Sunday, March 23, 2014

தேங்காய் பர்பி - ஒரு வழியாக இறுதியில் ஒரு வெற்றி

முந்திரி தேங்காய் பர்பி செய்ய முயன்று அது அல்வாக மாறிய சொதப்பல்
அனுபவம் முன்பே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இன்று மீண்டும் முயற்சி செய்தேன். 

சில சமையல் குறிப்புக்கள் கூட படித்தேன், ஒவ்வொன்றிலும் ஒரு வழிமுறை, ஒவ்வொரி விதமான அளவுகள். எனவே எல்லாவற்றையும் கலந்து கட்டி என் வழியில் முயன்று பார்த்தேன்.

தேங்காய் துறுவலை வறுத்து மிக்சியிலும் நாலு சுற்று சுற்றி வைத்துக் கொண்டேன். முந்திரியை தனியாக வறுத்து வைத்துக் கொண்டேன். இதைத் தவிர தனியாக கொஞ்சம் முந்திரியை ஊற வைத்து தேங்காய் சேர்த்து அறைத்து விழுதாக வைத்துக் கொண்டேன்.

கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரில் சர்க்கரை பாகு வைக்க பாகு நன்றாக கொதித்து வருகையில் தேங்காய் துறுவலையும் பிறகு முந்திரி விழுதையும் சேர்த்து கிளறி, கிளறி, கிளறி, கிளறி பிறகு நெய் விட்டு மீண்டும் கிளறி கிளறி அடி பிடிக்காமல் வரும் வேளையில் நெய் தடவிய
தட்டில் கொட்டினேன்.

சிறிது நேரம் கழித்து வில்லை போட்டு விட்டு இணையத்திற்கு வந்து விட்டேன். அரை மணி நேரத்திற்குப் பிறகு தேங்காய் பர்பியாக வருகிறதா இல்லை இம்முறையும் அல்வாதானா என்று பதட்டத்துடன் பார்த்தால் "அப்பாடா, இம்முறை தேங்காய் பர்பியாகவே" வந்து விட்டது.

சூப்பர் என்ற சர்டிபிகேட் மனைவியிடமிருந்தும் மகனிடமிருந்தும் கிடைத்தது. உறவினர்கள் வந்ததால் அனைத்தும் இன்றே தீர்ந்தும் போய் விட்டது.

அடுத்த முயற்சி என்ன?

இனிதான் யோசிக்க வேண்டும்.







 

1 comment:

  1. எனக்கு தேங்காய் பர்பின்னா ரொம்பப் பிடிக்கும். செஞ்சுப் பார்த்துட வேண்டியதுதான்.

    ReplyDelete