Friday, March 8, 2013

இந்த கயவனுக்கு சிலை வேறு ஒரு கேடு.....


படத்தில் சிலையாய் உள்ளவன் பெயர் கர்த்தாம் சூர்யா.
சட்டிஸ்கர் மாநில அடியாள் படையான சல்வா ஜூடமின்
உறுப்பினராக இருந்து பிறகு போலீஸானவன்.

இவன் மீது ஏராளமான பாலியல் வன் கொடுமை புகார்கள்
உண்டு. இவன் போலீசான பின்பு மாவோயிஸ்டுகளோடு
நடந்த ஒரு எண்கவுன்டரில் இறந்து போனதால்
தியாகியாகி விட்டான். அவனது சொந்த ஊரில் அவனுக்கு
ஒரு சிலை. அதை மாவட்ட எஸ்.பி திறந்து வைக்கிறார்.

இதை ஹிந்து நாளிதழில் படிக்கும் போது ரத்தமெல்லாம்
கொதிக்கிறது. இப்படி கயவர்களுக்கு தியாகிகள் அங்கீகாரம்
கொடுத்தால் இவர்களைப் போன்றவர்களின் கொட்டம்
அதிகரிக்காதா?

முன்னாள் சல்வா ஜூடம் அடியாட்கள், இன்னாள் போலீஸ்கள்
மீதான் பாலியல் வன் கொடுமை புகார்களை பழங்குடி இனப்
பெண்கள் வாபஸ் வாங்குகிறார்களாம்.

தண்டனை கொடுக்கப்பட வேண்டிய கிரிமினல்களை
காவலர்களாக்கி, தியாகியாக்கினால் அந்த அப்பாவி
மக்களுக்கு யார் பாதுகாப்பு?

பி.கு : பி.வாசு சார் என்னை மன்னித்து விடுங்கள், 
வால்டர் வெற்றிவேல் படத்தில் கபாலிக்கு 
(பொன்னம்பலம் பாத்திரம்) சிலை வைக்கும் போது
கொஞ்சம் ஓவர் என நினைத்தேன். உங்கள் கற்பனையெல்லாம்
இந்த கயவர்கள் முன்பு ஒன்றுமே கிடையாது. 

Wednesday, March 6, 2013

மோசடிதான் வாடிக்கை, அதுதான் இவர்களுக்கு வாழ்க்கை

பெட்ரோல்: அரசின் மோசடி வேலை

 

 
மாற்றுப்பாதைக்கான போர் முழக்க பிரச்சாரப் பயணத்தில் விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த வேண்டும் என்னும் முழக்கம் முக்கிய இடம் பெற்றுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கும் வரலாறு காணாத விலையேற்றத்துக்கு மத்திய ஆட்சியாளர்களின் வரி விதிப்புக்கொள்கைகள், முன்பேரவர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதிக்கொள்கைகள் போன்றவற்றுடன் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றமும் முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. சர்வதேச விலையேற்றத்தைக்காரணமாகக் குறிப்பிட்டு திடீர் திடீரென பெட்ரோல், டீசல் போன்றவைகளின் விலைகள் ஏற்றப்படுகின்றன. இந்த விலையேற்றம் ஏற்படுத்தக்கூடிய அலை வீச்சு போன்ற மாற்றத்தால் அனைத்துப்பொருட்களின் விலைகளும் ஏறுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. அண்மையில் பெட்ரோலின்விலையை லிட்டருக்கு ரூ.1.50 என்ற அளவிலும் டீசல் விலையை லிட்டருக்கு ஐம்பது பைசாவும் உயர்த்தியுள்ள எண்ணெய் நிறுவனங்கள், ஒரு இரட்டை விலைக் கொள்கையையும் அறிவித்துள்ளன. இதன்படி டீசலை மொத்தமாக வாங்குவோர் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.11 கூடுதலாக அளிக்கவேண்டும். இதனால் மொத்தமாக டீசலை வாங்கவேண்டிய நிலையிலுள்ள போக்குவரத்துக்கழகங்கள் ரயில்வே, சிமெண்ட் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களின் செலவு அதிகமாகும். 


