Sunday, December 21, 2025

என்னடா இது கந்தன்மலைக்கு வந்த சோதனை?

 


ஐகோர்ட் எச்.ராசா கதாநாயகனாக நடிக்க கந்தன்மலை என்றொரு படத்தை தயாரித்துள்ளார்கள். 

பாவம் அது விலை போகவில்லை போல.

அதனால் ஒரு யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளார்கள். 



மொக்கைப் படங்களைக் கூட பார்க்கும் சினிமா வெறியர்கள் கூட ராசா நடித்த படத்தை பார்க்க துணிய மாட்டார்கள்.

பாவம் அந்த தயாரிப்பாளர்கள்!

"காக்கா பிரியாணி துன்னா உண்ணிகிருஷ்ணன் குரலா வரும்" என்பது போல  கந்தன்மலை என்ற பெயரில் ராசா நடித்தால் மத வெறி பிரச்சாரம் இல்லாமல் வேறென்ன படத்தில் இருக்கப் போகிறது!

அதற்கு சென்சார் அனுமதி கிடைத்ததா?

எனக்கு இன்னொரு அச்சமும் இருக்கிறது.

காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா டைரி போன்ற மத வெறி குப்பைகள் போல மோடி அரசு இந்த படத்திற்கும் தேசிய விருது கொடுத்து விடுமோ என்பதுதான் அந்த அச்சம். 


Saturday, December 20, 2025

இது இன்னொரு விருது சர்ச்சை

 


சாகித்ய அகாடமி விருது சர்ச்சை நடப்பில் இருக்கும் போதே அடுத்த விருது சர்ச்சை வந்து விட்டது.

மியூசிக் அகாடமி இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருது வயலின் இசைக் கலைஞர் ஸ்ரீராம்குமார் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு விருதளிக்கப்பட்டதில் எந்த சர்ச்சையும் வந்ததாக நான் படிக்கவில்லை.

பின்?

விருது கொடுத்தவரை வைத்துதான் சர்ச்சையே!

யார் கொடுத்தது?

ஏ.ஆர்.ரஹ்மான்.

மியூசிக் அகாடமியின் அழைப்பிதழை முகநூலில் பார்த்த போதே சிக்கல் வரும் என்று எதிர்பார்த்தேன். அது போலவே நடந்து விட்டது.

மியூசிக் அகாடமி கம்மிகளின் கையில் போய் விட்டது, நாத்தீகர்கள் கையில் போய் விட்டது. ரஹ்மானுக்கு கர்னாடக இசை பற்றி தெரியுமா? கர்னாடக இசையின் அடிப்படை பக்தி. ரஹ்மானுக்கும் பக்திக்கும் என்ன தொடர்பு?

இதெல்லாம்தான் நான் பார்த்த கருத்துக்கள்.

முதல் கருத்து அபத்தம். மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி ஒன்றும் அவரது சகோதரர் என்.ராம் போல இடதுசாரி சித்தாந்தம் கொண்டவர் கிடையாது.  அதனால் முதல் இரண்டு கருத்துக்களும் அபத்தம்.

"கண்ணோடு காண்பதெல்லாம்" "சௌக்கியமா கண்ணே சௌக்கியமா" ஆகிய இரண்டு பாடல்கள் போதும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கர்னாடக இசை தெரியுமா இல்லையா என்று சொல்ல . . .

ஆஸ்கர் விருது மேடையில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று சொன்னவருக்கா இவர்கள் பக்தி பற்றி பாடம் எடுக்கிறார்கள்!

பிறகு உண்மையில் என்ன பிரச்சினை?

திருவையாறு தியாகராஜர் ஆராதனையின் போது கே.ஜே.யேசுதாஸ் பாட வருகையில் மக்கள் திரள்கையில் ஒரு கூட்டம் "கிறிஸ்துவன் பாடறதை கேட்க இப்படி போறாங்களே" என்று திட்டிக் கொண்டு வெளியேறும். இது நான் நேரடியாக பல வருடங்கள் பார்த்த அனுபவம். முன்பே இதனை எழுதியிருக்கிறேன்.

இப்போது புரிகிறதா?

பிரச்சினை ரஹ்மானின் கர்னாடக இசை ஞானமோ, பக்தியோ கிடையாது. 

அவரது மதம்தான் பிரச்சினை. 

பிகு 1 : கடந்த வருடம் விருது பெற்றமைக்காக கடுமையாக திட்டப்பட்ட டி.எம்.கிருஷ்ணாவிற்கு பல கச்சேரிகளில் பக்க வாத்தியமாக வயலின் வாசிப்பவர் ஸ்ரீராம்குமார்.

பிகு 2 : கடந்த வருடம் பிரச்சினையை முதலில் உருவாக்கிய ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் ஏதாவது சொல்லியுள்ளார்களா என்று அவர்களின் முக நூல் பக்கம் பார்த்தேன். ராமர் கோயிலில் காவிக் கொடி ஏற்றுகையில் பாட வாய்ப்பு கிடைத்தமைக்காக புளகாங்கிதமடைந்திருந்தார்கள். அவர்கள் டி.எம்.கிருஷ்ணாவை எதிர்ப்பது இயல்பானது, சங்கி இயல்பானது.

பிகு 3 : தோழர் தமிழ்ச்செல்வனுக்கு இன்னும் விருது அறிவிக்கப்படவே இல்லை. அதற்குள்ளாகவே வன்ம வாந்திகளை எடுக்கத் தொடங்கி விட்டனர். அவர்கள் ஆசானின் அல்லக்கைகளாகவே இருப்பது யதேச்சையானதாக தெரியவில்லை. 

Friday, December 19, 2025

உங்காளுங்களுக்கு உருப்படியா எழுத . . .

 


வழக்கமாக சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்புதான் சர்ச்சை வரும். இந்தாண்டு முன்பே வந்து விட்டது.

நேற்று மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி விருதுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் அது ரத்து செய்யப்பட்டதாக  பின்பு அறிவிக்கிறார்கள்.

காரணம் என்ன என்பதை கீழே உள்ள தமுஎகச அறிக்கை சொல்லும்.

