Friday, August 5, 2022

மனை தேவன் நீலகண்டன் நம்பூதிரியும், மகாத்மா காந்தியும்.....

 






குமரி மாவட்டத்தின் மூத்த தோழர் ஹாகுல் ஹமீது பகிர்ந்து கொண்ட ஒரு வரலாற்றுக் குறிப்பை பகிர்ந்து கொள்கிறேன். தோழர் ஏராளமான வரலாற்றுத் தகவல்களை வைத்துள்ளார். அந்த பொக்கிஷத்தை நூலாக மாற்றினால்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 



வரலாறு வழங்கும் தீர்ப்பு, விசித்திரமானது..
இண்டந்துருத்தில் மனை தேவன் நீலகண்டன் நம்பூதிரியும், மகாத்மா காந்தியும்.....
நூற்றாண்டுகளாக, அன்றைய மலபாரில், பொது வழிகளிலும், கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளிலும்,ஒடுக்கப்பட்ட மக்கள் நடமாடக் கூடாது என்ற விதி, வழக்கில் இருந்தது..
காலம் மாறியது.....
வைக்கம்(கேரளா)மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள பாதைகளில், ஒடுக்கப்பட்ட மக்கள் நடமாடக் கூடாது என்ற விதியை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், வைக்கம், இண்டந்துருத்தில் தேவன் நீலகண்டன் நம்பூதிரியின் கைகளில் இருந்தது...

இந்த கொடுமைகளுக்கு எதிராக,A.K.கோபாலன், P.கிருஷ்ண பிள்ளை, கேளப்பன் போன்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், களத்தில் இறங்கி போராடியதன் விளைவாக, மிகக் கொடூரமான தாக்குதல்களை சந்தித்தனர்..

பெரியார் ஈ வெ ரா அவர்களும் களத்தில் நின்றார்...

இந்த பின்னணியில், மகாத்மா காந்தி,1925-ம் ஆண்டு, வைக்கம் வந்து சேர்ந்தார்..

சிவகிரி மடத்தில் சென்று, ஶ்ரீ நாராயண குருவை சந்தித்த பின்னர், ஒடுக்கப்பட்ட மக்கள், வைக்கம் மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் நடமாடும் உரிமையை பெறுவதற்கு, அதற்கு அனுமதியளிக்கும் அதிகாரத்தை தனது கைகளில் வைத்திருந்த, இண்டந்துருத்தில் மனை, தேவன் நீலகண்டன் நம்பூதிரியை,காந்தி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்...
ஆனால்,

காந்தி, வைசிய பனியா வகுப்பைச் சார்ந்தவர் என்பதால், தான் அவரை சந்திக்க போவதற்கில்லை என்றும், தேவை என்றால், காந்தி, தனது இண்டந்துருத்தில் மனைக்கு வரலாம் என்று தெரிவித்தார்....

காந்தி, அதைப் பொருட்படுத்தாமல்,1925-ம் ஆண்டு, மார்ச் மாதம்12-ம் தேதி, நம்பூதிரியை சந்திக்க, அவரது மனைக்கு சென்றார்...

ஆனால், நம்பூதிரி, காந்தி வைசியர் என்பதால்,அவரை தனது இல்லத்தின் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி, இல்லத்திற்கு வெளியே முற்றத்தில் ஒரு பந்தல் போட்டு, அதில் காந்தியை அமர வைத்து, தான் இல்லத்திற்கு உள்ளே அமர்ந்து, பேச்சு வார்த்தை நடத்தினார்...

மூன்று மணி நேரம் பேச்சு வார்த்தை நடந்தாலும், எந்த பலனும் இல்லாமல், காந்தி வெறும் கையேடு திரும்பினார்..

