Monday, June 13, 2011

இவர்கள் மட்டுமா உங்களை மிரட்டுகின்றனர்? நாங்கள் கேணையர்களா?

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி  இன்று வீரமாக  முழங்கியுள்ளார். 
அண்ணா ஹசாரேவும்  பாபா ராம்தேவும்  மத்தியரசுக்கு கட்டளையிடுகின்றார்கள், இதனை  எப்படி  ஏற்பது என்று கேட்டுள்ளார். 
மிஸ்டர் பிரணாப் முகர்ஜி  இவர்கள்  மட்டுமா உங்களை மிரட்டுகின்றார்கள்! 


இவர்கள்  மட்டுமா உங்களுக்கு  கட்டளையிடுகின்றார்கள்? 


அணு சக்தி ஒப்பந்தத்தை  நிறைவேற்று  என்று  அமெரிக்கா  உங்களுக்கு
கட்டளையிடவில்லை? 


வங்கி, பென்ஷன், இன்சூரன்ஸ் துறைகளை  மேலும்  திறந்து விடு  என 
பன்னாட்டு நிதி நிறுவனங்கள் உங்களுக்கு கட்டளையிடவில்லை? 


பெட்ரோலியப்  பொருட்கள்  விலை நிர்ணயத்தில் தலையிடாதே என
எஸ்ஸார், ரிலையன்ஸ் நிறுவனங்கள்  உங்களுக்கு கட்டளையிடவில்லை? 


சில்லறை வணிகத்தில்  என்னை அனுமதி என வால்மார்ட் போன்ற 
பன்னாட்டு பகாசுர கம்பெனிகள் கட்டளையிடவில்லையா?


நான் சொல்வதை கேட்டால் கூட்டணி, இல்லையென்றால் நடையை கட்டு  என மம்தா கட்டளையிடவில்லையா? 


இத்தனைக்குப் பிறகும் நான் வீரன், சூரன் என்றால் நம்ப நாங்கள் 
கேணையர்களா?


இதையெல்லாம் மறைக்கிறீர்களா? அல்லது உங்களுக்கு மறதி  எனும்
வியாதியா? மருத்துவரிடம் செல்லுங்கள் பிரணாப் !   

Sunday, June 12, 2011

மத வெறியர்கள் படிக்கக் கூடாத ஒரு இரங்கற்பா!

 மறைந்த ஓவியக் கலைஞர்  எம்.ஃஎப்.ஹுசைனுக்கு  இந்து ராமின் அஞ்சலி. மத வெறியர்களுக்கு சவுக்கடியும் கூட.    நன்றி - தீக்கதிர் நாளிதழ்
       
கடந்த செவ்வாய்க்கிழமை மதிய நேரத்தில் லண்டனில் உள்ள மருத்துவமனைப் படுக்கையில் படுத்தவா றே, இந்தியாவின் தலைசிறந்த மிகவும் கொண் டாடப்பட்ட கலைஞரான எம். எப்.உசேன் தொலைபேசியில் அழைத்தார். துபாயில் இருந்தபோது “உணரமுடியாத மாரடைப்பு தாக்கியது” என்று மிகவும் மெலிதான குரலில் அவர் குறிப்பிட்டார். அது நடந்தபோது அதைக் கண்டுபிடிக்கவில்லை. நல்ல மருத்துவர்களையும், மருத்துவ வசதிகளையும் கொண்ட லண்டன் ராயல் பிராம்ப்டன் மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக சென்றபோது இது தெரிய வந்தது என்றார். எப்படி இருக்கிறீர் கள் என்று கேட்டபோது, வேறு எந்த சிக்கல்களும் இல்லை என்றார். கவனித்துக் கொள்ள வேறு யாராவது இருக்கிறார்களா என்றபோது, குடும்ப உறுப்பினர்கள் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அது இறுதி விடை கேட்டு பேசிய குரல் என்று எனது உள்ளுணர்வு கூறியது. ஆயிரக்கணக்கான பிறைகளைப் பார்த்தவர், இஸ்லாமிய நாட்காட்டிப்படி நூறாண்டுகளைக் கடந்தவர், கிரிகோரியன் நாட்காட்டிப்படியும் நூறு ஆண்டுகளைக் கடப்பதற்கு தகுதி உள்ளவர் என்று எனக்குத் தெரியும். ஒரு பலவீனமான மற்றும் எந்தவித உதவியும் இல்லாத நிலையில், சொந்த 
மண்ணிலிருந்து வெகு தூரத்தில் மருத்துவமனைப் படுக்கையில் படுத்திருக்கி
றோம் என்ற உணர்வோடு அவர் என்னை தொலைபேசியில் அழைத் திருக்கிறார் என்று தோன்றியது. அவரது நிறைவுக்காலத்தில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் கொண்ட குடும்பம் எப்படியோ சரியான 
நேரத்தில் வந்து சேர்ந்தது.