சாகித்ய அகாதமியின் சுயேட்சையான செயல்பாட்டில் ஒன்றிய அரசின் தலையீடு கண்டிக்கத்தக்கது.
- தமுஎகச மாநிலக்குழு
சாகித்ய அகாதமி நிறுவனத்தால் இந்தியாவில் உள்ள 24 மொழிகளின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய ஆளுமைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்குரிய விருதுப் பட்டியலை அந்தந்த மொழியைச் சேர்ந்த சாகித்ய அகாதமி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சுயேட்சையான குழு தேர்வு செய்து வெளியிடும்.
இந்த ஆண்டும் அதே போல் 24 மொழிகளின் குழுக்களும் தங்கள் தேர்வுப் பட்டியலை தயார் செய்துவிட்டன. அதன் அடிப்படையில் நேற்று 18.12.2025 மாலை 3 மணிக்கு டெல்லியில் நடைபெற இருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விருது அறிவிப்பு வெளியாகும் என்று இருந்தது. நாடு முழுக்க உள்ள இலக்கிய ஆர்வாளர்கள் சாகித்ய அகாதமி விருதுப் பட்டியலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்தச் சூழலில் திடீரென்று அந்தச் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சாகித்ய அகாதமி குழுக்களின் தேர்வுகளில் ஒன்றிய அரசின் அமைச்சகம் தலையீடு உள்ளதாக செய்திகள் வருகின்றன. இது சாகித்ய அகாதமி எனும் நிறுவனத்தின் சுயேட்சையான செயல்பாட்டை முடக்கும் செயலாகும். இது போன்ற நேரத்தில் சாகித்ய அகாதமி நிறுவனம் தனது தன்னாட்சி அதிகாரத்தை காத்திட உறுதியோடு செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இந்தியாவில் உள்ள எல்லா நிறுவனங்களையும் கைப்பற்றும் அரசியல் வேலையை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அதைப்போல சாகித்ய அகாதமி நிறுவனத்தின் சுயேட்சையான செயல்பாட்டை முடக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் செயலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டிக்கிறது. அனைத்து மொழிகளின் குழுக்களும் தேர்வு செய்த விருத்தாளர்களின் பட்டியலை எந்தத் திருத்தமும் இல்லாமல் வெளியிடும் அதே முறையை இந்த ஆண்டும், இனி வரும் ஆண்டுகளிலும் கடைபிடிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தமுஎகச கேட்டுக் கொள்கிறது.
*மதுக்கூர் இராமலிங்கம்*
தலைவர்
*களப்பிரன்*
பொதுச்செயலாளர்

தமுஎகச அறிக்கையில் குறிப்பிடாத முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. இந்த ஆண்டு தமிழுக்காக தமுஎகச வின் முக்கியமான தலைவரும் மிகச் சிறந்த எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய "தமிழ்ச் சிறுகதைகளின் தடம்" நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதுதான் அந்த செய்தி.

இறுதிப்பட்டியலில் மோடியின் அல்லக்கை மாலனின் பெயரும் இருந்த போதும் ஒரு இடதுசாரி எழுத்தாளருக்கு விருது கொடுப்பதா என்பதுதான் ஒன்றிய அரசின் கடுப்பிற்கு காரணம்.

இடதுசாரிகளே விருதுகளை பெறுகிறார்கள் என்று ஆஜான் போன்ற சங்கிகள் மத்தியில் ஒரு பொறாமை எப்போதும் உண்டு.

அவர்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.

சங்கிகளும் உருப்படியாக எதையாவது எழுத வேண்டியதுதானே! தந்தை பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரையும் அசிங்கப்படுத்துவதற்கு என்றே சோ.அதர்மன் எழுதிய "சூல்" நாவலுக்குத்தான் விருது கிடைத்ததே, அது போன்ற குப்பையைக் கூட உங்கள் ஆட்களால் எழுத முடியாத போது சிறந்த எழுத்தாளர்கள் உரிய அங்கீகாரம் பெறுவதை சகிக்க முடியாத மோடி வகையறாக்கள் எல்லாம் ஆட்சி நடத்தவே அருகதையற்றவர்கள்.

விஜய் என்ன பழைய ஸ்கூல் பையனா?

 


நேற்றைய விஜய் கூட்டத்தின் ஈரோடு கூட்டத்தின் காணொளியை நேற்று  பகிர்ந்து கொண்டிருந்தேன். அதை மறுபடியும் ஒரு முறை பார்த்த போது ஒரு விஷயம் கண்ணில் பட்டது.

அது



நான் கூட முதலில் மோடி போல டெலிப்ராம்ப்டர் பயன்படுத்துகின்றார் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது. ஒரு அட்டையில் க்ளிப் போட்டு பேசுவதற்கான ஸ்க்ரிப்டை வைத்துள்ளார் என்று. 

ஏன் விஜய், இப்போ தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. அழகழகான, நவீன க்ளிப்புகள் வந்து விட்டது. அதையெல்லாம் விட்டுவிட்டு அந்த காலத்தில் நாங்கள் பள்ளியில் படிக்கும் போது பயன்படுத்திய ஆதி காலத்து க்ளிப்பை பயன்படுத்துகிறீர்களே?

உங்கள் வசதிக்கு மோடி போல நீங்களும் டெலி ப்ராம்ப்டரையே பயன்படுத்தலாம்.

ஒரே ஒரு பிரச்சினைதான்.

என்ன அது?

மேலே உள்ள படத்தை பார்க்கவும். . . .

Thursday, December 18, 2025

கிறுக்கர்கள் சூழ் தவெக . . .

 


ஒரு குறுகிய காலத்திலேயே விஜய் ரசிகர்கள், தற்குறிகள் என்று பெயர் வாங்கி விட்டார்கள். அப்படி சொல்வதால் அவர்களுக்கு கோபம். ஆனால் அது சரிதான் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கீழே உள்ள காணொளியை பாருங்கள்.



கிறுக்கத்தனமாக ஏதாவது செய்தால் விஜயின் முத்தம் கிடைக்கும் என்று ஈரோட்டுக் கூட்டத்தில் விஜய் காண்பித்துள்ளார்.

இனி வரும் கூட்டங்களில் தவெக தற்குறிகள் என்னவெல்லாம் கிறுக்குத்தனங்கள் செய்வார்களோ!

கரூர் போல நடக்காமல் இருந்தால் சரி. . .

அதிசயமாய் ஒரு நல்ல போலீஸ் . . .

 


நேற்று ஓய்வூதியர் தினம். வேலூரில் மத்திய, மாநில, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒரு சிறப்பான கூட்டம் நடந்தது. 

