Wednesday, February 5, 2014

மோடி – விலக்கி வைத்த கணவனே ஆனாலும் கண் கண்ட தெய்வம்



பிரதமராக பேராசைப்படும் நரேந்திர மோடியால் விலக்கி வைக்கப்பட்ட அவரது மனைவியின் பேட்டியை ஒரு நாளிதழில் படித்தேன். மூன்று வருடங்கள் குடும்பம் நடத்தி விட்டு அவரை ஒதுக்கி வைத்திருந்தாலும் தனக்கு திருமணமே ஆகவில்லை, தான் ஒரு பிரம்மச்சாரி என்று மோடி கதைத்து வந்தாலும் அந்தப் பெண்மணி மோடியை குறை எதுவும் கூறவில்லை. மாறாக அவர் பிரதமர் ஆனால் நல்லது என்று வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

கணவனே கண் கண்ட தெய்வம் என்ற பழங்காலத்து சிந்தனையின் வெளிப்பாடாக அந்த பேட்டி அமைந்துள்ளது அல்லது அமைக்கப் பட்டுள்ளது. இருப்பினும் இது கணவன் மனைவிக்கிடையே உள்ள பிரச்சினை. இதிலே ஒரு அளவிற்கு மேல் நாம் தலையிட முடியாது.

ஆனால் மோடி ஒரு பொய்யர் என்பது மீண்டும் ஒரு முறை அவரது மனைவியாலாயே அம்பலப்பட்டுள்ளது. அவர் ஒரு பிரம்மச்சாரி என்று இத்தனை நாள் சொல்லி வந்தது பொய் என்பது நிரூபணமாகி உள்ளது. ஒரு முக்கியமான விஷயத்திலேயே பொய் சொல்பவர் இந்தியாவின் பிரதமராக தகுதி படைத்தவரா என்று இந்திய மக்கள் யோசிக்க வேண்டும்.

அடுத்தவர் மனைவியை தன் மனைவி என்று பொய் சொல்லி விசா வாங்கி வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப் பேரவையில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள், காமெரா முன்பு லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டவர்கள், கையில் மதுக் கோப்பையோடு கடவுளை விட பணம்தான் முக்கியம் என்று பேட்டி அளித்தவர் ஆகியோர் உள்ள பாஜக கட்சிக்கு இதெல்லாம் பெரிய விஷயமேயில்லை.

பி.ஜே.பி யில் இதெல்லாம் சகஜமப்பா.


Tuesday, February 4, 2014

வாழ்க டாஸ்மாக்

கொளுத்தும் வெயில்,
வேகமாய் விரையும் வாகனங்கள்,
வாகனங்கள் எழுப்பும் ஓசைகள்,
அருகில் நாய்கள்,
வாய் மறைத்த ஈக்கள்,
வெறுப்புப் பார்வை
வீசிச் செல்லும் பாதசாரிகள்,
விலகிய வேட்டி,
ஓடுகிற சுவாசம் மட்டும்
அது உயிரற்ற சவமில்லை
என உறுதியாய் சொன்னது.

எதுவும் அறியாமல்
உணர்வற்ற மனிதன்
நட்ட நடுச்சாலையில்
இந்தியக் குடிமகனாய்.

என்றோ ஒர் நாள்
எங்கோ காணும் காட்சியல்ல.
அன்றாடம் அங்கங்கே
நாம் பார்ப்பதுதான்.

தன்னை மறந்த மனிதர்களின்
உற்பத்திக் கூடமாய்
வாழ்கிறது டாஸ்மாக்

Monday, February 3, 2014

அறை வாங்கிய முதல்வர், அறை கொடுத்த முதல்வர் – முரண்பாடுகள்



காங்கிரஸ் கட்சி முதல்வர்களை சுற்றி நேற்று ஒரே நாளில் ஒரே விதமான சம்பவங்கள் ஆனால் மாறுபட்ட முறையில் நடந்துள்ளது.

ஹரியானா மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை ஒரு வேலையில்லா இளைஞன் கன்னத்தில் அறைந்து விட்டார்.

அதே நேரம் ஹிமாச்சல் பிரதேச முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரீஷ் ராவட் காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறைந்து விட்டார்.

வேலை கிடைக்காத விரக்தியும் அரசின் மீதான கோபமும் அந்த இளைஞனை முதல்வரை அறைய வைத்து விட்டது.

உற்சாகக் கொண்டாட்டத்தில் தொடர்ந்து முழக்கமிட்டதே முதலமைச்சரை வெறுப்பேற்றி தொண்டரை அறைய வைத்து விட்டது.

முதலமைச்சரை அறைந்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
ஆனால் தொண்டரின் கன்னத்தில் அறைந்த முதலமைச்சரோ அது அறை கிடையாது, செல்லமான தட்டும் என்று சாதிக்கிறார்.