மதரீதியான வெறுப்புப் பிரச்சாரம், மிரட்டல்கள், காலித்தனங்கள் மற்றும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலைகளால் நாட்டைவிட்டே அவர் வெளியேற நிர்ப்பந்தம் ஏற்பட்ட 1996 ஆம் ஆண்டுக்கு எனது எண்ணங்கள் சென்றன. தான் மிகவும் நேசித்த இந்தியா தன்னைக் கைவிட்டு விட்டது என்று ஆழ்ந்தவருத்தத்துடன் அவர் இருந்தார். லண்டனிலிருந்தும், நியூயார்க்கிலிருந்தும் அவர் தொலைபேசியில் தொடர்ந்து பேசினார். “அந்நிய மண்ணில் இறந்துவிடாமல்”, இந்தியாவுக்குத் திரும்பி வந்துவிட வேண்டும் என்று அவர் கேட்டவண்ணம் இருந்தார். மகாராஷ்டிர மாநில அரசோடு பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஒரு நடுஇரவில் மாறு வேடத் தில் நாட்டிற்குத் திரும்ப அவர் அனு மதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஆல் பைன் தொப்பி மற்றும் இத்தாலிய காலணியை அணிந்திருந்தாலும் மும் பை விமான நிலையத்திலும் சரி, ஹீத் ரோ விமான நிலையத்திலும் தனது மாறுவேடம் பலனளிக்கவில்லை என் பதை அவர் உணர்ந்து கொண்டார். மும்பை தாஜ் ஓட்டலுக்கு அவரை உடனடியாக நாங்கள் அழைத்துச் சென்றோம்.

இந்தப் பாதுகாப்பற்ற காலகட்டத்தில் இந்தூர் மற்றும் பல இடங்களில் நடந்த நீதிமன்ற விசாரணைகளுக்கு அவரோடு நாங்களும் சென்றோம். மதவெறிக் கும்பல்களிடமிருந்து அவருக்கு நேர்ந்த கொடுமை மற்றும் பயங்கரத்தையும் நேரில் பார்த்தோம். வளர்ந்து வரும் இந்தியாவில், தனது எண்பதுகளில் இருந்த ஒரு மேதை சந்திக்க நேர்ந்த நிலையற்ற தன்மை மற்றும் அச்சம் படர்ந்த சூழல் ஆகியவற்றையும் பார்க்க நேர்ந்தது. ஆனால், ஒரு நகரம் தனக்குப் பாதுகாப்பாக இருப்பதாக அவர் நினைத்தால் அது சென்னைதான். தனது மகன் முஸ்தபாவோடும், எங்களோடும் அவர் தங்கியிருந்திருக்கிறார். குறைவான பொருட்களோடுதான் அவர் எப்போதுமே பயணம் செய்தார். அதனால் சில ஜோடி துணிகளையும், ஓவியம் வரைவதற்குத் தேவையான பொருட்களையும் எங்கள் வீடுகளில் வைத்திருந்தார்.

அவர் அமைதியாக நேரத்தைக் கழித்தார். ஓவியம் வரைந்தார். தனது திரைப்படத்திற்கான இசைக்காக பல இரவுகளை ஏ.ஆர்.ரகுமானுடன் கழித்தார். தனது கடைசிப்படத்தின் படச்சுருள்களோடு எப்போதும் வருவார். எங்கள் நண்பர்களுக்கு அதைத் திரையிட்டுக் காட்டினார். சில சமயங்களில் எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனை அவர் சந்தித்தார். அதிகாலை நேரங்களில் நீலம் மற்றும் பொன்னிறக் கிளியைப் பார்ப்பதும், அதை வரைவதுமாக தனது நேரத்தைக் கழித்தார்.

