இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மக்கான் முனையில் இருந்த சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாலை அணிவிக்க சென்ற போது பார்த்த காட்சிகள் சுவாரஸ்யமானது.
அங்கே சென்ற போது ஒரே காவிமயம். முதல் முறையாக பாஜக ஆட்கள் அங்கே கூடியிருந்தார்கள். கொடிகள் மட்டும் இருந்தால் அவர்கள் யார் என்று தெரியாது என்ற நினைப்போ என்னமோ, பிஜேபி என்று அச்சிடப் பட்ட துண்டுகளை அணிந்திருந்தார்கள். காத்திருந்தார்கள், காத்திருந்தார்கள், காத்துக் கொண்டே இருந்தார்கள்.
அதிமுகவின் சார்பில் வேலூர் மேயராக இருந்து, எங்கள் சங்க மாநாட்டிற்கு மொட்டைக்கடிதத்திற்கு பயந்து டிமிக்கி கொடுத்து, 2024 ல் சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போன கார்த்தியாயணி அம்மையாருக்காக அவர்கள் காத்திருந்தார்கள். அந்த அம்மையார் வந்து மாலை அணிவித்த பின்பு போட்டோ ஷூட் நடத்தி விட்டு ஒரு வீர உரை வேறு ஆற்றினார்.
மோடியின் கட்சியல்லவா! மோடியைப் போலவே பொய்யாகவே அள்ளி விட்டார். அண்ணல் அம்பேத்கருக்கு மோடிதான் நாடாளுமன்றத்தில் சிலை வைத்தார் என்று சொன்னாரே ஒரு கதை, அப்படியே ஆடிப் போய் விட்டேன். நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் சிலையை பின் பக்கத்தில் மாற்றி வைத்து சிறுமை செய்து விட்டு என்ன பேச்சு இது!
அடுத்த போட்டோ ஷூட் த.வெ,க தம்பிகளுடையதுதான். அவர்கள் வாயிலிருந்து ஒரு முழக்கம் கூட வரவில்லை. பெரும்பாலும் சின்ன வயது பையன்கள், பெண்கள். ட்ரோன் வைத்தெல்லாம் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு மூத்த பையன் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டதும் ஒரே விசில் சத்தம். திரையில் விஜய் தோன்றியதும் அடிக்கும் விசிலை இங்கேயும் அடித்து விட்டார்கள். நல்ல வேளை பேப்பரெல்லாம் கிழித்துப் போடவில்லை.
டி.டி.வி தினகரன் கோஷ்டியிலிருந்து கூட ஆறேழு பேர் வந்து மாலை போட்டு விட்டு சென்றார்கள்.
அதிமுகவிலிருந்து கூட சிலர் வந்திருந்தார்கள். இவர்கள் இன்று மாலை போட்ட அதிமுகவின் மூன்றாவது கோஷ்டி என்று மூத்த தோழர் ஸ்ரீதர் சொன்னார்.
தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சியெல்லாம் வேறு வந்திருந்தார்கள்.
திமுகவில் இந்த வருடம் அமைச்சர் துரை முருகன், எம்.பி கதிர் ஆனந்த், மற்றும் லோக்கல் தலைவர்கள் வந்திருந்தார்கள். போன சட்டசபை தேர்தலுக்கு முன்பாக துரை முருகன் வந்திருந்தார். அப்போது அவர் காரிலேயே அமர்ந்து மாலையை தொட்டுக் கொடுத்தார். இந்த வருடம் சிலை வரைக்கும் நடந்து வந்தார். அவரை அப்படியே தூக்கிக் கொண்டு போவார்களோ என்று பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை அப்படியெல்லாம் அவரை படுத்தவில்லை.
அதென்ன இந்த வருடம் அண்ணல் அம்பேத்கர் மீது அப்படியென்ன இத்தனை கட்சிகளுக்கு திடீர் பாசம்?
எல்லாம் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் வருவதுதான் . . .
அடுத்த வருடம் வாக்குப்பதிவு முடியவில்லையென்றால் வருவார்கள். இல்லையென்றால் . . .
பிகு : மேலே உள்ள அண்ணல் அம்பேத்கரின் ஓவியத்தை வரைந்தது தோழர் ரவி பாலேட்.
No comments:
Post a Comment