Monday, September 30, 2019

சவர்க்கர் – செல்பி அடைமொழி


  



பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு சரணாகதி கடிதம் எழுதிக் கொடுத்து அந்தமான் சிலையிலிருந்து விடுதலையான கோழை சவர்க்கருக்கு “வீர் சவர்க்கர்” என்ற அடைமொழியைக் கொடுத்தது யார்?

யார் தெரியுமா?

அவரேதான்.

அவரேதான் தனக்குத்தானே “வீர்” சவர்க்கர் என்று அடைமொழி கொடுத்துக் கொண்டுள்ளார்.

ஆமாம்.

நிஜம்தான்.

சவர்க்கரின் வாழ்க்கை வரலாறு 1926 ல் “பாரிஸ்டர் சவர்க்கரின் வாழ்க்கை” என்ற தலைப்பில் சித்ரகுப்தா என்பவர் எழுதி வெளியானது.

சவர்க்கர் வல்லவரு, தீரரு, சூரரு, வீரரு என்று அவரது பெருமையை எல்லாம் சித்ரகுப்தா அடித்து விட்டுள்ளார். அந்த நூல் மூலம்தான் “ஒரு நாயகன் உதயமாகிறான்” என்று வீர் சவர்க்கர் பில்ட் அப் ஆரம்பமாகி உள்ளது.

“Life of Barrister Savarkar” அறுபத்தி ஓரு வருடங்களுக்குப் பின்பு மறு பதிப்பு கண்டுள்ளது. அதனை பதிப்பித்த ரவீந்திர ராமதாஸ் என்பவர் அப்பாவித்தனமாக ஒரு உண்மையை தனது முன்னுரையில் கூறி விட்டார்.

சித்ரகுப்தா என்பவர் வேறு யாருமில்லை, சவர்க்கர்தான் என்று.

யப்பா சாமி, இது உலக மகா டுபாக்கூர் வேலைடா டேய் . . .

Sunday, September 29, 2019

ந.வீ.பி - க.கு.சி ஆல்ட்ரேஷன்


சிவ கார்த்திகேயன் நடித்த "நம்ம வீட்டுப் பிள்ளை" அதை இயக்கிய பாண்டிராஜ் முன்பு இயக்கிய "கடை குட்டி சிங்கம்" படத்தை கொஞ்சம் ஆல்டர் செய்து எடுத்தது போலவே ஒரு ஃபீலிங் இருந்தது எனக்கு மட்டும் தானா?

ஒரு பெரிய குடும்பம், உறவினர்கள் என ஏராளமான கதாபாத்திரங்கள், எல்லோரும் கதாநாயகனோடு முறுக்கிக் கொண்டு இருப்பார்கள். கடைசியில் உணர்ச்சி பொங்கும் ஒரு காட்சி வந்ததும் எல்லோரும் திருந்தி விடுவார்கள்.

இந்த டெம்ப்ளேட்டில் அண்ணன்- தங்கை செண்டிமெண்ட், ஒரு கொலை, ஒரு பஞ்சாயத்து என்று வைத்து படத்தை முடித்து விட்டார்.

அவ்வப்போது பளிச்சிடும் சில வசனங்கள், பாரதி ராஜா, சூரியின் மகனாக வரும் சிறுவன் ஆகியோர் கொஞ்சம் ஆறுதல். 

கடை குட்டி சிங்கம் ஒரு கிராமத்து மசாலாவாக இருந்தும் அது சுவையாகவே இருந்தது. அந்த மசாலா கலவையில் இதில் ஏதோ மிஸ்ஸிங்.



அழகிய மலைகள், ஆப்பிள் கனிகள் - கண்ணீர்த்துளிகள்







அழகிய மலைகளும் ஆப்பிள் கனிகளும் என்று எழிலூட்டும் காட்சியோடு தொடங்கும் காணொளி கொஞ்சம் கொஞ்சமாக நம் மனதை பாதித்து விடுகிறது.


அற்புதமான பாடலை எழுதி, பாடி, காணொளி தயாரித்த தோழர் மதுரை பாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 

சுடுகாட்டை யார் ஆள்வது என்றொரு கேள்வி பாடலில் வருகிறது. அதிலிருந்தும் ஆதாயம் வருமென்றால் முதலாளிகள் தயங்க மாட்டார்கள் என்பது இன்றைய யதார்த்தம்

Saturday, September 28, 2019

தென்றல் வந்து தீண்டும் போது



ராஜாவின் தேனிசைப் பாடல்களின் ஒன்றான

"தென்றல் வந்து தீண்டும் போது"

பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கை வண்ணத்தில்

யூ ட்யூப் இணைப்பு இங்கே 

காரை நிறுத்தி கைப்பற்றியது . . .



மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு நீண்ட பயணம். மாலை வேலூர் திரும்பிக் கொண்டிருக்கையில் செஞ்சிக்கு ஒரு ஐந்து கிலோ மீட்டர் முன்பாக சூரியனும் மேகக்கூட்டங்களும் இணைந்து ஒரு வர்ண ஜாலம் நிகழ்த்திக் கொண்டிருந்தது.

அப்படி ஒரு அழகான காட்சியை பார்த்து விட்டு அப்படியே கடந்து போய் விட முடியுமா என்ன?

காரை நிறுத்தி  அந்த அழகுக் காட்சிகளை என் அலைபேசியில் கைப்பற்றிக் கொண்டேன்.

நான் நேரில் ரசித்த அழகு உங்களுக்கு புகைப்படமாக . . .








Friday, September 27, 2019

என்ன இப்படி தாக்கறாங்க?

முக நூலில் பரபரப்பாக உலாவிக் கொண்டிருக்கும் ஒரு கடிதம். கற்பனை என்றாலும் அதிமுகவை இப்படி போட்டு தாக்கறாங்களே! 


அடடே, பாரிசிலுமா மோடி?




என்ன மோடி, போகிற இடத்தில் எல்லாம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது போல!

பிரான்ஸ் நாட்டு தலைநகரம் பாரீசில் கூட உங்கள் கூட்டம் நடந்த அரங்கிற்கு வெளியே கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாமே!

"மோடி பயங்கரவாதி"  என்று எழுதிய அட்டைகளை வேறு பிடித்திருந்தார்களாமே!

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் வேறு உங்களுக்கு அறிவுரை எல்லாம் கொடுத்தாராமே!

இந்தியாவின் மானத்தை வெளிநாடுகளில் வாங்கிய முதல் பிரதமர் என்ற பெருமை உங்களுக்குத்தான்.  நேருவால் இதெல்லாம் முடியுமா என்ன?

கலக்குங்க மோடி!

Thursday, September 26, 2019

திண்டுக்கல்லும் திப்புவின் கோட்டையடா !



சங்கிகள் அவர்களின் நாசகர வேலையை திண்டுக்கல்லில் காண்பித்துள்ளனர். 

கார்த்தி நடிக்கும் "சுல்தான்" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக் கோட்டையில் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறைக்கு வைப்புத் தொகை, கட்டணமெல்லாம் கட்டி உரிய அனுமதியோடுதான் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

"சுல்தான்" என்பது படத்தின் பெயர் என்பதால் அது திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறு என்று நினைத்து திப்பு சுல்தான் பற்றிய படமெல்லாம் திண்டுக்கல்லில் எடுக்கக் கூடாது என்று படப்பிடிப்பில் புகுந்து கலவரம் செய்துள்ளனர் சங்கிகள்.

"சுல்தான்" படம் திப்பு சுல்தான் பற்றியதல்ல என்று விளக்கம் கொடுத்து , தேசியத் தலைவர்களுக்கு ஜாதி, மத அடையாளம் அளிக்காதீர்கள் என்று தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ள சூடான அறிக்கை கீழே உள்ளது.



"சுல்தான்"  திப்பு சுல்தான படமாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் திப்பு சுல்தான் பற்றிய திரைப்படத்தை திண்டுக்கல்லில் எடுத்தால் அதில் என்ன தவறு?

அப்படி எடுத்தால் அது சரியாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.

ஆம்.

திண்டுக்கல் திப்பு வாழ்ந்த இடம். 
திண்டுக்கல் திப்பு ஆண்ட இடம்.

மைசூர் மன்னர் காலத்தில் திண்டுக்கல் பகுதியின் ஆட்சி உரிமையை அவர்களின் தளபதியான ஹைதர் அலிக்கு அளிக்கிறார்கள். அவரது ஆட்சி தொடங்கியது திண்டுக்கல் கோட்டையில்தான்.

பிறகுதான் அவர் மைசூரின் ஆட்சியை கைப்பற்றுகிறார்.

திப்பு சுல்தான் முதலில் ஆட்சிப் பொறுப்பேற்றதும் திண்டுக்கல்லில்தான். 

அங்கிருந்துதான் அவர் வெள்ளையர்களை எதிர்க்கிறார்.

வெள்ளையர்களுக்கு எதிரான போராட்ட மையமாக திண்டுக்கல் ஹைதர் மற்றும் திப்புவின் காலத்தில் இருந்தது.