அக்கருத்தரங்கில் பள்ளி, கல்லூரி ஆசிரியர் ஓய்வூதியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.பர்வதராஜன் சிறப்புரையாற்ற வந்திருந்தார்.

அவர் சொன்ன ஒரு தகவல் சுவாரஸ்யமாக இருந்தது. ஆச்சர்யமாகவும் இருந்தது.

"மத்தியரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று பல்வேறு இயக்கங்கள் நடந்து கொண்டிருந்தது. இயக்கங்களின் நிறைவாக சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மிகவும் கடுமையானவர் என்று பெயர் பெற்ற பி.சி.அலெக்ஸாண்டர் ஆளுனர். 500 பேருக்கு மேல் சென்னைக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று அறிவித்தார். அன்றைய போலீஸ் கமிஷனர் துரை கையில் துப்பாக்கியோடு சுற்றிக் கொண்டிருந்தார். தாக்குதல் நடத்த குதிரைப்படை போலீஸ் தயாராக இருந்தது.

முற்றுகையில் கலந்து கொள்ள நாங்கள் வேனில் சென்னை சென்று கொண்டிருந்தோம். விருதுநகரில் எங்களை ஒரு போலீஸ் அதிகாரி மறித்தார். உங்களையெல்லாம் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் எங்களுக்கு உத்தரவு. 

நியாயமான கோரிக்கைக்காக செல்லும் உங்களை திருப்பி அனுப்ப எனக்கு மனமில்லை. நான் அனுமதித்தாலும் வழியில் வேறு யாராவது மடக்கி விடுவார்கள். நீங்கள் சென்னை செல்ல ஒரு வழி இருக்கிறது.

சென்னை மெரினா பீச்சில் மெல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களின் மாநாடு நடக்கிறது. நீங்கள் இந்த ஜாக்டீ (அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு)  பேனர்களை எடுத்து விட்டு வேனில் "ஓம் சக்தி, பராசக்தி" என்று எழுதி விட்டு செல்லுங்கள் என்று சொன்னார்."

தோழர் பர்வதராஜன் இதை சொன்ன போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது.

தொழிலாளி வர்க்கம் எந்த போராட்டம் நடத்தினாலும் அதன் கோரிக்கைகள் எவ்வளவு நியாயமாக இருந்தாலும் அந்த போராட்டம் வெற்றி பெற்றால் அதன் பலன் அவர்களுக்கும் கிடைக்கும் என்றாலும் போராடும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்வதுதான் இன்றைய வாடிக்கையாக இருக்கையில் 

ஒரு காவல்துறை அதிகாரி போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டது அதிசயமாகவே எனக்கு தோன்றியது.

என்ன சரிதானே!



Wednesday, December 17, 2025

கேவலமான பின்னூட்டத்திற்கு சூடான பதில்

 


சங்கிகள் ராஜஸ்தானில் நிகழ்த்திய வந்தேமாதர காமெடி பற்றிய பதிவில் ஒரு அனாமதேயம் "அவங்க முட்டாப்பசங்க" என்று பின்னூட்டமிட அதற்கு இன்னொரு பின்னூட்டம் ஆங்கிலத்தில் வந்தது. "உண்டியல் குலுக்கி கோஷ்டிகள் பற்றியும் தெலுங்கு தேவதாசி கோஷ்டி பற்றியும் என்ன சொல்கிறீர்கள்?" என்பதுதான் நான் பிரசுரிக்காத அந்த பின்னூட்டம்.

நாங்கள் உண்டியல் குலுக்கிகள் என்ற பட்டத்திற்காக என்றைக்கும் கவலைப்பட்டதில்லை. மக்களுக்காக போராடுகின்ற கம்யூனிஸ்டுகள் மக்களிடம் நேரடியாக உண்டியல் குலுக்கி நிதி திரட்டுகிறோம். இது வெளிப்படையானது. 

பாஜக போல அமலாக்கப் பிரிவை அனுப்பி விட்டு பின்பு அந்த முதலாளிகளிடம் பணத்தை பறிக்கும் கொள்ளைக்காரக் கட்சி அல்ல கம்யூனிஸ்டுகள். அடுத்து திமுக கொடுத்த பத்து கோடி என்று ஒரு அனாமதேய கோஷ்டி வரும். அது நன் கொடை. முறையாக கணக்குகளில் பதிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்ட பணம்.  உண்டியலை நாங்கள் மட்டுமா பயன்படுத்துகிறோம்? யாரெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்று பட்டியல் போட்டால் "மனம் புண்பட்டு விட்டது " என்று புலம்பும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த பிரச்சினைக்கு வருகிறேன்.

கலைஞர் குடும்பத்தை இழிவு படுத்த சங்கிகளும் அதிமுகவினரும் ட்ம்ப்ளர்களும் இப்போது தவெக தற்குறிகளும் பயன்படுத்துகின்ற அவதூறு.

திருவாரூர் மாவட்டம் திருக்குவளையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவரை ஆந்திராவைச் சேர்ந்தவர் என்று கட்டமைத்து அந்த பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் பரப்பி அவர்களே  உண்மை என்று நம்பத் தொடங்கி விட்டார்கள். கலைஞரின் அரசியல் செயல்பாடுகள் குறித்து எனக்கும ஏற்கக் கூடிய அதே நேரம் நிராகரிக்க வேண்டியது என்று இரண்டும் உண்டு. ஆனால் அவருடைய தமிழ் உணர்வையோ தமிழுக்கான பணிகளையோ யாராலும் நிராகரிக்க முடியாது. அவரது தமிழறிவின் நிழல் அளவு  கூட எம்.ஜி.ஆரை சொல்ல முடியாது என்ற கையாலாகத தனம், இந்த பிரச்சாரத்தின் பின்னணியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அவரது பூர்வீகத்தை ஆராய்வது போல ஒவ்வொருவருடைய பூர்வீகத்தை ஆய்வு செய்தால் அது ஆப்கானிஸ்தானத்தை தாண்டிச் செல்லுமல்லவா! நம் எல்லோரின் பூர்வீகமுமே ஆப்பிரிக்க மூதாய்தானே!

தேவதாசி முறை என்பது இந்திய சமூகத்தின் இழிவு. மன்னராட்சிக் காலத்தின் திமிர். ஆதிக்க சக்திகளின் வெறிக்கு சில குறிப்பிட்ட சமூகங்களை பலியாக்கிய கொடுமை. 