அவை இச்சுமைகளை மக்கள் தலைக்கு மாற்று வதற்கு அதிகக்காலம் பிடிக்காது.பெற வேண்டிய விலையை முழுமையாக எண்ணெய் நிறுவனங்கள் பெறாததினால் அவை பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே விலைகளை சர்வதேசச் சந்தையின் நிலைக்கு உயர்த்த வேண்டியுள்ளது என்று அரசு விளக்கம் அளிக்கிறது. இந்தியா தனது பெட்ரோலியப்பொருட்களின் தேவையில் முக்கால் பங்கினை அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது என்பது உண்மையே. ஆனால் சர்வதேசச் சந்தையின் விலையைக் காரணம் காட்டி குறைவான விலையைப்பெறுவதாகக் கூறுவது பெரும் ஏமாற்று வேலையே. சரியான விலை எதுவாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிடுவதற்கும் அவற்றின் உற்பத்திச் செலவுக்கும் சிறிதும் தொடர்பில்லை. ஏனெனில் பெட்ரோல், டீசல் போன்றவற்றை இந்தியா நேரடியாக இறக்குமதி செய்வதில்லை. அவற்றின் உற்பத்திக்கான மூலப்பொருளாக உள்ள கச்சா எண்ணெய்யைத்தான் இறக்குமதி செய்து அவற்றை நமது நாட்டிலுள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கிறது. ஆனால் பெட்ரோல் அல்லது டீசலை நேரடியாக இறக்குமதி செய்தால் அவற்றின் அடக்கவிலை என்னவாக இருக்குமோ அத்துடன் வரிகள் போக்குவரத்துச் செலவு, காப்பீட்டுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து அதன் அடிப்படையில் ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலுக்கான விலை எண்ணெய் நிறுவனங்களுக்கு கிடைக்கவேண்டும் என்று கணக்கிடுகிறது. மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரிகளும் இதில் சேர்க்கப்படுகின்றன. நிர்ணயிக்கப்படுகிற விலையின் மதிப்பில் சரிபாதிக்குச் சற்றுக்குறைவாக இந்த வரிகளே உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். 


உள்நாட்டில் உற்பத்தியாகும் 25 சதவீதம் கச்சா எண்ணெயை சுத்திகரித்து கிடைக்கும் பெட்ரோல் அல்லது டீசலுக்கும் இதே விலையைத்தான் கிடைக்கவேண்டிய விலையாக அரசு குறிப்பிடுகிறது. இது எத்தகையமோசடி என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம், சில மாதங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட ஒரு கணக்கீட்டின்படி இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணெயின் அடக்கவிலை பீப்பாய் சுமார் 55 டாலர் என்று கணக்கிடப்பட்டது. அப்போது சர்வதேச விலை பீப்பாய் 150 டாலராக இருந்தது. நமது கச்சா எண்ணெய் தேவையில் இந்திய உற்பத்தி மற்றும் இறக்குமதியின் மொத்த அடக்கவிலையைக் கணக்கிட்டால் ஒரு பீப்பாயின் சராசரி விலை 122 டாலராக இருக்கும். இது லிட்டர் கணக்கில் ரூ.31 என்று வரும். இதனுடன் சுத்திகரிப்பு, செலவு, விற்பனை செலவு, லாபம் எல்லாவற்றையும் சேர்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.35க்கு விற்கமுடியும் என்று கணக்கிடப்பட்டது.