மகாத்மா காந்தியும், நம்பூதிரியும் நடத்திய விவாதத்தின் போது, காந்தி"ஒடுக்கப்பட்ட மக்கள் நமது சகோதரர்கள் அல்லவா"என்று
கூறியதற்கு, அந்த நம்பூதிரி"இல்லை; அவர்கள் நீச சாதியினர்; இது அவர்களின் முன் ஜென்ம வினை"என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது... பேச்சு வார்த்தை முடிந்து காந்தி நம்பூதிரியின் இல்லத்திலிருந்து கிளம்பி சென்ற பிறகு, அந்த வீட்டை சுற்றி சுத்தி கலசம் என்ற சுத்தீகரிப்பை நடத்தினார் அந்த நம்பூதிரி.. காந்தி பிராமணர் இல்லை என்பதால் தான் இந்த சுத்தி கலசம்.....

ஆனால்,603நாட்கள் நடைபெற்ற வைக்கம் போராட்டம்,வெற்றி பெறாமலேயே முடிவுக்கு வந்தது....

ஆனாலும்....திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு, வேறு எந்த வழியும் இல்லாத சூழலில்,1936-ம் ஆண்டு, நவம்பர் மாதம், அனைத்து மக்களும், கோவிலுக்குள் நுழையலாம் என்ற உத்தரவை வெளியிட்டார் திருவாங்கூர் மன்னர்....

அன்றிலிருந்து 30 ஆண்டுகளில், அதிகாரத்தின் உச்சியில் இருந்த இண்டந்துருத்தில் மனை தகர்ந்து அழிவை நோக்கி சென்றது..
ஆமாம்...
இண்டந்துருத்தில் மனை நம்பூதிரியின் அடுத்த தலைமுறை பெண் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க பொருளாதார வசதி இல்லாத நிலையில் நம்பூதிரியின் குடும்பம் கைகளை பிசைந்து கொண்டு நின்றது

ஒடுக்கப்பட்ட மக்களை அடக்கி ஆண்ட பரம்பரை சிதிலமடைந்து, புகழ்பெற்ற இண்டந்துருத்தில் மனை விற்பனைக்கு வந்தது..

ஆனால், வாழ்ந்து கெட்ட மனையை வாங்க எவரும் முன்வரவில்லை..எந்த நம்பூதிரியின் இல்லத்தில், வாசலில் கூட நிற்க முடியாது என்ற ஆணவத்தோடு, வைக்கம் கோவிலையும் அந்த கோவிலைச் சுற்றி உள்ள சாலைகளையும் தனது கைகளில் அந்த நம்பூதிரி வைத்திருந்தாரோ,அதே மனையை வாங்க' அப்போதைய பிளவு படாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர், C.K.விஸ்வநாதன் அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காக வாங்க முன்வந்தார்.....

இறுதியில், 1963-ம் ஆண்டு, இண்டந்துருத்தில் மனையை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,விலைக்கு வாங்கியது...

அன்று, மகாத்மா காந்தியை வீட்டுக்கு உள்ளே வரக்கூடாது என்று உத்தரவிட்ட, நம்பூதிரியின் இண்டந்துருத்தில் மனையின் உயரே செங்கொடி ஏற்றப்பட்டது என்பது தான் வரலாற்று விசித்திரம்....

இப்போது, அங்கே, "கள் இறக்கும் தொழிலாளர்கள் சங்கம்"செயல் படுகிறது..

கள் இறக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் செங்கொடி, புகழ்பெற்ற இண்டந்துருத்தில் மனையில் பறந்து கொண்டிக்கிறது...

ஆமாம்... வரலாறு எவரையும் விட்டு வைப்பதில்லை... வரலாறு வழங்கும் தீர்ப்பு

எப்போதும் விசித்திரமானது தான்.
நம்பிக்கையோடு பயணிப்போம்....
*நேற்றைய எனது பப்படம்(அப்பளம்)குறித்த பதிவில்
எனது பின்னூட்டம் ஒன்றை படித்த நண்பர்கள்
சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த பழைய பதிவு மீண்டும் சில மாற்றங்களுடன்..

1 comment:

  1. காலம் எப்படி சரியான தீர்ப்புகளை எழுதுகிறது.வியப்பாக உள்ளது.இத்தகைய வரலாற்றுக்குறிப்புகள் அவசியம் வெளிவர வேண்டும்.

    ReplyDelete