தேவதாசி முறை தடைச்சட்டத்தை சட்டமன்றத்தில்  காமராஜரின் குரு சத்தியமூர்த்தி எதிர்க்கிறார். தந்தை பெரியாரின் ஆலோசனைப்படி  டாக்டர் முத்துலட்சுமி "இம்முறை புனிதமானது, புண்ணியம் அளிப்பது என்றால் இனிமேல் உங்கள் குடும்பப் பெண்களை பயன்படுத்துங்கள்" என்று பதிலளிக்க அவர் வாயடைத்துப் போனார்.

அந்த சமூக இழிவை ஒரு குடும்பத்தை இழிவு படுத்த பயன்படுத்துவது என்பது கேவலமான சிந்தனை. அழுகிப்போன ஜாதிய மேட்டிமை புத்தி. ஆணாதிக்க திமிர்.

அந்த அனாமதயேத்திற்கு முடிவாக ஒன்றை சொல்கிறேன்.

நான் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டேன் என்று உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, மகள், பெண் நண்பர்கள் ஆகியோரிடம் சொல்லவும். 

உனக்கு அவர்களிடமிருந்து செருப்படி நிச்சயம். . .

பிகு" கடைசி இரண்டு பத்திகள் அந்த ஆங்கில அனாமதேயத்திற்கு மட்டுமல்ல, அதே போல அவதூறு பரப்பும் அனைத்து ஜந்துக்களுக்கும் பொருந்தும். 



Tuesday, December 16, 2025

சங்கிகளின் வந்தே மாதர காமெடி - DON'T MISS

 


மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்காக 'வந்தே மாதரம்" பாடலின் 150 ஆவது ஆண்டு என்றொரு நாடகத்தை மோடி வகையறாக்கள் நடத்தினார்கள்.

நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியோடு நிறுத்திக் கொள்ளாமல் மாநிலங்களிலும் நடத்தியுள்ளார்கள்.

அப்படி ராஜஸ்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 150 ஆண்டுகளுக்கு முன்பாக பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய பாடலுக்கு பதிலாக எந்த பாடலை ஒலிபரப்பியுள்ளார்கள் என்பதை கீழே உள்ள காணொளியில் பார்த்து மகிழ்ந்து சிரியுங்கள். அந்த மாநில முதல்வர் வேறு அங்கே இருந்துள்ளார்.



தங்கள் கட்சித்தலைவர் அமித் ஷாவின் புகைப்படத்திற்கு பதிலாக இயக்குனர் சந்தான பாரதி, அம்மன் பட வில்லன் ஜண்டா ஆகியோரின் படங்களை போட்டு சுவரொட்டி அடித்த கும்பல்தானே!

மகாத்மா பெயரைச் சொல்ல வெட்கமா மோடி



 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) என்று மோடி அரசு மாற்றியுள்ளது.

மகாத்மா காந்தியை கொன்றவர்கள்  அவரது கொள்கைகளையும் கொன்று விட்டார்கள். அதனால் அந்த கொலைகாரர்களுக்கு ஒரு திட்டத்தின் பெயரில் கூட மகாத்மா காந்தியின் பெயர் இருப்பது வெட்கமாக உள்ளது போல.

அதனால் திட்டத்தின் பெயரை Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)  என்று மாற்றி விட்டார்கள். எந்த எழவாவது புரிகிறதா?

நேருவை இன்றளவும் வசை பாடுகிறார்கள். நேரு அளவிற்கு மகாத்மா காந்தியையும் வசை பாடினால் அசிங்கமாக போய் விடும். அதனால் பெயரை தூக்கி விட்டார்கள்.

இன்னும் மிச்சம் இருப்பது ரூபாய் நோட்டுக்கள் மட்டும்தான். 

அதில் என்றைக்கு கோழை சாவர்க்கர்/கோட்சே வகையறாக்களின் படத்தை போடப் போகிறார்களோ? 

Monday, December 15, 2025

தகுதியற்றவர்களின் ஆட்சியின் மரணங்கள்

 


போன மாதம் சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்த ரயில் விபத்து நினைவில் உள்ளதல்லவா!

பதினைந்து பேரை காவு வாங்கிய அந்த விபத்து குறித்து ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பிரிஜேஷ் குமார் மிஷ்ரா கொடுத்த அறிக்கையின் விபரங்கள் என்ன சொல்கிறது தெரியுமா?

அந்த ரயிலின் இஞ்சின் ட்ரைவர் அந்த ரக ரயில்களை ஓட்டுவதற்காக நடத்தப்படும் தேர்வில் தோற்றுப் போனவராம். அதே போல அந்த ரயிலின் கார்டும் அந்த பதவிக்கான தகுதி வரம்பை எட்டாதவராம். உதவி இஞ்சின் ட்ரைவரும் சிவப்பு சிக்னலை பார்த்தும் வண்டியை நிறுத்த முயற்சிக்கவில்லை.

தகுதித் தேர்வில் தோற்றுப் போன பலரும் பல ரயில்வே கோட்டங்களில் ரயில்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த அறிக்கை அளிக்கும் இன்னொரு செய்தி.

உண்மையில் சொல்ல வேண்டுமானால்

ரயில்களை இயக்கியவர்கள் தகுதியற்றவர்கள் அல்ல.

பயணிகள் நலன் பற்றி கவலைப்படாத, ஆட்சி நடத்த தகுதியற்ற மோடி அரசுதான் பயணிகளின் மரணத்துக்கான உண்மையான காரணம். 

அந்த வக்கீல்கள் அனாமதேயங்களா?

 


நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி பார்த்தேன். 

தி.குன்றம் தீர்ப்பாளரை பதவி நீக்கம் செய்தால் ஒட்டு மொத்த நீதித்துறையே நிலை குலைந்து போய்விடும் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய அளித்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் உள்ள வக்கீல்கள் மக்களவை தலைவருக்கு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளார்களாம்.



சரி, இதை அனுப்பியவர்கள் யார் என்று பார்த்தால் இந்த செய்தியில் யாருடைய பெயரும் இல்லை. எந்த வழக்கறிஞர் அமைப்பின் பெயரும் இல்லை. ஜாதி, மத அமைப்புக்களின் பெயர் கூட இல்லை. இந்த மனுவில் எத்தனை வக்கீல்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்ற விபரமமும் இல்லை. ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தீர்ப்புக்கள் வழங்கியுள்ளார் என்ற சங்கிகளின் கட்டுக்கதை மட்டும் மனுவில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் சங்கிகள் எப்படி அனாமதேயமாக, போலி ஐடிக்களில் பின்னூட்டம் போடுவார்களோ அது போல சபாநாயகருக்கு அனாமதேயமாக, மொட்டைக் கடிதம் அனுப்பி விட்டார்கள் போல. . .


