Wednesday, September 4, 2013

மரம் வளைந்ததா? வக்கிர மனிதன் வளைத்தானா?

கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.

வளைந்த மரங்களைக் கொண்ட காடு  இது.
போலந்து நாட்டில் உள்ளது. 1930 ல் இவ்வாறு
வளர்க்கப்பட்டது இது. 

ஏன் எதற்கு என்ற காரணம் இப்போது யாருக்கும்
தெரியவில்லை.

ஆங்கிலத்தில் இதற்கு  Crooked Forest  என்று 
பெயர். 

Crooked என்பதற்கு தமிழில் வக்கிரம் என்பது
பொதுவான அர்த்தம். இப்படி மரத்தை வளைத்து
வளர்த்த மனிதன் கூட வக்கிரமானவன்தான்.

நான் சொல்வது சரிதானே?







Tuesday, September 3, 2013

அந்தப் பெண்ணை துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்தது, ஆனால்




அனைத்து பெண்களும் கல்வி பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பாகிஸ்தான் மாணவி மலாலா யூசுஃபஸாய் தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். அவருக்கு ஆதரவாக உலகெங்கும் குரல்கள்  எழுந்தன. தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பின்பு உயிர் பிழைத்த மலாலா, ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் ஆற்றிய உரை மிகவும் முக்கியமானது. ஆழமானதும் கூட. 

துப்பாக்கியின் தோட்டாக்கள் துளைத்த போதும் உறுதி மாறாமல்
தனது இலக்கை நோக்கி பயணம் செல்லும் அந்தப் பெண்
ஐ.நா சபையில் ஆற்றிய  உரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

மௌனத்திலிருந்து எழுந்த ஆயிரம் குரல்கள்

கருணை மிக்க கடவுளின் பெயரால், ஐக்கிய நாடுகள் சபையின் மரியாதைக்குரிய பொதுச்செயலாளர் திரு பான்.கி.மூன் அவர்களே, பொதுச்சபையின் மரியாதைக்குரிய தலைவர் திரு உக் ஜெர்மீ அவர்களே, சர்வதேசக் கல்விக்கான ஐ.நா தூதர் திரு கார்டன் பிரௌன் அவர்களே, மரியாதைக்குரிய பெரியோர்களே, எனது அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, வெகுநாட்களுக்குப் பிறகு இன்று பேசுவது எனக்கு மிகப் பெரிய கௌரவம். மதிப்பு மிக்க மனிதர்களோடு இங்கே இருப்பது என் வாழ்நாளில் ஒரு மிகச்சிறந்த தருணம்.  

எனது உரையை எங்கிருந்து துவக்குவது என்று தெரியவில்லை. நான் என்ன கூறுவேன் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நம் அனைவரையும் சமமாய் கருதும் கடவுளுக்கு நன்றி. நான் விரைவில் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி. அளவு நம்பவே முடியாத அளவிற்கு மக்கள் என் மீது பாசத்தை வெளிப்படுத்தினர். நான் நலம் பெற வேண்டும் என்ற வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் உல்கெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கில் நான் பெற்றேன். அனைவருக்கும் என் நன்றி. உங்களது வார்த்தைகள் மூலம் என்னை ஊக்குவித்த குழந்தைகளுக்கு நன்றி. தங்கள் பிரார்த்தனைகள் மூலம் என்னை வலிமை பெறச்செய்த மூத்தவர்களுக்கு நன்றி. பாகிஸ்தானிலும் இங்கிலாந்திலும் எனக்கு சிகிச்சை அளித்த செவிலியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி. நான் நலம் பெறவும் எனது வலிமையை மீண்டும் பெறவும் உதவிய ஐக்கிய அரபுகள் எமிரேட் அரசிற்கும் என்னது நன்றி.

திரு பான்.கி.மூன் அவர்களின் சர்வதேச கல்வி குறித்த முன்முயற்சிகளையும் ஐ,நா வின் சிறப்புத் தூதர் திரு கார்டன் பிரவுன் அவர்களின் பணிகளையும்  நான் முழுதுமாக ஆதரிக்கிறேன். தொடர்ந்து அவர்கள் அளித்து வரும் வழிகாட்டுதல்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன். நாம் செயல்பட  அவர்கள் தொடர்ந்து எழுச்சியூட்டுகிறார்கள்.

அன்பான சகோதர, சகோதரிகளே, ஒன்றை நினைவு கொள்ளுங்கள். மலாலா தினம் என்பது எனது நாளல்ல. தங்கள் உரிமைக்காக குரல் எழுப்பிய ஒவ்வொரு சிறுவனின் சிறுமியின் தினம். நூற்றுக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மனித உரிமைகளுக்காக பேசுவது மட்டும் இல்லாமல் கல்வி, அமைதி, சமத்துவம் போன்ற தங்கள் இலக்குகளை அடைய போராட்டக் களத்திலும் உள்ளார்கள். தீவிரவாதிகளால் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், லட்சக்கணக்கானவர்கள் காயம் பட்டுள்ளனர். நான் அவர்களில் ஒருத்தி. பலரில் ஒருத்தியாக நான் உங்கள் மத்தியில் நிற்கிறேன்.

