Tuesday, January 3, 2012

கலையும் மன்மோகன் கனவுகள்


 
எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் 
தோழர் கே.சுவாமிநாதன் எழுதிய ஒரு அற்புதமான
கட்டுரை கீழே.  


மசோதாக்களை இழுத்து வந்தோம்!
மக்கள்  மன்றத்திற்கும்..
கே. சுவாமிநாதன், 
பொதுச்செயலாளர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு


இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மீது நமக்கு மிகுந்த அக்கறை உண்டு.ஏனெனில் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் எந்த உரிமைகளும்
கருணையாலோ, பெருந்தன்மையினாலோ தரப்படுவதில்லை. இந்திய  விடுதலைப் போராட்டம் உருவாக்கிய எழுச்சியும், அதில் பங்கேற்ற மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டிய கட்டாயமுமே நாடாளுமன்ற ஜனநாயகத்தை  பிரசவித்தது என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

அமெரிக்க ஜனநாயகத்தில்  ஆப்ரிக்க-அமெரிக்கருக்கு வாக்குரிமை ஒபாமா பிறந்த ஆண்டிற்குப்  பின்னர்தான் தரப்பட்டது என்று மாநிலங்களவையில் தோழர் சீதாராம் யெச்சுரி குறிப்பிட்டது ஏகடியம் அல்ல. ஒவ்வோர் உரிமையும் மக்களின் திரட்டலாலும், விழிப்பினாலும் ஈட்டப்படுகிறது என்பதற்கான பகிர்வே அது. இந்திய நாட்டின்  நாடாளுமன்ற ஜனநாயகத்திலும் டாக்டர் அம்பேத்கர் " ஒரு மனிதன் , ஒரு வாக்கு"- "ஒரு வாக்கு, ஒரு மதிப்பு" என்பதையே முன்வைத்தார். அதில் முதல் பகுதி நிறைவேறிய அளவிற்கு இரண்டாவது பகுதி ஈடேறவில்லை என அம்மாமனிதரே  வருந்தியதும் வரலாறு. ஏற்றத்தாழ்வுமிக்க சமுகத்தில் ஒரு வாக்கு ஒரு  மதிப்பு என்பதை நோக்கி முன்னேற இன்னும் திரட்டலும், விழிப்பும் தேவைப்படுகிறது.

இந்திய சிவில் சமுகம் என்ற பெயரில் சிலர் நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் 
சிறுமைப்படுத்துவது போல் வெளியிடும் கருத்துக்களில் நமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆழமான விவாதங்கள் நடைபெறுவதும்மக்களின் கருத்துக்கள் திரட்டப்படுவதும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேலும்  வலுப்படுத்துமென்பது நமது உறுதியான நம்பிக்கை. இச் சரியான பார்வையே  இன்சூரன்ஸ் துறையைப் பாதுகாக்கிற போராட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் சங்கத்தின் தொடர்ந்த வெற்றிகளுக்கு காரணம் ஆகும். எல்..சி  திருத்த சட்டம், இன்சூரன்ஸ் சட்ட திருத்த சட்ட வரைவு குறித்த அண்மைக் கால அனுபவமும் அதுவே.

