உங்களோடு ஒரு உரையாடல்...
15.08.2019 அன்று தஞ்சையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு
முன்னணியின் மூன்றாவது மாநில மாநாடு தொடங்கியது. இன்று மாநாட்டின் நிறைவு நாள். மாலை
பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. தஞ்சை நோக்கி செல்லும் வழியில்தான் இப்பதிவை
பகிர்ந்து கொள்கிறேன்.
மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
வெளியிட்ட பிரசுரம் கீழே உள்ளது. மிகவும் முக்கியமானது.
பல உண்மைகளை பேசுகிறது.
இப்பிரசுரத்தை அடிப்படையாகக் கொண்டு பல மையங்களில் உரையாடல்
நிகழ்வு நடந்தது. எங்கள் சங்க அலுவலகத்தில் கூட சில தோழர்களோடு உரையாடல் நிகழ்வை கடந்த
வாரம் நடத்தினோம். வெளிப்படையான, மனம் திறந்த உரையாடலாக அது அமைந்திருந்தது.
அப்படிப்பட்ட உரையாடல் நிகழ்வதற்கான அடிப்படையாக இருந்த
அப்பிரசுரத்தை அவசியம் படியுங்கள். சமூக மாற்றத்திற்கான குரல் நம் மனதில் முதலில் ஒலிக்கட்டும்
உங்களோடு ஒரு உரையாடல்...
பிரியத்திற்குரியவர்களுக்கு அன்பான வணக்கங்கள்!
சமீப காலங்களில் பொதுவெளியில் விவாதிக்கப்படாத ஒன்றைப் பற்றி விவாதிப்பதற்காகவே உங்களை சந்திக்கிறோம்.விரும்பத்தகாத சூழ்நிலை தான் இது. ஆனால் இனியும் தாமதிக்காமல் அதைப் பற்றி விவாதித்தே ஆக வேண்டும்.
அதுதான் சாதி!
நண்பர்களே சற்று நிதானமாக பேசுவோம். இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. பொதுவாக அப்படித்தான் பேசப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல என்பது உங்களுக்கே தெரியும்.
இந்த துண்டு அறிக்கையின் வழியாக உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகத்தில் மேற்கொண்ட கள ஆய்வில் நூற்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை வெளிக்கொணர்ந்தோம். இந்த வடிவங்கள் அனைத்தும் அனைத்து பகுதிகளிலும் இருக்கிறது என்று நாங்கள் வாதிடவில்லை. ஆனால் இதில் ஏதாவது சில வடிவங்கள் இல்லாத பகுதிகளே இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
பால்வாடிக்கு வருகிற தலித் குழந்தைகள் செருப்பு அணியக்கூடாது என்று சொல்கிற கிராமங்கள் உண்டு. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலித் பெண்களுக்கு பிரசவம் பார்க்க மறுத்த சம்பவங்கள் உண்டு.வயது வரம்பின்றி ஒருமையில் அழைப்பதில் தொடங்கி தேனீர் கடைகள், கிராம முடிதிருத்தகங்கள், பொதுவினியோக கடைகள்,பேருந்து நிறுத்தங்கள், சமுதாயக்கூடங்கள் என தனித்தனி மயானங்கள் வரை நம்மைச் சுற்றி நூறு நூறு வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள்.
அதுசரி இதுவெல்லாம் நகரங்களில் எங்கே இருக்கிறது என்கிறீர்களா?
நகரத்திற்கு குடிபெயர்ந்து வரும் தலித்குடும்பங்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் துவங்கி படிக்கும் அல்லது பணிபுரியும் இடங்களில் எதிர்கொள்ளும் பாரபட்சங்களுக்கு அடையாளம் தான், மனிதர்கள் நட்சத்திரத் தூசிகள் என்று விஞ்ஞானக் கனவு கண்ட தலித் மாணவன் ரோகித் வெமுலாவின் துயர மரணம்.
இதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். நான் சாதி பார்ப்பதில்லையே என்கிறீர்களா?