நான் எனக்காக மட்டுமல்லாது அனைத்து சிறுவர்கள், சிறுமிகள் சார்பாக பேசுகிறேன். நான் குரலை உயர்த்துவது சத்தம் போடுவதற்காக அல்ல, பேச முடியாதவர்களும் கூட கேட்கட்டும் என்பதற்காக பேசுகிறேன். தங்கள் உரிமைகளுக்காக போராடியவர்களுக்காக, தாங்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற உரிமைக்காக, தாங்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என்ற உரிமைக்காக, தங்களின்  சமத்துவ உரிமைக்காக, தங்களின் கல்வி உரிமைக்காக போராடியவர்களுக்காக நான் பேசுகிறேன்.  

அன்பான நண்பர்களே, 9 அக்டோபர் 2012 அன்று தாலிபன்கள்  என்னை நெற்றியின் இடது பக்க நெற்றியில் சுட்டார்கள். என் நண்பர்களையும் கூட சுட்டார்கள். அவர்களது தோட்டாக்கள் எங்களை மௌனமாக்கும் என்று எதிர்பார்த்தார்கள், ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர். பிற்கு அந்த மௌனத்திலிருந்து ஆயிரம் குரல்கள் எழும்பின. எங்களின் இலக்குகளுக்கும் இலட்சியங்களுக்கும் தடை உருவாக்கி விடலாம்  என்று தீவிரவாதிகள் நினைத்தார்கள். அச்சம், பலவீனம், நம்பிக்கையின்மை ஆகியவை மடிந்து போய் வலிமையும் சக்தியும் தைரியமும் பிறந்தது. நான் அதே மலாலாதான். எனது ஆசைகள், கனவுகள், நம்பிக்கைகள் எதிலும் மாற்றம் இல்லை.

அன்பான சகோதர, சகோதரிகளே, நான் யாருக்கும் எதிரானவள் அல்ல, தாலிபனுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் பழி தீர்த்துக் கொள்ளவோ இல்லை வேறு எந்த தீவிரவாதக்குழுவிற்கு எதிராக பேசவோ நான் வரவில்லை. ஒவ்வொரு குழந்தையினுடைய கல்வி கற்கும் உரிமை குறித்து பேச நான் இங்கே வந்துள்ளேன். அனைத்து தீவிரவாதிகளுடைய, அதிலும் முக்கியமாக தாலிபன்களுடைய மகன்களும் மகள்களும் கல்வி பெற வேண்டும்.

என்னை சுட்ட தாலிப்பைக் கூட நான் வெறுக்கவில்லை. என் கையிலே துப்பாக்கி இருந்து அவர் என் எதிரில் நின்றால் கூட நான் அவரை சுட மாட்டேன். கருணைக்கடவுள் முகமது, ஏசு கிறிஸ்து, புத்த பகவான் ஆகியோரிடம் இருந்து நான் அன்பைக் கற்றுள்ளேன். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மாண்டேலா, முகமது அலி ஜின்னா ஆகியோருடைய பாரம்பரியத்திலிருந்து நான் பெற்றுக் கொண்டது இது. காந்திஜி, பாட்சாகான், அன்னை தெரசா ஆகியோரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட அஹிம்சைத் தத்துவம் இது. என் தாயும் தந்தையும் போதித்த மன்னிக்கும் குணம் இது. அமைதியாய் இரு, அனைவரையும் நேசி என்றே எனது ஆன்மா எனக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.

அன்பான சகோதர, சகோதரிகளே, இருளைப் பார்க்கிறபோதுதான் நாம் வெளிச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். நாம் மௌனமாக்கப்படும் போதுதான் நம் குரலின் முக்கியத்துவத்தை அறிகிறோம். அது போலவே பாகிஸ்தானின் வட பகுதியான ஸ்வாட் பகுதியில் உள்ள நாங்கள் துப்பாக்கிகளை பார்க்கிறபோதுதான் பேனாக்களின் புத்தகங்களின் வலிமையை உணர்கிறோம். வாளினை விட பேனாவின் முனை சக்தியானது என்ற பொன்மொழி மிகவும் உண்மையானது. தீவிரவாதிகள் பேனாக்களையும் புத்தகங்களையும் பார்த்து அஞ்சுகிறார்கள். கல்வியின் வலிமை அவர்களை அச்சுறுத்துகிறது. அவர்கள் பெண்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். பெண்களின் குரலின் வலிமை அவர்களை நடுங்க வைக்கிறது. அதனால்தான் அவர்கள் க்வெட்டாவில் சமீபத்தில் பதிநான்கு அப்பாவி மருத்துவ மாணவர்களைக் கொன்றார்கள்.  அதனால்தான் அவர்கள் கைபர் புக்தூன்க்வாவிலும் ஃபாடாவிலும் ஏராளமான ஆசிரியைகளையும் போலியோ ஊழியர்களையும் கொன்றுள்ளனர். அதனால்தான் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடங்களை தகர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எங்கள் சமூகத்தில் நாங்கள் கொண்டு வர விழையும் சமத்துவத்தையும் மாற்றத்தையும் கண்டு அஞ்சுகிறார்கள்.

