Friday, December 4, 2015

போட்டோஷாப்பின்றி மோடிக்கு மூச்சேது?



இந்த படத்திற்கு விளக்கமும் வேண்டுமோ?

இந்த பிழைப்பிற்கு ................................................. (நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்)

குஜராத்திலும் தொடங்கியது மோடியின் சரிவு


பீஹாரில் மட்டுமல்ல, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே பாஜகவின் பின்னடைவு தொடங்கி விட்டது. அங்கே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆறு மாநகராட்சிகளையும் அக்கட்சி தக்க வைத்துக் கொண்டாலும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பெற்ற 443 வார்டுகள் இப்போது 332 ஆக குறைந்து விட்டது. 51 நகராட்சிகள் நாற்பத்தி ஒன்றாகி விட்டது. 22 மாவட்ட பஞ்சாயத்துக்களில் கடந்த முறை பெற்ற வெற்றி இப்போது வெறும் ஏழாக குறைந்து விட்டது. மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளும் 547 லிருந்து 348 ஆக குறைந்து விட்டது. கடந்த முறை மொத்தமுள்ள ஒன்றிய பஞ்சாயத்து வார்டுகளின் எண்ணிக்கை 4048 ஆக இருந்த போது 2460 இடங்களை வெற்றி பெற்ற அக்கட்சி இப்போது வார்டுகளின் எண்ணிக்கை 4778 ஆக உயர்ந்தாலும் 1929 இடங்களையே பெற்றுள்ளது. 230 ஒன்றியங்களில் 77 ஐ மட்டுமே பெற முடிந்திருக்கிறது.

கடந்த மக்களவைத் தேர்தல்களில் குஜராத்தில் உள்ள 26 இடங்களையும் பாஜக வென்றது என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் சரிவை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் அதன் சரிவு அதிகமாகவே இருக்கிறது.

பாஜக வின் பின்னடைவு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்தது என்பதும் ஒரு நெருடலான செய்திதான்.

Thursday, December 3, 2015

வெள்ளத்திலும் "அம்மா" ஜால்ராவா?




சென்னை வெள்ளத்தில் மிதக்கிற நேரத்தில் கூட இப்படி "அம்மா புகழ்" பாடுகிற ஜால்ராக்களை என்ன செய்வது?

போஸ்டர் அடிக்கிற நேரத்துல ஒரு நாலு பேரை காப்பாத்தியிருக்கலாமே படுபாவிங்களா?


பொதுத்துறை சலுகையும் முப்பது ரூபாய் கருணையும்



மிகவும் கொடுமையான இந்த மழை வெள்ளம் நமக்கு பல படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளது. தமிழக அரசின் அலட்சியம், மெத்தனப் போக்கு, மராமத்துப் பணிகளில் அக்கறையற்ற போக்கு ஆகியவற்றை அம்பலப் படுத்திய வெள்ளம் அரசு ஊழியர்களின், அரசுத்துறைகளின் அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் தனியார் துறையின் கண்டு கொள்ளாத போக்கையும் சேர்த்தே காண்பித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புகலிடங்களாக அரசுப் பள்ளிகள் கைகொடுத்துள்ளது. பணம் பிடுங்கும் எந்த மெட்ரிகுலேஷன் பள்ளியும் நிவாரண முகாமாக மாறியதாகத் தெரியவில்லை. அரசுப் பேருந்துகளின் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் உயிரைப் பணயம் வைத்து வாகனங்களை ஓட்டுகிற போது பண்டிகைக் கால நெரிசல் நேரங்களில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகளோ பத்திரமாக முடங்கி விட்டன. மின்சார வாரிய ஊழியர்கள், உள்ளாட்சித்துறை துப்புறவு ஊழியர்கள் என அனைவரது பணிகளும் பாராட்டத்தக்கது.

இந்த நெருக்கடியான சூழலில் பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிட்டெட் ,சுருக்கமாக பி,எஸ்.என்.எல் நிறுவனம், தமிழகத்தின் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அளித்திருக்கிறது. அதன் விபரங்கள் கீழே உள்ளது. 



பொதுத்துறை நிறுவனமாக பி.எஸ்.என்.எல் இருக்கிற ஒரே காரணத்தால் இதனை மோடியின் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தால் பெருமையோடு அறிவிக்க முடிகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்கும் இவரும் இவர் தலைவர் மோடியும்தான் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள்.

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இந்த அரசும் சரி முந்தைய காங்கிரஸ் அரசும் சரி தடையாக இருப்பது தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் லாப வேட்டைக்கு உதவுகிற தேச பக்தியால்தான். அப்படி இவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கும் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த கடுமையான சூழலில் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு என்ன சலுகை தருகிறது?

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முப்பது ரூபாய் இலவச டாக்டைம் தருகிறதாம். ஏதோ தங்கள் கஜானாவையே முழுமையாக திறந்து விட்டது போல இதை பெருமையாக விளம்பரப் படுத்துகிறது. 4 ஜி சேவைக்கான விளம்பரத்திற்காக அந்த நிறுவனம் ஒரு நாளைக்கு செலவு செய்கிற தொகையைக் கொண்டே அவர்களால் எவ்வளவோ சலுகை அளிக்க முடியும்! ஆனால் அவர்களின் கருணை முப்பது ரூபாயோடு முடிந்து போய் விட்டது. 



தனியார் கம்பெனிகளை புறம் தள்ளி பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க மக்கள் முன் வர வேண்டும் என்பதையே இச்சம்பவம் மிகவும் அழுத்தமாக வலியுறுத்துகிறது.