எல்..சி திருத்தச் சட்டம்   
எல்..சி திருத்த சட்ட வரைவு 2008 ல் அறிமுகம் செய்யப்பட்ட போது அக் குறு 
மசோதாவிற்குள் ஒளிந்திருந்த அபாயங்கள் பலருக்குப் பிடிபடவில்லை. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மட்டுமே ஊழியர்களையும்,மக்களையும்  திரட்டிப்  போராடியது. அதன் காரணமாகவே அச் சட்டவரைவு சர்ச்சைக்குள்ளானதாக மாற்றப்பட்டது. இதனால் நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு  அனுப்பப்பட்டது. பல்வேறு அமைப்புகள், இன்சூரன்ஸ் துறை நிபுணர்கள் தங்களின் கருத்துக்களைச் சொல்கிற, பகிர்கிற, முன்வைக்கிற வாய்ப்புகளையும் அது உருவாக்கியது. பொதுவாக பொருளாதாரப் பாதை குறித்த ஒருமித்த  கருத்துக்களைக் கொண்ட முதலாளித்துவக் கட்சிகளும் கூட தங்களின் எதிர்க் கட்சி அந்தஸ்தை நிலை நாட்டுவதற்காக நியாயம் பேச வேண்டிய அவசியத்தை இது ஏற்படுத்தியது. இதனால் மக்கள் மன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் எல்லாம் நாடாளுமன்றத்திலும் விவாதத்திற்குள்ளானது. நாடாளுமன்ற நிலைக்குழுவும் தனது அறிக்கையில் எல்..சி சட்ட திருத்த வரைவின் மீது அதே கேள்விகளை எழுப்பியது. நிலைக் குழு சொன்னால் மட்டும் நமது ஆட்சியாளர்கள்  காதுகளில் ஏறிவிடுமா? எத்தனையோ முறை நிலைக்குழு சொன்னதை அந்தக் காது வழியாக விட்ட அனுபவம் தேசத்திற்கு உண்டு. ஆனால் அரசாங்கம் எல்..சி திருத்தச் சட்டத்தில் அப்படிச் செய்ய முடியவில்லை. ஏனெனில் AIIEA உருவாக்கியிருந்த மக்கள் கருத்தின் வலிமை அரசாங்கத்தின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் இதை நாம் காண முடிந்தது. மாநிலங்களவை நியமன உறுப்பினரும், முன்னாள் மும்பை பல்கலைக் கழக துணை வேந்தருமான டாக்டர் பாலா சந்திர முங்கேகர்  உரையாற்றுகையில் அவர் மும்பையில் எல்..சி பாலிசிதாரர் கவுன்சிலில் உறுப்பினராக இருந்ததையும், நூற்றுக்கும் மேலான பாலிசிதாரர்களிடம் கலந்துரையாடி இருப்பதையும், அதில் ஒருவர் கூட எல்..சி யில் தான் பெற வேண்டிய உரிமங்களுகாக ஒரு ருபாய் கூடக்  கொடுக்க வேண்டி வந்ததாக சொல்லவே இல்லை என்பதைப் பதிவு செய்துள்ளார். நேர்மையான சேவைக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்! பொதுத் துறை நிறுவனம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே இவ்வளவு பாராட்டுக்கள்  குவிவதென்பதை விட வேறு என்ன பெருமை தேவை ? இந்திய மக்களின் ஒட்டுமொத்த உணர்வின்  வெளிப்பாடு அல்லவா இது.

இதன் விளைவாக நிலைக்குழுவின் முக்கியப்  பரிந்துரைகள் எல்லாவற்றையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது.

1 . அரசின் மூலதனத்தை ரூ 5 கோடியில் இருந்து ரூ 100 கோடியாக உயர்த்தினாலும் எதிர்கால உயர்வு தேவைப்பட்டால் ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்திற்கு வரவேண்டும் என்பதும் அரசே அக்கூடுதல் முதலீடைப் போடவேண்டும் என்பதையும் அரசு  ஏற்றுக் கொண்டது. இதன் மூலம்  பங்கு விற்பனைக் கனவு இப்போதைக்கு கலைந்துபோயிருக்கிறது. எதிர்காலத்திலும் அரசின் தூக்கத்தை AIIEA யின் இயக்கங்கள் கெடுக்கும் என்பதும், கனவுகள் கலையும் என்பதும் உண்மை.

2 . எல்..சி பாலிசிகளுக்கு உள்ள அரசு உத்தரவாதம் முழுமையாகத் தொடரும் என்பதும்  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எல்..சி வணிகத்தை மனோரீதியாகச்  சிதைக்கிற தனியார்களின்  ஆசையில் மண் விழுந்துள்ளது.

3 . எல்..சி புதிய கிளைகளைத் திறக்கிற அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது " மயிலைப் பிடித்து காலை ஒடித்து ஆடச் சொல்கிற " உலகமயத்தின் சதிக்கு எதிரான  சாதனை ஆகும்.