எங்கள் பள்ளியில் ஒரு மாணவனைப் பார்த்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்டது எனக்கு நினைவில் உள்ளது. தாலிபன்கள்  ஏன் கல்வியை எதிர்க்கிறார்கள் என்ற கேள்விக்கு அவன் சொன்ன பதில் மிகவும் எளிமையானது. அவன் தன் புத்தகத்தை காண்பித்து இதனுள்ளே என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தாலிபன்களுக்கு தெரியாது என்றான். பெண்கள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வதால் அவர்களை நரகத்திற்கு அனுப்பக்கூடிய பழமைவாதம் கொண்ட சிறியவராக அவர்கள் கடவுளைப் பார்க்கிறார்கள்.

தீவிரவாதிகள் இஸ்லாமிய மதத்தின் பெயரையும் பஷ்தூன் சமூகத்தின் பெயரையும் தங்களது சுய லாபத்திற்காக துஷ்பிரயோகம் செய்கிறார்கள். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் ஒரு ஜனநாயக நாடு. பஷ்தூன்கள் தங்களின் பெண்களுக்கும் பையன்களுக்கும்  கல்வி வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அமைதியும் மனிதத்தன்மையும் சகோதரத்துவமும் கொண்டது இஸ்லாமிய மதம். கல்வி பெறுவது ஒவ்வொரு குழந்தையினுடைய  உரிமை மட்டுமல்ல, அவர்களின் கடமையும் பொறுப்பும் கூடத்தான் என்றுதான்   இஸ்லாம் சொல்கிறது.

மரியாதைக்குரிய பொதுச்செயலாளர் அவர்களே, கல்வி கற்க அமைதி தேவை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலும் போர்களும் கலவரங்களும் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்வதை தடுத்து விடுகின்றன. இந்தப் போர்களால் நாங்கள் உண்மையிலேயே களைத்துப் போய்விட்டோம். பெண்களும் குழந்தைகளும் உலகெங்கும் பல விதங்களில் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் எண்ணற்ற அப்பாவி ஏழைக் குழந்தைகள் குழந்தைத்தொழிலாளர்களாக சுரண்டப்படுகின்றனர். நைஜீரியாவில் பல பள்ளிக்கட்டிடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. பல பத்தாண்டுகளாக தீவிரவாதம் உருவாக்கிய தடைகள் மூலம் ஆப்கான் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் பெண்கள் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களாக மாற்றப்படுகின்றனர். பலர் இளம் வயதிலேயே கட்டாயத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. வறுமை, அறியாமை, அசமத்துவம், அநீதி, நிற வெறி, அடிப்படை உரிமைகள் மறுப்பு ஆகியவையே ஆணும் பெண்ணும் சந்திக்கிற முக்கியப் பிரச்சினைகள்.

அன்பான நண்பர்களே, நான் இன்று பெண்களின் உரிமைகளையும் பெண் குழந்தைகளின் கல்வியையும் நான் முன்னிருத்துகிறேன். ஏனென்றால் மிக அதிகமாக சிரமத்தில் உழல்பவர்கள் அவர்கள்தான். தங்களது உரிமைகளுக்காக தோள் கொடுக்க வேண்டும் என்று ஆண்களை பெண் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்ட ஒரு காலம் உண்டு. ஆனால் இப்போது நாங்களே எங்களுக்காக பேசப்போகிறோம். பெண்களின் உரிமைகளுக்காக பேசுவதை நிறுத்துங்கள் என்று நான் ஆண்களிடம் கூறவில்லை. மாறாக பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக அவர்களே சுயேட்சையாக போராட வேண்டும் என்று கூறுகிறேன். அன்பான சகோதர. சகோதரிகளே, நாம் பேச வேண்டிய நேரம் இது.

அமைதிக்கான, வளர்ச்சிக்கான உத்திகளை மாற்ற வேண்டிய தருணம் இது என்பதை உலகத் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். எந்த ஒரு அமைதி ஒப்பந்தமும் பெண்களுடைய, குழந்தைகளுடைய உரிமைகளை பாதுகாப்பதாக அமைய வேண்டும் என்று உலகத் தலைவர்களை வலியுறுத்துகிறோம். பெண்களின் கௌரவத்திற்கும் உரிமைகளுக்கும் எதிரான எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. உலகெங்கும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து அரசுகளையும் கேட்டுக் கொள்கிறோம். கொடுமைகளிலிருந்தும் கொடூரங்களிலிருந்தும்  குழந்தைகளைப்   பாதுகாக்க  தீவிரவாதத்திற்கும் வன்முறைக்கும் எதிராக போராடுமாறு அனைத்து அரசுகளையும் கேட்டுக்கொள்கிறோம். வள்ர்முக நாடுகளில் உள்ள பெண்களின் கல்வி வாய்ப்புக்களை விரிவாக்க உதவிடுமாறு வளர்ந்த நாடுகளை கேட்டுக் கொள்கிறோம். ஜாதி, மதம், இனம், மற்றும் பாலினத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் எந்த ஒரு பாரபட்சத்தையும் நிராகரிக்குமாறு உலகின் அனைத்து சமூகங்களையும் கேட்டுக்கொள்கிறோம். பெண்கள் வாழ்வில் வளம் பெற சமத்துவத்தை நிலவச்செய்யுங்கள். நம்மில் பாதி பேர் பின்னே தள்ளப்படுகையில் நம்மால் முன்னேற முடியாது. உலகெங்கும் உள்ள சகோதரிகளே, வீர உணர்வு பெற்றிடுங்கள், உங்களுக்குள் உள்ள வலிமையையும் உங்களின் முழமையான சக்தியையும் உணர்ந்திடுங்கள்.