வெள்ளையர்களுக்கு எதிரான போருக்கு முன்பாக வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலி அடைக்கலம் கொடுத்தது, பயிற்சி அளித்து படை திரட்டியது எல்லாமே திண்டுக்கல் கோட்டையில்தான்.




வெள்ளை ஏகாதிபத்தியத்தை அஞ்சி நடுங்க வைத்த திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறு

மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த கோழை சவர்க்கரின்,
வெள்ளையனே வெளியேறு இயக்க போராளிகளை 
காட்டிக் கொடுத்த வாஜ்பாயின்

வாரிசுகளுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.

திண்டுக்கல்லின் பெருமை மிகு அடையாளங்களில் ஒருவர் திப்பு சுல்தான். 

அவர் பற்றி அங்கே படமெடுக்காமல் வேறு எங்கு எடுப்பது?

திப்பு சுல்தான் படத்தில் நடிக்கக் கூடாது என்று கலவரத் துறவி ராம கோபாலன் மிரட்டியதற்கு ரஜனிகாந்த் பயந்திருக்கலாம்.

எல்லோரையும் அப்படி கோழைகளாக சங்கிகள் நினைத்திடக் கூடாது.

இன்று படப்பிடிப்புக் குழுவினரிடம் வீரம் காண்பிக்கும் சங்கிகள் 

அதே திண்டுக்கல்லில் 

ஹைதர் அலிக்கும் திப்பு சுல்தானுக்கும்

மணி மண்டபம் கட்டுவதாக ஜெயலலிதா அறிவித்த போதும்

அதனை இவர்களின் இன்றைய அடிமை எடப்பாடி திறந்து வைத்த போதும் 



வாயை மூடிக்கொண்டும் வாலைச் சுருட்டிக் கொண்டும்தான்
இருந்தார்கள் என்பது ஒரு செய்தி. . . .

பிகு

இதனை எழுதி முடிக்கும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. 

மதுரையில் கல்லூரி படிக்கையில் சில விடுதி நண்பர்கள் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்கள். ஒரு வார காலம் அவர்கள் கல்லூரிக்கு வரவில்லை. காரணம் கேட்ட போது சொன்னார்கள். ஜெய் சங்கர் நடித்து கர்ணன் இயக்கிய ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் கோட்டையில் நடந்ததால் அதைப் பார்க்க சென்று விட்டதால் வரவில்லை என்றார்கள்.

ஜெய்சங்கர் நடித்த கர்ணன் படங்கள் எப்படி இருக்கும் என்று நான் தனியாக எழுத வேண்டியதில்லை.

அந்த மாதிரி படங்களை திண்டுக்கல்லில் எடுக்கலாம். ஆனால் அந்த மண்ணின் மன்னனாக இருந்தவனின் படத்தை எடுக்கக் கூடாதாம்.

இதெல்லாம் என்ன நியாயம்? 

இங்கே மட்டும்தான் சாத்தியம்


செங்கொடிப் பேரணியில்தான் சாத்தியம் . . .

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சி.ஐ.டி.யு தமிழ் மாநில மாநாட்டுப் பேரணியின் புகைப்படங்களை நேற்று முன் தினம் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

அப்போது பகிராத இரண்டு புகைப்படங்கள் கீழே.




பாரதீய ஜனதா கொடி கட்டிய காருக்கும்
ஆம்புலன்ஸிற்கு வழி விடுவதும்

வேறு இயக்கங்களில் சாத்தியமா?
அரசியல் நாகரீகம் என்பது இடதுசாரிகளின் அடையாளம்.


Wednesday, September 25, 2019

எல்.ஐ.சி யிலிருந்து ஒரு நற்செய்தி – 8000 வேலை


எல்.ஐ.சி யில் எட்டாயிரம் பேருக்கு வேலை



இது ஒரு நற்செய்தி.

எல்.ஐ.சி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு எட்டாயிரம் பேரை புதிதாக பணி நியமனம் செய்யப் போகிறார்கள் என்பதை விட வேறு நற்செய்தி இருக்க முடியுமா என்ன?

நீண்ட காலமாக பணி நியமனம் இல்லாதிருந்த எல்.ஐ.சி யில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தொடர் முயற்சிகளின் விளைவாக, நிறுவனத்தில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட வேண்டியதன் தேவையை நிர்வாகம் ஒப்புக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

உதவியாளர் பணிக்கான கல்வித் தகுதி  - பட்டதாரியாக இருந்திடல் வேண்டும்.

வயது வரம்பு: 01.09.2019 அன்று 
குறைந்த பட்சம்  18.