Sunday, December 14, 2025

கேரளா - பின்னடைவும் முன்னேற்றமும்

 


கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அச்சத்தையும் கவலையையும் அதே நேரம் நம்பிக்கையையும் அளிக்கிறது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் அதிக இடங்களை (பெரும்பான்மை இடங்களை அல்ல, ஆனாலும் பாஜக வாஷிங் மெஷினில் கொலைக்குற்றத்திலிருந்து விடுபட்ட காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் உதவியுடன் சில கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி விடுவார்கள்) பெற்றுள்ளது அச்சத்தை அளிக்கிறது ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் கேடு கெட்ட சூட்சுமத்தை அறிந்த சங்கிகள் ஒட்டு மொத்த கேரளத்திலிருந்தும் இடதுசாரிகளை வீழ்த்தி விட்டோம் என்று பிரச்சாரம் செய்வார்கள் என்பதுதான் அச்சம்.

இடது முன்னணிக்கு பின்னடைவா?

ஆம். பின்னடைவுதான். ஏற்கனவே பொறுப்பிலிருந்த பல இடங்களை இழந்துள்ளது என்பது நிச்சயமாக பின்னடைவுதானே!

மோடியும் காங்கிரஸும் சொல்வது போல இடது முன்னணி கேரளத்திலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டு விட்டது.

பொய், மிகப் பெரிய பொய்


மேலே உள்ள பட்டியலே உண்மையைச் சொல்லும்.  மாநகராட்சிகளில் பெரிய இழப்பு இருந்தாலும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும்  ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்துக்களிலும்  கணிசமான எண்ணிக்கை கிடைத்துள்ளது.

திருவனந்தபுரத்தைத் தவிர மற்ற பகுதிகளில் பாஜக இழந்ததுதான் அதிகம். 

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் வாக்கு சதவிகிதம் பற்றிய புள்ளி விபரத்தை பகிர்ந்திருந்தார். அது கீழே


2024 ல் நாடாளுமன்ற தேர்தலின் போது,
காங்கிரஸ்:- 45.40%
இடதுசாரி:- 33.60%
தேஜகூ:- 19.40%
வாக்குகள் பெற்றன.

தற்போது உள்ளாட்சி தேர்தலில்
காங்கிரஸ்:- 42%
இடதுசாரி:- 40%
தேஜகூ:-9%. வாக்குகள் பெற்றுள்ளன.
2024 ஐ விட கூடுதலான வாக்கு சதவீதத்தை இடது ஜனநாயக முன்னணி பெற்றும் வெற்றி பெற இயலவில்லை.



இந்த புள்ளி விபரம் நம்பிக்கையையும் அளிக்கிறது. கவலையும் அளிக்கிறது.

திருச்சூரில் காங்கிரஸ் தன் வாக்குகளை சுரேஷ் கோபிக்கு மடை மாற்றிக் கொடுத்தமைக்கு பாஜக இப்போது நன்றிக் கடன் ஆற்றியுள்ளதோ என்றொரு சின்ன சந்தேகம் வருகிறது.

அதே நேரம் பின்னடைவு ஏற்பட்டாலும் தளம் அப்படியே இருப்பதால் இடது முன்னணி தன் பலவீனங்களை கண்டறிந்து அவற்றை களைந்திடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தோழர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில ஆட்சி எவ்வளவு சிறப்பான பணிகளை செய்திருந்தாலும் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் அந்த வார்டில் நிற்பவர் யார்? அந்த தெருவில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதெல்லாம்தான் முக்கியமான காரணிகள்.

பத்தாண்டு கால கேரள மக்களுக்கு செழிப்பான ஆட்சியில் சில களைகளும் முளைத்திருக்கும். அந்த களைகளை கறாராக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இடது முன்னணி எடுத்திடும் என்று நம்புகிறேன்.

காலத்தே களைகளை அகற்றத் தயங்கினால் அது பெரும் புதராக மாறி பின்னடைவுகளை உருவாக்கிடும், மேற்கு வங்கத்தைப் போல.

கேரளா மேற்கு வங்கம் அல்ல என்பதை 2025 ல் நிரூபிக்கும் என்றே நம்புகிறேன்.

வாக்குகளின் சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதால் அலட்சியம் வந்திடுமோ என்பது கவலையளிக்கிறது.

Saturday, December 13, 2025

மோடியும் நேருவின் கொள்ளு பேத்தியும்

 


உருப்படியாக எதையும் செய்ய இயலாத மோடி, நாடாளுமன்றத்தில் நடத்திய ஒரு வெட்டி விவாதம்தான் "வந்தே மாதரம்" 150 வது ஆண்டு.

அதையும் ஜவஹர்லால் நேருவை வசை பாடத்தான் பயன்படுத்திக் கொண்டார்.

அதற்கு பதிலளித்து நேருவின் கொள்ளுப் பேத்தி பிரியங்கா கொடுத்த பதிலடி சிறப்பாகவே இருந்தது. 

அந்த காணொளி கீழே


ஆமாம். நேரு பற்றி ஒரு விவாதம் வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு மோடியும் அவர் அல்லக்கைகளும் பதில் சொல்லவே இல்லையே! 

ஏற்கனவே பட்ட அசிங்கம் போதும் என்ற அறிவு கூட மோடிக்கு கிடையாதா என்ன!

Thursday, December 11, 2025

தி.குன்றம் தீர்ப்பாளரின் வழக்கு கணக்கு

 திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் அதி வேகமாக வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்ததாக பாஜக பொய்யன் நாராயணன் திருப்பதி பீற்றிக் கொண்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முகநூல் பதிவில் அட்டகாசமான விளக்கத்தை அளித்துள்ளார்.  நம்ம தீர்ப்பாளர் அளித்த தீர்ப்புக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் என்றால் எந்த லட்சணத்தில் அவர் வேலை செய்துள்ளார் என்பதையும் இப்பதிவு அம்பலப்படுத்துகிறது.