அன்பான சகோதர சகோதரிகளே, ஒவ்வொரு குழந்தையுடைய ஒளிமயமான எதிர்காலத்திற்கு பள்ளிகளும் கல்வியும் தேவை என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களது இலக்கான அமைதியையும் அனைவருக்குமான கல்வி என்ற இலக்கை அடையும்வரை எங்களது பயணத்தை தொடர்வோம். எங்கள் உரிமைகளுக்காக பேசுவோம். எங்கள் குரல்கள் மூலம் மாற்றத்தை உருவாக்குவோம். நமது வார்த்தைகளின் வலிமை மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். நமது வார்த்தைகளால் உலகத்தை மாற்ற முடியும் ஏனென்றால் நாம் அனைவரும் கல்விக்காக ஒன்றுபட்டு இருக்கிறோம். ஓற்றுமை உண்ர்வோடு இருக்கிறோம். நாம் நம்முடைய இலக்கை அடையவேண்டும் என்றால் நமது அறிவாயுதத்தை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது ஒற்றுமை மூலம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அன்பான சகோதர, சகோதரிகளே, பல லட்சம் மக்கள் வறுமையாலும் அறியாமையாலும் அநீதியாலும் துன்பங்களை அனுப்வித்து வருகின்றனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளுக்கு வெளியே உள்ளனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நமது சகோதர சகோதரிகள் அமைதியான, ஒளிமயமான எதிர்காலத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. கல்வியின்மை, வறுமை மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக உலகளாவிய போராட்டத்தை நடத்திடுவோம். நமது புத்தகங்களையும் பேனாக்களையும் கையில் எடுத்திடுவோம். அவைதான் நம்முடைய சக்தி மிக்க ஆயுதங்கள். ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா மற்றும் ஒரு புத்தகத்தால் உலகையே மாற்றிட முடியும். கல்விதான் முதன்மையானது.




Monday, September 2, 2013

பார்க்க, கேட்க சிவாஜி கணேசன், கேட்க மட்டுமே எம்.ஜி.ஆர்






இன்று நான் சினிமா பற்றி மட்டுமே எழுதப் போகிறேன்.

கடந்த சில நாட்களாக இரவு பத்து மணிக்கு மேல் முரசு டி.வியில் காலத்தால் அழியாத பல நல்ல பாடல்களை பார்த்து வருகிறேன். சுகமான அனுபவமாக அது உள்ளது.

அதிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பாடல்களை பார்ப்பதும் கேட்பதம் எவ்வளவு இனிமையாக உள்ளது! காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, சோகப் பாடல்களாக இருந்தாலும் சரி அவர் காண்பிக்கிற முக பாவத்திற்கு ஈடு இணையாக இன்னொருவர் இன்னும் தோன்றவே இல்லை.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் நலந்தானா பாடலை எல்லோரும் சிலாகிப்பார்கள். நானும் கூட. அதிலே குறிப்பாக ஒரு இடம். “ புண் பட்ட சேதியைக் கேட்டவுடன், இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார் ? “ என்று பத்மினி ஆடிக்கொண்டே பாட, இவர் நாகஸ்வரத்திலும் கண்களாலும் “ நானறிவேன் “ என்று பதில் சொல்வார். உடனே பாலையா நெகிழ்ந்து போய் சிவாஜியை தட்டிக் கொடுப்பார்.

இதை விட இன்னொரு இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேசனும் ஏ.வி.எம்.ராஜனும் தியாகராஜரின் நகுமோ கீர்த்தனையை வாசித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது பத்மினி மாட்டு வண்டியில் வந்து இறங்குவார். உடனே சிவாஜி நாகஸ்வரம் வாசித்துக் கொண்டே பாலையாவிடம் கண் ஜாடை காண்பித்து வாசலைப் பார்க்கச் சொல்வார். அவரும் பார்த்து விட்டு சூப்பர் என்பது போல கண்களிலேயே பதில் சொல்வார். அதற்குப் பிறகு சிவாஜியின் வாசிப்பிலும் ஒரு துள்ளல் தெரியும். கண்டதும் காதல் போலும். 

அந்தக் காட்சியின் இணைப்பை இங்கே  அளித்துள்ளேன்.
நீங்களும் பார்த்து ரசியுங்கள். 

சான்ஸே இல்லை, சிவாஜி இஸ் கிரேட்..

இரண்டு தினங்கள் முன்பாக சென்னை சென்று காரில் திரும்பும்போது சிவாஜியின் பாடல்கள்தான் கேட்டுக் கொண்டு வந்தேன். பாடல்களை கேட்கும்போது கண் முன்னே சிவாஜிதான் தெரிந்தார்.

அதே சமயம் இன்னொரு அருமையான பாடலான கொஞ்சும் சலங்கை சிங்கார வேலனே தேவா வில் சிவாஜி கணேசன் போன்ற சிறந்த நாகஸ்வர வித்வானாக ஜெமினி கணேசனின் நடிப்பு இல்லை என்பதையும் அப்பாடலில் சாவித்ரியிடம் இருந்த இயல்பும் கூட  ஜெமினியிடம் இல்லை என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

எந்த வில்லங்கமும் இல்லாமல் இந்த பதிவை முடிக்க மனம் வரவில்லை.