 இன்றையதினம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் சர்வதேச விலை 113.16 டாலர் தான் என்பதிலிருந்து ரூ. 35 ஐவிடவும் குறைவான விலைக்கு விற்கமுடியும் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விலையை இவ்வாறு நிர்ணயம் செய்யாமல் நமது நாட்டுக்குத்தேவைப்படும் பெட்ரோல், டீசல் ஆகியவை முழுமையாக இறக்குமதி செய்யப்படுவதாக அனுமானித்து கச்சா எண்ணெயின் அடக்க விலையை எடுத்துக்கொள்ளாமல் உள்நாட்டு உற்பத்தியின் அடக்கவிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நிர்ணயிக்கப்படும் செயற்கையான விலையைக்காட்டி ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விலைகளால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகக் கூறி சர்வதேச சந்தையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்துக்கும் ஏற்ப விலைகளை அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது. இது எத்தனை பெரிய மோசடி?

கி.இலக்குவன்

நன்றி - தீக்கதிர் நாளிதழ் 05.03.2013

மாமனிதனின் இறப்பு மனித குலத்தின் இழப்பு




மகத்தான மாமனிதன்,
இந்த  நூற்றாண்டின்
இணையற்ற தலைவன்,
சோஷலிச மாற்றம் 
சாத்தியம் என்ற
நம்பிக்கையை விதைத்தவன்,
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை
அஞ்சி நடுங்க வைத்தவன்,
லத்தீன் அமெரிக்க கண்டத்திற்கு
சிவப்பு வண்ணம் அளித்தவன்,
அரசுக்கு சொந்தமானதை
அடுத்தவரிடம் விற்கும்
அற்பர்களின் உலகமயத்தில்
பேராசைக்காரர்களின் சொத்துக்களை
அரசிடமே சேர்த்தவன் அவன்,
மக்களுக்கு நன்மை செய்தால்
மக்கள் என்றென்றும் 
துணை நிற்பார்கள் 
என்பதை உணர்த்தியவன்,
துரோகிகளும் எதிரிகளும்
வீழ்த்த  முடியாத
ஹூயுகோ சாவேசை
மரணம் வீழ்த்தியதோ?
கண்ணீர் சிந்த
சொல்கிறேன்.

செவ்வணக்கம் தோழரே

Tuesday, March 5, 2013

பாண்டி முதல்வர் ரங்கசாமியை அசிங்கப் படுத்தியுள்ள அவரது கட்சிக்காரர்கள்





கடந்த சனிக்கிழமையன்று எங்கள் சங்க மகளிர் மாநாட்டிற்காக புதுச்சேரி சென்றிருந்தேன். அங்கே கண்ணில் பட்ட ஒரு சுவரொட்டியின் வாசகம் இது.

“ எங்கள் அரசியல் கொம்பன் ரங்கசாமியின் அழைப்பை ஏற்று மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு நன்றி.”

தங்கள் தலைவரை வித்தியாசமாக அழைக்க வேண்டும் என்று விரும்பிய விசுவாசிகள் அவருக்கு கொடுத்துள்ள புதுப்பட்டம் அரசியல் கொம்பன். கும்கி பட பாதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

கொம்பனை ஒரு அழிவு சக்தியாக, வெறி பிடித்த காட்டு யானையாக கும்கியில் சித்தரித்திருப்பார்கள். தங்கள் தலைவருக்கு வித்தியாசமான அடைமொழி கொடுக்க நினைத்த அவர்கள் அவரை அழிவு சக்தியாக்கி அசிங்கப்படுத்தி விட்டனர்.

இல்லை உண்மையைத்தான்  சொல்லி விட்டார்களோ?

Monday, March 4, 2013

இவர்கள் பிழைக்கத் தெரிந்த அரசியல்வாதிகள்

இது ஒரு வேலூர் கூத்து.

ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக வேலூர்
மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் பிரம்மாண்ட
பேனர்கள் மற்றும் வேலூர் பழைய பேருந்து
நிலையம் முன்பாக இருந்த சாலையில்
சிறிய அளவிலும் ஏராளமான பேனர்கள் 
வைத்திருந்தார். கவுன்ஸிலரின் சார்பாக 
அவர் கணவர்தான் வைத்திருந்தார் என்பது
வேறு விஷயம்.