எனினும் அச்சுறுத்தல் மற்றும் சட்டரீதியான மிரட்டல்களோடு தான்  இந்தப் பத்தாண்டுகள் கழிந்தன. இறுதியாக 2006 ஆம் ஆண்டில் இந்தியாவை விட்டு வெளியேறி தனது வாழ்விடத்தை வேறு இடத்தில் அமைத்துக் கொண்டார். 2006 ஆம் ஆண்டு முதல், அவருக்கு எதிராக இந்துத்துவாவாதிகளின் வெறுப்புப் பிரச்சாரம் அதிகரித்ததால் துபாயிலும், கத்தாரிலும் அவர் வசித்து வந்தார். கோடைக்காலங்களில் லண்டனில் தனது நேரத்தைக் கழித்தார். தொந்தரவு மற்றும் மிரட்டல்கள் இருந்த இந்தியாவைத்தவிர அனைத்து இடங்களுக்கும் சுதந்திரமாக அவர் பயணம் செய்து வந்தார். இங்குள்ள நிர்வாகம் அவர் திரும்புவதை உறுதி செய்யும் அளவுக்கு உறுதியானதாகவும் இல்லை. சரியான வகையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டாலும், அது மிகவும் தாமதமானதாகவே இருந்தது. உசேனின் படைப்பாற்றல் சுதந்திரத்தையும், அமைதியான மன நிலையையும் பாதுகாப்பதில் முந்தைய பாஜக அரசை விட எந்தவிதத்திலும் உயர்ந்ததாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருக்கவில்லை.

எனக்கு நினைவிருக்கிறது. பிப்ரவரி 2010ல் நியூயார்க்கிலிருந்து தொலைபேசி மூலம் அழைத்து கத்தார் குடியுரிமையை ஒப்புக்கொண்டு விட்டதாகத் தெரிவித்தார். கத்தார் குடியுரிமையால் அங்கீகரிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது மற்றும் சொந்த நாட்டின் குடியுரிமையை விட வேண்டிய நிலை ஏற்பட்டது பற்றி ஆழ்ந்த வருத்தத்தில் அவர் இருந்தார். எழுபது ஆண்டுகளாக நேசத்துடனும் மதச்சார்பற்ற வகையிலும் தனது கலையைக் கொண்டாடி வந்த பிறந்த மண்ணிலிருந்து விலகி நிற்பது அவருக்கு வருத்தத்தைத் தந்தது. கத்தார் குடியுரிமைக்காக தான் விண்ணப்பிக்கவில்லை என்றும் அந்த அமீரகத்தின் அரசு குடும்பத்தின் வற்புறுத்தலால்தான் அது கிடைத்தது என்பதையும் அவர் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.

அவர் மறைந்த வியாழக்கிழமை அதிகாலை நேரம் வரையில் அன்றா டம் நாள் முழுவதும் வேலை செய்துள்ளார். ஆளுயர கண்ணாடி சிற்பங்களையும் பெரிய, பெரிய ஓவியங்களையும் உருவாக்கி வந்தார். அவரது கலைப்பணி இரண்டு முக்கிய மான அம்சங்களை உள்ளடக்கிய தாக இருந்தது. ஒன்று, இந்திய நாகரிக வரலாறு. மற்றொன்று அரபு நாகரி கமாகும். இரண்டாவது அம்சம், கத் தாரின் அரசர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மனைவி ஷேக் மோஸா பிந்த் நாசர் அல் மிஸ் நெத்தின் முயற்சியால் உருவானது. இந்தத்திட்டத்தில் உருவாகும் படைப் புகள் அனைத்தும் தோஹாவில்தனி யாக ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்படுவதாக இருந்தது.

வருத்தத்தோடு இருந்தாலும், இந்தியாவில் உள்ள எந்தவொரு நபர் மீதும் உசேன் கோபம் அடையவில்லை. லண்டன் மருத்துவமனையில் அமைதியாகவும் கவுரவத்துடனும் நிகழ்ந்துள்ள அவரது மறைவு, சுதந்திர இந்தியாவின் மதச்சார்பின்மை வரலாற்றில் மிகவும் வருந்தத்தக்க 
அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. எம்.எப்.உசேனை விட  இந்தியாவின் பன்முகத்தன்மை, பன்முக மதஉணர்வுகள் மற்றும்            மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கு உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் மதிப்பளிப்பவர் யாரையும் எனக்குத் தெரியாது. நவீனத்துவம், வளர்ச்சி மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய குறிக்கோள்கள் அவரது மூச்சோடு மூச்சாகக் கலந்திருந்தது. நாட்டின் நிர்வாகம் மற்றும் சட்டத்துறை பாதுகாப்பாக திரும்பி வருவதை உறுதிப்படுத்த முடியாதது உள்ளிட்டு அவர் நாட் டை விட்டு வெளியேற நேர்ந்த ஒட்டு மொத்த நிகழ்வுகள், சுதந்திரமான எண்ணங்கள் மற்றும் படைப்பாற் றல், மதச்சார்பற்ற நாடு ஆகியவை யெல்லாம் என்ன? என்ற கேள்விக ளைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