சிவாஜியின் பாடல் பார்க்கவும் கேட்கவும் இனிமை.

ஆனால் எம்.ஜி.ஆர் பாடல்கள் கேட்க மட்டும்தான் இனிமை.

ரொமான்ஸ் பாடல்களில் எம்.ஜி.ஆரின் முகத்தைப் பார்த்தால் காமெடி காட்சி போல சிரிப்பு வந்து விடுகிறது. பாஸ் என்கிற பாஸ்கரனில் சந்தானம் எவ்வளவோ சொல்லிக் கொடுத்தும் ரொமான்ஸ் முகபாவம் வராத ஆர்யா போலத்தான் எல்லா பாடல்களில் எம்.ஜி.ஆர் தெரிகிறார்.

அவருக்கு தேசிய விருது அளிக்கப்பட்ட ரிகஷாக்காரன் படத்தை ஒரு முறை பார்க்கும் துர்பாக்கியம் கிடைத்தது. ஆனால் அதை காமெடி படமாக நினைத்து சிரித்து மகிழ்ந்தேன் என்பது வேறு விஷயம்.

Sunday, September 1, 2013

காலிப்ளவர் பொறியல் - இப்படியும் செய்து பாருங்களேன்

காலிப்ளவரை சின்ன துண்டங்களாக நறுக்கி, பச்சைப்பட்டாணியுடன்
(ஒரிஜினல் பச்சைப்பட்டாணி வாங்கி உரித்து வைத்தது) சேர்த்து
நல்ல கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து ஒரு இருபது நிமிடம் ஊற
விடுங்கள்.

அந்த நேரத்தில் இரண்டு கைப்பிடி வேர்கடலை எடுத்து நன்றாக
வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் நன்றாக பொடித்து வைத்துக்
கொள்ளவும்.

இரண்டு வெங்காய, இரண்டு தக்காளி நீள வாட்டில் வெட்டிக்
கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு
போடவும். கடுகு வெடித்ததும் கொஞ்சம் சீரகத்தையும்
சேர்த்து வதக்கவும்.

பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை
வதக்கவும். பிறகு தக்காளியை சேர்க்கவும். தக்காளி கொஞ்சம்
வதங்கியதும் ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி, உப்பு சேர்த்து
சிறிது நேரம் கிளறவும். 

அதன் பின்பு இந்த கலவையில் ஏற்கனவே ஊறிக் கொண்டிருக்கும்
காலிப்ளவர் மற்றும் பச்சைப்பட்டாணியை (தண்ணீரை வடித்து
விட்டு ) சேர்த்து மீண்டும் கிளறவும். ஒரு பத்து நிமிடங்கள்
கழித்து இதோடு ஏற்கனவே பொடித்து வைத்துள்ள 
வேர்கடலை பொடியை தூவி ஒரு நிமிடம் மீண்டும் 
கிளறி எடுத்து விடவும்.

சாத வகைகளுக்கும் சரி சப்பாத்தி பூரிக்கும் நல்ல 
சைட் டிஷ்ஷாக இருக்கும்.

பொறியல் புது விதமாக செய்கிறேனே என்று பிடிவாதமாக
செய்தாலும் எப்படி இருக்குமோ என்று மனதுக்குள்
பட்டாம்பூச்சி பறந்து கொண்டே இருந்தது. 

மனைவி, மகன் இருவருமே கை கொடுத்து சூப்பர்
என்று சொன்ன பின்புதான் எனக்கு ருசி தெரிந்தது. 


நடக்காது, நடக்க விட மாட்டோம்.





அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போர் வாளாக திகழும் இன்சூரன்ஸ் வொர்க்கர் ஆங்கில மாத இதழின் செப்டம்பர் 2013 இதழின் தலையங்கம் இது. நெல்லைக் கோட்டத்தைச் சேர்ந்த தோழர் ஆர்.எஸ்.செண்பகம் இதனை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

எல்.ஐ.சி யை சீரழிக்கும் எந்த ஒரு முயற்சியையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அனுமதிக்காது என்பதே இத்தலையங்கம்
அரசுக்கு தெரிவிக்கும் எச்சரிக்கை.



அச்சாணியாகத் திகழும் ஆயுள் காப்பீட்டுக் கழகம்

ஆயுள் காப்பீட்டுக் கழகம் வருகிற 2013, செப்டம்பர் 1ம் தேதி அன்று அதனுடைய 58வது ஆண்டில் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கிறது.  இந்திய தேசத்தின் பொருளாதாரத்திற்கு அச்சாணியாகத் திகழும் என்ற நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட நிறுவனமே எல்.ஐ.சி. என்கிற இந்த ஆயுள் காப்பீட்டுக் கழகம்.  மேலும் இது மக்களின் வாழ்நிலையை மாற்றுவதிலும் மிக முக்கியமான பங்கினையாற்றும் என்ற நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட நிறுவனம். 