கணக்கு வழக்கல்ல; இது வழக்கு கணக்கு சார் !
2017 முதல் 2025 வரை 9 வருடங்களில் 1,20,426 வழக்குகளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் வழக்கை ஏற்று விசாரித்து தீர்ப்பையும் எழுதியதாக இன்று ஒரு செய்தி பகிரப்படுகிறது.
உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால் அது ஒரு அசாதாரணமான வேகம் . அதை பகிர்ந்துள்ள பாஜகவின் BJP Tamilnadu திரு நாராயணன் திருப்பதி Narayanan Thirupathy BJP அவர்கள் நீதிபதி சுவாமிநாதன் அவர்களை
"பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திராவிட மாடல் ஏன் துடிக்கிறது என்று இப்போது புரிகிறதா?"
என்று எழுதியிருக்கிறார்.
இதை உண்மை என்று கொண்டால் எந்த விதமான வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, மருத்துவ விடுப்பு, தேசிய விடுமுறை என எந்த விடுப்பும் எடுக்காமல் எல்லா நாட்களும் அதாவது வருடத்தில் 365 நாட்களும் பணி செய்ததாக கொண்டால் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அதாவது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (அதுவும் சாப்பாடு டீ அல்லது வேறு எந்த ஓய்வுக்கும் செல்லாமல்) பணி செய்து இருந்தால் நாளைக்கு எத்தனை வழக்குகளை சராசரியாக தீர்ப்பு சொல்லியிருக்க முடியும் என்று கணக்கு போடலாமா ?
இந்த வருடம் முடிய இன்னும் ஒரு 20 நாட்கள் இருக்கிறது .
அந்த நாளையும் சேர்த்து நாம் கணக்கிடலாம் .
மொத்த வழக்குகள் -1,20,426
மொத்த வருடங்கள் -9
ஆண்டுக்கு சராசரி வழக்குகள்-13,380.6
நாளைக்கு சராசரி வழக்கு-36.66
ஒரு மணி நேரத்திற்கு சராசரி வழக்கு -4.58
அதாவது ஒரு வழக்கிற்கு ஆன சராசரி நேரம்-13.1 நிமிடங்கள் .
அதாவது சராசரியாக ஒவ்வொரு வழக்கையும் ஏற்று விசாரித்து குறுக்கு விசாரணை செய்து அதன் பிறகு அதை பரிசீலித்து தீர்ப்பு எழுதுவதற்கு 13 நிமிடங்கள் ஒரு நொடிதான் சராசரியாக எடுத்திருக்கிறார்.
உண்மையில் மந்திரவாதிகளால் மட்டுமே சாத்தியமானதை நீதிபதி ஜிஆர் சாமிநாதன் அவர்கள் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்.
நம்முடைய பாராட்டுக்களை அவருக்கு உரித்தாக்குவோம்.

மகிழ்ச்சியளித்த கூட்டம்

 


நேற்று முன் தினம் போளூர் கிளைச்சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்றேன். பணி ஓய்வுக்குப் பிறகு சேலத்தில் தென் மண்டல மாநாடு, நெய்வேலி, வேலூரில் கோட்ட மகளிர் மாநாடு, சென்னையில் மாநில மகளிர் மாநாடு, இரண்டு தோழமைச்சங்கங்களின் கருத்தரங்குகளில் சிறப்புரை என்று சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் ஒரு கிளைச்சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டது முதல் முறை. பணி ஓய்வுக்குப் பிறகு கலந்து கொண்ட முதல் கூட்டம் மட்டுமல்ல, 1993 ல் கோட்டச்சங்கப் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு கலந்து கொண்ட முதல்  கூட்டம், போளூர் கிளைச்சங்கத்தின் துவக்கக் கூட்டம்தான். அன்றைய பொதுச்செயலாளர் தோழர் ஆர்,ஜகதீசனோடு நானும் சென்றிருந்தேன்.

இப்போது எதற்கு போளூர் பயணம்? இந்த பதிவில் எதற்கு நேருவின் படம்?

இதோ கேள்விகளுக்கு பதில்.

இம்மாத இறுதியில் அகில இந்திய மாநாடு புவனேஸ்வரில் நடைபெறுகின்றது. அதற்கு முன்பாக அனைத்து கோட்டங்களும் தங்களுக்கு பொருத்தமான ஒரு நாளில் புது வணிக இயக்கம் நடத்திட வேண்டும் என்பது தென் மண்டல கூட்டமைப்பின் முடிவு.

சங்கம் எதற்கு புது வணிக இயக்கம் நடத்திட வேண்டும்?

எல்.ஐ.சி யின் மீது தொடர்ந்து பல தாக்குதல்கள் நடந்து வருகிறது. அதன் உடமையாளராக ஆவணங்களில் உள்ள ஒன்றிய அரசு ( எல்.ஐ.சி நிறுவனத்தின் நாற்பது கோடி பாலிசிதாரர்கள்தான் உண்மையான உடமையாளர்கள் ) , தனியார் நிறுவனங்கள், எல்.ஐ.சி க்கு கட்டுப்பாட்டு ஆணையமாகவும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு வளர்ச்சி ஆணையமாகவும் உள்ள இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று 9IRDA) ஆணையம், கார்ப்பரேட் ஊடகங்கள் ஆகியோர்தான் அந்த தாக்குதல்களை நிகழ்த்தும் சுய நலப் பேர்வழிகள்.

அந்த தாக்குதலை சந்திக்க எல்.ஐ.சி நிறுவனத்தின் வளர்ச்சிதான் முக்கியமான ஆயுதம் என்பது சங்கத்தின் ஆயுதம். 

வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, முகவர்கள் மத்தியில் வேகத்தை உருவாக்க சங்கம் வருடத்திற்கு ஒரு முறையாவது புது வணிக இயக்கம் நடத்துவது வழக்கம்.

எல்.ஐ.சி யை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான 14.11.2025 அன்று புது வணிக இயக்கம் நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்று வேலூர் கோட்டச்சங்கம் முடிவெடுத்தது. மோடியால் இன்றளவும் தூற்றப்படும் ஒருவரை முன்னிறுத்துவதும் ஒரு முக்கியமான நடவடிக்கை அல்லவா!

அந்த இயக்கம் வெற்றிகரமாகவே நடந்தது. அன்று மட்டும் 2775 புதிய பாலிசிகள் கிடைக்கப் பெற்றன. கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் கிளைகள் முதல் மூன்று இடங்களை பெற்றன.