தனது அளப்பரிய அறிவு மற்றும் படைப்பாற்றலைப் பயன்படுத்தி நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் அற்புதங்களையும், அது பிரதிநிதித்துவப்படுத்தும் வரலாற்று நாகரிகத்தையும் படம் போட்டுக் கொண்டாடிய அதே நேரத்தில், சாதாரண நிலையிலிருந்து வந்த, நாட்டின் மகத்தான மகனுக்கு நாட்டு மக்கள் தங்கள் மரியாதையைச் செலுத்தட்டும்.



Saturday, June 11, 2011

தமிழகத்தில் தரிசு நிலம்? ஜெயலலிதாவிற்கு பதில்

தமிழகத்தில்  தரிசு நிலமே கிடையாது  என்று  ஜெயலலிதா சொன்னாதற்கு   மார்க்சிஸ்டுகள் ஏன்  மௌனமாக   உள்ளனர்  என்று 
ஒரு மூன்று நாட்களாக  சில தோழர்கள் பிய்த்து பிடுங்கிக் கொண்டு 
இருந்தார்கள்.  கூட்டணி வைத்ததால்  தயக்கமா  என்ற கேள்வியும் 
இணைந்தே  வந்தது. 


பதவிகளுக்காக  கொள்கைகளில்  சமரசம் செய்து கொள்பவர்கள் அல்ல
மார்க்சிஸ்டுகள்  என்பதை  இன்று  தீக்கதிரில்  வந்துள்ள தோழர் பெ.சண்முகம்  அவர்களின்  கட்டுரை  தெளிவாக்கும்.  நிலத்திற்கான 
போராட்டத்தை  முன்னேடுத்துச்   செல்வதற்கான  அடையாளமாகவும்
இக்கட்டுரையை  பார்க்க முடியும்.  
 



வசதிபடைத்தவர்களால் வளைக்கப்பட்டுள்ளது
-பெ. சண்முகம் 
“தமிழகத்தில் தரிசு நிலமே இல்லை. எல்லா தரிசு நிலமும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலும் எனது ஆட்சிக் காலத்திலும் பிரித்து வழங்கப்பட்டு விட்டன. முந்தைய அரசு 2006ல் இந்தத் திட்டத்தை அறிவித்த போதே தரிசு நிலங்கள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளேன்” என்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெய லலிதா கூறியுள்ளார். தமிழகத்தில் தரிசு நிலமே இல்லை என்று கூறுவது சரியல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

2004-05ம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போதே அரசு வெளி யிட்டுள்ள விபரப்படி தரிசு நிலத்தின் பரப் பளவு 23.96 லட்சம் ஹெக்டேர் (ஏறத்தாழ அறுபது லட்சம் ஏக்கர்). இதுவல்லாமல் சாகு படிக்கு ஏற்ற தரிசு நிலம் ஏறத்தாழ 10 லட்சம் ஏக்கர். இந்த நிலத்தில் சிறுபகுதியை சிறு, குறு விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ‘ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது குறித்து 2002-03ம் ஆண்டு நிதிநிலை அறிக் கையில் “தரிசு நிலங்களை விளைநிலங் களாக மாற்றுவதில் தனியார்துறை பங்கேற் பை ஊக்குவிக்கும் பொருட்டு, பெரும்பாலான தரிசு நிலங்களையும், தரம் குறைந்த நிலங் களையும் நீண்டகால அடிப்படையில் குத் தகைக்கு விட அரசு தயாராக உள்ளது” என கூறப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. கடும் எதிர்ப்பின் காரணமாக பிறகு அரசு பின்வாங்கியது.