இந்திய தேசத்தின் சமூக மற்றும் உள்கட்டுமானத் துறைகளுக்குத் தேவைப்படும் நீண்டகால முதலீட்டிற்கு அவசியமான உள்நாட்டு சிறு சேமிப்புகளை திரட்டும் பொறுப்பினை எல்.ஐ.சி.யின் மீது நம்பிக்கை வைத்து இந்த தேசம் அளித்தது.  அது மட்டுமல்லாமல், இப்படி திரட்டப்படும் மக்களின் சேமிப்புப் பணமானது பாதுகாப்பாகவும் வைக்கப்படும், அதே நேரத்தில் அவர்களுக்குச் சிறந்ததொரு இலாபப் பங்கும் எல்.ஐ.சி.யால் வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்த நிதி திரட்டும் பொறுப்பு எல்.ஐ.சி.க்கு இந்திய தேசத்தால் வழங்கப்பட்டது.  இது நாள் வரையிலும், எல்.ஐ.சி.யும் இந்த நம்பிக்கைக்குகந்த நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது.  அதனால் இந்த நாட்டின் நம்பிக்கைக்கும் பெருமைக்கும் உரிய பெருமை மிகு நிறுவனமாக இன்று எல்.ஐ.சி. உயர்ந்து நிற்கிறது. 



தனி நபர் வருமானம் என்பது மிகவும் குறைவாக உள்ள ஒரு ஏழை நாடு இந்தியா.  அப்படிப்பட்ட ஒரு ஏழை நாட்டில் காப்பீடு குறித்த விஷயங்களை பொது மக்களிடம் பரவலாக்குவதும், தங்கள் உயிரை தக்க வைத்துக் கொள்ளவே ஒவ்வொரு நாளும் போராட வேண்டிய நிலையில் உள்ள மிகப் பெரும்பான்மை மக்களை கொண்டுள்ள இந்தத் தேசத்தில், ஆயுள் காப்பீட்டின் மேன்மைகள் குறித்துப் பேசுவதும் எளிதல்ல.  எல்.ஐ.சி. இத்தகைய கடினமான சூழலில் தான் செயல்பட்டு வருகிறது.  செயல்பட வேண்டியுள்ளது.  இந்திய தேசத்தின் மிகவும் ஒதுக்கப்பட்ட கிராமப்புறங்களையும் நோக்கி எல்.ஐ.சி. செல்ல வேண்டியுள்ளது, செயல்பட வேண்டியுள்ளது, இன்சூரன்ஸ் பரவலாக்கலை செய்ய வேண்டியுள்ளது. 



இன்றைக்கு நடப்பில் உள்ள 30 கோடி தனி நபர் பாலிசிகளுக்கும், குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 10 கோடி பாலிசிதாரர்க்கான பாலிசிகளுக்கும் சேவை செய்து வருகிறது எல்.ஐ.சி.  இந்த உண்மையே அதனுடைய பிரம்மாண்டமான பணியினை பறை சாற்றுவதாக உள்ளது.  கடந்து வந்த இந்த 57 வருடங்களில் எல்.ஐ.சி. இன்றைக்கு இந்த நாட்டின் மிகச் சிறந்த நிதி நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது.  இந்திய நாட்டின் உள் கட்டமைப்புத் துறைகளின் மிகப் பெரிய முதலீட்டாளராகத் திகழ்கிறது.  இதனுடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 16 லட்சம் கோடிகள்.  இந்த சொத்துக்கள் தான் இந்திய தேசத்தின் பொருளாதாரம் எப்போதெல்லாம் ஆட்டம் காண்கிறதோ அப்போதெல்லாம் அதனை தூக்கி நிறுத்த எல்.ஐ.சி ஓடி வந்து கைகொடுக்க உதவுகிறது.  இந்திய அரசாங்கத்திற்கு கடன் அளிக்கும் மிகப் பெரிய நிறுவனம் எல்.ஐ.சி.தான்.  அரசாங்கத்தின் கடன் தேவைகளில் கிட்டத்தட்ட 25 சதமானம் எல்.ஐ.சி.யால் வழங்கப்படுகிறது. 



எல்.ஐ.சி.யின் இந்த வெற்றிப்பாதை அத்தனை எளிதாக அடையப்படவில்லை.  ஆயுள் காப்பீட்டினை அரசுடைமையாக்குவதை விரும்பாத சுயநலவாதிகள் எல்.ஐ.சி.யை ஒரு நாளும் சுமூகமாக செயல்பட அனுமதித்ததில்லை.  அதனுடைய செயல்பாட்டிற்கு பல்வேறு தடைகள் உருவாக்கப்பட்டன.  ஒவ்வொரு தடையும் வெற்றிகரமான தகர்த்தெறியப்பட்டன.  எல்.ஐ.சியை மிகப் பெரிய அளவில் சீர் குலைக்கும் முயற்சி என்பது 1981ம் ஆண்டு இந்திராகாந்தி தலைமையிலான அரசாங்கத்தால் செய்யப்பட்டது.  இந்த சூழ்ச்சியை முறியடிக்க வீதிகளிலும், பாராளுமன்றத்திற்குள்ளேயும் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த  வேண்டி வந்தது.  இது மாதிரியான தடைகளையெல்லாம் கடந்து எதிர்பாராத நிகழ்வுகளால் துரதிருஷ்டவாதிகளாகும் மக்கள் கண்ணீரை துடைக்கும் நிறுவனமாக, இலட்சக்கணக்கான குடும்பங்களில் விளக்கேற்றி வைக்கும் நிறுவனமாக எல்.ஐ.சி. தொடர்ந்து பணியாற்றி வருகிறது. 