இல்லை நண்பரே நாம் வாழும் சமூகத்தில் தானே இந்த தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு சாதியினரை மற்றொரு சாதியினர் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்று பார்ப்பதும் தொடரத்தானே செய்கிறது.
உண்மையில் இந்த சாதிக்கு ஏதாவது அறிவியல் அடிப்படை உண்டா?
நிச்சயமாக இல்லை.உலக மனிதர்கள் அனைவருமே ஆப்பிரிக்கர்களின் வாரிசுகளே என ஐயத்திற்கு இடமின்றி அறிவியல் நிரூபிக்கிறது. மனிதனின் தோற்றத்தில் மட்டுமல்ல செல்களிலும், மரபணுக்களிலும் கூட வேறுபாடுகள் இல்லை என்கிறது விஞ்ஞானம்.
முதல் மனிதன் உலகில் தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆறறிவு படைத்த மனிதர்களைப் பாகுபடுத்தி மோத விடுகிற சாதி தோன்றி சில ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகவில்லை.இடையில் வர்ணாசிரமம் ஏற்படுத்திய செயற்கையான பாகுபாடே சாதி.
பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்ற பொய்மையான பாகுபாடுகளை உருவாக்கி,புனைவுகள் காவியங்கள், காப்பியங்கள் வழியாக சாதியை இந்தியா முழுமைக்குமான கருத்தியலாக்கிவிட்டனர்.இது கருத்தியலாக மட்டுமில்லாமல் வாழ்க்கை முறையாகவும் உள்ளது. இந்திய சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக மனு தர்மத்தின் அதர்ம ஆட்சியே நடைபெற்றது. பெரும்பகுதியினராக உள்ள சூத்திர, பஞ்சம சாதிகளின் உரிமைகள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டே வந்தன.
இதனை நேர் செய்வதற்கான ஒரு கருவி தான் இட ஒதுக்கீடு. எதிர்காலத்தில் சமத்துவ சமூகம் மலர்ந்திட நிகழ்காலத்தில் அசமத்துவ ஏற்பாடுகள் அவசியப்படுகிறது என அண்ணல் அம்பேத்கார் குறிப்பிட்டது பஞ்சமர்களின் இட ஒதுக்கீட்டுக்காக மட்டுமல்ல, இன்றைய பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்காகவும் தான்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அண்ணல் அம்பேத்கர் தொடர்ந்து வற்புறுத்துகிறார். பிற்படுத்தப்பட்டோர் யார் யார் என பட்டியலிடவில்லை.எனவே பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அமைத்து கணக்கிடுவதாக அண்ணல் அம்பேத்கருக்கு பதில் அளித்த அரசு அதனை செய்யாமல் காலம் கடத்தியது.இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அமைக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி தான் அண்ணல் அம்பேத்கர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இட ஒதுக்கீடு இல்லை என்றால் என்ன நிலை இன்றும் நீடித்திருக்கும்?
1921 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் அளித்துள்ள விவரப்படி சட்டம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்டு பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை 14,927 பேர், இதில் 11 532 பேர் முற்படுத்தப்பட்டவர்கள் தான்.மீதம் இருப்பவர்கள் தான் தமிழகத்தில் இருக்கிற அத்தனை சாதிகளையும் சேர்ந்தவர்கள். கல்வி,நிலம் உள்ளிட்ட தேசத்தின் வளங்கள் அனைத்தும் நேர்மையாக அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வது தான் சமூக நீதி. ஆனால் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்றுவருபவர்களே இன்று தலித்துகள் மீது இரக்கமற்ற
முறையில் தீண்டாமையை, வன்முறையை, ஆணவப்
படுகொலைகளை நிகழ்துவது துயரமானது.
முற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்கிற வரிசை அடிப்படையிலேயே இங்கே உரிமையும் சலுகைகளும் ஆண்டாண்டு காலமாக கிடைத்திருக்கிறது.