தமிழகத்தில் எந்தவொரு ஆட்சிக் காலத் திலும் உச்சவரம்புச் சட்டத்தை பயன்படுத்தி மிச்ச நிலம் பெருமளவு விநியோகம் செய்யப் படவில்லை. 1961ம் ஆண்டு துவங்கி 31.3.2009 வரையிலான 50 ஆண்டு காலத்தில் உபரியாக அறிவிக்கப்பட்ட நிலம் 2,08,383 ஏக்கர். இதில் பயனாளிகளுக்கு ஒப்படை செய்யப்பட்ட நிலம் 1,90,073 ஏக்கர். 1,50,491 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2001-2006ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட உபரி நிலம் 8,371 ஏக்கர் மட்டுமே. இது 6,439 பேருக்கு வழங்கப்பட் டுள்ளது.

எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை உச்சவரம்புச் சட்டத்தின் கீழும் நிலம் முழு மையாக கைப்பற்றப்பட்டு வழங்கப்பட வில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று வாக் குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு 50 லட்சம் ஏக்கர் அளவுக்கு தரிசு நிலம் இல்லை என்று சாதித்தனர். திமுக ஆட்சி யில் தரிசு நிலவிநியோகம் என்பது பெயரள வுக்கு ஏமாற்று நாடகமாகவே நடந்து முடிந்து விட்டது. பெரும்பகுதியான மக்கள் வேளாண் மையை சார்ந்துள்ள ஒரு மாநிலத்தில், கிராமப் புறங்களில் பெரும்பகுதியானவர்கள் நிலமற்ற வர்களாக உள்ள நிலையில், தரிசு நிலமே இல்லை என்று இப்போதும் கூறுவது, நில மற்ற ஏழை, எளிய மக்களின் நலனை பாது காக்க உதவாது என்பதை ஆழ்ந்த வருத்தத் துடன் குறிப்பிட வேண்டியுள்ளது.

நிலம் காணாமல் போய்விடக் கூடிய பொருளல்ல. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப் பான 130.3 லட்சம் ஹெக்டேருக்கான விபரங் களும் ஆவணங்களாக அரசு அலுவலகங் களில் தூசி படிந்து கிடக்கிறது. எனவே, தரிசு நிலங்கள் எங்கே மறைந்து கிடக்கிறது என் பதை கண்டறிவது அரசு நினைத்தால் ஒரு சில வாரத்தில் நடைமுறை சாத்தியமாகக் கூடியக் காரியமே! தரிசு நிலங்களை கண் டறிந்து நிலமற்ற ஏழைகளை நிலஉடமை யாளராக ஆக்க வேண்டுமென்ற உறுதி தான் இப்போது தேவை.

தரிசு நிலங்கள் வசதிபடைத்த மனிதர் களால், அரசியல் செல்வாக்குள்ளவர்களால் வளைத்துப் போடப்பட்டிருக்கிறது. இத்த கையவர்கள் சட்டத்தை வளைத்து மோசடி யாக பட்டா பெற்று அனுபவித்து வருகிறார்கள். உதாரணத்திற்கு காவேரிராஜபுரத்தில் அர சுக்கு சொந்தமான தரிசு நிலம் 193.93 ஏக்கர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி. தினகரனால் ஆக்கிரமிக்கப்பட்டு வேலி போடப்பட்டிருக்கிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவரே அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார். இது போல, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம், விருதுநகர் என ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு நிலம் செல்வாக்கு படைத்த நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு தரிசு நிலங்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கென்று ஒரு சிறப்புக் குழுவை நியமித்து ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தரிசு நிலங்களை கண்டறிய அரசு முன்வரவேண் டும். கிராம வாரியாக தரிசு நிலம் குறித்த சர்வே எண், அது யாருடைய ஆக்கிரமிப்பில் இருக்கிறதென்ற விபரத்தை அறிய மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் அரசு முயற்சிக்க வேண்டும். நிலம் என்பது விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் வாழ்வா தாரம். அவர்கள் நிம்மதியாக வாழ அதுவே ஆதாரம். முந்தைய அரசு அறிவித்த திட்டங் களை அரைகுறையாகவும், மோசடியாகவும் நிறைவேற்றியதால்தான் தி.மு.கவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே அதிமுகவுக்கு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ள னர். ஏழைகளின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றும் வகையில் புதிய அரசின் செயல் பாடு அமைய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