1991ம் ஆண்டு இந்திய ஆளும் வர்க்கம் நவீன தாராளமயக் கொள்கைகளை கடைபிடிக்கத் தொடங்கியது முதல் இந்திய தேசத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் (இன்சூரன்ஸ் துறை உள்பட) திறந்துவிடப்பட்டது.  இந்திய மக்களின் மிகப் பெரும்பான்மையினரின் மிகக் கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகும் இன்சூரன்ஸ் துறையானது இந்திய மற்றும் அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிடப்பட்டது. 



இன்சூரன்ஸ் துறையை இந்திய மற்றும் அன்னிய மூலதனத்திற்குத் திறந்துவிடும்போது வைக்கப்பட்ட விவாதங்கள் இன்று வெற்று விவாதங்களாக சாரமற்றவையாக மாறிப் போயுள்ளன.  இந்திய மக்கள் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பினை தெரிவித்ததன் காரணமாகத் தான் இன்றைக்கு எல்.ஐ.சி. மற்றும் பொதுத் துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளை தனியார்மயமாக்கிவிட வேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சி வெற்றிபெற முடியவில்லை.  இன்றைக்கு அரசாங்கம் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலும் தன்னுடைய பங்குகளை (holdings)  நீர்த்துப்போகச் செய்துள்ளது.  ஆனால் பொதுத் துறையில் உள்ள இன்சூரன்ஸ் துறையில் மட்டும் தான் அரசாங்கத்தினுடைய இந்தத் தாக்குதல் முயற்சிகள் வெற்றிபெற முடியவில்லை என்பதில் இருந்தே நமது வெற்றியின் வீச்சினை அறிந்து கொள்ள முடியும். 



எல்.ஐ.சி.யையும் ஜி.ஐ.சி.யையும் ஒரே நேரத்தில் தனியார்மயமாக்கி விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தவர்கள் எல்.ஐ.சி. போட்டியின் கடுமையைத் தாங்க முடியாமல் கூடிய விரைவில் அழிந்து போகும் என்ற கனவுடன் எதிர்பாத்துக் காத்திருந்தனர்.  அன்றைய பொருளாதாரப் பத்திரிக்கைகளின் (Pink Papers)  தலையங்கங்களும் கூட எல்.ஐ.சி. என்ற வெள்ளை யானையை (ஐராவதத்தை) பார்த்து தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் பயப்படத் தேவையில்லை என்றும், அது கூடிய விரைவில் போட்டியை சமாளிக்க முடியாமல் தன்னுடைய முடிவினை சந்திக்கும் என்றும் எழுதியிருந்தன.  ஆனால் எல்.ஐ.சி. என்ற இந்த ஐராவதம் மிக அழகாக செயல்பட்டு அவர்களது நம்பிக்கைகளை தகர்த்தெறிந்தது.  இந்த உண்மையை அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.



சந்தையை தீர்மானிப்பதாக, உருவாக்குவதாக (market maker)  எல்.ஐ.சி. தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.  இன்சூரன்ஸ் சந்தையில் அதனுடைய மேலாதிக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது.  12 வருட போட்டிக் காலத்திற்குப் பிறகும், பிரிமிய வருவாயைப் பொறுத்த வரையில் எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு என்பது 72 சதமாகவும், பாலிசிகளின் எண்ணிக்கையில் 81 சதமாகவும் உள்ளது.  ஆனால், எல்.ஐ.சி.யின் அடுத்த கட்டப் போட்டியாளர் பிரிமிய வருவாயில் 4 சதமும், பாலிசிகளின் எண்ணிக்கையில் 3 சதமும் மட்டுமே சந்தைப் பங்குடையவராக உள்ளார் என்பதே எல்.ஐ.சி.யின் சந்தை மேலாண்மையை காட்டுவதாக உள்ளது.  12 ஆண்டு போட்டிச் சூழலில் உலகில் எந்தவொரு இன்சூரன்ஸ் கம்பெனியாலும் எல்.ஐ.சி.யைப் போன்று இப்படியொரு சந்தை மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.  எல்.ஐ.சி.யில் பாலிசி எடுத்துள்ள பாலிசிதாரர்கள் தங்களுடைய சொந்த அனுபவங்களின் அடிப்படையில் எல்.ஐ.சி.யின் மீது வைத்துள்ள நம்பிக்கையே இதற்குக் காரணமாகும்.  நிதியமைச்சர் ப. சிதம்பரமும், ”எல்.ஐ.சி. என்ற இந்த மூன்றெழுத்து தான் இன்சூரன்ஸ் என்பதற்கு அர்த்தம் அளிப்பதாக உள்ளது.  இந்த நாட்டின் பொருளாதார இழையை பலப்படுத்துவதில் அதற்கு உள்ள திறமையே இதற்குக் காரணம்.  இந்திய நாட்டில் வேறு எந்த மூன்றெழுத்திற்கும் இப்படியொரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நான் தைரியமாகச் சொல்ல முடியும்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். 



இப்படிப்பட்ட புகழாரங்களை சூட்டினாலும், எல்.ஐ.சி.யை சீரழிக்கும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.  அந்நிய முதலீட்டின் உச்ச வரம்பை 26 சதத்தில் இருந்து 49 சதமாக உயர்த்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை பலப்படுத்தும் முயற்சிகளே.  அதே நேரம் மூலதனத் திரட்டலில் அந்நிய மூலதனத்திற்கு இந்திய நாட்டின் உள்நாட்டு சேமிப்புகளின் மீதான கட்டுப்பாட்டினை பெறுவதும், உள்நாட்டுச் சேமிப்புகளை கொண்டு செல்வதும் எளிதாகிவிடும்.  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கடந்த 9 வருடங்களாக நடத்திய போராட்டங்களின் மூலம் அந்நிய நேரடி மூலதன உச்ச வரம்பு உயர்ந்து விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது.  ஆனால், தற்போது நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதாரச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, அரசாங்கம் இன்சூரன்ஸ் துறையை மேலும் தாராளமயமாக்க முயல்கிறது. அரசாங்கத்தின் இந்த நாசகர முயற்சிக்கு எதிரான போராட்டமும், மக்கள் மத்தியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு பிரச்சாரங்களும், அரசாங்கத்தின் இந்த முயற்சிகளை இது நாள் வரை தடுத்து நிறுத்தியுள்ளது.  இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்த அரசாங்கம் இன்னும் தீவிரமாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, பிரச்சார இயக்கங்கள் இன்னும் அதிக வலுவுடன் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.   



இன்சூரன்ஸ் ஊழியர் நடத்தியுள்ள இந்த இயக்கங்கள் தனிச் சிறப்புமிக்கவை, ஒப்பற்றவை, குறிப்பிடத்தக்கவை.  இந்த இயக்கங்கள் ஊழியர்களின் மத்தியில், நிறுவனத்தின் பால் இது தனக்கான நிறுவனம் என்ற உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.  இந்த இயக்கங்களுக்கு எல்.ஐ.சி. நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை.  எல்.ஐ.சி. ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தை நேசிக்கிறார்கள்.  அவர்கள் தங்கள் அன்புக்குப் பாத்திரமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் நலனை பாதுகாப்பதில் முழு முயற்சியை மேற்கொள்வார்கள்.  வேறு எந்த நிறுவனத்திலும் காண முடியாத அளவிற்கு எல்.ஐ.சி.யின் ஊழியர்கள் இந்த நிறுவனத்தின் மீது பற்றுடையவர்களாக, இதை தங்களது சொந்த நிறுவனமாகப் பாவிக்கக் கூடியவர்களாக உள்ளனர்.  ஒரு பொதுத் துறை நிறுவனம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு எல்.ஐ.சி. நிறுவனம் ஒரு மாதிரி நிறுவனமாகத் திகழ்கிறது.  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்தியுள்ள இயக்கங்கள், இன்றைக்கு ஊழியர்கள் மத்தியில், அவர்கள் இந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், பாலிசிதாரர்களின் நலன்களை பாதுகாக்கக் கூடியவர்களாக, அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுபவர்களாக, நாட்டு நலனை பாதுகாக்கக் கூடியவர்களாக திகழ வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தியுள்ளது.  பாலிசிதாரர்களுக்கு 100 சதமானம் உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்பதே ஊழியர்களின் இந்த புரிதலுக்கும் பொறுப்புணர்வுக்கும் போதுமான ஆதாரமாகத் திகழ்கிறது. 



இந்த 58வது ஆண்டில் எல்.ஐ.சி. அடியெடுத்து வைக்கும்போது ஏராளமான சவால்களை சந்தித்துள்ளது.  நிறுவனத்தின் வளர்ச்சிக்கான சவால்கள், அதிகரித்து வரும் பாலிசிதாரர்களின் தேவைகள் மற்றும் இன்சூரன்ஸ் சந்தையில் தொடர்ந்து தனது மேலாண்மையை தக்க வைக்கும் சவால் என்பது போன்ற சவால்களை எல்.ஐ.சி. எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை பின்பற்றும் சக்திகள் ஏற்படுத்தியுள்ள எதிர்மறையான சூழலில் இந்த சவால்களை எல்.ஐ.சி. சந்திக்க வேண்டியுள்ளது.  ஆனால், அவர்களுக்கு இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தைப் பாதுகாக்க எத்தகைய வலிமையான போராட்டங்களையும் எந்த அளவிற்கும் சென்று அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்துவார்கள் என்றும் தெரியும்.  எல்.ஐ.சி. ஊழியர்களைப் பொறுத்த வரையில், எல்.ஐ.சி.யை பாதுகாப்பது என்பது ஒரு அரசியல் மற்றும் தத்துவார்த்த ரீதியிலான பொறுப்பாகும். 



எனவே, எல்.ஐ.சி.யின் வெற்றிகரமான 57வது ஆண்டு தினத்தை நாம் கொண்டாடுவோம்.  இந்த பெருமை மிகு நிறுவனத்தை மேலும் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்ல நாம் உறுதியேற்போம். 

---------------------