Wednesday, December 2, 2015

அமெரிக்கா பழமையான ஜனநாயக நாடா? நோ மிஸ்டர் ஒபாமா






மெரிக்க ஜனாதிபதி ஒபாமா நமது  நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தி விட்டு  நாடாளுமன்றத்தில் உள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில்  உலகின் மிகவும் பழைமையான ஜனநாயக நாட்டிலிருந்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வாழ்த்துக்கள் ( Greetings from the World’s  Oldest Democracy to  the Largest Democracy ) ’’ என்று எழுதியிருந்தார்

மாலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்பட்ட சமயத்தில் அவரிடம் இதை நான், “நீங்கள் உங்கள் நாட்டை பழைமையான ஜனநாயக நாடு என்று வரையறுத்திருப்பது தவறு,’’ என்று சுட்டிக்காட்டினேன். அவர், “ஏன்?’’ என்று கேட்டார். நான் அவரிடம், “நீங்கள் உங்கள் நாட்டில்  ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அனைவருக்கும் 1962 ல்தான் வாக்களிக்கும் உரிமையை அளித்தீர்கள்.  அதாவது நீங்கள் பிறந்து ஓராண்டு கழிந்தபின்னர்தான். ஆனால், நாங்கள் 1950 லேயே அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்திருக்கிறோம் என்று சொன்னேன்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்
தோழர் சீத்தாராம் யெச்சூரி பேசியதிலிருந்து.

நேற்று முன் தினம் எழுதிய பதிவில் உள்ளதுதான். முழுமையாக படிக்காதவர்களுக்காக இதை மட்டும் தனியாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

Tuesday, December 1, 2015

அப்போ அடல் பிஹாரி வாஜ்பாய் ஹிந்து கிடையாதா?




"எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை ஆள வந்த முதல் ஹிந்து ஆட்சியாளர்" என்று ராஜ்நாத்சிங்கோ இல்லை இறந்து போன அசோக் சிங்காலோ, யாரோ ஒருவர் சொன்னாரே, அப்படியென்றால் இதற்கு முன்பாக பாரதீய ஜனதா கட்சி சார்பாக பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் "ஹிந்து" கிடையாதா?

ஒருவேளை அவர் பெயரில் "பாய்" இருப்பதால் அவரை முஸ்லீம் என்று நினைத்திருப்பார்களோ?

டவுசர் பாய்ஸ் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?

மோடிக்கு ஜால்ரா அடிக்கும் வேகத்தில் தன் கட்சிக்காரரையே மறந்து விட்டார்கள்.

பாவம் வாஜ்பாய்! குஜராத் கலவரத்திற்குப் பிறகு "இனி எந்த முகத்தோடு நான் வெளிநாடு  செல்வேன்"  என்று  சொன்னதற்காக நாட்டாமை மோடியால் ஹிந்து மதத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டு விட்டார் போல.

 

யார் பேசியிருப்பினும் அது அராஜகமே….





நேற்றைய மக்களவையில் அனல் பறந்தது. மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு நடைபெற்ற ஒரு ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் “ முகலாயர் காலத்திற்குப் பின்பு எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை ஆள வந்த முதல் ஹிந்து ஆட்சியாளர் மோடிதான்” என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தோழர் முகமது சலீம் குற்றம் சுமத்தினார்.

மக்களவை அதிர்ந்து போனது. ராஜ்நாத்சிங் நடுங்கிப் போய் விட்டார். பாஜக உறுப்பினர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். தான் அவ்வாறு சொல்லவில்லை, அவ்வாறு சொல்பவர் உள்துறை அமைச்சராக இருக்கவே லாயக்கற்றவர் என்றும் முகமது சலீம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் புலம்பினார்.

தோழர் முகமது சலீம் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. குற்றச்சாட்டு தன்னுடையது கிடையாது என்றும் அவுட்லுக் பத்திரிக்கையில் வந்ததைத்தான் தான் கூறினேன் என்றும் அப்படி அமைச்சர் தான் நிரபராதி என்று நிரூபிக்க விரும்பினால் அப்பத்திரிக்கை மீது வழக்கு தொடுக்கட்டும் என்று ஆணித்தரமாக கூறி விட்டார்.

பிறகு இல்லையில்லை அப்படி சொன்னது ராஜ்நாத்சிங் கிடையாது, சமீபத்தில் இறந்து போன அசோக் சிங்கால் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து சமாளித்தார்கள். இறந்து போனவர் வந்து பதில் சொல்லப் போவதில்லையே!

சொன்னது ராஜ்நாத் சிங்கா இல்லை அசோக் சிங்காலா என்பது மட்டுமல்ல பிரச்சினை. இப்படி சொல்லுவதற்கான தைரியம் எங்கே இருந்து வருகிறது? சொல், செயல், சிந்தனை எல்லாவற்றிலும் மத வெறி ஊறிப் போயுள்ள ஒரே காரணத்தாலேதான் இவ்வாறு பேச முடிகிறது! அப்படி இருப்பதுதானே இன்றைய சகிப்பின்மை பிரச்சினைக்கான மூல காரணம்! தங்களின் ஆட்சி என்ற திமிர் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

யார் பேசியிருந்தாலும் அது அராஜகத்தின் வெளிப்பாடன்றி வேறன்ன?

பின் குறிப்பு : இந்த பிரச்சினையின் மூலம் இன்னொரு கேள்வியும் எழுந்துள்ளது. அது அடுத்த பதிவில்