அதிகபட்சம்   30

அதிகபட்ச வயதில் சலுகை
                    
இதர பிற்படுத்தப்பட்டோர்     3
எஸ்.ஸி/எஸ்.டி                             5
மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் பத்து ஆண்டுகள்.

முன்னாள் ராணுவத்தினர் : பாதுகாப்புப் படைக்காலம் மற்றும் கூடுதல் மூன்றாண்டுகள், அதிகபட்ச வயது 45.
முன்னாள் ராணுவத்தினர் (எஸ்.சி/எஸ்.டி அதிகபட்ச வயது 50)
முன்னாள் ராணுவத்தினர் (ஓ.பி.சி அதிகபட்ச வயது 48 )

கோட்ட வாரியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆன்லைன் மூலமாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும்.

www.licindia.in இணைய தளத்திற்கு சென்று அதில் careers பகுதிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

எந்தெந்த கோட்டத்தில் எவ்வளவு காலியிடங்கள் என்பதும் அங்கே தெரியும்.

தமிழகம் மற்றும் கேரளா உள்ளடங்கிய தென் மண்டலத்தில் மொத்தம் நானூறு காலியிடங்கள். கோட்ட வாரியான விபரங்கள் கடைசியில் உள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 01.10.2019

Preliminary, Main என்று இரண்டு கட்ட தேர்வு உண்டு.

முதல் சுற்று தேர்வு நாள் 21,22 அக்டோபர், 2019.

எந்த கோட்டத்திற்கு விண்ணப்பிக்கிறார்களோ, அந்த கோட்டத்துக்கு உட்பட்ட தேர்வு மையங்களில்தான் தேர்வு எழுத வேண்டும். உதாரணமாக எங்கள் வேலூர் கோட்டத்திற்கு விண்ணப்பித்தால் வேலூர் மற்றும் புதுச்சேரியில்தான் தேர்வு எழுத வேண்டும்.

எல்.ஐ.சி போன்ற மகத்தான நிறுவனத்தில் இணைவதற்கான நல்ல வாய்ப்பு இது. உங்களது குடும்பத்தில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு தகவல் அளித்து விண்ணப்பிக்கச் சொல்லவும்.

மேலும் ஒரு முக்கியச் செய்தி.

தமிழகத்தில் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் அனைத்து கோட்டங்களிலும் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த விபரங்கள் கீழே உள்ளது. அதிலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு வகுப்புக்களில் கலந்து கொண்டு பயனடையவும்.
















தென் மண்டலத்தில் காலியிடங்கள் (கோட்ட வாரியாக)

சென்னை
20
வேலூர்
18
சேலம்
45
கோவை
39
மதுரை
58
நெல்லை
21
தஞ்சை
34
திருவனந்தபுரம்
20
திருச்சூர்
33
எர்ணாகுளம்
10
கோட்டயம்
43
கோழிக்கோடு
59




எல்.ஐ.சி யில் இணைவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மோடிக்கும் "தானா சேர்ந்த கூட்டம்"


மோடியின் ”ஹௌடி மோடி” கூத்திற்கு வந்த கூட்டம் போல வேறு எந்த இந்தியத் தலைவருக்கும் எந்த வெளி நாட்டிலும் வந்தது இல்லை என்று சங்கிகள் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வேளையில் பலர் பழைய ஆவணங்களை தேடி எடுத்து மோடிக்கு வந்ததை விட மிக அதிகமான கூட்டம் நேருவிற்கு அமெரிக்கா, சோவியத் யூனியன் என்று இரண்டு நாடுகளில் மட்டுமல்ல ஜப்பானிலும் வந்தது என்று புகைப்படங்களோடு நிரூபித்து விட்டார்கள்.  








நேருவை வரவேற்க அமெரிக்க ஜனாதிபதி கென்னடி  விமான நிலையத்திற்கே சென்றுள்ளார். என்னத்தான் மோடி ட்ரம்பிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்தாலும் அப்படிப்பட்ட மரியாதை எதையும் ட்ரம்ப் மோடிக்கு அளிக்கவில்லை என்பதை சங்கிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் மோடிக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க வாழ் இந்தியர்கள், என்.ஆர்.ஐ கள், அமெரிக்கா சென்றாலும் சங்கிகளாக வாழ்பவர்கள். பிரியாணி, க்வார்ட்டர்க்கு வரும் கூட்டம் போன்றவர்கள்.   ஆனால் நேருவிற்கு வந்தவர்களோ அமெரிக்கர்கள், ரஷ்யர்கள்.  தானா சேர்ந்த கூட்டம்.