4 . எல்..சி யின் உபரியில் 95 சதவீதம் போனஸ் ஆக பாலிசிதாரர்களுக்கு வழங்கப்பட்டு  வருவதை மாற்றி 90 சதவீதம் என அறிவிக்கப்பட்டு இருப்பது ஓர் பின்னடைவுதான். ஆனால் இக் குறைப்பு ஏற்கனவே உள்ள பழைய பாலிசிகளுக்குப் பொருந்தாது என  அறிவிக்கப்பட்டிருப்பது ஓர் ஆறுதல்

இவையெல்லாம் ஓர் தொழிற்சங்கம் இயக்கம் எந்த அளவிற்கு மக்களை நெருங்க  முடியும்; ஆதரவைப் பெற முடியும்; உலகமயத்திற்கு லகான் போட முடியும்; மககள் போற்றுகிற பொதுத் துறையாக ஒரு நிறுவனத்தை வளர்க்க முடியும் என்பதற்கு சீரிய சாட்சியங்கள் ஆகும்.

இன்னொரு அரசியல் படிப்பினையும் உண்டு. போனஸ் குறைப்பிற்கு எதிராக சி.பி,எம்  உறுப்பினர் பன்ஸ் கோபால் சௌத்திரி முன்மொழிந்த திருத்தம் வாக்கெடுப்பிற்கு  விடப்பட்ட போது ஆதரவாக 16 வாக்குகளும், எதிராக 107 வாக்குகளும் கிடைத்தன. இடதுசாரிகள் 62 பேர் இருந்திருந்தால் இன்னும் அதிக எதிர்ப்பு வெளிப்பட்டிருக்கும். அரசும் 300 எம்.பிக்களையாவது திரட்டியே சட்டத்தை நிறைவேற்ற வேண்டியிருந்திருக்கும்.இப்படி அரசியலை உரசிப் பார்க்கிற வாய்ப்பும் தொழிலாளி வர்க்கத்திற்கு கிடைக்கிறதல்லவா


இன்சூரன்ஸ் சட்டத் திருத்த வரைவு ...

இன்சூரன்ஸ் சட்டத் திருத்த சட்ட வரைவு என்பது அதன் பெயர் என்றாலும் அந்நிய முதலீடு மசோதா என்பதே அதன் பிரபல பெயர். AIIEA எண்ணற்ற கருத்தரங்கங்கள், மக்கள் சந்திப்பு இயக்கங்கள், கலை வடிவிலான இயக்கங்கள், மனித சங்கிலிகள், இன்னும் எத்தனையோ வடிவங்களில் எதிர்ப்பலைகளை உருவாக்கியது. 25 எல்..சி ஊழியர்கள் உள்ள  மையங்களில் கூட நூற்றுக்கணக்கான மக்களை ஈர்க்க முடியும் என்பதை இவ்வியக்கங்கள் நிரூபித்துள்ளன. இதன் தாக்கம் நிலைக் குழுவின் அறிக்கையில் பிரதிபலித்துள்ளது.

* அந்நிய முதலீட்டு உயர்வுக்கான அவசியம் இல்லை என நிலைக் குழு ஒருமித்த  குரலில் ஓங்கி அடித்துள்ளது. இதைப் பற்றி விவரிக்கையில் 2008 உலக நெருக்கடியின்  அனுபவத்தை இந்தியா கணக்கிற் கொள்ள வேண்டும் என்று அக்குழு கூறியிருப்பது  குறிப்பிடத்தக்கது. 10 ஆண்டு கால தனியார் அனுபவமும் அவர்கள் ஆதாரத் தொழில் முதலீடு, வகை வகையான காப்பீட்டுத் திட்டங்கள் பற்றிக் குறித்து அளித்த  வாக்குறுதிகளை  நிறைவேற்றவில்லை என்றும் அக் குழு சுட்டுகிறது. இதுதானய்யா, காட்டுக்கத்தலாக  நாங்க இவ்வளவு காலமா சொல்லி வந்திருக்கோம் என்று ஆற்றாமையோடும், அதே நேரத்தில் தங்களது குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கிற பெருமையோடும்  ஒரு இன்சூரன்ஸ் ஊழியன் நினைப்பது இயல்பானதுதான்.