இதிலே போளூர் பெற்ற மூன்றாவது இடம் சிறப்பானது. மற்ற கிளைகளை ஒப்பிடுகையில் போளூர் மிகவும் சிறிய கிளை. வணிகத்திற்கான வாய்ப்பு தொடங்கி முகவர் எண்ணிக்கை, ஊழியர் எண்ணிக்கை வரை போளூர் சிறிய கிளைதான். 2023 ல் நாங்கள் நடத்திய புது வணிக இயக்கத்தில் கடைசி இடத்தில் வந்தது போளூர்தான் எனும் போது இப்போது அவர்கள் பெற்ற மூன்றாம் இடத்தின் மகத்துவம் புரியும்.

இப்போதைய திரைப்படங்களில் எல்லாம் TRANSERMATION SCENE என்று வரும். பாட்சா வின் "உள்ளே போ" விஸ்வரூபம் முதல் சண்டை போன்றவை உதாரணம்.

போளூர் கிளையில் வெற்றி பெற்ற முகவர்களுக்கு பரிசளிக்கும் கூட்டம் உள்ளது, நீங்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று போளூர் கிளைச்செயலாளர் தோழர் சங்கர் அழைத்த போது கடைசி இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய இந்த TRANSFERMATION க்காவே ஒப்புக் கொண்டேன். இது சொல்லி அடித்த வெற்றி வேறு.

இந்த கூட்டம் மிகவும் மகிழ்ச்சியளித்தது. அதற்கு பல காரணங்கள் உண்டு.

முகவர்களின் பங்கேற்பு மிகவும் அருமையாக இருந்தது.  இதற்கு முன்பாக வேறு பல கிளைகளிலும் சங்கம் ஏற்பாடு செய்த முகவர் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். போளூர் கூட்டம் அளவிற்கு வேறு எந்த கிளையிலும் முகவர்கள் பங்கேற்பு அவ்வளவு அதிக எண்ணிக்கையில் இல்லை.

நான்கு மூத்த முகவர்கள் பேசினார்கள். போளூர் கிளையின் ஊழியர்களின் சேவை மிகவும் சிறப்பாக உள்ளது. எங்களின் வணிகத்தின் வலிமையே அவர்கள்தான் என்று பாராட்டுகையில் மனதிற்குள் மழை பெய்தது. அந்த மூத்த முகவர்கள் தங்கள் வெற்றி ரகசியங்களை பகிர்ந்து கொண்டு நீங்களும் இவற்றை முயற்சி செய்யுங்கள் என்று சொன்னது நெகிழ்ச்சியூட்டியது. போட்டியாளராக கருதாமல் சக முகவராக கருதுகின்ற சிறந்த மனப்பான்மை அது.

கோட்டச்சங்கத் தலைவர் தோழர் பி.எஸ்.பாலாஜி, பொதுச்செயலாளர் தோழர் எஸ்.பழனிராஜ், இணைச்செயலாளர் தோழர் பி.கங்காதேவி ஆகிய மூவருமே அற்புதமாக பேசினார்கள். "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்" ஃபீலிங்கில் இருந்தேன்.

போளூர் கிளை மேலாளர் தோழர் டி.கஜராஜும் (நீண்ட காலம் எங்கள் வாணியம்பாடி கிளையின் செயலாளராக இருந்தவர்) நன்றாக பேசினார். 


தோழர் பி.எஸ்.பாலாஜி


தோழர் எஸ்.பழனிராஜ்


தோழர் டி.கஜராஜ்


தோழர் பி.சங்கர்




அருமையானதொரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அவர்கள் பெற்ற வெற்றியால் விளைந்தது. அந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். புது வணிக வெற்றிக்கும் கூட்டத்தின் வெற்றிக்கும் அடித்தளமாக இருந்து செயல்பட்ட போளூர் கிளைச்செயலாளர் தோழர் சங்கருக்கு பிரத்யேக வாழ்த்துக்கள். 

 




Wednesday, December 10, 2025

நீதிபதி இம்பீச்மெண்ட் - உமக்கென்ன பயம் சுமந்து?

 


திருப்பரங்குன்றம் தீர்ப்பாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி அளித்த மனு சங்கி சுமந்தின் உறக்கத்தை கலைத்து விட்டது போல . . .

ட்விட்டரில் நேற்று ஒரே புலம்பல்.

காங்கிரஸ் கட்சி ஆதரிக்குதா?

ம்ம்ம்ம், அவங்களும் கையெழுத்து போட்டுட்டாங்க போல.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு இந்து விரோத முத்திரை வந்துடுச்சு, பிரயோசனமில்லாத இந்த நடவடிக்கையால் அது இன்னும் தீவிரமாகும்னு கூட புரியலையே.

நிச்சயமாக தோத்துப் போகும்னு தெரிஞ்சே இப்படி செய்யறாங்களே! நீதிபதியோட ஜாதி மேல வெறுப்பால செய்யறாங்க. மைனாரிட்டி மதத்தை சேர்ந்தவர் என்றாலோ ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர் என்றாலோ இப்படி செய்ய தைரியம் வருமா?





திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் மீது நடவடிக்கை என்றால் சுமந்திற்கு ஏன் பதறுகிறது?

இதுவே தாமதம்.

சகோதரி செய்த விபத்தை தான் ஏற்றுக் கொண்டு சிறை சென்றது என்பது ஒரு மோசடி. அப்படி மோசடி செய்தவரை  வேதம் படித்தவர் என்பதற்காக நான் காப்பாற்றினேன் என்று சொன்ன போதே அவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.

இதிலே ஜாதியின் பெயரால் ஒளித்து வைக்க சுமந்து முயல்கிறார். அய்யா சுமந்து, தீர்ப்பாளரின் பல நடவடிக்கைகளுக்கு காரணமே அவருடைய ஜாதிய மேட்டிமை மனோபாவம்தான். அதையே அவருக்கு அனுதாபம் தேட நீர் முயற்சிப்பது அயோக்கியத்தனம்.

சரி உமக்கு ஏன் இவ்வளவு பதற்றம்?

திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் போல நமது மனைவியின் செயல்பாடுகள் அமைந்தால் அவர் மீதும் பதவி நீக்க நடவடிக்கை வரும் என்பதால் உருவான பயமா சுமந்து?

Tuesday, December 9, 2025

மோடியே பதில் சொல் . .

 


நேற்று நாடாளுமன்ற மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் ஆற்றிய அற்புதமான, ஆவேசமான, அர்த்தம் மிக்க உரை.

