Friday, May 10, 2013

சூடாகப் படியுங்கள்

 
தீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன் எழுதியுள்ள ஒருசூடான பதிவு. என்னை மிகவும் கவர்ந்தது. அதனால் உங்களுக்கும் இங்கே. 
 
நன்றி தோழர் அ.கு
 
Kumaresan Asak
 
மகாகவி மீது என்னே பக்தி!
=====================
“இன்றைக்கு மகாகவி ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் விழா. மேற்கு வங்கம் இந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு அவர் மீது மரியாதை கிடையாது. இல்லையென்றால் இந்த நாளில் இப்படி அசிங்க ஆட்டம் ஆடுவார்களா?”

மேற்கு வங்க ஆளும் கட்சியான திருணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரேக் ஓ'பிரையன் இப்படி கேட்டிருக்கிறார். மகாகவியாகப் போற்றப்படும் தாகூரை அவமதிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சி அப்படி என்ன அசிங்கமாகச் செய்துவிட்டதாம்?

வங்கத்திலும் அண்டை மாநிலங்களிலும் லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் சேமிப்புப் பணத்தைச் சுருட்டிக்கொண்ட சாரதா சிட்ஃபண்டு நிறுவன மோசடி தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை தேவை என்ற கோரிக்கையோடும், இப்படிப்பட்ட மோசடி நிறுவனங்களின் சொத்துகள் கைப்பற்றப்பட்டு, ஏமாந்து போய் நிற்கும் மக்களுக்கு ஓரளவாவது பணம் திருமபக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், இனி நாட்டில் எங்குமே இப்படிப்பட்ட நிதிப் பித்தலாட்டங்கள் நிகழாமல் தடுக்க மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் ஒரு பணிப்படை அமைக்கப்பட வேண்டும், ரிசர்வ் வங்கி, செபி உள்ளிட்ட நிதியமைப்புகள் இதற்கென சிறப்புக் கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற ஆக்கப்பூர்வ மாற்று ஆலோசனைகளோடும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி தலைமையில் மேற்கு வங்க இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் குழு நேற்று (மே 9) குடியரசுத் தலைவரையும் பிரதமரையும் சந்தித்துள்ளது. சாரதா குரூப் தொடங்கிய பல பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவை தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், வேலையிழந்துள்ள ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க கூட்டுறவு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தவும் கோரப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்திருக்கிறார்.

இதுதான் மகாகவி பிறந்தநாளில் மார்க்சிஸ்ட் கட்சியின் அசிங்க ஆட்டம் என்கிறார் ஓ'பிரையன்.

யெச்சூரி சரியாகவே பதிலடி கொடுத்திருக்கிறார். “மகாகவி தாகூர், ‘அச்சமின்றி நான் நடமாடுவதற்கான இடம் எதுவோ, தலை நிமிர்ந்து நான் வாழ்வதற்கான இடம் எதுவோ அந்த இடம் எனக்குத் தேவை’ என்று எழுதினார். இன்று நாம் வெட்கத்தால் தலைகுனிந்து நிற்கிற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அப்படியொரு இடமாக வங்கம் இன்று இல்லை. அப்படி மாற்றுவதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் எங்களுடைய நடவடிக்கை. இதுதான் மகாகவிக்கு உண்மையான அஞ்சலி.”

சிபிஐ விசாரணை வந்துவிட்டால் திருணமூல் காங்கிரசின் ஒட்டுமொத்த தலைவர்கள் கூட்டமும் (“என்னுடைய ஓவியங்களை விற்றுதான் கட்சிக்கு நிதி சேர்த்தேன்” என்று அக்கட்சியின் தலைவரும் மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கூறியது, அவரது ஓவியங்களை கோடிக்கணக்கான ரூபாய்கள் கொடுத்து சிட்ஃபண்டு மோசடி முதலாளி வாங்கிக்கொண்டது உட்பட) அம்பலமாகும். அந்த ஆத்திரம்தான் மகாகவி மீது திடீர் பக்தி!

தாகூர் இன்று வருவாரானால் என்ன செய்வார்? “மக்களில் ஒருவன் நான்” என்று எழுதிச்சென்ற அவர் இப்போது, “மக்கள் இப்படிப்பட்ட பித்தலாட்டக்காரர்களிடம் சிக்கிக்கொள்ளாத இடம் எதுவோ...” என்றும் தன் கவிதையில் சேர்த்திருப்பார்.
 

No comments:

Post a Comment