* எனினும் பொதுத் துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு நிலைக்குழு ' ஆம்' சொல்லியிருப்பது வேதனைக்குரியதுதான். நான்கு பொதுத் துறை நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து ஒரே நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்ற AIIEA யின் மாற்று ஆலோசனையை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவேண்டும்.

* ஒரு சுவாரஸ்யமான விசயம். நிலைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளித்த .சி..சி. - லோம்பார்ட் நிறுவன பிரதிநிதி இப்போது அந்நிய முதலீடு உயர்வுக்கு தேவை இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். தொடர்ச்சியான பயணத்தில் இப்படி எதிர்பாராத ஆதரவுகள் கூட - தற்காலிகமானதாகக் கூட இருக்கலாம்- கிடைக்கும். இப்படி எதிரி முகாமில் ஏற்படும்  முரண்பாடுகளை லாவகமாக பயன்படுத்துகிற உத்திகளையும் போராட்டக் களங்கள்தான் கற்றுக்கொடுக்கின்றன. சோர்வற்ற பயணங்களில் மட்டுமே கிடைக்கிற நிழல் இது.

* AIIEA யின் போராட்டத்திற்குப் பெரும் பலமாகத் திகழ்பவர்கள் எல்..சி முகவர்கள்.எல் சி யின் மொத்த முகவர் எண்ணிக்கை 15 லட்சம் ஆகும். அவர்களின் புதுப்பித்தல் கமிசன், வாரிசுக் கமிசன் ஆகியன எவ்விதப் பாதிப்பும் இன்றி தொடர வேண்டும் என நிலைக் குழு பரிந்துரைத்திருக்கிறது.

ஒரு மசோதா மக்களின் கருத்துக்களும் பெரும்பாலும் இணைக்கப்பட்டு சட்டம் ஆகியிருக்கிறதுஇன்னொரு சட்ட வரைவு மக்களின் கருத்து என்கிற அரவைக்கு ஆளாகியிருக்கிறது. எத்தனையோ மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் பெரும் விவாதங்கள் இல்லாமல் கூட  நிறைவேறி மக்களின் நலனைப் பதம் பார்த்திருக்கின்றன.ஆனால் 1 லட்சம் உழைப்பாளர்கள்  வீதிக்கு வந்தால் மசோதாக்களின் ஒவ்வொரு வரியையும் மக்கள் மன்றத்தில் விவாதத்திற்கு ஆளாக முடியும் என்பதை இவ்விரு அனுபவங்களும் நிரூபித்துள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மெருகேற்றவும் செய்துள்ளன. இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா மீது விழிப்பும், இயக்கங்களும் தொடர வேண்டியுள்ளன.

இது மக்கள் விரோத மசோதாக்களின் மீதான ஓர் தொழிற்சங்கத்தின்  எதிர்வினை மட்டுமல்ல. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நாடித்துடிப்பை  பரிசோதித்து நாட்டின் நலம் பாதுகாக்கிற முயற்சி. மாமனிதர் டாக்டர்  அம்பேத்கர் அவர்களின் ஒரு வாக்கு ஒரு மதிப்பு என்கிற கனவு ஈடேறுவதற்கான  முயற்சியும் ஆகும். முடிவெடுத்தலில் மக்களின் பங்கேற்பை உறுதி  செய்வதற்கான வழிமுறைக்கு ஓர் உதாரணம்.

நாம் மிக மிகச் சிறு உளிதான். நாம் விரும்புகிற பாரதத்தைச் செதுக்குவதற்கு 
கோடானுகோடி உளிகள் தேவைபடுகின்றன.



Monday, January 2, 2012

இந்தப் பாவிகளுக்கு மன்னிப்பே கிடையாது.




இன்று காலை நாளிதழில் பார்த்த செய்தி இது. கர்னாடக மாநிலம் பீஜப்பூர் நகரில்  தாலுகா அலுவலகத்தில்  பாகிஸ்தானின் தேசியக் கொடியை  பறக்க விட்டிருந்தார்கள். இதை செய்தவர்களுக்கு ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருக்க முடியும். பதட்டத்தையும் கலவரத்தையும்  உருவாக்குவது  என்பதுதான்.


சில விஷயங்கள் நெருப்பில்லாமலே  பற்றிக் கொள்ளும், வேகமாய் பரவும். பொதுவான சமயங்களில் இந்தியா பற்றியோ, அது அமெரிக்காவிடம் அடிமையாய் கிடப்பது பற்றியோ கவலைப்படாதவர்களுக்குக் கூட இது மாதிரி சந்தர்ப்பங்களில் மட்டும் வேகம் பிறக்கும். தேசப் பற்று ஊற்றெடுத்து பெருக்கெடுத்து ஓடும். பாகிஸ்தானின் கொடி என்பதைத் தாண்டி மத மோதல்களாய் மாறும்.


இந்த செயலை செய்த விஷமிகளின் நோக்கமும் இதுதான். அவர்கள் யாரென்று கண்டு பிடிக்கப்பட்டு, அவர்கள் யாராக  இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

Sunday, January 1, 2012

பாரத ரத்னா - ஒரு நியாயமான நீதிபதியின் வேதனை - சச்சின் ஆதரவாளர்களுக்கு சமர்ப்பணம்

 பாரத ரத்னா விருது குறித்து நீதியரசர்  மார்கண்டேய கட்ஜு 

அவர்களின் அற்புதமான  உரை வண்ணக்கதிரில்  வெளியாகி

உள்ளது. சச்சின் டெண்டுல்கருக்காக பரிந்துரை செய்பவர்கள்

அவசியம் படிக்க வேண்டும். 


 

பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட வேண்டும்?--மார்கண்டே கட்ஜூ

 

குடியரசு தினத்தன்று பாரத ரத்னா விருதுகள் வழங்கும் பிரச்சனை இப்போது செய்திகளில் அதிகம் அடிபடத் தொடங்கி இருக்கிறது. உருது கவிஞர் மிர்சா காலிப், வங்க எழுத்தாளர் சரத் சந்திரர் சட்டோபாத்யாயா ஆகியோருக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்படவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தபோது பலர் அதை எதிர்த்தனர். அவர்கள் உயிருடன் இல்லை என்பதும், உயிருடன் இல்லாதவர்களுக்கு அது வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் அதற்குக் காரணம் கூறினார்கள்.

சரியான நபர்களாக இருந்தால் அவர்கள் இறந்திருந்தபோதிலும்கூட அவர்களுக்கு விருதுகள் வழங்குவதில் தவறேதுமில்லை என்பதே என் கருத்தாகும். பாரத ரத்னா விருதுகள் கடந்தகாலங்களில் அவ்வாறு சிலர் இறந்தபின்னரும் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்றன. இதற்கு இரு எடுத்துக்காட்டுகள்: சர்தார் பட்டேலும் டாக்டர் அம்பேத்காரும் ஆவார்கள்.
கவிஞர் மிர்சா காலிப் நம் காலத்தைச் சேர்ந்த கவிஞர். ராமரைப் போன்று புராண புருஷர் அல்ல. அதேபோன்று கௌதம புத்தர் போன்று பழங்காலத்தவருமல்ல. நிலப்பிரபுத்துவ பாரம்பர்ய பழக்க வழக்கங்களினூடே அவர் வளர்க்கப் பட்டிருந்தபோதிலும், நவீனகால நாகரிகத்தின் அனுகூலங்களை உற்றுநோக்கி உள்வாங்கியிருந்ததன் மூலம் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்தவர்.

அவர் எழுதிய ஒரு கவிதையின் வரிகள்:

‘‘இமான் முஜே ரோக் ஹே, ஜோ கெஞ்சே ஹே முஜே குஃபர்
கபா மேரே பீச்சே ஹே, கலேசா மேரே ஆகே’’

‘கலேசா’ என்ற சொல்லிற்கு நேரடியான பொருள் தேவாலயம். ஆனால் இங்கே அவர் நவீன நாகரிகத்தைக் குறிப்பிடுகிறார். அதேபோன்று, ‘கபா’ என்றால் மெக்காவின் புனித இடத்தைக் குறிக்கிறது. ஆனால் இங்கே அவர் நிலப்பிரபுத்துவத்தைக் குறிப்பிடுகிறார். எனவே இக்கவிதையின் உண்மையான பொருள்:

‘‘மத நம்பிக்கை என்னைப் பின்னே இழுக்கிறது, ஆனால் கடவுள் இருக்கிறாரா என்கிற ஐயம் என்னை முன்னே தள்ளுகிறது,
நிலப்பிரபுத்துவம் என் பின்னே இருக்கிறது, நவீன நாகரிகமோ என் முன்னே இருக்கிறது’’
கலிப் இவ்வாறு நிலப்பிரபுத்துவத்தை நிராகரித்து, நவீனகால நாகரிகத்தை வரவேற்கிறார். எப்போது? 19ஆம் நூற்றாண்டின் மத்தியகால வாக்கில், இந்தியா நிலப்பிரபுத்துவத்தின் கீழ் முழுமையாக மூழ்கி இருந்த காலத்தில்.

உருது கவிதைகள் என்பவை இந்தியக் கலாச்சாரத்தின் பொக்கிஷத்திற்குள் ஒளிவீசும் ரத்தினக்கற்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. (இணையதளம் www.kgfindia.com-இல் காணப்படும் ‘உருது என்றால் என்ன’ என்கிற என் கட்டுரையைப் படித்துப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.) மாபெரும் மொழியான உருதுக்கு மிகப்பெருமளவில் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. 1947க்கு முன்னர், இந்தியாவில் உள்ள பெருவாரியான பகுதிகளில் படித்த வர்க்கத்தினரின் பொது மொழியாக உருது விளங்கியது. அவர்கள் இந்துக்களாகவோ, முஸ்லீம்களாகவோ, சீக்கியர்களாகவோ அல்லது கிறித்துவர்களாகவோ - எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆயினும், 1947க்குப் பின்னர் சில சுயநல சக்திகள் உருது ஓர் அந்நிய மொழி என்றும், அது முஸ்லீம்களுக்கு மட்டுமேயான மொழி என்றும் பொய்ப் பிரச்சாரத்தை உருவாக்கின.

மிர்சா காலிப் உருது மொழியின் உன்னதக் கவிஞர். நம் பல்வகைக் கலாச்சாரத்தின் சிறந்த பிரதிநிதி. அவர் ஒரு முஸ்லீமாக இருந்தபோதிலும், முழுமையான அளவில் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தவர். அவருக்கு இந்து நண்பர்கள் ஏராளமாக உண்டு. அவர் இறந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் நம் கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாததொரு பகுதியாக உருது இன்றும் விளங்குவதால் அவர் இன்றளவும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
2011 ஏப்ரல் மாதம் தில்லியில் நடைபெற்ற ஜாஷன்-இ-பஹார் முஷைரா என்னும் சிறப்புக் கூட்டத்தில்தான் கலிப் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கவேண்டும் என்கிற என் வேண்டுகோளை நான் முதலில் முன்வைத்தேன். என் வேண்டுகோள் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆதரிக்கப்பட்டது. அவர்களில் இன்றைய மக்களவை சபாநாயகர் மீரா குமார், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத், தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி முதலானோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். ஆயினும், ஒரு முன்னணி இதழ் என்னுடைய வேண்டுகோளை ‘வெறிபிடித்த உணர்ச்சி’(‘ளநவேiஅநவேயடளைஅ படிநே நெசளநசம’) என்று விவரித்திருந்தது.
சரத் சந்திரர் சட்டோபாத்யாயா

அதேபோன்று சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சரத் சந்திரர் சட்டோபாத்யாயா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தேன். சரத் சந்திரர் தன் கதைகளில் சாதிய முறை, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, மூடப் பழக்க வழக்கங்கள், (அவரது ஸ்ரீகாந்த், சேஷ் பிரஷ்னா, சரித்ரஹீன், தேவதாஸ், பிராமணனின் மகள், கிராமின் சமாஜ் கதைகளைப் பார்க்க) போன்று இன்றளவும் இந்தியாவைப் பீடித்துள்ள கொடிய சமூகக் கேடுகள் மீது மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடுத்திருந்தார்.

