Tuesday, July 16, 2013

உற்சாகமளிக்கிற, எழுச்சியளிக்கிற வெற்றி




உறுதியான போராட்டம் நடத்தி வெற்றி கண்ட
நெய்வேலித் தொழிலாளர்களை பாராட்டுகிறோம்

பதிமூன்று நாள் காலவரையற்ற வேலை நிறுத்தம் வெற்றிகரமாய் நிறைவடைந்து உள்ளது. நெய்வேலித் தொழிலாளர்கள் மீண்டும் ஒரு முறை தங்களின் வலிமையை நிரூபித்துள்ளனர். மத்தியரசின் மூக்கு மறுபடியும் உடைபட்டுள்ளது.

நவரத்னா அந்தஸ்து அளிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து சதவிகித பங்குகளை விற்பது என்று மத்தியரசு எடுத்த முடிவிற்கு எதிராக நெய்வேலி நிறுவனத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் கரம் கோர்த்து ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினார்கள்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான மத்தியரசின் முடிவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டனக் குரல் எழுந்தது. நாமும் கூட 24.06.2013  அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி பிரதமருக்கு தந்தி அனுப்பினோம். மத்தியரசு விற்க நினைக்கிற ஐந்து சதவிகித பங்குகளை தமிழக அரசே வாங்கிக் கொள்ளும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.

அந்த முன்மொழிவை ஏற்றுக் கொள்ளக் கூட மத்தியரசு தயங்கியது. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரிய விதிகள் என்று சொல்லி மாய்மாலம் செய்தது. தங்களது நிறுவனத்தைப் பாதுகாக்க தொழிலாளர்கள் போராடும்போது அப்போராட்டத்தை முறியடிக்க என்.எல்.சி நிர்வாகம் நீதிமன்றம் சென்றது. வேலை நிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்ளச் சொல்லி நீதிமன்றம் சொன்ன போதும் தங்கள் கொள்கையில் உறுதியாய் தொழிலாளர்கள் நின்றார்கள். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கினார்கள்.

தொழிலாளர்களின் உறுதியைக் கண்ட மத்தியரசு இறங்கி வந்தது. என்.எல்.சி நிறுவனப் பங்குகளை தமிழக அரசு நிறுவங்களுக்கு அளிக்க ஒப்புக் கொண்டது. தனியார்மயமாக்கும் முயற்சியை தகர்த்தெறிந்த நெய்வேலி நிறுவனத் தொழிலாளர்கள், இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கூட நெய்வேலி நிறுவனப் பங்குகளை விற்க மத்தியரசு எடுத்த முயற்சிகள் உறுதியான தொழிலாளர் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது. மீண்டும் ஒரு முறை மத்தியரசின் சதிச்செயல் தொழிலாளர்களின் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் உணர்வை புரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசை பாராட்டுகிறோம். உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தும் அத்தனை பேருக்கு உற்சாகம் அளிக்கும் வெற்றியை ஈட்டிய நெய்வேலி நிறுவனத் தொழிலாளர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம்.

(எங்கள் சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை)


1 comment:

  1. ஒரு சந்தேகம், தமிழக அரசு நினைத்தால் இந்த பங்குகளை தனியாருக்கு விற்கமுடியுமா?

    ReplyDelete