கட்டுரையாளர்,

தமிழ்நாடு விவசாயிகள்

சங்கத்தின் பொதுச்செயலாளர்

சுடிதார் அணிந்து வந்த தேவனே ! ஊழல் சுத்தமாகுமா உண்ணா விரதத்தால்!! அட ராமா, தேவா





உடல்  சுத்தமாகும்
குடல் சுத்தமாகும்
ஊழல்  சுத்தமாகுமா
உண்ணா விரதத்தால்!!
அட ராமா, தேவா
                                                  ஆயிரம் விளக்குகள், 
                                                  மின் விசிறிகள், ஏசி மிஷின்கள், 
                                                  மெத்தைகள், திண்டுகள், 
                                                                 கறுப்புப் பணத்தை 
                                                                 இழுத்து வர 
                                                                 வெள்ளைக்கு ஆன செலவு
                                                                 பல கோடிகள் . . . 
                                                                          சூடு பிடித்தது
                                                                          உண்ணாவிரதம்,
                                                                          உணவை  தொடாதவர்
                                                                                  சுரிதாரை கையிடுக்கில்  வைத்தார்                                                                                    எதற்கும்  தேவைப்படும்
                                                                                  காவல்துறைக்கு 
                                                                                  கடுக்காய் கொடுக்க . . .
                                                 
  

கவிதை : மதுரை பாரதி

Friday, June 10, 2011

வெட்கத்தில் தலை குனிவோம்






இந்தியாவின்  மிகச்சிறந்த  ஓவியக் கலைஞன்  என்று  உலக நாடுகளால்
போற்றப்பட்ட  எம்.எப். ஹுசைன்  மறைந்து விட்டார். இந்தியாவின் 
பிக்காசோ  என்று  அழைக்கப்பட்ட  அந்த மனிதர்  இங்கிலாந்தில் மறைந்தார். இங்கிலாந்திலேயே  புதைக்கப்படவுள்ளார். 


பத்மஸ்ரீ  தொடங்கி  பதமவிபூஷன்  வரை  உயரிய  விருதுகளை அளித்து
அலங்கரித்த  அரசு, ஐந்தாண்டுகள்  மாநிலங்களவையில்  கூட 
அமரவைத்தது.  ஆனால்  இறந்த பின்பு ஆறடி நிலம் கூட    அவருக்கு 
இந்தியாவில்  கிடைக்கவில்லை. 

இந்தியா  ஒரு மதச்சார்பற்ற  நாடாக  இருக்கக்கூடாது   என்று  சங்
பரிவார அமைப்புக்கள்  விரும்புகிறார்கள்,  அவர்கள்  மத நல்லிணக்கத்தை  சீர் குலைக்க முயற்சிக்கிறார்கள்  என்பதற்கான 
ஒரே  உதாரணம் அவர்கள்  ஹுசைனை  இந்தியாவை விட்டே 
துரத்தியதுதான். 


இந்து கடவுளை  அவர் அவமானப்படுத்தினார்  என்று  வேகமாக 
குற்றம் சுமத்துபவர்கள்   அமிதாப் பச்சன்  கூறியுள்ள  இரங்கல் செய்தியை
பாருங்கள். 

" நான்  விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியபோது  ஹுசைன் 
தனக்கு  அனுமார்  படம்  வரைந்து  அளித்தார், அது  தனக்கு  மிகவும்
சக்தி அளித்தது  '  

கலைஞனை  மதிக்காத ,  சொந்த  மண்ணில்  இறக்க அனுமதிக்காத ,
புதைக்காத  தேசத்தில்  வாழ்கிறோம் என்பது  கொஞ்சம் தர்ம சங்கடமாக 
உள்ளது. வருத்தத்தில்  மட்டுமல்லாமல்  வெட்கத்திலும்  தலை குனிவோம்.

  

Thursday, June 9, 2011

எனக்கு சம்பளம் வேண்டாம் - ஜப்பானில் ஜெயலலிதா







ஃபுகூஷியாமா  அணு ஆலை  விபத்தின் பிரச்சினைகள் தீரும் வரை பிரதமர் பதவிக்கான சம்பளம் வாங்கப்போவதில்லை  என்று  ஜப்பான் பிரதமர் நவோடா கான் சொல்லியுள்ளார்.  என்ன ஒரு பொறுப்பான பிரதமர் என்று ஜப்பான் ஊடகங்கள் மட்டுமல்ல இந்திய மக்கள்  கூட  சிலர் பாராட்டியுள்ளனர்.  