கல்கத்தா டவுன் ஹாலில் 1933இல் சரத் சந்திரரைக் கௌரவிக்கும் வண்ணம் நடைபெற்றதொரு கூட்டத்தில் சரத் சந்திரர் கூறியதாவது:
‘‘நான் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு நான் பலருக்குக் கடன்பட்டிருக்கிறேன். இவ்வாறு நான் கடன்பட்டிருப்பது எனக்கு முன் இத்துறையில் தடம் பதித்துள்ள முன்னோர்களுக்கு மட்டும் அல்ல. இந்த உலகத்தைச் சிருஷ்டித்து, அதற்குப் பிரதிபலனாக எதுவுமே பெறாத, தங்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லாத சாமானிய மக்களுக்கும், யாரும் கேட்பாரற்றுக் கண்ணீரும் கம்பலையுமாக இருந்து வரும் நலிவடைந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் நான் என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன். தங்கள் பிரச்சனைகளை எடுத்துக்கொள்ளும்படியும், தங்களுக்காக சமூகத்தில் குரல் கொடுக்கும்படியும் அவர்கள்தான் எனக்கு உத்வேகத்தை அளித்தார்கள். இம்மக்களுக்கு இழைக்கப்பட்ட சொல்லொண்ணாக் கொடுமைகளை நான் என் கண்ணாரக் கண்டிருக்கிறேன். ஒவ்வோராண்டும் வசந்தம் வருவது என்னவோ உண்மைதான். ஆனால் அதன் அழகை, புதிதாகப் பூக்கும் மலர்களின் இனிய நறுமணத்தைச் சுவாசித்திட, குயில்களின் பாடல்களைக் கேட்கக்கூடிய வாய்ப்பு ஒருசிலருக்குத்தான் கிடைக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் பார்க்க முடியாத வண்ணம் என் பார்வை சிறைப்படுத்தப்பட்டிருந்தது.’’

நாட்டு மக்களில் 80 விழுக்காட்டினர் கொடூரமான வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக சராசரியாக ஒவ்வொரு நாளும் 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் விசுவரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. சுகாதாரக் கவனிப்பின்மை, வீட்டுவசதியின்மை, கல்வியின்மை போன்று பிரச்சனைகள் பல்வேறு ரூபங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் சரத் சந்திரரின் இந்த உரையானது எழுத்தாளர்கள் பலரை இன்றளவும் ஈர்த்துக்கொண்டுதான் உள்ளது.

சுப்பிரமணிய பாரதியார்
அதேபோன்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், முழுமையான தேசியவாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய மாபெரும் தமிழ்க் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.

பெண்கள் விடுதலைக்கு ஆதரவாக பாரதி எழுதிய சக்திவாய்ந்த கவிதையை இங்கே தருகிறேன். நான் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சமயத்தில் ‘ஹின்சா விரோதாக் சங் (எதிர்) மிர்சாபூர் மோட்டி குரேஷ் ஜமாத் மற்றும் பலர்’ வழக்கில் 2008 மார்ச் 14 அன்று அளித்திட்ட தீர்ப்பில் இதனை நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

முப்பது கோடி முகமுடையா ளுயிர்
மொய்ம்புற வொன் றுடையாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்
சிந்தனை யொன்றுடை யாள்.

பாரதியின் மற்றொரு கவிதை:

கும்மியடி தமிழ் நாடு முழுதுங்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி.

ஏட்டையும் பெண்கள் தொழுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.