அவசியம் கேளுங்கள். 

என்னைப் போல மீண்டும் மீண்டும் கேட்பீர்கள் . . .


வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டை கொண்டாடுவதில் உள்ள போலித்தனத்தை மட்டுமல்ல பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய தீர்ப்பாளர் பற்றியும் பேசுவது ஆணித்தரமானது.

இந்த உரையில் தோழர் சு.வெ எழுப்புகிற மூன்று கேள்விகளுக்கு மோடியாலோ அல்லது சங்கிகளாலோ பதில் சொல்ல முடியுமா?

வந்தே மாதரம், ஜெய் ஹிந்த், இன்குலாப்  ஜிந்தாபாத் ஆகிய மூன்று முழக்கங்களின் பின்னணியில் லட்சக்கணக்கானவர்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

எந்த முழக்கத்தின் கீழ் நீங்கள் விடுதலைக்காக திரண்டீர்கள்?

"ஈஸ்வர அல்லா தேரா நாம்" என்ற முழக்கத்தை ஒரு முறையாவது உங்கள் உதடுகள் உச்சரித்துள்ளதா?

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சிவன், விஷ்ணு, துர்கா என்று பனிரெண்டு திரு உருவச் சிலைகளை வைத்துள்ளீர்கள். கிறிஸ்துவத்திலிருந்து ஒரு திரு உருவச்சிலையோ, திருக்குரானின் அடையாளத்தில் எதுவுமோ உங்களுக்குக் கிடைக்கவில்லையா?

பதில் சொல் மோடி. 

உம்மால் முடியாது, முடியாது, முடியாது.  

Monday, December 8, 2025

நீதிபதி பதவி நீக்கம் - சரியான முடிவு

 


திருப்பரங்குன்றம் தீபத்தூண் புகழ் நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை ( IMPEACHMENT MOTION) எடுக்கப் போவதாக "இந்தியா" கூட்டணி முடிவு செய்துள்ளது.

அரசியல் சாசனத்தின் விழுமியங்களைப் பற்றி கவலைப்படாமல், ஜன நாயகத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டு  காவிக் கண்ணாடி அணிந்து கொண்டு தீர்ப்புக்கள் மூலம் கலவரத்துக்கு வித்திடுபவர் நிச்சயம் நீதிபதி பொறுப்பிற்கு தகுதியற்றவர்தான்.

அவரை பணி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் முன்மொழிவு கொண்டு வர்ய்வது மிகவும் நல்ல விஷயம்.

எண்ணிக்கை அடிப்படையில் அந்த தீர்மானம் வெற்றி பெறாது.

ஆனால்

உங்கள் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது, ஏற்றுக் கொள்ள முடியாதது, நீதிபதி பதவிக்கு பொருத்தமற்றது என்று இந்திய ஜனநாயகத்தின் அடையாளமான நாடாளுமன்றத்தில் பதிவாவது மிகவும் முக்கியமானது. 

சரியான முடிவை எடுத்த அனைத்து தலைவர்களுக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் . . .

பொறுப்பவர்களால் கொல்லப்பட்ட 25 பேர்

 


கோவாவில்  ஒரு இரவு விடுதியில் நேற்று நடைபெற்ற தீ விபத்தில் 25 பேர் இறந்து போயுள்ளனர்.



இதனை ஒரு எதிர்பாராத விபத்து என்று கடந்து போய் விட முடியாது.

விடுதியின் உரிமையாளர்கள், கோவா மாநில நிர்வாகம் சேர்ந்து செய்த கொலை என்றுதான் சொல்ல வேண்டும்.

குறுகிய நுழைவாயில், குறுகிய வெளியே செல்லும் வழி என்று இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் உள்ளே சிக்கிக் கொண்டவர்களால் வெளியேற முடியவில்லை. ஆக முதல் குற்றவாளி விடுதியின் உரிமையாளர்.  

கழிமுகக் கரையில் (BACK WATERS) அமைக்கப்பட்ட இந்த விடுதி மிகவும் பிரம்மாண்டமானது என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.

இவ்வளவு பெரிய விடுதிக்கு அனுமதி பெறப்படவில்லை. அளவில் மிகவும் பெரிய இந்த விடுதி செயல்படுவதை  அரசு நிர்வாகம் அறிந்திருக்கவில்லை என்றால் அது எத்தனை பொறுப்பற்றதாக இருக்கும்! 

அரசு அனுமதி இல்லாமல் ஒரு பிரம்மாண்டமான விடுதி செயல்படுகிறது என்றால் அதற்காக எத்தனை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்திருப்பார்கள்!

ஆக இதில் தொடர்புடைய அத்தனை பேரையும் கொலையாளிகள் என்று கருதியே நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கோவாவில் உள்ள பாஜக அரசு உறுதியோடு செயல்படுமா?

எனக்கு நம்பிக்கை இல்லை.

Sunday, December 7, 2025

வாழ்த்துக்கள் தோழர் களப்பிரன்

 


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் புதிய பொதுச்செயலாளராக தோழர் களப்பிரன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தஞ்சைக் கோட்டத்தின் துடிப்பு மிக்க தோழர் ராஜனாக அறிமுகமானவர். தஞ்சைக் கோட்டத்தின் பொறுப்பாளராகவும் செயல்பட்டார். தொழிற்சங்க தளத்தில் பணியாற்றுவதை விட கலை, பண்பாட்டு தளத்தில் பணியாற்றுவதில் அதிக ஆர்வம் காண்பித்தார். அதன் தொடர்ச்சியாய் ஒரு முக்கியமான அமைப்பின் முக்கியமான பொறுப்பை ஏற்றுள்ளார். 

ஏராளமான பயணங்களை மேற்கொண்டு அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்பவர். அதில் காஷ்மீர் பயண அனுபவமும் பாகிஸ்தான் பயண அனுபவமும் மிக முக்கியமானது.

அவரது தலைமையில் தமுஎகச புதிய சிகரங்களை அடையட்டும்.

வாழ்த்துக்கள் தோழர் களப்பிரன் . . .


அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எங்கள் கோட்ட இணைச்செயலாளர் தோழர் கே.வேலாயுதத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். . .

பிகு : மேலே உள்ள படங்கள் எங்கள் வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டில் 2013 ல் திருவண்ணாமலையில் நடைபெற்ற வேலூர் கலை விழாவின் போது எடுக்கப்பட்டவை.