கழக அரசியல் மரபின்படி பிறந்த நாள் அன்று
அமைச்சராக இருந்த டாக்டர் விஜய், வேலூர்
மேயர் ஆகியோரின் பெயரோடுதான் அந்த
பேனர்களும் இருந்தன.

விஜய் போனார், வீரமணி வந்தார்.

வீரமணியை வாழ்த்தி பிரம்மாண்ட பேனர்கள்
வந்ததில் ஆச்சர்யமில்லை. ஜெ பிறந்தநாளுக்காக
வைக்கப் பட்ட சிறிய பேனர்களில் விஜய் பெயர்
நீக்கப்பட்டு வீரமணி பெயர் சேர்க்கப்பட்டு 
பிறந்த நாள் முடிந்த பின்னும் அம்மாவிற்கு
வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இரவோடு இரவாக மாறியது பேனர்கள்
மட்டுமா, விசுவாசமும் கூட.

பதவியில் உள்ளவர்களுக்கு சரியான முறையில்
சரியான நேரத்தில் ஜால்ரா அடிக்கும் 
இது போன்ற பேர்வழிகள் பிழைக்கத் தெரிந்தவர்கள்
 

Sunday, March 3, 2013

துறவறத்தில் ஆடம்பரம் - தொடரும் விவாதம்

ஆடம்பரமாக நடந்த ஒரு துறவற நிகழ்ச்சி குறித்து இரண்டு
தினங்கள் முன்பு எழுதியிருந்தேன். அது  பற்றி பின்னூட்டம்
எழுதிய மூத்த தோழர் காஷ்யபன், தனது வலைப்பக்கத்தில்
இன்னும் கொஞ்சம் செய்திகளோடு தனது வலைப்பக்கத்தில்
எழுதியிருந்தார்.

அந்தப் பதிவு இங்கே. 

மதம் என்றாலே முரண்பாடா என அவர் கேள்வி எழுப்பி
இருந்தார்.

ஆம் என்றுதான் நானும் கருதுகிறேன்.

ஆக்கபூர்வமான கருத்துக்கள் வருவதை வரவேற்கிறேன்.
 

Friday, March 1, 2013

முரண்பாடாய் ஒரு துறவறம்





இன்று வேலூரில் ஒரு ஜைன மதப் பெண் துறவறத்தில் இணைகிறார். அதற்கான சடங்குகள் நடந்தன. திருமண ஊர்வலம் போல பிரம்மாணட, ஆடம்பர ஊர்வலம், அதற்காக நடைபெற்றது.

துறவறம் என்பது ஆசைகள் அத்தனையையும் துறந்து வாழ்வது. எளிமை என்பது மிகவும் அடிப்படையானது. அதிலும் பொதுவாக ஜைன மதத் துறவிகள் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள்.

அப்படிப் பட்ட துறவறத்தை ஏற்கும் நிகழ்ச்சி மிகுந்த ஆடம்பரத்தோடு நடைபெற்றது மிகுந்த முரண்பாடாய் தோன்றியது. அந்த மதத்தை சேர்ந்த ஒரு நண்பரிடம் கேட்ட போது பெண்ணின் திருமணத்தை கொண்டாடும் வாய்ப்பில்லாத பெற்றோர்கள், இந்த நிகழ்வையே விழாவாக கொண்டாடுகின்றார்கள் என்றார்.

மதிய உணவு நேரத்தில் இதுவே இன்று விவாதப் பொருளான போது, இவ்வளவு ஆடம்பரமான வாழ்வைத் துறந்து அவர் சன்னியாசினியாகப் போகிறார் என்று காண்பிப்பதற்குத்தான் இந்த ஏற்பாடுகள் என சிலர் விளக்கமளித்தனர்.

எனக்கு இன்னும் நெருடலாகவே உள்ளது.