இந்தியாவில் எத்தனை பேர் கலிபையும், சரத் சந்திரரையும் சுப்பிரமணிய பாரதியையும் படித்திருக்கிறார்கள்? கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. நாம் எந்த அளவிற்குமிகவும் கீழ்த்தரமான கலாச்சார மட்டத்தில் சிக்கிக்கொண்டு உழன்று கொண்டிருக்கிறோம் என்பதனையே இது காட்டுகிறது. நாம் நம் உண்மையான வீரர்களை கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்கிறோம், மாறாக மேலெழுந்தவாரியானவர்களை உயர்த்திப் பிடிக்கிறோம். இந்தியாவில் இன்றைய தலைமுறை அநேகமாக முற்றிலும் பண்பாடிழந்து விட்டது என்று கூறுவதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர்கள் கவனம் எல்லாம் பணம், திரைப்பட நடிகர்கள்-நடிகைகள், கிரிக்கெட் மற்றும் மேலெழுந்தவாரியான விஷயங்கள் என்றாகிவிட்டன.
இன்றைய இந்தியா எந்தத் திசையில் செல்வதென்று தெரியாது தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நாட்டிற்கு நல்ல திசைவழியைக்காட்டி நாட்டு மக்களை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்பவர்களே இப்போது நமக்குத் தேவை. அத்தகையோருக்கு பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் உயிருடன்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் ஏதும் இல்லை. கிரிக்கெட் விளையாடுபவர்கள், திரைப்பட நடிகர்கள் போன்று எவ்வித சமூகப் பிரக்ஞையுமற்றவர்களுக்கு கொடுப்பது என்பது விருதினையே கேலிக்குரியதாக ஆக்கிவிடும்.

(மார்கண்டே கட்ஜூ,
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும்,
இந்திய பிரஸ் கவுன்சில் இன்னாள் தலைவருமாவார்.)
நன்றி: தி இந்து நாளிதழ், 21.12.11
தமிழில்: ச.வீரமணி 

கொண்டாட்டமென்றால் குடித்து விட்டு கூத்தடிப்பதுதானா?






புத்தாண்டு சபதம் எடுக்கும் பழக்கும் எனக்குக் கிடையாது.
ஆனால் இந்த வருஷம் எடுத்துள்ளேன். இனிமேல் 
முப்பத்தி ஒன்று டிசம்பர் இரவில் என்ன தலை போகிற
வேலை இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே வரப்
போவதில்லை.  


குடித்து விட்டு பைக் ஓட்டுவதும், கார் ஓட்டுவதும் 
புத்தாண்டின் முதல் நாளன்று மிகவும் அதிகமாகி
விட்டது. நேற்று ஒரு கார்காரன் கிட்டத்தட்ட 
மோதுவது போல வந்து கடைசி நிமிடத்தில் 
விலகிப் போனான். குடி போதை  இப்படியெல்லாம்
வேடிக்கை காட்ட தோன்றுகிறது போலும்!


நம் உயிரைப் பாதுகாக்க நாம் வீட்டில் இருப்பது
நல்லது.


குடித்து விட்டு கூத்தடிப்பதுதான் கொண்டாட்டம் 
என்பதை துவக்கியவனை  நடுத்தெருவில் 
கம்பத்தில் கட்டி சவுக்கால் அடிக்க வேண்டும்.
 

டைம் கேட்டால் சொல்லுங்கள் . இல்லையென்றால் சுடப்படுவீர்கள்



நேரம் என்ன என்ற கேள்விக்கு உடனே பதில் சொல்லாத
குற்றத்திற்காக ஒரு இந்திய மாணவன் லண்டன்  நகரில்
சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

டீ வாங்கித் தராததால் , குவார்ட்டரில் கட்டிங் தராததால்
கத்தியால் குத்து என்ற தினத்தந்தி செய்தி போல 
நடந்திருக்கிறது.

இந்த கொடுமையை செய்தவனை உலகின் தலை சிறந்த
ஸ்காட்லாந்து யார்ட் போலீசால் இன்னும் பிடிக்க முடியவில்லை.

இவ்வளவு  லட்சணமாக  தனது நாட்டின் சட்டம் ஒழுங்கை
வைத்துக் கொண்டு இங்கிலாந்து பிற நாடுகளில்
மூக்கை நுழைக்கிறது.

அந்த பகுதியே சரியில்லை என இப்போது சொல்கின்ற 
அரசு அப்பகுதியில் உள்ள குண்டர்களை கட்டுப் படுத்தி
இருக்கலாம்.

இங்கிலாந்து செல்பவர்கள் ஜாக்கிரதை!
டைம் கேட்டால் சொல்லுங்கள் .
இல்லையென்றால் சுடப்படுவீர்கள்