குற்றம் ஒன்றுதான்

ஆனால் தண்டனை என்னவோ ஒருவருக்குத்தான்.
இதுதான் நம் இந்தியா.
இந்த முரண்பாடுதான் நம் இந்தியா.
 

Sunday, February 2, 2014

போலீஸ் -புலி - நாங்கள்

இதோ புலியின் ஆட்டம் தொடர்கிறது.

கையில் இரும்புச் சுருளோடு ஆடும் ஆட்டம்
அற்புதமாகவே இருக்கும்.

பார்க்கத் தவறாதீர்கள்.

பேரணிக்கு முன்பாக புலியாட்டம், சிலம்பாட்டம்
நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு ஏற்பாடு
செய்தால் கடைசி நிமிடத்தில் காவல்துறை
கெடுபிடி செய்து விட்டது.

பிறகு வேறு வழியே இல்லாமல் பேரணி
முடிந்து மாநாட்டு அரங்கின் முன்பாக இந்த
நிகழ்ச்சியை நடத்த வேண்டியிருந்தது.

வேலூர் மக்களும் பார்க்க வேண்டிய ஒரு
நிகழ்ச்சி இன்சூரன்ஸ் ஊழியர்கள் மட்டுமே
பார்க்கும் அளவிற்கு சுருங்கிப் போனது
ஒரு வருத்தமே.

இதோ அந்த நிகழ்வின் இரண்டாவது பகுதியை
பாருங்கள்

விஜய் டி.வி பார்க்கும் அப்பாவி ஜனங்களே, இவ்வருட அல்வா சாப்பிடுங்கள்

லைவ் நிகழ்ச்சி என்று நம்பி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை
விஜய் டி.வி யில் பார்க்கும் அப்பாவி மக்களே, சென்னையில்
அரங்கத்தில் பார்ப்பவர்கள் தகவல் சொல்லி விட்டார்கள்.

திவாகர் - சூப்பர் சிங்கர்,
சையத் - 2
சரத் 3.

இங்கே விளம்பரங்களை பார்த்து வெறுப்பில் மிதப்பவர்களே
இந்த ஆண்டும் விஜய் டி.வி அல்வா கொடுத்து விட்டது.

இதை லைவ் என்றாவது சொல்லாமல் இருக்கலாம்
 

Saturday, February 1, 2014

திவாகருக்கு சூப்பர் சிங்கர் விருதே இனி வேண்டாம்




சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நான் அவ்வளவாக பார்ப்பதில்லை.
இன்றும் கூட முழுமையாக பார்க்கவில்லை. ஆனால் திவாகர்
என்ற பையன் பலே பாண்டியா படத்தின் சிறந்த பாடல்களில்
ஒன்றான " நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்ற பாடலை
பாடத் தொடங்கிய போது இது ரொம்ப கஷ்டமான பாடலாச்சே
என்று பார்க்க உட்கார்ந்தேன்.

ஹா, என்ன பாட்டு... 

பையன் நல்லாவே பாடினான், எம்.ஆர்.ராதா, சிவாஜி ரெண்டு
பேருமே கண் முன்னாடி வந்தாங்க. ஜதி, ஸ்வரம் இரண்டையுமே
அனாசயமாக பாடி அசத்தினான். சூப்பர்

ஜானகியம்மா மேடைக்கு வந்து திவாகரை உச்சி முகர்ந்து
ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து வாழ்த்தியதே
சூப்பர் சிங்கர் விருது வென்றதாக கருதுகிறேன்.

திவாகருக்கே அந்த விருதும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
 

 

புலியின் அதிரடி ஆட்டம்

தோழர் தமிழ்வாணனின் உபயத்தில் யு.ட்யூபில் எப்படி
பதிவேற்றுவது என்று கற்றுக் கொண்டேன். அதனால்
ஒரு அதிரடி ஆட்டத்தை இங்கே பதிவிட்டுள்ளேன்.

எங்கள் கோட்டச்சங்க மாநாட்டை ஒட்டிய பேரணியில்
நிகழ்த்தப்பட்ட சிலம்பாட்டம் மற்றும் புலியாட்டத்தின்
வீடியோவின் இணைப்பு   தரப்பட்டுள்ளது.

இதிலே சிவப்பு டி.ஷர்ட்டோடு சிலம்பு சுற்றுபவர்
எங்கள் சங்கத் தோழர் நடராஜன். புலியாட்டம்
நடத்துபவர் திரு குடியாத்தம் ராஜேந்திரன்.

இன்னொரு காணொளி நாளை 

எப்படி உள்ளது என்று அவசியம் சொல்லுங்கள்