தலித், ஒரு அதிகாரி, ஒரு மரணம் க.பஞ்சாங்கம் நாவல் - புனைவு  208 150
44 கிராம்ஷியின் சிந்தனைப்புரட்சி இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் அரசியல் 102 60
45 சாப்பாட்டுப் புராணம் சம்ஸ் கட்டுரைகள் - உணவு 112 80
46 கோபல்ல கிராமம் கி.ராஜ நாராயணன் நாவல் - புனைவு  176 120
47 கல்கா மெயிலில் சம்பவம் சத்யஜித் ரே மர்ம நாவல் 110 70
48 பசவபுன்னையா நினைவலைகள் கி.ரமேஷ் (தமிழில்) பேட்டி - அரசியல் 111 70
49 உணவு யுத்தம் எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் - உணவு 278 240
50 உலக சினிமா செழியன் கட்டுரைகள் - உலக சினிமா 256 125
51 காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் ஞானி (தமிழில்) பேட்டி - அரசியல் 48 10
52 ஜின்னாவின் டைரி கீரனூர் ஜாகிர்ராஜா நாவல் - புனைவு  174 150
53 சாமானியனின் முகம் சுகா கட்டுரைகள் 232 170
54 மோடி அரசாங்கம் சீத்தாராம் யெச்சூரி கட்டுரைகள் 224 160
55 டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழவேட்டியும்        
  அணிந்த மனிதர் ஜி.நாகராஜன் சிறுகதைகள் 150 135
56 ராமநாதன் பிரான்சிஸ் VI E மு.மருதவாணன் குழந்தை நாவல் 32 0
57 பொங்குமாங்கடல் அருணன் கட்டுரைகள் - இலக்கியம் 396 150
58 பொடம்கின் கப்பலும் போக்கிரி திருடனும் கருணா கட்டுரைகள் - உலக சினிமா 184 120
59 செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும் சி.டி.குரியன் - ச.சுப்பாராவ் கட்டுரைகள் - பொருளாதாரம் 272 170
60 அமீர் ஹைதர் கான் - அயூப் மிர்சா - கி.ரமேஷ் வாழ்க்கை வரலாறு 192 120
61 வன புத்திரி ச.சுப்பாராவ் நாவல் - மறு வாசிப்பு 112 80
62 கல் சொல்லும் கதை**** கர்னல் கணேசன் தென் துருவ அனுபவம் 64 50
63 காலத்தின் குரல் அருணன், ச.தமிழ்ச்செல்வன் தமுஎகச வரலாறு 272 200
64 The Founders of CPI(M) N.Ramakrishnan வாழ்க்கை வரலாறு 405 500
        11830 8550


Friday, January 1, 2016

இனிப்போடு தொடங்குது இந்த ஆண்டு

2016 ம் ஆண்டின் முதல் பதிவாக என்ன எழுதலாம் என்று யோசித்த போது ஏன் இந்த ஆண்டின் முதல் பதிவை இனிப்பாக துவக்கக் கூடாது என்று தோன்றியது.

ஆகவே அதை செயல்படுத்த செய்த இனிப்பு  இங்கே.

பிரெட்டை சிறிய துண்டங்களாக வெட்டி எண்ணையில் போட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும்.

முந்திரி பருப்பையும் நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பேரிச்சம் பழத்தை சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வறுத்த பிரெட் துண்டங்கள் மீது காய்ச்சிய பாலை ஊற்றி ஒரு இருபது நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு ஊற வைத்த பிரெட்டோடு சர்க்கரை சேர்த்து கிளறவும். பிரெட்டின் வடிவம் மாறிப் போய் நன்றாக சேர்ந்து வரும் போது கொஞ்சம் கேசரி கலர் பவுடர் சேர்க்கவும். பிறகு நெய் ஊற்றி நன்றாக கிளறவும். நெய் கொஞ்சம் நேரத்தில் கக்கிக் கொண்டு வரும். 




அப்போது முந்திரி, பேரிச்சம் பழம், ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து இறக்கி வைத்து விடவும்.

சுவையான பிரெட் அல்வா தயார்.




எப்படி இருந்தது என்று சொல்லவேயில்லையே என்று மனைவியிடம் கேட்டேன். நீங்கள் கொடுத்ததை முழுதாக சாப்பிட்டேனே, நன்றாக இல்லாவிட்டால் ஒரு கப்பையும் சாப்பிட்டிருப்பேனா என்றார்கள்.

சரி, இந்த கமெண்ட் போதும்.

அனைவருக்கும் இந்த ஆண்டு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.