எனவே கீழே உள்ளவர்களுக்கு பலன்கள் மிகச் சொற்பமான அளவே கிடைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை .என்றாலும் முற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என அனைத்து பிரிவிலும் உள்ள உழைப்பாளி மக்கள் சந்திக்கிற பிரச்சினைகள் ஒன்றா? இரண்டா?
காசாகும் கல்வி,கார்ப்பரேட்டாகும் மருத்துவம், பதற
வைக்கும் பெட்ரோல் விலை ஏற்றம் ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம் ,விவசாய பாதிப்பு, தொழில் பாதிப்பு ,வர்த்தக பாதிப்பு, குதிரைக்கொம்பான வேலை வாய்ப்பு, குடிநீர்,சுகாதாரம் என எத்தனை எத்தனை
இவற்றில் எதற்காவது சாதி உண்டா? நிச்சயமாக இல்லை.
அறிவியல் வளர்ச்சி ஆகாயத்தை கடந்து விட்ட பின்னரும் கூட சாதி மனநிலைக்கு தடை போட முடியவில்லை. தானாக சாதி உணர்வு வளர்வதில்லை.அது நமக்கு புலப்படாத பல்வேறு வகைகளில் வளர்க்கப்படுகிறது.சாதி உணர்வுகளை தூண்டிவிட கார்ப்பரேட்டுகள் பலநூறு கோடிகளை கொட்டிக்கொடுக்கிறத்து.
உள்ளூரில் உருவாகி வளர்ந்திருக்கும் பணக்கார வர்க்கமும் சாதிக்கு ஊக்கமளிக்கிறது.அதனால் பலன் அடைகிறது.மற்றபடி சாதியால் சாதாரண மக்கள் அடைந்த பலன் என்ன?
இதில் கார்ப்பரேட்டுகளுக்கு என்ன லாபம்?
ஊர் இரண்டுபட்டால் தானே
கார்ப்பரேட்டுகளுக்கு கொண்டாட்டம்.
இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படுகிற போது,வெறும் ஒரு சதவீதம் பேராக உள்ள பில்லியன் டாலர் கோடீஸ்வர முதலாளிகள் கையில் இந்திய தேசத்தின் சொத்துக்களில் 57 சதவீதம் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த அளவிற்கு ஏழை,நடுத்தரமக்களிடமிருந்து சாதி மத பாகுபாடின்றி ஒட்ட சுரண்டப்படுகிறது
இப்போது சொல்லுங்கள்
சாதிய துவேசமும், பாகுபாடும், ஆணவக்கொலைகளும் யாருக்குப் பயன்படுகிறது என்று. தொழிலாளர்களாக, விவசாயிகளாக, வர்த்தகர்களாக, தொழில் முனைவோராக, மாணவர்களாக ஒன்று சேர்ந்தால் தங்களை பாதிக்கிற உண்மையான பிரச்சினைகள் மீது கவணம் திரும்பி,அது கார்ப்பரேட்களுக்கு ஆபத்தாகி விடும் என்பதற்காகவே பிரித்து வைக்க பணம் செலவழிக்கிறார்கள்.
தமிழ்நாடு சமூகநீதி போரில் முன்னணி பங்கு வகித்த மாநிலம். திருவள்ளுவர்,சித்தர்கள்,வள்ளளார், வைகுண்டசாமிகள், தந்தை பெரியார், சிங்காரவேலர், அயோத்தி தாசப்பண்டிதர்,சீனிவாசராவ், ஜீவாநந்தம் என சாதி கடந்து மானுடம் பேசியவர்கள் மண் இது.
உண்மைகளை அறிவோம்! பொய்மைகளை விரட்டுவோம்!
அறிவியல் போற்றுவோம்! அஞ்சானம் அழிப்போம்!
சாதியம் தகர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்!
சாதி கடந்து கைகோர்ப்போம்! சமம் நாமென்று சங்கமிப்போம்!
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.
3 வது மாநில மாநாடு
ஆகஸ்டு 15,16,17, தஞ்சை
ஆகஸ்டு 17 மாபெரும் சாதி ஒழிப்பு பேரணி.