இச்செய்தி  தனது  முதல் ஆட்சிக்காலத்தில்  ஒரு ரூபாய்  மட்டுமே சம்பளமாக  ஜெயலலிதா வாங்கியதையும்  அந்த ஆட்சிக்காலம் ஊழல் 
மிகுந்ததாய்  நினைவு படுத்தியது.


இந்த பிரச்சினையிலும் கூட இப்போது பொறுப்பானவர்  என்று சொல்லப் படும்  ஜப்பானின் பிரதமர் சுனாமி வந்த போது , அணு உலை விபத்து
என்று வந்த போது  எவ்வளவு  பொறுப்பாக  நடந்து கொண்டார்  என்பதுதான்  இப்போது  கேள்வியே. 


கடல் நீரை  உடனடியாக பயன்படுத்தியிருந்தால் அணு உலையின் வெப்பம்  அதிகரித்து  உலைகள்  வெடித்திருக்காது. ஆனால்  அப்படி 
செய்ய  அணு ஆலையின் தனியார் நிர்வாகம்  முன் வரவில்லை. 
டோக்யோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி  என்ற அந்த  தனியார் நிறுவனம்
தனது ஆலைக்கு  பாதிப்பு வரக்கூடாது  என்றுதான் பார்த்ததே  தவிர
கதிர் வீச்சு நிகழ்ந்தால்  அது  நிகழ்ந்தால் யாருக்கோதான்  பாதிப்பு 
என்று  இருந்தது. 

 
டெப்கோ  என்று அழைக்கப்படும் நிறுவனத்தை  எதுவும்  செய்ய முடியாமல்,  உத்தரவு போட முடியாமல்  கையாலாகாத நிலையில்  
இருந்த ஜப்பான் பிரதமர்  இன்று  பொறுப்போடு  இருப்பதாக 
சொன்னால்  சிரிப்புதான் வருகின்றது. 

மொத்தத்தில்  எல்லா நாடுகளிலும்  தில்லாலங்கடிகள்  இருக்கிறார்கள்!
  
  
  

 
 

Wednesday, June 8, 2011

நீங்கள் போன் பேசுகின்றீர்களா? ஒன மினிட் ப்ளீஸ்!

கீழே  உள்ள படத்தை , விளம்பரத்தை  நன்றாக  கவனியுங்கள்.

 அது சொல்லும் செய்தி என்ன? 

நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசி சேவையால் யாருக்கு பயன்? 
ஐடியா பிர்லாவை பணக்காரனாக்கும்,

ரிலையன்ஸ்  உபயோகிப்பாளர்  அம்பானியை மகிழ்ச்சியாக்குகிறார்,
ஏர்டெல் லில் பேசினால்  மிட்டலுக்கு  தெம்பு,

டோகோமா வில் பேசுவது  டாடாவை  வளமாக்கும்.

ஆனால்  ஒரு பி.எஸ்.என்.எல்  வாடிக்கையாளர்  மட்டுமே  தேசத்திற்கு
செல்வத்தை  தேடித்தருகின்றார். 
ஆகவே பி.எஸ்.என்.எல்  சேவையை பயன்படுத்துங்கள். . .
இந்த விளம்பரத்தை  அளித்துள்ளது  பி.எஸ்.என்.எல்  நிர்வாகம் அல்ல.
பி.எஸ்.என்.எல். ஊழியர்  சங்கம்.  

இடது சாரி தொழிற்சங்கங்களை  எப்போதும் திட்டிக் கொண்டிருப்பவர்களே,  இப்போது புரிந்து கொள்ளுங்கள்,
தாங்கள் பணியாற்றும்  நிறுவனங்களுக்கு  பாதுகாப்பாக,
காவல் அரணாக  இருப்பது  தொழிற்சங்கங்கள்தான். 

அதுவும்  இடதுசாரி தொழிற்சங்கங்கள் மட்டும்தான்.

இந்த விளம்பரம்  பொதுத்துறை நிறுவனங்களை  சீரழித்த, நாசமாக்கிய,
சிதைத்து வருகின்ற  காங்கிரஸ், பாஜக விற்கு சமர்ப்பணம்