இத்தகவலினால் சங்கிகள் மனமுடைந்து போக வேண்டாம்.

மோடியும் சாதனை படைத்துள்ளார்.

மோடியைப் போல வேறு எந்த வெளிநாட்டுத் தலைவருக்கும் மோடியைப் போல எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இந்த அளவில் மக்கள் திரண்டது கிடையாதாம். அது தானா சேர்ந்த கூட்டம்.

வேண்டுமானால் இந்த காணொளியைப் பாருங்கள்



அந்த வகையில் மோடிதான் டாப்.




Tuesday, September 24, 2019

சுவையாய், சுலபமாய் பருப்புப் பொடி




இன்று காலை தயார் செய்யும் போதுதான் நீண்ட காலமாக சமையல் குறிப்பு எதுவும் எழுதவில்லை என்பது நினைவுக்கு வந்ததால் தயாரிக்கும் போதே புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

மிகவும் சுலபமாய் தயாரிக்கலாம் .

மனைவி வெளியூரில் இருக்க தனியே சமைத்து சாப்பிட்டு சிரமப்படுவதாக சொல்லிக் கொள்ளும் ஆண்களுக்கு உதவிகரமாக இருக்கும். (யாரையும் குறிப்பாக சொல்லவில்லை என்று சொன்னாலும் சிலர் அதை ஏற்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்)

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டும் தலா அரை டம்ப்ளர், கால் டம்ப்ளர் பொட்டுக் கடலை மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக நிறம் மாறத் தொடங்கும் வரை அப்படியே வறுக்கவும். எண்ணெய் எல்லாம் சேர்க்கக் கூடாது. கொஞ்சம் அசந்தால் கறுகி விடும் அபாயம் உண்டு. நன்றாக வறுபட்ட பிறகு அதை தனியாக எடுத்து வைத்து விடவும்.

பிறகு அதே வாணலியில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் ஏழெட்டு மிளகாய் வற்றல் (கிள்ளிப் போடவும்) ஒரு ஸ்பூன் அளவு மிளகு, ஒரு ஸ்பூன் அளவு சீரகம் ஆகியவற்றை வறுக்கவும். ஒன்றரை ஸ்பூன் அளவு உப்பு சேர்க்கவும். எப்போது உங்கள் மூக்கில் நெடி அடிக்க தொடங்குகிறதோ அப்போது எடுத்து வைத்து விடவும். பிறகு ஒரு ஸ்பூன் கறுப்பு எள் வறுக்கவும். வெடிபடும் சப்தம் கேட்கையில் எடுத்து முந்தைய கலவையிலேயே சேர்த்து விடவும்.

அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு, வறுத்த பருப்பு வகைகளை மிக்ஸியில் நன்றாக பொடி செய்து கொள்ளவும். மிளகாய், மிளகு வகையறாக்களை சின்ன மிக்ஸியில் பொடி செய்து அதனை பருப்பு வகையறாவுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக சேர்த்து ஒரு ஐந்தாறு சுற்று சுற்றவும். இப்போது அனைத்தும் நன்றாக கலந்து விடும்.

இதுதான் சுவையான பருப்புப் பொடி சுலபமாக தயாரிக்கும் வழி.

பிகு:

பொதுவாக பருப்புப் பொடியை சாதத்தில் பிசைந்து சாப்பிட ஹோட்டல்களில் நெய் ஊற்றுவார்கள்.

என்னுடைய சாய்ஸ் எப்போதுமே நல்லெண்ணெய் . . .



மறைத்தாலும் விட மாட்டோம் . . .

ஞாயிறு அன்று காஞ்சிபுரத்தில் சி.ஐ.டி.யு மாநில மாநாட்டின் இறுதி நாளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடந்தது.

இந்நாள் தெலுங்கிசை நடத்தும் கூட்டங்களை , அது வெறும் காலி சேர்களுக்காக நடக்கும் கூட்டங்கள் என்றாலும் அதை அளவு கடந்த ஆர்வத்தோடு காண்பிக்கும் தமிழக ஊடகங்கள்,  இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக காண்பிக்காமல் இருட்டடிப்பு செய்து விட்டன.

எல்லாம் வர்க்க பாசம்தான் . . .

அவர்கள் மறைத்தால் என்ன?

நாம் பகிர்வோம். பரப்புவோம் . . .

உழைப்பாளி மக்களின் வலிமையை, ஒற்றுமையை . . .

படங்கள் தீக்கதிர் புகைப்படக்காரர் தோழர் ஜாபர் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை