Saturday, September 21, 2019

அது எங்கள் பணம் நிர்மலா மேடம்



ஒட்டு மொத்த உற்பத்தி குறைந்து கொண்டிருக்கிறது.
வேலையின்மை பெருகிக் கொண்டிருக்கிறது.
பல தொழிற்சாலைகள் மூடப் பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆட்டோமொபைல் துறை அழிவின் விளிம்பில் . . .
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் வாங்க ஆளின்றி முடக்கம் . . .
விவசாயத்துறையில் நெருக்கடி . . .
இந்தியாவை உலுக்கும் மிகப் பெரிய பொருளாதார மந்தம் . . .

நீங்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை. இதுதான் யதார்த்தம், நிதியமைச்சர் நிர்மலா அவர்களே,

இப்படிப்பட்ட சூழலில் பொருளாதாரத்தை உசுப்பி விட அரசு சில நேரடி நடவடிக்கைகளில் இறங்கிட வேண்டும்.

"மக்கள் மத்தியில் பணத்தை புழங்க விட வேண்டும். பணச் சுழற்சி ஏற்படுகிற போது பொருளாதார நிலைமைகளில் அசைவு ஏற்படும். அதற்கேற்றார்போல சில திட்டங்களை அரசே அமலாக்க வேண்டும்"

இதனை மார்க்சிய பொருளாதார நிபுணர்கள் மட்டுமல்ல முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களும் சொல்கிறார்கள். மந்த நிலையிலிருந்து வெளியே வர பணம் சாமானிய மக்களிடம் செல்ல வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகள் எதையாவது எடுத்தீர்களா நிர்மலா மேடம்?

ஆட்டோமொபைல் துறையை பாதுகாக்க ஜி.எஸ்.டி யில் ஏதாவது மாற்றம் கொண்டு வந்தீர்களா? உதிரி பாகங்களுக்கு 28 % ஜி.எஸ்.டி என்பதெல்லாம் ஒரு அநீதி என்பதை நீங்கள் உங்கள் சொந்தக்காசில் ரிப்பேர் செய்தால் தெரிந்திருக்கும். சென்ற வருடம் நான் அனுபவித்தேன். உங்கள் அரசை  திட்டிதான் என்னை ஆறுதல் செய்து கொண்டேன்.

அரசு செய்யத்தவறுகிற சமூகப் பாதுகாப்பை ஒரு குடிமகன் தானே செய்து கொள்வதுதான் ஆயுள் காப்பீடு. அதற்கு ஜி.எஸ்.டி விதிப்பது நியாயமல்ல, அதனை அகற்றுங்கள் என்று தொடர்ந்து குரலெழுப்பிக் கொண்டிருக்கிறோமோ, அது பற்றி ஏதாவது பரிசீலனை செய்தீர்களா?

விவசாயிகளுக்கு ஏதாவது?

நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.

என்ன அது?

"கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும், கிழவனை தூக்கி மனையில் வை"

என்ற கதையாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைத்துள்ளீர்கள், 

அதுவும் முன் தேதியிட்டு, ஆறு மாத எக்ஸ்ட்ரா போனஸோடு . .

இந்த சலுகை அவர்கள் கஜானாவில் பத்திரமாக தூங்கப் போகிறது. எந்த புதிய தொழிற்சாலையையும் தொடங்கி எவனும் எந்த வேலை வாய்ப்பையும் உருவாக்கப் போவதில்லை.

இப்போது உள்ளதை விட நாடு இன்னும் மோசமாகத்தான் போகும். 

அது சரி

நீங்கள் எல்லாம் மக்களுக்கு நல்லது செய்யவா ஆட்சிக்கு வந்தீர்கள்.

காவி செயல்திட்டத்தை அமலாக்க வந்தீர்கள்.

அதற்கு உதவிய பெரு முதலாளிகளுக்கு காணிக்கை செலுத்துகிறீர்கள்.

அந்த காணிக்கை மக்கள் பணம், எங்கள் பணம் . . .

1 comment:

  1. தெளிவான கட்டுரை. பொருத்தமான படம். வாழ்த்துக்கள்

    ReplyDelete