Saturday, August 6, 2022

பெரியாரும்-ராமானுசரும் ‘’தானான திருமேனி’’கள்தான்.…!

 

திரைக்கலைஞர் பொன்வண்ணனின் அருமையான பதிவு. . அவரின் ஓவியமும் கூட. 



‘’எல்லோரும் முக்தியடைய நான் ஒருவன் நரகத்திற்கு செல்வது பாக்கியமே’’என்ற இராமானுசர்-
காஞ்சிபுரம் அருகே உள்ள ஶ்ரீபெரும்புதூரில் தோராயமாக 1017ல் பிறந்தவர் .
காஞ்சிபுரம்- பல்லவர் காலத்திலிருந்து அதிகார மையத்தை தலைமையிடமாக கொண்டு புகழ் பெற்றிருந்தாலும்..இவர் பிறந்தகாலத்தில் அது அனைத்தையும் இழந்து நின்றிருந்தது.

அன்றையகாலத்தில் தஞ்சையை தலைநகராக கொண்ட சோழப்பேரரசுதான் உச்சத்தில் இருந்தது.

அப்போது மன்னனாக இருந்த ராஐராச சோழன்(947 -1014 ) தனது அறுவத்தி ஒண்றாவது வயதில் சைவ சமத்தின் கடவுளான சிவனுக்கு பிரகதீஷ்வர ஆலயம் கட்டதிட்டமிட்டு 1004ல் தொடங்கி..ஆறுவருட கட்டுமாண பணிகளுக்குபின் 1010ல் குடமுழுக்கு நடந்தது. அதிலிருந்து நான்கு வருடத்தில் ராஐராச சோழனின் இறந்தார்.

அதன் பின் அவரது மகன் ராஜேந்திர சோழன் பதவிஏற்றார்.
அன்றைய காலத்தில்-
வைணவர்களின் திருமாலுக்கான முக்கிய வழிபாட்டுத் தளங்களையும்,
மடங்களையும் கொண்டு காஞ்சிபுரமும்,ஶ்ரீரங்கமும் இயங்கி வந்தது.
அவர்களுக்கு ஆதிசங்கரரின் தத்துவமான ‘’அத்வைதமும்’’ மத்வரின்’’த்வைத’’தத்துவமும் தான் வழிகாட்டியாக இருந்து வந்தது.

ஆனால் ராமானுசர் இந்த இரண்டிலிருந்தும் மாறுபட்டு ‘’விசிஸ்டாத்துவதம்’’ என்ற தத்துவத்தை முன்னிருத்தினார்.
பிரம்ம சூத்திரத்திற்கு ‘’ஸ்ரீபாஷ்யம்’’ என்ற ஓர் உயர்தர உரையை இயற்றி, ஆதி சங்கரரின் ‘’அத்வைதத் தத்துவத்திற்கு’’ மாற்று சொன்ன முதல் ஆன்மீகவாதி. இவரின் தத்துவத்தை பலரும் பின்தொடர்தனர். இராமானுசர் இந்தியா முழுவதும் யாத்திரை செய்து,வைணவத்தின் பெருமையை எங்கும் பறை சாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்று வைணவ மடங்களை நிறுவினார்.

இந்த சூழ்நிலையில்-
அவரது குருவின் கடைசி காலத்தில்,அவரைக் காண ராமானுசர் ஶ்ரீரங்கம் சென்றார். குரு இறப்பிற்கு பின் திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார்.

திருவரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளை வழிப்படுத்தினார்.

ஒவ்வொருவரிடமும், முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களிடையேயும், இரக்கம், கருணை, பரிவு முதலிய நற்குணங்களைச் சொரிந்ததோடு "திருக்குலத்தார்" என்றும் அவர்களை அழைக்கலானார் (இக்குணத்தால் கவரப்பட்டே, பின்னர் வந்த காந்திமகானும் "ஹரிஜன்" என்றார்). தமிழ் பிரபந்தங்களை ஓதவும் வைணவச் சின்னங்களை தரிக்கவும் எந்தச் சாதியினரோ ஆணோ பெண்ணோ எல்லோருக்கும் வைணவத்தில் இடம் இருக்கச் செய்தார்.

கடவுளுக்குமுன் அனைவரும் சமம்..’’ஓம் நமோ நாராயணா ‘’என்ற மந்திர சொல்லுடன் அனைவரும் கோயிலுக்குள் சென்று பெருமாளை தரிசிக்கலாம் என்ற இவரது புரட்சிகர முயற்சி… அவருக்கு எதிரிகளை உருவாக்கின. அதனைத்தொடர்ந்து அவரைக் கொல்லும் முயற்சிகள் நடந்தன. நீண்ட போராட்டத்துக்குபின் அவரது பக்தர்களின் வேண்டுகோளுக்கு இனங்கி ..
மைசூரிலிலுள்ள மேல் கோட்டைக்கு தப்பிச் சென்றார்.

இன்று அங்குள்ள கோயில் அவரது காலத்தில் வடிவமைக்கப்பட்டதுதான். சிலவருடங்கள் கழித்து அவரது வயதுமுதிர்வு காலத்தில் மீண்டும் ஶ்ரீரங்கம் வந்தார்.தலைமுறை மாற்றத்தில் ஒரு புரிதல் கொண்டவர்களைக் கண்டார்.

1137ம் ஆண்டில் -ராமானுசர் தனது 120வது வயதில் ஶ்ரீரங்கத்திலேயே மரணமடைந்தார். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், துறவிகளை எரிப்பது கிடையாது.மாறாக திருபள்ளிப் படுத்துவார்கள்.

அவ்வாறு அவர் உடலை திருவரங்கத்தில் கோயில் வளாகத்திற்குள்ளே திருப்பள்ளி(புதைத்தல்) படுத்தினர். அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி .

இத்திருமேனியை ‘’தானான திருமேனி’’என்று இன்று அழைக்கின்றனர்.
என் அறிவுக்கு உட்பட்டு, கோயிலுக்குள் அடக்கம் செய்யப்பட்டவர் இவர் ஒருவராகத்தானிருப்பார்.

‘திருக்குளத்தார்’ என்று குரல் கொடுத்த ராமானுசருக்கு சிலையும் …வழிபாடும்தான் சரியான மரியாதை என்றால்…

அனைத்து மனிதர்களுக்குமான உரிமைகளுக்கும்.. மானத்திற்கும் குரல் கொடுத்த’’பகுத்தறிவு ஆசான்’’பெரியாருக்கு இங்கு சிலை இருப்பதுதான் நம் கொடுக்கும் மிகச் சிறந்த மரியாதை…!

பெரியாரும்-ராமானுசரும் ‘’தானான திருமேனி’’கள்தான்.…!

2 comments:

  1. மிக அருமையான ஒப்பீடு...பகிர்கிறேன் தோழர்

    ReplyDelete
  2. 😁 மாட்டை கஷ்டப்பட்டு தென்னைமரத்தில் கட்டிவிட்டார் நம்ப காம்ரேட்😁

    ReplyDelete